ஆடிப்பட்டம் தேடி விதைன்னு.. சொல்லும் பழமொழிக்கேற்ப ஆடியில் விதை விதைத்து, நடவு நட்டு, களை பறித்து, ஆறு மாதங்கழித்து மார்கழியில் அறுவடை செய்யும் உழவர்கள், விவசாயத்தில் தங்கள் தொழிலுக்கு பலவிதத்தில் உதவிய கால்நடைகளுக்கு நன்றி சொல்ல விழா எடுத்து கொண்டாடி மகிழ்வதே இப்பண்டிகையின் தாத்பரியம். மார்கழி கடைசியிலிருந்து காய்கறிகள் நல்ல விளைச்சலும், அறுவடை முடிச்சு வந்த தானியங்களை தூசு நீக்கி, தரம் பிரிச்சு, மூட்டையாக்கி விற்பனைக்கும், சேமிச்சு வைக்கவும்ன்னு ஏகப்பட்ட வேலைகளும், வேலைவாய்ப்பும் இருக்கும். வேலைவாய்ப்பு இருந்தால் பணப்புழக்கம் இருக்கும். இதனால் திருவிழா, வீடு சீர் செய்ய, கல்யாணம் காதுகுத்துன்னு சுபநிகழ்ச்சிகள் நடத்த இப்படி பசி இல்லாம, மக்கள் மகிழ்ந்திருக்கும் காலம் தைமாதத்தில் தொடங்குவதால்தான் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்னும் பழமொழி உண்டாச்சு.
வானியல் சாஸ்திரப்படி சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பும் நிர்ணயம் செய்யப்படுது. கடவுள் இல்லை என்பவர்கள்கூட வணங்கும் ஒரே தெய்வம் சூரியன். இவர் தனுர்ராசியிலிருந்து மகரராசிக்கு மாறும் நாளில்தான் தைமாதம் பிறக்குது. இதிலிருந்து உத்திராயன புண்ணியகாலம் ஆரம்பமாகுது. உத்திராயனம் என்பதற்கு வடக்கு நோக்கி நகர்தல்ன்னு அர்த்தம். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் மறைந்தாலும், இன்றுமுதல் அவருடைய சஞ்சாரம் சற்றே வடக்கு நோக்கி சாய்ந்திருக்கும் என்கிறது வானியல். இதிலிருந்து ஆறுமாத காலம் தேவலோகவாசிகளுக்கு பகல்பொழுது என்பது இந்துக்களின் நம்பிக்கை. சூரியனை வழிபடும் சமயத்திற்கு ‘சவுரம்’ என்பது பெயர். இன்றைக்கு இச்சமயத்தில் இருந்தவர்களெல்லாம் சைவத்தோடும் வைணவத்தோடும் ஐக்கியமாகிவிட்ட நிலையில், அனைத்து சமயத்தவராலும் சூரியன் வழிபடப்படுகிறார்.
தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகை தமிழகமும், தமிழர்கள் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. இந்த பண்டிகையை மகர சங்கராந்தியாக மத்த மாநிலத்துக்காரங்க கொண்டாடுறாங்க. அதேசமயம் அறுவடை திருநாள் எனவும் இவ்விழா அழைக்கப்படுகிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இப்பண்டிகை உத்தராயன்ன்னும், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் லோரி ன்னும் கொண்டாடப்படுது. இந்தியாவிற்கு அப்பாலும் பொங்கல் பண்டிகை களைகட்டுது. இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம், மியான்மர், லாவோஸ் போன்ற நாடுகளிலும் வெவ்வேறு பேர்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுது.
நேபாளத்தில் மாகி, மாகே சங்கராந்தி, மாகே சகாராதின்ற பேரிலும், தாய்லாந்தில் சொங்க்ரான் ன்னும், லாவோஸ் மக்களால் பி மா லாவ்ன்னும், மியான்மரில் திங்க்யான்ன்னும் பொங்கல் கொண்டாடப்படுது. இலங்கையில் தமிழர் திருநாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுறாங்க. சிங்கப்பூர், மலேசியாவிலெல்லாம் அரசு விடுமுறையே உண்டு. போனவருசம் கனடா, பிரான்ஸ் நாட்டு பிரதமர்கள் பொங்கல் திருநாளுக்காக வாழ்த்துகள் சொன்னாங்க.
பொங்கல் பண்டிகை கி.மு. 200 - கி.மு. 300 காலக்கட்டத்திலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்திருக்கு.பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தைந்நீராடலின்போது சங்ககால பெண்கள் 'பாவை நோன்பு'ன்ற விரதத்தை கடைப்பிடித்து வந்தனர். பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 400-கி.பி.800) பொங்கல் பண்டிகை மிகவும் முக்கியமான பண்டிகையாக இருந்திருக்கு. தமிழ் மாதமான மார்கழியின் (டிசம்பர் - ஜனவரி)போது இது கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின்போது நாட்டில் மழையும் வளமும் செழிக்க வேண்டி இளம்பெண்கள் விரதமிருந்து வேண்டுவர்.
பாவைநோன்பு இருக்கும் பெண்கள் மார்கழிமாதம் முழுக்க பால் மற்றும் பால்பொருட்களை சாப்பிடமாட்டாங்க. தங்கள் முடிக்கு எண்ணெடுவது, கண்ணுக்கு மையிடுவது, மருதாணி மாதிரியான அழகுப்படுத்திக்கொள்ள மாட்டாங்க. கடுமையான சொற்களை பேசாம, காலையில் குளிச்சுமுடிச்சு, ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணின்ற பெண் தெய்வத்தின் சிலையை அந்த காலத்துல வணங்கி வந்ததா குறிப்புகள் சொல்லுது. தைமாத முதல்நாள் தங்கள் நோன்பை முடிச்சுப்பாங்க. நல்ல கணவன் அமையவும், நெற்பயிர்கள், பயிர்கள் செழிக்க தேவையான மழையை கொண்டு வருவதற்காகவுமே இந்த நோன்பு உண்டானது.. பழமை வாய்ந்த இந்த மரபுகளும், சடங்குகளும்தான் படிப்படியா மாறி இன்னிக்கு பொங்கல் பண்டிகையா மாறி இருக்கு.
ஒரு ஜுவல்லரில போன பொங்கல் பண்டிகைக்காக தங்கத்தில் செய்த பொங்கல்பானை. (ஃபேஸ்புக்ல சுட்டது)
இன்றைய பொங்கல் பண்டிகைக்கு வித்திட்டது. தைந்நீராடலும், பாவைநோன்புமே ஆகும். தைந்நீராடல் பற்றியும், பாவை நோன்பின்போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பற்றியும், ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஆகியவற்றில் தெளிவா சொல்லப்பட்டிருக்கு. குலோத்துங்கான்ற அப்படி நிலத்தை தானமாய் வழங்குவதை பொங்கல் பண்டிகையின்போது செய்வதை வழக்கமாய் கொண்டிருந்தார்ன்னு திருவள்ளூர் வீரராகவா கோவிலில் இருக்கும் கல்வெட்டில் சொல்லப்பட்டிருக்கு.
பொங்கல் பண்டிகை பற்றிய புராணக்கதைகள் இரண்டிருக்கு. ஒன்னு சிவபெருமானுடன் தொடர்புடையது, இன்னொன்னு இந்திரனுடன் தொடர்புடையது. நந்தி புராணத்தின்படி, ஒருமுறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறும், அங்கே மனிதர்களிடம் தினமும் எண்ணெய் குளியல் செய்து, மாதம் ஒருமுறை மட்டுமே உண்ணுமாறு சிவபெருமான் கூற சொன்னார் சிவபெருமான். ஆனால் நந்தியோ, தவறுதலாக, தினமும் உணவு உண்டு, மாதமொருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும் சிவபெருமான் சொன்னார் என அனைவரிடமும் நந்தி சொல்லிவிட்டார். இதனால் கோபங்கொண்ட சிவபெருமான் நந்திக்கு சாபமிட்டார். அதனை என்றுமே பூமியில் வாழுமாறு கூறினார். அதிகமான உணவை தயாரிக்க மனிதர்களுக்கு உதவியாக நிலத்தை உழவேண்டுமென சாபமிட்டார். அதனால்தான் ஏர் உழ, நீர் இறைக்க, நெல் அடிக்க, வண்டி இழுக்க என மாட்டிற்கும், உழவுக்கும் தொடர்புண்டானதாம்.
அடுத்தகதை தேவலோகத்துக்கே அரசனானதால் மிகவும் கர்வத்துடன் இருந்துவந்த இந்திரனுக்கு பாடம் புகட்ட எண்ணிய கிருஷ்ணர், இனி இந்திரனை வணங்கவேண்டாமென கூறினார்.கிருஷ்ணர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்ட மக்கள் இந்திரனை வணங்காமல் புறக்கணித்தனர். இதனால் கோபங்கொண்ட இந்திரன், புயல் மழையை உண்டாக்க மேகங்களை பூமிக்கு அனுப்பினார். மழையும் 3 நாட்களுக்கு தொடர்ந்தது. கிருஷணரோ மனித இனத்தை பாதுகாக்க கோவர்த்தன மலையை கையில் தூக்கி சுமந்து கொண்டார். பின், தன் தவறையும், கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்த இந்திரன். கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டான். கிருஷணரும் இந்திரனை மன்னித்து அவனுக்கு மக்கள் வருடமொரு விழா எடுப்பதாக வாக்களித்தார். அதுவே பொங்கல் பண்டிகையின் முன்னோடி.
ஆடி முதல் மார்கழி மாதம் வரை நீண்ட இரவும், தை முதல் ஆனிவரை நீண்ட பகலும் இருக்கும். இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கும் இத்தினத்தை வாழ்வில் வெளிச்சம் பிறக்க நீண்ட பகலை வரவேற்கும் விதமாகவும் இப்பண்டிகை கொண்டாடப்படுது. விவசாயத்துக்கு உதவும் ஏர் கலப்பை மற்றும் நெல் அறுக்கும் அரிவாள்களை வைத்து சூரியனையும், பூமியையும் விவசாயிகள் வணங்குவர்.
இந்த உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. இந்த உடலும் பஞ்சபூதங்களால் ஆனது. நாம் உண்ணும் ஒவ்வொரு தானியமும் பஞ்சபூதங்களால் ஆனதே. இப்படி எல்லாமே பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனதே இவ்வுலகம். அதை உணர்த்தவே பஞ்சபூதங்களான காற்று, ஆகாயம், நீர், நிலம், நெருப்பின் கலவையால் உருவான மண்பானையில் பொங்கல் வைக்கப்படுது. பொங்கல் பொங்கி வரும்போது வடக்குதிசையில் பொங்கினால் பணவரவும், தெற்கு திசையில் பொங்கினால் செலவும், கிழக்கில் பொங்கினால் வீட்டில் சுபநிகழ்ச்சியும், மேற்கில் பொங்கினால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் தங்குமென்பது நம்பிக்கை.
பொங்குதல்ன்னா மிகுதல், அதிகமாதல், பெருகுதல், மிஞ்சுதல், நெருங்குதல்ன்னு அர்த்தம். வீடுகளில் இந்த மாதத்தில் தானியங்கள். காயகறிகள் நிரம்பி இருக்கும். மிதமிஞ்சியதை உறவுக்காரங்க, நட்புகளுக்கு கொடுப்பாங்க. அவங்க வீட்டிலும் பொருட்கள் நிரம்பி இருக்கும். விளைப்பொருட்களைக்கொண்டு பண்டிகை அன்னிக்கு பால் பொங்கி, அரிசி பொங்கி அதனால் மகிழ்ச்சி பொங்கும். அதனால்தான் இப்பண்டிகைக்கு பொங்கல்ன்னு பேர் உண்டானது.
அருமையான பகிர்வு.
ReplyDeleteஇனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!
பொங்கல் வாழ்த்துக்கும், வருகைக்கும், கருத்துக்கும் நன்றிம்மா
Deleteஅருமை.....
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
வாழ்த்துகளுக்கு நன்றிண்ணே
Deleteசிறப்பான தகவல்கள். பழங்கால பாவை நோன்பு பற்றிய தகவல்கள் புதுசு.
ReplyDeleteபொங்கல் பானை வடிவில் வைக்கபப்ட்டிருக்கும் பொங்கலில் கறிவேப்பிலை கீழேயும் அந்த சிகப்பு நிறம் மேலேயும் இருந்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனாலும் என்ன ஒரு கற்பனை!
ReplyDeleteஇந்திரன் பற்றிய புராணக்கதை : சாண்டில்யன் கதைகளில் இந்திரவிழா பற்றி வரும். அது இதுதானோ?
ReplyDelete//இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம், மியான்மர், லாவோஸ் போன்ற நாடுகளிலும் வெவ்வேறு பேர்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுது.//
ReplyDeleteஇலங்கையில் தொன்று தொட்டு இதற்குப் பெயர் "தைப்பொங்கல்" தான். தமிழர்களில் இந்துக்கள் மட்டும் கொண்டாடுவார்கள்.
//இலங்கையில் தமிழர் திருநாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுறாங்க.//
இல்லை, இங்கே எப்போதும் அப்படி யாரும் கொண்டாடியதில்லை. இங்குள்ள தமிழ் இந்துக்கள் தமது புத்தாண்டை சித்திரை முதலாம் திகதி சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவார்கள். சிங்களவர்களுக்கும் அன்று தான் புத்தாண்டு.
//சிங்கப்பூர், மலேசியாவிலெல்லாம் அரசு விடுமுறையே உண்டு.//
இலங்கையிலும் தைபொங்கலன்று அரசு மற்றும் வர்த்தக விடுமுறை நாள்.