வெள்ளி, ஜூலை 18, 2014

திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் - புண்ணியம் தேடி

சமீபத்துல சுவாமி மலை சென்று முருகனை தரிசித்து திரும்புகையில் கார் ட்ரைவர்.., சார்! இங்க ஒரு வெள்ளைப் பிள்ளையார் கோவில் இருக்கு. கோவில், கூட்டம் அதிகமில்லாம, பரபரப்பில்லாம அமைதியாய் இருக்கும். போகலாமா!?ன்னு கேட்டார். சரி போகலாம்ன்னு அப்பா சொல்ல.., சுவாமி மலைல இருந்து ஓரிரு கிமீ தூரத்திலிருக்கும் திருவலஞ்சுழி ஸ்வேத பிள்ளையார் கோவிலுக்கு சென்றோம். 


திருவலஞ்சுழி ன்னு சொன்னதும்  பெரும்பாலானோர்  வெள்ளை விநாயகர் கோவில்தான் பிரதானம் ன்னு நினைச்சுக்குவாங்க.  ஆனா,  இது ”பெரியநாயகி உடனுறை ஜடாமுடிநாதர் என்னும் கபர்தீஸ்வரர் ஆலயமாகும்! பிருமாண்டமான கோவில்! கோவிலில் நுழைந்து கொடிமரத்தை தாண்டியதுமே வெள்ளை விநாயகர் என்னும் ஸ்வேத விநாயகர் சந்நிதி.

(படம் :தினமலர் பக்தி மலர்)

திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர் ஸ்வேத விநாயகர். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையால், ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளி வந்தது. பல்வேறு அவதிகளுக்கு உட்பட்ட தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து...,  பொங்கி வந்த கடல்நுரையைப் பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன் பின்னரே அமுதம் பெற்றதாக புராணங்கள் சொல்லுது. தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் தான் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். 

இங்குள்ள விநாய உற்சவ மூர்த்தமானது ஸ்ரீ வாணி, கமலாம்பிகா சமேதராய் ஸ்வேத விநாயகப் பெருமானாய், இந்திரனும், விஷ்ணுவும் சேவித்த வண்ணம் எழுந்தருளியிருக்கிறார்.. புராண காலத்திற்கு அப்பாற்பட்டவர். மகாபாரதம் எழுதும் பொருட்டு எழுத்தாணியாகவும், கஜமுகாசுரனை அழித்திடும் பொருட்டு ஆயுதமாகவும் தனது ஒரு தந்தத்தை ஒடித்து கொள்ளும் முன்னதாக, தனது இரு அழகிய முழுமையான தந்தங்களுடன் அற்புத மூர்த்தியாய் காட்சி தருகின்றார். 

ஆலயத்தின்  முகப்பில் திருஞானசம்பந்தரால் போற்றி வணங்கப்பட்ட கம்பீரமான ஓங்கி உயர்ந்த ஐந்து நிலை கோபுரம்.  அதனையடுத்து, உட்புறத்தின் வடக்கே, ஜடாபுஷ்பக்கரணின்ற  புண்ணிய தீர்த்தமும், தீர்த்தக்கரையில் திருக்குள விநாயாகர் கோவிலும் இருக்கு.

அபராத மண்டபத்தை அடுத்துள்ளது காயத்ரி மண்டபம்.  வேத மந்திரங்களிலேயே சிறந்ததாக விளங்கும் காயத்ரி மந்திரத்தின் 24 அஷர எழுத்துக்களும், இவ்விநாயகர் சன்னிதியில் அமைந்துள்ள  மண்டபத்தில் தூண்களாய் எழும்பி காயத்ரி மண்டபம் எனப் பெயர் பெற்றுள்ளது. 

(படம்: கூகுள்)
இந்திர ரத வடிவத்தில் அமைந்துள்ள விநாயகர் சந்நிதியின் தென்புறத்தில் ரத சக்கரம், அச்சு, கடையாணி மற்றும் குதிரைகள் பூட்டிய வண்ணம் மிக நேர்த்தியாக காட்சி தருகின்றது.  இந்த காயத்ரி மண்டபத்தின் முன்பு செய்யப்படும் ஜபங்கள் அதீத பலன் தரும்ன்னு சாஸ்திரங்கள் சொல்லுது. மண்டபத்தில் உள்ள ஆறு கருங்கல் குத்து விளக்குகளையும் ஏற்றி வழிப்பட்டால் அனைத்து செல்வங்களும் நம் வாழ்வில் கிட்டும் எனவும் சொல்லப்படுகின்றது. இப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்தான். பிரதான மூர்த்தியாக விளங்கும் ஸ்வேத விநாயகருக்கு ஆடை, ஆபரண, புஷ்ப, திலகங்கள் இல்லாததை பார்த்து, இதுப் போன்று சிலா ரூபங்கள் இருப்பது முரண்பாடாயிற்றே என எண்ணி விளக்கம் கேட்டான். அதற்கு அங்கிருந்தோர், இந்த விநாயகர், தேவலோகத்தில் இருந்து இத் தல விநாயகர், கடல் நுரை கொண்டு தேவாதி தேவர்களால் சிருஷ்டிக்கப்பட்டு, இந்திரனால் இங்கு கொண்டுவரப்பட்டு, ஈசனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். கடல் நுரையாலானதால் இவருக்கு பச்சை கற்பூரம் மட்டுமே சார்த்தப்படும். . வேறு எந்த அலங்காரமோ, அபிஷேகமோ இல்லை எனக் கூறினர். 

அதனை சற்றும் மதியாத மன்னன் அபிஷேக அலங்காரங்களை செய்திடுமாறு கட்டளையிட்டான். அனைவரும் திகைத்தனர். அச்சமயம், அங்கிருந்த மன்னனின் கண்கள் இரண்டும் பார்வை இழந்தன. பின்னர் வருத்தமுற்று விநாயகரை வேண்டிக்கொள்ள பார்வையை திரும்பப் பெற்றான். தான் செய்த தவறினை வரும் காலத்தில் யாரும் செய்துவிடக் கூடாது என்று, அதன் நினைவாக, ஞாபகச் சின்னமாக கருங்கற்களிலான மண்டபம் ஒன்றை கட்டினான். இதுவே  இப்ப அபராத மண்டபமா இருக்குன்னு ஒரு செவி வழிச் செய்தியும் உண்டு. 


(படம் : கூகுள்)

ஸ்வேத விநாயகர் சந்நிதியின் முன் உள்ள சிற்பக்கலைத் திறன் கொண்ட கருங்கல் பலகணி.  இந்தச் சன்னல் போன்ற அமைப்பு மிகப்பெரிய தத்துவத்தை உள்ளடக்கியதாக உள்ளது.  இது 4 தூண்களும், 111 கண்களும், 49 மலர்களும், 24 கர்ண துவாரங்களும், 10 யாளிகளையும் கொண்டது. மூன்று பாகங்களாக குறுக்கு வாட்டில் ஒன்றன் மீது ஒன்றாக மூன்று கற்களினால் அமைக்கப்பட்டுள்ளது. 

இது 9 அடி உயரமும், 7 அடி அகலமும் கொண்டது, நெடுக்கவாட்டு கற்கள் மும்மூர்த்திகளையும், 4 தூண்கள் நான்கு யுகங்களையும், 24 கர்ண துவாரங்கள் அஷ்ட மூர்த்திகள், அஷ்ட ஐஸ்வர்ய சித்திகள் மற்றும் எட்டு வசுக்களையும், 111 கண்கள் மந்திரங்களையும், 10யாளிகள், எட்டு திசைகளுடன் ஆகாயம், பாதளம் என 10திக்கு நாயகர்களையும், 49 மலர்கள் ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றையும் குறிப்பதாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியே இறைவனை தரிசிப்பது சகல மூர்த்திகளையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வழிப்பட்ட பலனைத் தருகின்றது. 

(படம்: கூகுள்)
ஸ்வேத விநாயரை  தரிசனம் செய்துட்டு,  தனிக்கோவிலில் இருந்து அருள் புரியும் பெரிய நாயகியையும் வணங்குகிறோம். அம்மன் சந்நிதிக்கருகில் அஷ்ட புஜ துர்கைக்கென்று தனி சந்நிதி.   ராஜ ராஜ சோழன் வணங்கிய 'நிசும்ப சூதனி' இதுதான் என்றும் ஒவ்வொரு முறை போருக்குச் செல்லும் முன்னும்  இவளை வணங்கிச் சென்றதால்தான் போர்களில் வெற்றி பெற்றான் என்றும் அருகில் வைத்திருக்கும் அறிவிப்பு பலகை சொல்லுது.  

(படம்: தினமலர் பக்தி மலர்)
ஆனா, நிசும்பசூதனி கோவில் தஞ்சாவூரில்தான் இருக்கிறது என்றும் இங்கிருக்கும் அஷ்டபுஜ துர்கையை ராஜ ராஜ சோழன் வணங்கினான் என்பதற்கு ஆதாரம் இல்லையென்றும் எழுத்தாளர்  பாலகுமாரன் சொல்றார். எப்படி இருந்தாலும் கண்களில் கருணை வழியும் துர்கையை வணங்கலாம் வாங்க!

சுவாமி மலையிலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் பாதையில் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது இத்திருத்தலம். காடு, மலை, ஊர்ன்னு எங்கும் நில்லாது தான் சென்ற இடமெல்லாம் செல்வம் கொழிக்கச் செய்த காவிரித்தாய் திருவலஞ்சுழி வந்ததும், இறைவனை வலமாய் சுற்றி, மேற்கொண்டு செல்லாமல் ஆதிசேஷன் வெளிப்பட்ட பாதாளம் ஒன்றினுள் புகுந்துக் கொண்டாள். இதையறிந்த அந்நாட்டு மன்னனான கனக மன்னன் திகைத்து,  இத்தலத்து இறவனை வேண்டி நிற்க.., நீயும், உன் மனைவியோ இப்பள்ளத்தில் புந்தாலோ அல்லது முற்றும் துறந்த முனிவரொருவர் அப்பாதாளத்துள் புகுந்தால்  மீண்டும் காவிரி அன்னை வெளிவருவாள் என அசிரீரி மூல தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்காக, கனக மன்னனும் அவன் மனைவி செண்பகாங்கியும் இப்பள்ளத்தில் புகுந்து உயிர் தியாகம் செய்ய முயன்றதைக் கண்டு  ஏரண்ட முனிவர் தம்மையே தியாகம் செய்து பாதாளத்தினுள் பாய்ந்து காவிரியை வெளி வரச் செய்தார். ஏரண்ட முனிவர் வேண்டுகோளின்படி இரண்டு லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்த கனக சோழன் 70 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்து, தன் மகன் சுந்தர சோழனுக்குப் பட்டாபிஷேகம் செய்தபின் சிவபதம் அடைந்தார்.
  

சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும் இத்தலம் விளங்குது.   கோவில் கோபுர சிற்பத்துலயே  இடதுப்புறம் விஷ்ணுவும், வலப்புறம் சங்கரனும் சேர்ந்து சங்கரநாராயணனாகிய நமக்கு அருளும் காட்சியே இதற்குச் சான்று.

தமிழக அரசின் மதிய உணவு திட்டத்துக்கான காய்கறிகள் மற்றும் வாழை இலைகளை இக்கோவில் வளாகத்தில் உள்ளயே பயிரிடப்படுவது மற்றொரு சிறப்பு.   இத்தலத்து ஸ்வேத பெருமாளை வழிப்பட்டப் பின்னரே சுவாமி மலை முருகனை தரிசிக்கனும்ன்னு அங்கிருந்த பெரியவர் ஒருவர் சொன்னார். 
11 கருத்துகள்:

 1. திருவலஞ்சுழி சென்றதில்லை! விரிவான தகவல்கள்! அழகிய படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 2. வணக்கம்
  அறியாத தகல் பலவற்ற அறிந்தேன் அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ

   நீக்கு
 3. வணக்கம்
  த.ம 2வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. திருவலஞ்சுழிக்கு வந்து சென்றிருக்கிறீர்கள்,
  ஆகா நான் பணியாற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாண்டிதான் சென்றிருப்பீர்கள்
  தெரியாமல் போய்விட்டதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! தெரியாமப் போச்சே! அடுத்த முறை வரும்போது கண்டிப்பாய் சொல்றேன் சகோ!

   நீக்கு
 5. திருவலஞ்சுழி பற்றிய சிறப்பான தகவல்களுக்கு நன்றி சகோதரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 6. Excellent Post about Swetha Vinayakar ! Thanks for sharing.

  Madam,
  You may like to go through this Link:
  http://gopu1949.blogspot.in/2015/01/12-of-16-71-80.html
  Just for your kind information, only.
  VGK

  பதிலளிநீக்கு