செவ்வாய், அக்டோபர் 26, 2010

தவறவிட்ட மரணம் ,

கொஞ்ச காலம் முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமயம். சிகிச்சைக்காக செவிலியர் ஒருவர் வந்து மயக்க ஊசி போட்டார். சிறிது நேரத்தில் உடலெல்லாம் கனத்து என் எடை என்னாலே தாங்க முடியாததை போல ஒரு உணர்வு. வேண்டியவர்கள் யாரவது அருகில் இருக்கின்றனரா என கண்களை சுழற்றி பார்க்குறேன். பின்புதான் உரைத்தது..., சிகிச்சை அறையில் நான் மட்டுமே இருப்பது...,


கண்ணீர் சுரக்கின்றது. கண்ணீரால் தலையணை நனைகிறது. கண்ணீர் வழிந்து காதில் நுழைய அந்த நிலையிலும் கூச்சம் ஆட்கொள்கிறது. அதை துடைக்க கைகளை தூக்குகிறேன் . கரங்கள் மேலெழவில்லை.

இறைவா எத்தனை சொந்தம் எனக்குள்ளது இப்படி என்னை கண்ணீர் துடைக்க கூட ஆளில்லாமல் அனாதைப் போல் கிடத்திவிட்டாயே என்று மனதில் ஒரு கூப்பாடு. நா வரளுது, தண்ணீர் இல்லை. உயிர் பயம் ஆட்டி படைக்கிறது. கைப்பிடித்து ஆறுதல் சொல்ல ஆள் இல்லை. நான் கொண்ட நட்பு, காதல், நேசம், சண்டை அழுகை, வெற்றிக் களிப்பு, பெருமிதம், அவமானம், விருப்பு, வெறுப்பு, ஆசை எல்லலாமே வந்து கண்முன் என்னை எள்ளி நகையாடுகிறது. இப்போ என்ன உன்னால் செய்ய முடியும் என கொக்கரிக்கிறது..,

என்ன நரக வேதனை இது? நீ யார்? என்று மனது அருகிலிருந்தவனிடம் கேட்க, நான் இறைதூதன் என்கிறான். மரணம் நேரப் போகிறதா எனக்கா? ஐயோ, ..., மண்ணும், மாறுகின்ற விண்ணும், பூவும், புல்லும், மனித பசிக்களும், இன்னும் க்கு அலுக்கவில்லையே. என் வீடு, பிள்ளைகள், பெற்றோர், இணையை , உற்றாரை விட்டு என்னால் வர இயலாது என்று கூற, அதெல்லாம் முடியாது நீ வந்தேதான் தீர வேண்டும். இல்லை...., வாதங்கள் தொடர்கிறது கையை உதற பார்க்கிறேன் முடியவில்லை... அவனின் பிடி இறுகுகிறது மூச்சு விட கூட சிரமமாக உள்ளது. தலை கோத விரல் இல்லை..,

போச்சு அவ்வளவுதான். இனி பெற்றோரிடம் சண்டையிட முடியாது. பிள்ளைகளிடம் கொஞ்சி, மிஞ்ச முடியாது, எந்திரன், காவல்காரன் லாம் பார்க்கமுடியாது. பாட்டு கேட்க முடியாது. வண்டியில் வேகமாய் போய் வீட்டுல சொல்லிட்டு வந்துடியானு அக்கறையாய் கேட்கும் நபர்களை சந்திக்க முடியாது. என் டி.வி. கம்ப் யூட்டர் , வண்டி, வாட்ச், உடை, அலைபேசி, ..., இதெல்லாம் இனி எனதில்லையா?

அப்பொழுது...,

வானில் ஒரு ஒளிக்கீற்றும் .., திக்கவர்றவர்க்கு தெய்வமே துணை நானிருக்க நீ கலங்கலாமா என்ற கடவுளின் குரல் காதில் ஒலிப்பதுப் போலவும் ஒரு மாயை. அவ்வளவுதான், நாவில் இணிப்பு சுவை தெரிய , காதில் இனிய இசை கேட்க , உடல் எடை குறைய ஆரம்பிக்கிறது..., வென்பஞ்சாய் மாறி மனம் எங்கெங்கோ பறக்கிறது..., மெல்ல மெல்ல ஆசாபாசங்கள், வெற்றி தோல்வி, விருப்பு, வெறுப்பு, காதல், கடமை, நன்றி போன்றவற்றை உதறி...., இவை ஏதுமில்லாத பரமானந்த நிலையை அடைய பறக்கிறது மனது .

கடவுளே என்ன இது என்று கேட்க.., உன்னை மரணத்தை இதுதான் மரணம் என்கிறார். மரணம் இவ்வளவு ஆனந்தமானதா? இத்தனை நாள் எனக்கு தெரியாமல் போய்விட்டதே. உன்னோடு வருகின்றேன், நீ ஏன் இதை முன்பே எனக்கு அறிமுகப் படுத்தவில்லை என கடவுளிடம் கோபித்துக் கொண்டேன்.


எத்தனை மணித்துளிகள் இப்படி இருந்தேனோ எனக்கு தெரியாது..., மரணத்தின் ருசியை எவ்வளவு நேரம் ருசித்தேனோ அதுவும் தெரியாது....,
கண்விழிக்கையில் வலிகளே என்னை பூமி பந்தின் பிரதிநிதியாக வரவேற்றது.


உறவினர்கள்
எல்லாரும் சொன்னார்கள் " நீ செத்து பிழைச்சு" இருக்கேன்னு. இல்லை, "பிழைத்து செத்துக் கொண்டிருக்கிறேன்" என்று மரணத்தின் ருசியை அனுபவிக்காதவ்ர்களிடம் உரைக்காமலே மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.

மரணம் இவ்வளவு சுகமானதா? மரணமே அதுதான் உன் சுய உருவம் என்றால் காத்திருக்கிறேன். உனக்காக.

கையிடுக்கில் அற்புத மரணத்தை தவறவிட்ட,கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக