Tuesday, May 07, 2019

நன்றி மறப்பது நன்றன்று - பலராம ஜெயந்தி

தன் தங்கைக்கு பிறக்கும் எட்டாவது பிள்ளையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தன் ஆசை தங்கை தேவகியை கொல்ல செல்கிறான் கம்சன். தேவகிக்கு பிறக்கும் எட்டாவது பிள்ளையால்தானே உனக்கு ஆபத்து. எங்களுக்கு பிறக்கும் அத்தனை குழந்தையையும் உன்னிடம் கொடுத்து விடுகின்றோம் என்று கம்சனின் தங்கை தேவகியின் கணவரான வசுதேவர் வாக்களிக்கிறார். தேவகிக்கு பிறக்கும் ஆறு குழந்தைகளையுன் ஒன்றன்பின் ஒன்றாக வசுதேவன் கம்சனிடம் கொடுக்க கம்சன் அவைகளை கொன்றான். 

தேவகி ஏழாவது முறையாக கர்ப்பமுற்றாள்.  விஷ்ணு துயில் கொள்ளும் ஆதிசேஷன் தேவகி வயிற்றில் கருவானது.   தேவகி மிகுந்த மகிழ்ச்சியும், அதேசமயத்தில் துக்கமும் கொண்டாள்.   குழந்தை பிறந்ததும் கம்சன் அதைக் கொன்றுவிடுவானே என்ற வருத்தம் அவளை கவலைக்கொள்ளச் செய்தது. விஷ்ணுவின் கட்டளைப்படி யோகமாயை  ( யோகமாயை என்பது விஷ்ணுவின் சக்திகளில் ஒன்று.  எல்லா சக்திகளுக்கும் மூலாதாரம் இந்த மாயைதான். சர்வ அலங்காரம் பூண்டது இந்த மாயை.) சிறையிலிருந்த தேவகி வயிற்றிலிருக்கும் கருவை, ஆயர்பாடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணி கருப்பைக்குள் இடம் மாற்றியதோடு, நந்தகோபன் மனைவியான யசோதையின் வயிற்றில் கருவானாள். தேவகியின் கருக்கலைந்தது என வசுதேவரிடம் கம்சன் தெரிவித்தார்.  கம்சனின் தொல்லை தாங்காமல்தான் கருக்கலைந்தது என அனைவரும் நம்பினர். 
 இதற்கிடையில்  ஆயர்பாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரோகிணிக்கு ஆண்குழந்தை பிறந்தது. யதுகுல குருவான கர்கர் யாருக்கும் தெரியாமல் பசுமடத்தில் வைத்து சடங்குகள் செய்து ராமன் என பெயரிட்டார். ராமன்ன்னா சமிக்க செய்பவன்னு அர்த்தம். ராமன் வளர்ந்து வருகையில் பலசாலியாய் திகழ்வதை கண்டவர்கள் பலராமன் என அழைத்தனர்.  இதேவேளையில் கிருஷ்ணரும் அவதரித்தார். இருவரும் கோவர்த்தனகிரி மலை அடிவாரத்தில் மாடுகளை மேய்ப்பது வழக்கம்.
நரகாசுரனின் தம்பியான மயிந்தன் தன் அண்ணனின் மரணத்திற்கு பழிவாங்க க்ருஷ்ணனை கோவர்த்தனகிரி தேடி வந்தான்.  அங்கிருந்த முனிவர்கள், மக்களை துன்பப்படுத்தினான், பலராமனை கிருஷ்ணன் என எண்ணி, பலராமனின் உடைகளை கிழித்தெறிந்து வம்புக்கிழுத்தான் மயிந்தன். மரங்களை வேரோடு பிடுங்கி அங்கிருந்த கோபியர்கள்மீது வீசி வம்புக்கிழுத்தான். இதைக்கண்ட பலராமன் கோபங்கொண்டு மயிந்தனோடு சண்டைக்கு சென்றார். பலராமனை கட்டிப்பிடித்து கைமுட்டியால் அடித்தான் மயிந்தன். பலராமன் தன் கைமுட்டியால் மயிந்தன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டினார். வாயிலும், மூக்கிலும் ரத்தம் சிந்தி மயிந்தன் விழுந்து இறந்தான். இதுப்போல பலராமன் கிருஷ்ணரோடு சேர்ந்து பல அசுரர்களை வதம் செய்து கிருஷ்ணரோடு வளர்ந்து வந்தார்.
ரைவத நாட்டின் மன்னனான ரைவதன் மகள் ரேவதியை மணந்தார். தன் மகளான வத்சலையை துரியோதனனுக்கு மணமுடிக்க விருப்பம் கொண்டு தன் தம்பியான கிருஷ்ணரிடம் இதுப்பற்றி விவாதித்தார் பலராமர். அண்ணா! நம் தங்கையான சுபத்ரை மகனான அபிமன்யுக்கு வத்சல்யையை கொடுப்பதாக முன்னொருமுறை தாங்கள் வாக்களித்தீர்களே! மறந்துவிட்டீர்களாவென கிருஷ்ணர் கேட்டார். மறக்கவில்லை கிருஷ்ணா! அன்று அரசனாய் இருந்தார்கள் அதனால் வாக்களித்தேன். இப்போது ராஜ்ஜியத்தை இழந்து காடுகளில் வாழும் இவர்களுக்கு எப்படி பெண் கொடுப்பது என மறுத்து, துரியோதனனுக்கு மணமுடிப்பதாய் வாக்களித்து விட்டார் பலராமன்.

கிருஷ்ணர் சுபத்ரைக்கு இவ்விசயத்தை தெரிவிக்க , சுபத்ரை தன் மகன் அபிமன்யுவிற்கு இவ்விசயத்தை சொல்ல, அபிமன்யு விரைந்து வந்து வத்சல்யை மணமுடித்தான்...  இந்த நிகழ்ச்சியால் கிருஷ்ணர்மீது கோபம்கொண்ட   பலராமர் தீர்த்த யாத்திரை சென்றார். இதைத்தான் கிருஷ்ணரும் எதிர்பார்த்தார். பலராமன் இருந்திருந்தால் குருஷேத்திர போரின் போக்கே மாறிவிடும் என்பதை கிருஷ்ணர் உணர்ந்திருந்தார். 

குருஷேத்திர போர் முடிந்து 36வது வருடம். துவாரகைக்கும் விஸ்வாமித்திர முனிவர் வருகை புரிந்தார். அவரின் கோவம் தெரியாது விளையாட்டுத்தனமாய் கிருஷ்ணனின் மகன்களில் ஒருவனுக்கு வயிற்றில் இரும்புதுண்டை கட்டி கர்ப்பிணி வேடமிட்டு பிறக்கப்போவது ஆணா?! பெண்ணா?!வென  வினவ, விஸ்வாமித்தரர் கோபம்கொண்டு, பிறப்பது ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும் அவற்றால்தான் உங்கள் குலம் அழியும்ன்னு சாபமிட்டார். இதைக்கேள்விப்பட்ட பலராமர், குருதேவர் அறிவுரைப்படி அந்த இரும்புத்துண்டை தூளாக்கி   கடலில் எறிந்துவிட்டார். இருப்பினும் அந்த பொடிகளால் உண்டான செடிகளை கொண்டே யதுகுலம் முடிவுக்கு வந்தது.

யதுகுலம் முடிவுற்றதையும், கிருஷ்ண அவதாரம் முடியப்போவதையும் உணர்ந்த பலராமர் யோகநிலையில் அமர்ந்தார். யோகத்தின் துணைக்கொண்டு தன் உடலை அழித்து வெள்ளை பாம்பாய்  உருக்கொண்ட அவர் ஆத்மா கடலில் கலந்தது.  தன் அண்ணனான பலராமனுக்கு சடங்குகள் செய்வித்து கிருஷ்ணரும் வேடன் இட்ட அம்பால் தன் அவதாரத்தை முடித்துகொண்டார்.


ஒருமுறை, நாரதர் விஷ்ணுவிடம், ஐயனே! நீங்கள் துயில் கொள்ளும் சாதாரண பாம்பான ஆதிசேசனை கிருஷ்ண அவதாரத்தில் உங்கள் அண்ணனாக பிறக்க செய்து, அவர் கால், கைப்பிடித்து பலவாறாக சேவை செய்த காரணமென்ன என கேட்டார்.   நாரதா! ஒருமுறை என் காலில் விழுந்து என் பாதுகையை வாங்கிய பரதனுக்கு கிடைத்தது 14 வருட அரச யோகம். ஒரேமுறை என் காலில் பட்டதன் விளைவு கல்லாய் இருந்த அகலிகையின் சாபம் நீங்கியது. ஆனால், சதா சர்வக்காலமும் ராம அவதாரத்தில் அண்ணாவென என் காலடியில் கிடந்த லட்சுமணனுக்கு நான் எதுவுமே செய்யவில்லையே!! அதனால்தான், லட்சுமணனாய் அவதரித்த ஆதிசேசனை பலராமனாய் பிறக்க செய்து அவன் கால்பிடித்தேன் என பதிலுரைத்தார்.  
கலியுகம்  ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே கிட்டத்தட்ட கிமு 3100 ஆண்டுகளுக்கு முன்னமயே கிருஷ்ணரும், பலராமனும் கம்சனின் வேண்டுகோளுக்கிணங்கி, அவன் அரசவைக்கு சென்று பல்வேறு மல்லர்களுடன் மோதி அவர்களை வானில் சுழற்றி எறிந்து, கடைசியில் கம்சனையும் அழித்ததை நாம கேள்விப்பட்டிருக்கோம். இதுக்கு  கம்ச சானூர மர்த்தனம்ன்னு பேரு. இன்றைய மல்யுத்தத்துக்கு இதுதான் முன்னோடி. மல்யுத்த சண்டையில் பலராமன் பேர்பெற்றவர். மல்யுத்த தந்தைன்னு பலராமனுக்கு பேர் வைக்கலாம்.  ஆனா, இந்தியன் கண்டுப்பிடிப்பை வெளிநாட்டுக்காரன் சொன்னாதானே நாம ஒத்துக்குறோம்!!!
இறைவனின் பாதங்களில் சரணடைந்தால் எல்லா வளமும் பெறலாம்ன்றதை பலராம அவதாரம் நமக்கு உணர்த்துது. இத்தனை பேரும், புகழும் பெற்ற ஆதிசேஷனான பலராமனின் அவதார தினம் இன்று. பலராமனை வணங்குவோம்.. பலசாலியாய் இருப்போம்..


நன்றியுடன்,
ராஜி. 

10 comments:

  1. ராஜி பலராம ஜெயந்தி என்று இப்பத்தான் தெரிந்து கொண்டேன். கதைகள் தெரியும் ஆனால் இந்த ஜெயந்தி எல்லாம் தெரிந்தது இல்லை.

    எங்கிருந்து திரட்டறீங்கப்பா...எனக்கு முழி பிதுங்குது. ஹா ஹா ஹா ஹா......

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கூகுளாண்டவர் இருக்க கவலை எதற்கு?!

      Delete
  2. பலராம ஜெயந்தி வாழ்துகள்.

    ReplyDelete
  3. கீதா கருத்தை வழிமொழிகிறேன். எனக்கும் அங்ஙனமே!

    ReplyDelete
    Replies
    1. கீதாக்காவுக்கு சொன்ன மறுமொழியே இங்கும்...

      Delete
  4. பலராமனை அறிவேன். ஆனால் பிறந்த தினம், தொடர்புடைய செய்திகளை இன்றுதான் அறிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லதுப்பா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  5. /நரகாசுரனின் தம்பியான மயிந்தன் தன் அண்ணனின் மரணத்திற்கு பழிவாங்க க்ருஷ்ணனை கோவர்த்தனகிரி தேடி வந்தான். அங்கிருந்த முனிவர்கள், மக்களை துன்பப்படுத்தினான், பலராமனை கிருஷ்ணன் என எண்ணி, பலராமனின் உடைகளை கிழித்தெறிந்து வம்புக்கிழுத்தான் மயிந்தன். மரங்களை வேரோடு பிடுங்கி அங்கிருந்த கோபியர்கள்மீது வீசி வம்புக்கிழுத்தான். இதைக்கண்ட பலராமன் கோபங்கொண்டு மயிந்தனோடு சண்டைக்கு சென்றார். பலராமனை கட்டிப்பிடித்து கைமுட்டியால் அடித்தான் மயிந்தன். பலராமன் தன் கைமுட்டியால் மயிந்தன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டினார். வாயிலும், மூக்கிலும் ரத்தம் சிந்தி மயிந்தன் விழுந்து இறந்தான்/ நேரில் பார்து வர்ணிப்பதுபோல் எழுத்து இதுவும் கூகிலாண்டவர் தயவா

    ReplyDelete
    Replies
    1. வர்ணிப்புகள் கூகுளார் தயவில் இல்லைப்பா. அது தமிழின் தயவு.

      Delete