விநாயகரை தரிசித்துவிட்டு எங்களது பயண வழிகாட்டியின்(அதாங்க கைடு) அறிவுரையின்படி சனி சிங்கனாப்பூர் என்கிற ஊர்நோக்கி பயணமானோம். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிற ஷீரடியிலிருந்து சுமார் எழுபது கி.மீ தொலைவிலிருக்கு. இது நாசிக்கிலுள்ள நய்வாசா வட்டத்திலிருக்கும் சிறிய ஊர். இந்த சனி சிங்கனாப்பூரில் அருள்பாலிக்கும் தெய்வத்தை சனிமகராஜ் என உள்ளூர் மக்கள் சொல்றாங்க. வழியெல்லாம் பார்ப்பதற்கு அழகா இருக்கு. எங்க பார்த்தாலும் கரும்பு தோட்டங்களா இருக்கு. அதேசமயம், ரோட்டின் இருபக்கங்களிலும் நம்மூர் ஹைவேஸ் கும்பகோணம் டிகிரி காப்பிக்கடையைபோல் செக்கு மாடுவைத்து பலூன், ஊஞ்சல் கட்டி சிலர் ஆடிக்கொண்டு இருந்தனர். அது என்னன்னு கைடுக்கிட்ட கேட்டதுக்கு அவர் எதுவும் செல்லாம அடுத்து வந்த இதுப்போன்ற ஒரு இடத்தில காரை நிறுத்தினார். நாங்களும் ஆவலுடன் என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்கும் ஆவலோடு . கிட்டக்க போனோம்.
நம்மூரில் டமடமன்னு சத்தம் வரும் மெஷினை வச்சு, கரும்பு, இஞ்சி, எலுமிச்சை வச்சு நசுக்கி ஜூசெடுத்து, ஐஸ்கட்டி போட்டு தண்ணி சேர்த்து சப்ப்ப்ப்ன்னு கொடுக்கும் கரும்பு ஜூஸ் மாதிரி இல்லாம இரண்டு மர அச்சுகளின் நடுவே கரும்பை செலுத்தி, அதை செக்குகள் போன்ற அமைப்பில் மாடுகளை வைத்து பிழிந்து கொடுக்குறாங்க. விலையும் குறைவு. ஜூஸ் பிழிந்து வெளிவரும் கழிவான கரும்பு சக்கையை செக்கை சுத்தும் மாட்டுக்கே உணவாக கொடுக்குறாங்க. நல்ல இயற்கை சுழற்சி முறைன்னாலும் சில மாடுகள் எலும்பும் தோலுமா பார்ப்பதற்கே பரிதாபமாக அந்த மர செக்கை இழுக்கிறதை பார்க்கும் போது நமக்கு அந்த கரும்புசாற்றின் சுவையைவிட அவற்றின் பரிதாபநிலைமைதான் மனதுக்குள் ஓடுது. ஒருவேளை, ஓய்வு ஒழிச்சலில்லாம கால்கட்டோடு சுதந்திரமா இல்லாம இப்படி கட்டுண்டு இருக்குறதால அந்த நிலையோ என்னமோ! இதுமாதிரியான நூற்றுக்கணக்கான சாலையோர கரும்பு கடைகள் இருக்கின்றன ,சில இடங்களில் மனிதர்களே மாடுகளுக்கு பதிலா செக்கை சுற்றி சாறு பிழிந்து கொடுக்குறாங்க. நாங்களும் அப்படி ஒரு கடையில் கரும்பு சாறு குடித்துவிட்டு சிறிதுநேரம் அங்கிருந்த ஊஞ்சலில் ஆடிவிட்டு கோவிலை நோக்கி பயணமானோம் .
இங்கே ஒரு அரசு போக்குவரத்து பஸ் ஸ்டாண்ட் இருக்கு. அங்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து போக்குவரத்துக்கு பஸ் வசதிகள் இருக்கு. அதேசமயம் புதியதாக செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா அங்கே நாம் செல்லும் வாகனங்களை நிறுத்த இடம்தேடும்போது அவர்களாகவே நமது வாகனத்தை பார்க்கிங்கு இடம் தர்றோம்ன்னு நம்மை கூட்டி போறாங்க. செருப்பை போடுங்கள். சாமியை மனதார கும்பிடுங்கள் என அவர்கள் மொழியிலும் எல்லா மொழிகளிலும் ஆள்வைத்து சொல்கிறார்கள். ஆஹா! ஊர்விட்டு ஊர்வந்தாலும் நமக்கு இவ்வளவு மரியாதையா என நினைச்சு உச்சி மயிர் சிலிர்க்க நிக்கும்போது, அர்ச்சனை தட்டு, பூஜை பொருட்கள்லாம் கையில் திணிச்சு 400ரூ பில் போட்டுட்டாங்க. அட! படுபாவி பயலே! இதுக்குத்தான் இவ்வளவு மரியாதையை கொடுத்தியான்னு நினைச்சிட்டு நாங்க பல முறை இங்க வந்திருக்கிறோம். அர்ச்சனை தட்டுலாம் வேணாம் ன்னு கடவுளை தரிசித்தால் மட்டும் போதும்ன்னு சொல்லி வந்துட்டோம் இதுமாதிரி ஷீரடியிலிருந்து காரில் வருபர்களை இந்த வியாபாரிகள் ஏமாத்துறாங்க.
அங்கிருந்து வெளியில் வந்தா, அங்க இன்னொரு கும்பல் நீங்கள் முதன் முறையாதானே கோவிலுக்கு வர்றீங்கன்னு அதே மாடுலேஷனில் கேட்க, சரி என்னதான் சொல்றாங்கன்னு பார்த்தால், முதல் முறை வருபவர்கள் 3 லிட்டர் நல்ல எண்ணெய் (வடிவேலு காமெடி நினைவுக்கு வந்தா நான் பொறுப்பல்ல) வாங்கி கோவிலில் விடவேண்டும் என்றனர். இல்ல நாங்க பலமுறை இங்க வந்து செல்வதுண்டுன்னு சொல்லி தப்பிச்சு வெளிய வந்து 100கிராம் எண்ணெய் பாட்டில் வாங்கிக்கிட்டு கோயிலுக்கு போனோம். இங்க கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் என்னன்னா செருப்புகளை கழட்டிவிட கோவிலிலேயே ஸ்டாண்ட் இருக்கு. அதுப்போல அர்ச்சனை தட்டுகள், எண்ணெய்லாம் நாம் விரும்பினால் மட்டுமே வாங்கிக்கிட்டா போதும் மற்றபடி அங்க அர்ச்சனை செய்ய நம்ம ஊரு மாதிரி எந்த பூசாரியும் கிடையாது. நாமளே அங்குள்ள தொட்டிகளில் தேங்காயை போட்டுவிட்டு அங்கிருக்கும் சூலங்களுக்கு பூக்களை சூடிவிட்டு வரவேண்டியதுதான் எண்ணெய் கூட அங்கிருக்கும் தொட்டிகளில் நம் ஊத்திடனும். அதை சிறிய மோட்டார் வைத்து சனிபகவானது தலைப்பக்கத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் கும்பத்தில் விழுமாறு ஏற்பாடு செய்து அபிஷேகம் செய்விக்கப்படுது(எல்லாம் டெக்னாலஜி பாஸ்!) நாமா எதுவும் அபிஷேகம், அர்ச்சனை, பூஜைன்னு எதும் செய்யமுடியாது., பரிகாரங்களுக்காக போறவங்க தேவைப்படுகிறவர்கள் மட்டும் வாங்கினால் போதும் தேவை இல்லாம வாங்கி காசை வீணாக்க வேண்டாம். கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள் . கவனம்!
ஒருவழியா, கோவிலுக்குள் வந்துட்டோம். கோவிலுக்குள் வந்ததும் முதலில் ஸ்தல வரலாறு பார்க்கனும் அப்பதான் அங்கிருக்கும் சாமியை கும்பிடும் வழிமுறையை தெரிஞ்சு சரியான முறையில் சாமி கும்பிட முடியும். ஏன்னா ஒவ்வொரு தலத்தில் ஒவ்வொரு மாதிரியான வழிபாட்டு முறை இருக்கலாம். பல நூறு வருடங்களுக்குமுன் இந்த சனி சிங்கனாப்பூர் ஊருக்கு பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த பனாஸ்நாலா ஆற்றில் விடாது பெய்த பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்ப, ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன், ஆற்றில் ஒரு கல் மிதந்து வருவதை கண்டான். முதலில் பெரிய மரத்துண்டாக இருக்கும்ன்னு நினைச்சு தன் கையில் இருந்த இரும்பு வளையம் பொருத்திய கம்பால் அந்த கல்லை இழுத்திருக்கிறான். அந்த கல்லில் காயம்பட்டு இரதம் வடிய தொடங்கியது. உடனே அவன் ஊருக்குள் போய் ஆட்களை கூட்டிவந்து அக்கல்லை காண்பித்திருக்கிறான். அப்பொழுது சனிபகவான் அங்குள்ள ஒருவரின் கனவில் வந்து நான்தான் சனி மகராஜ் நான் இந்த கல்லின் வடிவத்தில் வந்திருக்கிறேன், நீங்கள் இங்கு என்னை வைத்து பூஜிக்கவேண்டுமென இடத்தை கூறியதாக சொன்னார். உடனே ஊர்மக்கள் எல்லோரும் சேர்ந்து அந்த கல்லை தூக்க அது ஒரு அங்குலம் கூட அசையவில்லையாம் .
பின்பு ஊர்மக்கள் அந்த கல்லை அப்படியே விட்டுட்டு சென்றனர். பின்னர் சனிபகவான் அதே நபரின் கனவில் மறுபடியும் தோன்றி தாய்மாமனும், மருமகனுமான சொந்தமுள்ள இரண்டு பேர் முயற்சித்தால் என்னை ஆற்றிலிருந்து அழைத்து வர முடியும் என்று சொல்லி இருக்கார். உடனே ஊர்மக்கள் அப்படி உறவுமுறை உள்ள இருவரை அழைத்து கல்லைத்தூக்கினாராம். என்ன ஆச்சர்யம்?! 10-15 பேர் சேர்ந்தும் தூக்கி அசையாத கல்லை அந்த இருவரும் அனாயசமாய் தூக்கி வந்தனராம். பின் சனிபகவானுடைய உருவம் இல்லாத கல்லை ஒரு இடத்தில வைத்து பூஜைகள் செய்துவந்தனராம். உடனே அசரீரியாக வானில் சப்தம் கேட்டதாம் நான் ஒரு மகாராஜா போல் உங்களை பாதுகாப்பேன் என... அன்றுமுதல் இன்றுவரை அந்த ஊரில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் சனிபகவான் கத்துவருகிறார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. அவர் கூறியதுப்போல் இங்குள்ள எந்த வீடுகளுக்கும் கதவுகள் கிடையாது. பேங்குககள் உட்பட எல்லா இடங்களுக்கும் வெறும் திரையை மட்டுமே இட்டு இருக்கிறார்கள். இப்ப சிலர் கதவுகளை வைத்துக்கொள்கிறார்கள் என்று சொல்லப்படுது(ஒருவேளை சனிபகவான் பவர் குறைய ஆரம்பிச்சுட்டுதோ!)
கதவுகள் இல்லாமல் இருந்தாலும் இன்றுவரை ஒரு பொருள் கூட களவு போனதில்லை என இந்த ஊர்வாசிகள் சொல்றாங்க. அப்படியே யாராவது திருடினால் திருடியவனுக்கு கண் பார்வை இருக்காது எனவும் சொல்றாங்க. சனி பகவான் சிலைக்கு ஆண்கள் மட்டுமே அபிஷேகம் செய்யலாம். பெண்கள், சனிமகராஜ் சிலையை தொட்டு பார்க்க அனுமதியில்லை!! ஆனா, கோவிலுக்குள் இருக்கும்போது இந்த நடைமுறையை நான் கவனிக்கலை. கூட்டத்தில் சிலர் உள்ள போய் தங்கள் கையால் அபிஷேகம் செய்து கொண்டுடிருந்தனர். ஒவ்வொரு நாளும் இங்க வெளியூரிலிந்து வருபவர்கள் மற்றும் ஷிரடி யாத்திரைகள் செல்பவர்கள் என தினசரி 60,௦௦௦ ஆயிரத்துக்கு மேல் பக்தர்கள் குவிகிறார்கள். அதிலும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மூன்று இலட்சம் பக்கதர்கள் இக்கோயிலில் வழிபாடு செய்வதாக உள்ளூர்வாசி ஒருவர் சொன்னார் .
நம்மூரில் விளக்கு ஏற்றுவதைப்போல் இங்கு சிலர் ஊதுபத்திகளை அங்கிருக்கும் பிரத்யோக ஸ்டாண்டுகளில் சொருகி சென்றனர். எள், நவதானியம், மாலைகள் என காணிக்கைகள் செலுத்த தனித்தனி தொட்டிகள் வைக்கப்பட்டு இருக்கு. அதிலும் சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாட்களில், சனி பகவானுக்கு விசேஷமாக நல்லெண்ணெய், கருப்பு உளுந்து, பூ ஆகியவற்றை கொண்டு சிறப்பு வழிபாடு செய்வார்களாம். 400 ஆண்டுகளுக்கு முன்புவரை கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் பூமாதா பெண்கள் படை என்ற அமைப்பின் தலைவர் தேசாய் தலைமையில் போராட்டம் செய்து பெண்கள் கோவிலுக்குள் செல்லலாம். ஆனா கருவறையான மூலவரை தொட்டு அபிஷேகம் செய்யக்கூடாது என முடிவு செய்யப்பட்டு அனுமதிகிடைத்தாக சொல்லப்படுது .
ஊதுபத்திகள், நல்லெண்ணை,எள்ளு போன்றவைகளை செலுத்துவதற்காகவே பிரத்தேயேகமான தொட்டிகள் போன்ற அமைப்பு நாம் தரிசனத்துக்கு செல்லும் வழியில் நீள வாட்டமாக அமைத்துள்ளனர். நாம் வரிசையில் செல்லும் போதே அதில் காணிக்கைகளை செலுத்திக்கொண்டே செல்லலாம். நாங்கள் சென்ற நேரம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாம் செல்லும்பொழுது தரையில் கவனமாக நடக்கனும். ஏன்னா, தினம் தினம் ஆயிரம் லிட்டர்கணக்கில் எண்ணெய்கள் கொட்டப்படுவதால் எண்ணெய்கள் தெறித்து தரைலாம் எண்ணெய் பிசுபிசுப்புடன் தரை வழுக்குது. அப்படியே நெருங்கி நெருங்கி மூலவரான சனிபகவானின் அருகில் வந்துட்டோம். இங்க ஒரு பெரிய கல்வடிவில் சனிபகவான் அருள்பாலிக்கிறார்ன்னாலும் அந்த மூலவர் எந்தவித மறைப்பும், நிழல் குடைகளும் இல்லாமல் திறந்த வெளியில் மழை, காற்று, வெயில் எல்லாவற்றையும் தன் மேனியில் தாங்கியாவாறே இருக்கிறார். அந்த மேடைமேல் ஏறும்போது மிகவும் கவனமாக ஏறனும் இல்லன்னா வழுக்கி விழுந்து மண்டை உடையும். நாங்கள் பார்த்து பார்த்து கவனமா மெதுவா ஏறி தரிசனம் செய்து படியிறங்கி வந்துட்டோம். எல்லா கோவிகளைப்போல் இங்கேயும் புகைப்படம் எடுக்காதீர்கள்ன்னு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு இருந்தாலும் அதுலாம் மதிக்கும் ஆட்களா நாம்?! அநேகர் இங்கே செல்பியும், புகைப்படமும் சுட்டுக்கிட்டு இருந்தாங்க. நானும் எனது பங்கிற்கு புகைப்படம் எடுத்துக்கிட்டேன்.
பலமொழி பேசுபவர்களையும் அங்க பார்க்கமுடியுது. தரிசனம் முடிந்து வெளிய வரும்போது சுற்றுவட்ட பாதையில் மார்பிளினால் ஆனா தத்ராத்ரேயர் சிலையும், அனுமனின் சிலையும் வேறு ஒரு மஹான் சிலையும் தெரிகிறது. ஆனா அந்த மகான் யார்ன்ன்னுதான் தெரில. தெரிஞ்சவங்க சொன்னால் தெரிஞ்சுக்குறேன். அந்த சிலைகளையும் கடந்து கோவிலைவிட்டு வெளியே வரும் பாதை அழகாக சுத்தமாக பராமரிக்கப்பட்டு பக்தர்கள் சிறிதுநேரம் உட்கார்ந்து செல்ல வசதியாக பெஞ்ச் போன்ற அமைப்பில் கட்டியுள்ளனர். அங்க சிறிய சிறிய கடைகளும் இருக்கு. ஷாப்பிங்க்கில் ஆர்வம் இருக்கவுங்க ஷாப்பிங்க் செய்யலாம்.
பக்கத்தில் அன்னதான கூடம் இருப்பதாக அறிவிப்பு பலகை இருந்தது. நானும் யோசித்துக்கொண்டே சென்றேன். அன்னதானம்ன்னா நம்மூர் போல சாப்பாடு போடுவார்களா இல்லை சப்பாத்தி போடுவார்களா?!ன்னு. போய்தான் பார்ப்போமா ?!ன்னு கேட்க சீக்கிரம் வாங்க! இன்னும் ஒரு கோவில் பார்க்கனும். சீக்கிரம் வாங்கன்னு சொன்னதும் அன்னதான கூடத்தை அம்போன்னு விட்டுட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
கோவிலில் மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயம் சுத்தம். எல்லா இடமும் மிக சுத்தமாக வைத்திருக்கிறார்கள் . அதுப்போல சீக்கிரம், சீக்கிரம்ன்னு யாரும் தள்ளுவதில்லை. காரணம் மூலவரே திறந்தவெளியில்தான் இருக்கிறார். முழுக்க முழுக்க மார்பிள் கற்களால் இக்கோவிலை கட்டி இருக்காங்க. உள்பக்கம் செல்லும் வழியாக, வெளியே செல்லமுடியாது வெளியே செல்ல தனி வழி இருப்பதினால் .நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்யமுடிகிறது .
ஒருவழியா தரிசனம் செய்துட்டு எங்களை அழைத்துவந்த காருக்கு வந்துட்டோம். வழிநெடுக கடைகள் நம்மூர் மாதிரிதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த திருக்கோவில் ஷீரடியிலிருந்து 60 கி.மீ தொலைவிலும், அஹமத்நகரிலிருந்து 35 கி.மீ தொலைவிலும், அவுரங்காபாத்திலிருந்து 84 கி.மீ தொலைவிலும், பூனாவிலிருந்து 160 கி.மீ தொலைவிலும் மும்பையிலிருந்து 265 கி.மீ தொலைவிலும் இருக்கு. அவுரங்கபாத் விமான நிலையம் சிங்கனாப்பூரிலிருந்து 90 கி. மீ தொலைவில் இருக்கு. ஷீரடி சென்றுவரும் பக்தர்கள் இந்தக்கோவிலுக்கும் சென்றுவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்ப எங்களை அழைத்துவந்த டிரைவர், இங்க பக்கத்தில சோனைரேணுகா மாதா மந்திர் இருக்கு போகலாமா?ன்னு கேட்டார். நாங்களும் எவ்வளவு தூரம் எனக்கேட்க இங்கிருந்து 8 கிமீ தொலைவில்தான் இருக்குன்னு சொன்னதும் என்றவுடன் அந்தக்கோவிலுக்கும் போகலாம்ன்னு முடிவானது .
இந்த சோனைரேணுகா மாதாமந்திர், சிங்கனாப்பூரில் உள்ள
பெத்லஹேக்கர் வாடிரோடு என்னுமிடத்தில் இருக்குது. இது
அஹமத்நகர் - அவுரங்காபாத் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கு. கோவில் ரொம்ப .சாதாரணமாதான் இருக்கு. அதே மார்பிள் கட்டிடங்கள்.. சோனைன்னு இந்தியில் சொல்றதுன்ன்னா தங்கம்ன்னு பொருளாம்! மகாதேவரால் வீசியெறியப்பட்ட சக்தியின் பாகங்கள் தங்கத்திலான துண்டாக மாறி இந்த இடத்தில விழுந்ததாக தலவரலாறு. சோனை விக்கிரமாக ஸ்ரீரேணுகாமாதா இருக்கிறார். இங்கிருக்கும் விக்கிரகம் சுயம்புவா தோன்றியதுன்னு சொல்றாங்க. மேலும் இந்த திருக்கோவிலை கண்ணாடி கோவில் ன்னும் சொல்றாங்க. இந்த கோவிலின் சுவர்கள் மற்றும் தூண்களில் எல்லாம் கண்ணாடியினை கொண்டு அலங்காரம் செய்திருக்குறதால இதற்கு இந்த பேர் வந்துச்சுன்னு சொல்லப்படுது. கோவிலுக்கு வெளியே இருக்கும் சிற்பங்கள் சங்குகளினால் செய்யப்பட்டதுன்னு சொல்லப்படுது. சக்திபீடங்களில் இந்த கோவிலும் ஒன்னுன்னு சொல்லப்படுது. கோவிலெல்லாம் சுற்றி டயர்டு ஆகிட்டோம் அங்கேயே சாப்பிடலாம்ன்னு நினைச்சா, ஷீரடியில்தான் சவுத் இந்தியன் புட் கிடைக்கும்ன்னு சொல்ல வண்டி ஷீரடி நோக்கி பறந்தது. இனி
அடுத்தவாரம் ஷீரடியிலிருந்து பதிவை தொடரலாம் .
நன்றியுடன்
ராஜி .