டிவின்னா பாட்டு கேட்கவும், மிச்ச நேரத்தில் பின்கோடு, நீரும் நிலமும், ஊரும் பேரும், வரலாற்று சுவடுகள், மண் பேசும் சரித்திரம், மூன்றாவது கண், சுற்றலாம் சுவக்கலாம், ஊர் சுற்றலாம் மாதிரியான இடம் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்க பிடிக்கும். அந்தந்த இடங்களின் உணவு, வரலாறு, கலாச்சாரம், கோவில், கோட்டைகளை சுத்திக்காட்டும் நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பேன். புதுசா ஒரு இடத்தினை பார்த்தால் இங்க போகனும்ன்னு மனசுல நினைச்சுப்பேன். அந்த பக்கம் போகும்போது கண்டிப்பா அந்த இடங்களுக்கு போய் வருவேன். வேந்தர் டிவில பின்கோடு நிகழ்ச்சில வேலூர் பத்தின பெருமைலாம் சொல்லிக்கிட்டு வரும்போது விளாப்பாக்கத்துல பஞ்சபாண்டவர் மலைன்னு இருக்குன்னு சொல்லி காட்டுனாங்க. பஞ்ச பாண்டவருக்கும், வேலூருக்கும் என்னடா சம்பந்தம்ன்னு பல நாளாய் மண்டைக்குடைச்சல்.
சரி அந்த இடத்துக்கு போனால்தான் இதுக்கு தீர்வு கிடைக்கும்ன்னு அங்க போயே ஆகனும்ன்னு முடிவு செஞ்சாச்சுது. வீட்டிலிருந்து ஜஸ்ட் 24கிமீதான். ஆனா, 6 மாசமா முயற்சி செய்றேன். ஆனா போக வாய்ப்பில்லை. ஆரணி டூ வேலூர் ஆற்காடு மார்க்கமாவும் போகலாம். ஆற்காட்டிலிருந்து 6 கிமீதான். வண்டில ஒரு முறுக்கு முறுக்குனா போயிடலாம்தான். ஆனாலும் தனியா போக ஒரு பயம். இந்த விஜயதசமிக்கு வேலூர் கோவிலுக்கு போகலாம்ன்னு கூப்பிட, ஓகே, ஆனா இந்த இடத்துக்கு கூட்ட்டி போனால்தான் வருவேன்னு கண்டிஷன் போட, சரி வந்து தொலைன்னு சொல்ல கிளம்பியாச்சுது.
இங்க நான் ஒன்னு சொல்லியே ஆகனும். எங்க வீட்டில் என்னையும், என் சின்ன பொண்ணையும் தவிர மத்ததுக்கும் கலாரசனைக்கும் வெகுதூரம். எங்காவது கோவிலுக்கு போனா, ராமர் விட்ட பானம்போல சொய்ய்ய்ய்ன்னு போய் சாமி கும்பிட்டு ஒரு சுத்து சுத்தி வந்து விழுந்து கும்பிட்டு வந்திடனும். நின்னு நிதானிச்சு என்ன வரலாறு, யார் கட்டினது அங்க வேற என்ன விசேசம்ன்னு விசாரிக்காதுங்க. ஆனா, நான் போனதும் முதல்ல கோவில் அல்லது இடத்தை பத்தி அங்கிருக்கவுங்கக்கிட்ட விசாரிப்பேன். தெரிலயா கூகுள்ல விசாரிச்சுட்டுதான் இடத்தை பார்க்க ஆரம்பிப்பேன். அப்புறம்தான் சாமிலாம்.
ராஜராஜன் கல்வெட்டு. குண்டு குண்டா நல்லாதான் செதுக்கி வச்சிருக்காங்க. ஆனா, நமக்குதான் அர்த்தம் விளங்கல.
என்னோடவே என் சின்ன பொண்ணு சுத்தும். ஆஹா! நம்ம காலத்துக்கு அப்புறம் நம்ம பிளாக்கை பார்த்துக்க ஆள் இருக்குன்னு சந்தோசப்பட்டுக்கிட்டிருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சுது படமெடுத்துக்கும் ஆர்வமும், செல்ஃபி ஆர்வமும்தான் என்னோடவே சுத்த காரணம்ன்னு.. யாரை நம்பி பிளாக்கை ஓப்பன் பண்ணேன்?! போங்கடா போங்க!ன்னு மனசை தேத்திக்கிட்டேன். இப்ப எதுக்கு இந்த சுயபுராணம்ன்னு நினைச்சுக்கலாம் காரணமிருக்கு.
கார்ல போகும்போதே அங்க இங்க விசாரிச்சு பாண்டவர் மலைக்கு போய் சேர்ந்தாச்சு. ரோட்டுக்கு அந்த பக்கம் மசூதியும், இந்த பக்கம் ஒரு மலையும் இருந்துச்சு. அப்பவே நமக்கு உரைச்சிருக்கனும். டிவில பார்க்கும்போது குகை கீழ இருந்துச்சுன்னு... பெண்புத்தி பின்புத்திதானே?! மூச்சு வாங்க மேலேறி சுத்தி பார்த்துட்டு கீழ இறங்கி வந்தபின் தான் தெரிஞ்சுது. நான் தேடிவந்த குகை மலைக்கு அந்த பக்கமா இருக்குன்னு....
பஞ்சபாண்டவர் அஞ்ஞான வாசத்தின்போது இங்க வந்து தங்கி இருந்ததால் பஞ்சபாண்டவர் மலை(குகை)ன்னு பேர் வந்துச்சுன்னு சொன்னாலும், பஞ்சபாண்டவருக்கும் இந்த இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த இடத்துக்கு பேரு திருப்பாண்மலை. இதுக்கு ஆதாரம் அங்கிருக்கும் ராஜராஜசோழன் கல்வெட்டு. இந்த இடம் ஒரு சமண கற்படுக்கையாகும். மலையின்மேல், மலையின் கீழ் என இரண்டு பகுதிகளா நாம பார்க்க வேண்டிய இடங்கள் பிரிஞ்சு கிடக்கு.
சாலையின் வலதுபுறத்தில் தொல்லியல் துறைக்குட்பட்ட இடம்ன்றதுக்கு அத்தாட்சியா ஒரு போர்ட் இருக்கு. அதில்லாம மலையை சுத்தி கம்பிவேலி போட்டிருக்காங்க. சிறிய நுழைவாயிலை கடந்து மலை ஏறி போகனும்.
சரியான பாதை வசதி கிடையாது. மலைப்பாதையிலிருக்கும் சின்ன பாறைகள் உருளாம இருக்க பாறைகளுக்கிடையில் சிமெண்ட் பூசி வச்சிருக்காங்க. சில இடங்களில் பாறைகளில் வெட்டப்பட்ட படிகள் இருக்கு, உயரம் அதிகமில்லாம படிகள் இருப்பது ஆறுதல்.
மலைக்குமேல் இயற்கையாய் அமைந்த குகை ஒன்னு இருக்கு. இந்துக்கள் , சமணர்கள் என கைமாறி ஆற்காடு நவாப்கள் காலத்தில் இந்த இடம் முஸ்லீம்கள் வசம் போனது. ஆனா, இந்த இடம் அவங்க வழிபாட்டு தலமா இருக்குற மாதிரி தெரில. மேலிருக்கும் குகையில் இரண்டு பாய்மார்கள் சமாதி இருக்கு. மேலும் மற்றவர்கள் வணங்குவதற்காக உள்ளூர் மக்களை ஈர்க்கும் மசூதியில் மாறியுள்ளனர்.
முழுக்க முழுக்க வழுக்கு பாறைன்றதால கைப்பிடிக்காக கம்பிகள் நட்டிருக்காங்க.
மேலிருக்கும் குகை, பாய்மார்களின் சமாதிக்கும் சேர்த்து செங்கற்களினால் சுற்றுச்சுவர் எழுப்பி இருக்காங்க. இது போன ஓரிரு நூற்றாண்டுகளில்தான் இந்த வேலை நடந்திருக்கும். ஏன்னா சமீபத்திய செங்கற்கள் போல இல்லாம பழைய பாணியில் இருக்கு.
அங்க இருக்கும் சமாதி இங்க வசிச்ச ஒரு முஸ்லீம் குடும்பத்துடையதுன்னு அங்க இருக்கும் கண் தெரியாத பாட்டி சொல்லிச்சு. அது உண்மையான்னும் தெரில மலைமேல் சுனை ஒன்னு இருக்கு. நம்மாளுங்களுக்குதான் எதையும் பாதுகாக்க தெரியாதே! வாட்டர் பாட்டில் முதற்கொண்டு பீர் பாட்டில் வரை கிடக்கு.
அந்த சுனைக்கு பக்கமிருக்கும் ஒரு பாறையில் அழகிய யட்சினியின் சிற்பம் இருக்கு. அம்பிகைன்னு அவளுக்கு பேராம். ஒரு குளம் அருகே, பாறையின் கூரையை அமைக்கும் மற்றொரு பாறைக் கீழ், பாறை முகத்தில் செதுக்கப்பட்டுள்ளது. யட்சி தரையில் ஒரு மரத்தின்கீழ் ஒரு காலூன்றி, ஒரு காலில் உட்கார்ந்திருக்கிறாள். அவளுக்கருகில் அவளை ரசித்தவாறு ஒரு ஆண் நிற்க அவளின் காலடியில் அவளிடும் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு பெண்கள் குதிரைமேல் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றனர்.
இந்த இடம் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜைன மையமாகத் திகழ்ந்திருக்கிறது. விளாப்பாக்கத்திலிருக்கும் சிவன் கோவிலில் இருக்கும் சோழ மன்னர் பரந்தக சோழரின் ஒரு கல்வெட்டுப்படி இதை அறியலாம் பத்தாம் நூற்றாண்டின் முதல் பாதியில், இந்த நகரம் ஜைன துறவியின் வலுவான செல்வாக்கின் கீழ் இருந்ததாகவும் அந்த கல்வெட்டு சொல்லுதாம்.
மலைமேலிருக்கும் பாறைகளிலிருக்கும் கல்வெட்டுகள் பல்லவ மன்னன் நந்திர்மர்மன், சோழ அரசர் ராஜராஜன் காலத்தியதுன்னு சொல்றாங்க. ராஜராஜ சோழனால் வரி விதிக்கப்பட்ட இடம் இதுன்னு கல்வெட்டு சொல்றதா சொல்றாங்க. அதாவது விளாப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் நெசவாள குடும்பங்களும், விவசாய குடும்பங்களும் இருந்ததாம்.
இந்த இரு தொழிலை தவிர, உடை வெளுப்பு, நாவிதம், வாணிபம் என அந்த ஊருக்கு சம்பந்தமில்லாதவங்க அந்த ஊரில் தொழில் செய்தால் வரி தரனுமாம். அந்த வரியை வசூலிக்க ராஜராஜ சோழனால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அடிமை ஒருவனின் மனைவியும், பிள்ளைகளுக்குரியதுன்னு இருக்குறதா சொல்றாங்க. எந்தளவுக்கு உண்மைன்னு தெரில.
மேலிருக்கும் குகையை பார்த்ததும் மலையின் அடிவாரத்தில், மலையை குடைந்து உண்டாக்கப்பட்ட சமணர்களின் கற்படுக்கையை பார்க்க போனோம். மண்ணுக்கடியில் புதையுண்ட இந்த கற்படுக்கையை வரலாற்று ஆய்வாளர்களின் சீரிய முயற்சியால் வெளிவந்திருக்கு.
பல்லவபாணியில் குடையப்பட்ட மிகப்பெரிய குகைக்கோயில். இந்தக் குகைக் கோபுரங்களை வரிசையா பன்னிரண்டு தூண்கள் தாங்குது. இந்த தூண்கள் மேல்மட்டம் சதுரமாகவும், தூண்கள் மற்றும் விமானங்கள், மேலே வளைந்த கோள்கள் என இருக்கு. பக்க சுவர்கள் சதுர வடிவில் செதுக்கப்பட்டிருக்கு.
இந்த கற்படுக்கையின்மேல் யோகநிலையிலிருக்கும் சமண தீர்த்தங்கரர் உருவம் ஒன்னு இருக்கு. இதே பாறையில் தெற்குமுகத்தில் நிர்வாண தீர்த்தங்கரர் உருவமும், நாயா நரியான்னு தெரியாத உருவமும் இருக்கு.
மொத்தம் ஏழு கற்படுக்கைகள் இங்கு காணப்படுது. ஆனா, சம்மனமிட்டு ஒருத்தர்கூட உக்காரமுடியாது. அதுல எப்படி உக்காந்து தியானம் செஞ்சாங்கன்னுதான் புரில.
ஆற்காடு டூ காவனூர் சாலையில் பாண்டவர் மலைன்னு சொல்லப்படும் திருப்பன்மலை இருக்கு. இதை திருப்பாண்மலைன்னு சொல்றாங்க. ஆற்காட்டிலிருந்து 6 கிமீ தூரத்திலிருக்கு. ஆற்காடிலிருந்து காவனூர் செல்லும் பேருந்தில் பயணிக்கலாம். இல்லன்னா, ஆற்காடு டூ ஆரணி சாலையிலிருக்கும் திமிரியில் இறங்கியும் பயணிக்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பேருந்து இருக்கு.
ஒரு இடத்தின் அருமை பெருமையை உலகறியாதது யார் தவறு?! தெரிவிக்காத பெரியவங்க பக்கமா?! இல்ல தெரிஞ்சுக்கும் ஆர்வமில்லாத நம்ம பக்கமா?! இல்ல இந்த மாதிரியான இடங்களை கட்டி காத்து, அதை பத்தி மக்களிடம் சொல்லாத அரசாங்கத்து பக்கமா?! என் நிலை இனி ஒரு இடத்துக்கு வரக்கூடாது.ம் பார்த்து செய்ங்க மக்களேன்னு மௌனமாய் நின்று நமக்கு புத்தி சொல்லிக்கிட்டிருக்கு இந்த திருப்பன்(பாண்)மலை...
இடம் ரொம்ப அமைதியா, வயல்வெளி சூழ இருக்கு. ஒருநாளைக்கு சிக்கன் சமைச்சு கொண்டு வந்து சாப்பிடனும்ன்னு என் அப்பாவும், மகனும் சொல்ல, பிரண்டுகளோடு வர சூப்பரான இடம்ன்னு என் பொண்ணு சொல்ல...
சாமியாரா போறவங்களுக்கு ஏத்த இடம்ன்னு நான் சொல்றேன். சுத்திலும் ஆள் அரவமிருக்காது. குளிக்க, சமைக்க, குடிக்க தாமரை தடாகமிருக்கு. சமைச்சு சாப்பிட இடம் தாராளமா இருக்கு. விறகுக்கு பஞ்சமே இருக்காது. காட்டு மரங்களும், மாடுங்க இடும் சாணமும் இருக்கு... என்ன ரெடியா?!
நன்றியுடன்,
ராஜி