கடந்த இரண்டு பதிவுகளில்(பாகம் 1), (பாகம் 2) ராம, லட்சுமணர்களை மயில்ராவணன், அனுமனின் கட்டுகாவலை மீறி கடத்தி சென்றதையும், அவர்களை மீட்க பல்வேறு தடைகளை கடந்து, அனுமன், காளி கோவிலுக்குள் நுழைந்தது வரை பார்த்தோம். இனி, அனுமனுக்கு, மயில்ராவணின் தங்கை தூரதண்டி மகனான நீலமேகன், காளிக்கு முன்னால் வைக்கப்பட்டு உள்ள ஒரு பெட்டியில் இராம லட்சுமணர்களை பூட்டி வைத்துள்ள செய்தியைக் கூறி இருந்தான். அதனால் அனுமனுக்கு இராம லட்சுமணர்களை கண்டுப்பிடிப்பதில் எந்த சிரமமும் இல்லை. உடனே, அந்த பெட்டியை சென்றடைந்து அதை திறந்தார். திறந்த உடனே, அனுமன் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வடிந்தது. சூத்திரதாரியான நாராயணின் அவதாரமான இராமன் இங்கே மயில்ராவணனின், மாயசூத்திரம் மற்றும் மந்திரக் கட்டினால் ஆடாமல், அசையாமல் மயங்கி கிடந்தார். அவர்கள் இருவரும் கண்விழிக்க என எல்லா தெய்வங்களையும் அழைத்து துதி பாடினார் அனுமன். உடனே இராமபிரான் மெதுவாக கண் விழித்தார்.
மெதுவாக கண்விழித்த இராமபிரான், அனுமனை பார்த்து அனுமனே! நாம் எங்கே இருக்கிறோம்?! என உறக்கத்திலிருந்து எழ முயற்சித்துக்கொண்டே கேட்டார். ஹே! ராமச்சந்திர மூர்த்தியே! என்னை ஏமாற்றி, தங்களையும், தங்கள் தம்பியையும் மங்க வைத்து மாயாவி மயில்ராவணன் கடத்திக் கொண்டு இங்கே கொண்டு வந்து வைத்து மாயக்கட்டு போட்டுவிட்டான். அவனிடம் இருந்து மீட்கவே நான் இங்கு வந்துள்ளேன். அவனை கொன்றால்தான் இந்த மாயக்கட்டு அகலும். அதுவரை, இங்கே பத்திரமாக இருங்கள் என கண்ணீர்மல்க கூறி காளியை வணங்கி விட்டு அந்த பெட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு அங்கிருந்து ”எண்பது” கோட்டை தாண்டி இருந்த 'அங்கனமிருக்கா' எனும் மலையில் இருந்த குகையில் கொண்டு பத்திரமாக வைத்து விட்டு வந்தார். அந்த மலையும் பாதாள லோகத்தில்தான் இருந்தது. மயில்ராவணனை அழிக்காதவரை பாதாளத்தில் இருந்து இராம லட்சுமணர்களை அங்கிருந்து தாமரத் தண்டின் வழியே எடுத்துச் செல்ல முடியாது. அதனால்தான் அவர்களை பாதாளலோகத்திலேயே பூமாதேவியின் பொறுப்பில் மறைத்து வைத்தார் அனுமன். உடனே பூமாதேவியும், பூமியை பிளந்து இராம லட்சுமணர் இருந்த பெட்டியினை தன்னுள் பாதுகாப்பாக வைத்துக் கொண்டாள்.
மறுபக்கம் அனுமனிடம் இருந்து தப்பி ஓடிச்சென்ற கடகன், மயில்ராவணனிடம் ஓடி சென்றான். அங்கே, அரக்கர்கள் ஆயுதங்களை வைத்துக்கொண்டு உறங்குவதைக் கண்ட கடகன் அனைவரையும் சப்தம் போட்டு எழுப்பினான். உடனே கடகன், மயில்ராவணனின் அறைக்கதவைத் தட்டி அவனிடம் நடந்தனைத்தையும் விலாவாரியாகக் கூறினான். உடனே, காளிகோவிலுக்கு விரைந்து சென்றான் மயில்ராவணன். அங்கே, பலிக்காக வைத்திருந்த பெட்டியை காணாததால் கோபத்தில் குதித்தான் மயில்ராவணன். இங்கே அந்த வானரம் வரதுக்கு காரணம் தூரதண்டியாகத்தான் இருக்கும். அவள்தானே தண்ணீர் எடுக்க வெளியில் சென்றாள். அவள்தான் அந்த வானரத்தை இங்கே அழைத்து வந்து இருப்பாள் எனக்கூறி..., இப்பொழுதே அவளை வெட்டி கொன்று விட்டுவா! என கடகனுக்கு ஆணையிட்டான் மயில்ராவணன். உடனே கடகனும் ஒளிந்து கொண்டு எங்காவது அனுமனின் கண்ணில் பட்டு விட்டால் தன்னை அடித்து துவைத்துவிடுவார் என பயந்து தனக்கு துணைக்கு ஆட்களை அழைத்து கொண்டு ,தூரதண்டியை பார்க்கப் போனான்.
அங்கே அனுமனுடன் தூரதண்டியும்
நீலமேகனுடன் இருப்பதாய் கண்ட கடகன் வந்த வேகத்திலேயே ஓடிப் போய் மயில்ராவணனிடம்
விஷயத்தை சொன்னான். அதைக்கேட்ட மயில்ராவணன், தன் சேனையின்
பல்லாயிரம்பேரை உடனே அங்கு அனுப்பி அந்த வானரத்தைக் கொன்று விட்டு வாருங்கள் என
கட்டளை இட்டான். அவர்களும் அனுமனை கொல்ல
கத்தி, வாள், கபடா, ஈட்டி, கதை என அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு செல்ல சற்று
நேரத்திலேயே அவர்களும் போன வேகத்திலேயே திரும்பி ஓடி வந்தார்கள். அதில் அனுமனை
கொல்ல பல்லாயிரம் பேர் சென்ற பட்டாளத்தில்
பத்து பேர் மட்டுமே உயிருடன் திரும்பி வந்தார்கள். உடனே மயில்ராவணன், கதாசிங்கன் எனும் அரக்கன் தலைமையில் பெரும் சேனையை
அனுப்பி வைத்தான். அவர்கள் அனுமன் மேல்
பாணங்களை மழையாக பொழிய அதையெல்லாம் முறியடித்துக் கொண்டு கதாசிங்கனையும்
கொன்றார் அனுமன். அவனை அடுத்து வித்யாசிம்மன் களத்துக்கு வர, அவனும் காலும் கையும் வெட்டப்பட்டு அழிந்தான்.
அடுக்கடுக்காய் வந்து கொண்டிருந்த அசுரசேனைகளை எல்லாம் துரத்தி சென்று அனுமன் அழித்தார். அதில், அனுமனை எதிர்கொண்ட மயில்ராவனணனின் முக்கியமான படைத்தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். கடகரோமான் என்பவன் அனுமனின் தாக்குதலில் ரத்தம் கக்கி இறந்தான். அவனை தொடர்ந்து காலதேஷன் என்பவனும் கொல்லபட்டான். அவர்கள் அனைவரும் மூர்க்கமான அரக்கர்கள். மயில்ராவணனின் படையில் முக்கிய தளபதிகள். அடுத்தடுத்து முக்கிய தளபதிகள் உக்ரசேனன், வக்ரசேனன், தீரசிம்மானவன், வெம்புலியான், சம்புலியான் மற்றும் அநேக லட்சம் அரக்கர்களைக் கொன்று குவித்தார். இதனைக்கண்ட மயில்ராவணன் அனுமனை கொல்ல தானே நேரில் சென்றான்.
மயில்ராவணனை வெல்வது அவ்வளவு எளிதல்ல என புரிந்துக்கொண்ட அனுமன் உடனே தூரதண்டியிடமே ஆலோசனை கேட்டார். மயில்ராவணனின் உயிர்நிலை இங்கே இருந்து பலகாத தூரத்தில் இருக்கும் ஒரு மலையில் ஒரு வெள்ளிமண்டபம் இருக்கும். அந்த மலையில்தான் அவன் உயிர்நிலை இருக்கிறது என கூறினாள். இதுபோதும் எனக் கூறி தூரதண்டியிடம் விடைபெற்று யுத்தகளத்திற்கு சென்றார் அனுமன். அங்கு மயில்ராவணன் அனுமனை தேடிக்கொண்டு இருந்தான். அங்கு, அனுமனை கண்டதும், மயில்ராவணன் ஹே! வானரமே! என் மாயத்தைப் பார்த்து பயந்து ஓடி விட்டாயா?! இதோ உன்னை யமலோகத்திற்கு அனுப்புகிறேன் பார் என அனுமன் மேல் பாய்ந்தான்.
அவன் உயிர்நிலை எங்குள்ளது என்பதை அறிந்து கொண்டு விட்ட அனுமனோ முன்னைவிட அதிக உற்சாகத்தோடு யுத்தம் புரிந்தார். யுத்தம் செய்துக்கொண்டே...., மெல்ல மெல்ல மயில் ராவணன் உயிர் நிலை இருந்த மலை அருகில் வரை ஓடி ஓடி சென்று யுத்தம் செய்து அவனை அதன் அருகில் கொண்டு வந்துவிட்டார் அனுமன். மந்திர மற்றும் மாயாஜால யுத்தங்களை நடத்தி, அனுமனை துரத்தி துரத்தி , கொண்டிருப்பதிலேயே கவனமாக இருந்ததால் அவன் உயிர் நிலை இருந்த மலையை மறந்தே போய்விட்டான். அனுமனின் மன நிலையை அறியாத மயில்ராவணன் கடுமையாக சண்டைப்போட்டுக் கொண்டே இருந்தான். அனுமனும் .சண்டைபோட்டு கொண்டே ஓடி, ஓடி அந்த மலைப்பக்கம் சென்றார். ஆனால் நிஜமாகவே அனுமன் உள்ளுக்குள் மயில்ராவணனின் மாயஜால விதைகளை பார்த்து திணறித்தான் போய்விட்டார்.
கடைசி வாய்ப்பாக அனுமன், மயில்ராணவனிடம், பேசிப்பார்த்தார். பிரம்மாவிடம் இருந்து வரமும், இடைவிடாது, காளிபூஜையும் செய்வதுவந்ததால், நிறைய புண்ணியமும் சேர்த்து வைத்திருந்தான். ஆனால், அவன் எதையும் கேட்பதாக இல்லை. உடனே கோபங்கொண்ட அனுமன், மூடனே! நீதி நெறி இவற்றை அறிந்துள்ளவன் என மார் தட்டிக் கொள்ளும் நீ கோழைப் போல மாயாஜாலத்தைக் காட்டி போரிடுவது உனக்கு அழகா?! நீ வீரனாக இருந்தால், தைரியசாலியாக இருந்தால், பலசாலி என நினைத்தால், வா நேருக்கு நேர் வந்து மோது என சவால் விட்டார் அனுமன். இல்லையெனில், உன்மீது நின்று உன் உயிர் நிலைகளை கொல்வேன் என எச்சரிக்கவும், மயில்ராவணன் சிறிது பிவாங்கினான்.
நமது உயிர் ரகசியம் யாருக்கும் தெரியாது என்று அல்லவா நினைத்தோம். இந்த வானரத்திற்கு எப்படி தெரிந்தது?! என சிந்திக்கலானான் மயில்ராவணன். இனி தாமதித்தால் இந்த வானரம் நம்மைக் கொன்று விடும் என எண்ணிய மயில்ராவணன், அப்போதுதான் கவனித்தான். 'அடடா! யுத்தம் செய்துக்கொண்டே இருந்ததில் கவனிக்காமல், நம் உயிர்நிலை மறைந்துள்ள இந்த மலைக்கருகே அல்லவா இந்த வானரம் நம்மை அழைத்து வந்துவிட்டது. உடனே, இங்கிருந்து அரண்மனை பகுதிக்குள் செல்லவேண்டும் என்ன நினைத்து கொண்டிருந்தபோதே, அதனை உணர்ந்த அனுமன் ஆகாயத்துக்குச் பறந்து சென்று அங்கிருந்து மயில்ராவணன் எதிர்பாராத நேரத்திலே அவர் மீது குதித்து அவனை பூமியோடு அழுத்தினார். உடனே மயில்ராவணன் மாயமாகி மறைந்து விட்டான்.
உடனே, தன்னிடம் இருக்கும் கடைசி அஸ்த்திரமான வீராண யாகம் செய்து அதில் வெளி வரும் பூதத்தையும் ஏவினால் அது அனுமனை கொன்று விட்டு இராம லட்சுமணர்கள் எங்கிருந்தாலும் அவர்களும் அப்படியே மாண்டு போவார்கள் என எண்ணி வீராண யாகம் செய்ய வேகமாக சென்றான் அதி மாயாவி மயில்ராவணன். இதென்னடா! இந்த அசுரனை அழிக்கவே முடியவில்லையே! எங்கே சென்று மாயமாகி விட்டான் என எண்ணி கொண்டு தேட துவங்கினார் அனுமன். தூரத்தில் தெரிந்த ஒரு காட்டில் ,ஒரு பெரிய ஆலமரத்தினடியில் பத்து பதினைந்து புரோகிதர் போன்ற உருவில் இருந்த ராட்சச பிராம்மணர்கள் கையில் பூக்கூடை, எண்ணை, நெய், சமித்துக்கள், சின்ன சின்ன மரக்கட்டைகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு அந்த மரத்தில் இருந்த பொந்துக்குள் அவசரம் அவசரமாக நுழைவதைக் கண்ட அனுமன், அங்கு ஏதோ நடக்கவிருக்கிறது என யூகித்துக்கொன்டார். உடனே தன்னை சிறு பிராணியாக்கிக் கொண்டு தானும் ஓடோடிச் சென்று அந்த பொந்துக்குள் நுழைந்து விட்டார்.
அங்கே சில யாக காரியங்கள் நடந்து கொண்டிருந்ததைக் கண்டார். முக்கோண வடியில் யாககுண்டம். யாககுண்டத்தின் அனைத்து மூலையிலும் எருமை மாட்டின் கபாலம், யாக குண்டத்தில் ஊற்றும் நெய் கூட கபாலத்தின் வழியே ஊற்றி நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. அங்கே யாக குண்டத்தின் எதிரிலே இடுப்பிலே ஈர வஸ்த்திரத்துடன் மயில்ராவணன். யாக குண்டத்திலே நவதானியங்களையும், நெய்யையும் ஊற்றிக் கொண்டு, எதோ மந்திர உச்சாடனயையும் செய்து கொண்டிருந்தான். தன் கையை வாளினால் வெட்டிக் கொண்டு அதில் இருந்து வழிந்த ரத்தத்தை யாக குண்டத்தில் ஊற்றினான். உடனே அந்த அக்னி குண்டத்தில் இருந்து பெரிய பூதம் ஒன்று வெளி வந்தது. அந்த பூதத்திற்கு, மயில்ராவணன், அனுமனை கொல்லுமாறு கட்டளை இட்டான், பூதமும் கொக்கரித்து அனுமனை தேடி வெளியே ஓடியது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த அனுமன். அட பூதமே! என்னையா கொல்லுபோகிறாய்?! அதற்குமுன் நான் உன்னை கொல்கிறேன் என்று, வெளியில் ஓடி வந்து அந்த பூததுடன் பயங்கரமாக சண்டை இட்டார். பூதமும் சளைக்காமல் அனுமனுடன் சண்டை இட்டது . அதன் வாயில் இருந்து வந்த நெருப்பு ஜூவலையை தாங்கமுடியாத அனுமன், சோர்ந்துபோய், அக்னிதேவனை வேண்டினான். அக்னிதேவனும்,அனுமனின் உடலில் உள்ள வெம்மையை குறைத்து சாந்தப்படுதினான். அந்த பூதத்தை, கொல்ல வழி தெரியாததால், அனுமன் மீண்டும் தூரதண்டியிடம் சென்று ஆலோசனை கேட்ட்க அவளை தேடி ஓடினார்.
அவளுக்கும் அதுபற்றி தெரியவில்லை எனக்கூறி, தர்மதேவனிடம் ஆலோசனை கேட்குமாறு கூறினாள். உடனே அனுமன், தர்மதேவனிடம் ஆலோசனை கேட்க, அவரோ, 'ராமபக்தனே!, உம்மால் முடியாததில்லை" ஆனால் இந்த பூதமானது மயில்ராவணனால் அக்னியில் இருந்து உருவாக்கப்பட்ட பூதம் என்பதால் அவன் தற்போது செய்து வரும் அக்னி யாகத்தை அழிப்பது மூலமே அந்த பூதத்தையும் அழிக்க முடியும். அந்த யாகம் அழியும்வரை அதை வேறெந்த உபாயத்தாலும் அழிக்க முடியாது. அப்படியொரு வரம் அதுக்குள்ளது. ஆகையால் உடனே நீ சென்று, தங்கக் கோட்டைக்கும், வெள்ளிக் கோட்டைக்கும் இடையிலே உள்ள, அந்த மரப்பொந்தில் நடக்கும் வீரணா யாகத்தை மயில்ராவணன் தொடர்ந்து நடத்தவிடாமல் தடுத்துவிடு. அவன் சொல்லும் அதர்வண வேதமந்திரங்கள் இந்த பூதத்திற்கு மேலும் மேலும் சக்தியை கொடுக்கும். ஆகையால் அவன் யாகத்தை நிறைவு செய்யும் முன்பு அங்கே சென்று அதை தடுத்துவிடு. இந்த பூதமும் அழிந்து போய்விடும் என்று தர்மதேவன் உபாயம் சொன்னார் .
உடனே, அனுமனும் ஆகாயம் மூலமாக கிளம்பி அந்த இடத்தை தேடத் துவங்கினார். ஆனால், மாயவித்தையில் தேர்ந்தவனான மயில்ராவணனோ, இதேப்போல பல்லாயிரம் இடங்கள் ஒரேமாதிரியாக இருக்கும்படி செய்திருந்தான். அனுமனால் அந்த யாகசாலையை கண்டுபிடிக்கமுடியவில்லை. உடனே, வாயுபகவானை அழைத்து உபாயம் கேட்க, அவர் நிஜ யாகசாலையை அனுமனுக்கு காண்பித்தார். அனுமனும் ஒருகணம் கூட தாமதிக்காது அந்த யாகசாலையை உடனே அழித்தார். பூதமும் அழிந்து போயிற்று. ஆனால் மயில்ராவணனோ உடனே அங்கிருந்து மாயமாகி போனான். மீண்டும் மீண்டும் மாயமாகிக் கொண்டே இருப்பவனை எப்படி பிடிப்பது என அனுமன் தினறிக்கொண்டு இருந்தார். ஆனால் மயில்ராவணனோ அனுமன் தன்னைக் கண்டுப்பிடிக்க முடியாதபடி வெகு தூரத்தில் இருந்த மலைப்பகுதியிலே வெள்ளியங்கிரி எனும் மலையை உருவாக்கிக்கொண்டு அதற்குள்ளே பதுங்கிக் கொண்டான். அவனை எங்கு தேடியும் அனுமனால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன செய்வது என அறியாது, தூரதண்டியிடம் ,மறுபடியும் உதவி கேட்டார். அவளும் தன்னால் ஆன ஆலோசனைகள் சொன்னாள். ஆனால் அனுமனுக்கோ அதில் ஏதும் சரிப்படவில்லை. உடனே, அனுமன் தூரதண்டியிடம் ஒரு உபாயம் சொன்னார். அம்மணி! இங்கே, பழசும் புதுசுமான இடம் அனைத்தும் உனக்கு அத்துப்படி என்பதானால நீ அறியாத புது இடம் எதாவது தெரிந்தால் எனக்கு சொல் அந்த மாயாவி மயில்ராவணன் அங்கேதான் இருப்பான் எனக் கூறி தூரதண்டியை துணைக்கழைத்து எல்லா இடமும் தேடினார் . அப்பொழுது மயில்ராவணன் வெள்ளியங்கிரி மலைக்குள்ளே இருந்து கொண்டு இராம லட்சுமணர்களை அழிக்க வேத மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தான்.
தூரத்தில் தெரிந்த வெள்ளியங்கிரி மலையைக் கண்ட தூரதண்டி சந்தேகம் கொண்டு அனுமானிடம் ,சுவாமி, இதுக்கு முன் இந்த மலையை இங்கே பார்த்தது இல்லையே எனக் கூறினாள். அனுமனும் சந்தேகம் கொண்டு அருகில் சென்று பார்க்க அதிலிருந்து வந்துகொண்டிருந்த மந்திர ஒலியைக் கேட்டு அதுக்குள்ளே தான் மயில்ராவணன் ஒளிந்து கொண்டு இருக்கிறான் என எண்ணிக்கொண்டு, வருவது வரட்டும் என எண்ணி தன் சுயரூபத்தை எடுத்து தனது முஷ்டியினால் மலையின் உச்சியில் ஓங்கி ஒரு குத்து விடவும்,,, மலை தவிடு பொடியானது. அதனுள்ளிருந்து வெளிவந்த
மயில்ராவணன் அனுமானைக் கண்டு பயந்து தப்பி ஓடத் துவங்கினான். அவனை துரத்திக்கொண்டு அவன் பின்னால ஓடினார். அனுமன் கடைசி கட்டமாக மயில் ராவணன்னும் மாய உருவங்களை எடுத்து ,சிவபெருமான் தனக்களித்திருந்த மந்திர சக்தி வாய்ந்த தன்னுடைய அஸ்திரங்களை எல்லாம் அனுமனின் மேல் ஏவினான் அனுமானும் சளைக்காமல், தன்னிடம் இருந்த ஆயுதங்களுக்கு தூப தீப ஆராதனைக் காட்டி இன்னொரு சிவாஸ்திரத்தையும், கஜாஸ்திரத்தையும் செலுத்தி மயில்ராவணனின் அனைத்து அஸ்திரங்களையும் தவிடு பொடியாக்கினார். இப்படி, இருவரும் மாறி மாறி பல நாழிகையாக அஸ்திரங்களை ஏவி ண்டை போட்டு கொண்டிருக்ககையில் , இருவரும் களைத்து போனார்கள். அப்போது அனுமனின் காதில் ஒரு அசரீரி கூறியது 'வாயு புத்திரனே! ”இனியும் தாமதிக்காதே அவன் தப்பிக்கும் முன் அவனை கொன்றுவிடு” என ...,
அவ்வளவுதான் அதைக் கேட்ட அனுமனின் இருபுஜங்களும் துடிதுடிக்க, பற்களை நரநரவெனக் கடித்துக் கொண்டு மயில்ராவணன் அமர்ந்திருந்த தேருக்கு அருகில் சென்று அதன் மீது ஏறி அதை அப்படியே கீழே தள்ளி சுக்கு நூறாக பொடிப்பொடியாக்க, தேரில் இருந்த மயில்ராவணன் கீழே விழுந்தான். அதை அவன் சற்றும் எதிர்பாராத நிலையில், தாமதிக்காமல் அவன் மீது தன் காலை வைத்து அவனை பூமியோடு அழுத்தி தன் விஸ்வரூபத்தை எடுத்து அவன் உயிர் நிலைகள் இருந்த மலையின் குகையில் கையை விட்டு ஐந்து வண்டுகளையும் எடுத்து தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு அவற்றை நசுக்கிக் கொல்ல மயில்ராவணனும் உயிர் துறந்தான். தான் இறக்கும் தருவாயில் அவனுக்கு ஞானோதயம் ஏற்பட்டது. அவன் வாயும் தன்னை அறியாமலேயே அனுமனை தோத்திரம் செய்யத் துவங்கிற்று.' ஆஞ்சனேயா! வாயுபுத்ரா!ராமதூதா! கருணாகரா! அறியாமையால் செய்த எம்பிழையை மன்னித்து எம்மைக் காத்தருள் சுவாமி' எனப் பலவாறு அவரை துதித்தான். அடுத்த சில நாழிகையில் தேவலோகத்தில் இருந்து ஒரு புஷ்ப விமானம் ஒன்று அங்கு வந்திறங்க அதிலேறிக் கொண்ட மயில்ராவணனும், அனுமனை வணங்கி தேவலோகத்துக்குச் சென்றான்.
வந்த காரியம் முடிந்ததும் அனுமன் ஓடோடி இராம, லட்சுமணர்களை எவ்விடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தாரோ அங்கே சென்று பூமாதேவியிடம் அவர்களை தமக்கு திருப்பித் தருமாறு கேட்டார். பூமாதேவியும் பூமியைப் பிளந்து தன்னிடம் பத்திரமாக வைத்திருந்த இராம லட்சுமணர்களை அனுமனிடம் ஒப்படைத்தாள். அந்த பெட்டியை பாதாளத்தை விட்டு வெளியில் சென்ற பின்னரே திறக்க வேண்டும், அப்போதுதான் மாயக்கட்டும் விலகும் என அனுமன் அறிந்திருந்ததினால் உடனே அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு அவசரமவசரமாக அதே தாமரைத் தண்டின் வழியே பாதாளத்தை விட்டு வெளியேறிச் சென்றார். சமுத்திரக் கரையை அடைந்ததும் வாயு பகவானின் முன்னிலையில் அந்தப் பெட்டியை அவர் திறந்தவுடன் அதற்குள் இருந்த இராம லட்சுமணர்கள் தூக்கத்தில் இருந்து எழுவது போல எழுந்தார்கள்.
அவர்களைக் கண்ட அனுமனும் ஓடி வந்து அவர்கள் காலில் விழுந்து வணங்கினார். அவர்களை விடுவிக்க பாதாள இலங்கைக்கு அனுமன் சென்றபோது அவருடைய புத்திரன் மச்சவல்லபன் இராம லட்சுமணர்கள் விடுதலை ஆகி செல்லும்போது, அவர்களது ஆசிகளை தமக்கும் தந்து விட்டுச் செல்ல வேண்டும் என விரும்பி இருந்தான். அவனும் அங்கே அவர்கள் தரிசனத்தைப் பெறுவதற்காக காத்திருந்தான். இராம லட்சுமணர்கள் பெட்டியை விட்டு வெளியில் வந்ததும் அவர்கள் கால்களில் விழுந்து வணங்கி ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டு மீண்டும் தன்னுலகத்துக்குச் செல்லக் கிளம்பினான். அவனையும் தம்மோடு வருமாறு அனுமன் அழைக்க மச்சவல்லபன், அதனை மறுத்துவிட்டு 'நான்தான் வாயுபுத்திரனின் பிள்ளையின் பிள்ளை என்பதை யாருக்கும் தெரிவிக்க விரும்பவில்லை. தனக்கு அது பற்றி அனுமன் கூறவில்லையே என்று அவர் மீது சுக்ரீவரும் கோபம் கொள்வார். பரிகாசமும் கேலியும் செய்வார். மேலும் அனுமனின் வியர்வையை விழுங்கி என்னை பெற்றெடுத்தவளை அனுமன் பார்த்தது கூட இல்லை என்பதால் மணம் செய்து கொண்ட பாத்தியதையும் இல்லை. ஆகவே பிரம்மச்சாரியான அனுமனின் புகழுக்கு நான் களங்கம் செய்யமாட்டேன். நான் யார் என்பதை வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஆகவே, நான் உங்கள் அனைவரது பூரண ஆசியுடன் என்னுலகம் சென்று அங்கு ஆனந்தமாக உங்களை துதித்தபடி என்னுடைய பொழுதை கழிப்பேன் என்னை ஆசிர்வதியுங்கள்' என்று கூறிவிட்டு அனுமனின் கால்களில் விழுந்து வணங்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டான் மச்ச வல்லபன்.
இனியும் காலம் தாழ்த்தவேண்டாம் என அனைவரும் .இலங்கைக்கு சென்றனர் இதை ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட இராவணன் கர்ஜித்தான். கோடிக் கோடி லட்சம் படையினரையும், மாயா ஜாலத்தையும் வைத்திருந்த தாயாதி மயில்ராவணனையுமா வதம் செய்துவிட்டார்கள். சரி நானே யுத்தகளத்திற்கு சென்று, அவர்களை வதம் செய்யவேண்டும். அல்லது எனது சந்ததியினர் சென்ற இடத்திற்கு போய் சேரவேண்டும் என சூளுறைத்து கொண்டு எங்கே என் தேர் ஆயுதங்கள்.என கர்ஜித்துக் கொண்டே தேரில் ஏறி இராமனுடன் யுத்தம் செய்யக் கிளம்பிச் சென்றான்.
கடுமையான யுத்தமும் நடந்து முடிய இராவணனும் வதம் ஆயினான் . அடுத்து அவனுக்கு பதிமூன்று நாள் கருமாதியை விபீஷணன் செய்து முடித்தவுடனேயே இராமனும் தனது மனைவி சீதையை மீட்டுக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டும் தம்மை புனிதம் படுத்திக்கொண்டும், அங்கிருந்து அனைவரும் கிளம்பி வனத்துக்குச் சென்றனர்.
அங்கிருந்து பரதனை அழைத்தார்கள். விரைந்து வந்த பரதனும் அவர்களை முறையோடு நாட்டுக்கு அழைத்துச் செல்ல அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அனைவருக்கும் கூறினார்கள். இராமனும் அனுமனைக் கட்டிப் பிடித்து, 'இனி நீ எங்களுடனயேதான் இருக்கவேண்டும் என்று கூற ஆகாயத்தில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். இப்படியாக மயில்ராவணன் கதை முடிவுற்றது .