உள்ளூர் ஆட்டக்காரனுக்கு மரியாதை குறைவுன்னு நம்மூர்ல ஒரு பழமொழி உண்டு, அதுமாதிரி நம்ம ஊரு சாமிக்கு என்னிக்குமே மரியாதை இருந்ததில்லை. எவனாவது வெளிநாட்டிலிருந்து வந்து தஸ்புஸ்சுன்னு சொன்னாதான் நம்ம ஊரு சாமியோட அருமையே இவனுங்களுக்கு தெரிய வரும். அதுமாதிரி, தசரா பண்டிகைன்னா மைசூருக்கு போகனும், கொல்கத்தாவுல போய் பார்க்கனுமேன்னு சொல்லி சிலாகிப்பாங்க. அதுமாதிரி பீட்டர் வுடுற ஆளுங்களாம் ஒருமுறை நம்ம தமிழ்நாட்டுல தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் குலசைன்னு சொல்லப்படுற குலசேகரன்பட்டினத்துல நடக்கும் தசரா விழாவை போய் பார்த்துட்டு வாங்கப்பு. அதுக்கப்புறம் இதுமாதிரியான பீட்டர் விடமாட்டீக.
தர்மம் நிலைக்கனும்ன்னா அதர்மம் அவ்வப்போது அழிக்கப்பட வேண்டும். அப்படி அதர்மத்தை அழிக்கிற நிகழ்வுக்குப் பெயர்தான் ’சூரசம்ஹாரம்’ என்பதாகும். அகன்று விரிந்து விசாலம் பெற்றிருக்கிற இந்த பூமியில் சூரிய பகவான் முகம்காட்டி மறைகிற கால அளவை ஒரு நாள் அதாவது 24 மணி நேரம் என நிர்ணயித்திருக்கிறான் மனிதன். அப்படியாக 365 நாட்களைக் கொண்ட நகர்வை ஒரு ஆண்டு என்கிறோம். இந்த பிரபஞ்சத்தில் இதுமாதிரியான ஆண்டுகள் லட்சக்கணக்கில் நகர்ந்திருக்கிறது. இந்த லட்சக்கணக்கான ஆண்டுகளில், இப்பூமியில் வாழும் உயிர்கள் பல்வேறு உருவ அமைப்பையும் குண மாற்றத்தையும் பெற்றிருக்கிறது. அவ்வாறு மாற்றத்தக்க பண்புகள் எதிர்கால உயிர்களுக்கு நன்மை செய்வதாகவும் தீமை செய்வதாகவும்கூட அமைந்திருக்கிறது. தீமை செய்யும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக மக்களை நல்வழிப்படுத்தும் முயற்சிக்குப் பெயர்தான் ஆன்மிகம்.
அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்ட ஆன்மிகத்தின் பாதையைப் பின்பற்றி திருக்கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அசுரன் என்பவன் கொடியவனாக கருதப்படுகிறான். அந்த கொடியவனை சம்ஹாரம் செய்யும் அதாவது அழிக்கும் செயலே சூரசம்ஹாரம். வைகாசி விசாக திருநாளில் முருகன், பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாதம் காளி உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதற்காக விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்தினால் நினைத்த காரியம் நிறைவேறும் என பக்தர்கள் அனுபவ ரீதியாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது பெரியோர் வாக்கு( இனிமேலாவது பொண்டாட்டி பேச்சுக்கு மதிப்பு கொடுங்கப்பா!). இந்த உலகின் அனைத்து நிகழ்வுக்கும் ஆதாரம் சக்திதான். அந்த சக்திக்கு உரியவள் அன்னை பராசக்தி. சக்தி அருள்பாலிக்கும் இடங்கள் அனைத்தும் சக்திப்பீடங்கள் என அழைக்கப்படுது. இப்படி இந்தியா முழுக்க 108 சக்தி பீடங்கள் உண்டு. அகிலத்தை படைத்து,காத்து, அழித்து ரட்சிக்கும் அன்னை ஒவ்வொரு தலத்திலயும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறாள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து கன்னியாக்குமரி செல்லும்பாதையில் 11கிமீ தூரத்தில் அமைந்திருக்கிறது அழகிய கடற்கரை கிராமமான குலசேகரன்பட்டினம். இவ்வூரில் உள்ள முத்தாரம்மன் கோவில் உலக புகழ் பெற்றது. இங்குதான் தசரா பண்டிகைக்கொண்டாடப்படுது. அன்று மகிசாசூரனை முத்தாரம்மன் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வை காணவும், தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தவும் உலகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரு நாளைக்கு சைவ உணவை ஒருவேளை மட்டும் உண்டு விரதமிருந்து இங்கு வந்து அன்னையின் அருளாசியினை பெற்று செல்கின்றனர். இங்கு அருள்பாலிக்கும் அன்னை சுயம்புமூர்த்தம். பெரும்பாலும் லிங்கத்திருமேனிதான் இதுமாதிரி சுயம்புவாய் தோன்றி நமக்கு அருள்பாலிக்கும். இங்கு அன்னை சுயம்புவாய் எழுந்தருளிருப்பது அதிசயத்திலயும் அதிசயமே.
ஆதியில் வீரவளநாடுன்ற பெயருடன் திகழ்ந்த இந்த ஊர், பின்னர் முற்கால பாண்டிய மன்னர்களில் ஒருவரான குலசேகர பாண்டியன் பெயரிலேயே குலசேகரப்பட்டினம் என்ற அழைக்கப்படுது. அக்கால மன்னர்கள் நகர்வலம் செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது, இறைவனின் ஆலயங்களை தரிசிப்பதை தங்களின் கடமையாகக் கொண்டிருந்தனர். ஒருமுறை குலசேகரபாண்டியன் இந்த ஊரில் தங்க நேர்ந்தபோது, கோயில் எதுவும் அங்கே இல்லாதபடியால் ஊரின் தென்பாகத்தில் ஒரு விநாயகர் கோயிலைக் கட்டினான். அந்த விநாயகரின் பெயர் ‘மும்முடி காத்த விநாயகர்’ . பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலும் சேர, சோழ மன்னர்களும் வெவ்வேறு காலங்களில் இந்த ஊரை தங்கள் வசப்படுத்தியதாகத் தெரியவருகிறது. அதனால்தான் ‘மும்முடி காத்த விநாயகர்’ என்று பெயர் ஏற்பட்டது.
முத்தாரம்மனுக்கு அருகிலேயே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிப்பதும் அதிசத்திலும் அதிசயமே! இத்தலத்தில் சிவன், ஞானமூர்த்தீஸ்வரர் மனித உருவில் மீசையுடன் காட்சியளிப்பது இன்னும் அதிசயம். விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்யும்பொருட்டு தனது வலக்கையில் செங்கோல் தாங்கி உள்ளார். இடக்கையில் திருநீற்று கொப்பரை தாங்கி தன்னை வழிபடுபவருக்கு ஞானத்தை அளிக்க தயார் நிலையில் தான் இருப்பதை நமக்கு உணர்த்துகிறார். ஞானம் என்றால் பேரறிவு. மூர்த்தி என்றால் வடிவம் என்று அர்த்தம். பேரறவு உடைய வடிவத்த்தை தாங்கி ஈகை சுரப்பவர் என்று பொருள்படும்படி ஞானமூர்த்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
சோழ நாடு சோறுடைத்து, சேர நாடு வேழமுடைத்து, பாண்டிய நாடு முத்துடைத்துன்னு ஒரு சொலவடை உண்டு. தங்களுக்கு கிடைக்கும் அரிய வகை முத்துக்களைக்கொண்டு ஆரம் செய்து அன்னைக்கு அணிவித்து மகிழ்ந்தனர் பாண்டிய மன்னர்கள், அதனாலும் அன்னைக்கு முத்தாரம்மன் என பேர் வந்தது. இதுமட்டுமின்றி, அம்மை கண்டவர்களை முத்துப்போட்டதாக சொல்வர். முத்துக்கண்டவர்களை இங்கிருக்கும் அம்மன் பீடத்தை சுற்றி நீர்கட்ட செய்வர். அதனால் முத்து நோய் குஇணமாகும். முத்து நோயை ஆற்றுப்படுத்தியதாலும் அன்னைக்கு முத்தாரம்மன் என்றும் பெயருண்டானது.
முன்னொரு யுகத்தில் இந்தப் பகுதியில் வரமுனி என்ற பெயரில் ஒரு முனிவர் இருந்தார். ஒருமுறை அகத்திய முனிவர் இந்த வழியாக வந்து கொண்டிருந்தபோது, வரமுனிவர் அவரை வரவேற்று உபசரிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டார். அதன் விளைவாக அவர் மகிஷாசுரனாக மாறி, மற்ற முனிவர்களையும் மக்களையும் துன்புறுத்தி வந்தார். அன்னை சக்தி தோன்றி மகிஷனை சம்ஹாரம் செய்தாள். அசுரனாக இருந்தாலும், பூர்வாசிரமத்தில் முனிவராக இருந்ததால், மகிஷனை சம்ஹாரம் செய்ததும் அம்பிகையை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. தோஷம் நீங்க வேண்டி அம்பாள் சிவபெருமானை தியானித்து தவம் இருந்தாள். அம்பிகையின் தவத்துக்கு இரங்கி சிவபெருமான் ஞானமூர்த்தீஸ்வரராக தரிசனம் தந்த தலம்தான், இந்த குலசை திருத்தலம்.
ஆதியில் மகிஷாசுரனை வதம் செய்த தேவி, அந்த தோஷம் நீங்க சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து, சிவபெருமானின் தரிசனமும் தோஷ நிவர்த்தியும் பெற்ற இடத்தில் கால ஓட்டத்தில் புற்றும், அதன் மேலாக ஒரு உடைமரமும் வளர்ந்தது. பின்னாளில், ஆங்கிலேயர்கள் கன்னியாகுமரிக்கு புறவழிச்சாலை அமைக்க குலசேகரப்பட்டினத்தில் தேர்வு செய்திருந்த இடத்தில் இந்தப் புற்றும் மரமும் தடையாக இருக்கவே, மரத்தை வெட்ட முடிவெடுத்தனர். அப்படி மரத்தை வெட்டியபோது, எந்தக் கிளையை வெட்டினாலும் அதில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. சுற்றியிருந்தவர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றபோது, அங்கிருந்தவர் களில் ஒருவர் மரத்தின் அடிப்பகுதியை மற்றவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அங்கே இறைவனின் முகமும், இறைவியின் முகமும் காணப்பட்டது. எனவே மக்கள் அந்தப் புற்றையே இறைவியாக பாவித்து வழிபடத் தொடங்கிவிட்டனர்.
அன்னை முத்தாரம்மனின் திருஉருவத்தை காணமுடியவில்லையே என மக்கள் ஏங்கிக்கொண்டிருந்தனர். அதனால், கோவில் அர்ச்சரின் கனவில் தோன்றிய அன்னை, கன்னியாக்குமரி அருகே இருக்கும் மைலாடி என்ற ஊருக்கு செல்ல பணித்தாள். அதேப்போல, மைலாடியிலிருக்கும் ஒரு சிற்பியின் கனவில் தோன்றி, தனது உருவம் மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் காட்சியளித்து, அங்குள்ள ஆண்,பெண் பாறையில் ஒரே பீடத்தில் தங்களை சிலையாய் வடிக்க கட்டளையிட்டாள். பின்னர் தாங்கள் சுயம்புவாய் எழுந்தருளும் குலசை கோவில் குருக்களிடம் கொடுத்து பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டாள். அதுப்படி சிலையை வடித்து முடிக்கவும், அர்ச்சகர் அவ்வூருக்கு வரவும் சரியாய் இருந்தது. அச்சிலைகளை பெற்றுக்கொண்டு இன்று கோவில் கொண்டிருக்கும் இடத்தில் அம்மையப்பனை பிரதிஷ்டை செய்து வழிப்பட்டனர்.
புரட்டாசி மாத அமாவாசையன்று கொடியேற்றத்துடன் குலசை தசரா பண்டிகை தொடங்கும். கொடியேற்றத்தின் முதல் நாளிரவு சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்படும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அன்னை திருவீதி எழுந்தருள்வாள். 10வது நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அன்னை கடற்கரையில் எழுந்தருளியிருக்கும் சிதம்பரேஸ்வரர் ஆலயத்தை நோக்கி அம்மன் புறப்பாடு நடக்கும். அங்கு மகிஷாசுர வதம் நடக்கும். முதலில் ஆட்டு தலை, அடுத்து சிம்ம தலை, கடைசியாய் மகிஷாசுரன் தலையினை கொய்து சூரசம்ஹாரம் நிகழ்த்துவாள். இதையடுத்து அன்னை சிதம்பரேஸ்வரர் கோவிலை அன்னை வந்தடைவாள் அங்கு அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைப்பெறும். மறுநாள் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா நடக்கும். மாலை அம்மன் கோவிலை வந்தடைவாள். பின்னர் கொடி இறக்கப்படும். சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் கழட்டப்பட்டு விழா நிறைவுப்பெறும்.
குலசை தசரா திருவிழாவின்போது ஆண்கள் பலரும் விதவிதமான காளிவேடமிட்டு வருவதை காணலாம். காளிவேடத்தை கண்டதும் அம்மனே நேரில் வந்துள்ளதாக எண்ணி அருளாசி பெறுவதும், அருள்வாக்கு கேட்பதும் சர்வசாதாரணமாய் நடக்கும், அம்மன் சூரசம்ஹாரத்தின்போது மகிஷனை சூலாயுதத்தால் குத்தும்போதும் தாங்களும் தங்கள் கையிலிருக்கும் சூலாயுதத்தால் மகிஷனை குத்துவார்கள். காளிவேடம் போடுபவர்கள் 48 நாட்கள் கடுமையான விரதமிருப்பார்கள். அவரவர்கள் குடியிருக்கும் ஊர்களிலேயே கோவில்களில் தங்கி தாங்களே சமைத்து ஒருவேளை மட்டும் சைவ உணவை உண்டு விரதமிருப்பர். கருமை நிற சாய்ம் பூசி, அட்டை, தகரத்தால் செய்த கைகள், க்ரீடம் தரித்து, நேர்ப்பார்வை மட்டுமே பார்க்கும்விதமாய் செய்யப்பட்ட கண்மலர் அணிந்து , வாயின் இருபுறமும் சொருகிக்கொள்ளும் கோரைப்பற்கள், வெளித்தொங்கும் நாக்கு முண்ட, ருத்திராட்சை மாலை அணிந்து காளிவேடமிடுவர். காளி வேடமிடக்கூட பொருட்கள் அனைத்தும் சேர்ந்து கிட்டத்தட்ட 30கிலோ தேறும்.
முன்பு ஆண்கள் மட்டுமே வேடமிடுவர். இப்போது இளம்பெண்களும் தங்களின் நேர்த்திக்கடனுக்காக வேடமிடுகின்றனர். பக்தர்கள் இவ்வாறு வேடமிட்டு அருகிலிருக்கும் ஊர்களில் சென்று தர்மம் பெறுவதை வழக்கமாய் கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம், முற்காலத்தில் முத்ஹ்டாரம்மன் மாறுவேடத்தில் சென்று அருகிலிருக்கும் ஊர்களில் வாழும் மக்களிடம் தர்மம் பெற்றதாய் ஐதீகம். இந்த ஐதீகப்படிதான் இன்றும் இப்படி தர்மம் கேட்கின்றனர். அவ்வூர் மக்களும் முத்தாரம்மனே தங்களிடம் தர்மம் கேட்பதாய் எண்ணி மனம் மகிழ்ந்து அரிசி, பருப்பு, பணம் என தர்மம் செய்கின்றனர்.
குலசை முத்தாரம்மன் கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு திருமஞ்சணை எனப்பெயர். புற்றுமண், மஞ்சள்பொடி, எண்ணெய் கலந்து அம்மனுக்கு இரவு பூஜையின்போது சாத்தப்பட்டு மறுநாள் பிரசாதமாய் வழங்கப்படுது. இந்த திருமஞ்சணை பிரசாதத்தை சிறிது உட்கொண்டு நெற்றியில் பூசிக்கொண்டால் தீராத வியாதி தீரும். குலசை முத்தாரம்மன் கோவிலில் தினமும் 1000பேருக்கு அன்னதான திட்டத்தின் கீழ் அன்னதானம் வழங்கப்படுது. குலசை கோவிலுக்கு வருபவர்கள் அம்மனை தரிசனம் செய்துவிட்டு உடனே கிளம்பிவிடுவர். பால்குடம் எடுப்பதாக வேண்டிக்கொண்டவர்கள் மட்டும் இரவு கோவிலில் தங்க வேண்டுமென்பது விதி. குலசை முத்தாரம்மன் கோவிலில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு பூஜை நடைப்பெறும். இப்பூஜையில் கலந்துக்கொண்டு அங்கு தரும் மாவிளக்கை சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.....
கன்னியாக்குமரி, திருச்செந்தூர், திருநெல்வேலி, மதுரையிலிருந்து நேரடி பேருந்துகள் இத்தலத்துக்கு உண்டு. குலசை முத்தாரம்மன் திருவிழா உலகப்புகழ் வாய்ந்ததுன்னாலும் நம்ம அரசாங்கத்துக்கு இன்னும் இவ்விழாவின் மகிமை தெரியவில்லை போலும். லட்சக்கணக்கானவர்கள் கூடும் இடத்தில் சரிவர கழிவறை, குடிநீர், மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதில்லை. இந்த வசதிலாம் செஞ்சுக்கொடுத்தா முத்தாரம்மனின் அருள் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் கிட்டும்..... அருள்பெறுவார்களா ஆட்சியாளர்கள்?!
2013 குலசை தசரா பண்டிகையின்போது போட்ட பதிவு. போகும்போது ஒரு எட்டு பார்த்துட்டு போவிகளாம்.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை.....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473305
நன்றியுடன்,
ராஜி