Friday, October 05, 2018

ஸ்ரீராஜ வீரபத்ராமந்திர், ராத்தா - ஷீரடி பயணம்

சனிசிங்கனாப்பூரிலிருந்து வண்டி வேகமா ஷீரடி நோக்கி போயிக்கிட்டிருந்துச்சு. நாங்கலாம் பயணக்களைப்பில் செம டயர்ட்ல தூங்கிட்டிருந்தோம்.  திடீரென வண்டியை ஒரு சாலையில் திருப்பி நிறுத்தினார் டிரைவர். எல்லாரும் இறங்குங்க! வண்டி 10 நிமிஷம்தான் நிக்கும் டீ, காபி குடிக்கிறவங்க, பாத்ரூம் போறவங்கலாம் இறங்குங்கன்னு, சென்னை டூ மதுரை சாலையில்  விழுப்புரம் பக்கம் வந்தவுடனே ரோட்டோர மோட்டல்களில் கூவுற சத்தம் கேட்டு கண்ணை திறந்து ஹோட்டல் எங்க காணோம்ன்னு பார்த்தா... அட கனவா?! சே அப்படின்னு கண்ணை திறந்து பார்த்தா ஒரு அழகான கோவில் முன்னே வண்டியை நிறுத்தி இருந்தார் ட்ரைவர். நல்லவேளை மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசி இருந்தால் தீனிப்பண்டாரம்ன்னு பேர் வாங்கி இருப்பேன். நாம ஷீரடி பக்கத்தில வந்துட்டோம். அதுக்கு முன்னாடி இந்த கோவிலையும் தரிசிக்கலாம்ன்னு சொல்ல நாங்களும் இறங்கி கோவிலை நோக்கி நடந்தோம் .
இங்கு வீரபத்திரரை வீரோபா(Viroba)ன்னு மராத்தியில் சொல்றாங்க. மிகவும் பிரசித்தி பெற்ற வீரபத்திரரின்   இந்த கோவில் ஷீரடி சாய்பாபா ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து 5 கி மீ தொலைவில், பான் கிராமத்திலிருக்கும் பான் மெயின் ரோட்டில், அஹமத் நகர் மாவட்டத்திலுள்ள ராத்தா(Rahata)தாலுகாவில்  இருக்கு. நம்மூர் பழங்கால கோவில்கள்லாம் கற்களால் இருக்க,  இஙகிருக்கும்  எல்ல கோவில்களும் வெள்ளை மார்பிள்கற்களால் கட்டப்பட்டிருக்கு. பார்ப்பதற்கே ரொம்ப அழகாக இருக்கு. இந்த கோவிலின் முன்புறம், மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜியின் சிலை வச்சிருக்காங்க. ஹோலி பண்டிகையின்போது இந்த கோவிலில் மக்கள் கூடுவாங்களாம். அப்ப கோவில் முழுக்க வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்குமாம். சத்ரபதி சிவாஜி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இந்த இடமே கோலாகலமாக காணப்படுமாம். இங்க முக்கியமாக கொய்யா, மாதுளை போன்ற பழங்கள் அதிகமாக விளைவிக்கப்படுது. பாண்டிச்சேரி வழியாக சிதம்பரம் போகும்போது பண்ட்ருட்டி பக்கம்லாம் தோட்டத்தில் விளைந்த கொய்யா பழங்களை ரோட்டோரங்களில் வைத்து விற்பாங்க. அதுமாதிரி,  இங்கேயும் தோட்டத்தில் விளைந்த கொய்யா, மாதுளம்பழம்லாம் விற்பனைக்கு வச்சு இருக்காங்க .
நாங்கள்  கோவிலுக்குள் போன நேரம் அந்திமாலை. வெளிச்சம் மெல்ல மெல்ல மறைந்து இருள் சூழ தொடங்கும் இரண்ய நேரம். அங்க நிறைய பேர் உட்கார்ந்து பஜனைப்பாடிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரத்தில் அவங்கலாம் பஜனையை முடிச்சுக்கிட்டு எழுந்து  வீரபத்திரரை தரிசிக்க வரிசையில் நிக்க ஆரம்பிச்சாங்க. கோவிலின் வரலாறு எங்களுக்கு தெரியலை. அவங்களை கேட்கலாம்ன்னா மொழிப்பிரச்சனை. நம்ம தேவையை அவங்களுக்கு புரிய வைப்பதற்குள் போதும் ,போதும் ன்னு ஆகிடுது. கூடுதலா நம் பிராந்திய மொழிகளை கத்துக்குறதுல தப்பில்லன்னு தோணுச்சு. 
உள்ளே நுழைந்ததும் பக்கவாட்டில் கிருஷ்ணபகவான் நாகராஜர் குடைபிடிக்க அருள்பாலிக்கிறார். பெரிய சிலையா வடிச்சிருக்காங்க. பயபக்தியாய் அவரையும் கும்பிட்டு கோவிலினுள் வலம் வந்தோம். இங்க வீரபத்திரருக்கென இரண்டு கோவில்கள் இருக்கிறதாம். இந்த ராத்தா கிராமத்தில் ஒன்றும், ஷீரடி கிராமத்தில் ஒன்றுமா இருக்குதாம். கோவில்கள் தனித்தனியா இருந்தாலும், இதை வீரபத்ரா டிரஸ்ட் சார்ந்த அமைப்புகள்தான் நிர்வகித்து வர்றாங்களாம். இந்த கோவிலானது மிகப்பழமையான கோவில் என சொல்லப்படுது .இந்த கோவிலை விரிவாக்கம் செய்வதற்கு அப்பொழுது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஸ்காரர்கள் இந்த வீரபத்ரா டிரஸ்ட்டுகு  நிலத்தை கொடுத்ததா இங்குள்ள குறிப்புகள் சொல்லுது. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே மூலவரை தரிசிக்க சென்றோம் .
வெள்ளை மார்பிள் கல்லால் வடிவமைக்கப்பட்ட சிலையில் கம்பீரமாக அழகா காட்சி தருகிறார் வீரபத்திரர். பார்க்கவே அவ்வளவு கம்பீரமாய் இருக்கு அவருடைய சிலாரூபம். அருகில் சிவனது சிலையும் வைக்கப்பட்டிருக்கு..“வீரம்” என்பதற்கு “அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள்படும்படி “வீரம் காக்கும் கடவுள்” வீரபத்திரர் என வணங்குகின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு வழிபடப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, சென்னையிலுள்ள மயிலாப்பூர், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வரகால்பட்டு தஞ்சாவூரில் உள்ள தாராசுரம், கும்பகோணம், திருக்கடவூர் போன்ற இடங்களிலும், இலங்கை யாழ்ப்பாணத்தில் கோப்பாய், கல்வியங்காடு, வியாபாரிமூலை, ஆகிய இடங்களிலும் வீரபத்திரருக்கு  கோயில்கள் இருக்கு.
வடஇந்தியாவில் உள்ள ஹரித்துவாரில்தான் தட்சன் யாகம் செய்தாகவும் தாட்சாயணி யாகக்குண்டத்தில் விழுந்த புராணக்கதை நடந்த இடம்  என கூறப்படுது. இங்க இருக்கும் கங்கால்ன்ற இடத்தில் தட்சேஸ்வர மகாதேவர்ன்ற பெயரில் சிவபெருமான் கோயில் ஒன்னு இருக்கு. காலமும் நேரமும் கனியும்போது அந்த இடத்துக்கு போகனும், பதிவெழுதனும்ன்னு ஆசை உண்டு. பார்ப்போம் விதி எப்படி விதிச்சிருக்குன்னு.. இந்த தலத்தில்தான் ருத்திரனும், வீரபத்திரரும், மகாகாளியும் தட்சனையும் அவன் கூட்டத்தாரையும் அழித்ததாய் சொல்லப்படுது .
பூவுலகில் எளிதினில் கிட்டாத பெரும்பேறு பெற்றவர்களில் ஒருவன் தட்சன் அந்த ஆதிபராசக்தியே அவனுக்கு நான்காவது மகளா பிறந்து தாட்சயணின்ற திருநாமத்தில் மகளாய் பெற்ற பெரும்பாக்கியசாலிதான் தட்சன். தாட்சயணி தன் தந்தை தட்சனைப்போலவே சிறந்த சிவபக்தை. சிறுவயதுமுதலே சிவபெருமான் மீது கொண்ட காதலால் ,கடுமையான தவமியற்றி சிவபெருமானின் மனைவியாகும் பேற்றினை பெற்றாள்.  கன்னிகாதானம் செய்து கொடுக்க தான் தயாராய் இருந்தும், சிவபெருமானும், தாட்சாணியும் களவு மணம் புரிந்ததால் ஆத்திரம் கொண்டிருந்தாலும், ஒருவாறாய் மனம்தேறி திருமணத்தை ஏற்றுக்கொண்டான் தட்சன்.  
அதன்பின் ஒருநாள் கையிலாயத்திற்கு தட்சன் சென்றபோது, தட்சனோடு திருவிளையாடல் புரிய வேண்டி, சிவபெருமான், .துவாரபாலகர்கள் தட்சனை  உள்ளே செல்ல அனுமதிக்காமல் செய்தார். பின்னர், அனுமதி பெற்று சிவபெருமானை காண சென்றபோது,  தட்சனின் வருகையை கண்டும் சிவபெருமான் அமர்ந்த நிலையிலையே இருந்தார். தட்சனின் சுயமரியாதை சீண்ட, தட்சன் தான் அவமானப்பட்டதாய் உணர்ந்து கோவம்கொண்டான்.  சிவபெருமான் எழுந்து நின்று தன்னை வரவேற்க்காததை நினைத்து மனம் குமுறி  சிவபெருமானை பரம எதிரியாய் கருத ஆரம்பித்தான்.
அவரை திரும்ப அவமானப்படுத்தவேண்டுமென்ற பழி உணர்வுடன் பெருத்த யாகம் ஒன்றை நடத்த ஆயத்தமானான். சிவபெருமானை தவிர மற்ற அனைத்து தேவர்களையும் அழைத்தான். நன்மைக்காக செய்யப்படும் யாகமென்றால்  இறைவன் .அழையாமலும் சென்றிருப்பான்.  ஆனா அகங்காரம் கொண்டு செய்யப்படுவதால் சிவனும் செல்லவில்லை. மூலக்கடவுளே இல்லாமல் ஒரு யாகம் நடந்தேறுமா?!அதுபுரியாத தட்சன் மயனிடம் கூறி, அழகிய அழைப்பு ஓலை தயார் செய்து, தேவர் முனிவரையெல்லாம் அழைத்தான். மயனைக் கொண்டு அழகிய யாகசாலை நிர்மாணித்தான். விதிகளின் அளவுகளின்படி - ஆழ அகலத்தோடு மிகப் பிரமாண்டமாய் ஹோம குண்டம் அமைத்தான். காமதேனுவின் நெய், அண்டா அண்டாவாக வந்து இறங்கியது. அவிர் பாகங்களுக்கான நைவேத்தியங்கள் தங்கக் குண்டாகளின் தயாராகி வந்தன. பூர்ணஹூத்திக்கானவை தனியாக அடுக்கி வைக்கப்பட்டு ஒரு சிறுகுன்றுபோல் காணப்பட்டது.
 தேவர்கள் அனைவரையும் தட்சன் நேரில் சென்று அழைத்தமையால் தேவர்கள் உற்சாகம் அடைந்தனர். வியாழ பகவான் வேள்வியை ஆரம்பித்தார். வழக்கமாக இது போன்ற வேள்விகளைச் செய்யும் பிரம்மாவிற்கு தட்சன் முக்கியத்துவம் கொடுத்ததில் தலை கால் புரியாமல் பூரிப்பில் இருந்தார். மகாவிஷ்ணு மயக்கத்தில் இருந்தார். முப்பத்து முக்கோடி தேவர்களும் உற்சாக மிகுதியில் இருந்தார்கள். முனிவர்களும் ரிஷிகளும்கூட, ஏதோ ஒரு பெருமையோடும் தட்சன் நேரடியாக அழைத்த விதத்திலும் மகிழ்ந்து வந்து குழுமியிருக்க வேள்வித் தீ கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்திருந்தது.இதனை கேள்விப்பட்ட தாட்சயணி இந்த நியாயத்தை தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். ஆனாலும், கணவனின் அனுமதி இல்லாமலே வேள்வி நடந்த இடத்திற்கு வந்த உமையம்மையின் கண்களிலும் தீயின் வெம்மை. “எனது கணவரும் பரம் பொருளுமான பரமசிவனுக்கு அழைப்பு விடுக்காமல் வேள்வி நடத்துகிறீரோ? அவரை சகல மரியாதைகளோடும் அழைத்து அவருக்கு உரிய அவிர் பாகத்தையும் அளிக்க வேண்டும்” என்றார். எள்ளி நகையாடிய தட்சன், சுடுகாட்டில் அலைபவன், பிணத்தின் சாம்பலை பூசியவன் என கடுஞ்சொற்களையெல்லாம் அள்ளி வீசினான். “என் கண் முன்னே நிற்காதே  இங்கிருந்து உடனே சென்றுவிடு” என்றான். இதைக் கேட்ட உமையம்மை, “இந்த வேள்வி ஒழியட்டும் தேவர்களும் நீயும் கெட்டு அழிக!” என்று பொங்கி எழுந்தவள்  அங்கு அவமானம் அடைந்ததால் , யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள்.
தாட்சாயினி மறைவு செய்தி கேட்டதும் சிவபெருமான் கடுங்கோபம் கொண்டார். கண்கள் சிவக்க, புருவம் தெரிய, மூக்கு விரிய, பற்கள் உரசிய அந்தக் கணத்தில் உதித்தார் சிவ அம்சமான வீரபத்திரர். அவர் கண்கள் இரண்டிலும் தட்சன் வளர்த்த வேள்வித் தீயை மிஞ்சும் வெப்பம். ருத்ர தாண்டவமாடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி, பின் அவையாவையும் ஒன்றாகி வீரப்பத்திரரினுள் அடங்கியது. ஆதிசக்தி தன்னுடைய பங்கிற்கு மஹாகாளியை தோற்றுவித்தாள். சிவனது நெற்றிக்கண்ணில் இருந்து ருத்திரன் தோன்றினார் இவர்கள் அனைவரும் கடுங்கோபத்துடன் யாகசாலை யாகம் நடந்த இடத்திற்கு சென்றனர்  தட்சனையும், அவன் நடத்தும் யாகத்தையும் அழிக்க முடிவு செய்தார். அது மட்டுமின்றி நீதி, நெறிதவறி தட்சனுக்கு துணைபோன எல்லா தேவர்களையும் தண்டிக்கவும் அவர் முடிவு செய்தார்.
சிவபெருமான் போலவே மூன்று கண்கள், அக்னி சடை, 8 கைகள், அந்த கைகளில் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாலம்,திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி, நாகமாலை அணிந்து வீரபத்திரர் ருத்ரதாண்டவம் ஆடினார். தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற, சிவநிந்தனை செய்த தட்சனின் யாகம் நடந்த இடத்துக்கு அக்னி பிழம்பாய் சென்றார்.  சந்திரனைக் காலில் போட்டுத் தேய்த்தார். கூழைக் கும்பிடு போட்டுப் பல்லிளித்த சூரியனின் பற்கள் பறந்து விழுந்தன. அக்னி பகவான் நாக்குகள் வெட்டப்பட்டன. ஓடி ஒளிந்தவர்களையெல்லாம் தேடிப் பிடித்துப் பந்தாடினார். அப்போது திருமால், வீரப்பத்திரரை எதிர்ததார். அப்போது திருமாலின் சக்கரத்தை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் உள்ள ஒரு முகம் கவ்விக் கொண்டது. விஷ்ணு தண்டத்தால் அடிபட, தவழ்ந்து சென்ற பிரம்மா தலைகளில் ஓங்கி குட்டுப்பட்டார்.பிரம்மன் தலைகளும் வெட்டப்பட்டன. பக்கத்திலிருந்த சரஸ்வதியின் மூக்கு உடைந்தது.இதன் மூலம் தட்சனோடு சேர்ந்திருந்த எல்லா தேவர்களும் தண்டிக்கப்பட்டனர். தோளில் வெட்டுப்பட்ட இந்திரன், குயிலாக மாறி மறைந்தான். நாவு வெட்டுபட்ட அக்னி தேவன் கிளியாக மாறி பறந்தான். சூரியனின் பற்கள் உடைந்தன.. முப்பத்து முக்கோடி தேவர்களும் சிதறி ஓடினர்
“தேவாதி தேவன் பரமசிவனை அவமதித்து வேள்வியா செய்கிறாய்? உன் வேள்விக்கு வந்தவர்கள் கதி என்னவாயிற்று என்று பார்த்தாயா? இப்போது காட்டு உன் செருக்கையும், ஆணவத்தையும்! முடியுமா?” என்றபடி வாளைச் சுழற்ற தட்சனின் தலை பறந்துபோய் அவன் ஆரம்பித்த அந்த வேள்விக் குண்டத்திலேயே வீழ்ந்தது. நாக்குகள் அற்ற நிலையிலும் பயத்தில் படாதபாடுபட்டு தட்சன் தலையை அக்னிதேவன் பஸ்பமாக்கிக்கொண்டான் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிதறி ஓட யாகசாலை அழிக்கப்பட்டது.வீரபத்திரரின் ஆவேசத்துக்கு முன்பு இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிந்தனர். தீராத கோபத்தோடு, மஹாவிஷ்ணுவைத் திரும்பிப் பார்த்தார் வீரபத்திரர் மகாவிஷ்ணுவை ஒன்றும் செய்யவேண்டாம் என்று  வீரபத்திரரை கோபம் தணியட்டும் என்ற அசரீரி தடுத்தது. சட்டென்று தணிந்தது வீரபத்திரரின் கோபம். செய்த தவறுக்காக அத்தனை பேரும் வருந்தி மன்னிப்புக் கேட்டார்கள்.
தேவர்கள் தாங்கள் செய்த தவறை மன்னித்து பொறுத்து அருளும்படி சிவபெருமானிடம் வேண்டினார்கள். கருணையே வடிவானவன் அல்லவா அந்த ஆதிபரம்பொருள் . உடனே அங்கு சிவபெருமான், ஆதிசக்தியோடு ரிஷப வாகனத்தில் தோன்றினார். அவர் அருளால் தாட்சயணி உயிர்பிக்கப்பட்டாள். முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர்.தட்சன் தலை பஸ்பமானதால் அவன் மட்டும் ஆட்டுத் தலையோடு உயிர்பெற வேண்டியதாயிற்று. சிவபெருமான் காலில் விழுந்து வணங்கிக் கண்ணீர் விட்டான். அப்போது தட்சன், யாகசாலை இருந்த இடத்தில் தோன்றிய ஈசன், வீரபத்ரரை நோக்கி,  உன்னை நம்பி வழிபடும் மக்கள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று பணித்தார்.  வீரபத்திரரை வழிபட்டால் வீரம், விவேகம், வெற்றிகள் தேடி வரும்.
இப்படியாக தட்சன் வேள்வி அழிவில் முடிந்தது. வீரபத்திரரின் வழிவந்தவர்கள் மற்றும் அவரை குல தெய்வமாக வழிபடுபவர்கள் வீரமுஷ்ட்டி அல்லது வீரமுட்டி என்று அழைக்கபட்டார்கள். வீரமுட்டிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் பரவலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தட்சன் - தாட்சாயணி கதை ஏற்கனவே தெரிஞ்சிருந்தாலும்,  வீரபத்ர சுவாமியை தரிசித்தபோது இந்த புராணங்கள் மனதில் ஓடின. அந்த பயபக்தியோடு அவரை வணங்கினோம். இதுதான் இந்த திருக்கோவிலின் மூலவர் விக்கிரகம் .
வெள்ளியிலான பாதுகைகளும் இருக்கு. மூலவரை சுற்றிவந்து வணங்கும் முறையில் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதேபோன்றுதான் இரண்டு கோவில்களின் விக்கிரகங்களும் இருக்குமாம். அங்கயும் இதுபோன்ற வெள்ளி பாதுகைகள் வைக்கப்பட்டுள்னன என்றார் எங்களை அழைத்துச்சென்ற டிரைவர் . நாங்களும் வெள்ளிபாதுகைகளை பயபக்தியுடன் தொட்டுக் கும்பிட்டு வெளியே வந்தோம் .
நாங்கள் கோவிலைவிட்டு வெளியே வரும்போது இருட்டிவிட்டது மின்விளக்குகளின் ஒளியில் கோவில் அழகாக இருந்தது. இரவு 7 மணிக்குமேல் தினமும் பஜனையும் ஆரத்தியும் எடுப்பார்களாம். ஆட்கள் மெல்ல குவிய ஆரம்பித்தனர். ஒவ்வொரு புதன்கிழமையும் விசேச  புஜைகள் நடைபெறுமாம். கார்த்திகை மாதத்தில் இங்கே வீரபத்திரருடைய சரித்திரத்தை தினமும்  பாராயணம் செய்வார்களாம் .
தசரா சமயத்தில் ரொம்ப சிறப்பா கொண்டாடுவாங்களாம். மேலும் கார்த்திகை மாசத்தில் உற்சவர் பவனியும் திருவிழாக்களும் நடைபெறுமாம். தரிசனம்லாம் முடிச்சிட்டு வெளியே வந்தோம். இங்க இருக்கும் திறந்தவெளிகளில் கைவினை பொருட்களை விற்கும் கடைகள் நிறைய இருக்கு.  ஷீரடி செல்பவர்கள் கட்டாயம் சென்று தரிசிக்கவேண்டிய தலம் .
இந்த கோவிலுக்கு எப்படி செல்வது என்று திக்கு திசை தெரியாம முழிக்காம இருக்க ஷீரடி கோவில்களின் வரைபடம் உதவியாக இருக்கும். மேலும் இந்த கோவிலின் முகவரி....
ஸ்ரீ ராஜவீரபத்திர மந்திர் ,
விரோபா பான் கஞ்ச் மந்திர்  ,
பான் கிராமம் ,ராத்தா தாலுகா,
ஷிரிடி,அஹமதுநகர் மாவட்டம்  ,
மகாராஷ்டிரா -423 109
கோவில்  நடை திறந்திருக்கும் நேரம் காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை ......
அடுத்தவாரம் ஷீரடியில் இருந்து சந்திக்கலாம் ...
நன்றியுடன்,
ராஜி

9 comments:

 1. விவரங்கள் சுவாரஸ்யம். படங்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ ,உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ...

   Delete
 2. படங்களும் பகிர்வும் அருமை
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ மத்திய இந்திய பயணத்தில் இணைந்தமைக்கு ..பயணங்கள் தொடரும் ...

   Delete
 3. ஆன்மீகப்பயணங்கள் பதிவு எழுத கை கொடுக்கும்

  ReplyDelete
  Replies
  1. நான் பயணக்கட்டுரைகள் எழுத ஆரம்பித்ததே நாம் மட்டும் கோவிலுக்கு சென்றால் போதாது ,சில கோவில்களுக்கு சிலரால் செல்லமுடியாமல் இருக்கும் நிலை ,நிலப்பரப்பினாலோ ,இல்லை அதுபற்றி கேள்விப்படாததினாலோ அவர்களுக்கும் அந்த கோவிலுக்கும் உள்ள தொடர்புகள் இல்லாமல் இருக்கும் .அது எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கினேன் .இறைவன் அருளால் இன்றுவரை பயண கட்டுரைகள் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறேன் .நன்றிப்பா

   Delete
 4. ஓ... இந்த இடுகையை மிஸ் செய்துவிட்டேன்... அட... இன்னமும் ஷீரடி போகலையா?

  ReplyDelete
  Replies
  1. அவ்வுளவு சீக்கிரம் போய்விடுவோமா..போறது எல்லாம் பதிவு திரட்டுறதுக்குத்தானே அடுத்தவாரம் போய்விடுவோம்ன்னு நினைக்கிறன் ...

   Delete
 5. very nice post, i actually love this website, keep on it online casino slots

  ReplyDelete