என் பாட்டிக்கு நான்ன்னா ”கொல்ல” பிரியம்(இதுல ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்லாம் ஏதுமில்லைங்க.). நானும், பாட்டியும் எலியும், பூனையும் போல தான் எப்பவுமே. எப்பவும் என்கிட்ட எதாவது பேசி என்னை வம்பிழுத்துக்கிட்டே இருப்பாங்க.
”ரோஜா” படம் வந்த புதுசு. அந்த படத்துல வரும் காதல் ரோஜாவேன்ற பாட்டு என் ஃபேவரிட். அப்பா அம்மா இல்லாத சமயத்துல சவுண்ட் அதிகமா வச்சு கேட்பேன். என் பாட்டி ஊருல இருந்து வந்திருந்த சமயத்துலயும் அப்படித்தான் என்னானதோ, ஏதானதோ சொல் சொல்ன்னு சத்தமா பாடிக்கிட்டு இருந்தேன்.
என் பாட்டியை பார்க்க அவங்க ஃப்ரெண்ட் வந்திருந்தாங்க.
எங்கே ராஜி. உள்ளே என்ன சத்தம்?
ஒரு கழுதை நாய் போல கத்துறது கேட்டிருக்கியா?
இல்லியே, இந்த கூத்து எங்கேடி நடந்துச்சு?
உள்ளே போய் கேளு லொள் லொள்ளுன்னு குறைச்சுக்கிட்டு இருக்கு.
அடிப்பாவி பாட்டி, இப்படி கவுத்திட்டியே.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முதல்ல எங்க வீட்டுல கருப்பு வெள்ளை டிவிதான் இருந்தது. ஃப்ரெண்ட் வீட்டுல கலர் டிவி இருக்குறதை பார்த்து அப்பாக்கிட்ட அடம் பிடிச்சு வாங்கி வந்தேன்.
ஏன் இப்போ இருக்குற டி.விக்கு என்ன குறைச்சல்? இது பாட்டி
பழைய டி.வில படங்கள்ல கருப்பு வெள்ளை மட்டும்தான் தெரியும். புது டிவில எல்லா கலரும் தெரியும். நேருல பார்க்குற மாதிரியே இருக்கும். உன் நொள்ளை கண்ணை திறந்து நல்லா பாருன்னு சொன்னேன்.
அன்னிக்கு வெள்ளிக்கிழமை. ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி. லேசா மழையும் பெய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு. முதல்ல அறிவிப்பு சொல்ல வந்த அக்காவை பார்த்து, ராஜி சொன்னது நிஜம்தான் போல, நேருல பார்க்குற மாதிரியே இருக்குன்னு தன் பக்கத்துல உக்கார்ந்துகிட்டு இருந்த இன்னொரு பெருசுக்கிட்ட சொல்லிச்சு பாட்டி.
அடுத்து புது பாட்டு, விளம்பரம்லாம் போய்கிட்டு இருந்துச்சு. கலர்ல படம் பார்த்துக்கிட்டு இருந்த என் பாட்டிக்கு பெருமை தாங்கலை. என்னை பாசத்தோட பார்க்க ஆரம்பிச்சுது. அடுத்து பழைய எம்.ஜி.ஆர் பாட்டு ஏதோ ஒண்ணு கருப்பு வெள்ளையில போய்கிட்டு இருந்துச்சு..,
கண்ணுல தீப்பொறி பறக்க, ராஜி, கலர் டிவி வாங்குனியே சரி. அதை பார்த்து வாங்க உனக்கு துப்பிருக்கா?
ஏன்? என்ன ஆச்சு? எதுக்கு இப்போ கத்துறே பாட்டி?
என்ன ஆச்சா! டிவில வர்ற படம் கருப்பு வெள்ளையா தான் தெரியுது. படத்தோட கலர் மழையில கரைஞ்சு போயிடுச்சு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.
மூணாவது சம்பவம்
அப்பா ஃப்ரிட்ஜ் வாங்கி வந்தார்
ராஜி, சிகப்பு கலர்ல உன் அப்பன் என்னமோ வங்கி வந்தானே என்னது அது?
அது ஃப்ரிட்ஜ் பாட்டி. அதுக்குள்ள எந்த சாப்பாட்டு பொருளை வைத்தாலும் அப்பிடியே இருக்கும். கெட்டு போகாது, ருசியும் மாறாதுன்னு சொன்னேன்.
சில நாட்கள் நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு..,
ராஜி......
சொல்லு பாட்டி..., இந்த சொம்புல இருக்குற சுடுதண்ணியை கொண்டு போய் ஃப்ரிட்ஜ்ல வச்சு நான் கேட்கும்போது குடு.
என்னது சுடு தண்ணியை ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா? ஏன் உனக்கு மூளை குழம்பி போச்சா?
உனக்குதான் மூளை குழம்பி போச்சு. நீதானே சொன்னே அந்த பொட்டியில எது வச்சாலும் அப்பிடியே இருக்கும் கெட்டு போகாது, ருசி மாறாதுன்னு. உன் அம்மா வச்சு குடுக்கும் சுடு தண்ணி கொஞ்ச நேரத்துல ஆறிப்போகுது. அந்த பொட்டிக்குள்ள வச்சா அப்பிடியே இருக்கும். உன் அம்மாவை நானும் அடிக்கடி தொந்தரவு பண்ண வேணாம் பாரு,
கிர்ர்ர்ர்ர் டமால்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இதெல்லாம் சாம்பிள்தான். பாட்டி என்னை கலாய்த்த சம்பவங்கள் எவ்வளவோ இருக்கு. அப்பா கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லயே வேலை கிடைச்சுட்டதால் மதுரை பக்கம் போய்ட்டார்.
அங்கே போனப்புறம்தான் நான் பிறந்தேனாம்.எங்க சொந்த ஊருக்கும், அப்பா வேலை செய்த ஊருக்கும் தூரம் அதிகமென்பதால், எனக்கும் பாட்டிக்கும் தூரம் அதிகமாயிடுச்சு போல. அடிக்கடி பார்த்துக்க முடியாததினால பாட்டி, பேத்தின்ற பாசம் ரெண்டு பேருக்குமே இல்லாம போய்டுச்சு.
நான் கோவமா பாட்டியை பத்தி பேசும்போது அம்மா அவங்களை பத்தி சொல்லி சமாதான படுத்துவாங்க. கணவனின் பக்க பலமில்லாமல் தனி மனுஷியாய் மூன்று பிள்ளைகளை கரை சேர்த்ததுமில்லாமல் மூத்தாள் மகனை தன் மகன் போல் நினைத்து வளர்த்தாங்க. காடு கழனிகளில் ஒரு ஆண் பிள்ளைப் போல் காவலுக்கு தைரியமா போவாங்க. ஊரார் யாரேனும் உதவின்னு கேட்டால் தயங்காமல் செய்வாங்க. பசின்னு யார் சொன்னாலும் தனக்கிருக்கோ இல்லையோ அவங்க பசி ஆற்றுவாங்கன்னு தன் மாமியாரை என் அம்மா புகழ்ந்து சொல்வாங்க.மருத்துவம், சமையல், நெசவு, கழனிவேலைன்னு எல்லா வேலையிலும் என் பாட்டி ஆல் ரவுண்டர்.
ஆனால், அந்த தைரியம்தான் அவங்களை திமிர் பிடிச்சவங்களாய் நம்மக்கிட்ட காட்டிடுச்சு. அவங்க அப்படி இல்லைன்னா தனி மனுஷியாய் போராடி பிள்ளையை படிக்க வச்சு, பெண்களை கட்டிக்குடுத்து, சொத்தும் சேர்த்து வைத்திருக்க முடியாதுன்னு அம்மா சொல்வாங்க.
தன் 84 வயது வரை தனியாவே கிராமத்துல வீடு வாசல் தோட்டம் துரவுன்னு பார்த்துக்கிட்டாங்க. கடைசி 2 வருடம் அப்பாவின் வற்புறுத்தலால் தன் பிள்ளைக்கிட்டயே வந்து இருந்து சில மாதங்கள் படுக்கையிலிருந்து, அவங்களுக்கு பணி செய்யும் பாக்கியத்தை எங்களுக்கு அளித்து இறைவனடி சேர்ந்த நாள் இன்று. பாட்டிக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.
இறந்த போது கூட நன் ஒரு சொட்டு கண்ணீர் சிந்தவில்லை. ஆனால் ஏனோ இன்று அவங்க உயிர் நீத்த அந்த நிமிடத்தில் என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர். பாட்டி அடுத்த பிறவின்னு ஒன்றிருந்தால் இருவரும் பாட்டி, பேத்தியாகவே பிறப்போம். இந்த பிறவியில் செலுத்தாத பாசத்தை இருவருமே பகிர்ந்து கொள்வோம்