கல்யாணத்தப்போ என் கால்ல விழுந்தது. அதுக்கப்புறம் என் பொண்டாட்டி என் கால்ல விழவே இல்லன்னு புலம்பும் ஆண்கள் நிறைய உண்டு. ஆனா, ஒருசில சமுகத்தாருக்கு இந்த ஏக்கம் வருடத்துக்கு ஒருமுறை தீரும். ஒரு சில ஆண்களின் ஏக்கத்தை தீர்க்கும் நாள் வரலட்சுமி விரதமாகும். இன்றைய தினம் , வீட்டுக்காரர், குழந்தை, குடும்பம்லாம் நல்லா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டு விரதமிருந்து அம்பாளை கும்பிட்டு வீட்டுக்காரர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் நன்னாளே இந்நாள். வெள்ளைக்காரன் பாதர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு கொண்டாடுனா கிண்டல் பண்ணுறோம். ஆனா, நாம புருசனுக்காக கொண்டாடும் இந்த பண்டிகையை கிண்டல் செய்யமாட்டோம். வரலட்சுமி நோன்பை இந்தியாவின் ஹஸ்பண்ட் டேன்னு சொல்லலாமோ?!
பத்ரச்வரஸ்ன்ற மன்னன் சிறந்த விஷ்ணுபக்தன். அவன் மனைவி சுரசந்திரிகா. இவர்களின் மகள் சியாமபாலா. சுரசந்திரிகா இயல்பிலேயே ஆணவம், தலைச்செருக்கும் மகாராணியென்ற மமதையும் கொண்டவள். ஆனால் சியாமபாலாவோ தாய்க்கு நேர் எதிரான குணம் கொண்டவள். மிகுந்த அன்பு கொண்டவள். மனிதரை மதிக்கும் குணம் கொண்டவள். சியாமபாலாவை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்து கொடுத்தனர். காலங்கள் ஓடின. ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி வேடத்தில் பத்ரச்வரஸ் அரண்மனைக்கு மகாலட்சுமி வந்தாள். அவளை யாரோ என்று கருதிய சுரசந்திரிகா அரண்மனையைவிட்டு விரட்டி அடித்தாள்
சுரசந்திரிகா அரண்மனையை விட்டு அகன்ற மகாலட்சுமி நேராய் சுரசந்திரிகாவின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். தாயைப்போல உதாசீனப்படுத்தாமல் கர்ம சிரத்தையுடன் கேட்டு, பயபக்தியுடன் வரலட்சுமி பூஜையை செய்து வழிப்பட்டாள். விரதத்தின் மகிமையால் மலைப்போல செல்வம் குவிய துவங்கியது.. மக்கட்செல்வமும் பெற்றாள். பெற்றோர் வறுமையில் இருப்பதை அறிந்த சியாமபாலா ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அனுப்பித்தாள். அவள் அனுப்பி வைத்தாலும் அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே! அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம், அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது. அவர்களிடம் வந்ததுமே ஒரு பானை தங்கமும் கரியாக மாறி விட்டது!! இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சியாமபாலா என்ன ஏதுவென்று விசாரிக்க, மூதாட்டியாய் வந்த மகாலட்சுமியை விரட்டியடித்த விவரத்தினை அறிந்துக்கொண்டாள். தாயிடம் விவரத்தினை சொல்லி, சுரசந்திரிகாவையும் வரலட்சுமி விரதம் இருக்க சொன்னாள். சுரசந்திரிகாவும் மனம் திருந்தி வரலட்சுமி விரதத்தினை முறையாக கடைப்பிடித்தாள். இழந்த செல்வத்தினையும் திரும்ப பெற்றாள்.
முன் ஜென்ம கர்ம, பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், நீங்கி நாம் நலமோடு வாழ தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன. ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும் மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும். வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளில் செய்யும் . ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.
வீடு வாசலை சுத்தம் செய்து, வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு மண்டபம் அமைத்து, ஒரு மனையில் கோலம் போட்டு, லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம் வைத்து மலர் மாலை, கதம்ப பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சில வீடுகளில் தங்கம் அல்லது வெள்ளியில் வரலட்சுமி உருவம் வைத்திருப்பார்கள். கலசத்தின் மீது இதை வைத்து பூஜை செய்வார்கள். அவ்வாறு வைத்திருந்தால் கலசம் வைத்து அதன்மேல் தேங்காய் வைத்து பட்டுத்துணி, பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் உள்ளே நீர்விட்டு ஏலக்காய், பச்சை கற்பூரம், வாசனை திரவியங்கள் சேர்க்க வேண்டும் அல்லது கலசத்தில் அரிசி, பருப்பு நிரப்பியும் செய்யலாம். அந்த தேங்காயில் வரலட்சுமி உருவத்தை பொருத்தி அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், சுண்டல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
ஒருமுறை பார்வதியும், பரமசிவனும் சொக்கட்டான் விளையாடி கொண்டிருந்தனர். அவ்விளையாட்டுக்கு பரமசிவனின் பணிப்பெண்ணான சித்திரநேமி என்ற தேவர்குலப்பெண் நடுவராய் இருந்தாள். ஆட்டத்தின் முடிவில் பரமசிவன் வெற்றி பெற்றதாய் அறிவித்தாள். தன் எஜமானுக்கு சாதகமாய் சிவன் வெற்றி பெற்றதாய் சித்திரநேமி மீது கோவம் கொண்ட பார்வதிதேவி, சித்திரநேமிக்கு தொழுநோய் வருமாறு சபித்தாள். தன்மீதுள்ள பாசத்தால் சித்திரநேமி அப்படி நடந்துகொண்டாள், அவளுக்கு சாபவிமோசனம் கொடு என பரமசிவன் பார்வதிதேவியை சாந்தப்படுத்தியபின், தேவ கன்னிகைகள், எப்போது குளக்கரையில் வரலட்சுமி விரதமிருப்பார்களோ, அப்போது உன் சாபம் நீங்குமென சொன்னாள். சித்திரநேமி பூமிக்கு வந்து, யாருமில்லாத ஒரு குளக்கரையில் தன் வாழ்நாளை கழித்து வந்தாள். அக்குளக்கரைக்கு தேவக்குல பெண்கள் வரலட்சுமி விரதமிருக்க வந்தனர். அவர்கள் வரலட்சுமி விரதமிருப்பதை கண்டதும் சித்திரநேமியின் சாபம் நீங்கியது. அன்றிலிருந்து சித்திரநேமியும் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்கலானாள்.
உற்றார், உறவினர்கள், அக்கம் பக்கம் இருக்கும் சுமங்கலி பெண்கள், குழந்தைகளை பூஜைக்கு அழைக்கலாம். அனைவரும் சேர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலா வல்லி மாலை, லலிதா சகஸ்ர நாமம், லட்சுமி காயத்ரி போன்றவற்றை சொல்லி விரதம் முடிக்கலாம். தீபாராதனை முடிந்ததும் வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நோன்பு கயிறு, முழு தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரித்து நைவேத்ய பிரசாதங்களை வழங்க வேண்டும்.
பக்தியோடு நோன்பிருந்து வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே மனகசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். இந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் மாதிரியான அன்னதானம் செய்யலாம். . எளியோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமி விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.
மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள்போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தர, சாருமதி கனவில் தோன்றி, வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்க அறிவுறுத்தினாள். இறை வழிப்பாட்டோடு, கணவனையும், மாமனாரையும், மாமியாரையும் சேர்த்து வணங்கி நீண்ட ஆயுளோடு, செல்வ செழிப்புடனும், சுமங்கலியாய் வாழ்ந்தாள். சாருமதியின் செயல்பாட்டை பொருத்தே இன்றும் விரதமிருப்பவர்கள் கணவன், மாமியார், மாமனார் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுவதும் உண்டானது..
வெறும் செல்வச்செழிப்புக்கு மட்டுமில்லாம மாமனார், மாமியார் உறவு மேம்படவும் இவ்விரதம் வழிவகை செய்யுது. ஆன்மீக காரணங்களுக்காகவும், செல்வத்துக்காகவும் நோன்பு இருக்கோமோ இல்லியோ! மாமியார், மாமனார் மனசு மகிழவும், புகுந்த வீட்டாரின் அன்பு கிடைக்கவும், கணவன் நெஞ்சில் நீங்கா இடம்பிடிக்கவும் விரதம் இருக்கலாமே!
விரதம் இருக்கும் முறை..
வீட்டை சுத்தப்படுத்தி கோலமிட்டு, செம்மண் இட்டு, வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் எழுப்பி, ஒரு மனைப்பலகைமீது சந்தனத்தால் ஆன உடல் செய்து அம்மன் முகம் வைத்து வரலட்சுமியினை அதில் எழுந்தருள செய்ய வேண்டும். அம்மனுக்கு மஞ்சள் நிற புடவையை கட்டவேண்டும். அம்மனை தாழம்பூ கொண்டு அலங்கரிக்க வேண்டும். சிலைமுன் தலைவாழையிலை பரப்பி, அதில் படி பச்சரிசி நிரப்பி, அரிசியின்மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொற்காசுகள், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைக்க வேண்டும். அவரவர் வசதிக்கேற்ப ஒரு செம்பினை எடுத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, அதில் நீர் நிரப்பி, மாவிலை வைத்து அதில் முழு தேங்காயினை வைத்து அரிசிக்கு நடுவில் வைக்கனும். கும்ப பூஜை, கணபதி பூஜை முடித்து அஷ்டலட்சுமி பூஜை செய்ய வேண்டும், அருகம்புல்லினை கொண்டு பூஜை செய்வது நலம். பூக்களை கொண்டும் பூஜை செய்யலாம்.. அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லனும். வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், ஜாக்கட் பிட், சீப்பு, கண்ணாடி , வளையல் என அவரவர் வசதிப்படி கொடுக்கலாம். அரிசி பாயாசம், கொசுக்கட்டை, அதிரசம் மாதிரியான நைவேத்தியம் செய்ய வேண்டும். பூஜை முடிஞ்சதும் பூஜையில் வைத்திருக்கும் கயிற்றை கட்டிக்கொள்ள வேண்டும். கலசத்தினை அரிசி இருக்கும் பாத்திரத்தில் வைக்கவனும். இப்படி செய்யுறதால் அன்னப்பூரணி அருள் கிட்டுமாம். லட்சுமி சிலை செய்ய பயன்படுத்திய சந்தனத்தை கிணறு அல்லது ஓடும் நீர்நிலைகளில் கரைச்சுடனுமாம்..
ஆங்.. முக்கியமான ஒரு விசயத்தினை சொல்ல மறந்துட்டேன். வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆசி வாங்கனுமாம். முக்கியமா வூட்டுக்காரர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கனுமாம். அதனால், சகோதரர்களே! இந்த நாளை மிஸ் பண்ணிடாம சீக்கிரமா குளிச்சு முடிச்சு ரெடியா இருங்க. மாமா ரெடியாகிட்டாரான்னு கேக்குறீங்களா?! ஹே! ஹே! ஹேய்ய்ய்ய்.. குறிப்பிட்ட சில இனத்தவர் தவிர மத்தவங்க வீட்டில் ஊர்பக்கம் வரலட்சுமி பூஜை செய்யும் வழக்கமில்லாததால் உம்ம்ம்முன்னும், நான் ஜம்முன்னும் இருக்கோம்...
அனைவருக்கும் வரலட்சுமி விரத தின வாழ்த்துகள்..
நன்றியுடன்,
ராஜி.