Friday, June 27, 2014

சுவாமிமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

நம்மில் எத்தனைப் பேருக்கு பிரணவ மந்திரமான “ஓம்”க்கு பொருள் தெரியும்!!? அட, நமக்கு தெரியலைன்னா பரவாயில்ல. ஆனா, உலகத்தையே காக்கும் கடவுளுக்கு தெரியலைன்னா!? அதெப்படி கடவுளுக்கு அதன் பொருள் தெரியாம போகும்!? அப்படி தான் அறியாததை யார்கிட்ட கத்துக்கிட்டார்!? பிரணவ மந்திரமான “ஓம்” இந்துக்களுக்கு மட்டும் உரியதா!? இப்படி பல விடைகளுக்கான பதிலை இன்றைய பதிவில் பார்க்கலாம். வாங்க!!


ஓம் என்பது ஆதி சப்தம்! அனைத்து வேதங்களையும் சுருக்கினால், மிஞ்சுவது "ஓம்" மட்டுமே! ஒ



* படைப்புக்கு முன் இருப்பதும் = ஓம்!

* பிரளயத்துக்குப் பின் எஞ்சி ஒடுங்குவதும் = ஓம்!



அதனால் தான் இன்னிக்கும் வேதம் ஓதும் போது, ஓம்-இல் தொடங்கி, ஓம்-இலேயே முடிப்பது வழக்கம்!

அடிப்படை அ+உ+ம 
அ = உருவம், உ = அருவம், ம் = அருவுருவம்
அ = ஆக்கம், உ = காத்தல், ம் = அழிப்பு
அ = பிரம்மா, உ = விஷ்ணு, ம் = சிவன் 



சமணம் (ஜெயின்), புத்த மதம், சீக்கியர்கள்,  கிறிஸ்த்து, அட...சைனாவில் கூட "ஓம்" இருக்குது.., நம்பிக்கையில்லையா!? 

"ஓம் நமஹ"-ன்னும்,  "ஓம் ஏகாட்சர-பஞ்ச பரமேஷ்டி-நாம தீபம்" ன்னு சமணத்துலயும்....,

வித்யா சடாக்ஷரி என்னும் முக்கியமான பெளத்த மந்திரம்! அதோடு, ”ஓம்” சேர்த்துதான் உச்சரிப்பார்கள். நாம்  நமச்சிவாயத்தோடு “ஓம்” சேர்க்குற மாதிரி மணி பத்மேஹூம் = ம + ணி + பத் + மே + ஹூம் உடன்”ஓம்” சேர்த்து வணங்குவது பௌத்த மதம்.

சீனாவில் இந்தப் பெளத்த பிரணவ-த்தை "பிண்யின்" என்கிறார்கள்! 

"ஏக் ஓம்கார்" என்று சீக்கியத்தில் உண்டு. இதை உச்சரித்தவர் குருநானக்.

ஆதியிலே தேவன் வார்த்தையாய் இருந்தார்! என கிறித்துவத்தில் உண்டு. ”ஓம்”ன்னு குறிப்பிடலையே ஒழிய  ”வார்த்தையாய் இருந்தார்”ன்னு சொல்லாம சொல்றார்.

இதேப் பொருள்படுமாறு நாத விந்து கலாதீ நமோ நம - என்று அருணகிரியார் பாடி இருக்கார்.





கும்பக்கோணத்திலிருந்து மேற்கே ஐந்து கிமீ தூரத்தில் இருக்கு சுவாமிமலை. இதற்கு திருவேரகம்ன்னு மற்றொரு பெயரும் இருக்கு. இது முருகப்பெருமானின் நான்காவது படைவீடாகும். சுவாமிமலைன்னு அ சொல்லப்பட்டாலும் இது மலை இல்லை. செயற்கையாய் உருவாக்கப்பட்ட குன்றின் மேல் இக்கோவில் அமைந்திருப்பதால் இக்கோவில் “கட்டுமலை”ன்னும் அழைக்கப்படுகிறது. 


இந்த கோவில் இரண்டு அடுக்குகளாகவும், மூன்று பிரகாரங்கள், மூண்டு கோபுரங்கள் கொண்டுள்ளது கீழ் அடுக்கில் மீனாட்சி அம்மன்,சுந்தரேஸ்வரர் சன்னிதி, சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்கள் தனித்தனி சன்னிதிக் கொண்டு அருள்புரிகின்றனர்.  அவர்களை வணங்கி அப்பனுக்கே பாடம் சொன்ன கதையை தெரிந்துக் கொள்வோம்....,
 
படைப்பு கடவுளான பிரம்மனுக்கு தான் என்ற ஆணவம் தலை தூக்க ஆரம்பித்தது. அப்படிப்பட்ட வேளையில் முருகப் பெருமானை சந்திக்க நேர்ந்தது. இருவருக்குமிடையில் பேச்சு எங்கெங்கோ சென்று, பிரணவ மந்திரத்திற்கு வந்தது.  படைப்புத் தொழிலைச் செய்யும் உமக்கு பிரணவ மந்திரமான “ஓம்”க்கு பொருள் தெரியுமா!? என முருகன் கேட்டான். பிரம்மனால் பதிலுரைக்க முடியாமல் போகவே, முருகன் பிரம்மாவின் நான்கு தலியிலும் கொட்டி பிரம்மனை சிறையில் அடைத்து படைப்புத் தொழிலை முருகனே செய்தார்.

 பிரம்மன் சிறையில் இருப்பதை கேள்வியுற்ற  திருமால் சிவபெருமானிடம் சொல்லி  சிவபெருமானும், முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற...,  தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்தார். சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க...,  முருகனும் எல்லோரும் அறிய பிரணவ மந்திரத்தின் பொருள்  கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார். இந்நிகழ்ச்சி நடந்த தலமே இந்த சுவாமிமலைத் திருத்தலம் என்று தல வரலாறு கூறுகிறது



அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைக் கொண்ட அறுபது படிகளை ஏறிச் சென்றால் முருகன் சந்நிதி.    தமிழ் வருடங்களின் தேவதைகள் சுவாமியை பிரார்த்தனை செய்து படிகளாக உள்ளதாக இங்கு ஐதீகம். தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது இந்த படிகளுக்கு வஸ்திரம் சாத்தி, தேங்காய், பழம் வைத்து பாடல் பாடி பூஜை செய்வார்கள் . இதற்கு திருப்படி பூஜை என்று பெயர். அதற்கு முன் தென் திசை நோக்கி இருக்கும் விநாயகரை வணங்கி கொள்கிறோம். இக்கோவிலில் முருகப் பெருமானின் வாகனமாக  மயில் கிடையாது. பிணிமுகம் என்ற யானை தான் முருகனது வாகனம்.  ஹரிகேசன் என்ற அரக்கனை சுவாமிநாதபெருமானை வணங்கி, இந்திரன் வென்றதால்  தன் காணிக்கையாக இந்த (ஐராவதம்) யானையை தந்ததாக புராணம் கூறுகிறது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.


மூலவர் 6அடி உயரத்துடன், கையில் தண்டம், தலையில் உச்சிகுடுமி, மார்பில் பூணுலுடன் காணப்படுகிறார். முருகப்பெருமான் சுவாமிநாதனாக வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும், இடக்கையை தொடையில் வைத்தபடியும் யோகநிலையிலுள்ள குருவாக நின்றக் கோலத்தில் காட்சித் தருகிறார்.  பீடம் சிவ பீடம், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்ற சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற வஜ்ர வேலுடன் காணப்படுகிறார். கையில் தாங்கிய வேல்தான் ஆலயத்தின் கீழ் வீதியில் உள்ள நேத்திர தீர்த்தத்தை உண்டாக்கியது.


ஆபரண அலங்காரத்தின் போது, ராஜ கோலத்திலும், சந்தன அபிஷேகத்தின்போது பாலகுமாரனாகவும், விபூதி அபிஷேகத்தின்போது முதியவர் கோலத்திலும் காட்சி தருகிறார் சுவாமிநாதர். கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும். இதிலிருந்து சிவனும் முருகனும்" வேறு வேறு அல்லர் என்பதும் புலனாகும். 


சிவபெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து தீப்பொறிகளாக அவதரித்த ஆறுமுகன் தன் மடியில் தவழாமல் பூமாதேவியின் மடியில் (சரவணக் காட்டில்) தவழ நேர்ந்ததே!' எனக் கோபம் கொண்ட பார்வதிதேவி, பூமா தேவியை சபித்து விட்டாள். சாப விமோசனம் தேடி அலைந்த பூமாதேவி, இறுதியில் சுவாமிமலை தலத்தை அடைந்து, ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றாள் அதன் பின்னும் இத்தலம் விட்டுப்போக விருப்பமின்றி தலவிருட்சமாக இத்தலத்தில் இருக்கிறாள்.


இத்தலம் குறித்து அருணகிரி நாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் பாடியுள்ளனர், நான்முகன், பூமகள், இந்திரன் ஆகியோர் வழிபட்டது இத்தலம்.


இப்பொழுது கோவில் புணரமைக்கும் வேலை நடைப்பெற்றுக் கொண்டிருக்கு. தங்கத்தேர் கட்டும் வேலையும் நடப்பதாகச் சொல்லப்பட்டது. அதற்கு நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றதுன்னு அறிவிப்பு பலகைகள் வச்சிருக்காங்க.  பழனி, திருச்செந்தூர், திருத்தணி போல பரப்பரப்பும், கூட்ட நெரிசலும் இல்லாம அமைதியாய் இருக்கு. 

சிற்ப வல்லுனர்களை தன்னகத்தே கொண்டது  இத்தலம். . இங்கு வடிக்கப்படும் இறை மூர்த்தங்கள் (பஞ்சலோகம்) உலகெங்கும் உள்ள ஆலயங்களை அடைகின்றனவாம். 




அரசு ஆணைப்படி 'அன்பு இல்லம்' ஒன்று ஏற்படுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட அனாதைச் சிறுவர்களுக்கு உணவு- உடை- இருப்பிட வசதிகள் இலவசமாகத் தருவதுடன், அவர்கள் கல்வி பயிலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர, சுவாமி மலையின் தெருக்களைப் பராமரித்தல், மின் வசதி செய்தல் ஆகிய பணிகளிலும் இத்திருக்கோயிலின் பங்குண்டு. இது வேறெந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.




”அஜீரணத்தைப் போக்க ரசம் சாப்பிட்டு குணம் அடையலாம்” என்றும், 'உடம்பு தளரும்போது நம் ஆன்மாவுக்கு மோட்சத்தைத் தரவல்லது, ஸ்வாமிநாதரின் பேரருள் மட்டுமே!' என்று இரு பொருள்படுமாறு  

வெங்காயம் சுக்கானால், வெந்தயத்தால் ஆவதென்ன

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத

சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே!

  சொக்கநாதப் புலவர் பாடி இருக்கார்.


அடுத்த வாரம் சுவாமி மலைக்கு அருகில் இருக்கும் ”திருவலஞ்சுழி” வெள்ளைப் பிள்ளையார் கோவிலில் சந்திக்கலாம்.

நன்றி! வணக்கம்!
 

Thursday, June 26, 2014

கீ செயின் - கிராஃப்ட் கார்னர்

அம்மா பிளாக் பைத்தியம்ன்னா பொண்ணு கீசெயின் பைத்தியம். என் சின்ன பொண்ணு இனியாக்கு கீ செயின்கள் மேல் கொள்ளை ஆசை. எந்த ஊருக்குப் போனாலும், எந்த கடைக்குப் போனாலும் ஒரு கீ செயின் வாங்கிடுவா. அவ வாங்குறதில்லாம, அவ அக்காக்கிட்டயும் கீ செயின் வாங்கி வரச் சொல்லுவா. சலங்கை வச்சது, முத்து, கல்லு வச்சது, துணி, சிப்பி, பேர் பொரிச்சதுன்னு விதம் விதமா இருக்கும்.

ஏதோ நெட்டுல மேய்ஞ்சுக்கிட்டிருந்தேன். என்னம்மா பண்றே!?ன்னு கிட்ட வந்தவ கண்ணுல, கிராஃப்ட் பக்கத்துல இருந்த கீ செயின் செய்யுறது பத்திய போஸ் பார்த்தா. மம்மி மந்திரிகளை தூக்குற மாதிரி, அம்மாவை கம்ப்யூட்டர்ல இருந்து கெட் அவுட் பண்ணிட்டு கீ செயின் செஞ்சதுமில்லாம, அம்மாக்கு பதிவை தேத்த ஃபோட்டோகளும் எடுத்துக் கொடுத்துட்டா. பூ போல அட்டையில வரைஞ்சுக் கொடுத்ததை தவிர இதில் என் பங்களிப்பு ஏதுமில்ல(இதைச் சொல்லனும்ன்னு மேடம் கண்டிஷன் போட்டாங்க. ஏன்னா, கஷ்டப்பட்டு செய்யுறது நானு! பாராட்டு உனக்கா!?ன்னு கேக்குறா!!).

தேவையான பொருட்கள்:
காலி கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில் (பெப்சி, கோக், ஃபேண்டா, வாட்டர் பாட்டில் இருந்தா நல்லது. மத்ததுலாம் கலர்ல வரும். 
விருப்பமான வடிவங்களில் கிறிஸ்டல் மணிகள்
கட்டர்,
கத்திரிக்கோல், 
பெயிண்ட் இல்லன்னா நெயில் பாலிஷ்
உல்லன் நூல் இல்லன்னா எதாவது நைலான் ஒயர்
மெழுகுவர்த்தி


எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கிட்டு  ஒரு அட்டைல பூ போல  பிடித்தமான டிசைன்ல கட் பண்ணிக்கிட்டா.  கூல் டிரிங்க்ஸ் பாட்டிலில் மேல், கீழ் பாகம் வெட்டி நடுவில் இருக்கும் பாகத்தை எடுத்துக்கிட்டா ஒரு தகடுப் போல கிடைக்கும்.
வெட்டி எடுத்த பாட்டில் தகட்டு மேல பூ டிசைன் வரைஞ்சு வெட்டி எடுத்துக்கிட்டா.

வெட்டிய பூக்கள் டிசைனை மெழுகுவத்தி சுடர் அனல்ல லேசாக் காட்டிக்கிட்டா. அப்பதான், முனைகளில் எதாவது பிசிறு இருந்தால் போய்டும். அனல் பட்டதும் பிளாஸ்டிக் பூ லேசா வளைஞ்சு பார்க்க அழகா இருக்கும். 
நெருப்பில் காய்ச்சிய கம்பியால பூக்கள் நடுவில் ஒரு துளைப் போட்டுக்கிட்டா.

பெயிண்ட் இல்லன்னா நெயில் பாலீஷ் அடிச்சுக்கிட்டா. பெயிண்ட் காய கொஞ்ச நேரம் பிடிக்கும். நெயில் பாலீஷ் உடனே காய்ஞ்சுடும்.


ஒரு சாவி வளையத்துல தேவையான அளவு நூல் கோர்த்து, முடிப் போட்டுக்கோகிட்டா. அடுத்து மணிகள் கோர்த்துக்கிட்டா.



அடுத்து பூ இதழை கோர்த்துக்கிட்டா.


அதுக்கடுத்து கண்ணாடி மணிகளைக் கோர்த்துக்கிட்டா. அழகான சாவி வளையம் தயார்!

பென்சில், பேனா கொண்டு போகும் பவுச்சில் கோர்த்துக்கிட்டா. சாயந்தரம் ஸ்கூல்ல இருந்து வந்து தம்பிக்கும், அக்காக்கும் ஒரு கீ செயின் செஞ்சுத் தர்றதா சொல்லி இருக்கா.

Wednesday, June 25, 2014

மதுரை திருமலை நாயக்கர் மஹால் - மௌனச் சாட்சிகள்

திருமலைநாயக்கர் மஹால் பத்தி இன்றைய மௌனச்சாட்சிகளில் பார்க்கலாம்.  மதுரையை ஆண்ட திருமலைநாயக்கரால் கி.பி.1636 ல் கட்டப்பட்டது இந்த மகால். ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக் கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. 
இந்துமுஸ்லீம் கட்டிட நுட்பங்கள் சேர்த்து அமைக்கப்பட்ட (இந்தோ-சாரசீனிக் முறைப்படி) அரண்மனை இது. அன்றைய அரண்மனையில் சொர்க்க விலாசம்ரங்க விலாசம் என்ற இரு பிரிவுகள் இருந்தன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடம்ரங்க விலாசம் மன்னரின் தம்பி முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடம். 

இந்த அரண்மனைத் தொகுதியில்இசை மண்டபம்நாடக சாலைபல்லக்குச் சாலைஆயுதசாலை,   வழிபாட்டிடம்வேறு அரச குடும்பத்தினர்க்கும்பணியாளர்களுக்குமானவசிப்பிடங்கள்அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக்கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது.

முற்றத்தின் வழியாக உள்ளே நுழைந்தும் ஒரு பெரும் முற்றவெளியும், சுற்றிலும் உயரமான தூண்கள் தாங்கிய கட்டடமும் உள்ளன. மேற்கில் வேலைப்பாடுடைய ஒரு கட்டப் பகுதி இருக்கு. முற்றத்தின் வடக்கிலும், தெற்கிலும், நடுவில் சாலை வடிவமான மிகவும் உயர்ந்த கட்டப் பகுதிகள் இருக்கின்றன. இவற்றின் ஸ்தூபிகளும் பொன்னால் செய்யப்பட்டிருந்தன. தாங்கும் சட்டங்கள் இல்லாத அந்த குவிந்த கூரை கட்டடக்கலையில் ஒரு மைல் கல். இரண்டு குதிரைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் படிகளின் வழியேமேற்கில் எழில் வாய்ந்த பகுதியின் வழியாகக் காண்பது சொர்க்க விலாசம். மிகவும் நெடிய தூண்களும்எழிலார்ந்த சுதை வடிவங்களையும் கொண்டிருக்கு.  


இங்கு காணப்படும் சிற்ப, கட்டிட வேலைப்பாடுகளும்குவிந்து மேலே தோன்றும் விமானங்களும் கலைத் திறனின் மேதைமைகள். இப்பகுதியின் நடுவில் மிகவும் விசாலமான இடமும்அதன் மேல் கவிழ்ந்து உயர உயரச் செல்லும் விதானமும் நாம் சொர்க்கத்தில் நிற்கிறோமோ என்னும் வியப்பைத் தோற்றுவிப்பதால் சொர்க்க விலாசம் என்று இதற்குப் பெயராம். இவ்விடத்தில் கல்பீடத்தின் மேல் நடுவில் யானைத் தந்தத்திலான நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த ஒரு மண்டபம் வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் இரத்தினங்களால் செய்யப்பட்ட அரியணை இருந்தது. அதன் மீதமர்ந்துதான் திருமலை மன்னன் செங்கோல் நடத்தினான்.

இன்று நாம் காணும் மஹாலில் ரங்கவிலாசம் இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இருந்தது இப்பகுதி. பத்து எழிலான தூண்கள் முகப்பிலும், தூண்களில் நுண்ணிய வேலைப்பாடுகளும் அமைந்து  கம்பீரமாகத் திகழ்ந்த இடம். ஆயுதங்களும், பல்வகை இசைக்கருவிகளும் பாதுகாக்கப்பட இப்பகுதியில்தான் பாதுக்காக்கப்பட்டது. 1853 ல் பழுதுபார்த்தும் காப்பாற்ற இயலாமல் போனது நமக்கெல்லாம் மிகப்பெரிய இழப்பே! 

மண்டபத்தைச் சுற்றி 900 அடி நீளமும், 600 அடி அகலமும், 40அடி உயரமும் கொண்டு விளங்கிய சுற்று மதில் சுவரும் இப்போது இல்லை. மிகப் பலவீனமாக இருந்ததால் 1837 ல் இடிக்கப்பட்டது. மதிலுக்கு வெளியில் இருந்த நந்தவனமும், அதன் மையத்தில் இருந்த கட்டிடமும் நாம் இழந்துவிட்ட செல்வங்கள்.

இந்த அரண்மனையையும், மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்kகாலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதையைப் பயன்படுத்துவர் என்றும், தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே இந்தப் பாதையைப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.1822-ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சிக் காலத்தில் நேப்பியர் மன்னர், மஹாலை புணரமைத்து, அதன் ஒரு பகுதியில் மாவட்ட நீதி மற்றும் நிர்வாக அலுவலகங்களை ஏற்படுத்தினார் திருமலை மன்னன்.  திருமலை மன்னன் கட்டிய மஹாலின் ஐந்தில் ஒரு பகுதிதான் தற்போது  இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த மஹாலின் பெருமைகளைp பார்த்துக்கொண்டே உள்ளே செல்லும் போது மிக பிரம்மாண்டமான தூண்கள் நம்மை வரவேற்கின்றன. கூடவே ஒரு அறிவிப்பும் நம் கண்களில் படும். ஆனால், அதற்கு கீழே கண்ட காட்சிக்கும், அந்த அறிவிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லைன்னு புரிந்தது.

58 அடி உயரம் உள்ள 248 தூண்கள் இந்த அரண்மனையில் அமைந்துள்ளது. மாளிகையின் கூரையில் விஷ்ணு மற்றும் சிவனைப்பற்றிய ஐதீக புராணக்காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ள இந்த அரண்மனையில் ஸ்டுக்கோ பாணி அலங்கார அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மற்றும் மரச்சாமான்களையும் இந்த அரண்மனையில் காணலாம். அரண்மனை முகப்பு, நாட்டிய அரங்கம் மற்றும் பிரதான மண்டபம் போன்றவை இந்த அரண்மனையின் முக்கிய அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. 1860-70ம் ஆண்டுகளில் இந்த அரண்மனை மாளிகை ஆங்கிலேயரால் புதுப்பிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
மஹாலில் நுழைந்ததும் தென்படுவது, அரண்மனை தர்பார் மண்டபம். இங்கிருந்துதான் திருமலை மன்னர் மதுரையை ஆண்டு வந்தார். தினசரி நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இங்கு நடைப்பெறும். நவராத்திரி விழா, சித்திரைத் திருவிழா, மாசி விழா, தெப்பத் திருவிழா ஆகியவற்றை திருமலை நாயக்கர் நடத்தி வந்தார்.

இந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது. மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றொன்றும் 58 அடி நீளமும் 5 அடி விட்டமும் கொண்டது. தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் இந்த அரண்மனையை கட்டிய திருமலை மன்னன். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர்தம் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும்  முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். திருமலை நாயக்கர் கட்டிடக்கலை மட்டுமல்லாது சிற்பக்கலையிலும் கவனம் செலுத்தி அதை வளர்த்துள்ளார் ! 

இவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு என்பதாகும். முதலாம் முத்துவீரப்பர்   சந்ததியின்றி இறந்தமையால் இவரது தம்பி திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்

திருமலைநாயக்கர் கி.பி.1623ல் திருச்சியை தலைநகராய் கொண்டு அரியணையில் ஏறினார். திருச்சியின் சூழல் இவருக்கு ஒத்துவரவில்லை. மண்டைச்சளி பாதிக்கப்பட்டார்.  மதுரைக்கு வரும்போதெல்லாம் மீனாட்சி அம்மனை தொழுது செல்வார். திண்டுக்கல்லில் திருமலைநாயக்கர் இருந்தபோது ஒருநாள் கனவில் மீனாட்சி சுந்தரர் ‘இனி திருச்சிக்குப் போக வேண்டாம். மதுரைக்கு நிலையாக வந்துவிட்டால் நோய் தீரும்’ எனச் சொன்னார். காலையில் முகங்கழுவி மூக்கைச் சிந்திய போது அவரது நோய்  போய்விட்டதாகவும் செவிவழி கதை சொல்கிறார்கள். திருச்சியிலிருந்த தலைநகரத்தை மதுரைக்கு மாற்றி கி.பி1659 வரை மதுரையை ஆட்சி செய்தார்.

விஜயநகர பேரரசுக் காலத்தில் கிருஷ்ண தேவராயர் மதுரையை நிர்வகிக்க நாகம நாயக்கரை அனுப்பினார். அவர், மதுரைக்கு தன்னையே ராஜாவாய் பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர்தம் போக்கை மற்ற மந்திரிகள் போட்டுக் கொடுக்க, கிருஷ்ணதேவராயரிடம் போட்டுக் கொடுக்க, கிருஷ்ண தேவராயர் ஆணையின்படி மதுரை வந்து நாகம நாயக்கரைப் பிடித்து மன்னனிடம் ஒப்படைக்கிறார் நாகம நாயக்கரின் மகனான விஸ்வதநாத நாயக்கர். 

அவர்தம் வீரத்திற்கும், விசுவாசத்திற்கும்  பரிசாய் நாகம நாயக்கரை விடுவித்து ,  மதுரையை நிர்வகிக்கும் பொறுப்பை விஸ்வநாத நாயக்கருக்கு கிருஷ்ண தேவராயர் அளிக்கிறார். கி.பி. 1530லிருந்து, கி.பி 1736 வரை மதுரையை நாயக்கர் வம்சம் ஆட்சிப் புரிந்தது. அதில் ஏழாவது தலைமுறையைச் சார்ந்தவர்தான் இந்த திருமலை நாயக்கர்.



திருமலை நாயக்கர் திருவில்லிபுத்தூர் ஆண்டாளின் தீவிரமான பக்தன். தினந்தோரும் ஆண்டாள் கோவில் உச்சிகால பூசை முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூசை மணிஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல மணிமண்டபங்களை அமைத்தார். பூசை முடிந்ததும் கோவில் மணி ஓசை கேட்டு முதல் மணிக்கூண்டு மணியை பணியாள் ஒலிக்க விட, அதைக்கேட்டு இரண்டாம் மணிக்கூண்டு பணியாள் மணியை ஒலிக்க விட..., இப்படியே தொடர்ந்து மனிகள் ஒலிக்க அது மன்னரின் காதுகளை வந்தடையுமாறு ஏற்பாடு செய்திருந்தாராம். 





என்னதான் அறிவிப்பு பலகை இருந்தப்போதிலும் எங்கெங்கு காணினும் இவங்க சேட்டைதான். இதேப்போல் ஒரு அரண்மனையை ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் திருமலை நாயக்க மன்னர் கட்டி இருக்கார். ஆனால், இதுப்போன்று பிரம்மாண்டமாய் அந்த அரன்மனை இல்லை.


மதுரை மாநகரின் நடுவில் திருமலைநாயக்கர் அரண்மணை உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றவாறு தினமும்  காலை 9 மணி மதல் 1 மணி வரையிலும், மாலை 2மணி முதல் 5மணி வரை திறக்கப்பட்டிருக்கும்.மாலை நேரங்களில் திருமலைநாய்க்கர் வாழ்க்கை வரலாறு மற்றும் சிலப்பதிகார கதைகளை நாடகங்களாக நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள வண்ண ஒளி கொண்ட மேடையில் அரங்கேற்றுவது மற்றொரு சிறபம்சம்.

ஸ்ஸ்ஸ்ஸ் அபா! நடந்து நடந்து கால்லாம் வலிக்குது. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, அடுத்த வாரம் இங்குள்ள அருங்காட்சியகத்தையும், சொர்க்க விலாசத்தையும் பார்க்கலாம்....,

Tuesday, June 24, 2014

மாங்காய் சாதம் - கிச்சன் கார்னர்

எங்க ஊர் பக்கம்லாம் தலைப்பிள்ளையை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு அம்மா, நாத்தனார், தாய்மாமன், அக்கா, அத்தை வீடுகளிலிருந்து விதம்விதமான சாதம், பலகாரம்லாம் செஞ்சு எடுத்துப் போய் கொடுக்குறது வழக்கம். அப்படி எடுத்துப் போற சாத வகைகளில் மாங்காய் சாதம், புளிசாதம், புதினா சாதம், புதினா துவையல் அவசியம் இருக்கும். 

இப்போதான் எல்லா சீசன்களிலும் மாங்காய் கிடைக்குது. அதுக்கு முன்னலாம்  சீசன் இல்லன்னாலும் எப்படியாவது மாங்காய்களை வாங்கி சாதம் கிளறிக் கொண்டுப்போய் கர்ப்பிணிகளுக்குக் கொடுப்பாங்க.

மாங்காய் சாதம் செய்ய தேவையானப் பொருடகள்:

உப்பு போட்டு உதிரியாய் வடித்த சாதம் - ஒரு கப்
முற்றிய மாங்காய் - 1
ப.மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு,
பெருங்காயம் -சிறிது
மஞ்சப்பொடி - சிறிது
கடுகு - சிறிது
கடலைப்பருப்பு - 1  டீஸ்பூன்
உளுத்தப் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு தேவையான அளவு
சமையல் எண்ணெய் - 3 டீஸ்பூன்

அரிசியை 1 மணி நேரம் ஊற வச்சு உப்பு போட்டு உதிரி உதிரியாய் வடிச்சி, அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வச்சுக்கோங்க. மாங்காயை கழுவி தோல் சீவி துருவிக்கோங்க. பச்சமிளகாயை நீளவாக்குல அரிஞ்சு வச்சுக்கோங்க, இஞ்சியை சுத்தம் பண்ணி தோல் நீக்கி நசுக்கி வச்சுக்கோங்க.
  

அடுப்பில கடாய் வச்சு எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு போட்டு பொரிஞ்சதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க வறுத்துக்கோங்க.

அடுத்து பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க விடுங்க.

அடுத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்குங்க.

இஞ்சி போட்டு வதக்குங்க.

அடுத்து மாங்காய் போட்டு வதக்குங்க.


பெருங்காயப்பொடி சேருங்க.


உப்ப்பு சேருங்க.
மஞ்சப்பொடி சேர்த்து சிறு தீயில் வதக்குங்க. மாங்காய்லாம் வெந்து எண்ணெய் பிரிஞ்சு வரும் நேரத்தில் அடுப்பை அணைச்சுட்டு இறக்கிடுங்க.


மாங்காய் விழுது ஆறினதும் ஆற வச்சிருக்கும் சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கிளறுங்க. 


சுவையான மாங்காய் சாதம் ரெடி.  பருப்புகளோடு முந்திரியும் சேர்த்துக்கலாம்.  இது மாங்காய் சீசன். பிள்ளைகளுக்கு மதியம் லஞ்ச் பாக்சுக்கு கொடுத்தனுப்பலாம். மிக்சர், வத்தல், அப்பளத்தோடு சாப்பிட நல்லா இருக்கும். 

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட கிச்சன் கார்னர்ல சந்திக்கலாம்...,