Friday, February 07, 2020

ஸ்ரீ வேதானந்த சுவாமிகள் வசந்தநகர்-பாண்டிச்சேரி சித்தர் சமாதிகள்.

லாங்க்... லாங்க்... லாங்க.. அகோ.. சித்தானந்தர் ஜீவ சமாதிக்கு சென்று தரிசித்து அவருடைய அருளாசிகளை பெற்றுவந்ததை பதிவா போட்டிருந்தேன்.  அதன் தொடர்ச்சிதான் இந்த பதிவு...

சித்தானந்தரை தரிசித்து வந்தபின், சரி எங்கேயாவது சாப்பிடலாம் என்று நினைத்தபோது எங்களுடன் வந்த வழிகாட்டி அண்ணா சொன்னார் பக்கத்துலதான் ஒரு சித்தர் சமாதி இருக்கு நடைசாத்துறதுக்கு முன்னாடியே போய் தரிசித்து வந்துவிடலாம் என்றார். சித்தருடைய ஜீவசமாதியை காணும் ஆவலில் பசி மறந்ததுன்னு சொன்னா நம்பனும். கூடவந்தவங்கலாம் சமாதிக்கு போகனும்ன்னு முடிவெடுத்ததால் நானும் அந்த முடிவுக்கு திணிக்கப்பட்டேன்.  அவரை தரிசிக்கும் ஆவலில்!! முத்தியால்பேட்டையில் உள்ள வசந்த்நகரில் இருக்கும் திருவள்ளுவர் சாலையை நோக்கி சென்றோம். அங்க ஒரு வீதியில் நிறைய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது இந்த இடம்தான் வேதநாதரின் ஜீவ சமாதி கோவில். அங்க போனதும் நம்மை வரவேற்பது     ஸ்ரீலஸ்ரீ குரு வேலாயுத ஈஸ்வர் ஆலயம் என்ற அறிவுப்பு பலகை. உடனே பயபக்தியோடு அவருடைய ஜீவசமாதியை தரிசிக்கும் ஆவலில் கோவிலுக்கு சென்றோம்.அங்கே மதியம் வேளை என்பதால் குறைவான அளவே ஆட்கள் இருந்தனர்.
வேதாந்த சித்தரின் ஜீவ சமாதி கோவிலுக்குள் நுழைந்ததுமே ஒரு அமைதியை நம்மால் உணரமுடிந்தது. உள்புறம் அத்தனை சித்தர்களின் படங்களையும் வரைந்தவர்கள்வெளிப்புறம் வெறும் தூய வெள்ளை நிற சுண்ணாம்பை மட்டும் அடித்து வைத்துள்ளனர்.சரி எப்படியோ மேலும் ஒரு சித்தரை தரிசித்த புண்ணியத்தில் அந்த சித்தரை பற்றி எவரிடம் கேட்கலாம் என்றாலும்,அவரைப்பற்றிய சரியான குறிப்புகள் யாருக்கும் தெரியவில்லை. இந்த வேதாந்த சுவாமிகள் 1892 -ம் ஆண்டு தோன்றியவர். இவரின் உண்மை பெயர் தாண்டவராயன் என்பன மட்டுமே பொதுத்தகவலாக இருந்தது. சரி எப்படியாவது இவரைப்பற்றிய தகவல்கள் கிடைக்கவேண்டும் என வேண்டிக்கொண்டே சித்தரை தரிசித்துக்கொண்டிருந்தேன்.அப்ப, ஒரு வயதான அம்மா அங்க  நெய்தீபம் ஏற்றி கொண்டிருந்தார். சரி, அவரிடம் சென்று விவரங்கள் கேட்கலாம் என்று அவர் அருகே பவ்யமாக!! நின்றுகொண்டேன்.
விளக்குலாம் ஏத்திட்டு அந்தம்மா பொமையாக ஒரு இடத்தில உட்கார்ந்து வேதானந்த சுவாமிகளை பற்றி சொல்ல ஆரம்பித்தார். வேதானந்த சுவாமிகள் 1892 - ம் ஆண்டு திருமருகல் என்னும் ஊரில் பிறந்தாராம். இவரது இயற்பெயர் தாண்டவராயன். தனது 12 -ம் வயதில் பரம்பொருளின்பால் ஈர்க்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறி தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கு கால்நடையாகவே நடந்து சென்றார். அப்படி ஒவ்வொரு தலங்களுக்கு சென்று தரிசித்துவரும் வேளையில் ஒருமுறை விராலிமலைக்கு சென்றபோது இராசகிரி என்னும் பெரியவர் ஒருவரை சந்திக்கும் பாக்கியத்தை பெற்றார். அவரிடம் சீடராக சேர்ந்து திருவாசகம் ,தேவாரம், பட்டினத்தார் பாடல்கள்பகவத்கீதைதாயுமானவர் பாடல்கள் போன்ற பலவற்றையும் கற்றார். எல்லாம் தெளிவுற கற்று முடிந்தவுடன் தன் தீர்த்த யாத்திரையை தொடந்தார்.
அப்பொழுது சிதம்பரம் மௌனசாமிகளை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் நிறைய ஆன்மீக பாடங்களை கற்றுக்கொண்டார். சிதம்பரம் மௌன சுவாமிகள் இவரது திறமையை கண்டு வியந்து பாராட்டி வேலாயுதம் என்ற பட்டத்தை சூட்டினாராம். பின்னர் திருவாடுதுறை வெள்ளியம்பல தம்பிரானிடம் பிரவுலிங்கலீலை, சிவஞானபோதம் முதலிய சித்தாந்த பாடங்களை  தெளிவுற பயின்றார். அதன்பிறகும் தலயாத்திரையை தொடர்ந்துகொன்டு இருந்தார். அப்பொழுது சாக்கோட்டை ஸ்ரீலஸ்ரீவீரஞான தேசிகரிடம் பல ஞான நூல்களை கற்றுக்கொண்டார். மேலும் தனது திருத்தல யாத்திரையை தொடர்ந்தார். தாமிரபரணி ஆற்றங்கரையில் விவேகானந்தரை சந்திக்கும் பாக்கியத்தை பெற்றார். அரவிந்தருக்கு அரூபமாக உபதேசம் செய்த எல்லாம் உணர்ந்தவரான விவேகானந்தர் வேதாந்த சுவாமிகளை அவர் செய்யவேண்டிய சில கடமைகளை உணர்த்தினார். விவேகானந்தரின் சந்திப்பு வேதாந்த சுவாமிகளை இல்லற வாழ்க்கைக்கு திருப்பியது.
திரும்பவும் ஊருக்கு வந்த தன் முறைப்பெண்ணான தன்னுடைய அக்கா மகளையே திருமணம் செய்துகொண்டார். இறைவனையுடைய பாதங்களை அடைய அருள்மட்டும் போதும். ஆனால் இல்லற வாழ்க்கைக்கு பொருள் வேண்டாமா?! அப்பொழுதான் பிரஞ்சுகாரர்கள் ஆண்ட பாண்டிச்சேரிக்கு வியாபாரம் செய்து பொருளீட்ட புதுவைக்கு வந்தார். என்ன அற்புதம் எல்லா சித்தர்களையும் ஒருசேர சங்கமிக்கவைக்கும் இடம் புனிதமான புதுஸ்சேரியாகத்தான் இருந்திருக்கிறது.
அவர் புதுவை நேரு வீதியில் கைலி(லுங்கி) கடை ஆரம்பித்தார். இவரது கடை சாமியார் கடை என்றே அழைக்கப்பட்டது. இல்லறவாழ்கையில் அவருக்கு இரண்டு ஆண்குழந்தைகளும்,ஒரு பெண்குழந்தையும் பிறந்தன. சிலகாலம் கழித்து இவரது துணைவியார் இயற்கை எய்தினார்.அவரது மனைவியரின் மறைவிற்கு பிறகு சுவாமிகள் முழுநேர ஆன்மீக வாழ்வில் ஈடுபடலானார். துறவறம் பூண்டு மக்களுக்கு வேதபாடங்களை சொல்லிக்கொடுத்தார். வேதங்களை பற்றி சொற்பழிவாற்றினார். மக்கள் இவரது பாடங்களை படிக்கவும் இவரது சொற்பொழிவை கேட்கவும்  ஆவலாக கூடினர்.
இதனால் மக்கள் இவரை வேதாந்த சுவாமிகள் என்றும்வேதாநந்த சுவாமிகள் என்றும் அழைக்க ஆரம்பித்தனர். இந்த காலகட்டத்தில் இவருக்கு பல சீடர்கள் இருந்தனர். அவர்கள் உதவியுடன் மேலும் பல வேதபாட சொற்பொழிவுகளை பல இடங்களில் நடத்தினார். இப்படியே நாட்கள் பல சென்றன,வருடங்களும் ஓடியது. இறைவனின் விருப்பம் இவர் புதுவையில் ஜீவன் முக்தியடைய வேண்டும் என்பதே..
இந்த சமயத்தில்தான், தான் பிறந்த ஊரான திருமருகலில் இருக்கும் சிவபரம்பொருளின் கோவிலில் கும்பாபிஷேகம் என்று கேள்விப்பட்டார். திருமருகல் இறைவனை காண ஆசைப்பட்டார். அப்பொழுதே இறைவன் அவரை தன்னுள் அழைத்துக்கொள்ளும் எண்ணத்தை உள்ளத்துள் உணர்த்தினார். ஆனாலும் அவருக்கு திருமருகல் சிவனை காணும் ஆவல் குறையவில்லை. உடனே பாண்டிச்சேரியில் இருந்து இரயில் ஏறிவிட்டார். இறைவனின் விருப்பத்தை மீறி கும்பாபிஷேக காட்சியை காணும் ஆவலில் மாயவரம் வரை இரயிலில் வந்துவிட்டார் .அப்பொழுதே சுவாமிகளின் உடல்நிலை மோசமடைந்ததது.
இறைவனின் கட்டளையை அலட்சியப்படுத்தியத்தின் விளைவே இது என உணர்ந்தார். வேதனந்த சுவாமிகள் உடனே புதுவைக்கு திரும்பினார்பின்னர் புதுவைக்கு வந்ததும் உடல் தன்னிலை மறந்து சுவாமிகள் 17 -09 - 1962 ம் வருடம் பகல் 3 :௦௦ மணியளவில் பூதவுடலை துறந்து இறைவனுடன் ஐக்கியமானார் என்று அந்த மூதாட்டி வேதானந்தரின் வாழ்க்கை குறிப்பை சொல்லி முடித்தார்.சித்தரின் பெருமைகளை கேட்டறிந்து கோவிலை சுற்றி வலம்வர ஆரம்பித்தேன்.
அப்பொழுது குருதண்டபாணி சுவாமிகள் என்று ஒரு ஜீவசமாதி இருந்ததுசரி அதைப்பற்றி கேட்கலாம் என்று அந்த வயதான அம்மா அங்கிருந்து சென்றுவிட்டார். சரி அடுத்தமுறை வரும்பழுது கட்டாயம் குறித்துவைத்து பதிவில் எழுதிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே அங்கிருந்த சில புகைப்படங்களை பார்த்துக்கொண்டே வந்தேன். அதிலும் இந்த தண்டபாணி சுவாமிகள் போட்டோ இருந்தது. கூடவே ஸ்ரீசாது கங்காதரன் சுவாமிகள் என்றும் ஒரு போட்டோ இருந்தது இவர்களை பற்றிய குறிப்புகளை தெரிந்துகொள்ள முடியவில்லை.சரி, குருஅருளும் திருவருளும் கூடிவந்தால் அடுத்தமுறை வரும்போது தெரிந்துகொள்ளலாம் என்று ஜீவ சமாதியை வலம்வந்தேன்.
சுவாமிகள் வேத பாடங்கள் உபதேசம் மற்றும் சொற்பொழிவு நடத்திய செட்டி தெருவில் உள்ள கொசியதே புரோகரசீத் அருகில் உள்ள ஒரு வீட்டில்தான் அந்த இடம் இப்பொழுது அரவிந்தர் வீதியில் கல்விக் கூடமாக இயங்குகிறது என்பது மட்டும் அங்கிருந்த ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன். அரவிந்தர் சமாதிக்கு முதலிலியே சென்றுவிட்டதால் கவனிக்கவில்லை.  சரி அடுத்தமுறை வரும் போது அங்கும் சென்று குரு அருளையும் பெற்றுவிடவேண்டும் என்று வேதாந்த சுவாமிகள் ஜீவ சமாதியில் இருந்து கிளம்பினோம்.
மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து உங்களை சந்திக்கிறேன்.
நன்றிடன் 
ராஜி 

5 comments:

  1. படங்களும் பகிர்வும் அருமை

    ReplyDelete
  2. நல்லதொரு பயணம்... நல்லதொரு பகிர்வு.... நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை வலைத்தளத்தில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.

    எமது வலைத்தளத்தில் - https://newsigaram.blogspot.com/2020/02/any-do-reminder-in-whatsapp.html

    ReplyDelete
  3. தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. வேதாநந்த சித்தர் பற்றி சிறப்பான பகிர்வு.

    ReplyDelete