ஆக்கல், காத்தல், அழித்தல்ன்னு கடமையாத்தும் சிவன், பிரம்மா, விஷ்ணுவுக்கும் மேலான கடவுள் ஒன்று உண்டு. அவந்தான் பரம்பொருள்ன்னு ஆத்திகர்களும், உலக இயக்கத்துக்கு காரணமான சூரியனுக்கும் மேலான ஒன்று உள்ளதுன்னு நாத்திகர்கள் சொல்றாங்க. ஆகமொத்தம் நம் கண்ணுக்கு தெரியாத, நம் சிற்றறிவுக்கு எட்டாத பரம்பொருள் உண்டு என்பது உண்மை என நிரூபணமாகிறது. ஆத்திகர்கள், அதுக்கு ருத்திரன், ஆதிசிவன்னு சொல்லி வழிபடுறாங்க. நாத்திகர்கள் இயற்கையே தெய்வம்ன்னு போற்றுறாங்க. ஆன்மீகத்தில். ஆகாயம், நிலம், நீர், காற்று, நெருப்பை கடவுளாய் முக்கியப்படுத்துறாங்க. ஆனா, அறிவியலாளர்கள், இந்த பஞ்ச பூதங்களின்றி எதுவும் நடக்காதுன்னு சொல்றாங்க. இயற்கையை தெய்வமாய் வழிப்படும் பல வழிபாட்டு முறைகள் இருக்கு, அதுல, மலையை தெய்வமா நினைத்து வலம் வருதல் ஒரு வழிபாட்டு முறையாகும். மலைக்கு கிரின்னு ஒரு பெயர். அதனால, இந்த வழிபாட்டு முறைக்கு கிரிவலம்ன்னு பேர் உண்டாச்சு.
மலைக்கு கிரின்னு மட்டுமில்லாம கோடு, குன்று, பாறை, அறை, கல், அலகம், சைலம், அத்திரி, தோதாந்திரின்னும் பொருள் உண்டு. கிரிவலம் என்பது மிகப்பழமையானதாகும். கைலாய மலையையும், மேருமலையை பல சமயத்தாரும் சுற்றி வந்து வழிப்படுவது உண்டு, கயிலை மலையை சூரியன் தினம் தோறும் வலம் வந்து வழிப்படுகின்றான் என புராணங்கள் சொல்லுது. இதை உறுதிப்படுத்தும் விதமா
உலக முவப்ப வலநோபு திருதரு
பலா புகழ் ஞாயிறு
ன்னு தன்னோட முருகாற்று படை பாடல்வரிகளில் நக்கீரன் பாடி இருக்கார். பொதுவா இன்றைய நாட்களில் இப்படி கிரிவலம் வருதல் என்பது ஒரு சடங்காகத்தான் செய்யப்படுதே தவிர, உண்மையான பொருள் உணர்ந்து கிரிவலம் வருதல் லட்சத்தில் ஓரிருவராய்தான் இருப்பர். கர்ப்பிணி பெண் தன் வயிற்றில் இருக்கும் சிசுவின்மீது கவனம் கொண்டு ஒவ்வொரு செயலையும் செய்வதுப்போல, இறைவனை மனதில் இருத்தி, அவன் நாமம் ஜெபித்துகொண்டு கிரிவலம் வருதல் வேண்டும்.
கிரிவலம்ன்னாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலைதான். ஆனா, பௌர்ணமி கிரிவலமென்பது அனைத்து மலைவாழ் கடவுளுக்கும் பொதுவானதாகும். கிரிவலம் பெரும்பாலும் பௌர்ணமி நாட்களில்தான் நிகழும். வெகுசில கோவில்களில் அமாவாசை, உள்ளிட்ட குறிப்பிட்ட நாட்களில் நிகழும். பௌர்ணமி நாட்களில் நிலவின் ஒளி, மலையில் பட்டு எதிரொலித்து நம்மீது படும்போது உடலுக்கு நன்மை செய்யும் கதிர்கள் நம் உடலில் பாயும். மலையில் இருக்கும் மூலிகைகள் காற்றில் கலந்து, நம் நாசி வழியாய் உடலுக்குள் செல்லும். கிரிவலம் செல்லும்போது சாலையில் இருக்கும் சிறு,சிறு கற்கள் குத்தி, உள்ளங்காலில் இருக்கும் அக்குபஞ்சர் இடம் தூண்டப்பட்டு உடலுக்கு நன்மை உண்டாகிறது. அதுமட்டுமின்றி, சித்தர்கள் பௌர்ணமியன்று இறைவனை வழிபட அரூப வடிவில் கிரிவலம் வருவர். அவர்கள் பார்வை நம்மீது பட்டால் நம் வாழ்வு சிறக்கும். தீராத வியாதியும் தீருமென்பதால் பௌர்ணமி நாளில் கிரிவலம் வருதல் சிறப்பு.
இறைவன் குடியிருக்கும் மலைக்கே இத்தனை சிறப்பு என்றால், இறைவனே மலையாய் அருளும் திருவண்ணாமலை கிரிவலத்தின் பயனை வார்த்தைகளால் சொல்லமுடியாது. பிறவி பெருங்கடனை அடைக்க திருவண்ணாமலையில் கிரிவலம் வருதல் நலம் . இங்கு கிரிவலம் வர எடுத்து வைக்கும் ஓரடிக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். ஈரடி வைத்தால் ராஜசூய யாகம் செய்த பலன். மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன், நான்கடி எடுத்து வைத்தால் அனைத்து யாகங்களும் செய்த பலன் கிடைக்கும். நான்கடிக்கே இத்தனை பலனென்றால், மலையை சுற்றியுள்ள 14 கி.மீயும் வலம் வந்தால் எத்தனை பலன் கிடைக்குமென கணக்கிட்டு பாருங்க. இங்கு, ஞாயித்துகிழமையில் கிரிவலம் வந்தால் சிவலோக பதவியும், திங்கட் கிழமையில் வலம் வந்தால் இந்திர பதவியும், செவ்வாயில் வலம் வந்தால் கடன், வறுமை நீங்கும், புதன்கிழமைகளில் வலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் , வியாழக்கிழமை வலம் வந்தால் ஞானமும், வெள்ளிக்கிழமையில் வலம் வந்தால் வைகுண்டப்பதவியும், சனிக்கிழமைகளில் வலம் வந்தால் பிறவிப்பிணி அகலும். அஷ்டமியில் வலம்வந்தால் தீவினைகள் போகும். எல்லா நாட்களையும் விட செவ்வாய் கிழமைகளில் கிரிவலம் வந்தால் கர்மவினை அகல்வதுடன் மோட்சமும் கிட்டும் என சேஷாத்திரி சுவாமிகள் கூறியுள்ளார். தொடர்ந்து 48 நாட்கள் தம்பதி சமேதரராய் கிரிவலம் வந்தால் மன நிம்மதி கிடைக்கும், குழந்தை பேறு உண்டாகும்.
கிரிவலம் வருவதற்கென சில நியதிகள் உண்டு. மலையை வலதுபுறமாக வலம் வரவேண்டும். ஆண்கள், மேற்சட்டை, தலைப்பாகை அணியாமலு வலம் வர வேண்டும். அனைவரும். காலில் செருப்பு அணியாமல் செல்ல வேண்டும். உடமைகளை தவிர்த்து வருதல் நலம். வாகனங்களில் கிரிவலம் வருதல் கூடாது. மாமிசம், மது, புகை, இன்னபிற போதை வஸ்துகளை தவிர்க்க வேண்டும். ஊர்க்கதை பேசாமல் இறைப்பாடல்களை பாடியப்படி வலம் வரவேண்டும். அது தெரியாதவர்கள் குறைந்த பட்சம் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வந்தாலே போதும். கோவில் வாசலிலிருந்து கிரிவலம் ஆரம்பித்து, வழியில் இருக்கும் கோவில்களில் உள்ள தெய்வங்களை வணங்கி, அண்ணாமலையாரை தரிசிப்பதோடு கிரிவலம் முடிக்க வேண்டும். கூட்டம், பணிச்சூழல் காரணமாய் கோவில் செல்ல இயலாதவர்கள் மலையையே இறைவனாய் நினைத்து வணங்கினாலும் போதும். கிரிவலம் முடிந்ததும் தூங்குவதும் குளிப்பதும் கூடாது. கிரிவலம் வரும்போது நொறுக்குத்தீனி தின்றப்படியும் வரக்கூடாது, ஆனால் நீர் அருந்தலாம். கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, குப்பை கொட்டுவது, சிறுநீர் கழிப்பது கூடாது, ஏன்னா, திருவண்ணாமலை முழுக்க அடிக்கு ஒரு லிங்கம் பூமிக்குள் இருப்பதாய் சொல்லப்படுது. கூடவே, ஏராளமான சித்தர்கள் வசிப்பதால், அவர்கள் இடத்தை அசுத்தப்படுத்த கூடாது என்பதற்காகவும்தான். இல்லாதோருக்கு முடிந்தளவுக்கு தானம் செய்வது நல்லது. அன்னதானம் செய்வது சாலச்சிறந்தது.
கிரிவலம் வரும்போது மழை வந்தால் குடைப்பிடிக்ககூடாது. மனிதனும், மிருகமுமல்லாது, உள்ளும் புறமுமல்லாது, மேலும் கீழுமல்லாது, இரவும் பகலுமல்லாது எந்தவித ஆயுதத்தாலும், ரத்தம் கீழ சிந்தாமல் மரணம் சம்பவிக்க வேண்டுமென இறைவனிடம், வரம் கேட்க இரண்யகசிபு தவமியற்ற காட்டுக்கு செல்ல நேர்ந்தபோது, கர்ப்பவதியான மனைவியிடம் சொல்ல தயங்கி அவளிடம் சொல்லாமலே சென்றுவிட்டான். அவனை மனைவி லீலாவதி, அவனை தேடி ஒவ்வொரு ஆலயமாய் சென்று வழிப்பட்டு அவனை தேடினாள். அவ்வாறு தல யாத்திரையின்போது திருவண்ணாமலைக்கு வர நேர்ந்தது. அப்போது, நாரதர் அவள்முன் தோன்றி, காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வரச்சொன்னார். லீலாவதியும் அவ்வாறே வலம் வந்துக்கொண்டிருக்கும்போது, திடீரென புஷ்பமழைன்ற வகை மழை பொழிய, மழைக்கு பயந்து லீலாவதி பாறைகளுக்கு இடையில் மறைந்துக்கொண்டாள்.
என்னதான் பொறுமைக்கு பூமாதேவின்னு பேர் கொண்டாலும், பூமியில் நடக்கும் அக்கிரமச்செயல்களால் சிலசமயம் , அவளுக்கும் ஆக்ரோஷம் உண்டாகி இயற்கை சீற்றங்களாய் வெளிப்படுத்துகிறாள். அவளை சாந்தப்படுத்த, அவ்வப்போது புஷ்ப மழையை இறைவன் அனுப்புவாராம். புஷ்ப மழை என்பது ஒரு கோடி மழைத்துளிகளுக்குபின் ஒரு அமுதத்துளி மழைத்துளிகளோடு சேர்ந்து வருவதாகும். அந்த அமுதத்துளி விழும் இடம் செல்வச்செழிப்போடும், நோய் நொடி அண்டாமல், விவசாயம் செழித்து வளரும் என்பது ஐதீகம். இதுமட்டுமில்லாம புஷ்ப மூலீகை என்ற சகல நோய்களை தீர்க்கும் அரிய வகை மூலிகை முளைக்குமாம். அத்தனை சக்தி வாய்ந்த புஷ்ப மழைக்கு பயந்துதான் லீலாவதி பாறைகளுக்கிடையே ஒதுங்கினாள். அவ்வாறு ஒதுங்கி நின்ற போதும் காயத்ரி மந்திரத்தை விடாமல் ஜெபித்துக்கொண்டிருந்தாள். கோடி மழைத்துளிகளுக்கு பின் இறங்கிய அமுதத்துளி லீலாவதிக்கு அருகிலிருந்த பாறையில் பட்டு தெரித்து லீலாவதி வயிற்றில் பட்டது. அது அவள் வயிற்றிலிருக்கும் சிசுவினை சென்றடைந்து, கருவிலிருக்கும் பிரகலாதன் அந்த அமுதத்துளியை உண்டான். பாறைகளில் பட்ட அமுதத்துளியால் புஷ்ப மூலிகை உண்டாகிற்று. அவ்வழியே வந்த சித்தர்கள் இதைக்கண்டு, உரிய மந்திரம் சொல்லி, அம்மூலிகையை பறித்து, காயத்திரி மந்திரத்தை உச்சரித்துகொண்டிருக்கும் லீலாவதியிடம் கொடுத்தார்கள். அவள் வயிற்றிலிருக்கும் குழந்தையால் விஷ்ணு புதுஅவதாரம் எடுக்க இருப்பதை அறிந்து அவனுக்கு ஆசிக்கூறினர். சித்தர்கள் கொடுத்த மூலிகையை தனது இடுப்பில் சொருகி கொண்டாள் லீலாவதி. மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அக்கருவே பின்னாளில் ஸ்ரீநரசிம்ம அவதாரத்துக்கு காரணமான பிரகலாதன். மழையும், வெயிலும் சேர்ந்து வரும் நேரத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம துதியை உச்சரித்தபடி கிரிவலம் வந்தால் நமது வீட்டில் செல்வம் பெருகும். மழை இல்லாவிட்டாலும் கிரிவலம் வரும்போது.. காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது நலம்.
இதில்லாம உள்கிரிவலப்பாதைன்னு ஒன்னு இருக்கு. திருவண்ணாமலைக்கு மிக அருகாமையில் இப்பாதை இருக்கு. சரிவர பாதை வசதி இல்லாத, காட்டு வழிப்பயணம் இது. இவ்வழியாகத்தான் ரமணர் கிரிவலம் வருவாராம். இவ்வழியில் பச்சையம்மன் ஆலயம், காட்டு சிவா சித்தர், கண்ணப்ப நாயனார் ஆலயம் உட்பட பல சித்தர்கள் ஆசிரமம் இங்க இருக்கு. இங்கு எந்த கடைகளும் இருக்காது. இது பொது வழியில்லை. அதனால, பெண்கள் தனியா போறது அவ்வளவு நல்லதில்லை. தகுந்த துணையோடு போகலாம். ஏன்னா, அங்க, சித்தராகனும்ன்னு ஆசைப்பட்டு தகுந்த வழிக்காட்டுதல் இல்லாம போதைக்கு அடிமையான சாமியார்கள் இங்க இருக்காங்க. அதனால், ஒரு குழுவா போகலாம். உள்கிரிவலம் பத்திய யூ ட்யூப் லிங்க்...
கோடி முறைக்கு மேல் தீப தரிசனத்தை கண்ட இடைக்காட்டு சித்தர் ஜீவ சமாதியானது இத்தலத்தில்தான். இன்றும் அரூபமாய் நம்மோடு கிரிவலம் வரும் சித்தர்கள் பட்ட காத்து நம்மீது பட்டாலே நம் வியாதிகள் தீரும். அடுத்த முறை கிரிவலம் வரும்போது யாராவது ஒரு சித்தரை நினைத்து ஜெபித்து விட்டு வாங்க. அடுத்த முறை கிரிவலம் வருவதற்குள் மிகப்பெரிய மாற்றத்தை உங்கள் வாழ்வில் சந்திப்பீங்கன்னு அங்கிருக்கும் ஆன்மீக அன்பர்கள் சவால் விட்டு சொல்றாங்க. உள்கிரிவலப்பாதை மொத்தம் 7 கிமீ தூரம் கொண்டது. கற்கள், பாறைகள், முட்கள்ன்னு பாதை முழுக்க நம்மை சோதிக்கும். இங்கிருக்கும் ஒரு அம்மன் கோவிலின் முன்புறமிருந்து மலையை பார்த்தால், மலை தெரியாமல் கோவில் மறைச்சுக்கும். சக்திக்குள் சிவன் ஐக்கியம்ன்னு உணர்த்துது இக்கோவில்ன்னு சொல்றாங்க.
தென்னாத்தெனாத் தெத்தெனா என்றுபாடிச்
சில்பூதமும் நீருந் திசைதிசையன
பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர்
படம்பக்கங்கொட் டுந்திரு வொற்றியூரீர்
பண்ணார்மொழி யாளையொர் பங்குடையீர்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியீர்
அண்ணாமலை யேன்என்றீர் ஆரூருளீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.....
கிரிவலத்தில் மொத்தம் எட்டு லிங்கங்கள் இருக்கு.. அது என்னென்ன?! அதில்லாம வழியிலிருக்கும் ஆசிரமங்கள், தீர்த்தங்கள், கோவில்கள்ன்னு சொல்லிக்கிட்டே போகலாம். பதிவின் நீளம் கருதி, இத்தோடு முடிச்சிக்குறேன். முன்ன ஒருமுறை போட்ட பதிவின் லிங்க் தரேன். சிரமம் பார்க்காம போய் படிங்கப்பா...
திருவண்ணாமலை கோவிலின் அமைப்பு பத்தி வேற ஒரு பதிவில் பார்க்கலாம்...
நன்றியுடன்,
ராஜி.