Thursday, March 10, 2011

சுயம் தொலைத்தவள்..,


தட்டு, தடுமாறி
நடைபயிலும்போது...,
பெற்றோருக்கு,
"செல்ல மகளாய்"...,

விளையாட்டாய், கல்வியை
பெறும்போது..,
அண்ணனுக்கு,
"அடங்கிய தங்கையாய் "..,

கல்வியுடன், இளமையும்
தலை நீட்டும்போது...,
காதலனுக்கு,
"அன்பு காதலியாய்"...,

இளைமையுடன், வாழ்வின்
ருசியறிய முயலும்போது...,
கணவனுக்கு,

"ஆசை மனைவியாய்"...,

வாழ்வின் ருசியுடன், பொறுப்பும்
எட்டிப் பார்க்கும்போது..,
பிள்ளைகளுக்கு,

"பொறுப்பான தாயாய்"...,

பொறுப்புடன், பக்குவமும்
கைவரும்போது...,
புகுந்த வீட்டினருக்கு,

"பொருத்தமான மருமகளாய்"..,

பக்குவத்துடன், பொறுமையும்
நிறைந்திருக்கும்போது..,
மருமகபெண்ணுக்கு,

"கனிவான மாமியாராய்"..,

பொறுமையுடன், அனுபவமும்
சேரும்போது ...,
பேரபிள்ளைகளுக்கு,

"கண்ணியமான பாட்டியாய்"..,

அனுபவத்துடன், முதுமையும்,
மூப்பையும் கண்டு அஞ்சும்..,
இணைக்கு..,

"தோழமையுடனான தாதியாய்"...,

மூப்புடன், மரணம்
நெருங்கும் தருவாயில்..,
தனிமையில்,

மெல்ல திரும்பி பார்க்கிறேன்...,


"நான் எங்கே" என்ற
கேள்விக்கு..,

"பெருமூச்சே ".
பதிலாய் வந்து முகத்திலறைகிறது.?!!


டிஸ்கி: இந்த கவிதையைதான் மகளிர் தினத்துக்கு பதிவிடலமினு இருந்தேன். ஆனால், என் மகள் பரிசு பல பெற்றதால் அவளுக்கு ஒரு கவிதையை பரிசளிக்க வேண்டி முந்தைய பதிவு.

Tuesday, March 08, 2011

பெண்ணாய் பிறந்த பொற்குவியல்

என் பெரிய பொண்ணு தூயா பிறந்த போது மனசுக்குள் ஒரு சின்ன வருத்தம், ஆண் பிள்ளையை எதிர்பர்த்திருந்தபோது பெண்பிள்ளை பிறந்ததால் வந்த சின்ன ஏமாற்றம்தான் அது.

ஆனால், அவள் அழகும், துறுதுறுப்பும் என்னை தேற்ற ஆரம்பித்தது.,
மற்ற குழந்தைகளைப்போல் அங்கும் இங்கும் ஓடியாடி கிழே விழுந்து என்னை தவிக்க விட்டதில்லை.
சட்டென்று எதையும் கிரகித்த்துக் கொண்டு படிப்பிலும் படு சுட்டி.
எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, என்னருகிலிருந்து தாதியாய் பணிவிடைசெய்து, தாயாய் உடன்பிறந்தோரை கவனித்து கொண்டவள்.
நான் மனம் சோர்ந்திருக்கும் வேளையில் தோழியாய் மாறி ஆறுதல்சொல்பவள்..,
நான் கண்ணால் உரைப்பதை புரிந்துக் கொண்டு சூழ் நிலைக்கேற்ப நடந்து கொள்பவள்.
இப்படி பல பல ரூபங்களில் தேவதையாய் காட்சி தருபவள், சட்டென குழந்தையாய் குறும்பு செய்து குட்டி சாத்தானாய் மாறி வெறுப்பேற்றுவாள்.






(அது வேற ஒன்னுமில்லீங்க. நான் இன்று எங்கள் school ல நடந்த sports day ல 3 பதக்கமும், Super Senior Champion பட்டமும் வாங்கி வந்துட்டேனாம். அதுக்குதான்இத்தனை feelings- தூயா )




அவளுக்காக ஒரு கவிதை:
அழகு பாதமோ மாவிலை கொழுந்து,
கண்களோ வர்ணிக்க முடியா நட்சத்திரங்களின் ஜொலிஜொலிப்பு,

உலகை மறந்தேன், என்னையும் மறந்தேன்,
முடிகள் அனைத்தும் பஞ்சு மிட்டாயின் மென்மை,
நேர்த்தியான நெற்றியோ இளம்பிறை,
அழகு உதடுகள் குவித்து வரும் ஓசை குழலுக்கு ஈடானது,

ரோஜா மலரும், தாமரை மலரும் தோற்றது
என் மகளின் நிறம் கண்டு,

கையும், காலும் அல்லிதண்டு,

அசைவில் ஒரு அற்புதமும் உண்டு,

மகளாக அவள் பிறக்கவில்லை,
உண்மையில் பெண்ணாக பிறந்த பொற்குவியல்,

மருத்துவராக வேண்டி தவமிருக்கும் தேவதை...!




டிஸ்கி: மகளிர் தினத்திற்காக வேறொரு கவிதையை எழுதி வைத்திருந்தேன். ஆனால், பரிசுகள் பல பெற்று, பெண்ணின் பெருமையை என் மகள் நிலைநாட்ட முனையும்போது, நான் மகளிர் தினம் கொண்டாட இதைவிட வேறொரு காரணம்தோன்றவில்லை.

மகளிர் அனைவருக்கும் "உலக மகளிர் தின வாழ்த்துக்கள்"

Saturday, March 05, 2011

அலம்பல் தாங்க முடியலைடா சாமி..,

வியாழன் அன்று மாலை ஒலிக்க துவங்கிய எனது அலைப்பேசி இதோ, இந்த நிமிடம் வரை ஓயவில்லை.
வாழ்த்து சொன்ன தலைவர்களுக்கு நன்றி சொல்லி மாளவில்லை.
வீட்டிற்கு
வந்த பூங்கொத்துக்களை வாங்கி, வாங்கி எனது கைகள் ஓய்ந்துவிட்டன.
அந்த
பூங்கொத்துக்களை வாங்கி வைக்க எனது வீட்டில் இடம் போதவில்லை.
ஸ்ஸ்ஸ்
முடியலை சோடா பிளீஸ் ..,

(அட விஷயம் இதுதாங்க.., பய புள்ளை கவிதை ஒண்ணு ஆனந்தவிகடன் ல இந்த வாரம் வந்திருக்கு. அதனாலதான் இத்தனை அலப்பறை..,)

இதோ அந்த கவிதை உங்க பார்வைக்கும்..,

(இதப் பாரடா புத்தகம் படிக்குறவங்களை கொன்னது போதாதுன்னு உங்களையும் கொல்லுது இம்சை ..,)



தொட்டி மீன்
மனிதர்களற்ற வீட்டின்
தொட்டியினுள் சலனமற்று
வாழ்தலின் பொருட்டு
உலாவும் மீனுக்கு...,
சமுத்திரத்தின் சுதந்திரமோ?!
வலை நோக்கிய போராட்டமோ?!
எதுவாகினும்
தெரிவதில்லை!

டிஸ்கி: பாராட்டனும் னு நினைக்குறவங்க எல்லாம் மேடைக்கு வாங்க. திட்டனும் னு நினைக்குறவங்க லாம் சாரி போய்ட்டு நாளைக்கு வாங்க.