Wednesday, July 31, 2019

ராவணனை பழிதீர்த்த சூர்ப்பனகை - வெளிச்சத்தின் பின்னே....


மூக்கும், முலையும் அறுபட்ட வேதனை, வலி, அவமானத்தைவிட ராவணனின் வீழ்ச்சிக்கு அஸ்திவாரம் தோண்டிய திருப்தியில் இலங்கைக்கு பயணமானாள் சூர்ப்பனகை.... 

அண்ணா! என்று அலறிய சூர்ப்பனகையின் குரல் இலங்கையை கலங்கடித்தது. விவரம் என்னவென கேட்ட உற்றார், உறவினர்களையெல்லாம் ஒதுக்கி ராவணனிடம் வந்து நடந்ததை சொன்னாள்.


நமக்கு சொந்தமான பஞ்சவடியில் ராமன் என்பவனும், அவன் மனைவி சீதாவும், அவன் தம்பி லக்குமனனும் வந்து தங்கி உள்ளனர். புதியதாய் வந்திருக்கும் நபர்களை பற்றி அறிய அங்கு சென்று விவரம் கேட்டேன், இலங்காபுரி மன்னனின் அருமை தங்கை என சொல்லியும் திமிராய் பதிலளித்தனர். நான் இன்னாரது தங்கை என சொல்லச்சொல்ல, இது எமது இடம் என சொல்லியும் எனக்கு மரியாதை தரவில்லை.  ராமனின் மனைவி சீதையானவள் பேரழகி, அவளுக்கு ஒப்பானவர் இப்புவியில் இதுவரை பிறந்ததுமில்லை, இனி பிறக்கப்போவதுமில்லை. காட்டில் வாழும் ஒரு சாதாரண மனிதனுக்கு அந்த அழகு வசப்படக்கூடாது. மன்னாதி மன்னனாம், அசுரக்குல தலைவனான உனக்கே அவள் சொந்தமாக வேண்டியது என  நினைத்து சீதையை உமக்கு பரிசாய் தர அறிவுறித்தினேன். அதற்கு கிடைத்த பதில்தான் இந்த மூக்கறுப்பும்.. முலையறுப்பும்....
Image result for shurpanakha

ராவணனுக்கு பெண்பித்து உண்டென நன்கு அறிவாள் சூர்ப்பனகை..  தனது தம்பியான குபேரனின் மகன் நளகுபேரனை மணக்க இருந்த ரம்பையை, மருமகள் என்றும் பாராமல் கவர்ந்து வந்தவன்தானே இந்த ராவணன்?!  தன்னை கவர்ந்து கோவத்தில் விருப்பமில்லாத பெண்ணை தொட்டால் தலைவெடித்து இறந்து போவாய் என ரம்பை சாபமிட்டதும் சூர்ப்பனகைக்கு நினைவில் வந்தது.

இன்றைய பேஸ்புக் காதல்போல் ராவணனுக்கு  சீதையை காணாமலே அவள்பால் காதல் வந்தது.  தங்கையின் அவமானத்தைவிட, காமம் கொப்பளித்தது. சீதையை கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறை வைத்தான். வானரப்படைகளுடன் வந்து போர் தொடுத்தான் ராமன்.  போரில் வீழ்ந்தான் ராவணன். மண்டோதரி, விபீஷ்ணன் உட்பட அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். ஆனால், ஒருத்தி மட்டும் மகிழ்ச்சியோடு இருந்தாள். அவ்வாறு மகிந்திருந்த அவள் சீதையல்ல! சூர்ப்பனகை..

சொந்த அண்ணனின் மரணத்திற்காக யாராவது மகிழ்வார்களா?! அதுவும், ராமனின் மனைவி சீதையென்று தெரிந்திருந்தும், சீதை ராமனின்மேல் அளவற்ற காதல் கொண்டிருந்தாள் என்றிருந்தபோதும், அவளுக்கு காவலாய் லட்சுமணன் இருக்கிறான் என இத்தனையும் தெரிந்தும் சீதையின் அழகினை சொல்லி சிறந்த அழகி அண்ணன் வசமே இருக்கவேண்டுமென விரும்பிய சூர்ப்பனகையா இப்படி மகிழ்ந்திருந்தாள்.

அப்படி அவள் மகிழ காரணம் என்னவாய் இருக்குமென யோசித்தால், அதற்கு விடையாய் அவளின் பூர்வ ஜென்மத்தில்தான் விடை கிட்டும்.  சூர்ப்பனகை முற்பிறப்பில் ஆனந்த குரு என்பவருக்கு மகளாகப் பிறந்தாள். முற்பிறப்பில் அவளுக்கு சுமுகி என்று பெயர். ஆனந்த  குருவிடம், சத்தியவிரதன் என்ற மன்னனின் மகனான சங்கசூடணன் என்பவன் பாடம் படித்தான். சங்கசூடணனை சுமுகி விரும்பினாள். குருவின் மகள் என்று ஒதுங்கி போனான் சங்கசூடன். ஒருநாள் பாடத்தில் சந்தேகம் கேட்க குருவின் வீட்டுக்கு சங்கசூடணன் சென்றான். குரு  வீட்டில் இல்லை. சுமுகி தனித்திருந்தாள். தன் காதலை மீண்டும் சங்கசூடணனிடம் வெளிப்படுத்தினாள். 
அதற்கு, பெண்ணே! குரு துரோகம் பொல்லாதது. குருவின் மகளான உன்னை என் தங்கையாகவே நினைக்கிறேன்,'' என சொல்லி அவளை கண்டித்து, அங்கிருந்து சென்றுவிட்டான் சங்கசூடணன். காதலில் ஏமாற்றமடைந்த சுமுகி, அவனை அடைய வேண்டி, தான் கற்பிழந்துவிட்டதாக சொன்னால், தந்தை தனக்கு அவனையே மணமுடித்து வைப்பார் என எண்ணி,  தனது தந்தை வீட்டுக்கு வந்ததும் தன்னை சங்கசூடணன்  கெடுத்து விட்டதாக பழி சொன்னாள். இதை நம்பிய சுமுகியின் தந்தை, மன்னனிடம் இதுபற்றி புகார் தெரிவித்தார். மன்னனும் அதை  நம்பி, தன் மகனின் கை, கால்களை வெட்டிவிட்டான். சங்கசூடணன் பூமியில் விழுந்து, தர்மம் அழிந்து விட்டதா? எனக்  கதறினான். உடனே பூமி பிளந்தது. உள்ளிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டான். "சங்கசூடா! இப்பிறப்பில் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய சுமுகியை மறுபிறப்பில் நானே பழிவாங்குவேன்,'' என்றான். சங்கசூடணன் மறுபிறப்பில் ராவணனின் தம்பியாக (விபீஷணன்) பிறந்தான். அவனது தங்கையாக சுமுகி பிறந்தாள். அவளே  சூர்ப்பனகை எனப் பெயர்பெற்று வளர்ந்து வந்தாள்.
Urvashi was considered to be the most beautiful of them all, even more so than Rambha, the queen of the Apsaras. Menaka was sent by Indra to seduce the sage Vishvamitra, while Tilottama is responsible for cracking open a can of whoop ass on two Asura whom attempted world domination, Sunda and Upasunda. (Or rather, causing them to beat the shit out of each other to see who got dibs)

கைகேயி, சகுனி, வரிசையில் எதிர்மறை கதாபாத்திரமாய் சூர்ப்பனகை இருப்பதாலும், அசுரக்குல பெண் என்பதாலும் அவளை கோரைப்பற்களுடனும், உப்பிய வயிறுமாய் நாம் கற்பனை செய்து வைத்திருக்கிறோம். ஆனால், அவள்
 கானின் உயர்கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி
மேனிநனி பெற்றுவிளை காமநெறி வாசத்
தேனின் மொழி உற்றினிய செவ்விநன் பெற்று(ஓர்)
மானின் விழிபெற்று  மயில்வந்த தென வந்தாள்.”
கற்பகதரு உயிர் பெற்று வந்ததுபோல, ஒளிவீசும் கொடி போன்ற மேனியுடன், மருண்ட மானின் விழியுடனும், மயில் போன்ற அழகுடனும் நறுமணம் எங்கும் பரவுமாறு வந்து ராமனின் அருகில் நின்றாள் சூர்ப்பனகை.  அவள் உடலில் இருந்த சிலம்பு, முத்தாரம், மேகலை ஒலித்து அவளது வருகையினை ராமனுக்கு அறிவிக்கின்றது. வேறு வேலையாய் இருந்த ராமன் அணிகலன்கள் எழுப்பிய ஒலிக்கேட்டு ஓசை வந்த இடத்தை பார்க்கிறான். ஏனென்றால்  அவள் நடந்துவரும்போது சிறு ஒலிகூட எழும்பலியாம். அவள் உடலிருந்த ஆபரணங்கள் ஒலியை வைத்துதான் திரும்பி பார்த்ததா கம்பன் சொல்றார். மலரினும் மெல்லிய பாதத்தினை உடையவளாம் சூர்ப்பனகை. அவள் எடுத்து வைத்த அடிகூட ஒரே சீராய் ஸ்வரங்களைப்போல் இருந்ததாய். மயில், அன்னம்கூட தோற்றுப்போகும் நடைக்கு சொந்தக்காரி என கம்பர் அவளது அழகை வர்ணிக்கிறார் கம்பர்.
 ” விண் அருள வந்ததொரு மெல்லமுதம் என்ன”
என சூர்ப்பனகையின் அழகை கண்டு இவள் யாரோ?! இந்த அழகுக்கும் ஈடு இணை உண்டா என ஏகபத்தினி விரதனான ராமனே வியந்து நின்றானாம். அப்பேற்பட்ட அழகுக்கு சொந்தக்காரிதான் சூர்ப்பனகை.

அருகில் வந்த சூர்ப்பனகையை வரவேற்ற ராமன், அவளை யார்?! வந்த நோக்கம் என்னவென விசாரிக்கிறான். தாடகையின் பேத்தி, கேசியின் மகள், ராவணனின் தங்கை என அறிமுகப்படுத்திக்கொண்டு தன் பெயரை காமவல்லி என சொல்கிறாள்.  தங்களை மணக்கவேண்டும் என்பதே என் நோக்கம் என சூர்ப்பனகை சொல்கிறாள்.

தனக்கு மணமாகிவிட்டதாக ராமன் சொல்கிறான்..

இருக்கட்டுமே! பலதாரம் என்பது உலக வழக்கில் இல்லாதது ஒன்றுமில்லையே! உமது தந்தைக்கும்கூட அறுபதாயிரம் மனைவிகளாச்சே! என்று ராமனை  சூர்ப்பனகை சமாதானப்படுத்தினாள்.

தந்தையை சொன்னதும் ராமனின் முகம் வாடியது.

அதை கவனித்த சூர்ப்பனகை, ஐயனே! என்னை மன்னித்து விடுங்கள். தங்களை சமாதானப்படுத்தவே தந்தையை பற்றி பேசினேன் என்றாள்

எனக்காக எதுவேண்டுமானாலும் செய்வாயா?! என்றான் ராமன்

ம்ம்ம்ம் செய்வேன்,  என்றாள் சூப்பனகை.

நான் உன் பாட்டி தாடகையை கொன்றவன் என தெரியுமா?

தாங்களா என் பாட்டியை கொன்றவர்?! ஏன் என்றாள்

அது விசுவாமித்திரர் சாபத்துக்கு அஞ்சி செய்த பாவம். இனியொருமுறை அப்பாவத்தை நான் செய்யக்கூடாதென  முடிவெடுத்துள்ளேன். கட்டிய மனைவியை தவிக்க விட்ட பாவம் என்னை சேரக்கூடாது. நான் ஏகப்பத்தினி விரதன் என சபதமேற்றுள்ளேன். அதனால், என் தம்பியும் இங்குதான் உள்ளான். அவன் தன் மனைவியை பிரிந்து வந்துள்ளான். நீ அவனை மணந்துக்கொள் என்றான் ராமன். 
No photo description available.
எங்கள் நாட்டில் ஆண்களுக்கு பஞ்சம் ஒன்றும் வந்துவிடவில்லை. நான் வேசியுமில்லை. கண்டவனுடன் ஒன்றுசேர... இதே வார்த்தையை வேறு யாராவது சொல்லி இருந்தால் இந்நேரம் நடந்திருப்பதே வேறு என ராமனை எச்சரித்தாள்.

எனக்காக எதுவேண்டுமானாலும் செய்வேன் என்றாயே! என அவளது வாக்குறுதியை நினைவுப்படுத்தி, நான் சீதையோடு அவ்வப்போது கூடிக்களிக்கிறேன். ஆனால், என் தம்பியோ மனைவியை பிரிந்து வந்து விரகதாபத்தில் இருக்கிறான். அவனது தாபத்தை தணித்தால் நான் மிக்க மகிழ்வேன். அவன் என்னைவிட அழகன் என்றான் ராமன்.

அழகு முக்கியமில்லை. உங்களுக்காக எரிந்து கரிக்கட்டைப்போல் இருப்பவனுடன் கூடுவேன். எனக்கு உங்களது மனமகிழ்ச்சியே முக்கியம் என்றாள் சூர்ப்பனகை..

ராமனுக்கு அவளது காதல் புரிந்தது. இருந்தும் ஏகபத்தினி விரதன் என எடுத்த சபதம் அவனது நினைவுக்கு வந்து ஏதும் செய்ய இயலாதவனாய், லட்சுமணன் இருந்த திசையை காட்டினான்.

லட்சுமணனை நெருங்கிய சூர்ப்பனகை, தனது காதல் மொழிகளை சொல்லி, ராமனது வேண்டுகோளையும் சொன்னாள். தாய்க்கும்மேல மதிக்கும் அண்ணிக்கு போட்டியாய் வந்திருக்கும் சூர்ப்பனகை எரித்துவிடுவதுப்போல பார்த்து கண்டபடி அவளை திட்டினான்.   ராமனும், லட்சுமணனும் தன்னை ஏற்றுக்கொள்ள தடையாய் இருப்பது சீதை என்று உணர்ந்த சூர்ப்பனகை சீதையை கொன்றுவிட நினைத்து சீதையை நோக்கி பாய்ந்தாள். சீதை அலறியபடி அங்கும் இங்கும் ஓடினாள். 
சீதையின் அலறல் சத்தம் கேட்டு லட்சுமணன் பாய்ந்து வந்து சூர்ப்பனகையின் மூக்கினையும், முலையினையும், காதினையும் அறுத்து எறிந்தான்.  அழுதபடியே அங்கிருந்து சூர்ப்பனகை இலங்கை நோக்கி நடந்தாள். அதன்பின் நடந்த கதை ஊரறியும். ஆனால், அறியாத கதை ஒன்றுண்டு...

இலங்கையினை நோக்கி நடந்த சூர்ப்பனகையை, வலிக்கிறதா சூர்ப்பனகை என வானிலிருந்து வந்த ஒரு குரல் ஆறுதல் படுத்தியது. அக்குரலுக்கு சொந்தக்காரன், சூர்ப்பனகையின் கணவனான, வித்யுத்ஜிகவனின் குரல் கேட்டு, ராமன்மேல் தான் உருவாக்கிக்கொண்ட காதலும், உறுப்புகள் அறுபட்ட வலியும் மறைந்தது. 

வித்யுத்ஜிகவன் அரக்கக்குலத்தின் பலம் வாய்ந்த ஒரு பகுதியினரின் தலைவன். அவனுக்கு  சூர்ப்பனகையை திருமணம் செய்துவித்தான் ராவணன். இருவரும் மனமொத்து மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். ராவணனுக்கு மூவுலமும் தனது ஆட்சிக்கு கொண்டுவர எண்ணினான். வித்யுத்ஜிகவனின் வம்சாவளியினர் தங்கம் போன்ற உடல் பொலிவை கொண்டவர்கள். மனிதர்களால் கொல்லமுடியாத வரம் வாங்கி வந்தவர்கள். ராவணனால் அவர்களை வெல்லமுடியாதென ராவணனுக்கும் தெரியும். இருந்தாலும், மண்ணாசை யாரை விட்டது?!  தங்கையின் கணவன் நாடு எனவும் பாராது, முக்கியமான தலைவர்கள் இல்லாதபோது வித்யுத்ஜிகவனின் நாட்டின்மீது போர் தொடுத்தான் ராவணன். 

வேறுவழியின்றி ராவணனுடன் நேருக்கு நேர் மோதினான் வித்யுத்ஜிகவன். பல நாட்கள் போர் நீண்டது. ராவணன் தோல்வியை சந்திக்கும் நேரம் நெருங்கியது. ராவணனின் கர்வம் அவனை சூழ்ச்சியில் ஈடுபட செய்தது. சூழ்ச்சி செய்து தங்கையின் கணவனான வித்யுத்ஜிகவனை வெட்டி கொன்று, போரில் வெற்றிப்பெற்றதாக அறிவித்தான் ராவணன்.

தங்கையின் கணவனை கொன்ற குற்ற உணர்ச்சி சிறிதுமின்றி வெற்றிக்களிப்போடு இலங்கைக்கு பயணமானான் ராவணன். கணவனின் உடலைக்காண, வந்த சூர்ப்பனகை,  சுவாமி! தங்களை சூழ்ச்சி செய்து கொன்ற என் அண்ணனான கயவனை நான் கொல்வேன். என்னால், முடியாவிட்டால் அவனைப்போலவே நானும் சூழ்ச்சி செய்து அவனை வீழ்த்துவேன். என சபதமெடுத்து இலங்கைக்கு வந்து அண்ணனிடம் தஞ்சம் புகுந்தாள்.
Image result for shurpanakha

அவளது சபதத்தினை உணராத ராவணன். தங்கையை தனது ஆளுமைக்குட்பட்ட பஞ்சவடி பகுதியை பாதுகாக்கும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தான். பஞ்சவடியில் ராவணனை வீழ்த்தும் நாளுக்காக காத்திருந்தாள். ராமன்+சீதை+லட்சுமணன் அங்கு வந்து தங்கிய செய்தி கேள்விப்பட்டாள். ராமன் தனது பாட்டியான அரக்கி தாடகியை வீழ்த்தியவன். சாதாரண மானுடன் என்ற சேதியும் அவளது காதுக்கு எட்டியது. மானுடனால் மட்டுமே தன்னை கொல்லப்படவேண்டும் என்று ராவணன் வரம் வாங்கி வந்த  சேதியும் சூர்ப்பனகை அறிவாள். வித்யுத்ஜிஜவனவை தற்காலிகமாக மறந்தாள். ராமன்மேல் காதல் கொண்டாள். லட்சுமணன்பால் காமபித்து ஏற்பட்டவளாய் நடித்தாள். சீதையின்பால் பொறாமைக்கொண்டாள். 

ராவணன் வீழ்ந்த சேதி கேட்டு ராமர் லட்சுமணருக்கு மானசீகமாய் நன்றி சொல்லி, ராமசீதையை ஆத்மார்த்தமாய் வணங்கி, விபீஷ்ணன் ஆண்டபோதும், தன் கணவனை கொன்ற ராவணன் ஆண்ட  நாட்டில் வாழப்பிடிக்காமல் கண்காணாத தூரம் சென்று தனது இறுதி காலத்தை கழித்து வந்தாள்.

 சூர்ப்பனகையின் அழகும், பதிபக்தியும், தெய்வ பக்தியும், மதியூகமும் உலகின் பார்வைக்கு மறைந்தது.  தன் வாழ்வை அழித்த ராவணனை பழிவாங்க ராமனை விரும்பியதாய் நடித்ததால் அனைவரும் அருவெறுப்பான தோற்றமும், வெறுக்கத்தக்க குணாதிசயம் கொண்ட பெண்ணாக மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்ட பரிதாபத்திற்குரிய ஜீவனே சூர்ப்பனகை.  

காரணமில்லாமல் காரியமில்லை.. அதற்கு சூர்ப்பனகையின் திடீர் காதலும் ஒரு சாட்சி.

வெளிச்சத்தின் பின்னே தொடரும்...

நன்றியுடன்,
ராஜி


Tuesday, July 30, 2019

புடலங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்

தேவையான பொருட்கள்..
புடலைங்காய்
கடலைபருப்பு
பாசிப்பருப்பு
மஞ்சள் தூள்
தேங்காய்
ப.மிளகாய்
வெங்காயம்
சீரகம்
கடுகு
எண்ணெய்
கறிவேப்பிலை
உப்பு

புடலைங்காயை கழுவி சின்ன சின்னதா வெட்டிக்கனும். கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊற வச்சு வேக வச்சுக்கனும்.

தேங்காய், ப.மிளகாய், சீரகம் இந்த நான்கையும் மிக்சில கொரகொரப்பா அரைச்சுக்கனும்..


 வெந்திருக்கும் கடலைப்பருப்போடு கொஞ்சூண்டு பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், புடலைங்காய் துண்டுகளை சேர்த்து வேக விட்டு எடுத்துக்கனும்...

 வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு பொரிய விடனும்..
அடுத்து கறிவேப்பிலை போடனும்....

 வெந்திருக்கும் புடலைங்காயினை சேர்க்கனும்...
தேவைக்கேற்ப உப்பு சேர்க்கனும்..

 அரைத்து வைத்திருக்கும் தேங்காய்+வெங்காயம்+சீரகம் விழுதினை சேர்த்து ரெண்டு நிமிசம் கொதிச்சதும் அடுப்பை அணைச்சுட்டு கொத்தமல்லி தூவிக்கனும்..

சீரகம் சேர்த்திருப்பதால் நல்லா வாசமா ருசியா இருக்கும். 

இதை இன்னொரு முறையாவும் செய்யலாம். கடலைப்பருப்பு+பாசிப்பருப்பை மஞ்சள் தூள்  சேர்த்து வேக வச்சு எடுத்துக்கனும். சீரகம்+கடுகு போட்டு தாளிச்சு, மிளகாய் கிள்ளிப்போட்டு வெட்டி வச்சிருக்கும் புடலைங்காயை சேர்த்து தண்ணி+உப்பு சேர்த்து வேகவிடனும். காய் வெந்ததும் பருப்பினை சேர்த்து கிளறி, அரைச்சு வச்சிருக்கும் தேங்காய் விழுதை சேர்த்துக்கனும்.. 

நன்றியுடன்,
ராஜி.

Monday, July 29, 2019

கூண்டில் அடைச்ச மிருகத்தின் நிலை என்ன?!- ஐஞ்சுவை அவியல்

இந்தாடி, கொஞ்சமாவது புருசன்ன்ற மட்டுமரியாதை இருக்கா உனக்கு?! 

வேணும்ன்னா இனி, உன்னை  சார்ன்னு கூப்பிடவா?!

அதுக்காக உன்னை சார்ன்னு கூப்பிட சொல்லல. நம்ம ஊர்களில்தான் சார்ன்னு சொல்றதை பெருமையா நினைக்கிறோம். இதுவே பன்னாட்டு நிறுவனங்களில் சார்ன்னு கூப்பிடக்கூடாதுன்னு விதியே இருக்கு.  SLAVE I REMAIN என்பதன் சுருக்கமே நாம பெருமையா நினைக்கும்  SIRன்ற வார்த்தையின் விரிவாக்கம். நான் உங்களின் அடிமை என்பதை நினைவூட்டுகிறேன் என்பதே இதன் அர்த்தம். இதைதான் நாம பெருமையா சார்ன்னு சொல்லிக்கிட்டு திரியுறோம்.பெரிய சாதனை செய்தவங்களுக்குதான் சர்(SIR) பட்டம் கொடுத்து கௌரவிச்சாங்க.  வானம் ஏன் பகல்ல நீலநிறமாய் தெரியுது?! உட்பட பல கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான நம்மூர் இயற்பியல் துறை வல்லுனரான சி.வி ராமனுக்கு(சந்திரசேகர வெங்கட்ராமன்) சர் பட்டம் கொடுத்து சிறப்பிச்சாங்க. 

அதனால் இனி கூடியவரைக்கும் சார்ன்னு சொல்றதை தவிர்க்கலாம். இங்க யாரும் யாருக்கும் அடிமை இல்லியே!

சரி மாமா, இனி யாரையும் சார்ன்னு சொல்லல. வானம் ஏன் நீல நிறமா தெரியுதுன்னு சொல்லேன்..


சூரியனிலிருந்து வரும் ஒளி வெண்மை நிறமா இருந்தாலும் அதில் அதில் பல நிறங்கள் இருக்கு.  இதை மழைநேரத்தில் வரும் வானவில்லில் பார்க்கலாம். வாயுமண்டலத்தில்  நைட்ரஜன் 78 %,  21% ஆக்சிஜனும், நீராவியும் மாசுத்துணிக்கைகளும் இருக்கு.  இவற்றின் வழியேதான் சூரிய ஒளி பூமிக்கு வருது. ஒவ்வொரு நிற ஒளி அலைகளும் வெவ்வேறு  அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய  நிறங்கள், நீண்ட அலை நீளம்  கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது.  நீண்ட அலைநீளம் உடைய ஒளி அலைகள் பூமிக்கு வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சிய துணிக்கைகள் அதை தெறிக்க விடுகின்றது. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோற்றமளிக்கின்றது. ஒளியானது காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக்கூறுகள், நீர்த்துளிகள், பனிமூட்டம் போன்றவற்றால் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மீண்டும் பயணிக்கும்போது மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு சிதறடிக்கும்போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. சிவப்பு நிறம் மிகக்குறைவாக சிதறுகிறது. நாம் பார்க்கும்போது அந்த ஒளி அலைகள் நம்மை கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருக்குற மாதிரி காட்சியளிக்கின்றது. வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால், வானவில் வண்ணங்களால் நிரம்பியுள்ளதே  தவிர நாம பார்க்குற மாதிரி நீல நிறமாய் மட்டுமில்ல. 

என்னென்னமோ சொல்றே மாமா! எனக்குதான் ஒன்னும் புரியல!!
சிம்பிளா சொல்லனும்ன்னா இயற்பியல் விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக் கொள்கிறது. வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது. காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம்போது மட்டும் வானம் சிவப்பாக தெரியக்காரணம்,  சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்!

ம்ம் இப்ப புரியுது மாமா!

அப்பாடா! புரிஞ்சுட்டுதா?! சரி நான் கொஞ்சம் வெளியில் போகும் வேலை இருக்கு. போயிட்டு வரேன்..

ம்ம்ம் போகும்போது ஹெல்மெட் போட்டுக்கிட்டு போ மாமா! போலீஸ்காரங்க புடிக்குறாங்களாம். திருடனை, கொள்ளையடிச்சவனைலாம் விட்டுட்டு ஹெல்மெட் போடாதது பெரிய குத்தம்ன்னு புடிக்குறானுங்க.

தண்ணி அடிக்குறது, தம் அடிக்குறது, திருட்டு, கற்பழிப்புன்னு எந்த குற்றத்திற்கும் திருந்தி நல்லபடியா நடக்க சான்ஸ் உண்டு. ஆனா, ஹெல்மெட் போடாம போய்ட்டு, அதன்மூலம் உயிரிழப்பு நேர்ந்தால் திருந்தி நடக்க சான்ஸ் இல்லியே! அதான், மற்ற குற்றத்தைவிட ஹெல்மெட் போடாதது பெரிய குத்தமா போலீஸ் பார்க்குது.  ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்தபின் விபத்துகளின்மூலம் போக இருந்த பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கு, அதான் உண்மை..


வண்டியோட வேகம் கூடக்கூட நம்ம உடம்பின் எடை குறைச்சுக்கிட்டே போகும் , அப்படி இருக்கையில் எதோ ஒரு பொருளுடன், வண்டி மோதும்போது வண்டி ஓட்டும் நபர் வண்டிக்கு முன்பக்கமாக தூக்கி வீசப்படுவார்.அப்படி வீசும்போது, ஹெல்மெட் போட்டிருந்தால் கைகால் முறிவு, அல்லது சிறுகாயத்தோடு பிழைச்சுக்க சான்ஸ் உண்டு. அப்படி தூக்கி வீசப்படும்ப்போது ஹெல்மெட் போடலைன்னா தலை எதன்மீதாவது மோதி உயிரிழக்க சான்ஸ் நிறைய உண்டு. நான் மெதுவாதான் வண்டி ஓட்டிப்போவேன். சாலைவிதிகளை கரெக்டா பாலோ பண்ணுவேன். நான் எதுக்கு ஹெல்மெட் போடனும்ன்னு விதண்டாவாதம் பண்ணுறவங்களும் இருக்காங்க. எல்லாரும் இப்படி இருப்பாங்கன்னு என்ன நிச்சயம்?! அப்படியே இருந்துட்டாலும் விபத்துகள் எப்படி நிகழும்ன்னு யாராலும் சொல்லமுடியாதுல்ல! அதனால், பக்கத்து தெருவுக்கு வண்டில போறதா இருந்தால் ஹெல்மெட் போடுறதை வழக்கமா வச்சுக்கனும். ஹெல்மெட்டுக்கு இருக்கும் 18% ஜி.எஸ்.டி வரியை ரத்து பண்ணனும்.

நானா வண்டிய ஓட்டப்போறேன்?! நீதானே வண்டிய ஓட்டப்போறே! அதனால கட்டாயம் நீ ஹெல்மெட் போட்டுக்கிட்டு போ.

ஹெல்மெட் போட்டாலும் இப்ப வெளியில் போகமுடியாதே!!

ஏன் மாமா! வண்டியில் பெட்ரோல் இல்லியா?!

அதெல்லாம் இருக்கு. சட்டைப்பையில் வச்ச பைசாதான் இல்ல. ஏண்டி! எனக்கு தெரியாம சட்டைப்பையிலிருந்து பணத்தைலாம் எடுக்குறியே! இது திருட்டு. இது தப்புன்னு உன் மரமண்டைக்கு உரைக்கலியா?! கொஞ்சமாச்சும் குற்ற உணர்ச்சி இருக்காடி உனக்கு?!

இப்படிலாம் குற்ற உணர்ச்சி வரக்கூடாதுன்னுதான் இந்த வீடியோவில் வர்றமாதிரி பணத்தை எடுத்தேன்...

ஏய் பேஸ்புக் பார்த்து பார்த்து நீ ரொம்ப கெட்டுப்போயிட்ட...

சிங்கத்தை கூண்டில் அடைச்சு வச்சா இப்படிதான் நடந்துக்கும். ஃப்ரீ பேர்டா சுத்திக்கிட்டு இருந்த என்னை உனக்கு கட்டி வச்சு என் லைஃபே போச்சு. இந்த வீடியோவில் இருக்க சிம்பான்சி மாதிரிதான் என் நிலையும்.... அந்த சிம்பான்சியும், நானும் ஒன்னுதான்.



இப்பதாண்டி உண்மையை ஒத்துக்கிட்டே! நீயும் சிம்பான்சியும் ஒன்னுதான்...

!@#$%^&*_)(*&^%$#@!@#$%^&*()_)(*&^%$#@!~

நன்றியுடன்,
ராஜி


Sunday, July 28, 2019

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா?! - பாட்டு புத்தகம்

இந்த பாடலை இரவுப்பயணத்தில் கேட்க பிடிக்கும்...  காதல் பாடல் ,மாதிரி தெரிந்தாலும், மெல்லிய சோகம் இந்த பாட்டில் இழையோடும்.. 

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா?!
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா?!
அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பி கேட்கிறேன்..
போகும் பாதை எங்கும் உன்னை திரும்பி பார்கிறேன்..

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா?!
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா?!


என்னையே திறந்தவள் யார் அவளோ?!
உயிரிலே நுழைந்தவள் யார் அவளோ?!
வழியை மறித்தாள் மலரை கொடுத்தாள்!!
மொழியை பறித்தாள் மௌனம் கொடுத்தாள்!!
மேகமே மேகமே அருகினில் வா...
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா..



வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா?!
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா?!


சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்!
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்!
விழிகள் முழுதும் விரலா இருளா!
வாழ்கை பயணம் முதலா முடிவா?!
சருகென உதிர்கிறேன் தனிமையிலே...
மௌனமாய் எரிகிறேன் காதலிலே...

மேகம் போலே என் வானில் வந்தவளே!
யாரோ அவளுக்கு நீதான் என்னவளே!
மேக மேக மேக கூட்டம் நெஞ்சில் கூடுதே!
உந்தன் பேரை சொல்லி சொல்லி மின்னல் ஓடுதே!

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா

படம் : உல்லாசம்
இசை : கார்த்திக் ராஜா
பாடலாசிரியர்: பழனி பாரதி
பாடியவர் : ஹரிஹரன்

Saturday, July 27, 2019

வாக்கிங் போற மேனை தெரியும்.. வாக்மேனை தெரியுமா?! - கிராமத்து வாழ்க்கை

டிங்... டிங்... டிங்...ன்னு ரோட்டில் மணிசத்தம் கேட்டால் சோன்பப்டிக்காரர் வந்திருக்கார்ன்னு அர்த்தம். எட்டிப்பார்த்து, அவரை  கொஞ்ச நேரம் இருக்கச்சொல்லிட்டு, வீட்டுக்குள் வந்து,  சேர்த்து வைத்திருக்கும் குளத்தங்கரை, ஏரிக்கரையில் கண்டெடுத்த பீர்/பிராந்தி பாட்டில்  பழைய பேப்பர், இரும்பு,  உடைஞ்ச குடம் இதுலாம் எடுத்துக்கிட்டு போய் சோன்பப்டிக்காரர்கிட்ட கொடுத்தால் பாதியாய் வெட்டி வச்சிருக்கும் பேப்பரை லாவகமா கூம்பாக்கி அதில் கொஞ்சம் சோன்பப்டி போட்டு தருவார்.  காசுக்குலாம் கொடுக்க மாட்டார். கெஞ்சி கேட்டால் மட்டுமே போனால் போகுதுன்னு பத்து காசுக்கு கொஞ்சமா தருவார். என்னதான் இன்னிக்கு விதம்விதமான ஃப்ளேவரில் சோன்பப்டி சாப்பிட்டாலும் அன்றைய சோன்பப்டியின் சுவை வராது.
Image
சிலசமயம் எங்க வீட்டில்  அம்மா கோழி  வளர்த்திருக்காங்க. மாலையில் கூடையை கோழிமேல் கவுத்து போட்டு மூடி, கூடை நகராமல் இருக்க, கனமான கல்லை வைப்பாங்க. காலையில் கோழியை திறந்து விடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்.  கோழியை வாங்கி சிலநாட்கள் வீட்டிலேயே கட்டி வைப்பாங்க. பிறகு, வெளியில் போகாதமாதிரி வாசல் தோட்டத்தில் வச்சிருப்பாங்க. ஒரு வாரம் பத்து நாட்கள் கழிஞ்சதும், அடுப்பு முன் கோழியை  மூன்று தடவை சுத்தி வெளியில் அனுப்புவாங்க. காலையில் போன கோழி மாலை நேரத்தில் சமர்த்தா வீடு வந்து சேர்ந்திடும்.  ஒருவேளை அப்படி வரலைன்னா கோழி நமதில்லைன்னு தெரிஞ்சுக்கலாம். கோழியின் இனப்பெருக்க காலம் வந்தால், கோழி வீட்டையே சுத்தி சுத்தி வரும். அதை தெரிஞ்சுக்கிட்டு அம்மா கூடையை சுவத்தில் சார்த்தி வைப்பாங்க.  கோழி கூடைக்குள் போய் உக்காந்து முட்டையிடும். முட்டை இட்டபின் கோழி வெளில போகாது. அதை துரத்தி அடிப்பது கஷ்டம். பிறகு முட்டையை கொண்டு வந்து சமைச்சு கொடுப்பாங்க. இல்லன்னா மொத்தமா முட்டை சேர்ந்ததும்,  வைக்கொல்  நிரப்பி, அதன்மேல் முட்டை வைப்பாங்க. கோழியும் அடை காத்து குஞ்சு பொறிக்கும். சுடச்சுட கோழிமுட்டையை கையில் எடுப்பது அத்தனை சுகம். 
Image
முதன்முதலாய் எங்க வீட்டிலிருந்த ஹோம் தியேட்டர் இதுதான். படத்தில் ஒரு சின்ன வித்தியாசம், அப்பா ஸ்பீக்கரை திருப்பி வச்சிருப்பார். அப்பா தறி நெய்ய, இதில் பாட்டு ஒலிக்கும். சவுண்டு சும்ம அதிரிபுதிரியா இருக்கும். இப்படி பாட்டு கேட்டு வளர்ந்து வந்தாலோ என்னமோ நான் பாட்டு பிரியை ஆகிட்டேன்.
Image
கிளாஸ்கோ பிஸ்கெட்... மளிகைப்பொருட்கள் வாங்கிவரும்போது மொத்தமா வாங்கி வந்து பாட்டில்ல போட்டு கைக்கெட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா தூரத்தில் வச்சிருப்பாங்க. தினத்துக்கு ஸ்கூலுக்கு போகும்போதும், ட்யூஷனுக்கு போகும்போதும் 5 தருவாங்க. அப்பலாம் சின்ன பாப்பாக்குலாம்  இந்த பிஸ்கெட், சர்க்கரையை சுடுதண்ணில கரைச்சு கொடுப்பாங்க. அப்பத்திய செர்லாக் இதுதான். அதைப்பார்த்து அம்மா இல்லாதபோது நானும் கரைச்சு சாப்பிடுவேன்.
Image
1979ல் சோனி நிறுவனத்தால் பாக்கெட்ல வச்சுக்குற மாதிரியான வாக்மேன் அறிமுகமாச்சு. எங்க வீட்டில் தங்கி படிச்ச அண்ணாக்கிட்டதான் இந்த வாக்மேனை முதன்முதலில் பார்த்தேன். இப்ப இருக்குற மாதிரி குட்டியூண்டா இருக்காது இயர் போன். பெருசா வளையல் சைசுக்கு ஸ்பீக்கர் கொண்ட இயர்போன் தான் இருக்கும். ரெண்டு ஸ்பீக்கரையும் இணைக்க வயரும், ஸ்ட்ப்னெசுக்கு ஸ்டீல் கம்பி இருக்கும். 4 புது பேட்டரி போட்டா 4 கேசட் ஓடும். அப்புறம் இழுக்க ஆரம்பிச்சிரும் . 90களில் வாக்மேன் மாட்டி பாட்டு கேட்பது பெரிய கெத்து...

கொசுவர்த்தி சுருள் மீண்டும் ஏற்றப்படும்....

நன்றியுடன்,
ராஜி.

Wednesday, July 24, 2019

கண்ணனுக்கு மட்டுமல்ல! கர்ணனுக்கு ராதையை பிடிக்கும் - வெளிச்சத்தின் பின்னே....


குருஷேத்திரப்போரின் 17வது நாள். போர் உக்கிரமாய் நடந்துக்கொண்டிருந்தது. திடீரென யுத்தத்தை நிறுத்தும் விதமாய் இருபுறமும் சங்கு முழங்கியது. அதைக்கேட்டதும் பலரும் பலவித உணர்ச்சிக்கு ஆளாகியதோடு, அன்றைய தினம் போரும்  முடிவுக்கு வந்தது. போரில் பெரிய தலைகள் எதாவது வீழ்ந்தால் அத்தோடு அன்றைய போர் தற்காலிகமாக முடிவுக்கு வருவது போர் மரபுகளில் ஒன்று. யார் வீழ்ந்தது என ஆளாளுக்கு விவாதிக்க, வீழ்ந்தது கர்ணன் என அதிகாரப்பூர்வமாய் தகவல் வெளிவந்ததை கேட்டு அனைவரும் திக்கித்து நின்றனர்.   அர்ஜூனன் உட்பட பாண்டவர்கள் மகிழ்ச்சியோடும்,  துரியோதனன் சொல்லொனா துயரத்தோடும், தலைவிரி கோலத்தில் கர்ணன் மனைவி சுபாங்கியும், சிறந்த வில்லாளியாச்சே எப்படி வீழ்ந்தான் என போர் வீரர்களும்,   இனம்புரியா சங்கடத்தோடு சூத்திரதாரி கண்ணனும், மகனே! என்று ஓலமிட்டபடி குந்தியும்,   கர்ணனை நெருங்கினர்.



தாயே! வீழ்ந்தது தங்கள் மகன்  அர்ஜுனன் அல்ல!  தேரோட்டியின் மகனும், அங்கதேசத்து அரசனும், துரியோதனனின் நண்பனுமான கர்ணன் என குந்திதேவியை வீரனொருவன் தடுத்து ஆறுதல் கூற முற்பட்டான்.  அவனை தள்ளிவிட்டு, ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் கர்ணனை அள்ளி மடியில் கிடத்தி மகனே! என ஈரேழு உலகமும் கேட்கும்படி கர்ணனின் பிறப்பின் மர்மத்தை உடைத்தெரிகிறாள் குந்தி...

தாயே! 

சொல் மகனே! 

எனக்கு என் அம்மா வேண்டுமென  யாசிப்பவர் தனது யாசகத்தை கேட்கும்முன்னே, அவரின் முகத்தின் குறிப்பைக்கொண்டே யாசிப்பவருக்கு தேவையானவற்றை கொடுத்த  கொடை வள்ளலாம் கர்ணன் குந்தியிடம்  யாசிக்கிறான்.


அதான் வந்துவிட்டேனே மகனே! உன்னை பேழையில் வைத்து ஆற்றோடு அனுப்பிய மாபாதகி, உன்னை பாராட்டி, சீராட்டி வளர்த்து உன் அருகிலிருக்கும் பாக்கியத்தை இழந்த அபாக்கியவதியான உன் தாய் உன் அருகிலே இப்பொழுது இருக்கிறேன் மகனே ! என்று பதிலுரைத்தாள் குந்தி..

அம்மா! நான் கேட்டது என் தாயை!! பாண்டவரின் தாயினை அல்ல! என்றான் கர்ணன்.

தீயினால் சுடப்பட்டதுப்போல துடித்தாள் குந்திதேவி. கர்ணன் யாரை கேட்கிறான் என கண்ணனுக்கு புரிந்தது. கர்ணன், தனது வளர்ப்பு தாயான ராதையை தேடுகிறான் என... தேரோட்டியின் மனைவியான ராதையை தேடுகிறான் என...  கர்ணா! அம்பு பட்டதில் உனக்கு புத்தி பேதலித்துவிட்டதா?! இதோ உன்னை பெற்றவளான குந்திதேவி உன் அருகில் இருக்க யாரை தேடுகிறாய்?! நீ மன்னன் மகன், தேரோட்டியின் மகன் அல்ல! உன் பிறப்பின் மர்மம் இன்றோடு அவிழ்க்கப்பட்டது  என கண்ணன்  சொல்கிறான்.

கர்ணனுக்கு சூழ்நிலை புரிந்தது. ராதை வந்தாலும், ராதை தன்னை இவர்கள் பார்க்க விடமாட்டார்கள் என உணர்ந்தான்.  தேரோட்டியின் மகன் என இதுநாள் வரை கிண்டல் செய்தவர்கள் , இன்று மன்னன் மகன் என வணங்குகின்றனர். தன் பிறப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததை எண்ணி திருப்தியுற்றான் கர்ணன்.

ஏய்! தள்ளிப்போ! இங்கெல்லாம் போர்வீரர்கள் தவிர வேறு யாரும் வரக்கூடாது. அதிலும், நீ பெண்... இங்கிருந்து அப்பால் போ என தள்ளுமுள்ளு குரல் கேட்டது. மகனே! ராதையா! கர்ணா! என அபலை ஒருத்தியின் குரல் கர்ணனின் செவிகளில் வீழ்ந்தது.


ஆற்றில் மிதந்து வந்த பேழையை கண்டெடுத்தவள், குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்த குழந்தையை சுவீகரித்து கண்ணின் மணியாய் பேணி காத்து வந்தவளான தேரோட்டியின் மனைவியும், கர்ணனின் வளர்ப்பு தாயுமான ராதை, கர்ணனை பார்த்தே தீருவது என்ற வைராக்கியத்தோடு காவலர்களுடன் போராடிக்கொண்டிருந்தாள். போர்களத்திலிருந்து கர்ணன் நலமோடு வீடு திரும்ப வேண்டுமென  விரதமிருந்தவள், இப்போது போரில் அவன் வீழ்ந்தான் என தகவல் கேட்டு உயிருள்ள பிணமாய் போர்க்கலத்திற்கு ஓடோடி வந்தாள். காவலர்களுடன் போராட அவள் உடம்பிலும் மனதிலும் தெம்பில்லை..

வேரற்ற மரம்போல் தரையில் வீழ்ந்தாள். அவள் எண்ணங்கள் கர்ணன் போர்க்களத்திற்கு கிளம்பும்போது அளித்த வாக்கினை நினைவுப்படுத்தியது..

நம்பினோரை கைவிடாத கண்ணனை, அர்ஜுனன் பக்கம் அவன் நிற்கிறான் என தெரிந்தும், தனது மகன் கர்ணன், போர்க்களத்திலிருந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டி விரதமிருந்து கண்ணனை பூஜித்துக்கொண்டிருந்தாள். சரியாய் அந்நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்தான் கர்ணன்.

தாயே! போர்க்களம் போகிறேன் என்று ராதையை வணங்கி நின்றான் கர்ணன்...

பதறித்துடித்த ராதை! ராதையா! நீ என்ன இன்னும் சிறுப்பிள்ளையா?! போய் வருகிறேன் என சொல் என மகனை கடிந்துக்கொண்டாள்.

எதையோ உணர்ந்திருந்த கர்ணன் சிரித்தபடியே, அன்னையே! இன்னொருமுறை என்னை ராதையா என்று அழையுங்களேன் என செல்லம் கொஞ்சினான்.

 ராதையா என்று அன்பொழுக அழைத்தாள் ராதை..


தாயே! எனக்கு என்றும் நீயே அன்னை.  என் தாய் நீயே.. இதில் எந்த மாற்றமும் இல்லை.  நான் போகிறேன் என்று கிளம்பினான் கர்ணன்.

 நீ சொன்னாலும், சொல்லாவிடினும் எனது மகன் நீதான். உன் அன்னை நாந்தான் என்றாள். ஏன் இப்படி பேசுகிறாய் ராதையா!

இதற்கு விடை மாலையில் தெரியும் அம்மா! நான் போகிறேன் என்று பதிலுரைத்து அவ்விடம் அகன்றான் கர்ணன்.

போர்க்களம் புகுந்த கர்ணனின் வில் பல அதிசயங்களை நிகழ்த்தியது.. சூரியன் உச்சிப்பொழுது வரும்முன்னே கௌரவர்கள் கை ஓங்கியது.  வெற்றி பெற்றதாகவே துரியோதனன் மனம் மகிழ்ந்தான்.

மாலை நெருங்கியது.. போரின் போக்கே மாறியது.. கர்ணன் தான் ஒரு பிராமணன் என பொய் உரைத்து, பரசுராமரிடம் வில் வித்தை பயின்று, சிறந்த சீடன் என்று பெயர் வாங்கி, பரசுராமரிடமிருந்து வாங்கிய பிரம்மாஸ்திரமும், பார்க்கவஸ்திரமும்  பரிசாய் கர்ணன் பெற்றான். அவன் பிராமணன் அல்ல! சத்திரியன் என்ற உண்மையினை தெரிந்துக்கொண்ட பரசுராமர்,  தக்க சமயத்தில் கற்ற வித்தையெல்லாம் மறக்கும் என விட்ட  சாபம் பலிக்கும் நேரம் வந்தது.  கர்ணனுக்கு தான் கற்ற போர்க்கலையெல்லாம் மறந்து போனது.


முன்னொரு சமயம், கர்ணனின் தேர்க்காலில் தனது  மகனை பலிக்கொடுத்த பிராமணர், தக்க நேரத்தில் உனது தேர் ஓடாது என விட்ட சாபம் பலித்தது. அந்த சாபமும் அந்த நேரத்தில் பலித்தது, தேர் சேற்றில் புதைந்தது. தேரோட்டி மகன் என மருமகனாய் ஏற்க மறுத்த சல்லியனை தனது தேர் சாரதியாய் நியமித்தான் கர்ணன். அந்த கடுப்பில் இருந்த சல்லியன். தேர் ஓட்டுவது மட்டுமே என் வேலை. சேற்றிலிருந்து மீட்பது இல்லை என தேரிலிருந்து இறங்கி சென்றுவிட்டான்.


பெரும்போராட்டத்திற்கு சேற்றிலிருந்து தேரை மீட்டெடுத்த கர்ணனுக்கு சாரதி இல்லாமல் குதிரை ஓட என்ன சமிக்ஞை தரவேண்டும்?! தேர்ச்சக்கரத்தினை சரிசெய்வது எப்படி என எல்லாம் மறந்துபோய் திக்கித்து நின்றான். அர்ஜுனன் எய்த அம்பு கர்ணனனை வீழ்த்தியது.

குந்தி தனது மடியில் கர்ணனை கிடத்தி, மகனே! என்று அழுது கர்ணன் தனது மகன் என ஊரறிய செய்துவிட்டாள். கர்ணனின் ஒவ்வொரு செயலுக்கும், ராதையே! உனது மகன்.. என பாராட்டியவர்கள், இன்று குந்தியின் மைந்தன் கர்ணன் என சொல்வதை கேட்க நேர்ந்ததே ராதையின் துர்பாக்கியம்.  மகனின் மரணமே கொடூரணமானது. இதில் மரணிக்க இருக்கும் மகனை அள்ளி அணைத்து அழுது புலம்பும் உரிமையை இழந்த தாயின் நிலை இன்னும் கொடூரமானது.

காயப்பட்ட மகனின் உடலை தடவி அவனது வலியை போக்க அவன் அருகில் இல்லையே என அழுகின்றாள் ராதை. ஆற்றில் விட்ட குந்தி, தேரோட்டியின் மகன் என உதாசீனப்படுத்திய சல்லியன், எதிரியாய் பார்த்த பாண்டவர்கள், சதிகாரனான கிருஷ்ணன், வில்லெடுத்தாலே இளக்காரமாய் பார்த்த உற்றார், ஊரார்.. இப்படி தன் மகனை சுற்றி பாவிகள் சூழ்ந்திருப்பதை கண்டாள். வீரம் வாய்த்தது, பதவி வந்தது, புகழ் வந்தது, செல்வம் சேர்ந்தது, ஆனால், அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று கர்ணன் புலம்பும்போதெல்லாம்,  எல்லாம் கண்ணன் பார்த்துக்கொள்வான் என்று ஆறுதல் சொல்வாள் ராதை. இதோ இன்று, அந்த கண்ணனே கர்ணனின் ஆயுளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டானே என கண்ணனை அனல் கக்கும் விழிகளால் சுட்டெரிக்க முற்பட்டாள் ராதை..

 ராதை என  கணவர் அதீரதனைப்போலவே கர்ணன் அதட்டி, கால்மேல் கால் போட்டுக்கொண்டு வேலை வாங்கும் கோலத்தை எண்ணி மாய்கிறாள். ராதையையும், அதிரதனையும் கர்ணனின் கண்கள் தேடுகின்றது. இதை உணர்ந்த சதிகார கண்ணன், விட்டால் அதிரதனை ஈமச்சடங்கு செய்ய சொல்வான், குந்திக்கு இணையாக ராதை தாய் என்ற அந்தஸ்தை பெறுவாள் என்று எண்ணி, அந்தணர் வேடமணிந்து கர்ணன்முன் நின்றான்.


கர்ணா!!

அந்தணர் வேடம்பூண்டு வந்தவர் யார் என தெரியும், வந்த நோக்கமும் புரியும். என் தானதர்மத்தின் பலனை தானமாய் அளிக்கிறேன் என தாரை வார்த்து கொடுத்தான். அதுவரை தர்மத்திற்கு கட்டுப்பட்டிருந்த விதி, கர்ணன் உயிரை பறித்துக்கொண்டு சென்றது. கர்ணனின் உடலை சகல மரியாதையோடு அரண்மனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்தது.

விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த அதிரதனை கட்டிக்கொண்டு, ராதையனை வரச்சொல்லுங்கள். அல்லது அவனிடம் என்னை கூட்டி செல்லுங்கள் என வேண்டினாள் ராதை. அது முடியாது ராதை. நாம் தேரோட்டிகள். அவன் மன்னன் மகன். அவன் பாதம் தொழ, தூரத்திலிருந்து பார்க்கத்தான் முடியுமே தவிர, சொந்தம் கொண்டாடமுடியாது என்று மனைவியை தேற்றினான்.


மன்னன் மகன் என்றால் தாய்க்கு மகனில்லை என்றாகிவிடுமா?! இத்தனை நாள் எங்கே சென்றாள் இந்த குந்தி?! ஆற்றில் மகனை போட்டுவிட்டு இப்போது எந்த முகத்தோடு மகனே என்கிறாள். எங்கிருந்து வந்தது சொந்தம்?! எள்ளி நகையாடி உயிரை குடித்து இன்று அண்ணா! தம்பி! என சொல்வது எதற்காக?! என பலவாறாய் ராதை வெடித்தாள். இறுதியாக அரண்மனையில் தர்மத்துக்கு கட்டுப்பட்ட  தர்மனும், சகல நூல்களையும் கற்றுத்தேர்ந்த சகாதேவனும் இருப்பர். இருவரும்  எனக்கு நீதி வழங்குவர் என அதிரதனை அழைத்துக்கொண்டு அரணமனிக்கு சென்றாள்.

அரண்மனை நடைமுறைகள் அறிந்திருந்தபோதும் ராதைக்காகவும், மகனின் முகத்தை கடைசியாய் பார்க்கவும் அதிரதன் அவளோடு சேர்ந்து அரண்மனை நோக்கி நடந்தான்.  அரண்மனைக்குள் இருவரையும் விடவே இல்லை. கர்ணனின் இறுதி ஊரவலம் நடந்ந்தது. உடல் எப்படியும் சுடுகாட்டுக்கு வந்துதானே தீரவேண்டும் என ராதையும், அதிரதனும் கர்ணன் முகம் காண சுடுகாட்டுக்கு விரைந்தனர்.  . வழியெங்கும் கர்ணனின் தாய் குந்தி, தந்தை சூரியபகவான் என்றும் ஊரார் பேசுவது காதில் ஈயத்தை காய்ச்சுவது போல் இருந்தது இருவருக்கும்...

இருவரும் சுடுகாட்டை நெருங்கும்போது, உடல் எரியூட்டப்பட்டு அனைவரும் அங்கிருந்து விலகி சென்றனர். ராதையும், அதிரதனும் ஓடிச்சென்று எரிந்துக்கொண்டிருந்த சிதையை பார்த்தனர்.  அதுவரை வேகாமல் இருந்த கர்ணனின் நெஞ்சுப்பகுதி, ராதையின் கண்ணீர் பட்டு வெந்து சாம்பலாகியது.....

கர்ணன் யாருக்கு சொந்தம்?! பெற்றதாலேயே குந்திக்கு சொந்தமா?! கண்ணின் மணியாய் காத்து வளர்த்து தனது உரிமையை விட்டுக்கொடுத்த ராதைக்கு சொந்தமா?! விடைத்தெரியாமலே அந்த ஏழை தம்பதிகள் அவ்விடம் அகன்றனர். குந்தி தன்னை தேற்றிக்கொள்ள  அரண்மனை சுகபோகம்,  பாண்டவர்கள், சூத்திரதாரி கண்ணன், மருமகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் உண்டு.
ஆனால் ராதைக்கு கர்ணன் வாழ்ந்த வீடும், அவன் நினைவுகளும்தான்....

வெளிச்சத்தின் பின்னே தொடரும்...

நன்றியுடன்,
ராஜி



Tuesday, July 23, 2019

ரவா இட்லி செய்வது இம்புட்டு ஈசியா?! - கிச்சன் கார்னர்

எனக்கு ரவா இட்லின்னா பிடிக்கும். ஆனா, இதுவரை ஹோட்டலில் சாப்பிட்டதில்லை. எங்காவது கல்யாணம், காட்சின்னு போனால் சாப்பிடுவதோடு சரி. யூட்யூப், பேஸ்புக்ல உலா வரும்போது அடிக்கடி ரவா இட்லி செய்முறை கண்ணில் படும். அதில் தயிர் சேர்ப்பதால் புளிப்பு சுவையா இருக்குமோன்னு புதுசா ட்ரை பண்ண பயமா இருந்துச்சு. 

நேற்று வீட்டில் யாருமில்லை.  சரி ட்ரை பண்ணி பார்க்கலாமேன்னு இறங்கிட்டேன். சின்னவதான் பரிசோதனை எலியா மாட்டிக்கிட்டா. நல்லாதான் இருக்கும்மான்னு சொன்னா.  அது எந்தளவுக்கு உண்மைன்னுதான் தெரில:-(  . ஆனா, இட்லி சாஃப்டா வந்தது. இனி அடிக்கடி செய்யனும். மருமகப்பிள்ளைக்கு ஆக்கிப்போட ஒரு புது டிபன் தயார்..

தேவையான பொருட்கள்
ரவை - ஒரு கப்
தயிர் - 1/2 கப்
வெங்காயம் 
கேரட்
இஞ்சி
ப.மிளகாய்
கறிவேப்பிலை கொத்தமல்லி
எண்ணெய்
கடுகு
கடலைப்பருப்பு
உளுத்தம்பருப்பு
ஆப்பசோடா
உப்பு

ரவையை சுத்தம் செய்து வச்சுக்கனும். கேரட்டை கழுவி தோல் சீவி துருவி வச்சுக்கனும். வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியா நறுக்கி வச்சுக்கனும். இஞ்சியை கழுவி தோல் நீக்கி நசுக்கி வச்சுக்கனும்

வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவக்க விடனும்..
ப.மிளகாயை போடனும்...

வெங்காயத்தை போட்டு லேசா வதக்கவும்..
நசுக்கி வச்சிருக்கும் இஞ்சியை சேர்க்கவும்..
துருவி வச்சிருக்கும் கேரட்டை சேர்த்து நல்லா வதக்கனும்...
கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து லேசா வதக்கனும்...
சுத்தம் செய்து வைத்திருக்கும் ரவையை கொட்டி வறுக்கனும்.... ஒரு ரெண்டு நிமிசம் வறுத்ததும் அடுப்பை அணைச்சி ஆற விடனும்..
ரவை+கேரட் கலவை ஆறினதும் ஒரு பங்கு ரவைக்கு முக்கால் பங்கு தயிர் சேர்த்து நல்லா கிளறி விடனும். கொஞ்சமா தண்ணி சேர்த்து கலக்கனும். தேவையான அளவுக்கு உப்பு, ஆப்பசோடா சேர்த்து கலந்து 15 நிமிசம் மூடி வச்சுடுங்க.
மாவு தண்ணியா இருக்கக்கூடாது. மாவு தண்ணியா இருந்தால் இட்லி சப்பையா இருக்கும். கொஞ்சம் கெட்டியா அள்ளி எடுத்து வைக்கும் பக்குவத்தில் மாவு இருந்தால்தான் இட்லி பூரித்து வரும். இட்லிப்பானையில் வச்சு அவித்தெடுத்தால் ரவா இட்லி ரெடி.

ரவை+கேரட் கலவையோடு தயிர் கலந்தபின் பத்து நிமிசம் கண்டிப்பா ஊறவிடனும். இல்லன்னா இட்லி கல்லுப்போல் இருக்கும். அதிகமா தண்ணி சேர்க்கக்கூடாது. தயிர் சேர்க்க விருப்பப்படாதவங்க ஈனோ சால்ட் சேர்க்கலாம்.   முந்திரிப்பருப்பு சேர்க்கலாம். வீட்டில் இல்லாததால் நான் சேர்க்கலை. பச்சை பட்டாணி கொஞ்சமா சேர்க்கலாம்..

தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வேர்க்கடலை சட்னிலாம் இதுக்கு சைட் டிஷ்சா பக்காவாய் பொருந்தும்..

நன்றியுடன்,
ராஜி

Monday, July 22, 2019

மழை நீரை தெரியும்!! மறை நீரை தெரியுமா?! - ஐஞ்சுவை அவியல்

இந்தா புள்ள! குழாய்ல தண்ணி சொட்டிக்கிட்டு இருக்கு. அதை கவனிக்காம நீ என்ன செஞ்சிக்கிட்டிருக்கே?! போன்ல பேஸ்புக் நோண்டிக்கிட்டு இருக்கியா?!

ஆமா, இப்ப அதுக்கென்ன?!

இப்படி தண்ணிய வீணடிச்சால் பிற்காலத்தில் தண்ணிக்கு கஷ்டப்படனும்ன்னு ஊரெல்லாம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்துக்கிட்டிருக்கு, அதுமட்டுமில்லாம, பேஸ்புக், ட்விட்டர்ன்னு எத்தனை யோசனைகளை சொல்லிக்கிட்டிருக்காங்க. அதுலாம் படிச்சும் இப்படி தண்ணியை வீணடிக்குறியே!

சென்னை மாதிரியான பெருநகரங்களில்தான் மாமா தண்ணி பற்றக்குறை. சென்னையில்கூட எல்லா இடத்திலும் தண்ணி வராம இல்ல. ஏதோ சில இடத்தில் அப்படி... அப்படியே தண்ணி இல்லாத இடத்தில்கூட வண்டிகளில் தண்ணி கொண்டு போய் கொடுக்குறாங்க. பத்து ரூபா கொடுத்தால் ஒரு லிட்டர் அம்மா குடிநீர் கிடைக்கும். 20 ரூபா கொடுத்தா ஒரு கேன் கிடைக்கப்போகுது. இதுக்கு போய் அலட்டிக்குறியே!

அடிப்பாவி, உன்னை மாதிரி ஆளுங்களையெல்லாம் என்ன செய்ய?! குளம், குட்டை, ஆறு, கிணறு, ஊரணின்னு இருக்குற தண்ணியை வரைமுறை இல்லாம பயன்படுத்துறது எப்படி?! 20 ரூபாய்க்கு தண்ணி வாங்கி பார்த்து பார்த்து செலவு செய்வது எப்படி?! எல்லோராலயும் இப்படி தண்ணியை காசு கொடுத்து வாங்க முடியுமா?! மனுஷங்க வாங்கிடுறோம்ன்னு வச்சிக்கிட்டாலும் மிருகங்கள், பறவைகள்லாம் எப்படி குடிக்கும்?!


தண்ணிக்கு விலைப்பட்டியல் வாசிக்குறியே! மறை நீர்ன்னு ஒன்னு இருக்கே! அதுக்கு என்ன விலைன்னு யோசிச்சியா?!

மறை நீரா?! மழை நீரா?! தமிழை கடிச்சு துப்பாம ஒழுங்கா பேசு மாமா

நீ தமிழ்ல புலியாவே இருந்துக்க. ஆனா, நான் கரெக்டாதான் சொல்றேன். மழை நீர் இல்ல. மறை நீர் அதாவது Virtual water. இதோட விலை என்னன்னு தெரியுமா?! ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீரே மறை நீர் என சொல்லப்படுது. அதாவது ஒரு பொருளை உருவாக்க தேவைப்படும் நீர்தான் மறை நீர்ன்னு சொல்லப்படுது. உதாரணத்துக்கு ஒரு தானியத்தை விளைவிக்க தண்ணி வேணும். . ஆனா, அது விளைந்து, அறுவடை செய்து முடித்ததும் அதை உருவாக்கப் பயன்பட்ட தண்ணி அதுல இருக்காது, ஆனா, தண்ணி செலவாகியிருக்கும்.  ஒரு மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி செய்ய 1600 கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுது.

கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, அதை விளைவிக்காமல் ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, 1,600 கியு.மீ அளவுக்குத் தண்ணியை சேமிக்குதுன்னு அர்த்தம். ஒரு கிலோ பன்றி கறி உற்பத்திக்காக 5,988 லிட்டர் செலவாகும். சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம், அதனால், இறக்குமதி செய்கிறார்கள், காரணம் தண்ணியை சேமிக்க... அதேமாதிரிதான், சொட்டு நீர் பாசனத்துக்கு பேர்போன இஸ்ரேல் ஆரஞ்சு பழத்தை இறக்குமதி பண்ணுறாங்க. அவங்களால் அதை விளைவிக்க முடியாதுன்னு இல்ல. ஒரு கிலோ ஆரஞ்சு பழத்துக்கான மறைநீர் 550 லிட்டர் தேவைப்படும். இப்படிதான் பிராய்லர் கோழிக்கறி உற்பத்தி செய்ய 4325 லிட்டர் தண்ணி. ஒரு கிலோ கோழிக்கறி விலை என்ன?! தண்ணி, தீனி, காவல்ன்னு எல்லாத்துக்கும் கணக்கு போட்டால் நம்மால கோழிக்கறி திங்க முடியுமா?!


ராக்கெட், செல்போன், லாப்டாப்ன்னு அதிநவீன அறிவியல் சாதனங்கள் செய்யுமளவுக்கு அறிவு இருக்கவுங்களுக்கு பனியனும், டி.ஷர்ட்டும் தயாரிக்க தெரியாதா?! செய்ய மாட்டாங்க ஏன்னா, 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10000 லிட்டர் மறை நீர் தேவை. வாயை பிளக்க வைக்கும் பாலமும், கட்டிடமும் கட்டுறவங்களுக்கு ஆட்டு தோலிலிருந்து பேக், பெல்ட் தைக்க தெரியாதா?! ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை. அதனால், கமுக்கமா, அதையெல்லாம் வளர்ந்து வரும் நாடுகள்கிட்ட வாங்கிக்குவாங்க. நாமும் உலகத்திலேயே நம்மூர் பனியன்தான் அதிகமா சேல்ஸ் ஆகுதுன்னும், தோல் ஏற்றுமதியில் முதலிடம்ன்னு கெத்தா சொல்லிக்கிட்டு திரியுறோம். விளைவு, பாலாறு வறண்டு வேலூர் மாவட்டத்தின் வறட்சி. நாமக்கல், திருப்பூரில் 500 அடிக்கு போர் போட்டாலும் தண்ணி கிடைக்காத நிலை. பெப்சி, கோக் கம்பெனி வந்துச்சு,. தாமிரபரணி ஆறு வறண்டு போச்சுது.

ஒரு பொருள் உற்பத்தி செய்ய மூலதனம்லாம் கணக்கு போடும் நாம தண்ணிக்கு என்னிக்காவது கணக்கு போட்டிருக்கோமா?! இல்ல. ஏன்னா, தண்ணி இத்தனை நாள் இலவசமா கிடைச்சுட்டு வந்திருந்தது. அதனால் கணக்கிடலை. கண்ணை மூடிக்கிட்டு ஏற்றுமதி செய்யக்கூடாது என பொருளாதார வல்லுனர்கள் சொல்றாங்க. இப்படி கார் உதிரி கம்பெனிகள், செல்போன் பாகங்கள்..ன்னு பல தொழில்களை தமிழ்நாட்டில் காலூன்ற விட்டதன் விளைவு தண்ணி அதளபாதாளத்துக்கு போய் இருக்கு. எதையெல்லாம் பெருமையா நினைச்சோமோ அதுவே இப்ப, நமக்கு ஆபத்தாய் முடிஞ்சிருக்கு, இலவசமாய் வந்தால் எந்த பொருளுக்குமே மரியாதை இல்லைன்னு சொல்வாங்க. இனி தண்ணியை காசு கொடுத்து வாங்க போறோம். இனியாவது தண்ணிக்குண்டான மரியாதை கிடைக்குதான்னு பார்க்கலாம்..

அடுத்து எல்லார் வீட்டிலயும் ஆர்.ஓ சிஸ்டம்ன்னு தண்ணியை சுத்தம் செய்யும் மெஷின் ஒன்னை மாட்டி வச்சிருக்கோம். 7 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த டப்பா நிரம்ப கிட்டத்தட்ட 15லிட்டர் தண்ணி over flow வழியா வெளியேறும். வெத்து கௌரவத்துக்காக இந்த ஆர்.ஓ சிஸ்டத்தை எல்லார் வீட்டுலயும் வச்சி எல்லா தாது உப்புகளையும் தண்ணில இருந்து பிரிச்சு வீணாக்கிட்டு சக்கையான தண்ணியை சுத்தம், ருசின்ற பேரில் குடிச்சுக்கிட்டிருக்கோம், அதனால் எலும்பு பலவீனப்பட்டு போகுது. ஓவர் ப்ளோ வழியா வரும் தண்ணிய கெட்ட தண்ணின்னு வீணாக்கிடுறோம்.

அது ஒன்னும் கெட்ட தண்ணி இல்ல, அதும் நல்ல தண்ணிதான் RO systemல மொத்தம் 5 குழாய்கள் வழியாக அடுத்தடுத்து purification process நடந்து, கடைசியா டாங்க்ல வர தண்ணீரைத்தான் நாம குடிக்குறோம். Outflowல வர தண்ணிய வாஷ்பேஷின்ல விட்டுடுவோம். ஆனா அந்த outflow ஆகி வரும் தண்ணிகூட 4 purification process முடிச்சுட்டுதான் வரும். 5வது finest membrane வழியாக மட்டும் போகாது. அவ்வளவே! மண், அழுக்கு, மாதிரி பெரிய துகள்கள்லாம் ஆர்.ஓ சிஸ்டத்துக்கு வெளியே இருக்க பெரிய குழாய் வடிகட்டிதான் தண்ணிய உள்ளயே அனுப்பும். அடுத்த அளவு சிறு சிறு துகள்கள் எல்லாம் அடுத்தடுத்து உள்ள சுத்தப்படுத்தும் குழாய்கள் மூலம் சுத்தமாகிடும். கடைசில உள்ள membraneதான். தண்ணிக்கு ருசியை தரும். அந்த ருசி மட்டுமே outflowல வர தண்ணில இருக்காது. அதனால ஓவர் ஃஃப்ளோ வழியா வரும் தண்ணியவும் குடிக்கலாம். இப்படி ஐந்து லெவல் ஆர்.ஓ சிஸ்டம் இல்லன்னாலும் ரெண்டு லெவல் ஆர்.ஓ சிஸ்டமாவது இப்ப இருக்கும் வீடுகளில் இருக்கும். அதுல ஓவர் ஃப்ளோ ஆகி வரும் தண்ணி கொஞ்சம் உப்பு சுவையா இருக்கும். அதனால், அதை குடிக்க விரும்பலனா சமையலுக்கு, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, வீடு மொழுக, செடிக்கு, வண்டி கழுவ.. இப்படி பயன்படுத்தலாம். எது எப்படி இருந்தாலும் தண்ணிய மட்டும் வீணடிக்கக்கூடாது.. புரிஞ்சுதா புள்ள.
புரிஞ்சுது மாமா! தண்ணியோட முக்கியத்துவம் என்னன்னு சொல்ற மாதிரி ஒரு வீடியோவை ஃபேஸ்புக்ல பார்த்தேன். அப்ப புரில இப்ப புரிஞ்சுட்டுது. அதனால், நம்ம வீட்டில் தண்ணிய மிச்சம் பிடிக்கும் விதமா இன்னிக்கு ஹோட்டல்ல சாப்பிட்டு வந்திடலாம். வாயேன்... 

பார்த்தியா!? வரம் கொடுத்தவன் தலையிலேயே கைவைத்த கதையாய் புத்தி சொன்ன எனக்கே வேட்டு வைக்குறியே! 

கடிச்சு இழுக்கும்போதே நூல் நூலாய் வர்ற மாதிரி  பீட்சா விளம்பரமும், ஆவி பறக்கும் இட்லி தோசைன்னு விளம்பரம் பண்றாங்க, வா மாமா சாப்பிட்டு பார்க்கலாம்.  
அடிப்பாவி விளம்பரத்துல வருவதெல்லாம் உண்மையா?! இதைப்பாரு...  இப்படிதான் விளம்பரம்லாம் எடுக்குறாங்க. இதை நம்பி போய் சாப்பிட்டு காசையும், ஆரோக்கியத்தையும் இழக்கனுமா?!

ம்க்கும், உன்னைலாம் இன்னமும்  நம்புறேன் பாரு எல்லாமே என் தப்புதான்,...

ஆமா புள்ள! எல்லாமே உன் தப்புதான்.. அப்படியே இதுல என்ன தப்புன்னு பார்த்து சொல்லு.... ஹோட்டலுக்கு கூட்டி போறேன்..
என்ன தப்புன்னு என்னால கண்டுபிடிக்க முடில. உங்களால முடியுதா சகோ’ஸ்?!

நன்றியுடன்,
ராஜி