Monday, June 22, 2020

உலகிலேயே மிக அமைதியான இடம் எதுவென தெரியுமா?! - ஐஞ்சுவை அவியல்

எங்கே நிம்மதி?! எங்கே நிம்மதி?! அங்கே எனக்கோர் இடம் வேண்டும்....

என்ன புள்ள?! காலங்காத்தால பாட்டு அதுவும் நிம்மதி எங்க இருக்குன்னு பாடிக்கிட்டிருக்கே?! 

இந்த கொரோனா  கிருமி தரும் மன உளைச்சல், பிள்ளைங்க வீட்டில் இருந்து படுத்தும்பாடு, சொல்பேச்சு கேட்காம என்னைய இம்சிக்கும் நீங்க, ஓயாம ஓடும் டிவி சவுண்ட்ன்னு பலமுனை தாக்குதல் பக்கம்ன்னு என்னால சமாளிக்க முடில.  அதுதான் எங்காவது அக்கடான்னு போயிடலாமான்னு இருக்கேன்...

எங்க போவே?! 

ஏதாவது ஆறு, குளம், அருவி, கடலுக்கு பக்கத்துல   இருக்கும் ஆள், அரவம் இல்லாத வீட்டில் தங்கிப்பேன். நினைச்ச பாட்டு, ரசித்த படம், நினைச்ச நேரத்துல எழுந்து, பிடிச்சதை சாப்பிட்டு, உக்காரு, இப்படி நில்லுன்னு அட்வைஸ் பொழியும் உங்கக்கிட்ட இருந்து தப்பிச்சு  ஹாயா இருப்பேன். 

அப்ப, எங்க நிம்மதியான இடம் இருக்குன்னு நீ கண்டுபிடிச்சுட்டே?! அப்படித்தானே?! சரி, உனக்கு நிம்மதி தரும் இடம் ஓகே. உலகத்துலயே நிம்மதியான இடம் எது?!

இதுல என்ன சந்தேகம் எல்லா வசதியும் இருக்குற, இயற்கை எழில் கொஞ்சும் , வாகன நெரிசல் இலலாத, காற்று, ஒலி மாசில்லாத இடமே நிம்மதியான இடம். அப்படி ஒரு இடம் வளைகுடா பாலைவனத்திலோ, இல்ல நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகிலோ அல்லது எவரெஸ்ட் சிகரத்திலோ இருக்கும். தேடி கண்டுபிடிக்கனும் ..

ம்ஹூம் நீ நினைக்குற மாதிரி தீவு, பாலைவனம், சிகரம், காடு, நகரம்ன்னு எதுவுமே அமைதியான, நிம்மதியான இடம் கிடையாது. 

அப்ப எங்கயுமே நிம்மதியான இடம் இல்லியா மாமா?!


இருக்கே!!  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை கிளை அமெரிக்காவில் Redmond Washington பில்டிங்க்ல 87 மாடில இருக்கும் ஆன் எகோயிக் சேம்பர்(Anechoic Chamber)ன்ற ரூம்தான் உலகிலேயே அமைதியான இடமாம்.  

என்னதான் 87வது மாடில ரூம் இருந்தாலும் ஃபேன், ஏசி ஓடும் சத்தம், ஊழியர்களின் பேச்சுன்னு எதாவது சத்தம் இருக்கத்தானே செய்யும்?!  அப்புறம் எப்படி மாமா அது அமைதியான இடம்ன்னு சொல்றீங்க?!

நீ சொல்ற சத்தங்களோடு, காற்று வீசும் சத்தம், காக்கா, குருவியோட சத்தம்ன்னு இந்த ரூம்ல இருக்கும் சத்தத்தோட அளவு 20,35டெசிபல். இந்த இரைச்சலை குறைக்குறதுக்காகவே  ரூம் முழுக்க  ஆப்பு வடிவ ஒலி உறிஞ்சுகள்  (Sound Absorbing Wedges) கொண்டு அந்த ரூமை வடிவமைச்சிருக்காங்க. 

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதுசா கண்டுபிடிக்கும் தங்களுடைய எலக்டாரானிக் சாமான்களின் ஒலித்திறனை  பரிசோதனை செய்றதுக்காகவே இப்படி ஒரு ரூமை ஸ்பெஷலா வடிவமைச்சிருக்காங்க.   மின்னசோட்டாவின் Orfield Laboratoriesல் அமைக்கப்பட்டுள்ள Anechoic Chamberஐவிட மேம்படுத்தப்பட்டதாகும்.  Orfield Laboratoriesல் வெளியாட்களை அனுமதிக்குற மாதிரி இங்க அனுமதி கிடையாது. உலகின் மிக அமைதியான இடம்ன்னு இந்த இடம் கின்னஸ் ரெக்கார்டில்  இடம் பெற்றிருக்கு.  மனிதர்கள் அனுமதிக்கப்படும் இடங்களில் அமைதியான இடம் மினசோட்டாவின் Orfield Laboratories-ல் உள்ள Anechoic Chamber. இது 2012-ல் உருவாக்கப்பட்ட இந்த அறையின் பின்னணி இரைச்சலின் அளவு ஏறக்குறைய -9.4 டெசிபல்

மினசோட்டாவின் Orfield Laboratories-ல் உள்ள Anechoic Chamberன்ற இந்த இடத்தில் அதிகபட்சமா  45 நிமிசத்துக்கும் மேல் இருக்கமுடியாதாம். 45 நிமிசத்துலயே பைத்தியம் பிடிக்குறமாதிரி ஆகிடுமாம்.  வெளிச்சமில்லாமல் இருக்கும்  இந்த ரூம்ல ஒருத்தர் இருந்தால், சில நிமிடங்களில் இந்த அறைக்கு தகுந்த மாதிரி அவர்களின் கேட்கும் திறன் மாறிக்கும். கொஞ்ச நேரம் கழிச்சு  அவர்களுடைய இதயத்துடிப்பை அவங்களுக்கே கேட்க ஆரம்பிக்கும், இன்னும் கொஞ்ச நேரம் போனா, அவங்க மூச்சுபோது நுரையீரல் சுருங்கி விரியும் சத்தமும் கேட்க ஆரம்பிக்கும். இன்னும் நேரமாக  ஆக வயிற்றின் உள்ளுறுப்புகளின் அசைவுகளின் சத்தம், இரத்த ஓட்டத்தின் சத்தமெல்லாம் நம் காதுகளில் கேட்கும்.  அதாவது உள்ளே சென்ற சில நிமிடங்களில் நாமே ஒலிமூலமாக மாறிவிடுவோமாம்‌! இதுவே நமக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தி நம்மை மேலும் மேலும் பதற்றமாக்கி, நம்  கட்டுப்பாட்டை இழந்து  பைத்தியமாக மாறவும் வாய்ப்புள்ளதாம். இந்த மாதிரியான சத்தமில்லாத அறை உலத்துலயே 6தான் இருக்காம். ஏன்னா, ஒரு அறையை உருவாக்க 100மில்லியன் அமெரிக்க டாலர் ஆகுமாம். இந்திய ரூபாயில் சொல்லனும்ன்னா 700கோடி ரூபாய் செலவாகும். அம்புட்டு பைசா இருக்கான்னு சொல்லு.  உனக்கு ஒரு ரூம் கட்டிடலாம்...

அம்புட்டு பைசாவுக்கு எங்க போக?! அதுமில்லாம பைத்தியமா ஆக, அங்கிட்டுதான் போகனும்ன்னு இல்ல. இங்கனயே யார் மேலயாவது கண்மூடித்தனமா பாசம் வச்சா போதும்.  பைசா செலவில்லாம நம்மை அவங்க பைத்தியமாக்கிடுவாங்க. நேத்து சூரிய கிரகணம் என்ன செய்யலாம்?! என்ன செய்யக்கூடாதுன்னு வாட்ஸ் அப், பேஸ்புக், யூடியூப்ன்னு  பலர் பலவிதமா சொல்லி கேட்டு அலுத்து போச்சு.  ஆனா, எனக்கொன்னுதான் புரில, கோவில்களை நடை சாத்தி இருக்கும்ன்னு திருப்பதி, திருத்தணி, திருப்பரங்குன்றம், மதுரைன்னு பெரிய கோவில்கள் முதற்கொண்டு தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோவில்களும்  பூட்டி வச்சிருந்தாங்க. ஆனா, சப்த கன்னிகைகள், முனீஸ்வரன், ஐய்யனார், சண்டியர் மாதிரியான சிறுதெய்வங்கள் வெட்டவெளியில் இருக்கே. அவங்களை சூரிய கிரகணம் பாதிக்காதா?!


பதிக்காது. ஏன்னா, அவர்கள் காவல் தெய்வங்கள். காவல் தெய்வத்துக்கு எது காவல் ?! அதுமில்லாம கோவில்கள் ஆகம விதிப்படி கட்டப்பட்டது. அப்படி கட்டப்பட்ட கோவில்களில் நேர்மறை சக்தி எனப்படும் பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்து காணப்படும். ஆனா, சிறுதெய்வங்கள் உறையும் கோவில்கள் எந்தவித ஆகம விதிப்படி கட்டப்படுவதில்லை. அதனால் அக்கோவிலுக்கென எந்த விதிகளும் இல்ல. அதுமில்லாம, நீயே சொல்லிட்ட திறந்தவெளியில் இந்த தெய்வங்கள் இருப்பதால், எப்படி பூட்ட முடியும்?!

முன்னலாம் மின்சாரமோ, விளக்குகளோ இல்ல. மரங்கள், செடிகொடிகள்ன்னு போதிய வெளிச்சமில்லாமல்தான் ஊரே இருக்கும்.  சந்திர கிரகணமோ அல்லது சூரிய கிரகணமோ எந்த  கிரகணத்தின்போதும் சூரிய/சந்திர வெளிச்சம் பூமியில் விழாமல் ஊரே இருள் அடையும். இருள் அடைஞ்ச கோவிலுக்குள் விஷ ஜந்துக்களோ எல்ல கொள்ளைக்காரர்களோ நுழைந்தால்?! பாதுகாப்பு கருதியும் சூரிய கிரகணத்தின்போது கோவில்களை பூட்டி வைக்கின்றனர். காவல் தெய்வங்கள் காவல் காப்பவை. அவற்றை பூட்டி வச்சுட்டா ஊர் பாதுகாப்பு?! சிவன், முருகன், வினாயகர், பெருமாள் மாதிரியான முதன்மை தெய்வங்கள் தூய்மை நெறியில் நிற்பதால் தூய்மை கருதியும் கோவில்களை பூட்டி வைக்கின்றனர்.

காரண காரியங்களை சொல்லாம பொத்தாம்பொதுவா சொல்லி வச்சா, மூட நம்பிக்கைன்னு எதிர்க்கத்தான் தோணும்..

சரி, ரொம்ப பேசிட்டோம்.. வெளிநாட்டு பெற்றோர் எதையும் அடிச்சு சொல்லிக்கொடுக்காம, ஏன், எதுக்கு, எப்படின்னு சொல்லி தன்னம்பிக்கையோடு வளர்க்கிறாங்க. 
நம்ம ஊரில் பிள்ளையை எப்படி அடக்கி ஒடுக்கி வளர்க்குறாங்க பாருங்க. வீட்டுலயே இப்படி கைய கட்டி, அழுத்தி சொன்னா பாடம் எப்படி மனசில் பதியும்?!பாடம் மனசில் பதியாட்டியும் கடைசியில் இப்படித்தான் எதிர்த்து பேச தோணும். 
சரி,நான் போய் சமைக்கும் வேலைய பார்க்குறேன்...

நன்றியுடன்,
ராஜி


7 comments:

 1. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை கிளை அமெரிக்காவில் Redmond Washington பில்டிங்க்ல 87 மாடில இருக்கும் ஆன் எகோயிக் சேம்பர் ரூம் பெருவியப்பைத் தருகிறது
  நன்றி சகோதரி

  ReplyDelete
  Replies
  1. 700கோடி செலவு பண்ணா நமக்கும் கிடைக்கும். ஆனா, அதில் 45 நிமிசத்துக்குமேல் இருக்க முடியாதாமே! அப்புறம் எதுக்கு அதை கட்டனும்?!

   Delete
 2. ஒலித்திறன் பரிசோதனை அசர வைத்தது...

  ReplyDelete
 3. நம்ம ஊர் குறும்பு தான் சிறப்பு...

  ReplyDelete
 4. முதல் செய்தி சிறப்பு.

  காணொளிகள் நன்று.

  ReplyDelete
 5. ஆச்சர்யமான தகவல்கள். காணொளி ரசித்தேன்.

  ReplyDelete
 6. தகவல்கள் சிறப்பு. வியப்பும் கூட. காணொளிகள் ரசித்தோம்.

  துளசிதரன்

  கீதா

  ReplyDelete