Tuesday, February 21, 2017

கைக்கொடுத்திருப்பாயா சகோதரா?!

அன்புள்ள சகோதரனே,
நீ நலமா? நான் நலம். அங்கு உன் உற்றார் நலமா?
தாயின் கருவறை என்னும் இருட்டறையில் பத்து மாதம் தனித்திருந்தேனே.., அப்போது துணைக்கும், உயிரமுதத்தை போட்டியிட்டு பருகவும் நீ வரவில்லை..,

தத்தி நடக்கும்போது விரல்பிடித்து நடைப்பழக்கவும், ஓடி விளையாடும்போது கீழே விழும் என்னை தாங்கி பிடிக்கவும் நீ வரவில்லை, கொட்டாங்கச்சியில் மணலைக் கொட்டி சுட்ட இட்லியையும், கருவேல மரத்து இலையை அரைத்து வைத்த சட்னியை உண்ணவும், இன்னொரு இட்லி கேட்டு நீ அடம்பிடிக்க நான் தர மறுக்க, காலால் இட்லியை சிதைக்கவும் நீ வரவில்லை..,
பள்ளியில் பல்பத்தை தின்றதையும் , சிலேட்டை எச்சிலால் அழித்ததையும், சைக்கிள் பழகி பாவடைக் கிழித்துக் கொண்டு வந்து அம்மாக்குத் தெரியாமல் மறைத்ததையும் அம்மாவிடம் போட்டுக் குடுத்து நான் அடிவாங்குவதைக் கண்டு ரசிக்கவும் நீ வரவில்லை.., ,

என் உண்டியல் காசை நீ திருடி சினிமா பார்த்ததையறிந்து, உன்னைக் கண்டிக்க, அப்பிடித்தாண்டி செய்வேன் னு நறுக்கென்று என் தலையில் கொட்ட, வலித்தாங்காமல் அழும் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அப்பாவிடம், நிலைப்படியில் இடிச்சுக்கிட்டேன்பா எனப் போய்ச்சொல்லி உன்னை நான் காப்பாற்ற.., கண்களால் நன்றியுரைக்க நீ வரவில்லை..,
நான் சடங்காகி "குச்சி வீட்டுக்குள்" அமர்ந்திருக்கையில், அவளைத் தீண்டதேடானு சொன்ன கோடி வீட்டு ருக்குப் பாட்டிக்கு தெரியாமல் உள் நுழைந்து, எனக்கு தந்த பலகாரங்களையெல்லாம் என் வாய் பொத்தி திண்ணவும் நீ வரவில்லை..,
தெருமுனையில் காலிப் பசங்க கிண்டல் பண்றாங்க, நீ துணைக்கு வாடா பயமா இருக்குனு உன்னை கெஞ்ச, ஆமாம் இவ பெரிய உலக அழகி இவளைப் பார்க்க வர்றாங்கன்னு ,ச்சீப் போடின்னு என்னை துரத்திவிட்டுட்டு, என் பின்னாடியே வந்து, அவர்களைப் புரட்டி எடுக்க நீ வரவில்லை. ..,
பரிட்சைக்கு செல்கையில் பாசாகி என் மானத்தை காப்பாத்துடின்னு விபூதியிட்டு, என்னை பரிட்சை எழுத அனுப்பிவிட்டு, பள்ளி வாசலில் நான் வரும்வரை கால்கடுக்க காத்திருக்க நீ வரவில்லை..,
இந்த மாப்பிள்ளையதான் நீ கட்டிக்கிடணும்னு சொல்லி அப்பா அதட்ட, நான் விசாரிச்சுட்டேன், இவன் சரியில்லை, அவளுக்கு கோடி வீட்டு ராஜனைதான் பிடிச்சிருக்கு அவன் நல்லவன் அவனுக்கே கட்டி வச்சுடுங்க அவ நல்லா இருப்பாள்னு எனக்கு பரிந்துக் கொண்டு பேச நீயில்லை...,
மசக்கையில் வாந்தி எடுக்கும்போது கையிலேந்திப் பிடிக்கவும், ஒன்பதாம் மாதம் பூமுடிக்கையில் எங்கோ ஒரு மூலையில் சாம்பார் வாளியைக் கையில் ஏந்திக்கொண்டு என் மேடிட்ட வயிற்றைக் கண்டுப் பூரிக்கவும் பிரசவ வேதனையில் துடிக்கும்போது, நான் இருக்கேண்டா பயப்படாதேடா னு என் கைப்பிடித்து ஆறுதல் சொல்ல நீ வரவில்லை..,
மருமகப் பிள்ளையை நடுங்கும் விரலுடனும் கண்ணீர் துளிகளுடனும் ஏந்திக் கொள்ளவும், மடியிலிருத்தி காது குத்தவும், தங்கை மகளுக்கு "குச்சுக் கட்டி சீர் செய்யவும்" நீ வரவில்லை..,
இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடிந்த என்னால்..,

ப்த்து மாதம் சுமந்து, உயிர் கொடுத்து பெற்று,தரையில் படுக்க வைத்தால் ஈ, எறும்பு கடிக்குமென மார்மீதே உறங்க வைத்து, என்னை உல்ளாங்கையில் வைத்து தாங்கிய அன்னை இன்று படுத்த படுக்கையில்...,,

மகளேயானாலும், என்னாலும் செய்ய முடியாத பணிவிடைகள் சில உண்டு.அதைச் செய்ய இயலாமல், தத்தளித்து , தடுமாறி, தோள்சாய ஆளின்றி தவிக்கிறேன்,
ஒருவேளை இன்று நீ என்னருகில் இருந்திருந்தால் .., கை கொடுத்திருப்பாயா??!! சகோதரா?
இப்படிக்கு,
உன்னுடன் பிறந்து , உன் மடியில் தவழ்ந்து, உன் விரல் பிடித்து வளர்ந்து வாழும் பாக்கியத்தை இழந்த,.. துரதிர்ஷ்டசாலியான சகோதரி.

7 comments:

  1. என்ன சொல்வதென்றே தெரியவில்லை சகோதரி...

    அந்த ஜென்மம் சகோதரனாக இருக்கவே வேண்டாம்...!

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன்2/21/2017 8:08 பிற்பகல்
    என்ன சொல்வதென்றே தெரியவில்லை சகோதரி...
    உங்கள் பின்னுட்டம் தவறு என நினைக்கிரேன் எனக்கு ஒரு சகோதரன் இல்லையே என்கிற ஆற்ற்றாமை இது
    அந்த ஜென்மம் சகோதரனாக இருக்கவே வேண்டாம்

    ReplyDelete
  3. உடன்பிறப்பின் வலி...கண்கள் பனித்துவிட்டன.

    ReplyDelete
  4. சுமைதாங்கியாக இருந்து முன்னேற்றுபவனே சகோதரன் என்ற பெயருக்கு உரியவனாகிறான். அதே சமயம், சகோதரிகள் எல்லாருமே சரியான முறையில் பொறாமையின்றி சகோதரனுக்கு ஆதரவு தருகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு விதம். மனம் விட்டுச் சொல்லி அழும்போது ஆறுதல் கிடைப்பதென்னவோ உண்மை.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  5. இவ்வாறான ஏக்கங்களை அனுபவிப்போரால்தான் உணரமுடியும். ஆனால் உங்களது எழுத்து எங்களையும் உணரவிட்டது.

    ReplyDelete
  6. மனம் கனக்கச் செய்யும் பதிவு
    இதே நிலையில் எனக்கும் இருப்பதால்
    கூடுதலாக கரைந்து படிக்கவைத்தது
    மன உணர்வுகளை மிகச் சரியாகச்
    சொல்லுப்படியாக
    எழுத்து உங்களுக்கு மிக எளிதாய் வசப்படுகிறது
    தொடர வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  7. உங்க பிள்ளைக்கு தாய்மாமனும் இல்லாமல் போய்விட்டானே ,அதையும் யோசித்து இருக்கலாம் :)

    ReplyDelete