Monday, May 12, 2014

இந்தப் பதிவர்களே இப்படித்தானா!? - ஐஞ்சுவை அவியல்

                         
என்னடி புள்ள!  காலங்காலத்தாலே  புலம்பிக்கிட்டு இருக்கே?!

அது ஒண்ணுமில்லைங்க மாமா, நம்ம பக்கத்து வீட்டு கதிர் இருக்கானே, அவன் எம்புட்டு பெரிய படிப்பு படிச்சு இருக்கான். காலேஜுக்குலாம் போய் இருக்கான். ஆனா, அவனுக்கு ஊர் பெரியவங்க முன்னாடி எப்படி நடந்துக்கனும்ன்னு தெரியலியே, அதான், அவன்லாம் படிச்சு என்ன புண்ணியம்? யாருக்கு என்ன லாபம்ன்னு சொல்லுங்க பார்க்கலாம். அதான் புலம்பிக்கிட்டு இருக்கேன். 

எல்லாருமே பிரகலாதனாகிட முடியுமா புள்ள?!

பிரகலாதனா?யாருங்க மாமா அது? எனக்கு தெரியாம இந்த ஊருல? அவன் வெளியூரா?!

இல்ல புள்ள, இரண்ய கசிபுன்ற ராட்சனோட பையன். அம்மாவோட வயத்துல இருக்கும்போதே நாரதரின் போதனையால தன் அப்பாவுக்கு பிடிக்கவே பிடிக்காத விஷ்ணு பகவானின் பக்தனா பிறந்தார்.  பிரகலனாதன், விஷ்ணுவை மறக்க, கொடிய  வழிகளைலாம்  கையாண்டு தோற்று போன  இரண்யகசிபு, எங்கே உன் ஹரின்னு அந்த பச்ச புள்ளையை பார்த்து கோவமா கேட்டானாம்.

ஐயையோ, அப்புறம் மாமா...,

என் ஹரி தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்னு மகன் சொன்னதை கேட்டு, பக்கத்தில இருந்த தூணை தன் கையிலிருந்த கதாயுதத்தால உடைச்சானாம். அப்போ, தூணிலிருந்து விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வந்தாரு. நரசிம்மம்னா...,

எனக்கு தெரியும் மாமா, மனிதன் உடம்பும், சிங்கத்தின் தலையும் சேர்ந்த ஒரு அவதாரம்தான் நரசிம்மம்.

கரெக்டா சொல்லிட்டே புள்ள. நரசிம்மர் போரிட்டு இரண்ய கசிபுவை கொண்ணுட்டார். நரசிம்மரோட உருவத்தை பார்த்து, தேவர்கள் உட்பட எல்லாரும் பயந்தாங்க. அவரோட கோவத்தை போக்க விஷ்ணுவின் பொண்டாட்டியான மகா லட்சுமிதேவிக்கிட்ட கேட்டுக்கிட்டாங்க. அந்தம்மாவும் புருசன் பக்கத்துல போக பயந்தாங்க.

ம்ம்ம்ம், அப்புறம் எப்படிதான் விஷ்ணு பகவானின் கோவம் போச்சு?

பிரகலாதன்தான் பாட்டுலாம் பாடி விஷ்ணுவோட கோவத்தை போக்குனாரு. அதனால, கோவம் குறைஞ்ச விஷ்ணு, பிரகலாதன்கிட்ட மன்னிப்பு கேட்டாரு.

என்னாது கடவுள் மன்னிப்பு கேட்டாரா? ஏன் மாமா?

தன் மேல பிரகலாதன் வெச்ச பக்தி உண்மைதானான்னு, சின்ன பையன்கூட பார்க்காம ரொம்ப சோதிச்சுட்டேன். அதனால, என்னை மன்னிச்சு, எதாவது வரம் கேள்ன்னு விஷ்ணு பகவான் பிரகலாதன்கிட்ட கேட்டாராம்.

ஐயனே! ஆசைகள் என் மனசுல  தோணவே கூடாது,  பணம் இருக்குது, படிப்பு இருக்குது. ஆனா, ஆசை வேணாம்ன்னு சொன்னான் பிரகலாதன். குருகுலத்துல  அவன் படிச்சதுது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் இல்ல! இறை சிந்தனையையும் வளர்த்துக்குறாதுக்கு.

படிச்சா மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துகணும்ங்குற மாதிரி  இருந்த பிரகலாதனின் இந்தப் பேச்சு,  நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. சாமியை பார்த்து பக்தன் தான் உருகுவான். ஆனா, இங்கயோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த சாமி பக்தனை பார்த்து  உருகிப் போனான். இந்த சின்னவயசுல,  எவ்வளவு நல்ல மனசு! ஆசை வேணாம்ங்குறானே! ஆனாலும், அவர் விடலை.

 நீ ஏதாவது கேட்டுத்தான் ஆகணும்ன்னு, நரசிம்மர் கெஞ்சுனதால , எங்க அப்பாவை தண்டிக்காம அவருக்கு வைகுண்ட  பதவி கொடுக்கனும்ன்னு கேட்டுக்கிட்டானாம்.   அதுக்கு, விஷ்ணு, பிரகலாதா! உன் அப்பா  மட்டுமில்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெத்த அப்பாக்கள்  தப்பே செய்திருந்தாலும், அவங்க என் இடத்துக்கு வந்துடுவாங்க. அவங்க  21 தலைமுறையினரும் புனிதமடைவாங்கன்னு  வரம் தந்தாராம் விஷ்ணு.  தந்தை கொடுமை செஞ்சாரேங்குறாதுக்காக  அவரை பழிவாங்கனும்ன்ற எண்ணம்  பிரகலாதனிடம் இல்லை. படிச்சவங்க  கத்துக்கொள்ள வேண்டிய பண்பு இதுதான் புள்ள.

கரெக்டுதானுங்க மாமா.  படிச்ச படிப்பை பயனுள்ள வகையில யூஸ் பண்ணாதானே அந்த படிப்புக்கும் லாபம். மத்தவங்களுக்கும் லாபம்.
        
அப்புறம்,  நம்ம கம்ப்யூட்டர் பொட்டில  பொட்டில ஒரு ஜோக்கு படிச்சேனுங்க  மாமா. சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாகிட்டுது.

எனக்கும் சொல்லுடி. நானும் சிரிக்குறேன்.

மனைவி: ஏங்க காரக்குழம்பு செய்யவா? இல்லை கூட்டு செய்யவா?
கணவன்: நீ முதல்ல சமையல் செய்.  நாம அப்புறமா அதுக்கு காரக்குழம்பா? கூட்டான்னு பேர் வச்சுக்கலாம். 

ராஜியோட பையன் அப்புக்கு ரொம்ப கோவம் வரும்.  ஒரு முறை தமிழ்வாசி பிரகாஷ் தன் பதிவுல கோவம் எவ்வளவு தப்புன்னு பதிவு போட்டிருந்தார். அதாவது, ஒரு அப்பா தன் பையன்கிட்ட உனக்கு கோவம் வரும்போதுலாம் ஒரு ஆணியை மரத்துல அடின்னு சொல்றார். அந்த பையனும் செய்றான். கோவம் தனிஞ்சதும் அந்த ஆணியை புடுங்கச் சொல்றார். பையனும் அதேப்போல செய்றான். கொஞ்ச நாள் கழிச்சு அந்த மரத்தை பார்க்கச் சொல்றார். ஆணி அடிச்ச தழும்பு அப்படியே மரத்துல இருக்கு. அதனால, கோவம் மறைஞ்சாலும் அதோட பாதிப்பு மறையாதுன்னு போட்டிருந்தார்.

அதை தன் பையனைக்கிட்ட அதைப் படிக்க சொன்னா ராஜி. அதுக்கு ராஜியோட பையன் அப்பு, ஏன்மா! கோவப்படாதடா! கோவப்பட்டா உடம்புக்கு ஆகாது, அடுத்தவங்க மனசு கஷ்டப்படும்ன்னு சொல்ல வேண்டியதுதானே! அதைவிட்டு இப்படி சுத்தி வளைச்சு ஏன் சொல்லனும்!? நீங்க மட்டுமில்ல உங்க பதிவர்களுக்கே நறுக் சுறுக்குன்னு சொல்லத் தெரியாதா!? வளவளன்னு சுத்தி வளைச்சுதான் சொல்வீங்களோ!? புத்தி சொல்றேன்னு நல்லா இருக்கும் மரத்துல வேற ஆணி அடிக்கச் சொல்றிங்க. மரமும் ஒரு உயிர்தானே! அதுக்கு வலிக்காது!?ன்னு கேட்டு ராஜியை படுத்தி எடுக்குறான் மாமா!

பின்னே குழந்தைகளுக்கு புத்திச் சொன்னாலே இப்பலாம் பிடிக்குறதில்ல. அதுலயும் சுத்தி வளைச்சு சொன்னா இப்படித்தான் நடக்கும். ஒரு விடுகதை கேக்குறேன் பதில் சொல்லுப் பார்ப்போம்!!

கேளுங்க மாமா!


நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?
இதான் புள்ள விடுகதை. நல்லா யோசிச்சு பதில் சொல்லு. பதில் சொல்லச் சொன்னா ஏன் இப்படி மூஞ்சை அஷ்டக்கோணலாக்குறே!? சும்மாவே உன் மூஞ்சி பார்க்க சகிக்காது. இதுல இப்படி ஒரு சேஷ்டை தேவையா!?
                           
                                           


நான் ஒண்ணும் பதில் தெரியாம முழிக்கல மாமா, பல் வலிக்குது. கடைவாய் பல் சொத்தையா இருக்கு. அது ரெண்டு நாளா ரொம்ப வலிக்குதுங்க மாமா. நைட்லாம் தூக்கமே இல்ல.

இதுக்குதான் இனிப்புலாம் சாப்பிட்டபின் வாய் கொப்பளிக்கனும், சாக்லேட், கற்கண்டுலாம் கடிச்சு சாப்பிட கூடாது. அதிக குளிர்ச்சி, சூடானதை சாப்பிட கூடாது. சாப்பிட்டபின் வாய் கொப்பளிக்கனும். காலையில எழுந்ததும் பல் துலக்கனும்.  ராத்திரி படுக்க போறதுக்கு முன்னாடி பல் துலக்கனும். வருசத்துக்கு ஒரு முறையாவது பல் டாக்டர்கிட்ட போய் ஆலோசனை கேட்கனும்.

சரிங்க மாமா, அதெல்லாம் இனி கரெக்டா செய்றேன். இப்ப வலிக்குதே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க . மிளகுத்தூளுல  கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்குற பல்லுல  தடவி வந்தா வலி குறையும். முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறிச்சு  நல்லா  கடிச்சு  சாப்பிட்டு வந்தாலும் பல் வலி குறையும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தாலும் சொத்தைப்பல் குறையும்.

ஆனா, இதெல்லாம் சும்மா தற்காலிகமாதான் செஞ்சுக்கனும். உடனே மறக்காம பல் டாக்டகிட்ட போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கனும். நான் போய் கழனில மடை திருப்பிவிட்டு வரேன். சாயந்தரமா டவுனுக்கு போய் உன் பல்லை புடுங்கலாம்.

என்னங்க மாமா, இப்படி கிண்டல் பண்றிங்களே!?

சும்மா தமாஷ் பண்ணே புள்ள. சொத்தை பல்லை எடுத்துட்டு வந்துடலாம்.

சரிங்க மாமோய்.நானும் சீக்கிரம் வீடு வேலைலாம் முடிச்சு வைக்குறேன்.

Friday, May 02, 2014

திருமலை நம்பியின் நின்ற கோலம். திருக்குறுங்குடி-புண்ணியம்தேடி

போன வாரம் திருக்குறுங்குடிஅழகிய நம்பிராயர் கோவிலில் தரிசனம் முடிச்சாச்சு! இனி, மலைக்கோவிலில் இருக்கும் திருமலை நம்பியை தரிசிக்கச் செல்லலாம்.... அதுக்குமுன்  கீழ் கோவிலில் இருந்து மலைக்கோவில் செல்ல ஜீப் வசதி இருக்கு. அதுல அதிகபட்சமா 8 பேர் வரை பயணம் செல்லலாம். ஏன்னா, மலைமேல் ஏறி செல்ல எடை குறைவாக இருந்தால் நலம். தனி ஒரு ஆளாக போனாலும் சரி இல்ல 8 பேர் கொண்ட கும்பலாக இருந்தாலும் சரி 800 ருபாய் வசூலிக்கிறாங்க. சிலபேர் மலையடிவாரம் வரை சென்று  காட்டுபாதை வழியே நடந்தே மலைநம்பிகோவிலுக்கு  செல்றாங்க. கீழ்கோவிலில் இருந்து மலையடிவாரம் வரை செல்ல 80 ரூபாய் வசூலிக்கிறாங்க கீழ்கோவிலிருந்து மலையடிவாரம் சுமார் 6 கிமீ தொலைவு இருக்கும்.

இதுதான் கோவிலுக்குச் செல்லும் மலையடிவார செக் போஸ்ட். வனத்துறை கட்டுப்பாட்டுல இந்த இடம் இருக்கு. இங்கே கோவிலுக்கு செல்வதற்கு நுழைவு கட்டணம் இல்ல. ஆனா பக்தர்கள் அல்லாதவர்கள் அருவியில் குளிப்பதற்க்கு கட்டணம் வசூலிக்கிறாங்க. அதுப்போல டிஜிட்டல் கேமேராவிற்கு 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சரி, இனி நாம மலைக்கு செல்லலாம். செக் போஸ்ட் கேட்லயே வனவிலங்குகள் பத்தின எச்சரிக்கை அறிவிப்பு வச்சு இருகிறாங்க. இங்கே புலிகள் இருக்கிறதாம் ஆனா அவை மலையின் உச்சியில் தான் இருக்கும். கீழே வருவது இல்லை(புலியைவிட கொடிய மிருகமான மனிதர்களைக் கண்டு அதற்கு அச்சமோ!!??).

 மத்தபடி வெயில் சாயும் மாலை வேளையில் எல்லா மிருகங்களும் நாம் போகும் பாதையில் நடமாட ஆரம்பிக்கும். அதனால 4 மணிக்குள்ளே திரும்பி வந்திடனும்ன்னு எச்சரிக்கை பண்ணினார் வனத்துறை அதிகாரி. அதைவிட முக்கியமான விஷயம் என்னனா நாங்க சென்ற அன்று நாங்க போன அன்னிக்கு அதிகாலையில பெரிய சிறுத்தை ஒண்ணு இந்த கோவிலுக்கு செல்லும் வழிப்பாதையில் நடமாடியதாக சொன்னதால உள்ளுக்குள் கொஞ்சம் பயம் வந்தது. அதனால, ஜீப்ல போனா பாதுகாப்பு.  ஆனா வனத்தை முழுமையாக ரசிக்க முடியாது நடந்து சென்றா கவனமாக செல்லுங்கள் என அந்த அதிகாரி சொன்னார். அதனால இறைவனின் மேலே பாரத்தை போட்டு நடந்தே மலை உச்சிக்கு சுமார் 4 கிமீ தூரத்தை கடந்து இயற்கையையும் ரசித்து, காட்டு மிருகங்கள் வந்தால் நான் ராஜி, நான் பிளாக்கரா இருக்கேன். உன்னைலாம் என் பதிவுல போடுறேன்னு சொல்லி தாஜா பண்ணிக்கலாம்ன்ற குருட்டு தைரியத்தில்  நடந்தே செல்ல முடிவெடுத்து நடக்க ஆரம்பித்தோம்.

பொதுவாக சித்தர்கள் எல்லாம் சிவன்கோவில் மலைகளின் மேலேதான் இருப்பாங்க. ஆனா இங்கே ஆச்சர்யமாக பெருமாள் கோவில் மலைமேலே சித்தர்கள் இருப்பது!! இங்கே சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கே பலர் இங்கே வருவதுண்டாம்.  சிலருக்கு தரிசனமும் கிடைத்து இருக்கிறதாம். இந்த நம்பி மலையில் இங்கே மலைமேலே இருக்கும் பெருமாள் அழகிய நம்பி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். அதனால இந்த மலையும் நம்பிமலை என அழைக்கப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் வனத்துறையின் செக் பாயிண்ட் இருக்கு. அதன் வாசலின் இருபக்கமும் சித்தர்களான சிவாகியரும், யூகி முனிவரும் இட வலபக்கமாக இருக்கிறார்கள். அவர்களை வணங்கிவிட்டு மலை பயணத்தை தொடங்கினோம்......
  
கரடு முரடான கற்கள் நிறைந்த மலைப்பாதை. தண்ணீரெல்லாம் தெளிந்த நீரோடைப் போல அழகாக ஓடுகிறது. மரங்கள் எல்லாம் பசுமையாக காட்சியளிக்கிறது. புதியவகை பறவைகள், வால்நீண்ட குருவிகள் எல்லாம் பறக்கும் விதம் வித்தியாசமாக இருந்தது. கேமரா ஆன் செய்வதற்குள் அது எங்கேயோ போய் விட்டது!!!

மலைப்பாதையில் நடந்து செல்வது ஒரு திரில்லான அனுபவமாக இருந்தது. வழிநெடுக்க பறவைகளின் வித்தியாசமான ஒலிகள், நீரோடையின் சப்தம், குரங்குகளின் குறுக்கு நெடுக்கு ஓட்டம் இதெல்லாம் பார்த்துவிட்டு செல்வது இயற்கையோடு நம்மை ஒன்றிப்போக செய்தது.

இவ்வளவு கற்களும், தெளிவில்லாத வழிப்பாதையும் இருந்தாலும் ஆண்டுதோறும் இங்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாம். ஒவ்வொரு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம். அதேபோல் சனிக்கிழமைகளில் மலையடிவாரத்தில் இருந்தே நடந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாம்.

மொத்தம் 4 கிமீ தொலைவில் இப்பொழுது 2 கிமீ கடந்து வந்தாச்சு. இந்த வழியில் ஒரு பெரிய உடும்பு எங்களை கடந்து வேகமாக சென்று புதரில் மறைந்துக் கொண்டது. குரங்குகள் எல்லாம் எங்க கைகளில் இருக்கும் பையில் ஏதாவது இருக்குமான்னு சுத்தி சுத்தி வந்தன. ஆனா, ஆச்சர்யப்படும் விதமா மரத்துக்கு மரம் தாவுற ஒரு உயிரினம் நம்ம கேமராவுக்குள் சிக்கிவிட்டது.

குரங்குகளுடன் ஒய்யாரமாய் கிளைகளுக்கு கிளை தாவி ஓடிக்கொண்டு இருந்தது. முதலில் அது ஒரு மரநாயோ என நினைத்தோம். பிறகுதான் தெரிந்தது அது ஒரு காட்டு அணில்ன்னு. நானும் இப்பதான் முதல்முறையா வித்தியாசமான இந்த காட்டு அணிலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நல்லவேளை! அது நாங்க படம் எடுக்ககும்வரை பக்கத்தில் குரங்காருடன் பொறுமையாக இருந்து எங்களுக்கு போஸ் தந்தது.

அதை ஜூம் பண்ணி பார்க்கும் போது அடர்த்தியான கருமைநிற ரோமங்களுடன் அழகாக இருந்தது. நாங்க கோவிலுக்குப் போறோம்கிறதைவிட ஏதோ சுற்றுலா செல்வதைப்போல உணர்ந்தோம். இந்தக் கோடை வெயிலுக்கு ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வதைவிட இதுமாதிரி இடங்களுக்கு செல்வது பொழுதுபோக்கு சுற்றுலாவாக இல்லாமல் ஆன்மீக சுற்றுலாகவும் அமையும். இயற்கை எழில் சூழ்ந்த நம்பி மலையில் உள்ள அழகிய நம்பியை தரிசனம் செய்ததுப் போலவும் இருக்கும்.

அதோ தெரிகிறப் பாறையில் மாலைவேளையில் வெயில் சாயும் நேரம் சிறுத்தை புலிகள் ஓயவேடுக்குமாம். யானைகளும் இங்க இருக்கு. ஆனா பெரும்பாலும் இந்தப் பக்கம் வருவதில்லையாம். கரடிகள் அவ்வபோது வருமாம். புலிகள் கூட ராத்திரிவேளைகளில் நடமாடிய தடங்கள் இருக்குமாம். ஆனால் இதுவரை பக்தர்கள் யாரும் பார்த்தது இல்லையாம். ஆனா காலையில் பூஜை செய்ய செல்லும் பூஜாரிகள் வித்தியாசமான காலடித்தடங்களை பார்த்ததாக சொல்கிறார்கள்.

இதனிடையே  இனி ஒரு வித்தியாசமான குரங்கு கூட்டம் நிறைய வழி மறித்தன. இங்கே கீழே மனிதர்களினால் ஒரே ஒரு செக் போஸ்ட்  நிர்வாகிக்கபடுது. ஆனா உள்ளே இங்கே குரங்கார் தின்பண்டங்கள் இருக்கிறதா!? எனப்  பார்க்க  நிறைய செக் போஸ்ட் வச்சு இருக்கிறார். கையில் இருப்பதை பிடுங்கிக் கொண்டு ஓடி விடுகிறார் இந்த சிங்கவால் குரங்கார். நானும் ஒரு கரடியாவது வரும் என கேமராவை ஆன் செய்தே வைத்திருந்தேன்!!! ஆனா, ஒண்ணுமே வரலை. அதுக்குள்ளே தூரத்தில் கோவில் செல்லும் பாதை தெரிந்தது.

இந்த இடத்தில இருந்து கோவிலின் எல்கை ஆரம்பிக்கிறது. இந்த எல்லைக்கு மேல் மாமிச உணவு சமைக்கவோ, கொண்டுச்செல்லவோ கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இங்கே இருக்கும் திருமலை நம்பி மிகவும் சக்தி வாய்ந்தவர். கோவில் எல்லைக்குள் தவறு செய்தவர்கள் நிறையப்பேர் மலைக்கு கீழே செல்வதற்குள் ஏதாவது ஒருவகையில் தண்டிக்கபடுவது உறுதி என சொல்லப்படுகிறது. ஆனால், வனத்துறையினரின் எச்சரிக்கை என்னனா நம்பி கோவிலின் சுற்றுவட்ட பாதையில் உள்ளூர் பகதர்கள் மாமிச உணவு சமைத்து உண்பார்களாம். அந்த ரத்தவாடைக்கு சிறுத்தை புலிகள் நடமாட்டம் இருக்கும் அது பக்தர்களுக்கு அச்சுறுதலாக அமையும்.  அதனால மாமிச உணவை தவிர்க்க அறிவிப்பு வைத்து இருக்கிறாங்க.

இங்கே வேறொரு அறிவிப்பு பலகையும் இருக்கு. இங்கே திருக்கோவிலுக்கு செல்லுமுன் ஒரு பெரிய நீரோடை இருக்கு. அதில் ஒரு எச்சரிக்கை அறிவிப்பும் வைத்துள்ளனர். இந்த நம்பியாறு மூலிகைகள் கலந்த புனிதமான நீரோடை.  இதில்தான் பெருமாள் தினமும் அருபமாகவும் நீராடுகிறார். ஆகவே, இங்கே சோப்பு,சிகைக்காய் போட்டு குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனியே கழிப்பறைகள் கட்டப்பட்டு இருக்கிறது. ஆகையால் இந்த புனித நீரோடையை அசுத்தபடுத்தாதீர்கள் மீறி அசுத்தப்படுத்துபவர்கள் இங்கே இருக்கும் காவல் தெய்வமான சங்கிலி பூதத்தாரால் தண்டிகப்படுவர். இது நிறைய பக்தர்களின் அனுபத்தின் மூலமாக தெரிந்துக் கொண்டோம் ஆகையால் பக்தர்கள் கவனமாக சுத்தமாக இருக்கவேண்டும் என கோவில் நிர்வாகம் மூலம் அறிவிப்பு வைத்துள்ளனர். இடது ஓரத்தில் படிக்கட்டுகளின் மேலே தெரிவது தான் சங்கிலி பூதத்தான் சன்னதி .

தூரத்தில் மரங்களுக்கு நடுவே தெரிவதுதான் நம்பி கோவில். இங்கே நிறையக் குரங்குகள் இருக்கின்றன. கோவிலுக்கு செல்லும் முன் அங்கே இருக்கிற நம்பி தீர்த்தத்தில் கைக்கால் அலம்பி செல்வது நல்லது. நாங்களும் அங்கே சென்று கைக்கால் அலம்பிவிட்டு,  கொஞ்சம் மூலிகை கலந் புனிதநீரை சிறிது பாட்டிலில் எடுத்துகொண்டு கோவிலுக்கு செல்ல படியேறத்தொடங்கினோம்.


நுழைவாயிலின் வழியே வந்தவுடன் தெரியும் உள்பிரகார மண்டபம். இந்த திருக்கோவில் எந்த மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது என இங்கிருக்கும் பட்டர்களுக்கு தெளிவான விளக்கம் தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.  மற்ற திருக்கோவில்களைப் போல் புள்ளிவிவரங்களுடன் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் சில சம்பவங்களை உதாரணமாக மேற்கோள் காட்டினார்கள்.

இது திருகோவிலின் பக்கவாட்டு சுவர் இதில் அந்த சமயத்தில் இந்த திருகோவிலுக்கு வருகைத் தந்த ஒரு ஆங்கிலேய அதிகாரி தன பெயரை  cherry oct 1808 ன்னு கல்லினால சுவரில் கிறுக்கி வச்சு இருக்கிறார். அதனால இந்த சுவர் 1808 முன்பே கட்டப்பட்டு இருக்கலாம் எனத் தோணுகிறது . அடுத்து இங்கே கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் இங்கிருக்கும் குரங்குகள்.

இங்கே இருக்கும் குரங்கு கூட்டங்களை மற்ற குரங்குகள் தங்கள் கூட்டத்தில் சேர்ப்பதில்லை.  இவை அனைத்தும் கோவில் வளாகத்திலயே இருக்கு. அதனால உணவு பற்றாக்குறையினால கடுமையா ஆக்ரோஷத்துடன் சண்டை போட்டுக்கொண்டே இருக்கு. அதனால, நாமும் கவனமாப் போகணும். முடிந்த அளவு அவைகளுக்கு ஏதேனும் உணவு கொண்டு போகலாம். அவற்றை பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு போவதை முடிந்தவரை தவிர்க்கலாம். அப்படி எடுத்துப் போக நேரிட்டால் பிளாஸ்டிக் கவர்களை வனங்களில் வீசுவதையாவது தவிர்க்கலாம்.

இதுதான் திருக்கோவிலின் பக்கவாட்டு தோற்றம். ஆரம்பக் காலத்தில் இங்கே இந்த மண்டபம் மட்டும்தான் இருந்ததாம். அதன்பிறகு சுற்று கட்டு பிரகாரங்கள் கட்டப்பட்டதாம். கீழே இருக்கும் கோவில் வைகுண்டத்திற்கு கூப்பிடு தொலைவு எனவும், மேலே இருக்கும் திருமலை கோவில் யமலோகத்திற்கு கூப்பிடும் தொலைவு பக்கத்தில் இருப்பதால் இங்கே ராத்திரி யாரும் தங்குவதில்லை. அதேசமயம் ராத்திரி வேளை புலி,கரடி,சிறுத்தை முதலிய மிருகங்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுமாம். 
இதுதான் திருக்கோவிலின் முகப்பு. இந்த பெருமாள் மிகவும் சக்திவாய்ந்தவர் எந்த வேண்டுதல் செய்தாலும் அது பலிக்கும்.  இது அனுபவப்பூர்வமாக நிறைய பக்தர்களுக்கு நடந்து இருக்கிறது. இங்கு  பூதேவி ஸ்ரீதேவி சமேதே  திருமலை அழகிய நம்பி நின்றப்படி காட்சி தருகிறார். அவருடைய அழகுத் திருமேனி பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. கோவிலினுள்ளும் ஒரு உள்சுற்று பிரகாரம் இருக்கிறது. இங்கே இருக்கும் பூசாரிகள் மிகவும் அன்புடன், நமது வேண்டுக்கோளை நம்பியிடம் வைத்து அருள்பெறுங்கள் மிகவும் சக்திவாய்ந்த நம்பி கேட்டவர்க்கு கேட்டவரம் அருளும் நம்பி எனக்கூறி நமக்கு அவர் பெருமைகளை விளக்கினார்.

இது திருக்கோவிலின் வெளிப்பிரகார சுற்று. இந்தத் திருக்கோவிலுக்கு தமிழ்நாட்டில் இருந்தும் மற்றும் கேரளாவிலிருந்தும் புரட்டாசி மாசம் விரதம் இருந்து, புரட்டாசி கடைசி சனிக்கிழமை நடக்கும் விழாவில் பாதயாத்திரையாக கலந்துகொள்வார்களாம்.

கோவிலின் முன்பக்க கட்டமைப்பில் இருந்து பார்க்கும்போது மலையின் மொத்த அழகும் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. மேலும்,இந்த நம்பி கோவிலின் மேல் இருந்து பார்க்கும் போது கீழே ஒரு புளியமரம் தெரிகிறது. இந்த மரத்தின் அடியில் இன்றும் பல்வேறு சித்தர்கள் தவம் செய்கின்றனராம். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்ததில் அந்த புளியமரத்தின் அடிப்பாகத்தில் இருந்து சித்தர்கள் வெளியே வந்து தங்களுக்குள் பரிபாஷையில் பேசிப்கொள்வார்கள் என நம்பிமலைக் கோவிலில் இது இன்றைக்கும் நடக்கிறது என இங்கே இருக்கும் ஒரு பெரியவர் சொல்லிக்கொண்டு இருந்தார்.

இந்த மலைக்கோவிலிலிருந்து இடப்பக்கம் மிகவும் அடர்ந்த காட்டுப்பாதை இருக்கிறதாம்.  அங்கு தாய் பாதம்என்று இடத்திற்கு  சென்றால் சித்தர்களின் தரிசனம் கிடைக்குமாம்.  அவர்கள் வசிக்கும் குகைகளும் ஆங்காங்கே நிறையக் இருக்கிறதாம். ஆனால், மிகவும் ஆபத்தான பயணம் என்பதால் வனத்துறையினர் கூட அங்கே செல்வதில்லையாம். ஆனால், இந்தபகுதியில் வசிக்கும் சிலர் இந்த இடத்தை நன்கு அறிந்தவர்கள் மட்டும் ஒரு குழுவாக நான்கு நாள் பயணமாக பொதிகை மலைக்கு சென்று வருவார்களாம். ஆனால் இப்பொழுது வனத்துறையினரின் கட்டுபாடட்டினால் யாரும் செல்வதில்லையாம். சித்திரை மாதம் பௌர்ணமி அன்று இந்தக் கோவிலில் யாகம் வளர்த்து பூஜை நடக்குமாம்.

ஒரு  வழியாக மலை நம்பியை தரிசனம் செய்துவிட்டு வெளியேவரும்போது திரும்பவும் குரங்குகள் ஆவேசமாக சண்டையிட்டு கொண்டு இருந்தன.  கோவிலிருந்து கொஞ்சத் தொலைவில் ஒரு அருவி இருப்பதாகவும் அதில் குளிக்கலாம் எனவும் சொன்னாங்க. ஆனா, ஒரு பிரிவினர் வேண்டாம் சாயங்காலம் ஆனதால காட்டு மிருகங்கள் வரத்தொடங்கும் அங்கே செல்வது ஆபத்து. அதேசமயம் கீழே செல்ல 4 கிமீ நடந்து செல்லனும் அதனால சீக்கிரம் மலையிலிருந்து இறங்கிவிடலாம்ன்னு சொன்னதால நாங்க இறங்கி வந்திட்டோம் அதுக்கு பதிலா வேறு ஒரு இடத்தில தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் தெளிந்த தண்ணீர் குளுமையா பாறைகளுகிடையில் ஓடி கொண்டு இருந்தது. மீன்களும் துள்ளிவிளையாடி  கொண்டு இருந்தன. அதில் ஆனந்தமா நீராடிவிட்டு வந்தோம்.   
ஆரோக்கியமான மலைக்காற்று.  நன்றாக முங்கி குளிக்கும்படியான மூலிகைச் சாறு கலந்த நம்பிமலை நம்பியாறு. சுற்றிலும் மலைகளும் பசுமையான சூழல்களும், குரங்குகளின் சேஷ்டைகள். இந்த அருமையான நிகழ்வுகள் நமக்கு நிச்சயம் மனசுக்கு சந்தோஷத்தையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் இந்த திருமலை அழகிய நம்பி கோவிலுக்கு ஒருமுறை சென்று இந்த பெருமாளை தரிசித்து வரலாம். மீண்டும் அடுத்தவாரம் புண்ணியம்தேடி பயணத்தில் வேறு ஒரு கோவிலில் இருந்து சந்திக்கலாம்