Monday, April 30, 2018

பிள்ளைகளுக்கு கொண்டாட்டம், பெற்றோருக்கு திண்டாட்டம் - ஐஞ்சுவை அவியல்


ஐயையே! பகல்ல கொஞ்ச நேரம் தூங்கமுடியுதா?! ஸ்கூல், காலேஜ் லீவ் விட்டாலும் விட்டாங்க. கத்தியே கூப்பாடு போடுதுங்க. இல்லன்னா டிவி பார்த்துக்கிட்டு இம்சை பண்ணுதுங்க.  ச்ச்சை...

நம்ம வீட்டு பசங்களும் இப்படிதானே கொட்டமடிக்கும்?! அதை நினைச்சு பாரு புள்ள. ஈசியா எடுத்துக்க. லீவ் நாளில்தானே அதுங்க நிம்மதியா இருக்க முடியும்.

ஆமாம் மாமா. லேட்டா எழுந்து, பிடிச்சதை சாப்பிட்டு டிவி பார்த்துக்கிட்டு ஹோம் வொர்க் இல்லாம நல்லா எஞ்சாய் பண்ணுதுங்க.  

பிள்ளைகளை அந்தமாதிரி லேட்டா எழுந்துக்க விடுறது தப்பு. எப்பயும்போல, அதேநேரத்துக்கு எழுப்பிவிட்டுடனும். இல்லன்னா, ஸ்கூல் திறக்கும்போது பிள்ளைகள்தான் கஷ்டப்படும். நமக்கு கோவம் வரும். கத்துவோம். பிள்ளைகளை அடிப்போம். அதேமாதிரி, வீட்டில் பொருட்கள் இறைஞ்சு கிடக்க விடக்கூடாது, அந்தந்த இடத்துல அந்தந்த பொருட்களை வைக்கனும்ன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிடனும். பழைய புத்தகத்தை தேவைப்படுறவங்களுக்கு கொடுக்க சொல்லனும். வெங்காயம், பைசாக்கு ஆசைப்பட்டு எடைக்கு எடை போட்டுட கூடாது. அக்கம்பக்கத்து வீட்டாளுங்களுக்கு எதாவது கொடுக்கனும்ன்னா பிள்ளைங்கக்கிட்ட கொடுத்தனுப்பனும். அப்பதான் அக்கம்பக்கத்தாரோடு குழந்தைகளுக்கு ஒரு அன்னியோன்யம் பிறக்கும். பகிர்ந்துண்ணுதலும் என்னன்னு புரியும்.
செடிக்கு தண்ணி ஊத்துறது, மாடு ஆடு கோழின்னு இருந்தா அதுகளுக்கு தீவனம் போட சொல்லனும். பக்கத்திலிருக்கும் வயல்வெளிக்கு கூட்டி போய் வேலை செய்யுறதை காட்டலாம். அப்பதான் விவசாயிங்க கஷ்டம் தெரியும். உணவின் மதிப்பு புரியும். மார்க்கெட், உழவர் சந்தை மாதிரியான இடங்களுக்கு கூட்டி போகனும். பொருட்களை வாங்க குழந்தைகளை பழக்கனும். ட்ராபிக் போலீஸ், போஸ்ட்மேன் மாதிரியான ஆட்கள் எப்படி வேலை செய்யுறாங்கன்னும், அவங்க படும் கஷ்டத்தை புரிஞ்சுக்க அவங்களோடு பழக விடனும். ஆண், பெண்ணென இரு குழந்தைக்கும் சின்ன சின்ன அத்தியாவசியமான சமையல்களை பழக்கலாம். அப்படியே வீட்டு வேலைகளையும் பழக்கலாம். அந்த தெரு பிள்ளைகள் முழுக்க சேர்ந்து தெருவினை சுத்தம் பண்ணலாம். கிராம சபா, பஞ்சாயத்துகளுக்கு போய் அங்கிருக்கும் நடைமுறைகளை தெரிஞ்சுக்கலாம். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைங்க, பேங்க், போஸ்ட் ஆஃபீஸ், ஆர்.டி.ஓ ஆபீஸ்களுக்கு போய் உதவி தேவைப்படுறவங்களுக்கு உதவி செய்யலாம்.
ட்ராயிங்க் கிளாஸ், ப்ரெஞ்ச், சீனமொழி கிளாசுக்குதான் போகனும்ன்னு இல்ல, நீச்சல், ட்ரைவிங்க், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ரிப்பேர், மாதிரியான கிளாசுக்கும் போகலாம். அப்பா, அம்மாவோடு அவங்க ஆஃபிசுக்கு போய் அவங்க படும் கஷ்டத்தை தெரிஞ்சுக்கலாம். அம்மாவோடு கிச்சனில் ஹெல்ப் பண்ணலாம்.
சொந்தக்காரங்க வீட்டுக்கு கூட்டி போகனும். அப்படி போகும்போது அவங்கக்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு போகனும், அங்க போய் அதிகாரம் செய்யக்கூடாது. அவங்க வீட்டு வேலைகளில் ஹெல்ப் பண்ணனும். முதியோர் இல்லம், கருணை இல்லம் மாதிரியான இடங்களுக்கு கூட்டி போகனும். அப்பதான் நாம எவ்வளவு வசதி வாய்ப்புகளோடு இருக்கோம்ன்னு தெரிஞ்சுக்கிட்டு கடவுளுக்கு, பெத்தவங்களுக்கு நன்றி சொல்வாங்க. படிப்பறிவு மட்டும் வெற்றியை தேடி தந்திடாது. பட்டறிவுதான் சரிப்பட்டு வரும். வெற்றியை தரும்.
நம்ம திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த, கலசப்பாக்கம் ஊராட்சியில் சின்னக்கல்லந்தல் பகுதியை சார்ந்த ஆடுமேய்க்கும் வீட்டில் பிறந்த பி.யுவராஜ் படிச்சு ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கார். முதல்ல அரசு பள்ளியில் படிச்ச இவரு சிவில் இஞ்சினியரிங்க் படிச்சுட்டு சகாயம், இறையன்பு மாதிரியான கலெக்டராகனும்ன்னு சொல்லி கஷ்டப்பட்டு படிச்சு இந்திய அளவில் 751 வது இடமும், தமிழக அளவில் 74வது இடமும் பெற்றார். இவர் கலெக்டரானால், ஆறு, குளம் மாதிரியான நீர்நிலைகளை தூர்வாரி, ஆக்ரமிப்பை அகற்றி நீர் சேகரிக்க ஏற்பாடு பண்ணுவாராம். அதான் அவரோட லட்சியம்ன்னு பேட்டியில் சொல்லி இருக்கார்.
நல்ல விசயம்தான் மாமா. இணையத்துல ஒரு கல்யாண இன்விடேஷன் உலாவுது. அதை புதைச்சு வச்சா செடி முளைக்குமாம். நல்ல முயற்சிதானே?!

ஆமாம். இனி இதுமாதிரியான எதாவது செஞ்சாதான் பூமியை காப்பாத்த முடியும்.   பகையாளி குடும்பத்தை உறவாடி கெடுன்ற  பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா மாமா?!
பகையாளி வீட்டுல போய் உறவாடி அவனை கெடுக்கனும்ன்னு அர்த்தமில்ல. பகையாளி வீட்டுல உறவாடி அவன் மனசுல இருக்கும் பகை உணர்ச்சியை போக்கி அவனையும் நல்லவனா மாத்தனும். இதான் அர்த்தம். நான் சொன்னது சரியா புள்ள?!

சரிதான் நான் கேட்கும் விடைக்கு பதில் சொல்லு பார்க்காலாம்...
காட்டில் பச்சை... கடையில் சிவப்பு... வீட்டில் சிவப்பு... அது என்ன?!
பதில் யோசிச்சு வை. நான் வெளில போய்ட்டு வந்து பதிலை கேட்டுக்குறேன்...

நன்றியுடன்,
ராஜி

Sunday, April 29, 2018

களங்கமில்லா மனமும், வாழ்வும் தரும் சித்ரா பௌர்ணமி

இந்துக்களின் பண்டிகைக்கும் பௌர்ணமிக்கும் நிறைய தொடர்புண்டு. அதுலயும் சித்ரா பௌர்ணமி ரொம்ப விசேஷமானது.  வசந்தக்கால தொடக்கம் சித்திரை  மாதம். அதனால சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிக விசேஷமானது.  மத்த பௌர்ணமிக்கில்லாத சிறப்பு இந்த பௌர்ணமிக்கு மட்டும் ஏன்ன்னு இனி பார்க்கலாம்.


குடும்பம், வியாபார செய்யும் இடம்ன்னு எங்கும்  வரவு, செலவுலாம் சரிவர கணக்கு வச்சு நிர்வகித்தால்  அந்த இடம் ஓகோன்னு வரும். அப்படி வரவு செலவை பார்த்துக்குறவங்களுக்கு வயசுல சின்னவங்களா இருந்தாலும் அங்கு மரியாதை, பொறுப்புன்னு சற்று தூக்கலா இருக்கும்.  சாதாரண வீடு, கடைக்கே இப்படின்னா, உயிர்களின் பாவம், புண்ணியம், பிறப்பு, இறப்பு, சுகம் துக்கம்ன்னு வரவு செலவு வச்சுக்குற வேலை எப்பேற்பட்டது?! எந்தவித சஞ்சலத்துக்கும் ஆட்படாமல் எள்முனை அளவும் தன் கடமைல இருந்து தவறாமல் கடமையை ஆற்றிவருபவர் சித்திரகுப்தன். இவரின் பிறப்பு பற்றி பல்வேறு கதைகள் சொல்லப்படுது.

வட இந்திய கதை...

வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்த  தெய்வம் இந்த சித்திரகுப்தன். வட இந்திய மதமான சமண மதத்தின் தெய்வம் இவர்ன்னும் சொல்லப்படுது. சமண மதம் மட்டும்தான் இறப்பை முன்னிறுத்தி அறம் கூறுவதால், மேலோர் மரபில் கணக்கு வழக்கிற்கான தெய்வமாகச் சித்திரகுப்தன் தோன்றியதாகவும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

தென் இந்திய கதை.....

கோடிக்கணக்கான மக்களின் பாவ புண்ணியத்தை நிர்வகிக்க , தனக்கு துணையாக ஒருவர் வேண்டுமென எமதர்மன் உணர்ந்து சிவப்பெருமானிடம் முறையிட்டார். சிவப்பெருமான் பிரம்மாவிடம் கட்டளையிட, சிவப்பெருமானின் கட்டளையை  சூரியன் மூலமாக நிறைவேற்ற சூரியனுக்குள் அக்னியை உருவாக்கினார்.  சூரியன் வானில் தோன்றும்போது ஒரு வானவில் உண்டானது. அந்த வானவில் நீளாவதி என்ற அழகிய பெண்ணாய் உருமாறியது.   நீளாவதியின் அழகில் மயங்கி அவளை மணக்கிறார். அதன் விளைவாய்  சித்திரகுப்தன் பிறந்தார், சித்திரை மாதத்தில் பிறந்ததால் சித்திரகுப்தன் என்று பெயர் உண்டாயிற்று. கர்ணன் கவசகுண்டலங்களோடு பிறந்த மாதிரி ஏடும், எழுத்தாணியும் கொண்டு பிறந்ததாய் சொல்கின்றனர். சித்திரை என்றால் மனம், அப்தம் என்றால் மறைவு என்று பெயர். மனிதர்களின் மனதில் மறைவாய் உள்ள விசயங்களை எழுதுவதால் இவருக்கு இப்பெயர் உண்டானதாய் சொல்கின்றனர். இவருக்கு துணையாக புறா, ஆந்தை, நான்கு  நாய்களை எமதர்ம ராஜா நியமித்தார்.  பிரபாவதி, நீலாவதி, கர்ணீகைன்னு மூன்று தேவியரோடு, மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர்களின் விதியை வெகு துல்லியமாய் கணக்கிட்டு வருகின்றார் என புராணங்கள் சொல்லுது.

அனைத்து ஜீவராசிகளின் பாவ, புண்ணியத்தை கணிக்க ஒருவரை நியமிக்க ஈசன் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், பார்வதிதேவி ஒரு பலகையில் அழகான ஒரு ஏடும் எழுத்தாணியும் கொண்ட குழந்தையின் படத்தை வரைந்துக்கொண்டிருந்தாள்.  அப்படத்தை கண்ட ஈசன் அப்படத்திற்கு உயிர் கொடுத்து மனிதர்களின் பாவ புண்ணியத்துக்கேற்ப என்ன தீர்ப்பை வழங்கலாமென  எமதர்ம ராஜாவுக்கு கணக்காளர் பதவியில் அமர்த்தினார்.  சித்திரத்துக்கு உயிர் கொடுத்ததால் சித்திரகுப்தன் எனப்பெயர் பெற்றதாய் பரவலாய் சொல்லப்படும் கதைகளில் ஒன்று. விரதமிருந்து  சித்திரகுப்தனை வழிப்படுவோரின் பாவச்சுமை ஏறாதென சிவப்பெருமான் வாக்களித்தார். சித்திரக்குப்தனின் திருமணநாளும் சித்ரா பௌர்ணமியே.


காமதேனு மகனாய்....
அகலிகையின் சாபத்தால் இந்திரனுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போனது. இக்குறை தீர சிவப்பெருமானை நோக்கி இந்திராணியும்,இந்திரனும் கடுந்தவம் இருந்தனர். அவர்களின் தவத்துக்கு இரங்கினாலும், பத்தினி சாபத்தை தன்னால் போக்க முடியாததால் சித்திரகுப்தனை காமதேனுவின் வயிற்றில் கருவாய் வளரச்செய்தார். குழந்தை பிறந்ததும் இந்திரனும், இந்திராணியும் சித்திரகுப்தனை வாங்கி சென்றதாகவும் சொல்லப்படுது. இதனாலாயே இவரின் அபிஷேகத்துக்கும், நைவேத்தியத்துக்கும் பசும்பால், தயிர், நெய் ஆகியவை பயன்படுத்துறதில்லையாம்.


சித்திரகுப்தனை தரிசிக்கும்போதே நமது வினைகள் நம் முன் நிழலாடும். இதுவரை மனதறிந்து நாம் செய்த பாவ வினைகள் நினைவிற்கு வரும்.  இனி இப்படிப்பட்ட பாவங்கள் செய்யக்கூடாதென நம்மை உணர வைக்கும். இதேப்போல தெரிந்தும\ம், தெரியாமல் செய்த புண்ணியத்தையும் இம்மி பிசகாமல் எழுதி வைக்கும் இவரின்  செயலை எண்ணி வியக்க வைக்கும். இவர்தான் கேது பகவானுக்கு அதிபதியாகும்.

இவரை, பக்கம் பக்கமாய்  மந்திரங்கள் கொண்டு ஜெபிக்க வேண்டாம். செய்த தவறுகளை எண்ணி மலையளவு செய்த பாவத்தினை கடுகளகாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எண்ணி எம்மை காப்பாற்றுங்கள் என வேண்டினாலே போதும். இவர்க்கு பானகம் பிடித்த நைவேத்தியம்.   இத்தினத்தில், எண்ணெய் தேய்த்து குளித்தலும் நல்லது. இதுவரை செய்த பாவங்களை இன்றோடு தலைமுழுகி விடுகிறேன் என்று இதற்கு பொருள்.   இத்தினத்தில் நீர்தானம், பேனா, பென்சில், நோட்டுப்புத்தகம் தானம் செய்வது சிறந்தது.  கடம்பூர், கோடங்கிப்பட்டி உள்ளிட்ட 14 இடங்களில் சித்திரகுப்தனுக்குக் கோவில்கள் இருக்கு.  காஞ்சீபுரத்தில் இருக்கும் சித்திரகுப்தன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இனி சித்ரா பௌர்ணமியின் சிறப்புகளை பார்க்கலாம்.

சித்ரா பௌர்ணமியன்று தேவேந்திரன் சொக்கநாதரை வழிப்பட்டு இழந்த இந்திரலோகத்தை பெற்றான்.

மதுரையில் மிகவும் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் இந்நாளில்தான்...


சித்ரா பௌர்ணமியன்றுதான் விழுப்புரம் மாவட்டத்தில் கூத்தாண்டவர் திருவிழா நடக்கும்.  மகாபாரத போருக்கு முன்பாக களப்பலியிட ஆள் தேடியபோது  அர்ச்சுனனுக்கும், நாகலோக கன்னிகையான உலுப்பிக்கும் நடந்த திருமணத்தின் விளைவாய் பிறந்த அரவான் முன்வந்தான்.   ஆனால், தனக்கு திருமணம் ஆகி பெண்சுகம் அனுபவிக்க வேண்டுமென அரவான் கோரிக்கை வைக்க, ஒரு நாளைக்கு எந்த பெண்ணும் அரவாணின் மனைவியாக முன்வராததால் க்ருஷ்ணரே பெண்ணாய் மாறி அரவானை மணந்து ஒருநாள் மனைவியாய் வாழ்ந்து மறுநாள் விதவையானார். அந்நிகழ்ச்சியின் நினைவால்தான் கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் கூடி பூசாரி கையால் தாலி கட்டி மறுநாள் சித்ரா பௌர்ணமியன்று தாலி அறுக்கின்றனர்.


ஜோதிப்பிழம்பான திருவண்ணாமலையில் பௌர்ணமியன்று கிரிவலம் வருவது அறிந்த ஒன்றே.  ஆனால், இந்த சித்ரா பௌர்ணமியன்று சித்தர்கள்லாம் அரூபமாய் கிரிவலம் வருகிறார்கள் என்பது ஐதீகம் . அதேப்போல அந்த வருடத்தில் தவறவிட்ட கிரிவலத்தின் பலனை இந்த நாளில் கிரிவலம் வருவதால் பெறலாம்.


கன்னியாக்குமரியில் சூரியன் மறைவதை தினந்தோறும் காணலாம். ஆனால், சூரியன் மறையும்போது சந்திரன் முழுநிலவாக, மறையும் சூரியனோடு சேர்த்து இன்று காணலாம்.... இதைக்காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர்.




குற்றாலத்தில் செண்பகாதேவிக்கு இத்தினத்தில் சிறப்பு ஆராதனைகள் செய்வித்தால் சந்தன வாசனையோடு மழைப்பெய்யுமென்பது ஐதீகம்.

சித்தர்கள் பலரும் வசிக்கும் திருஞானச்சம்பந்தரால் பாடல்பெற்ற கஞ்சன் மலையில் இன்று அபிஷேக ஆராதனைகள் நடைப்பெறும். சித்தர்கள் மலைக்கோவிலில் இருக்கும் நீரூற்றிலும், மலைமேலுள்ள சித்தேஸ்வரர் கோவிலில் இருக்கும் தீர்த்தத்தலிலும் நீராடி கஞ்சன்மலையை நட்சத்திரங்களா வலம் வருவதாய் ஐதீகம்.  இரவு 11 மணியிலிருந்து விடிகாலை 4 மணி வரை நட்சத்திர ஒளி மலையை சுற்றி நகர்ந்து மறைவதை தரிசிக்கலாம்.

ஆடி அமாவசையன்று விரதமிருந்து பிதுர் தர்ப்பணம் செய்வதுப்போல தாய்க்காக சித்ரா பௌர்ணமியன்று விரதம் மேற்கொள்வர்.

பாம்பன் சுவாமிகள் ராமேசுவரம் அருகில் உள்ள பிரப்பன்வலசை என்னும் ஊரில் மண்ணில் சவக்குழி போல வெட்டி   அதில் புதைந்து முருகனை நினைத்து தவமிருந்தார். ஏழாவது நாள் முருகன் காட்சியளித்து ஆசீர்வதித்தார், அதுமட்டுமில்லாமல் முப்பத்தி ஆறாவது நாள் மீண்டும் அவர்முன் தோன்றி குழியை விட்டு எழுந்து வா என பணித்தார். அவ்வாறு முருகன் பணித்த நாள் இந்நாளே.


பத்தினி தெய்வமான கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் எடுத்த கோவில் கேரள தமிழக எல்லையில் வருடத்திற்கொருமுறை சித்ரா பௌர்ணமியன்று மட்டும் பக்தர்கள் செண்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.

அனைத்து அம்மன் கோவில்களிலும் சுமங்கலி பெண்கள்  சித்ரா பௌர்ணமியன்று பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்விப்பர்.


அனைத்து மாத பௌர்ணமியிலும் நிலவு முழுமையாய்  இருந்தாலும் ஆங்காங்கு நிலவில் சிறு களங்கங்கள்  தெரியும். ஆனா,  சித்ரா பௌர்ணமியன்று  நிலவு தனது கிரணங்களை  பூரணமாய் பொழிந்து துளிகூட களங்கமின்றி காட்சி அளிக்கும்.  நிலவைப்போல களங்கமில்லாத மனமும், வாழ்வும் வேண்டி இந்நாளில் இறைவனை அடிப்பணிவோம்.

நன்றியுடன், ..
ராஜி. 

Saturday, April 28, 2018

ராஜ வாழ்க்கை அருளும் நரசிம்மர் -நரசிம்ம ஜெயந்தி


முன்கூட்டியே முடிவெடுத்து அவதரித்து, தக்க சமயம் பார்த்து தீயவர்களை அழிக்க கடவுள் எடுத்த அவதாரங்கள் பல. ஆனா, பக்தனை காக்கவேண்டியும், பக்தனின் நம்பிக்கையை காக்க வேண்டியும், நொடிப்பொழுதில் இறைவன் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். பக்தனின் நம்பிக்கையை காப்பாற்றியதற்காகவே விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்ததும், கால அளவில் மிகச்சிறியதுமென நரசிம்ம அவதாரம் போற்றப்படுது. 
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருமளவுக்கு பிரகலாதன் அப்படியென்ன தவம் செய்தான்?! இத்தனைக்கும் விஷ்ணுவை பரம எதிரியாக நினைக்கும் இரண்யகசிபுவின் புதல்வன் இந்த பிரகலாதன். அவன் குரலுக்கு இறைவன் ஏன் ஓடோடி வரனும்?! அதை தெரிஞ்சுக்க, பிரகலாதனின் முன்ஜென்ம கதைக்கு போகனும். இப்பிறவியில்  சிறந்த பக்தனான பிரகலாதன், முற்பிறவியில்  கயவனாக, கள்வனாக,  மக்களுக்கு துன்பங்கள் கொடுக்கும் மகாபாவியாக இருந்தான். அப்போது அவன் பெயர் சுவேதன். அவன் தன் இறுதிக்காலத்தில்  தவறுகளை எண்ணி வருந்தி, தன்னை மன்னித்தருளுமாறு மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தான். தனக்கு எந்த வடிவிலாவது காட்சி தந்து அருளுமாறு  வேண்டினான். ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்துக் கொண்டேயிருந்தான். அப்போது ஓர் அசரீரி வாக்கு ஒலித்தது.  இந்தப் பிறவியில் நீ  என்னை தரிசிக்க இயலாது.  உன் அடுத்த பிறவியில் நீ அழைத்ததும் வருவேன் என்று ஒலித்தது. குரல் வந்த திசை நோக்கி கைகூப்பிய வண்ணம் உயிர்விட்டான் சுவேதன். அந்த சுவேதன்தான் இந்த பிறவியில், விஷ்ணுவை பரம எதிரியாக நினைக்கும் இரண்யகசிபுவுக்கு, விஷ்ணு பக்தனாக, மகனாக பிரகலாதனாக பிறந்தான்.


யார் இந்த இரணியன்?

இதையறிந்த மகாவிஷ்ணு அங்கே வந்தார். முனிவர்கள், மகாவிஷ்ணுவை வணங்கி நடந்ததைக் கூறினர். முனிவர்களின் சாபத்தை ஜயனும் விஜயனும் அனுபவித்தே ஆகவேண்டும். இருந்தாலும் அவ்விருவரும் தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கவேஅவர்களுக்கு இரங்கிய பகவான், துவாரபாலகர்களே! என்னைப் போற்றி வழிபட்டு பன்னிரண்டு பிறவிகள் பூலோகத்தில் வாழ்ந்து அதன்பின் வைகுண்டம்  திரும்பிவர விருப்பமா? அல்லது பூலோகத்தில் மூன்று பிறவிகள் எடுத்து என்னை நிந்தித்து வைகுண்டம் திரும்பிவர விருப்பமா? என்று கேட்டார். பகவானே!  தங்களைப் பிரிந்து பூலோகத்தில் பன்னிரண்டு பிறவிகள் இருக்கமுடியாது. உங்களை நிந்தனை செய்தாலும் பரவாயில்லை. மூன்று பிறவிகள் போதும். தங்கள்  திருக்கரங்களால் வதமாகி வைகுண்டம் வரவிரும்புகிறோம் என்றனர். மகா விஷ்ணுவும் அருளினார்.

இந்த நிலையில் பூவுலகில் பிரஜாதிபதி என்னும் முனிவர் மாலை நேர பூஜை செய்துகொண்டிருந்தார். அச்சமயம் அவரது மனைவி திதி அவரைக் கட்டித்  தழுவினாள். அதன்விளைவால் அவர்களுக்கு இரண்டு அசுர குணம்கொண்ட மக்கள் பிறந்தார்கள். அவர்களே இரண்யாட்சன், இரண்ய கசிபு என்ற இரணியன்பிறக்கும்போதே அவர்கள் கரிய நிறமும் முரட்டு குணம் கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்கள் வளரவளர தேவர்கள் அஞ்சினர். இந்த இருவரும்  கடுந்தவம் புரிந்து அரிய வரங்களைப் பெற்றார்கள். ஒரு சமயம் இரண்யாட்சன், பூமாதேவியை கவர்ந்து பாதாள லோகத்தில் கொண்டு சென்று மறைத்து வைத்தான். விஷ்ணு வராக(பன்றி) அவதாரமெடுத்து,  பாதாள லோகம் சென்று இரண்யாட்சனை வதம் செய்து பூமாதேவியை மீட்டு கொண்டு வந்தார். பூமாதேவிக்கும், விஷ்ணுக்கும் நரகாசூரன் பிறந்தான்.


இரண்யாட்சன் வதம் செய்யப்பட்டதை அறிந்து இரணியகசிபு மகாவிஷ்ணுமீது  கடுங்கோபம் கொண்டு, அவரை அழிக்க எண்ணி, அதற்கான பலம்பெற சிவனை நோக்கி தவம் செய்வதற்காக மந்தாரமலையின் குகையினுள் புகுந்து கொண்டான்அப்போது, அவன் மனைவி லீலாவதி கர்ப்பவதியாக இருந்தாள்.  இதுதான் தக்கசமயமென்று நராத முனிவர் இரணியகசிபுவின் அரண்மனைக்கு வந்தார். அப்போது லீலாவதி மஞ்சத்தில் படுத்து  உறங்கிக் கொண்டிருந்தாள்உடனே நாரதர் கர்ப்பத்திலிருக்கும் சிசுவுக்கு  விஷ்ணு உபதேசம் செய்தார். ஸ்ரீமன் நாராயணன் தான் ஈரேழு உலகத்திற்கும் அதிபதி என்றும்,  ஓம் நமோ நாராயணாய எனும் மகாவிஷ்ணுவின் மூல மந்திரத்தையும் உபதேசித்தார். தாயின் கர்ப்பத்திலிருந்த குழந்தை நாரதரின் உபதேசத்தை உன்னிப்பாகக்  கேட்டதுடன், அப்பொழுதே ஓம் நமோ நாராயணாய என்று முணுமுணுக்க ஆரம்பித்தது. இரணியனின் மனைவி லீலாவதி  அழகிய பிரகலநாதனை பிரசவித்தாள்.


மனிதனுமல்லாத மிருகமுமல்லாத உயிரினத்தால், உள்ளேயுமல்லாமல், வெளியேயுமல்லாத இடத்தில், ஆகாயமுமல்லாத பூமியுமில்லாத வெளியில், இரவுமில்லாத பகலுமல்லாத வேளையில், எந்தவித ஆயுதத்தாலின்றி ஒரு சொட்டு ரத்தமும் கீழே சிந்தாத வகையில் தனக்கு மரணம் நிகழவேண்டுமென சிவனிடம் வரம்பெற்று அரண்மனைக்கு திரும்பி, அனைவரும் தன்னையே கடவுளாய் வணங்கவேண்டுமென கட்டளையிட்டான். மீறியவர்களை கடுமையாய் துன்புறுத்தவும் செய்தான்.



வருடங்கள் கடந்தனபிரகலாதன் அசுரக்குலத்தில் பிறந்தாலும் ஓம் நமோ நாராயணாய என்று எட்டெழுத்து மந்திரத்தை எப்போதும் ஜெபித்துக் கொண்டிருந்தான். இதனைக்கண்ட  இரணியன், அந்தப் பெயரை உச்சரிக்காதே. இந்த உலகங்கள் அனைத்திற்கும் நானே அதிபதி. என் பெயரைச் சொல். இரண்யாய நமஹ என்று சொல் என்று  கட்டாயப்படுத்தினான். ஆனால் பிரகலாதனோ மகா விஷ்ணுவே தெய்வம் என்பதில் உறுதியாக இருந்தான். எத்தகைய அச்சுறுத்தலுக்கும் தண்டனைக்கும் அவன்  அஞ்சவில்லை. வெறுத்துப்போன இரணியன் தன் தங்கை ஹோலிகாவை அழைத்து, இவனை நெருப்பு வளையத்திற்குள் அழைத்துச் சென்று பஸ்பமாக்கிவிடு  என்று உத்தரவிட்டான்.

இந்த ஹோலிகா நெருப்பால் பாதிக்கப்படாத வரம் பெற்றவள். அவள் அண்ணன் சொல்படி பயங்கரமாக எரிந்து கொண்டிருந்த நெருப்பு வளையத்திற்குள்  பிரகலாதனை அழைத்துச் சென்றாள். அப்போதும் பிரகலாதன் கைகளைக் கூப்பிக் கொண்டு 'ஓம் நமோ நாராயணாய' என்று ஜெபித்துக் கொண்டே சென்றான். ஆனால்தீய எண்ணத்துடன் நெருப்பு வளையத்திற்குள் நுழைந்த ஹோலிகா பஸ்பமானாள். நாராயணன் திருநாமத்தை ஜெபித்துக்கொண்டே சென்ற பிரகலாதன் பொலிவுடன் வெளிவந்தான். இரணியனின் கோபம் எல்லை கடந்தது. அவன் பிரகலாதனிடம், உன் நாராயணன் எங்கே? அவனைக் காட்டு என பிரகலனாதனை கண்டித்தான்.  ஸ்ரீமன் நாராயணன் தூணிலும்  துரும்பிலும் உள்ளான் என பிரகலனாதன் சொன்னதும், ஆக்ரோஷமாய் அருகிலிருந்த தூணில் பலம்கொண்டு தன்கதையால் தாக்கினான்


இரண்யகசிபுவுக்கும் பிரகலனாதனுக்கும் வாக்குவாதம் நடந்தது பிரதோஷ காலம் முடியும் நேரம். இரவும் பகலும் இல்லாத வேளை.  மனிதனுமில்லாத, மிருகமுமில்லாத மனித உடலும், சிங்கமுகமாக நரசிம்மராக அந்தத் தூணிலிருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற வரத்தினை அறிந்த நரசிம்மர் அந்தப் பிரதோஷ வேளையில் அறைக்கு உள்ளேயும் வெளியேயும் இல்லாமல், ஆகாயத்திலும் பூமியிலும் இல்லாமல் தம் மடியின்மீது படுக்கவைத்து, ஆயுதத்தால் கொல்லாமல் தன் கூர்மையான கைகளின் நகங்களால், அவன் மார்பினைப் பிளந்து,  ரத்தத்தினை உறிஞ்சி, குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொண்டு இரணியனை சம்ஹாரம் செய்தார். இந்தக் காட்சியைக் கண்ட பிரகலாதன்.  



இரண்யகசிபு வதம் முடிந்தும் தன் ஆக்ரோஷம் குறையாமலிருந்த நரசிம்மரை நெருங்க அனைவரும் பயந்திருந்த வேளையில், பிரகலாதன் நெருங்கி, பாடல்பாடி அவரின் ஆக்ரோஷம் தனித்தான். தன் எதிரே சிங்கமுகத்துடனும் மனித உடலுடனும் காட்சிதந்த நரசிம்மமூர்த்தியை கைகூப்பி வணங்கினான். அப்போது, அவனுக்கு தன் முற்பிறவி நினைவுக்கு வந்தது. பகவானே, கடந்த பிறவியில் நான் வேண்டிக்கொண்டதன் பயனால் இப்பிறவியில் எனக்காக நரசிம்ம அவதாரம் எடுத்து அருள்புரிந்தீர் என்று தாள்பணிந்தான்  பிரகலாதன்.



கருணைக்கடலான நரசிம்ம மூர்த்தி பிரகலநாதனை தன் மடியில் இருத்தி,   ''நீ ஏன் தூணைக் காட்டினாய், துரும்பைக் காட்டியிருக்கக் கூடாதா? என்று பிரகலநாதனிடம் கேட்க,  ''ஏன் இப்படி கேட்கிறீர்கள்? என்று பிரகலாதன் கேட்க, தூண்  என்பதால், இரணியன் அதை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. துரும்பு என்றால் அதைக் கிள்ளியெறிந்தவுடன் பிரசன்னமாகி இருப்பேனேஇவ்வளவு நேரம் கடந்திருக்காதில்லையா?! நீயும் அவஸ்தை பட்டிருக்க மாட்டயல்லவா?! என்றாராம். ஆம்!  நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை. அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும்கேட்ட வரத்தை கேட்ட மாத்திரத்திலேயே அளிக்க வல்லவன் இந்த நரசிம்மர்.


மனித உடலும் சிங்கமுகமும் கொண்ட நரசிம்மமூர்த்தி சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் காட்சி தருகிறார்.   திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டத்திலுள்ள பொன்னியன்மேடு ன்ற திருத்தலத்தில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் அருள்புரிகிறார். ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் இவர் நான்கு கரங்களுடன் திகழ்கிறார்.  
நாமக்கல் மாவட்டம் குடைவரைக் கோவிலில் நரசிம்மர் மூலவராக வீராசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சிதருகிறார். இரணியன் வயிற்றைப் பிளந்த கைகள் என்பதற்கேற்ப சிவப்பு நீரோட்டத்துடனும் நகங்கள் ரத்தக்கறைச் சிவப்புடனும் இருப்பதை தரிசிக்கலாம்
யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோபநரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என முக்கியமான 9 வகை நரசிம்ம வடிவங்களை வகைப்படுத்தி வணங்கினாங்க. இவைத் தவிர பஞ்சமுக நரசிம்மர், விஷ்ணு நரசிம்மர், ருத்ர நரசிம்மர்ன்னு தங்கள் அன்புக்கும், பக்திக்கும் ஏற்ப நரசிம்மரை பல வடிவங்களிலும் நரசிம்மரை உருவாக்க் வணங்கினர் நம் முன்னோர். 


நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை. இன்று நரசிம்ம ஜெயந்தி, சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில்  நரசிம்ம ஜெயந்தி வரும். அன்றைய தினம் விரதமிருந்து இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். 
நரசிம்மருக்கு செவ்வரளி மாதிரியான சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுக்கலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம். 
இறைவனுக்கு உயிர்களை காக்க மட்டுமே தெரியும். அசுரக்குலத்தில் பிறந்து, பரம எதிரியின் மகனையே கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து காப்பாற்றும் கடவுள் நம்மை காப்பாற்ற மாட்டாரா?! அப்படி அவர் நம்மை காக்க என்ன செய்யனும்?! தவமிருக்கனுமா?! இல்ல விரதமிருக்கனுமா?! பூஜை?! அர்ச்சனை?!ம்ஹூம் எதுமே வேணாம். அபயம்ன்னு அவன் தாளில் முழுமையாய் சரணாகதி அடைந்தால் போதும். நம்மை காப்பான் இறைவன்.

நரசிம்ம மூல மந்திரம்..
‘ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்’
எதிரி பயம் நீங்க, இனம்புரியா அச்சம், குழப்பம் விலக, ராஜ வாழ்க்கை கிட்ட, தொழிலில் தடை விலக நரசிம்மரை வழிபடுவோம்!
நன்றியுடன்,
ராஜி