Friday, February 28, 2020

அகண்ட பரிபூரண ஞானதேசிக ஸ்ரீலஸ்ரீ கம்பளி ஸ்வாமிகள் சமாதி -பாண்டிச்சேரி சித்தர்கள்.


இதுவரை நமது புண்ணியம் தேடி பகுதியில் பல கோவில்களை பற்றிதான் பார்த்திருக்கிறோம். எப்பவாவது ஒருசில  சமயத்துல, கோவிலுக்கு பக்கத்திலிருக்கும் சித்தர்கள், சாமியார்கள் ஆசிரமம் பற்றி தனிப்பதிவா பார்த்திருக்கோம். ஆனா,  இதுவரை இல்லாமல் நம் தொடரில் தொடர்ந்து சித்தர்களின் சமாதிகளை பற்றி பகிரப்படுகிறது ஏனென்றால், மானிடராய் பிறந்தவர்களின் துர்க்குணங்களையும்துன்பத்தையும்  மாற்றி, தூய்மையானவர்களாக்குவதற்காக அவதரித்தவர்கள் சித்தர்கள். இவர்கள் தனிமையை நாடுபவர்கள். பசித்திருப்பதையும் விழித்திருப்பதையும் பெரிதும் விரும்புபவர்கள். எப்பொழுதும் சிவபரம்பொருளையே தியானித்துக்கொண்டு இருப்பவர்கள். சித்தர்கள் பெரும்பாலும் சங்கேத மொழியில் பேசுபவர்கள். இவர்கள் பேசுவதை நாம் புரிந்துகொண்டால், நாம் பல ஆபத்துகளிலிருந்து தப்பிக்கலாம். மக்களுக்கு நன்மை புரியும் சித்தர்களை மக்கள் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். இவர்களின் சக்தியோ அளப்பரியது. இதற்கு உதாரணமாக எத்தனையோ சித்தர்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். அதிலும், நாங்கள் சந்தித்த கடைக்காரர் சொன்ன மாதிரி புதுச்சேரி மாநிலத்தில் மட்டுமே சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கின்றது.  அவற்றைதான் நமது பதிவுகளில் தொடர்ந்து பார்த்து, படித்து, தரிசித்து வருகிறோம்.
சரி கடந்தவாரம் நாம ஓம் ஸ்ரீமத் குரு சித்தானந்த ஸ்வாமிகளின் ஜீவசமாதியை தரிசித்தோம். இந்த வாரம் நாம தரிசிக்கப்போவது அகண்ட பரிபூரண ஞானதேசிக ஸ்ரீலஸ்ரீ கம்பளி சுவாமிகள் ஜீவசமாதியை. வேதாந்த சுவாமிகளின் ஜீவசமாதியை தரிசித்து வெளியே வரும்போது,மதியம் ஆகிவிட்டது. பெரும்பான்மையான திருக்கோவில்களில் மதியம் 12:௦௦ மணிக்குமேல் நடையடைத்து விடுவது வழக்கம். சரி இனி சாப்பிட்டு போகலாம்ன்னு பக்கத்திலிருந்த ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டு, பக்கத்துல இங்க பக்கத்தில் எதாவது பார்க்குறமாதிரி இருக்கான்னு ஹோட்டல்காரங்கக்கிட்டயே விசாரித்தோம்.  ம்ம் இருக்கு.  இங்கன பக்கத்திலயே கம்பளி சித்தரின் ஜீவசமாதி இருக்கு போய் பார்ருங்க. ரொம்ப விஷேசமானதுன்னு  சொல்லி கூடுதல் தகவலாய்  பாண்டிச்சேரி முழுக்க 51 சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கு நீங்க ஒவ்வொண்ணா பாருங்க எனக்கூறி கம்பளி சித்தர் ஜீவ சமாதிக்கு போகும் வழியை சொன்னார்.
நாங்க அங்க போனதும், சித்தர் சமாதிக்குதான் வந்துட்டோமா?! இல்ல எதாவது கார்ப்பரேட்  சாமியார்கள் ஆஸ்ரமத்திற்கு வந்துட்டோமான்னு  ஜெர்க் ஆனோம். ஏன்னா, அங்கு, வெளிநாட்டுக்காரங்க அதிகம் இருந்தனர். இதிலிருந்து ஒரு உண்மை புரிகிறது. வெளிநாட்டவர்கள் நம்முடைய சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்து இந்துமத்தை பின்பற்றி அமைதியான வாழ்வு வாழ்ந்து அமைதியை தேடுகின்றனர் போலும். ஆனா, அதேநேரத்தில்  சில தவறுதலான வழிகாட்டுதல்மூலம் சிலருக்கு சில பிரச்சனைகள் வந்துவிடுகின்றன.  வீட்டைவிட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம். அந்த நாலும் தெரிஞ்சு நடந்துக்கிட்டால் நல்லா இருக்கலாம்ன்ற பாடல்வரிகள் நினைவுக்கு வந்தது. சரி சரி, நமக்கெதுக்கு  ஊர்வம்பு?! நாம  வந்தவேலையை பார்ப்போன்னு  ஜீவசமாதியை நோக்கி சென்றோம்.
இந்த சித்தரை பற்றி யாருக்கும் சரியான விவரம் தெரியாதாம்.  ஆனா, இவர் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வந்ததாக மட்டும் செவிவழி செய்திஇவருடைய உண்மை பெயர், பெற்றோர் விவரங்கள் யாருக்கும் தெரியலை. இவர் கம்பளி போர்வையை எப்பயுமே போர்த்திக்கிட்டு இருக்குறதால, மக்கள் இவரை கம்பளி சாமியார்ன்னு கூப்பிடப்போய் அதுவே பின்னாளில் கம்பளி சித்தர்ன்னு ஆகிட்டது. புதுச்சேரியில் உள்ள பாக்குமுடையான் பட்டு, முத்தியால்பேட்டைகவுண்டன்பாளையம் போன்ற இடங்களில் அடிக்கடி நடமாடுவாராம். அதிலும் கவுண்டன்பாளயத்திலுள்ள  சாஹையார்ன்னு பேர்க்கொண்ட குடும்பத்தினரிடம் மட்டும்தான் பேசுவாராம். ஒரு இஸ்லாமிய பெரியவர்,   இவருக்கு குருவாக இருந்தார் சொல்றாங்க. வேலாயுதம் என்ற வைத்தியரும் இவரிடம் நெருக்கமாகவும், இருவரும் நல்ல நட்பு கொண்டவராக இருந்தனர் என்றும் சொல்லப்படுது.


இந்த கம்பளி சித்தர் நிறைய கல்வி அறிவு பெற்றவர். சுத்த பிரம்மச்சாரி. மாயையை வென்றவர் என்றும் தன் ஆன்மீகச் சக்தியால் ஊர் மக்களுக்கு நிறைய நன்மைகளை இந்த சுவாமிகள் செய்துள்ளார். பக்தர்களுக்கு கொடிய நோய் வந்துவிட்டால்  அவர்களுக்கு பச்சிலையும் விபூதியும் தந்து குணமாக்குவாராம். மேலும், இவரைப்பற்றி  செவிவழியாக சொல்லப்படுவது என்ன்னா,  இவர் நினைத்த இடத்தில் மறைந்து, நினைத்த இடத்தில் தோன்றும் சக்தி படைத்தவராக இருந்துள்ளார். சூட்சுமத்தில் மறைந்திருக்கும் ஒன்றை ஸ்தூலத்திற்கு அழைத்து வரும் ஆற்றல் படைத்தவர் என்றும் இதை அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்தவங்க பார்த்திருக்காங்கன்னும் பார்த்தவங்க வழிவழியா வந்தவங்க சொல்லி கேட்டவங்க சொல்றாங்க.  

வீதியில் நடமாடும்போது இவரது தோற்றத்தை கண்டு வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் இவரை விரட்டினால் அன்று முழுவதும் வியாபாரமே நடக்காதாம். கடைக்காரர், கம்பளிச் சித்தரிடம் மன்னிப்பு கேட்டப்பிறகே வியாபாரம் மீண்டும் சிறப்பாக நடைபெறுமாம். இதுவும் செவிவழியா பரவி இங்கு சொல்லப்படுது.  சிலசமயம் சாலையில் நின்று .வாயில் ஒரு சுருட்டை வைத்துக்கொண்டு போவோர்வருவோரிடம் நெருப்பு கேட்பாராம். அவர்கள் கண்டும் காணாமல் சென்றால்  தன் ஆட்காட்டி விரலை சுருட்டுக்கு முன்னால் பத்த வைப்பதுபோல் நீட்டுவாராம் . சுருட்டு குப்பென்று பற்றிக் கொள்ளுமாம். அதேபோல் சுவாமிகள் ஒருமுறை கள்ளுக்கடைக்கு சென்றார். கையை நீட்டினார். கடைக்காரர்,  இன்னும் போணியாகலை போ” ன்னு கள்ளுக்கடைக்காரன் விரட்டினானாம்உடனே, சுவாமிகள் நெடுந்தூரம் சென்று ஒரு ஆலமரத்தடியில் உட்கார்ந்து விட்டார். அன்று பூராவும் வியாபாரம் ஆகவே இல்லை. கள்ளுக்கடைக்காரர், சுவாமிகளை தேடி ஓடினார். வெகு சிரமத்திற்குபின் சுவாமிகளை கண்டுப்பிடித்து கடைக்கு கூப்பிட்டார். சுவாமிகள்,”நான் வருகிறேன்  நீ முன்னால் போஎன்று சொல்லி அவரை அனுப்பினார். கடைக்காரர், ஒரு குதிரை வண்டியில் வேகமாக  கடைக்கு வந்து சேர்ந்தார். சுவாமிகள், அதற்கு முன்னரே வந்து அங்கு உட்கார்ந்திருந்தார். அதுவும் இவரது சித்துவிளையாட்டுகளில் ஒன்று என சொல்லப்படுகிறது.
மற்றுமொரு நாள் ஒரு சாராயக்கடைகாரனிடம் கையை நீட்டினார் சுவாமிகள். அவனும் இன்னும் போணியாகவில்லை என்று சுவாமிகளுக்கு சாராயம் கொடுக்கவில்லை. சுவாமிகளும் அங்கிருந்து போய் விட்டார். அன்று முழுதும் அந்த கடையில் எவ்வளவு முயன்றும் சாராய புட்டியின் மூடிகளை திறக்க முடியவில்லை. அதேபோல் பாக்குமுடையான்பட்டில் ஒரு வீட்டில், சுவாமிகள் ஊறுகாய் கேட்டார்.  வீட்டுக்காரர்,” இல்லை போ” என்று துரத்தினார். சிறிது நேரங்கழித்து வீட்டுக்காரர் ஊறுகாயை திறந்து பார்க்கும்பொழுது ஊறுகாயில் புழு பூழ்த்திருந்தது. உடனே அவர் சுவாமிகளை தேடிச் சென்று மன்னிப்புகேட்டார். பின், மறுபடி புழுக்கள் ஊறுகாயானது. ஒரு சமயம்,  சுவாமிகளும் மற்றும் சிலரும் அடர்ந்த கள்ளிக்காடு வழியே சென்று கொண்டிருந்தார்கள்.ஒரு விரியன் பாம்பு சுவாமிகளை கடித்து விட்டது. உடன் வந்தவர்கள்  சுவாமிகள் இறந்திருப்பார், என்று நினைக்க,காட்டில் அந்த  பாம்பு இறந்து கிடந்தது. இவருக்கு பாதரசத்தை தங்கமாக மாற்றும் ரசவாத வித்தையும் தெரியும். ஆனால் இவர் பொருளாசை, பொன்னாசை என்றுமே கொண்டதில்லையாம்
சுவாமிகள், தன் ஆத்ம சாதனைகளை பெரும்பாலும் தண்ணீரில்தான் செய்து வந்தாராம். ஜலஸ்தம்பனம் செய்வது இவரது பழக்கம். நீரின் மேலேயே படுத்துக் கிடப்பார். சுவாமிகள்  ஏதோ ஒரு காரணத்தால்தான் எப்பொழுதும் ஜலத்தில் ஸ்தம்பனம் செய்து கொண்டிருந்தார்.அப்படியே சில நாட்களில் ஜல சமாதியடைந்தார். அந்தநாள் சரியாக 1874 -ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தட்டாஞ்சாவடி அருகில் உள்ள ருத்திர பூமிக்குச் சமீபத்தில் உள்ள குளத்திலேயே அவர் உடல் கிடந்தது. அவ்வழியே சென்றவர் இதை கவனிக்கவில்லை. மறுநாள் காலை ஒரு குரல் கேட்டது “கம்பளி தண்ணியிலே கம்பளி தண்ணியிலே“. இக்குரல் தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருந்தது. மக்கள் ஒன்றுகூடி அவரது  திருவுடலை, நீரிலிருந்து வெளிக்கொணர்ந்து அங்கயே சமாதி எழுப்பி ஊர்மக்கள் அந்த சமாதியின்மேல் ஒரு லிங்கமும் பிரதிஷ்டை செய்தனர். சமாதியை சுற்றிலும் சுவாமியின் அனுக்கிரகம் பெற்றவர்கள் ஏழு பேர் சமாதியடைந்துள்ளனர். கம்பளி தேசிக சுவாமிகளின் சமாதியின் பின்புறம்-பெரியவர்க்கு பெரியவர் என்னும் மகானின் சமாதியும் இருக்கிறது.
இப்பழுது இந்த சித்தர் சமாதிக்கோவில், வெளிநாட்டிலிருந்து வந்து புதுச்சேரியில் நிரந்தரமாகக் குடியேறியுள்ள ஒரு மேல்நாட்டுக் குடும்பத்தினர் பராமரிப்பில் உள்ளது.அவர் மேல்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், இவரது மனைவியும், மருமகளும் தமிழ்ப்பெண்மணிகளாவர். இவரது மகன் ஒரு தமிழ் மகனாகவே வளர்க்கப்பட்டவர். அவர்கள்தான் இங்கு பூஜைகள் செய்கின்றனர். இந்த கம்பளிச் சித்தர் சமாதி கோவில் விசாலமான நிலப்பரப்பைக் கொண்டதாக உள்ளது. அடர்ந்த மரங்கள், பூஞ்செடிகள் நிரம்பிய இக்கோவிலை தரிசிப்பது மிகவும் சிறப்பான விஷயம். சித்தரின் சமாதிக்குப் பின்னால் சிவபெருமானது மிக அழகிய வெண்கல உருவம் உள்ளது. இது நம் கண்களையும் சிந்தையையும் கவர்ந்திழுக்கிறது. முன்புறம் இருக்கும் நந்தியின் கீழே கம்பளிச் சித்தரின் சிஷ்யர் அம்பலவாண சுவாமிகளின் சமாதியும் உள்ளது. கம்பளிச் சித்தரின் ஜீவசமாதிக்கு நேர் வெளியிலும் ஒரு பெரிய நந்தி உள்ளது. பிராகாரத்தைச் சுற்றி வரும்பொழுது தனிச்சந்நிதிகளில் விநாயகர் முருகப் பெருமானும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிலைகள் எல்லாம் கலைநயமும், புதுமையும்  மிக்கவை. இங்கிருக்கும் முருகன் சந்நிதிக்கு  எதிரிலுள்ள மயில் வாகனமும் வித்தியாசமாக வடிக்கப்பட்டுள்ளது.
படம் உதவி: முகநூல் 
முருகப்பெருமான் சந்நிதியை அடுத்து கஜலட்சுமி தனிச்சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இந்த சந்நிதியில் கஜலட்சுமியின் இருபுறங்களிலும் இரண்டு யானைகளுக்கு பதிலாக எதிரில் ஒரேயொரு யானை மட்டுமென இதிலும் வித்தியாசம் காணப்படுகிறது. அதுவும் புதுமையாக- அழகாக வடிக்கப்பட்டுள்ளது. கஜலட்சுமி சந்நிதியை அடுத்து ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், சக்தியும் அருள்பாலிக்கின்றனர். வெண்கலத்தினாலான திருஉருவங்கள் பார்ப்பதற்கு பரவசமாக இருக்கிறது. கோவிலின் வெளிப்புறம் அம்மன் சிலையும், அதற்கு நேராக சிம்ம வாகனமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும்  விநாயகர், ஆஞ்சனேயர், சரஸ்வதி உருவங்கள் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன.
கூடவே கம்பளிச் சித்தரின் அருளாசி பெற்ற மேலும் ஏழு சித்தர்களின் சமாதிகளும் இங்குள்ளது. அகத்திய முனிவருக்கும் ஒரு சிலை இருக்கு. இந்த சித்தர் சமாதியில் குழந்தை பிறந்தவர்கள் பால் வாங்கி கொடுத்து அதை கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். சித்தரை தரிசித்துவிட்டு வெளியே வரும்போதும், சமாதிக்கோவிலின் முகப்பில் உள்ள சிவசக்தி ரூபம் நம்மை பரவசமடைய செய்கிறது. ஒரு அக்கினி வளையத்தின் நடுவே சிவனும் சக்தியும் ஆனந்தத் தாண்டவமாடும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. சிவபெருமானின் ஆட்காட்டி விரல் நுனிபூமியைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. கீழ்ப்பக்கம் தலை, உயரத்தூக்கிய கால்கள். சக்தியின் முகமும் கீழ்ப்பக்கம், கால்கள் சிவனுடைய கால்களோடு பின்னிப் பிணைந்த திருக்கோலம் என சிலாரூபம் மிக அழகு. மலர்ந்த செந்தாமரைப் பூவின் இதழ்களுக்கு நடுவே மேற்கூறிய சிவன்- சக்தி உருவங்கள் சுமார் முப்பது அடிஉயரம் கொண்டதாய் இருப்பது மிக அழகு.
இந்த ஆனந்தத் தாண்டவ சிலையின் கீழ்ப்பக்கம் ஒரு சிறிய கதவு உள்ளது. அந்த கதவை வருடத்திற்கு ஒருமுறை வரும் மகாசிவராத்திரி அன்று மட்டுமே திறப்பார்களாம். அதற்கு முப்பது அடிக்குக் கீழே ஒரு பாதாள லிங்கம் இருக்கிறது. அந்த லிங்கத்திற்கு மகாசிவராத்திரி அன்று மட்டுமே பூஜை செய்கிறார்கள். சிவராத்திரி அன்று இரவு பதினோரு மணிக்குமேல் கதவு திறக்கப்பட்டு, மேல்நாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரேஒருவர் மட்டுமே கீழே இறங்கிச் சென்று சிவபூஜை செய்வாராம். பாதாள லிங்கத்திற்கு சுமார் அரை மணிநேரம் பூஜை நடக்குமாம். பூஜை செய்தவர் திரும்பி வந்து அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்குவாராம். சிவன்- சக்தி ஆனந்தத் தாண்டவச் சிலையைச் சுற்றிலும் பெரிய வட்டவடிவமான பள்ளம் உள்ளது. கடந்த சிவராத்திரியில் பக்தர்கள் இவ்வட்டத்தைச் சுற்றி நின்று தங்கள் கையில் விளக்குகளை ஏந்தியபடி சிவநாமத்தைச் சொல்லியபடி சுமார் ஆயிரம் பேர், கைகளில் விளக்குகளை ஏந்தி சிவபெருமானைப் பிரார்த்தனை செய்வது பார்ப்பதற்க்கே கண்கொள்ளாக்காட்சியாக இருக்குமாம்.

அதைவிட முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் பூஜை முடிந்தவுடன் அன்றுமட்டும் பக்தர்கள் பாதாளலிங்கத்தை சென்று தரிசிக்கலாம். வருடத்திர்ற்கு ஒருமுறை மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கும். இதேபோல், குப்பம்மாள் என்பவர் மகோதர நோயால் கடும் அவதிப்பட்டு  கொண்டிருந்தார். வேதனை தாங்காது ஒருநாள் சித்தரின் சமாதியில் விழுந்து அழுதாராம். சிலநாட்களில் எந்த மருந்துமில்லாமல்  அந்த நோய் குணமாகியது. என்றும் செல்லப்படுகிறது.
இந்த ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகளின் சமாதிக் கோவிலுக்கு சென்னையில் இருந்து ECR வழியாக புதுச்சேரி சென்று அங்கிருந்து , தட்டாஞ்சாவடி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் சென்று, அங்கிருக்கும் ருத்திரபூமி பகுதியில் உள்ள இந்த சித்தரின் சமாதிக்கு செல்லலாம். அல்லது ஆட்டோக்காரர்களிடம் சொன்னால் சரியாக சித்தர் சமாதியில் கொண்டு இறக்கி விடுவார்கள். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறையேனும் இந்த சித்தரை வழிபட்டால் மனதில் ஆனந்தமும் நிம்மதியும் கிடைப்பதை அனுபவபூர்வமாக உணரலாம் .இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு இறைவனின் அருளும் சித்தரின் ஆசியும் கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்து அடுத்தவாரம் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து உங்களை தரிசிக்கிறேன்
நன்றியுடன்,
ராஜி 

Friday, February 21, 2020

21 தலைமுறைக்கும் முக்தி கொடுக்கும் மகா சிவராத்திரி

விநாயகர் சதுர்த்தி, அனுமன் ஜெயந்தி, ராமநவமி, க்ருஷ்ண ஜெயந்திலாம் அந்தந்த இறைவனின் அவதாரங்களின் தினங்களை குறிப்பிட்டு நடத்தப்படும் விழாக்களாகும். ஆனால், பிறப்பும், இறப்புமில்லாத சிவனுக்கு ஜெயந்தி விழா என்பது கிடையாது. ஜெயந்தி விழா இல்லாத குறையை தீர்க்க ‘மகா சிவராத்திரி’ கொண்டாடப்படுது.

மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரி ‘மகா சிவராத்திரி’ என்றழைக்கப்படுது. உலகிற்கு ஆதாரமான சிவபெருமான் உலக உயிர்களை படைத்தலும், படைத்த உயிர்களை காத்தலும்,  காத்த உயிர்கலை தன்னுல் ஐக்கியப்படுத்திக்கொள்ளுதலும் இந்த நாளில்தான் என்கிறது நம் புராணங்கள். இதனை லயக்ரம ஸ்ருஷ்டி தினம்’ எனப்படுது. ‘லயம்” என்றால் ஒடுக்குதல்.  ஸ்ருஷ்டி என்றழைக்கப்படும் ‘படைத்தல்’.  அதாவது படைத்தலுக்கும், அழித்தலுக்குமான விழாவே ” மகா சிவராத்திரி’ ஆகும்.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து ஆலகால விஷம் வந்தது. அந்த விஷத்தினை பெருமான் உண்டு உலகை காத்தருளினார். சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிப்பட்டனர். அந்த நாளே சிவராத்திரி ஆகும்.
ஒரு காலத்தில் உலகம் அழிந்து சிவப்பெருமானுள் ஐக்கியமானது. இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் பார்வதிதேவி ஆகமவிதிப்படி சிவப்பெருமானை நான்கு கால பூஜை செய்து வழிப்பட்டாள். பார்வதி தேவி வழிப்பட்டதன் நினைவாகவும் சிவராத்திரி கொண்டாடப்படுது. அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நீக்கி நான் எவ்வாறு வழிப்பட்டேனோ அவ்வாறு வழிப்படுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாள். அப்படியே ஆகட்டும் என அப்பனும் அருளினார். அதன்படியே  ’மகா சிவராத்திரி’  கொண்டாடப்படுது.

சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் உள்ள சிவன் படங்களின் முன் பூஜை செய்து, அருகில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும். அன்று சிவன் கோவில்களில் நடைப்பெறும் விசேஷ அபிஷேக ஆராதனைகளில் கலந்துக்கொள்ள வேண்டும். பால், தயிர், தேன், இளநீர்.. போன்ற பொருட்களை வழங்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது.
விரதம் இருக்கும் முறை;
குளித்து முடித்து பூஜை செய்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபடுவது நல்லது. பூஜை அறையிலோ அல்லது கோவில்களிலோ சிவலிங்கத்தை அலங்கரித்து இரவு முழுவதும் விழித்திருந்து நாலு கால பூஜைகளில் கலந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள்   குறைந்த பட்சம் லிங்கோற்த்பவ காலத்திலாவது கண்விழித்திருக்கவேண்டும். அதிகாலை மூன்று மணிக்கு வில்வ இலை மற்றும் மலர்களால் தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் சிவாய நம ஓம்... ஓம் நமச்சிவாய.. என சிவ நாமத்தை தியானம் செய்ய வேண்டும். சிவன் தொடர்பான கதைகள், திருவாசகம், திருமூலர், திருமந்திரம்.. போன்றவற்றை படித்தல் நல்லது.. அதைவிடுத்து, தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றில் கவனம் செலுத்துவதை தவிர்த்தல் நலம்...

இனி நாலு கால பூஜை விவரங்களை பார்ப்போம்...

முதல் கால பூஜை;
இதை பிரம்மதேவன் சிவனை நோக்கி செய்வது.  இந்த காலத்தில் பூஜிப்பது பிறவித்துன்பத்திலிருந்து விடுபட செய்யும். பஞ்சகவ்யம் அபிஷேகம், சந்தனப்பூச்சு, வில்வம் அர்ச்சனை, தாமரை அலங்காரம் , பாயாசம் நிவேதனம் செய்து ரிக்வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
இரண்டாம் கால பூஜை;
இதை மகாவிஷ்ணு சிவனுக்கு செய்வதாய் ஐதீகம்.. இந்த காலத்தில் பூஜிப்பது தன, தான்ய சம்பத்துகள் கிடைக்கும். சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்த பூச்சு, துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்து யஜூர் வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
மூன்றாம் கால பூஜை:
 இந்த பூஜையை சக்தியின் வடிவமான அம்பாள் செய்வதாக ஐதீகம். இதைதான் லிங்கோர்பவ காலம் என்பது. சிவனின்  அடிமுடியை காண விரும்பிய பிரம்மா அன்னமாகவும், விஷ்ணு வராகமாகவும் தோன்றி விண்ணுக்கும், மண்ணுக்கும் புறப்பட்ட நேரமாகும். இந்த காலத்தில் பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் சக்தி காப்பாள். தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சாத்துதல் மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம் செய்து சாம வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
நான்காம் கால பூஜை;
இந்த பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளும் செய்வதாக ஐதீகம். பதவி உயர்வும், இல்லறம் இன்பமாகவும், நினைத்தது நடக்கும். கரும்புச்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர் சார்த்தி, அல்லி, நீலோர்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம்,  வில்வ அர்ச்சனை செய்து சுத்தான்னம் நிவேதணம் செய்து  அதர்வண வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.

சிவராத்திரி விரதத்தின் பலன்கள்;
தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும், பூமிதானம், தங்கதானம், பசுக்கள் தானம், நூறு அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.   வேடன் ஒருவன் புலி துரத்தலுக்கு பயந்து மரத்தின் மீதேறி உறங்காமலிருக்க  மரத்திலிருந்து இலைகளை பறித்து கீழ போட்டும், சுரைக்குடுவையிலிருந்த நீரை சொட்டு சொட்டாய் ஊற்றியும் உறங்காமலிருந்தான். அவன் அமர்ந்திருந்தது வில்வம் மரம், அவன் பறித்து போட்டது அதன் இலைகளை... நீர் ஊற்றியது மரத்தினடியிலிருந்த சிவலிங்கத்தின்மீது,. இன்னதென தெரியாமல் செய்ததன் பலன்?! பிறவா நிலை..

பிரம்மா தவமிருந்து சரஸ்வதி தேவியையும், விஷ்ணு தவமிருந்து மகாலட்சுமியை மனைவியாய் பெற்றது இதே நாளில்தான். எனவே நல்ல துணை வாய்க்க, திருமணமாகாதோர் இந்நாளில் விரதமிருப்பது நலம்.
பாண்டவர்களில் ஒருவனான பீமன் தன் வீரம் பற்றி அகந்தை கொண்டிருந்தான். அவனது அகந்தையை அழிக்க விரும்பிய கிருஷ்ணர் ஒரு புருஷா மிருகத்தை அனுப்பினார். சிங்க முகம், யானையின் தும்பிக்கை, நீண்ட உடல் என்று வித்தியாசமான விலங்காக அது இருந்தது. அதனுடன் பீமன் முழுபலத்துடன் போரிட்டான். ஆனால், புருஷா மிருகத்தின் தாக்குதலை அவனால் சமாளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோவிந்தா, கோபாலா என்று கதறிக் கொண்டே ஒரு இரவு முழுவதும் ஓடினான். அந்த இரவு சிவராத்திரி இரவாக அமைந்தது. இப்படி சிவராத்திரி இரவில் உறங்காமல் இறை நாமத்தை உச்சரித்ததால் பீமனை சிவன் காப்பாற்றினார்.
சிவராத்திரி அன்று வில்வ மரத்தடியில் அம்மையும் அப்பனும் ஒரு மரத்தின்கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவதை மரத்தின் மீது இருந்த குரங்கு ஒன்று கேட்டது. தான் உறங்காமலிருக்க மரத்தின் இலைகளை பறித்து அம்மையப்பன் காலடியில் போட்டது. நாலு காலமும் விழித்திருந்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததை ஏற்றுக்கொண்ட அம்மையப்பன் அக்குரங்கிற்கு  மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்த பலனும், அடுத்த பிறவியில் முகுந்த சக்ரவர்த்தியாக பிறக்க அருளினார். சிவராத்திரி மகிமையை உலகம் அறிய குரங்கு முகத்தோடவே தான் பிறக்க வரம் கேட்டது குரங்கு. அப்படியே முகுந்த சக்ரவர்த்தியை பிறக்க வைத்தார்.
ஆதிசேஷன் அதிக உடல்பலம் வேண்டி சிவப்பெருமானை கும்பக்கோணம் அருகில் உள்ள நாகேஸ்வரத்தில் முதல் காலமும், நாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை இரண்டாம் காலத்திலும், திருப்பாம்புரத்திலுள்ள பாம்புரேஸ்வரரை மூன்றாம் காலத்திலும், நாகூரிலுள்ள நாகேஸ்வரை நாங்காம் காலத்திலயும் வழிப்பட்டு ஆதிஷேசன் பேறுகள் பெற்றான். படிப்பறிவில்லாத வேடுவன் கண்ணப்ப நாயனாராய் மாறிய நாளும் இந்நாளே!
சிவராத்திரிக்கு மறுநாள் சிவப்புராணம் படித்தோ அல்லது கேட்டோ பகல் பொழுதை கழித்து மாலை வேலையில் பூஜை செய்து அன்றிரவு எதும் உண்ணாமல் உறங்கி விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு விரதத்தை அனுஷ்டித்தால் வாழ்வில் எல்லா நலத்தையும் அருள்வதுடன் முக்தியையும் இறைவன் அளிப்பதோடு அவர்களின் மூவேழு தலைமுறைகளின் பாவங்கள் கலையப்பட்டு முக்தி கிட்டும்.
மீள்பதிவு..
நன்றியுடன், 
ராஜி 

Friday, February 14, 2020

ஓம் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் -பாண்டிச்சேரி சித்தர்கள்.

பாண்டிச்சேரி சித்தர்கள் தொடரில் ஸ்ரீபாதபூஜை அம்பலத்தாடும் சுவாமிகள் மற்றும் ஸ்ரீஅக்கா பரதேசி சுவாமிகள் பற்றி பார்த்தோம். சரி அடுத்து எங்க போலாம்ன்னு யோசனையா இருந்தப்ப லேசா கண் அசந்துட்டேன். திடீர்ன்னு முழிச்சு பார்க்கிறேன். என்கூட வந்த அப்பா,அம்மா.அப்பு,பெரியவள், சின்னவள்ன்னு யாரையும் காணோம்.  எங்கே போய்ட்டாங்கன்னு மெதுவா சுத்திலும் தேடுறேன். அங்க ஒரு இடத்தில கூட்டமா இருந்துச்சா?! சரி அங்க இருப்பாங்களோன்னு நினைச்சு அந்த இடத்தை நோக்கி நடந்தேன். அந்த கூட்டத்தில் இருந்த ஆட்களும்,ஆடைகளும் வித்தியாசமாக இருந்தன. ஷாம்பு காணாத சிகைக்காய் வாசனையுடனான தலைகள், பருத்தியிலான ஆடைகள், மொபைல், கார், பைக்ன்னு எதும் இல்ல. முக்கியமா எல்லா மனிதர்களும் எளிமையா இருந்தது என அந்த இடமே வித்தியாசமா  இருந்தது.
அந்த  கூட்டத்துல ஒருவர் ஓலைச்சுவடியிலான பஞ்சாங்கத்தை வச்சு படிச்சுக்கிட்டு இருந்தார். அப்ப, அவரிடம் இன்னைக்கு தேதி என்ன?! ஏன் இவ்வளவு பேர் கூடி இருக்கிறாங்க அப்படின்னு கேட்டேன். அதுக்கு அவர், இன்று வைகாசி மாசம் 15ம் தேதி 1837ம் ஆண்டு என பதில் சொன்னார். ஏன் இவ்வளவு கூட்டம் என மீண்டும் அவரிடம் கேட்டேன். என்னமா உனக்கு விஷயமே தெரியாதா?! இன்று காலைல இருந்தே நாங்கள் இங்க காத்திருக்கோம். நீயும் இங்க என்ன நடக்குதுன்னு பாருன்னு சொல்ல, அவங்களோடு நானும்  காத்திருக்க ஆரம்பித்தேன்.  

மொத்த மக்களும் காத்திருந்தது ஒரு சித்தர் ஜீவசமாதி அடையும் வைபவத்துக்காக.. ஆறடிக்கு மூன்றடியிலான ஒரு குழி தோண்டப்பட்டிருந்தது. அருகில் இளநீர், பால், தயிர், எண்ணெய், அரப்புப்பொடி, பூ என ஒரு அபிஷேகத்துக்கான  அனைத்து பொருட்களையும் வைத்துக்கொண்டு காத்திருந்தனர்.  சிறிது நேரத்தில் ஒரு சாமியார் அங்கு வந்தார். யார் அவர்ன்னு அருகிலிருந்த ஒரு பெரியவர்கிட்ட கேட்டேன். அவர்தான் சுவாமி சித்தானந்தர், சுவாமி அவர்கள், எங்களுக்கெல்லாம், வெகுநாட்களுக்கு முன்பே எங்களிடம் .வைகாசி மாசம் 15ம் தேதி, நான் பரம்பொருளை சென்றடைந்து விடுவேன். நீங்கள் எல்லோரும் பரம்பொருள் கொடுத்த இந்த பூத உடலுக்கு எல்லாவித அபிஷேகங்களும் செய்து நான் ஜீவ சமாதியாகும் குழிக்குள் வைத்து மூடிவிடுங்கள் என்று சொன்னார். இன்றுதான் அந்த தினம்அதனால்தான் நாங்கள் எல்லோரும் இன்று காலைலையில் இருந்து  இங்கு ஒன்றுக்கூடி இருக்கிறோம் என சொன்னார்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே,  அந்த சித்தருக்கு எல்லாவிதமான அபிஷேகங்களையும் செய்து முடித்து சுவாமிகள் ஜீவ சம்தியாகும் இடத்திற்கு சென்று அவரை அந்த குழிக்குள் இறக்கி சுவாமிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அதை பலகைகளால் மூடினார்கள். எல்லாவித சடங்குகளும் வழிபாடுகளையும் முடித்தவுடன் கூடி நின்ற மக்கள் அனைவரும் கண்ணீர் மல்க நிற்கின்றனர். அப்பொழுது ஒருவர் கூட்டத்தில் சத்தமாக பேசினார். யாரும் கவலைப்படாதீங்க!! சுவாமிகள் ஜீவ சமாதி ஆனாலும்கூட, என்னை நாடிவரும் மக்களின் குறைகளை அந்த  இறைவனின் அருளால் தீர்த்து வைப்பேன் என அவர் ஜீவ சமாதி அடைவதற்கு முன்னர் நமக்குலாம் வாக்கு கொடுத்திருக்கிறார்அதனால இனி நாம் அவருக்காக அழக்கூடாது. அவருக்கு நாம இங்க ஒரு ஜீவ சமாதி கோவில் எழுப்பி வழிபடுவோம் என்றார்அதைக்கேட்டதும் கூட்டத்தினர் இருகைகளையும் கூப்பி சுவாமி சித்தானந்தர் வாழ்க! என பக்தியுடன் கோஷம் எழுப்பினர். நானும் சுவாமி சித்தானந்தர் வாழ்க என்று சொல்லும்போது, மை டாடியின் குரல் கேட்டது...ஏய்!! கழுதை!! எப்பயும்போல இங்க வந்தும் பகல்லயே தூங்குறியா?! வண்டியிலிருந்து இறங்கு. அடுத்த சித்தர் ஜீவ சமாதி வந்துடுச்சின்னு ஆசையா!! சொன்னார். நானும் காரில் இருந்து இறங்கி பார்த்து ஆச்சர்யபட்டுட்டேன். நான் நின்று கொண்டிருந்தது காருவடிக்குப்பத்தில் இருக்கும் சுவாமி சித்தானந்தரின் ஜீவ சமாதி கோவிலின் முன்பு....
பயபக்தியுடன் அவரது சந்நிதி படிகளை தொட்டுவணங்கி,  ஜீவசமாதி கோவிலுக்குள் நுழைந்தோம். இனி யார் இந்த சித்தானந்த சுவாமிகள்ன்னு தெரிஞ்சுக்கலாம். 18 -ம் நூற்றாண்டில் கடலூர் மாவட்டத்தில் இருக்கிற வண்டிப்பாளையம் என்னும் ஊர்லதான் நம்ம சித்தானந்த சுவாமி பிறந்திருக்கிறார். அவரது இயற்பெயர் சித்தானந்தன். பிறக்கும்போதே இறையருளுடன் பிறந்ததால் வர் வீட்டில் லட்சுமி கடாட்சம் இருந்தது. அவரின் வீட்டை பிள்ளையார் வீடு ன்னே சொல்வாஞ்களாம்.சிறு வயது முதற்கொண்டே இவர், திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாடலீஸ்வரரை-வழிபட்டு வந்தாராம். இந்த ஆலயத்திற்கு இவரது தாயார் பூத்தொடுக்கும் பணியை செய்து வந்ததால், ஆலயத்திற்கு மாலையை கொண்டு சேர்க்கும் பணியை சிறுவன் சித்தானந்தன் செய்து வந்தார். அத்துடன் ஆலயப்பணியையும் செய்து வந்தார். அப்ப தினமும் தாயார் கட்டிக்கொடுக்கும் மாலையினை எடுத்துக்கொண்டு சிறுவன் சித்தானந்தன் பாடலீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு சென்று கொடுத்து வருவது வழக்கமாக இருந்தது. அப்படி ஒருநாள்,  திடீர்ன்னு மழைபெய்து தெருலாம் வெள்ளக்காடா மாறிடுச்சாம். சிறுவனும் பூவை எடுத்து கோவிலுக்கு சென்று கொடுப்பதற்கு நேரமாகிடுச்சு. அப்ப கோவில் பூசாரி பூஜையை முடிச்சுட்டு கோவிலை பூட்டிட்டு போய்ட்டார். சிறுவன் சித்தானந்தனுக்கு என்ன செய்வது என தெரியலியாம். உடனே மனம் தளராது, இறைவா! நான் உனக்கு மாலை எடுத்துட்டு சரியான நேரத்தில்தான் புறப்பட்டேன். ஆனா, வழியெங்கும் வெள்ளக்காடு. நான் அதை தாண்டி வருவதற்குள் நேரமாகிடுச்சுஇதுல என் தவறு ஏதுமில்லை. உனக்கு தெரியாதது ஏதுமில்லை அதனால இந்த மாலையை நீயே வந்து எடுத்துக்கோ என சொல்லிட்டு பூட்டியிருந்த கோவில் கதவில் தொங்கவிட்டுட்டு போய்விட்டான் சிறுவனான சித்தானந்தன். 

காலையில் கோவில் பூசாரி, சிறுவன் சித்தானந்தனை கூப்பிட்டு ஏன் நேற்று இறைவனுக்கு மாலை கொண்டுவரலை எனக் கேட்டார். ஐயா!  நேற்று மழை பலமா பெய்து, வழியெல்லாம் வெள்ளக்காடு. நான்  மழைக்கு ஒதுங்கி ஒதுங்கி வருவதற்குள் நீங்க கோவில் கதவை பூட்டிட்டு போய்ட்டிங்கநானும், இறைவனுக்காக தொடுத்த மாலை வீணாகிட கூடாதுன்னு கோவில் கதவில் மாட்டிட்டு இறைவனிடம் சொல்லிட்டு வந்திட்டேன். நேற்றே அதை இறைவன் எடுத்திருப்பாரே என சிறுவன் சித்தானந்தான் பதில் சொன்னான். அதை கேட்ட பூசாரிஇவன் நேற்று வராம இருந்ததற்கு ஏதோ கதை சொல்கிறான் என எண்ணியபடியே, சிறுவனை அழைத்துக்கொண்டு  சிரித்தவாறே கோவில் கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கு, இறைவனது கழுத்தில் முதல்நாளிரவு கதவில் தொங்கவிட்டு சென்ற பூமாலை  வாடாமல் கிடந்தது. சிறுவன் சித்தானந்தனிடம் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருப்பதை பூசாரி உணர்ந்து, சிறுவனது காலில் விழுந்து வணங்கினார். பூசாரியின்மூலம் சிறுவனது புகழ் அக்கம்பக்கம் பரவ ஆரம்பித்தது.  அவர் வளர்ந்து வரவர இத்தலத்தில் உள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மனின் பாற் ஈர்க்கப்பட்டு. அனுதினமும் அவரையே  வழிபட்டு வந்தார் எவரொருவர் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டு அவனே கதி” என அவன் பாதங்களில் விழுந்து கிடக்கின்றாரோ,  அவரிடமே இறைவன் நிரந்தரமாய் தங்கி இருப்பான் .இறைவன் நம்முள் பிரகாசிக்கத் தொடங்கினால் தான் இறையுணர்வு கிட்டும் என்பதை உணர்ந்த சித்தானந்தர். அதை மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறுவார்.

தீராத தவத்தினால் ஸ்ரீ பெரியநாயகி அம்மையின் திருவருள் கிடைத்தது கடும் தவப்பயனினால் .அஷ்டமாசித்திகளையும் பெற்றார். அவர் கைப்பட்டதுமே தீராத வியாதிகளும் தீர்ந்தன. அம்மையின் அருளால் அவரின் புகழ் பல இடங்களிலும் பரவியது.  காலங்கள் ஓடின, இதனிடையே பாண்டிச்சேரியில் முத்துக்குமாரமிப்பிள்ளை என்பவர் வசித்துவந்தார். அவருடைய மனைவி பெயர் கண்ணம்மாள். இவங்க பாண்டிச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டையில வசித்து வந்தாங்கமுத்துக்குமாரசாமிப்பிள்ளையின் மனைவியான கண்ணம்மாள் கடுமையான வயித்துவலியினால அவதிப்பட்டு வந்தாங்க. அவங்க, பார்க்காத வைத்தியம் இல்ல. போகாத கோவிலும் இல்ல.  ஆனா வயித்துவலி மட்டும் குணமாகலை.அந்த சமயத்துலதான் மிகுந்த துயரத்தில் வாடிய அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வந்த ஒரு பெரியவர் ஒருவர், அந்த தம்பதிகளிடம், கடலூரிலுள்ள ஸ்ரீசித்தானந்த சுவாமிகளின் அருளைப் பற்றி தெரிவித்து, உடனே சென்று அவரை  பார்க்க சொன்னார்.  அடியார்க்கு  தொண்டு செய்வதை தன் பாக்கியமாக கருதும் முத்துக்குமாரசாமிப்பிள்ளையும் உடனே கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்திற்கு தன் தம்பியையும் கூட்டிட்டு  கோவிலுக்கு சென்று, சித்தானந்த சுவாமிகளுக்காக அவருக்காக கோவிலில் காத்திருந்தனர். அங்கு அவருக்கு முன்னே ஒரு  15 பேர் சித்தானந்தரின் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அந்த சமயத்தில்தான் சித்தானந்தர் தலையை சாய்த்து முத்துக்குமாரசாமிப்பிள்ளையை பார்த்து, வாங்க! பாண்டிச்சேரியிலிருந்து வந்த யாத்திரை சௌகரியமா இருந்துச்சா எனக்கேட்டார். முத்துகுமாரசாமிப்பிள்ளைக்கோ ஆச்சர்யம் தாளலை. நாம முன்னபின்ன அவரை பார்த்ததுகூட கிடையாது.  அப்புறம் எப்படி நம்மை சரியாக அடையாளங்கொண்டு, பேரோடும், ஊரோடும் சொல்கின்றாரே என திகைத்தார். பிறகு, சுதாரித்துக்கொண்டு,  தன்னுடைய மனைவி கண்ணம்மாளின் தீராத வயிற்றுவலியை பற்றி சொல்கிறார். உடனே,சித்தானந்தர் அவருடன் பாண்டிச்சேரிக்கு செல்கிறார்.
சித்தானந்தர் பாண்டிச்சேரியை நெருங்க நெருங்க முத்துக்குமாரசாமிப்பிள்ளையின் துணைவியாரின் தீராத வயிற்றுவலி மெதுவாக  குணமடைந்துக்கொண்டே வந்து, சிறிது நாளில் முழுவதுமாக குணமடைந்தது.  இந்த அதிசயம் மீண்டும் பாண்டிச்சேரி முழுவதும் பரவ ஆரம்பித்தது. சித்தானந்தரின் திருவருளை உணர்ந்துஅவரை தங்கள் இல்லத்திலேயே தங்கும்படி தம்பதியினர் வேண்டிக்கொண்டனர். அதன் பிறகு சித்தானந்தர் அங்கேயே தங்கி, தம் ஆன்ம ஞானத்தை மேற்கொண்டார். சுவாமிகளின் அருளை கேள்விப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டு வந்து ஆசி பெற்றும், நோய்களை குணமாக்கியும் கஷ்டங்களுக்கு தீர்வும் பெற்று சென்றனர். ஒருநாள்  முத்துக்குமார சாமிப்பிள்ளை கருவடிக்குப்பத்தில் உள்ள தன்னுடைய தோப்பிற்கு சித்தானந்தரை அழைத்து சென்றார். அப்பொழுது ஒரு இடத்தை சுட்டிக்காட்டி சித்தானந்தர் “இது இங்கதான் இருக்கப்போகிறது- இது இங்கதான் இருக்கப்போகிறது” என தம் உடலையும், அந்த இடத்தையும் மூன்று முறை தம் விரலால் சுட்டி காண்பித்தார்.

முத்தியால்பேட்டையில் வசித்து வந்த முத்தைய்யா முதலியார், சொக்கலிங்க முதலியார் போன்றோர் சுவாமிகள்மேல் தீராத பக்தியுடன் பூஜித்து வந்தனர். சித்தானந்தரும் அவர்தம் இல்லங்களுக்கு சென்று ஆசி வழங்குவார். ஒருமுறை முத்தைய முதலியாரின் மனைவி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதைக்கண்டு பொறுக்கமாட்டாமல், முதலியார், சுவாமிகளை தேடி ஓடினார். சுவாமிகளிடம் முறையிடும் முன்பே, முதலியாரின் உணர்வை புரிந்துக்கொண்ட சுவாமிகள், ”கவலைப்படாத! உனக்கு ஆனந்தம் தரும் ஆனந்தன் பிறந்து விட்டான். நீ வீட்டுக்கு உடனே சென்று பார்” என ஆசிர்வதித்து அனுப்பினார். சுவாமிகள் சொன்னதை கேட்டு சந்தோஷம் கொண்ட முதலியார் வீட்டிற்கு சென்று பார்த்தார்.அங்கு தாயும் சேயும் நலமாக இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார். ஆனந்தக்கண்ணீர் மல்கினார். சுவாமிகளின் ஞானவாக்கு அப்படியே நடந்ததை கண்டு பூரிப்படைந்தார். சுவாமிகளின் திருவாக்குப்படியே தம் மகனுக்கு “ஆனந்தன்” என்று பெயரிட்டார்.எங்கு, எது நடக்கிறது என்பதை ஞானக்கண்ணால் காணும் ஆற்றல் பெற்றவராக திகழ்ந்தார்.
 ஒருநாள் சித்தானந்தர் குயவர்பாளையத்தை சேர்ந்த ஒரு பக்தரை சந்தித்துவிட்டு திரும்பிவரும் வழியில் ஒரு சாராயக்கடை இருந்தது அதில் ஒரு குடிகாரன் குடித்துக்கொண்டு இருந்தான். சித்தானந்தரை கண்டதும் எழுந்து என்ன சாமீ!! ஆன்மிகம் எல்லாம் பேசுறீங்களாமே கொஞ்சம் சாராயம் குடிச்சுப்பாருங்க.. ஆன்மீகம் இன்னும் சரளமா வரும் என கிண்டல் செய்து வழிமறித்தான். சித்தானந்தர் அவனை தவிர்த்துவிட்டு தன்வழியே சென்றார். ஆனாலும், அந்த குடிகாரன் மறுபடியும் மறுபடியும் அவரை வழிமறித்து சித்தானந்தரை குடிக்க வற்புறுத்தினான். கெடுதலை தனக்குத்தானே வரவழைத்துக்கொள்பவனை என்ன செய்யமுடியும்?! சித்தானந்தரோ சரி சாராயம் கொடுன்னு வாங்கி சிரித்துக்கொண்டே குடிக்க ஆரம்பித்தார். திரும்ப திரும்ப குடித்துக்கொண்டே இருந்தார். ஒரு பீப்பாய் சாராயம் காலியாகிடுச்சுகடைக்காரனோ வெவெலத்து போய்சாமிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். சித்தானந்தர் சாராயம் குடிக்க குடிக்க ,அந்த சாராயத்து போதைலாம், வம்புக்கிழுத்த குடிகாரனின் உடலில் ஏறி குடிகாரனின் நாடித்துடிப்பு மெல்லமெல்ல குறைய ஆரம்பித்தது. தன்னிடம் வம்பு செய்த குடிகாரனை ஒருபார்வை பார்த்துவிட்டு முத்துக்குமாரசாமிப்பிள்ளை வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தார். இவற்றையெல்லாம் பார்த்து பயந்துபோன கடைக்காரன்குடிகாரனின் வீட்டுக்கு போய் தகவல் சொன்னான். அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் குடிகாரனின் நிலைமை மோசமானது. வைத்தியரிடம் செல்லலாம் என்று சொன்ன குடிகாரனின் உறவினர்களை தடுத்த குடிகாரனின் மனைவி ஈவனை தூக்கிக்கொண்டு சுவாமிகளிடம் செல்லுங்கள் எனக்கூறி குடிகாரனை தூக்கிக்கொண்டு ஓடினர். சுவாமிகளின் காலில் குடிகாரனை கிடத்தி தனக்கு மாங்கல்ய பிச்சை தருமாறு வேண்டினாள் குடிகாரனின் மனைவி. அவளின் அழுகைக்கு மனமிரங்கிய சித்தானந்தர் அவனை மன்னித்துஇனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன் என எனக்கு சத்தியம் செய் எனக்கேட்டு வாங்கி அவனை திருத்தி  அனுப்பிவைத்தார்.
சித்தானந்தர் சிலமாதங்கள் சாப்பிடாமல்கூட இருப்பாராம். சிலசமயம் பசிவந்தால் கல்லைக்கூட கடித்து சாப்பிடுவாராம். சித்தானந்தர் எதை சாப்பிடுகிறார், எப்ப சாப்பிடுகிறார் என்று யாருக்கும் தெரியாது. முத்தையா முதலியார் வீட்டில் ஒரு கருங்கல் உண்டு. அது அம்மிக்கல் போல சற்று சமதளமாக இருக்கும் கல், அதை கழுவி அதில் சாப்பாடு போடச்சொல்வார். உளுந்துவடை, சுண்டல் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார். சித்தானந்தர் சாப்பிட பயன்படுத்திய அந்த கல்லுக்கு தனி விஷேசம் இருந்தது.  பிரசவ காலத்தில் அந்தக்கல்லில் உட்கார்ந்து சென்ற தாய்மார்களுக்கு பிரசவவலி இல்லாமல் இருந்ததாம். சித்தானந்தரின்மேல் ஒரு குயவனுக்கு தீராத பக்தி இருந்தது. அவன் சுவாமிகள் உபதேசம் செய்யும் இடமெல்லாம் தவறாது வந்து கேட்பான். அவன் சுவாமிகளை தன்வீட்டுக்கு சாப்பிட அழைத்தான். அவன் சித்தானந்தர் உபதேசம் செய்யும்போது இருக்கும் நிலையை மனதில் கொண்டு அதேபோல் அழகாக மண்ணில் ஒரு சிலை செய்தான். சுவாமிகளும் ஒருநாள் தான் வருவதாக ஒப்புக்கொண்டார். அந்த நாளும் வந்தது குயவன் வீட்டில் நல்ல விருந்து உண்டார். சுவாமிகள் அவ்வளவு உணவு உண்டதை அன்றுதான் பக்தர்கள் பார்த்தனர். உணவு உண்டு முடித்தபின் குயவன் தான் செய்த மண்ணால் ஆன சுவாமிகளின் திருஉருவ சிலையை கொடுத்தான். அதை ஆவலோடு திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தார் சித்தானந்தர். தன் உடலைப்பார்த்து இது தோல் போர்த்தப்பட்ட கூடு . கையிலிருந்த குயவன் கொடுத்த சிலையை பார்த்து ,இது மண்ணினால் ஆன கூடு எனக்கூறி நான் விரைவில் இந்த சிலைக்கு மாறிவிடுவேன் என்றார். 
ஆண்டுகள் பல கடந்தன. சித்தானந்தரின் ஆத்மீக சாதனை முடியும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார் ஸ்ரீபாடலீஸ்வரரின் அழைப்புக்காக காத்திருந்தார். திடீரென்று ஒருநாள் முத்துக்குமாரசாமிப்பிள்ளையை அழைத்து “விளம்பி ஆண்டு வைகாசி மாதம் 28 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று எனக்கு கல்யாணம் நடக்கப் போகிறது- இதை எல்லோரும் அறியும்படி செய் “ என்றார். இந்நிகழ்ச்சி சித்தானந்தர் சமாதி அடைய பத்து நாட்களுக்கு முன் நடந்தது. நாட்கள் நகர்ந்தன. தாம் உபயோகித்த பாத குறடையும், கைத்தடியையும் சொக்கலிங்க பிள்ளையிடம் கொடுத்து விட்டார். அன்றைய தினம் பத்தாம் நாள். சித்தானந்தருக்கு அபிஷேகம், ஆராதனை  நடந்து, கற்பூர ஆராதனை நடந்தது. கற்பூர தீபம் ஜெகஜ்ஜோதியாக உயர்ந்து எரிந்தது. தீப ஒளியில் சித்தானந்தர் சிவபழமாகவே காட்சியளித்தார். மக்கள் அவரை கண்ணீர் மல்க வணங்கினார்கள். பத்மாசனத்தில் அமர்ந்த சுவாமிகள் அப்படியே உள்ளாழ்ந்தார். அவரது பிராணன் கூட்டை விட்டு விலகியது. ஆத்ம சாதகர்கள் சிலர் சித்தானந்தரின் சூக்கும சரீரத்தை தரிசித்தார்கள். தங்களையே மெய்மறந்தார்கள். கருவடிகுப்பத்தில் முத்துகுமாரசாமிப்பிள்ளை தோட்டத்தில் சித்தானந்தர்  சுட்டிக்காட்டிய இடத்தில் ஜீவசமாதி கட்டப்பட்டு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆத்ம சாதகர்கள் தியானத்திற்காகவும், பக்தர்கள் மன அமைதி வேண்டியும் இங்கு வருகின்றனர். நியாயமான வேண்டுகோள்கள் யாவும் நிறைவேறுவதை இங்கு வரும் பக்தர்கள் கண்கூடாக காண்கிறார்கள்.
பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்த காலகட்டமாக 1908ல் இருந்து 1918 வரை இந்த சித்தனத்தாரின் ஜீவசமாதிக்கு வர தவறுவதில்லையாம். அவருடைய நிறைய இலக்கியங்கள் இந்த கோவிலில் இருந்துதான் படைச்சாராம்.  காணிநிலம் வேண்டும் பராசக்தி காணிநிலம் வேண்டும் என்ற பாடலை இந்த இடத்தில இருந்துதான் பாரதியார் எழுதினாராம்!! இங்கிருக்கும்  குளத்தை பாரதியார் ஞானக்கேணி எனக் குறிப்பிடுகிறார். பாஞ்சாலிசபதம், கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, மணக்குளவிநாயகர் துதி, தேசமுத்துமாரியம்மா, இப்படி நிறைய இலக்கண படைப்புகளை இந்த இடத்திலிருந்துதான் எழுதினார் என சொல்லப்படுகிறது.   இந்த கோவில்ல அவருடைய கால்தடம் பதியாத  இடமே இல்லைன்னு சொல்லலாம். அதனாலதான் அவருடைய நினைவாக இங்க கோவில் வளாகத்திலையே பாரதியாருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கு.
இந்த கோவிலில் இருக்கும் சித்தானந்தரின் உருவம் கோவிலின் முன்னால் கட்டப்பட்டிருக்கும் மிகப்பழமையான மணியில் பொறிக்கப்பட்டு இருக்கும் சித்தானந்தரின் உருவ மாதிரியை வச்சுதான் இப்ப இருக்கிற படம் வரைஞ்சிருக்கிறாங்க. அவர் ஜீவன் முக்தியடைஞ்ச நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக குருபூஜை தினமாக சிறப்பாக கொண்டாடுறாங்க, அவர் ஜீவ சம்மதியடைஞ்சு 180 வருஷம் பூர்த்தியடைஞ்சாச்சு. இங்க இருக்கும் தியானமண்டபத்தில் இருந்து தியானம் பண்ணினா நல்ல மனநிம்மதி கிடைப்பதாக இங்க வந்து தியானம் செய்பவர்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறாங்க. இங்கு சித்தானந்தரின் சமாதிக்கு வலது பக்கத்தில் முத்துக்குமாரசாமிப்பிள்ளையின் சமாதியும் (இப்பொழுது இருக்கும் விநாயகர் சந்நிதி),அவருடைய மனைவி கண்ணம்மாளின் சமாதி சித்தானந்தரின் சமாதிக்கு பின்புறத்திலும், முத்துக்குமாரசாமிப்பிள்ளையின் தம்பி சோமசுந்தரத்தின் சமாதி சித்தானந்தரின் சமாதிக்கு இடப்புறத்திலும் சித்தானந்தரின் விருப்பப்படி வைக்கப்பட்டது. 
இந்த ஜீவ சமாதிக்கோவில் தினமும் காலை 7 :30க்கு காலசாந்தி, 10:30 மணிக்கு காலைபூஜை,  11 மணிக்கு உச்சிகால பூஜை மாலை 7:30 மணிக்கு தேசசாந்தி,  9 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 108 சங்காபிஷகமும், சிவராத்திரி திருவிழாவும்  வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாசம் அன்னாபிஷேகமும் அன்று அன்னதானமும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருமணத்தடை நீக்க நாகப்பிரதிஷ்டை வைக்கும் வழிபடும் இங்கு  சிறப்பாக நடைபெறுகிறது. இந்த கோவிலுக்கு எப்படி செல்வதுன்னா, பாண்டிச்சேரியில் உள்ள ECR  ரோடுல இருக்கிற சிவாஜி சிலைக்கு பக்கத்தில தெற்கு நோக்கிய ராஜகோபுரம் இருக்கும். அதுதான் சித்தானந்தர் ஜீவசமாதி கோவில்.

மீண்டும் வேறு ஒரு ஜீவ சமாதி கோவிலில் இருந்து உங்களை சந்திக்கிறேன்,








நன்றியுடன் 
ராஜி  

Monday, February 10, 2020

காதல் என்னவெல்லாம் செய்யும்?!- பாட்டு புத்தகம்


ஒரு பாட்டு என்னவெல்லாம் செய்யும்?! பாட்டு யோசிக்க வைக்கும், அழ வைக்கும், திருந்த வைக்கும், கண்மூடி தூங்க வைக்கும், எரிச்சல்பட வைக்கும், சங்கடப்பட வைக்கும்.... இன்னும் சொல்லப்போனா அதனுடனே வாழவைக்கும் என இந்த பாட்டை கேட்டப்பின் தான் உணர்ந்தேன். காதல்ன்னா என்ன?! அது மனசுல இருக்கா?! இல்ல மூளையில் இருக்கா?! அதோட பலம் எது?! பலவீனம் எதுன்னு அரிதான தமிழ் வார்த்தைகளை வச்சு அற்புதமா வந்திருக்கும் பாட்டு இது,

எப்பயும்போல ரொம்பவே லேட் நான்.. அதான் இந்த பாட்டை இப்போதான் கேட்க நேர்ந்தது.வசீகரமான இசைதான். ஆனா, சிலருக்கு இரைச்சலாகூட இருக்கலாம்.  நாசர் பன்முக கலைஞர்ன்னு தெரியும் ஆனா, காதலை பற்றி எளிமையாய் இப்படி புரிய வைப்பார்ன்னு தெரியாது. பாடலின் பிற்பாதியில் வரும் ம்ம் தேடவேண்டாம் என தொடங்கும் காதலை பற்றிய வர்ணனையில் நவரசத்தையும் குரலில் காட்டி இருப்பார். 

காதலை கொண்டாடும் இந்த வாரத்தில் காதலை பத்தின பாட்டை கேட்டு பாருங்க..



பேரன்பே காதல்..
 உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்
சதா…
ஆறாத ஆவல்

 ஏதேதோ சாயல் ஏற்று
திரியும் காதல்
 பிரத்யேக தேடல்

 தீயில் தீராத காற்றில்
புல் பூண்டில் புழுவில்
உளதில் இளதில்

 தானே எல்லாமும் ஆகி
நாம் காணும் அருவமே

 இத்யாதி காதல்
இல்லாத போதும்
தேடும் தேடல்
சதா…
மாறாது காதல்
மன்றாடும் போதும்
மாற்று கருத்தில் மோதும்
மாளாது ஊடல்


 நாம் இந்த தீயில்
வீடு கட்டும் தீக்குச்சி
நாம் இந்த காற்றில்
ஊஞ்சல் கட்டும் தூசி

நாம் இந்த நீரில்
வாழ்க்கை ஊட்டும் நீர் பூச்சி
நாம் இந்த காம்பில்
காமத்தின் ருசி

 காதல் கண்ணீரில் சிலந்தி
காதல் விண்மீனின் மெகந்தி
காதல் மெய்யான வதந்தி
காலம் தோறும் தொடரும் டைரி

காதல் தெய்வீக எதிரி
காதல் சாத்தானின் விசிறி
காதல் ஆன்மாவின் புலரி
வாழ்ந்து பெற்ற டிகிரி

 ஓர்… விடைக்குள்ளே…
வினாவெல்லாம்… பதுங்குதே…
நாம்… கரைந்ததே…
மறைந்ததே… முடிந்ததே…

கொஞ்சும் பூரணமே வா
நீ… கொஞ்சும் எழிலிசையே
பஞ்ச வர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம்… காதலடி…

 காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்

காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீ... 

திகம்பரி…
வலம்புரி…
சுயம்பு நீ...
நீ…


பிரகாரம் நீ...
பிரபாபம் நீ...
பிரவாகம் நீ...
நீ…

ஆ ஆ...
சிருங்காரம் நீ…
ஆங்காரம் நீ…
ஓங்காரம் நீ...
நீ…

நீ…
அந்தாதி நீ…
அந்தாதி நீ…
அந்தாதி நீ…
நீ…

காதல் என்னவெல்லாம் செய்யும்?!

 ம்ம்…
தேட வேண்டாம்
முன் அறிவிப்பின்றி வரும்..
அதன் வருகையை
இதயம் உரக்க சொல்லும்..

காதல்…
காதல் 11ஒரு நாள் உங்களையும்
வந்தடையும்
அதை அள்ளி அணைத்துக் கொள்ளுங்கள்...
அன்பாக பார்த்துக் கொள்ளுங்கள்...
காதல் தங்கும்...
காதல் தயங்கும்...
காதல் சிரிக்கும்...
காதல் இனிக்கும்...

காதல், கவிதைகள் வரையும்...
காதல் கலங்கும் ...
காதல் குழம்பும்..
காதல் ஓரளவுக்கு புரியும்..
காதல் விலகும்..
காதல் பிரியும்..

கதவுகளை மூடாமல்
வழி அனுப்புங்கள்..
காத்திருங்கள்..
ஒரு வேளை காதல் திரும்பினால்?!
தூரத்தில் தயங்கி நின்றால்?!
அருகில் செல்லுங்கள்!!
அன்புடன் பேசுங்கள்...

போதும்…
காதல் உங்கள் வசம்..
உள்ளம் காதல் வசம்..
மாற்றங்கள் வினா
மாற்றங்களே விடை
காதல்…
படம்:  96
இசை: கோவிந்த் வசந்தா
எழுதியவர்: கார்த்திக் நேத்தா 
பாடியவர்: சின்மயி, கோவிந்த் வசந்தா, பத்ரா ராஜின், நாசர் 
நடிப்பு: திரிசா, விஜய் சேதுபதி

நன்றியுடன்,
ராஜி.