செவ்வாய், நவம்பர் 17, 2015

மாயாவி மயில்ராவணன் பாகம் 1 - தெரிந்த கதை தெரியாத உண்மை

இராமாயண சம்பவங்கள் பற்றி தொடர்ச்சியாக நமது பதிவுகளில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ராமாயணத்தில் உள்ள முக்கியமான கதாபாத்திரம்  ”மயில்ராவணன்”.  மேலும், ”சதகண்டராவணன்” என்னும் ”விதுர ராவணன்” கதைகள். இவைலாம் பழைய காலத்தில் வாய்மொழி கதைகளாகச் சொல்லப்பட்டு வந்துள்ளன. இதில், ”மயில்ராவணன்” பற்றியக் குறிப்புகள் சில புராணங்களில் மட்டுமே உள்ளது. ஆனால், ”சதகண்ட ராவணனை”  பற்றிய குறிப்புகள் எந்த புராணத்திலும் இல்லை. இந்த, ”சதகண்ட இராவணன்”  கதையில் இராமருக்கு பதிலாக சீதை  ஒரு புஷ்பக விமானத்தில் சென்று போர் புரிந்து ”சதகண்ட ராவணனை”  அழித்ததாக செவிவழி கதைகளில் சொல்லப்படுவதுண்டு .
செவிவழியாக கூறப்பட்டுவரும் இந்தக் கதையை ”நாரத முனிவர்” ”கௌதம ரிஷி”க்கு சொன்னதாக நாட்டுப்புறக் கதையில் கூறப்பட்டு வருகிறது. இவை, பெரும்பாலும் ”பாவைக் கூத்து” எனும் தோல் பொம்மைகளைக் கொண்டு நடத்தப்படும் பொம்மலாட்ட நிகழ்ச்சியாகவும், தெருக்கூத்தாகவும்  தான் நடத்தப்பட்டு வந்துள்ளன. அந்த காலச்சாரம் அழிந்தவுடன் இந்த மயில்ராவணன் கதையும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல ஆள் இல்லாமல் அழிந்துவிட்டது. “மயில் ராவணனின்” கதை முதன் முதலில் 1868 ஆம் ஆண்டில்தான் சிறுகதை நூலாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது என கூறப்படுகிறது.

 இராமர் காட்டுக்கு சென்றதும், இராவணன் சீதையை கடத்தியதும், இராமர், தனது சகோதரன் லட்சுமணனுடன் “கிஷ்கிந்தை” அரசன் வாலியின் தம்பியான ”சுக்ரீவனின்” தலைமையில் எழுபது வெள்ளம் அளவிலான படைகளுடன் சமுத்திரத்தில் பாலம் அமைத்து அதன் வழியாக இலங்கைக்கு சென்று, இராவணனுடன் கடினமான யுத்தம் புரிகிறார். இராவணனுய படையோ 100 வெள்ளம் அளவிலானது. அதை அழிக்கவே இந்த ஆயுள் போதாது என இராம, லட்சுமணர் சொல்வதைப் போல ”பாவை கூத்து”களில் சொல்வார்கள். அவ்வளவு பெரிய சேனையாக இருந்ததாம். இராவணனுடைய  படை அது என்ன 70 வெள்ளம் படை 100 வெள்ளம் படைன்னு சொல்கிறாங்கன்னு பார்த்தால், அது படைகளின் அளவைக் குறிக்கும் சொல்லாகும்.

இது கம்பராமாயணம்/யுத்த காண்டம்/அணி வகுப்புப் படலத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது
3831. 'வெள்ளம் ஏழு
     பத்து உள்ள, மேருவைத்
தள்ளல் ஆன தோள்
     அரியின் தானையான்;
உள்ளம் ஒன்றி எவ்
     உயிரும் வாழுமால், -
வள்ளலே! - அவன்
     வலியின் வன்மையால்.
வெள்ளம் என்றது பேரெண்.

பக்தி :1-யானை , 1- தேர், 3 குதிரை ,5-காலாட்படை கொண்டது-
பக்தி மூன்று கொண்டது - சேனாமுகம்;
சேனாமுகம் மூன்று கொண்டது -  குடமம்;
குடமம் மூன்று கொண்டது  - கணம்;
கணம் மூன்று கொண்டது  - வாகினி;
வாகினி மூன்று கொண்டது -  பிரதனை;
பிரதனை மூன்று கொண்டது  - சமூ;
சமூ மூன்று கொண்டது - அநீகினி;
அநீகினி பத்துக் கொண்டது - அக்குரோணி;
அக்குரோணி எட்டுக் கொண்டது -  ஏகம்;
ஏகம் எட்டுக் கொண்டது  - கோடி;
கோடி எட்டுக் கொண்டது  - சங்கம்;
சங்கம் எட்டுக் கொண்டது -  விந்தம்;
விந்தம் எட்டுக் கொண்டது -  குமுதம்;
குமுதம் எட்டுக் கொண்டது -  பதுமம்;
பதுமம் எட்டுக் கொண்டது -  நாடு;
நாடு எட்டு்க் கொண்டது  -சமுத்திரம்;
சமுத்திரம் எட்டுக் கொண்டது -  வெள்ளம்  என சொல்லப்படும். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்  அபா! மூச்சு வாங்குது. அப்படின்னா, எவ்வளவு படைவீரர்கள் இருந்திருப்பார்கள் என கணக்கிட்டு கொள்ளுங்க.
இரு தரப்பிற்கும் இடையே கடுமையான் யுத்தம் நடக்கிறது. அலையலையாக வந்த இராவணனது படைகள் இராம லட்சுமணன் பாணங்களுக்கு   முன்னே மாண்டு கொண்டே இருந்தனர். அப்பொழுது, ”இராவணன்” தன் மகன் ”இந்திரஜித்” என்னும் ”மேகநாதனி”டம் அனுமனை கொல்லுமாறு கட்டளை இடுகின்றான் அவனும் நான்கு புலிகள் கொண்ட ரத்தத்தில் பிரம்மாவிடம் இருந்து தான் வாங்கி வந்த வலிமைமிக்க ஆயுதங்களுடனும், அனுமனை ”இந்திரஜித்தை” மேற்குபக்க வாயிலில் எதிர்கொள்கிறான்.

 கடுமையான யுத்தம் நடைப்பெறுகிறது.  மாயவிதைகளையும், மறைந்து தாக்கும் மாய அம்புகளையும் கொண்ட ” இந்திரஜித்” அவைகளை  அனுமன் மீது தொடுத்து அனுமனையே தினரடிக்கிறான். இந்தச் சமயத்தில் இராமர் தன்னுடைய படைகளைப் பல பகுதிகளாக பிரிக்கிறார். கோட்டையின் நான்கு வாயில்களை நான்கு பிரிவுகள் கொண்ட படையுடன் தாக்குகிறார். “நிலன்” கிழக்குபக்க வாயிலையும், ”அங்கதான்” தெற்குபக்க  வாயிலையும், இராமர், லட்சுமணன் வடக்குபக்க வாயிலையும் கைப்பற்றி அசுர படைகளை திணறடிக்கும் சமயம் லட்சுமணரால் ”இந்திரஜித்” கொல்லப்படுகிறான்.  (நன்றி :இந்த படம் பிரிட்டிஷ் நூலகத்தில இன்னமும் இருக்கிறது)  
யுத்தத்தில்  ”இந்திரஜித்”, ”நிகும்பன்”, ”அகம்பன்”,  “கும்பகர்ணன்” என இராவணனது அனைத்து சொந்தங்களும், அவனின் சிறந்த வீரர்களும் கொல்லப்படுகிறார்கள். நிலைக்குலைந்த இராவணன் மீதமிருக்கும் தன் மந்திரிசபையை அவசர அவசரமாக கூட்டுகின்றான். துக்கமைடைந்திருந்த இராவணனிடம் அவனது நம்பிக்கைக்குரிய மந்திரி பிரகஸ்தன் என்பவன் இராவணனுக்கு மூன்று யோசனைகளை சொல்கின்றான். ஒன்று நேரடியாக உக்ரமாக யுத்தம் செய்து வெல்ல வேண்டும். இல்லை என்றால் வஞ்சகத்தினால் எதிரியை வெல்ல வேண்டும்.  இரண்டிலும் தோல்வியைப் பெற்றால் மூன்றாவதாக கௌரவமாக சரண் அடைய வேண்டும் என்று ஆலோசனை வழங்குகின்றான். ”மந்திரி நான் சரணடைய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.  வேறு உபாயம் இருந்தால் கூறுங்கள்” என கோபத்தில் சொல்கிறான் இராவணன்.
அதைக் கேட்ட ”பிரகஸ்தன்” கூறுகிறான். இலங்கேஸ்வரா! உங்களுடைய தாயார்வழி ஒன்றுவிட்ட தம்பி பாதாள உலகின் அரசன், அதிமாயாவி, வானம் முதல் பாதாளம் வரை அத்தனை மாயக்கலையையும் கரைத்துக் குடித்தவன் கபட நாடகத்தில் வல்லவன், சூதும்வாதும் நுணுக்கமாக அறிந்தவன் ,அதிபராகிரமசாலியான ”மயில்ராவணனை”  மறந்துவிட்டீர்களா?! என இராவணனின் மந்திரி பிரகஸ்தன் ஆலோசனை கூறினார். அப்படிக் கூறிய உடனேயே இராவணன் சிந்தித்தான். நினைத்ததை முடிக்கும் வல்லமை கொண்டவன் அவனை யாராலும் வெல்லமுடியாது அவ்வளவு மாயசக்திகளையும் வரங்களையும் கொண்டவனாயிற்றே!! இந்த மயில்ராவணன். நான் எப்படி அவனை மறந்தேன்?! இந்த நிலைமையில் நமக்கு உதவ அவனால் மட்டுமே முடியும் என்பதால், உடனே மயில்ராவணனை மனத்தால் நினைத்தான் இராவணன். மாயவியான ”மயில்ராவண”னுக்கு தன் தமையன் அழைப்பது உடனே தெரிந்துவிட்டது. அவன்தான் மாயாவி ஆயிற்றே!! தீர்க்க முடியாத பிரச்னை அல்லது பெரிய ஆபத்து என்றால்தானே இராவணன் என்னை அழைப்பான்! அண்ணனுக்கு ஏதோ பிரச்சனை என்று உணர்ந்துக் கொண்டு உடனே சூறாவளிக் காற்றைப் போல வேகமாக இலங்கேஸ்வரனை காண சென்றான் ”மயில்ராவணன்”.
இலங்கைக்கு வந்தவுடன் ”இராவணனை” மூத்த சகோதரன் என்ற முறையில் அவனை மண்டியிட்டு வணங்கி, என்ன ஆயிற்று அண்ணா? !நான் வரும் வழியெல்லாம் பார்த்தேன். சொர்க்கபுரி போலே இந்திரலோகத்திற்கு இணையான உன் நாடு நகரமெல்லாம், நிர்மூலமாகி இருக்கிறது. அங்கங்கே தீ பிழம்புகள் கொழுந்துவிட்டு எரிகின்றன என கேட்கிறான். அவனை அன்போடு எதிர்கொண்ட இராவணன், தம்பி! அயோத்திய மன்னன் தசரதனின் இரண்டு மகன்கள் இராம,லட்சுமணன் என இரண்டுபேர், தண்டகாரண்யம் என்ற காட்டில் இருந்தபோது, அங்கு சென்ற நம் தங்கை சூர்ப்பணகையை லட்சுமணன் மானபங்கம் செய்து காயப்படுத்தினான் என என்னிடம் முறையிட்டபோது,  நான் கோபங்கொண்டு, அவனுடைய மனைவி சீதையை இலங்கை கொண்டு வந்து சிறையிலிட்டுவிட்டேன்.

ஆனால், சீதையை தேடிக்கொண்டிருந்த இராமன், ஒரு வானரத்தை நம் நாட்டுக்கு அனுப்பி தேடச் சொல்லி இருக்கிறான். அந்தக் குரங்கு நகரெங்கும் தீ வைத்து நாசப்படுத்தி விட்டு சென்றுவிட்டது. அதுப்போனதும், இராமனும் லட்சுமணனும் பெரும் சேனையுடன் வந்து நம் நாட்டிற்கு வந்து போர்புரிந்து நம் சந்ததியினர் அனைவரையும் அழித்து விட்டார்கள். கடல் போன்ற நம் சேனையையும் பாதி அழித்துவிட்டனர். இந்த நிலையில் என்ன செய்வது என திக்கற்று நிற்கும் போதுதான் நம் மந்திரி ”பிரகஸ்தன்” உன்னை நினைவுப்படுத்தினான்.  இராம லட்சுமணர்களுக்கு ஆத்ம பலத்தை விட வேறு ஏதோ பலமும் இருக்கிறது. அது என்னவென்று தெரியவில்லை. அதனால், அவர்களை மாய வித்தைகள் மூலமாகத்தான் அழிக்கமுடியும். மாயாஜால, மந்திரசக்தி வித்தையில் ஜெகஜ்ஜால கில்லாடியான உன்னை வெல்ல யாராலும் முடியாது. நீதான்  இராம லட்சுமணர்களையும், அவர்களுடைய வானர சேனைகளையும் அழித்திட உதவி செய்யவேண்டும் என இராவணன் ”மயில்ராவண”னிடம் கூறினான்.
இதைக் கேட்ட ”மயில்ராவணன்”, அண்ணா! உனக்கு நிகரான வீரன் இந்த உலகிலே இல்லை. உனக்கா இந்த நிலைமை?! எனச் சொல்லிவிட்டு, உனக்காக அவர்களை இப்பொழுதே போய் அழித்துவிட்டு வருகிறேன் என கோபமாக எழுந்து நின்றான். அவனைக் கட்டி அணைத்த இராவணன், தம்பி! நீ நினைப்பதுப் போல அவர்கள் சாமானியர்களாக தெரியவில்லை.  மிக்க பலசாலிகள். அவர்களுக்கு எதோ தெய்வ அனுக்ரகம் உள்ளது. அதனால்தான் நம் சேனைகளையும் வெறும்  வானரங்களைக் கொண்டே நிர்மூலப்படுத்தி விட்டார்கள். அவர்களை தந்திரம் செய்துதான் அழிக்கவேண்டும். அதற்கு, நல்லதொரு வழியை யோசி' என கூறினான். அதைக் கேட்ட ”மயில்ராவணன்”, அண்ணா! கவலை வேண்டாம். அவர்களை மாயம் செய்து, தந்திரம் செய்து பாதாள உலகில் சிவப்பெருமானின் அருளால் எனக்கு கிடைத்த ”உக்கிரகாளி”க்கு அவர்கள் இருவரையும் பலி கொடுப்பேன். இது காளிமீது சத்தியம் என சபதம் செய்தான். பாதாள உலகில் உள்ள ”உக்ரகாளி” சிவனருளால் அவனுக்கு கிடைத்தது. மிகவும் சக்திவாய்ந்த அந்த காளி ”மயில்ராவண”னுக்கு எல்லா சக்திகளையும், வரங்களையும்  அருளியவள். அதனால் இராவணன் சற்று ஆறுதலடைந்தான்.   
மயில்ராவணன்”, உடனே அண்ணா! அவர்களை நிச்சயம் வசியம் செய்து பாதாளத்துக்குக் கொண்டு போய் காளிக்கு பலி கொடுத்துவிட்டு உன்னை வந்து சந்திக்கிறேன் என்று கூறினான். பாதாளத்து காளிக்கு பலி கொடுப்பதற்கு முன் யாரை பலி கொடுக்கவேண்டுமோ அவர்களைப் போன்ற பதுமைகளை வைத்து அவளுக்கு சங்கல்பம் செய்ய வேண்டும். அப்படிசெய்யப்பட்ட பதுமைகளை காளியின் காலடியில் வைத்து அவர்களைக் கொண்டு வர அவள் சக்தி கொடுக்க வேண்டும் என பதுமைகள் மீது ரத்தத்தையும் சொட்டி, சத்தியமும் செய்து கொடுக்க வேண்டும். அதற்கான வேலைகளை தொடங்க வேண்டும் என்பதால் பாதாள உலகில் இருக்கும் தன்னுடைய அரண்மனைக்கு அதிவிரைவாகச்  சென்றான் ”மயில்ராவணன்”.

 இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டாள் விபிஷணனின் மகள் ”திரிசடை” மிகவும் வேதனையும் கவலையும் அடைந்தாள். ஏனெனில், பாதாள காளி படு மூர்கமானவள். அவளை பூஜித்து வணங்கினால்  அணைத்து வெற்றிகளையும் தருவாள். அவ்வளவு சக்தி வாய்ந்தவள்.  இந்த பாதாளகாளி.  அதனால்தான் ”மயில்ராவண”னுக்கு அத்தனை சக்தி, மாயாஜாலங்கள் எல்லாமே அந்த பாதாள காளியின் அருளால் கிடைத்தது என திரிசடைக்கு தெரியும். திரிசடை பலவாறு யோசித்தாள்.  தன தந்தையின் ஆலோசனைப்படியே ராம லட்சுமணர்கள் இராவணனின் பலவீனத்தை தெரிந்துக்கொண்டு அவனுடைய சேனைகளை அழித்து வருகிறார். இப்பொழுது இந்த ”மயில்ராவணன்” யுத்தத்தில் இறங்கியிருப்பது இராமனுக்கு தெரியவில்லை என்றால் காளியின் சக்தியைக் கொண்டு மாயாஜாலம் பண்ணி  ”மயில்ராவணன்” இராம லட்சுமணனை வதம் பண்ணி விடுவானே!!. என் தந்தைக்கு எப்படி இந்த செய்தியை தெரிவிப்பேன் என யோசித்தாள்.  
அப்போது அந்த பக்கமாக ”வாயு பகவான்” சென்று கொண்டு இருந்தார். இலங்கையின் மீது வானில் பறந்து செல்லும் உரிமையை மட்டுமே ”இராவணன்” கொடுத்து இருந்தானாம். வேறு எந்த அனுமதியும் கொடுக்கப்படாததால் வாயுபகவனால் ”சீதை”க்கு உதவமுடியவில்லை. அதனால் வாயுபகவானிடம் ”மயில்ராவணனின்” சபதத்தையும், இன்று இரவு பதினைந்து நாழிகைக்குமேல் ”மயில்ராவணன்” இராம லட்சுமணர்களை கடத்திக் கொண்டு போய் பாதாளத்தில் காளிக்கு பலியாக்க பிரதிக்ஞை(சங்கல்பம் ) கொண்டுள்ளான். அவன் பெரும் மாயாவி. எளிதில் அனைவரையும் ஏமாற்றி விடுவான். காளியின் அருளினால் நினைத்ததை நடத்தி விடுவான். உடனே கிளம்பிச் சென்று இந்த செய்தியை என் தந்தை விபீஷணரிடம் சொல்லி இதற்கு தக்க மாற்றுவழியும் பாதுகாப்பு வழியும் தேடிக்கொள்ளவேண்டும் என வாயுபகவானிடம் கூறினாள் திரிசடை.

வாயுபகவானும் விரைந்து சென்று வீபீஷனனிடம் நடந்ததை சொன்னார். உடனே, வீபிஷணன்  கிளம்பி இராமனைப் பார்க்கச் சென்றார். அங்கு இராமபிரானுக்கு முன்னால் சுக்ரீவன், அங்காதன், நீலன் என அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். அப்பொழுது இராமனிடம் நடந்தது எல்லாம் கூறினான். இராமரும், வீபீஷணா! கலங்காதே! மயில்ராவணன் மாயாவியாக இருந்தால் என்ன? இந்த விஷயத்தை சுக்ரீவனிடமும், ஜாம்பவானிமும் கூறி அவர்களுடைய ஆலோசனைக் கேட்கலாம்.  அவர்கள் சிறந்த ராஜதந்திரிகள் எனக் கூறிய இராமர்  வீபிஷணனிடம்  மயில் இராவணன் யார்?! அவன் பலம் என்ன?! எனக் கேட்டார்.
அதற்க்கு வீபிஷணன், ஐயனே! உங்களுக்கும் பலம் மிக்க வானர சேனையினருக்கும், இந்த மயில்ராவணன் பற்றி கூறுகின்றேன். பாதாள இலங்கைக்கு அதிபதி  இந்த மயில் ராவணன். அவனுடைய அரண்மனை மிகவும் பலம் வாய்ந்தது. அதற்குள் செல்வது என்பது நடக்காத விஷயம். அவ்வளவு வீரர்கள் கொண்டு அதனை பாதுகாத்து வருகிறான். அதற்குள் செல்லவேண்டும் என்றால் கடலுக்குள்ளே ஒரு இடத்தில பல்லாயிரக்கணக்கான தாமரை மலர்ந்து இருக்கும் அதில் மிகப்பெரிய தாமரைக்கொடி ஒன்றின் தண்டின் வழியாகத்தான் செல்லமுடியும்.  அங்கு பல அரண்மனைகள் ஒன்றன் பின் ஒன்றாக கட்டப்பட்ட பாதுகாப்பு கொண்ட உலகமாகும். இதில்  செங்கல், பித்தளை, தாமிரம், இரும்பு, செம்பு, தங்கம் என அடுக்கடுக்காய் உள்ள கோட்டைகளுக்குள்  மயில்ராவணன் வசித்து வருகிறான். அந்தக் கோட்டைகளை  எல்லாம்  பல லட்சக்கணக்கான ராட்சசர்கள் காவல் காத்து நிற்பார்கள். அந்த மயில்ராவணன், எங்கள் தாயார் வழி முறையில் சகோதரன். மகா மாயாவி, சூத்ரதாரி, தந்திரக்காரன். எந்த ரூபத்தையும் எடுத்து வருவான். கொஞ்சம் அசந்துவிட்டால் போதும், நினைத்ததை நடத்திக் காட்டி விடுவான் என விபீஷணன் கூறினான்.

மேலும், உலகில் உள்ள அத்தனை யுக்திகளும்,  அயோக்கியத்தனமும் அவனுக்கு அத்துப்படி. அவனுடைய இஷ்ட தெய்வமான உக்ரகாளி  மஹா சக்திசாலி. சிவபெருமானின் அருளினால் அவன் பெற்றுள்ள அந்த காளியின் அருள் இருந்தால் அனைத்துமே நடக்கும். அதனால்தான் அவளுக்கு இராம லட்சுமணர்களை பலி தந்து காளியின் பலத்தை இராவணனுக்கு கொடுக்க சபதம் செய்துள்ளான் மயில்ராவணன். இன்று  இரவு பதினைந்து நாழிகைக்கு அவன் கையில் இராம லட்சுமணர்கள் கிடைத்துவிட்டால் அதன்பின் அவர்களை அவன் பாதாளத்துக்கு கொண்டு போய்விடுவான். அப்புறம் அவர்களை மீட்பது கடினம். இதைத் தடுக்க என்ன வழி என  சோழி சாஸ்திரமும், பட்சி ஜோசியமும் பார்த்தபொழுது மாயசக்திகளின் முழுபலன்களை எதிர்க்கும் சக்தி கொண்ட அஞ்சனா தேவியின் முழு அருளை பெற்ற அஞ்சனையின் மைந்தன் அனுமனால் மட்டுமே இதை தடுக்க முடியும் என  சொல்கிறது. ஆகையால் உடனே சென்று அனுமனை அழைத்து வாருங்கள். அவரிடம் இராம லட்சுமணர்களை எப்படி பாதுகாக்கலாம் என ஆலோசனை கேட்போம் என விபிஷணன் கூறினான்.
உடனே அனுமன் அழைக்கபட்டார். அனுமனும் வந்து ஸ்ரீராமனின் கால்களில் விழுந்து வணங்கி பிரபோ நான் என்ன செய்யவேண்டும் என பவ்யமாக கேட்க, அங்கே நடந்தவற்றை சுக்ரீவன், அனுமனுக்கு விளக்கி கூற,  இன்று ஒரு இரவு மட்டும் எப்படி மயில்ராவணனை தடுப்பது?! அப்படி தடுத்துவிட்டால் அவனுடைய சபதம் அழிந்து போய்விடும்.  இராம லட்சுமணர்களும் காப்பாற்றப்பட்டுவிடுவார்கள். என்ன செய்யலாம் என அனுமன் சிந்திக்கலானார். உடனே சுக்ரீவரும்,  ஜாம்பவானும் அனுமனுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். இன்று இரவுமட்டும் அனுமனே உன்னுடைய வாலினால் ஒரு கோட்டையை கட்டிவிடு. உன் வாலினால் மட்டுமே ஆகாயத்தை தொடுகிற மாதிரியும், பூமியினுள் புதைந்து இருக்கிற மாதிரியும் ஒரு கோட்டையை கட்டமுடியும். அப்படி கட்டிவிட்டால் யாரும் அதனுள்ளே நுழைய முடியாது. அப்படியே நுழைந்தாலும் அவர்களை எளிதாக கொன்று விடலாம் என அனுமனிடம் கூறினர்.

உடனே இதை அமோதித்த அனுமன், நல்ல யோசனை இப்பொழுதே என் வாலினால் ஒரு கோட்டையை கட்டுகிறேன் எனக்கூறி இராமப்பிரானின் எழுபது வெள்ளம் சேனைகளையும், இராம லஷ்மணர்களையும் சுற்றி தன் வாலினால் ஆகாயத்தையும் பூமியையும் தொடும் அளவு கோட்டை ஒன்றை உடனே கட்டினார் இந்த கோட்டைக்கு செல்லவேண்டும் என்றால் என் வாயின் வழியே புகுந்து என் காது வழியாகத்தான் செல்லமுடியும். வேறு வழியாகவும் ஈ, எறும்பும் கூட உள்ளே நுழைய முடியாது. அத்தனை நெருக்கமாக, இடைவெளி இல்லாம சுருட்டிக் கட்டப்பட்டிருந்தது அனுமனின்  வால் கோட்டை.  இந்த கோட்டையினுள்ளே  இருக்கும் பர்ணசாலையில் இராம லட்சுமணர் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்க,  விபீஷணரோ கோட்டையின் வெளியே இருக்கும் படைகளை கண்காணித்து அவைகளை உறங்கவிடாமல் இனியும் நாலு ஜாமம் கவனமாக கண்விழித்து காவல் செய்யவேண்டும் என  வெளியே இருக்கும் படைகளை கண்காணித்து கொண்டு இருந்தார்.  அங்கதன், நீலன், ஜாம்பவான், குமுதன் போன்றவர்களுக்கு கட்டளை பிறப்பித்துக்கொண்டு தானும் உறங்காமல் காவல்காத்து கொண்டு இருந்தான் விபிஷணன்.
அங்கே பாதாள இலங்கையில் மயில்ராவணன்., தனது மந்திரி சபையை உடனே கூட்டினான். ராட்சச, மாய வினோதங்கள் செய்யும் மாயாவிகள் மற்றும் பிராமணரை எல்லாம் அழைத்து சாஸ்திரம் பார்த்தான். சோழியும் போட்டு பார்த்தான். பட்சி கூவல் சாஸ்திரமும் பார்த்தான். எல்லாம் அவனுக்கு சாதகமாகவே இருக்கிறது என அவனது ஆலோசகர்கள கூறினார்கள். ஆனால் உண்மையில் அவன்மீது இருந்த பயத்தின் காரணமாகவே அவர்கள் அப்படி பொய் சொன்னார்கள் என்பதுதான் உண்மை. இராத்திரி பதினைந்து நாழிகைக்கு மேலாக நடைப்பெற்ற ஆலோசனைக்கு பிறகு மயில்ராவணன் தனக்கு நம்பிக்கைக்கு பாத்திரமான சதுரன், சாத்திரன், சகல பிராவணன் மற்றும் மாய வினோதன் எனும் நான்கு பேரையும் கூட்டிக்கொண்டு இராம லட்சுமணர்களை கடத்தி வரக் கிளம்பினான். அப்பொழுது அபசகுனமாக மயில்ராவணனுடைய மனைவி வர்ணமாலி அழுதுகொண்டே அவனை வழிமறித்தாள். அவளை தேற்றிய மயில்ராவணன் என் சகோதரன் இரவனணனின் சந்ததியினரையும் அவன் சேனைகளையும் இரண்டு மானிடர்கள் நிர்மூலமாக்கி விட்டனர்.  அவனுக்கு உதவவே நான் செல்கிறேன். இந்த சமயத்தில் அபசகுனம் போல என் குறுக்கே நிற்கிறாய் வர்ணமாலி என கேட்கிறான்.

அதற்கு, அவள் இராம, லட்சுமணர்கள் சாதரணமான மனிதர்கள் இல்லை. அவர்கள் அவதாரமூர்திகள் என பலரும் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் காளிக்கு பூஜை செய்யப்போனபோது  கூட ஆகாசவாணியும் என் காதில் கூறியது. உங்கள் சகோதரன் தீயவழியில் நடந்ததால் அவனை தண்டிக்க அவர்கள் அவதாரமெடுத்து அவனையும் அவனுடைய சேனைகளையும் உறவினர்களையும் நிர்மூலமாக்கவே இந்த பூவுலகிற்கு வந்திருக்கின்றனர்.  உங்களால் அவர்களை வெல்ல முடியாது. ஆகையால், தயவுசெய்து போகவேண்டாம் என கதறுகிறாள் வர்ணமாலி. அவள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மயில்ராவணனும் கேட்கவில்லை. அவனுடைய மந்திரிமார்களும் உன்னுடைய வீரதீரத்திற்கு முன்னால் யாரும் நிற்க முடியாது ஆகையால் நாம் தைரியமாக செல்லலாம் என கூறியதும் பாதாள உலகத்தின் அடியில் இருந்த அரண்மனையை விட்டு பெரும்படையோடு அக்னிகோட்டையை தாண்டி கடலின் மேலே வந்து கடற்கரையில் தன சேனைகளுடன் முகாம் இட்டான் மயில்ராவணன்.
கடற்கரையில் முகமிடடிருந்த மயில்ராவணன் தன்னுடைய சேனாதிபதிகளிடம் கேட்டான்..., அந்த இரண்டு பேரையும் பிடித்துவர யார் முதலில் செல்லுகின்றீர்கள் எனஉடனே எழுந்த சதுரன்அரசே!நான் இருக்க நீங்கள் ஏன் மற்றவர்களை அழைக்கவேண்டும்இதோ இப்பொழுதே சென்று அவர்களுடைய எழுபது வெள்ளம் சேனைகளையும் ஒரே நொடியில் அழித்துவிட்டு வருகிறேன் என புறபட்டான்.  உடனே சதுரன் இருட்டில் மெல்ல மெல்ல அனுமன் தன் வாலினால் கட்டி இருந்த கோட்டைக்குள் நுழைய சுற்றி சுற்றி வழி தேடினான்கோட்டையோ ஆகாயம் மட்டும் தெரியும் அளவு உயரமா இருந்தத. கீழே பார்த்தால் வாலும் பூமிக்குள்ளே புதைந்து இருக்கிறதுஇந்த கோட்டையில் வாசல் எங்கே இருக்கிறது என தேடி குழம்பி நின்றான் சதுரன். பலவாறு முயற்சித்தும் அவனால் கோட்டையினுள் நுழைய முடியவில்லைசரி காலம் தாழ்த்தவேண்டாம் என குழம்பிபோய் மயில்ராவணன் முன்பு தலைகுனிந்து நின்றான்.  

உடனே கோபம் கொண்ட மயில்ராவணன்தன் சேனாதிபதிகளை பார்க்கஉடனே சாத்திரன் எழுந்தான். இதோ ஒரு நொடியில் போய் வருகிறேன் என மார்தட்டி சென்றான்அவனும் கோட்டை வாயிலை கண்டுபிடிக்க முடியாமல் வாலின் இடுக்கு வழியே நுழைய முயன்றவனை வாலினாலேயே எலும்பு நொறுங்கும் அளவு பூமியில் தேய்த்து தேய்த்து சதை எல்லாம் பிய்ந்தே போகுமளவு வாலில் போட்டு அழுத்தினான்அனுமன்தப்பித்தோம், பிழைத்தோம் என உடம்பெல்லாம் காயம்பட்டு ஓடி வந்தான் சாத்திரன்.  அடுத்தடுத்து போன சகல பிராவணன் மற்றும் மாய வினோதன் இவர்களுக்கும் இதே கதி ஏற்பட்டு பயத்தோடு ஓடிவந்தனர். இதைக்கண்ட மயில்ராவணன் கோபமுற்று உங்களை நம்பி பிரயிஜனமில்லை. நானே செல்கிறேன் என்னுடைய மந்திரதந்திரமாய வித்தைகள் மூலம் அவர்கள் இருவரையும் கொண்டு வருகிறேன்அதுவரை நீங்கள் அனைவரும் இங்கே பத்திரமாக இருங்கள் என சொல்லி கிளம்பி சென்றான். 
வால் கோட்டை அருகே வந்ததும் தன்னை விபீஷணன் போல உருமாற்றிக் கொண்டான் .மாயாவி மயில்ராவணன். வெற்றிலையில் மையையும் தடவிப் பார்த்து கோட்டையினுள் நுழையும் வழியையும் தெரிந்துகொண்டான்.  உடனே, அனுமனின் முகம் எங்குள்ளது  என்பதைக் கண்டுப்பிடித்துவிட்டான். மெல்ல மெல்ல அனுமானின் காதருகில் சென்று, அனுமனே! காவல் எல்லாம் பலமாக இருக்கிறதா?! எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பதினைந்து நாழியாகப் போகிறது. அவன் சபதமும் முடியும் நேரம் இது கோட்டையின் வெளியே அனைத்து காவல் நிலைகளையும் பார்த்துவிட்டேன். எல்லாம் சரியாக இருக்கிறது. கோட்டையின் உள்ளே எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்க்கிறேன் என கூறினான். அனுமன் வந்திருப்பது விபீஷணன் என நினைத்து வாயை திறந்து வழியை விட்டார்.  அந்த வழி காதின் வழியே உள்ளே செல்வதை கண்ட மயில்ராவணன் கோட்டைக்குள் புகுந்து தனது மாயத்தால் அங்கிருந்த  அனைவரையும் தன்னுடைய மாயவித்தையால் கொஞ்சநேரத்திற்கு கட்டிவிட்டான. அந்தநேரம் முடியும் முன்பே கோட்டைக்குள் புகுந்து  இராம லட்சுமணர்கள் படுத்திருந்த பர்ணசாலையை அடைந்து மாயா வினோதம் பண்ணி காளியின் அருளால் இராம லட்சுமணர்களை கைவிரல் அளவிலாக்கி, மயக்கமுற செய்து ஒரு சின்ன பெட்டிக்குள் அடைத்துவிட்டான. திரும்பவும் அனுமனின் வாய்வழியே வெளியே வந்து, உள்ளே பாதுகாப்பு எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது . பதினைந்து நாழிகைக்கு இன்னும் பத்து சொட்டு நாழிதான் பாக்கியிருக்கிறது. கவனமாக இருக்கவேண்டும் .நானும் வெளியே சுற்றி கண்காணித்து கொண்டு இருக்கிறேன் என்று கூறி ஒன்றுமே தெரியாதமாதிரி வெளியே சென்று விட்டான் மயில்ராவணன். அனுனும்  தன்னிடம் பேசிக் கொண்டு இருந்தது விபீஷணனே  என்றே நினைத்திருந்தார்.
உள்ளே போனது போலவே கோட்டையின் வெளியே வந்து தாமதிக்காமல் பாதாள இலங்கையை நோக்கி பயணப்பட்டான் மயில்ராவணன். அப்பொழுது ஆகாயத்தில் ஆகாசவாணி ஒலித்தது. அடே மூடனே! மயில்ராவணா! வைகுண்டநாதர் அவதாரங்களையே பெட்டியில் அடைத்துக்கொண்டு போகிறாயே! உனக்கு அழிவு காலம் நிச்சயம். நீ இத்தனை சிரமப்பட்டு இந்த காரியத்தை செய்வது உனது சகோதரன் இராவணனுக்காகத்தானே.  அவனும் அவனுடைய  ராஜ்யத்தை இழக்கப் போறான். நீயும் ராஜ்யத்தை இழக்கப்போகிறாய். மூர்க்கனே! உன் சகோதரி தூரதண்டியின் மகன் உன் சிம்மாசனத்தில் அமரப்போகிறான் எனக் கூறியது.  அசரீரி கூறியதைக் கேட்ட மயில்ராவணன் கோபத்தில் அப்படியா!? என் தங்கையின் மகன் என்னிடமிருந்து ஆட்சியை பறிக்க உள்ளானா? என்று கர்ஜித்தவாறே அவனை என்ன செய்கிறேன் பார் என கூறியபடி பாதாள உலகம் சென்றடைந்து இராம-லட்சுமணர்களை பாதுகாப்பாக காளி கோவிலில் பூட்டியும் வைத்துவிட்டான்.

அடுத்த வேலையாக தன்னுடைய தங்கை தூரதண்டியையும், அவள் மகனையும்  சிறையில் அடைத்து கைவிலங்கு, கால் விலங்கு, மார் விலங்கு என அனைத்து விலங்கையும் போட்டு, ஒரு அறையிலே வைத்து அந்த அறையையும் பூட்டி அங்கிருந்த கதவுகளுக்கெல்லாம் நாலு பக்கமும் நானூறு பூட்டும் போட்டு உணவு கொடுக்க மட்டும் சிறு ஓட்டைப் போட்டு அறையை  சுற்றி சுண்ணாம்பு சுவரும் எழுப்பிவிட்டான். இனி, அவன் எப்படி என் சிம்மாசனத்தை பிடிப்பான் என நிம்மதியாக உறங்க  சென்றான்.
அங்கே நிலைமை அப்படி இருக்க, இங்கே அனுமனுக்கு இராம லட்சுமணர்களை மயில்ராவணன் கடத்திக் கொண்டு போய் விட்டது தெரியவில்ல. அப்பொழுது அங்கே வந்த விபீஷணன், அனுமனே! எல்லாம் பத்திரம்தானே என கேட்டார். என்ன விபிஷ்ணரே! இப்பொழுதுதானே அரை நாழிகைக்கு முன்னே என் வாயில் புகுந்து வெளியில் வந்தீர்கள். இப்பொழுது திரும்பியும் வந்து என்னிடம் கேட்கிறீர்கள் என கேட்க, பகீர் என்றது விபிஷ்ணருக்கு. என்னது நான் அரை நாழிகைக்கு முன்னே இங்கே வரவே இல்லையே எனச் சொல்ல, உடனே, உள்ளே ஓடிப்போய் பார்த்தால் பர்ணசாலையில்  இராம லட்சுமணர்களைக் காணோம். அலறி அடித்து கொண்டு வந்த விபீஷணன் , அனுமனே!,உள்ளே பாதுகாப்பாக இருந்த இராம லட்சுமணர்களைக் காணவில்லை. நீ யாரை உள்ளே விட்டாய்?! மயில்ராவணன் பொல்லாத மாயாவி என்றேனே. அவன் என் உருவமெடுத்து உன்னை ஏமாற்றிவிட்டு இராம லட்சுமணர்களை கடத்திக் கொண்டு போய்விட்டானே! என்ன செய்வது என தெரியலையே என அழுது புலம்ப, அதைக்கேட்டு அனுமன் மூர்ச்சையானான்.

எப்படி அவர்களை காப்பாற்றுவது என யாருக்கும் வழி தெரியவில்லை. அப்பொழுது அனுமன், விபீஷணரே! நான் செய்த தவறுக்கு நானே நிவர்த்தி செய்கிறேன். அந்த பாதாள இலங்கைக்கு செல்லும் வழி மட்டும் சொல்லுங்கள். என அனுமன் விபீஷணரிடம் கேட்டார். அனுமனே! பாதாள இலங்கைக்கு செல்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. மிகவும் கஷ்டமான விஷயம்.  இருந்தாலும், நான் வழி சொல்கிறேன் என விபீஷ்ணன் இராம லட்சுமணரை  மீட்க ஒரு உபாயம் கூறினார்.

 இனி அடுத்த வாரம் எப்படி அனுமன் பாதாள இலங்கைக்கு சென்றார்?! என்னென்ன சவால்களை எல்லாம் சந்தித்தார்?! அனுமனே மயில்ராவணனின் படைகளை சமாளிக்க முடியாமல்  எப்படி திணறினார்!!?? என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்....,
மாயாவி மயில்ராவணன் பாகம் 2 

14 கருத்துகள்:

 1. சிறுவயதில் படித்த கதை! இவ்வளவு விரிவாக படித்தது கிடையாது. அழகான படங்களுடன் சுவைபட பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 2. இவ்வளவு பெரிய பதிவுக்கு ஒரே ஒரு கமெண்டா ? பக்தின்னா எல்லோருக்கும் என்னைப்போல் தான் போல.

  பதிலளிநீக்கு
 3. // உலகில் உள்ள அத்தனை யுக்திகளும், அயோக்கியத்தனமும் அவனுக்கு அத்துப்படி. // அப்போ முடிந்தது கதை...!

  பதிலளிநீக்கு
 4. பிரமாண்டமான பதிவு புகைப்படங்கள் நன்று

  பதிலளிநீக்கு
 5. தெரியாத விடயங்கள் எல்லாம் அருமையான விளக்கத்துடன் தெரிவிக்கும் வரலாற்றுப்பதிவு.

  பதிலளிநீக்கு
 6. சுவாரஸ்யம். இங்குதான் அனுமன் தன் மகனைச் சந்திக்கப் போகிறார். அப்படித்தானே?

  பதிலளிநீக்கு
 7. ஒரே பதிவில் இவ்வளவு விஷயங்களா! பகிர்வுக்கு நன்றிகள் ராஜி!

  பதிலளிநீக்கு
 8. யம்மாடியோவ்! மயில்ராவணன் கதை படித்தது என்றாலும் இந்தப் படங்கள் மிகவும் அருமையாக உள்ளன. ம்ம்ம்ம் அனுமன் உள்ளே சென்று எப்படிச் சமாளித்தார் என்பதும் தெரிந்தாலும், அதை உங்கள் நடையில் வாசிக்கச் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்...இந்தப் பதிவும் அப்படித்தானே இருக்கின்றது!!! தொடர்கின்றோம் சகோ/தோழி ராஜி...(நாங்களே பெரிய பதிவா போடறோமே அதைச் சுறுக்கத் தெரியாமல் விழிக்கிறோமேனா..ஹஹஹ் .....அதை அடிக்கவே சில சமயம் திணறுவோம்னா நீங்க யப்பா உங்களுக்கு அசாத்திய பொறுமைதான்பா....பாராட்டுகள் வாழ்த்துகள்!)

  பதிலளிநீக்கு
 9. உண்மையில் நான் அறியாத கதைதான் இது. பதிவுக்கு மேலும் மகுடம் சேர்க்கிறது அற்புதமான படங்கள்.
  த ம 8

  பதிலளிநீக்கு
 10. ஆஹா அருமையா சொல்லியிருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. அழகான படங்கள்...
  அற்புதமான பகிர்வு அக்கா...

  பதிலளிநீக்கு
 12. படங்கள் அனைத்தும் அருமை. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு