Saturday, October 06, 2018

ஓங்கி உலகளந்த உத்தமனான திருவிக்கிரமசுவாமி - திருக்கோவிலூர்

உலகத்துல கெட்டவனாவே வாழ்ந்தா என்ன கதின்னு துரியோதனன், ராவணன், நரகாசுரன்,  பத்மாசூரன், அனலாசூரன், தாடகி, மகிஷன்..... மாதிரியான அசுரர்களின் முடிவை பார்த்து தெரிஞ்சுக்கலாம்.  சரி, கெட்டவர்கள் கதிதான் இப்படியாச்சுதேன்னு, எதுக்குடா வம்புன்னு  நல்லவனாய் வாழ்ந்து வந்தாலும் இந்த உலகம் விட்டு வைக்குதா?! அட, இந்த உலகம்தான் இப்படின்னா, இந்த சாமிகளுக்கு வேலை வெட்டி  இல்லாம பொழுது போகாம இருந்தா சொக்கட்டான், தாயப்பாஸ் விளையாடிக்கிட்டு இருக்காம, சொய்ய்ய்ய்ய்ய்ன்னு பூலோகத்துக்கு வந்து பண்ணாத இம்சைலாம் பண்ணிட்டு பக்தா! உன் பக்தியை மெச்சினோம். உன்னை இந்த பூலோகம் மறக்காதுன்னு டயலாக் விட்டுட்டு அவன் இழந்ததுலாம் கொடுத்துட்டு சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு பறந்து போயிடும். அதனால், தங்கத்துல செப்பு கலந்த மாதிரி நல்லவன்+கெட்டவனாக வாழ்ந்து இருக்க இடம் தெரியாமயே காலத்தை கடத்துடலாம்.  எதுக்கு இந்த டயலாக்!? ஏன் இந்த முடிவுன்னு தெரிஞ்சுக்கனும்ன்னா  மகாபலி மன்னன் கதை அதானுங்க ஓணம் பண்டிகை கதையை தெரிஞ்சுக்கிடுங்க.

அசுரக்குலத்தில் தோன்றி இருந்தாலும், மகாபலின்ற மன்னன் குலகுருவான சுக்ராச்சாரியார் அறிவுரையோடு தர்ம நியாயங்களின்படி ஆட்சிபுரிந்து வந்தான். மகாபலி கர்ணனுக்கு ஒப்பான சிறந்த கொடையாளி. அவன் ஆட்சியில் மக்கள்லாம் ரொம்ப சந்தோசமா இருந்தாங்க.  குலகுருவான சுக்ராச்சாரியார் ஆலோசனைப்படி  மிகப்பெரிய யாகத்திற்கு ஏற்பாடு செய்தான். எங்கே தனது பதவிக்கு ஆபத்து வந்திடுமோன்னு பயந்த தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மகாவிஷ்ணுவை அணுகி, தங்கள் நிலையினை எடுத்துச்சொல்லி, யாகத்தினை தடுத்திட வேண்டி நின்றனர். யாகத்தினை தடுக்க மனமில்லாவிட்டாலும், தேவர்களின் மனக்குறையை தீர்க்க,  குழந்தை வரம் கேட்டு காசியபர் -அதிதி தம்பதியினர், திருமாலை வேண்டி காமேஷ்டி யாகம் செய்ததன் பலனாய், அவர்களுக்கு மகனாய் குட்டையான வடிவம் கொண்ட  வாமணன்ன்ற பேர்ல விஷ்ணு அவதரித்தார். 

யாகத்திற்கு வந்தவர்களுக்கு  அவர்கள் விரும்பிய வண்ணம் பொன், பொருள், நிலம், பசுவென வாரி வழங்கிக்கொண்டிருந்தார். அங்கு வந்த வாமனரை வரவேற்ற மகாபலி என்ன வேண்டுமென கேட்க, மூவடி மண் போதுமென வாமணன் சொல்ல,  அவர் கேட்ட மூன்றடி மண்ணை கொடுக்க மகாபலி ஒப்புக்கொண்டான். வந்திருப்பது ஸ்ரீமன் நாராயணன் என்பதை உணர்ந்த சுக்ராச்சாரியார், தன் சீடனைக் காக்க எண்ணி, அவனிடம் உண்மையைக் கூறி தானம் கொடுக்க வேண்டாம் என்றார். ஆனா,  கொடுத்த வாக்கை மீறாத மகாபலி, ‘வந்திருப்பது ஸ்ரீமன் நாராயணன் என்றால், அவருக்கே தானம் தருவது தமக்குப் பெருமையே’ எனக்கூறி, கமண்டலத்தைச் சாய்த்து தாரை வார்க்கத் தொடங்கினான். இதனைத் தடுக்க விரும்பிய சுக்ராச்சாரியார், வண்டாக மாறி, கமண்டலத்தில் தண்ணீர் வரும் வழியை மூடினார். ஆனால் வாமனர், ஒரு புல்லை எடுத்து துவாரத்தில் குத்தியதால் சுக்ராச்சாரியார் தமது ஒரு கண்ணை இழந்தார். முடிவில், மகாபலி தண்ணீர் விட்டு மூவடி நிலைத்தை தாரை வார்த்தான்.
தாரை வார்த்தல் முடிந்ததும், வானுக்கும், மண்ணுக்குமாய் உயர்ந்து நின்று வாமனர், ஓரடியை வைத்து மண்ணுலகை அளந்தார். மற்றொரு அடியால் விண்ணுலகம் முழுவதையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என வாமனர் கேட்க, மகாபலி தன் செருக்கை இழந்து மூன்றாவது அடியைத் தன் தலை மீதே வைக்க வேண்டினான். அதன்படியே பெருமாள் வைக்க பாதாளம் சேர்ந்தான் என்பது இந்த தலத்தோட ஹிஸ்ட்ரி, ஜியாகரபிலாம்.  அதுக்கப்புறம், விஷ்ணு பக்தா உன் பக்தியை மெச்சி, உனக்கு பாதாள லோகத்தை அரசாட்சி புரிய அருள் செய்தோம்ன்னு அருளினார். ஆளே இல்லாத இடத்துல யாருக்குதான் டீ ஆத்த சொன்னாரோ! அது பகவானுக்கே வெளிச்சம். செத்த பாம்பை திரும்ப அடிக்குற மாதிரி என்ன வரம் வேணும்ன்னு கேக்க தன்னோட நாட்டு மக்களை  பிரிஞ்சிருக்க முடியாதுன்னும், வருசம் ஒருவாட்டி வந்து பார்க்கனும்ன்னு வரமாய் கேட்க, அப்படி வாங்குன வரம்தான் ஓணம் பண்டிகை. 
விழுப்புரம் மாவட்டத்திலிருக்கும் திருக்கோவிலூர் 108 திவ்ய தேசங்களில் 53வது தலமாம். நடுநாட்டு திருப்பதியில் 2வது தலமாகவும், பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில் 4வது தலமாகவும், தமிழ்வேதம் எனப்படும் நாலாயிர திவ்யபிரபந்தம் அவதரித்த தலமாகவும் இத்தலம் இடம்பெற்றிருக்கு.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நின்ற திருக்கோலத்தில் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரத்தையும் பிடித்தபடி வலது காலை ஆகாயம் நோக்கி தூக்கி நின்று திருவிக்கிரம அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வலது காலின் மேல்புறம் லட்சுமியும், கீழே இடதுக்காலை நமச்சு முனிவர், மகாபலி சக்கரவர்த்தி, சுக்கிராச்சாரியார். ஆண்டாள், கருடன் ஆகியோர் பூஜை செய்யும் தோரணையிலும், பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடல் பாடும் தோரணையிலும் காட்சியளிக்கின்றார். இந்த திருக்கோலத்தை கோவிலின் கருவறையில்தான் அர்ச்சகர்கள் விளக்கி சொல்ல பக்தர்கள் தரிசிக்க முடியும். 
ஒரு அதிகாலை நேரத்தில் விழுப்புரத்திலிருந்து பச்சை பசேலென  அழகிய வயல்வெளிகளை கண்டு களித்தவாறே  திருக்கோவிலூர் சென்றோம்.  கரும்பு, நெல், வாழை என எங்கும் பசுமைக்கோலம்.  பத்ம புராணம், பிரமாண்ட புராணம் இரண்டிலும் திருக்கோவிலூர் புகழப்படுது. பெருமாள் வாமன அவதாரம் எடுக்கும்முன்பாக  இந்த ஆலயம் கிருஷ்ணன் கோவிலாய் இருந்ததாம்.  கோபாலன் என்ற சொல்லே கோவாலன் உறையும் ஊர் எனப்பொருள்படும்படி  திருக்கோவலூர் என அழைக்கப்பட்டு இப்ப திருக்கோவிலூராய் ஆனதாம்.
சில மாதங்களுக்குமுன் நாங்க போனபோது தென்பெண்ணையாற்றில் ஓரளவுக்கு தண்ணி ஓடிட்டு இருந்துச்சு. இங்கதான் கபிலர் குன்று இருக்குறதாய் பிறகுதான் தெரிஞ்சது. போக வேண்டிய இடங்களில் அந்த பேரையும் சேர்த்தாச்சு. கபிலர் யாருன்னு சுருக்கமா...  கபிலர்,  பாரி வள்ளலின் முகம் காணா நண்பர்.  பாரிவள்ளலின் மறைவுக்கு பின் அங்கவை, சங்கவையை பராமரிச்சு திருமணம் செஞ்சு வச்சபின் இந்த ஆற்றிலிருக்கும் ஒரு பாறையின்மீது வடக்கு நோக்கி அமர்ந்து அன்னம் தண்ணியின்றி உயிர் நீத்தார்.  அது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 2கிமீ தூரத்திலிருக்காம். சரி நாம உலகளந்த பெருமாள் கோவிலுக்கு போகலாம். வாங்க.


படம் பேஸ்புக்ல சுட்டது... 
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் இது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவுள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் 192 அடி உயரம் கொண்டது.  11 நிலைகள் கொண்டது. இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம்.  கோபுரத்தைக் கடந்து உள்ளே போனால்,  மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளையும், பூஜை பொருள்கள் விற்கும் கடைகளையும் பார்க்கலாம்.  நாங்க துளசிமாலையும், தாயாருக்கு தாமரைப்பூவும் வாங்கிக்கிட்டோம்.

நாங்க போனபோது இக்கோவில் கட்டுமான வேலைகள் நடந்துக்கிட்டு இருந்துச்சு. இப்ப கும்பாபிசேகம் ஆகிட்டுது. ஏழுநிலை கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் திருவிக்கிரமசுவாமியை தரிசிக்கலாம்.   ஒரு காலத்தில் வேணுகோபால சன்னதியா இருந்து படிப்படியா உலகளந்த பெருமாள் கோவிலாய் மாற்றம் கண்டது. சுமார் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலை பல்லவர்கள், விஜயநகரபேரரசு, இரண்டாவது நரசிம்மவர்மன், பாண்டியர்கள், திருமலைநாயக்கர், திருமங்கை மன்னன், மலையமான் சக்கரவர்த்தி ஆகியோர் படிப்படியாக இக்கோவிலை இப்ப இருக்கும் கட்டமைப்பில் கொண்டு வந்தனர்.   


கோவில் ரொம்ப சுத்தமா அமைதியாய் இருந்துச்சு.   ஞானிகளும், நாரதரும், கின்னரர்களும் இத்தலத்தில் தவம் செய்ததாகக் கூறப்படுது. மார்க்கண்டேயரின் தந்தையான மிருகண்ட முனிவர், திருமாலின் வாமன அவதாரத்தைக் காண விரும்பித் தவம் செய்து தான் விரும்பியவாறே இறைக்கோலத்தை தரிசனம் செய்த தலம் இது. 
பெருமாள் கோவில் வழக்கப்படி முதலில் தாமரை மலரால் தாயாரை வணங்கி மஞ்சளை பிரசாதமாய் பெற்றோம்.  தாயார் சன்னிதி கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், சோபன மண்டபம், திருக்கல்யாண மண்டபம் என  தனிக்கோவிலாய் அமைந்துள்ளது. மூலவர் பூங்கோவல் நாச்சியார்,  உற்சவர் புஷ்பவல்லித் தாயார் எனவும் அழைக்கப்படுகிறாள். 
அடுத்து உலகளந்த பெருமாள் திருவிக்கிரமன் எனப்பேர்கொண்டு அருளும், கருவறைக்கு சென்றோம். துளசி மாலைக்கொண்டு அவனை தொழுதப்பின், அர்ச்சகர் காட்டிய திருவிளக்கு வெளிச்சத்தில் 21 அடி உயரம் கொண்ட பழமையான தேவதாரு மரத்தால் ஆன சிலாரூபத்தினை தரிசித்தோம்.  இவருக்கு உலகளந்த பெருமாள், ஆயனார், இடைக்கழி ஆயார் வேறு பேர்களும் உண்டு. எம்பெருமான் பச்சிலை மூலிகைகளால் ஆன வண்ணங்கள் பூசப்பட்டு பேரழகனாக வீற்றிருக்கிறார். பிரசாதமாய் சடாரியும், தீர்த்தமும், துளசியும் பெற்றுக்கொண்டோம். உற்சவர் தேகளீச பெருமாள் என அழைக்கப்படுகிறார். பொதுவா வலக்கையில் சக்கரமும், இடக்கையில் சங்குமாய் காட்சியளிக்கும் பெருமாள் இங்கு மகாபலியை தன்னோடு  சேர்த்துக்கொண்ட மகிழ்ச்சியில் தலைக்கால் புரியாம வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமுமாய் காட்சியளிக்கிறார். இந்த திருக்கோலத்தில் இறைவனை காண்பது அபூர்வம். இக்கோலம் ஞானத்தை தரும்.


பூங்கோவல் நாச்சியார் சன்னத்திக்கு இடதுபுறம் சக்கரத்தாழ்வார் அருள்பாலிக்கிறார். சக்கரத்தாழ்வாருக்கு சனிக்கிழமை கல்கண்டு அர்ச்சனை செய்தால் தீமைகள் அகலும்.  இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் சத்ருக்கள்  தொல்லை நீங்கும்.


திருவிக்கிரமசுவாமி சன்னதிக்கு பின்புறம் வாமனருக்கென தனி சன்னதி இருக்கு. இங்குள்ள வாமனர் கையில் குடையுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கேரளாவிற்கு அடுத்தபடியாக வாமனருக்கு இங்குதான் தனிச்சன்னதி இருக்கு.  இவரை தரிசனம் செய்தால் திருமணம், செல்வம், குழந்தைபேறு, கல்வி போன்றவற்றை குருபகவான் அருள்வார். அனைத்து பலன்களும் இங்கு கிட்டும். திருவோண நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுது.


திருவிக்கிரமசுவாமி கருவறையின் முன்பு நாகராஜாக்கலான வலதுபுறம் அனந்தன், இடதுபுறம் வாசுகி ஆகியோரை ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் வழிபாட்டால் கால சர்ப்ப தோஷங்கள் நீங்கும். திருவிக்கிரமசுவாமி விஸ்வரூப காட்சியைக் காண மிருகண்டு  முனிவருக்கு ஆசை உண்டானது. அவர் பிரம்மாவிடம்  ஆலோசனை கேட்க, பூவுலகில் கிருஷ்ணபத்ரா நதிக்கரையில் உள்ள கிருஷ்ண க்ஷேத்திரத்தில் (தற்போதைய திருக்கோவிலூர்) தவம் செய்தால், அந்த தரிசனம் கிடைக்கும் என்றார் பிரம்மா. அதன்படி முனிவர் தன் மனைவி மித்ராவதியுடன் பலகாலம் இத்தலத்தில் கடுந்தவம் இருந்தார். அத்தலத்துக்கு வருவோருக்கு அன்னதானத்தையும் அந்த தம்பதியர் செய்தனர். ஒருநாள் விஷ்ணு இவரை சோதிக்க வயோதிக அந்தணர் வடிவில் வந்து அன்னம் கேட்டார். அன்று அவர்களிடம் உணவு ஏதும் மிச்சமில்லை. மிருகண்டு முனிவர் தன் மனைவியிடம், வந்தவருக்கு இல்லை என சொல்லாமல், ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கூறினார். வீட்டிலோ ஒரு பொட்டு நெல்மணி கூட இல்லை. எனவே, கணவருக்குத் தவிர வேறு சேவை செய்தே அறியாத கற்பில் சிறந்த அப்பெண்மணி, நாராயணனை நினைத்து ஒரு பாத்திரத்தை கையில் எடுத்தாள். ""நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால், இந்த பாத்திரம் நிரம்பட்டும்,என்றாள். உடனடியாக அதில் அன்னம் நிரம்பியது. அப்போது, அந்தணர் வடிவில் வந்த பெருமாள், அவர்களுக்கு விஸ்வரூப தரிசனத்தை காட்டியருளினார்.

திருவிக்கிரம சுவாமி சன்னதி நுழைவுவாயிலின் இடப்பக்கம், விஷ்ணுக்கோவிலில் வேறு எங்கும் காணமுடியாத விஷ்ணு துர்க்கை சன்னதி.  விஷ்ணு துர்க்கை சிவன்கோவிலில்தான் வீற்றிருப்பாள். பெருமாளின் சகோதரியான இவள் எல்லை காவல் தெய்வமாகவும், வனதேவதையாகவும் இருக்கும்  இவர் விந்திய மலைக்கு புறப்பட தயாரா இருக்கும்போது பெருமாள் தன் அருகில் இருந்துக்கொண்டு, இங்கு வரும் பக்தர்களுக்கு துயர் போக்கவேண்டும் என தன்னோடு இருக்க செய்தார்.  செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ராகுகாலத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் விஷ்ணுதுர்க்கைக்கு புடவை  மற்றும் எலுமிச்சை பழ மாலை அணிவித்து எலுமிச்சை பழவிளக்கு ஏற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமண யோகம் கிடைக்கும்.

திருவிக்கிரமசுவாமி கருவறையில் உள்ள  அசுரக்குலகுருவான சுக்ராச்சாரியாரை வழிபட்டால் சங்கீதம், வாத்தியம், நாட்டியம், போகபாக்கியம், இளமை, லட்சுமி கடாட்சம், போன்ற பலன்கள் கிட்டும்.


தமிழ் புத்தாண்டு, ராமநவமி, ராமானுஜர் விழா, வைகாசி வசந்த உற்சவம், ஆனியில் திருமாலுக்கு ஜேஷ்டாபிஷேகம், ஆடியில் பத்து நாட்கள் ஆண்டாள் ஆடிப்பூர விழா, ஆடி வெள்ளி, ஆடி கடைசி வெள்ளி தாயாருக்கும், பெருமாளுக்கும் புஷ்பாங்கி சேவை, ஆவணியில் வேணுகோபாலருக்கு 10 நாட்கள் விழா, வாமன ஜெயந்தி மூன்று நாட்கள், புரட்டாசி பவித்ர உற்சவம், தாயாருக்கு நவராத்திரி விழா, திருமாலுக்கு தினப்படி திருமஞ்சனம், ஐப்பசி திருவோணத்தன்று முதலாழ்வார்களுக்கு 5 நாள் விழா, மணவாள மாமுனிகளுக்கு பத்து நாள் உற்சவம், கார்த்திகை தீப உற்சவம் மூன்று நாள், கைசீக ஏகாதசி, மார்கழியில் பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து, தைத் திருநாள், மாசியில் மகம், பங்குனி பிரம்மோற்சவம்......... என விழாக்களுக்கு பஞ்சமில்லாத் திருக்கோவிலாக இருக்கு. சொல்லவே மூச்சு வாங்குது. இத்தனை விசேசம் நடக்குதுனா கோவிலோட அருமை என்னவா இருக்கும்ன்னு யூகிச்சுக்கோங்க.

கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக இருக்கு. நாங்க போனபோது கட்டுமான பணிகள் நடந்துக்கிட்டு இருந்ததால் படமெடுக்க முடில. இது நுழைவாயில் சுவத்துல இருக்கும் ஒரு சிற்பம். 

சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் சிலை தனிச்சன்னிதியில் அருள் பாலிக்கிறார். இவரை தரிசித்தபின் தான் மூலவரை தரிசிக்கனும்.(இந்த விவரம் எங்களுக்கு தெரியாது வெளியில் வந்தபின் தான் அங்கிருக்கும் பெரியவர் சொன்னார். பெருமாள், வேணுகோபாலர், லட்சுமிநாராயணன், வீர ஆஞ்சநேயர், லட்சுமி ராகவன், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள்.. என அவரவர் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.
வேலை கிடைக்க, பதவி உயர்வு வேண்டி,  வேலை இழந்தவர்கள் மீண்டும் வேலையில் அமர இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோவிலின் தனிச்சிறப்பு. கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறும். 

பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோயில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

பெருமாளை புகழ்ந்து பாடிய முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் இத்தலத்து பெருமாளைத்தான் முதன்முதலாகப் பாடினர்.  இம்மூவரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருக்கோவிலூரை அடைந்தனர். இவர்களை ஒன்று சேர்க்க நினைத்த பெருமாள், பெரும் மழையை பெய்விக்கச் செய்தார். முதலில் இத்தலம் வந்த பொய்கையாழ்வார், மிருகண்டு மகரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்து, அங்கே தங்குவதற்கு இடமுண்டா எனக் கேட்டார். அதற்கு மிருகண்டு முனிவர் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம் எனக்கூறி சென்றார்.

.சிறிது நேரத்தில் அங்கு வந்த பூதத்தாழ்வார், தாம் தங்குவதற்கும் இடமுண்டா என வினவினார். அதற்கு பொய்கையாழ்வார் ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம் என்று கூறி அழைத்துக் கொண்டார். இன்னும் சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கு வந்தார். தனக்கும் உள்ளே இடம் வேண்டும் என கேட்க, ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம். மூவர் நிற்கலாம் எனக்கூறி அவரையும் உள்ளே இழுத்துக் கொண்டனர். இப்படியாக மூவரும் நின்றுக்கொண்டிருக்கையில், நாலாவதாக ஒருவர் வந்து மூவரையும் நெருக்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது. "இதென்ன விந்தை!' என அவர்கள் ஆச்சரியப்பட்டபோது, பேரொளியாக தோன்றிய பெருமாள் தன் திருமேனியை மூவருக்கும் காட்டியருளினார். மூன்று ஆழ்வார்களும் இத்தலத்தில் தான் முக்தி பெற்றனர்.

நாங்க வேன்ல போனதால் பேருந்து மார்க்கம்லாம் எப்படின்னு தெரில. ஆனா, விழுப்புரம், திண்டிவனம் பஸ்லாம் கண்ல பட்டது.  விழுப்புரம்-காட்பாடி ரயில் மார்க்கத்தில் திருக்கோவிலூர் ரயில்நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் இருக்குன்னு கூகுள் ஆண்டவர் சொல்றார்.  
காலை 5.30 மணி முதல் 6.45 மணி வரையும், 8.30மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5.45 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். 


புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உலகலாம் அளந்தவன் அருளும் திருக்கோவிலூர் திருவிக்கிரம சுவாமியை தரிசனம் செய்தாச்சு. நான் போய் கோவிந்தா போட்டுட்டு வரேன்.

நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. உலகளந்த பெருமாள் கோயிலுக்கு இரு முறை சென்றுள்ளேன். தமிழகத்தில் நான் பார்த்த கோயில்களில் மூலவர்களில் நான் அதிகம் விரும்பிப்பார்த்த கோயில். பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும் என்ற நிலையில் மூலவர் காணப்படுவார். இன்று இப்பதிவு மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்வினைத் தருகிறது.

    ReplyDelete
    Replies
    1. நாங்க போனபோதும் அமைதியா சுத்தமா இருந்துச்சு. கூட்ட நெரிசல் இல்ல. அதேமாதிரி இறைவனது திருக்கோலத்தை விளக்கி சொல்ல, பத்து பத்து பேராய்தான் கருவறைக்குள் விட்டாங்க, அதனால் நல்ல தரிசனம் கிடைச்சுது.

      Delete
  2. படங்களும் விவரங்களும் மிகவும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. படங்கள்லாம் என் மகனோட ரெட்மி நோட் 5ல எடுத்தது. அதைவிட என் சின்ன பொண்ணு விவோ போன் கிளாரிட்டி செமயா இருக்கு, ஆனா அவ கொடுக்க மாட்டா :-(

      Delete
  3. விரிவான விடயங்கள் ஆச்சர்யமாக இருக்கிறது சகோ.

    ReplyDelete
    Replies
    1. தலவரலாறு அங்க கேட்டது. சிலது கூகுள்ல சுட்டது

      Delete
  4. அவதாரக் கதைகள் என்னும் தலைப்பில் எழுதி இருக்கிறேன் அவதாரங்களின் செயல்களில் குறை சொன்னால் பக்தகோடிகளுக்கு கோபம்வருகிறது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா. உடைச்சு பார்த்தால் இவங்களையா சாமின்னு கும்பிடுறோம்ன்னு தோணும். தேவராய் பிறந்துட்டாலே எந்த தப்பும் பண்ணலாம். அவங்கலாம் விதிவிலக்குன்னு புராணம் சொல்லுது. தங்கையை மணந்த பிரம்மா, ஆணும் ஆணும் சேர்க்கை, தெய்வமும் மிருகமும் சேர்க்கை, சூது களவுன்னு விதம் விதமான குற்றங்களை கடவுள் செய்யலாம், ஆனா, அசுரர்களும், மனிதர்களும் செஞ்சா கர்மான்னு சிம்பிளா பைலை க்ளோஸ் பண்ணிடுறாங்க. வரவர சாமி கும்பிடவே பிடிக்கலை.

      Delete