பூரியை விரும்பாத பிள்ளைங்க உண்டா?! நமக்குதான் எண்ணெய் விலை, ஆரோக்கியம், செரிமானம்ன்னு ஆயிரம் பிரச்சனைகள் கண்முன் நிழலாடும். தீபாவளி, பண்டிகைன்னு வருசத்துக்கு நாலு இல்ல ஆறு நாட்களுக்கு மட்டுமே இட்லி, தோசை சாப்பிட்ட தலைமுறை நாம. பூரி, சப்பாத்திலாம் வருசத்துக்கு ஓரிரு முறைதான். அதனால் இட்லி, தோசை, பொங்கல்ன்னு தினத்துக்கு ஒரு தினுசா செஞ்சு போட்டு போரடிச்சு போச்சுது. காலை வேளையில் இட்லி, தோசைதான் பெரும்பான்மையான வீட்டில். பூரியும், பொங்கலும் வாரக்கடைசில்ன்னு டைம் டேபிள் போட்டு வச்சு சாப்பிடும் காலக்கட்டமிது.
அரக்கோணம் டூ திருத்தணிக்கு இடைப்பட்ட வழியில் ஒரு கிராமத்தில் இருந்த காலக்கட்டம். அரக்கோணத்துக்கு வரும்போதெல்லாம் ரயில்நிலையத்துக்கு அருகில் சாய்ராம்ன்னு ஒரு ஹோட்டலுக்கு அப்பா கூட்டி போவார். மாடியில் இருக்கும் ஹோட்டல் அது. எப்பயுமே சோலா பூரிதான் வாங்கி கொடுப்பார். சுடச்சுட ஆவிப்பறக்க பூரி வரும். என்ன இருந்தாலும் பட்டிக்காடாச்சே! உடனே! டொப்புன்னு தட்ட பூரிக்குள் இருக்கும் சூடான ஆவி கையில் பட்டு கொப்புளம்லாம் எழும்பி இருக்கு. இப்பயும் எங்க போனாலும் மாலை நேரம்ன்னா சோலா பூரிதான்.
சமைக்க ஆரம்பிச்சபின் அதேமாதிரி பூரி செய்ய முயன்று பலமுறை தோத்து போய் நின்னிருக்கேன். ஒரு பத்து வருசத்துக்கு முந்திதான் அந்த மாதிரி புசுபுசுன்னு எழும்பும் பூரி ரகசியத்தை தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, சோலோ பூரி சோலா பூரி ஆன கதையை அதுக்கு பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதாவது பூரின்னு கேட்டா ஒரு தட்டில் ரெண்டு பூரி, கிழங்கு கொடுப்பது வழக்கம். ரெண்டு பூரிக்கான மாவை திரட்டி ஒரே பூரியா சுட்டு கொடுக்குற பூரியை சோலோ(solo) பூரின்னு சொல்வாங்க.Soloன்னா ஒன்னுன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா?! அந்த சோலோ பூரிதான் சோலா பூரியாகி இப்ப சோழா பூரியாகி நிக்குது. அது என்னடா சோழா பூரின்னா ல வுக்கும், ழ வுக்கும் வித்தியாசம் தெரியாம சொல்றாங்கன்னும், சோழர்கால கண்டுபிடிப்பும்ன்னு கலர்கலரா ரீல் விடுறாங்க. அடேய்களா! உங்க தமிழ், வரலாறு அறிவில் தீய வைக்க!
கடையில் இருக்க மாதிரி புசுபுசுன்னு எழும்பும் பூரியும் அதுக்கு தொட்டுக்க உருளைக்கிழங்கு மசாலாவின் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்..
பூரிக்கு...
மைதா
கோதுமை மாவு
ரவை
உப்பு
எண்ணெய்,
சர்க்கரை ஒரு துளி
உருளைக்கிழங்கு மசாலாவுக்கு....
உருளைக்கிழங்கு
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
காய்ந்த மிளகாய்
சீரகம்,
மஞ்சப்பொடி,
கடுகு
கறிவேப்பிலை, கொத்தமல்லி
உப்பு
ஒரு அகலமான பாத்திரத்தில் முக்கா பங்கு மைதா, கால் பங்கு கோதுமை, 10% ரவை, கொஞ்சம் சர்க்கரை, உப்பு, எண்ணெய் சேர்த்து நல்லா கலந்து விட்டு தண்ணி சேர்த்து பிசைஞ்சுக்கனும். ரொம்ப கெட்டியா இல்லாம பிசைஞ்சுக்கனும். ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு அரை மணி நேரம்வரை ஊற விடனும்.
உருளைக்கிழங்கை கழுவி ரெண்டா, நாலா வெட்டி மஞ்சப்பொடி, உப்பு சேர்த்து வேகவிடனும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கனும். ப.மிளகாயை கீறி வச்சுக்கனும், தக்காளியை பொடிசா வெட்டிக்கனும்..
அடுப்பில் வாணலியை வச்சு எண்ணெய் காய்ந்ததும், கடுகு சீரகம் போட்டு பொரிய விடனும்.
பொரிஞ்சதும் கடலை பருப்பை போட்டு சிவக்க விடனும்..
காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் போட்டுக்கனும். மறக்காம போடுங்க. நான் ப.மிளகாய் போட மறந்துட்டேன்.
வெங்காயம் சேர்த்து வதக்கிக்கனும். உப்பு சேர்த்துக்கிட்டா சீக்கிரம் வதங்கிடும்.
மஞ்சப்பொடி சேர்த்துக்கனும்..
கொஞ்சமா இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கனும்...
தக்காளி சேர்த்து நல்லா வதக்கனும்..
தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து கொதிக்கவிடனும்..
வெந்து மசிச்சு வச்சிருக்கும் உருளையை சேர்த்துக்கனும்.
கறிவேப்பிலை கொத்தமல்லியை போட்டுக்கனும்.. கொஞ்சம் கெட்டிப்பட்டதும் அடுப்பிலிருந்து இறக்கிட்டா உருளைக்கிழங்கு மசாலா ரெடி.
வாணலில தேவையான அளவுக்கு எண்ணெய் சேர்த்து காய வச்சு மாவை மீண்டுமொருமுறை பிசைஞ்சு பிடிச்ச அளவுக்கு வட்டவடிவில் தேய்ச்சு எண்ணெயில் போட்டு ரெண்டு பக்கமும் திருப்பி விட்டு எடுத்தா பூரி ரெடி.
மாவை ஒரே தடிமனில் தேய்ச்சா பூரி நல்லா எழும்பி வரும். இல்லன்னா எழும்பாது. தேய்க்க வராதவங்களுக்கு இப்ப பூரி அமுக்குறதுன்னு மார்க்கெட்ல வந்திருக்கு. அதிலும் நல்லா வருது. மாவை கெட்டியா பிசையாம, ஒரே தடிமனில் மாவை அழுத்தி சுட்டா பூரி எழும்பும். சோலோ பூரி செய்யனும்ன்னா அதிக்கப்படியான எண்ணெய் வேணும். அதனால் சாதா பூரிதான் எப்பயும். :-( மாவு பிசையும்போது கொஞ்சூண்டு தயிரும், ஆப்பசோடாவும் சேர்த்துக்கிட்டா ஹோட்டல்ல கிடைக்குற மாதிரி சோலோ பூரி கிடைக்கும்.
பிள்ளைகளை சாப்பிட வைக்கவும், பாக்சுல போட்டு அனுப்பவும் குட்டி குட்டியா பானிப்பூரி மாதிரி சுட்டு, இப்ப வீட்டுக்கு வரும்போது குட்டி பூரி வேணும்ன்னு வளர்ந்துட்டாலும் கேட்டு வாங்கி சாப்பிடுதுங்க. அதேமாதிரி சுட்டு கொடுக்க சொல்லுதுங்க. அம்மாக்களுக்கு மட்டுமே எப்பயும் ரிட்டைர்மெண்ட் கிடையாது போல!
நன்றியுடன்,
ராஜி