Friday, August 30, 2013

அத்தை மகனே போய் வரவா?! அம்மான் மகனே போய் வரவா?!

ஏங்க! நான் கை ஃபுல்லா மெகந்தி வச்சுக்கவா?! இல்ல, மருதாணி அரைச்சு தொப்பி டிசைன் வச்சுக்கவா?!

தொப்பி டிசைன் வேணாம், அது குஷ்டம் வந்த கை மாதிரி இருக்கும். (ஏற்கனவே அப்படிதான் உன் கை இருக்கும், இன்னும் ஏன் பயமுறுத்துற!!)
ஏங்க, உங்க கிரடிட் கார்டு தாங்களேன்!

எதுக்கு?!

நம்ம லலிதா ஜுவல்லரில பச்சை, செவப்பு கல்லு வச்ச வைர நெக்லஸ் வந்திருக்காம்! வாங்கலாம்ன்னு!!

ராஜிம்மா! உன் புன்னகைக்கு ஈடாகுமா, அந்த பொன்னகைலாம்?! (நீ இளிக்குறதை கூட தாங்கிக்கிலாம். ஆனா, மாசா மாசம் பேங்க்காரனுக்கு யார் தண்டம் அழறது?!)



ஏங்க, நீங்க ஆஃபீசுக்கு போகும் போது என்னையும் கூட்டி போறீங்களா?!

எதுக்கு?!

மூஞ்சிக்கு பேஷியலும், ப்ளீச்சும் பண்ணிக்கதான்!!

ஏன்டி, மூஞ்சில துப்புற?! அதெல்லாம் அழகில்லாதவங்க செஞ்சுக்குறது!! நீதான் பொறப்புலயே அழகாச்சே! என்ன திடீர்ன்னு பேஷியல், ப்ளீச்லாம்?! (ம்க்கும் ஏற்கனவே பார்க்க சகிக்காது. இதுல மூஞ்சிக்கு சுண்ணாம்பு வேற அடிக்கனுமா?!)



 ஏங்க! இங்க வாங்களேன் ஆன்லைன்ல வந்த விளம்பரத்துல ரெண்டு சேலை செலக்ட் பண்ணி வச்சிருக்கேன். எனக்கு, இதோ இந்த பச்சை கலர் பட்டுப்புடவை நல்லா இருக்குமா?! இல்ல இந்த டிசைனர் சேலை எடுப்பா இருக்குமா?!

எதை கட்டுனாலும் உனக்கு அழகாதான் இருக்கும்ம்மா!(இப்படி சொன்னாதான் போஜனம் கிடைக்கும்.) நீ ஏன்ம்மா!  அடுத்தவங்க டிசைன் பண்ண புடவைலாம் கட்டுறே! உனக்குதான் எம்ப்ராய்டரி, ஸ்டோன் வொர்க்லாம் பண்ண தெரியுமே! நீயே பண்ணிக்கோயேன் ( ப்ளெயின் புடவை 700 ரூபாய், பட்டு சேலை கல்லுலாம் ஒரு 240 ரூபாய் ஆக மொத்தம் 1000 ரூபாய்ல ஒரு புடவை ரெடி. இவ காட்டுறதுலாம் பத்து, பனிரெண்டாயிரம்ன்னு எட்டுதே!!)



இந்தா கத்தரிப்பூ கலர் ப்ளெய்ன் புடவை,  ஒட்டுறதுக்கு கம், பட்டுசேலை கல். உனக்கு பிடிச்ச மாதிரி டிசைன் பண்ணிக்கோ!! எல்லாம் சரி! ஏன் இந்த ஆர்பாட்டம்?! உங்க அம்மா வூட்டுல எதாவது விசேசமா?!



ஆமாங்க! முந்தில சின்ன, சின்னதா பூ டிசைன் போட்டுகுறேன்.

ம்ம் போட்டுக்க, கூடவே! பெருசா எதாவது டிசைன் பண்ணிக்கோ! அப்போதான் தூர இருந்து பார்த்தாலும் பளிச்சுன்னு டிசைன் தெரியும். சரி, என்ன விசேசம்?! உங்க அத்தை பொண்ணு அகிலாக்கு வரன் தேடிண்டு இருந்தாங்களே! அவளுக்கு வரன் அமைஞ்சுடுச்சா?! (உங்க வம்சத்துக்கு அடுத்து மாட்டுன என்னை மாதிரி இளிச்சவாயன் எவனோ?!)

சரிங்க, சேலை முந்தானைல பூ டிசைனும் கூடவே பெருசா பூ டிசைன் போட்டுக்குறேன். அகிலா கல்யாணம் முடிஞ்சு மாசம் மூணாச்சு! அது கூட ஞாபகத்துல இல்லாம என்ன பண்ணுறீங்க?!

ம்க்கும், இதெல்லாம் ரொம்ப முக்கியம் பாரு ஞாபகம் வச்சுக்குறதுக்கு!!


ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பாடா! ஒரு வழியா புடவைல கல்லுலாம் பதிச்சாச்சு. ஏங்க, புடவை நல்லா இருக்கா?! 

ம்ம் கூடவே இருந்து நான் டிசைன் சொல்லி குடுத்ததால புடவை நல்லா வந்திருக்கு! எல்லாம் சரி, என்ன விசேசம்ன்னு சொல்லவே இல்லியே!

அதுவா, சென்னை, வட பழனி, கமலா தியேட்டர் பக்கத்துல இருக்கும்    நடக்குற பதிவர் சந்திப்புக்கு மீட்டிங்க்க்கு போக போறேன். அதான்.

அடிப்பாவி! நீ பண்ண பில்ட் அப் பார்த்து என்னமோ நீ உங்கம்மா வீட்டுக்கு போக போறதா இல்ல நினைச்சேன்!!

ம்ம்ம் இதும் எனக்கு அம்மா வீடு போலதான். எங்கல்லாமோ இருந்து என் இன்ப துன்பங்களை காது கொடுத்து கேட்கும் என் சகோதர, சகோதரிகள் வர்றாங்க!!

ம்ம்ம் அப்படியா!? உன் சகோதரர்கள்லாம் வர்றாங்கன்னு சொல்லுறே! பார்த்து, நிதானமா பேசி, படம் எடுத்து எல்லோரையும் வழி அனுப்பிட்டு வா! (உன் இம்சை இல்லாம நான் ரெண்டு நாளைக்கு நிம்மதியா இருப்பேன்!!)

டிஸ்கி: ராஜி, கட்டு சோறு கட்டிக்கிட்டு, ஸ்டோன் வொர்க் செஞ்ச புடவையை மூட்டைக் கட்டிக்கிட்டு நடராஜா சர்வீசுல புறப்பட்டுட்டா சென்னைக்கு. அதனால, சனி, ஞாயிறு பிளாக்கு விடுமுறை. உங்களுக்கு விடுதலை!! டாட்டா!! பை!! பை!! சீ யூ!!





ஆப்பூர் ஒளஷதகிரி நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் - புண்ணியம் தேடி ஒரு பயணம்


ஆப்பூர் சென்னை சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஒரகடம் போற வழில திருகச்சூரை தாண்டி ஒரு சின்ன கிராமத்து மலை மேல இருக்கும் கோவில். தூரத்துல இருந்து பார்க்கும்போதே ஈர்த்துச்சு. வண்டியை அங்கிட்டு திருப்புடா பசுபதின்னு நாட்டாமை விஜயக்குமார் போல சவுண்ட் விட்டதும் வண்டி நேரா அந்த மலையடிவாரத்துல போய் நின்னுச்சு. இதுக்கு மேல வண்டி போகாதுங்கன்னு டிரைவர் பவ்யமா சொன்னதும், 4 சக்கர வண்டியை விட்டிறங்கி மலையை நோக்கி நடராஜா சர்வீஸ்ல போனேன்.

இந்த மலை முழுக்க மூலிகைகள் நிறைந்து இருக்குறதால இதுக்கு ஔஷதகிரி மலைன்னு பேரு வந்துச்சாம். அப்படி ஏன் பாரு வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.


மலையடிவாரத்தை வணங்கி மலை ஏற தொடங்கலாம்.  கைல பாட்டில் ல தண்ணி, கூல் டிரிங்க்ஸ், நீர் மோருன்னு யார் யாருக்கு என்னென்ன பிடிக்குமோ அதை எடுத்துக்கோங்க. ஐநூறு படிகட்டு இருக்கு. கண்டிப்பா தாகமெடுக்கும், இதுவே, வெயில் காலம்ன்னா படிக்கட்டுல அணல் பறக்கும். இப்போ பரவாயில்ல. அதனால தைரியமா என்கூட வாங்க பேசிக்கிட்டே படி ஏறி மலைக்கோவிலுக்கு போகலாம்.


உங்ககிட்ட இருக்குற சாப்பாட்டு அயிட்டம், செல்போன், பர்ஸ், கேமராலாம் எடுத்து பத்திரமா பைக்குள்ள வச்சு பையை கெட்டியா பிடிச்சுக்கோங்க. ஏன்னா, வழி முழுக்க நம்ம முன்னோர்கள் நிறைய பேருங்க இருக்காங்க. அவங்ககிட்ட இருந்து இதெல்லாம் பாதுக்காக்குறதே பெரிய வேலை. கொஞ்சம் அசந்தாலும் கையிலிருக்கும் பைகளை பிடுங்கிகிட்டு ஓடிடும். முடிஞ்சா உங்ககிட்ட இருக்குற சாப்பாட்டு பொருள்ல கொஞ்சம் அதுங்களுக்கும் போடுங்க. நாம கொடுக்குறதுதான் அதுங்களுக்கு சாப்பாடாம். கைஅல் ஒரு குச்சி இல்ல ஒரு கொம்பை வச்சுக்கிட்டா குரங்கையும் விரட்டலாம், படி ஏறும்போது ஊணி நடக்கவும் உதவும்.


அப்பாடா! ஒரு வழியா உச்சிக்கு வந்தாச்சு.  இப்போ படிக்கட்டு மறைஞ்சு கல்லால் ஆன நடைப்பாதை வருது பாருங்க! இதுல ஒரு விசேசம் என்னன்னா!!?? இதை தாண்டி குரங்குகள் வர்றதில்லையா, அதோ ஒரு சின்ன மண்டபம் தெரியுதுங்களா?! அதை தாண்டி போனா இறைவனோட சன்னதி வரும். 


ஹலோ! யாருப்பா அது கடைசில வர்றது?! 500 படிகளையும் ஒரே மூச்சா ஏறுவது கஷ்டம். அதனால, கொஞ்சம் படி ஏறினது அங்கங்க உக்காந்து சுத்தி இருக்கும் அழகை பார்த்தும் மூலிகை காத்தை சுவாச்சிக்கிட்டும் வாங்க. 


பௌர்ணமி இரவுகளில் சித்தர்கள் இங்கே வந்து வழிபடுவதாக கோவில் குருக்கள் சொன்னார்.  இங்கிருக்கும் பெருமாள் நாம கேட்கும் வரம் கொடுக்கும் சக்தி படைத்தவராம். அதனால, அவரை எல்லோரும் நல்லா சேவிச்சுக்கோங்க.  இதோ இங்க இருக்குற மண்டப தோரண வாயிலில் பெருமாள் கல்யாண கோலத்திலும்,  இடம் வலம் முறையே அனுமனும் கருடாழ்வாரும் இருக்காங்க. அவங்களையும் கும்பிட்டுக்கோங்க. 


நாடி ஜோதிடத்தில் கூட இந்த கோவிலில் பரிகாரம் செய்ய சொல்லுறதா கேள்வி. 
ஸ்ரீ நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்” ஆலயத்தின் முகப்பிற்கு வந்துட்டோம்.  பெருமாளை கும்பிடுறதுக்கு முன்ன, ஸ்தல வரலாற்றை சொல்லுறேன். பயபக்தியா கேளுங்க.  ராம ராவண யுத்தத்தின் போது ராவணனின் மகன் இந்திரஜித்தின் பிரமாஸ்த்திரத்தால தாக்க பட்டு ராமனும்,  அவரது  சேனையும்,  இலக்குவனும் மயக்கமாகி விழுந்துட்டாங்களாம். அந்த அஸ்த்ரத்தில தப்பிய ஒரு சிலரில் ஆஞ்சனேயரும் ஒருத்தர்.  அவர் ஜாம்பவானின் அட்வைஸ்படி இலங்கையிலிருந்து கடலை தாண்டி,  இமயமலையின் அடுத்த ரிஷபம் மற்றும் கைலாய மலைகளின் இடையில் இருக்குற மூலிகை மலையில் இருந்து 

1. மயங்கிய மற்றும் இறந்தவர்களை உயிர்பிக்கும் ”மிருத சஞ்சீவினி” ,

2. உடல் காயத்தை ஆற்றும் ”விசல்யகரணி”

3. காயத்தால் உண்டான வடுவை போக்கும் ”சாவர்ணய கரணி

4. அறுபட்ட உடலை ஒட்டவைக்கும் ”சந்தான கரணி”  ன்ற நாலு  மூலிகைகளை தேடிக் கண்டுபிடிச்சு கொண்டு வர்றதுக்குள்ள டைமும் வேஸ்டாகும் அதுக்குள்ள பல வீரர்கள் உயிர் போகும்ன்னு நினைச்ச அனுமன் தன்னோட வாலால அந்த மலையையே அப்படியே பேர்த்து எடுத்துக்கிட்டு இலங்கைக்கு பறந்து போனாராம்.  
அப்படி இலங்கை போகும் போது,  வழியில கை வலி காரணமா மூலிகை மலையை ஒரு கையிலிருந்து, மறுகைக்கு மாத்தும் போது அந்த மலையில் இருந்து விழுந்த ஒரு சின்ன துண்டுதான் இங்கு மூலிகை மலையாகவும்,  அந்த மலையில் இருந்து விழுந்த மண் திருகச்சூரில் விழுந்துதாம்.அதுதான் திருகச்சூர் மருதீஸ்வரர் கோவில்ன்னு சொல்லப்படுது .இது ஆப்பூரில் இருந்து கொஞ்ச தூரத்துல இருக்கு.  .இதுபோல கன்னியாக்குமரி பகவதி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வழியிலும் அனுமன் கொண்டு சென்ற மலையில் இருந்து விழுந்த ஒரு துண்டு ”மருந்து வாழ் மலை”ன்னு சொல்லப்படுது.  

கோவிலின் முன் சிறிய வடிவில் கருடாழ்வார் பெருமாளை கும்பிட்டப்படி இருக்கார் பார்த்துக்கோங்க. அப்புறம் சரியா பார்க்கலைன்னு சொல்லப்படாது.   பெருமாளை பார்க்க நம்ம திருவேங்கடவனின் மினியேச்சர் மாதிரி இருக்கார் பாருங்க. பெருமாள், தன் வொயிஃப் கூட லக்ஷ்மி சொரூபமா இருக்குறதால இங்க தாயாருக்கு தனி சன்னதி இல்ல.  தாயாரும், பெருமாளும் இணைந்து ஒரே வடிவில் இருப்பதால எப்போதும் கல்யாண கோலத்தில் இருப்பதாக நம்பிக்கை.  அதனாலதான் பெருமாள் பெயர் ”நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் ”ன்னு பேரு வந்துச்சாம்.

இங்கே திருமணம் ஆக வேண்டி பிரார்த்தனை செய்தால் சீக்கிரத்துல கல்யாணம் நடக்குமாம். நம்ம ஆவி, சீனு, சிவாலாம் கும்பிட்டுக்கோங்கப்பா. அப்படி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வந்து பெருமாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி நேர்த்திகடனை நிறைவேற்றுவார்களாம்.

மண்டபங்களின் பக்கவாட்டு மேற்புறத்தில் பெருமாளின் தசாவதாரங்களை  சிற்பமா செதுக்கி வச்சிருக்காங்க. பார்த்துக்கோங்க. 
 
தசாவதாரத்துக்கு நேர் எதிரே அஷ்டலக்ஷ்மிகளின் நடுவே திருவேங்கடவன்  சிற்பமும் இருக்கு. அதையும் நல்லா பார்த்துக்கோங்க.



கோவிலுக்குள்ள நிறைய குரங்குகள் இருக்குறதால கையில் இருக்கும் பொருளலாம் பத்திரமா பார்த்துக்கோங்க. இல்லாட்டி அபேஸ் பண்ணிடும். 

பிரார்த்தனை செய்றவங்களோ இல்ல தூரத்துல இருந்து வர்றவங்க முன்கூட்டியே கோவில் குருக்கள் பாலாஜி பட்டரிடம் தெரியபடுத்திட்டு வந்தா பெருமாளை ஆற அமர தரிசிக்கலாம். ஏன்னா,   பூஜை முடித்து நடை அடைக்கும் நேரம் வந்ததும் அடைத்து விடுவார். அவ்வுளவு தூரம் படியேறி வந்தது வேஸ்டாகிட கூடாதுல்ல. அதனால, அவர் தொலைப்பேசி நம்பரை    குறிச்சுக்கோங்க. 9444142239 
பெருமாளோட தரிசனம் நல்லப்படியா முடிச்சாச்சு.  கருடாழ்வாரிடமும் னம்ம முன்னோர்கள்கிட்டயும் சொல்லிட்டு வாங்க. மலை இறங்கலாம்.


ஒளஷத மலையிலிருந்து இறங்கும் போது தூரத்தில் கிராமத்தின் அழகு கண்ணையும் கருத்தையும் கவருது. அந்த கிராமத்துல ஒரு பீடமும் அதில் சூலாயுதமும் இருக்குற அமைப்பு கண்ணுல பட்டுச்சு.  சரி, அடுத்த வாரம் பதிவு தேத்த ஹெல்பா இருக்கும்ன்னு என்ன? ஏது?ன்னு கூட வந்தவரை கேட்டேன்.

கிராமத்து சப்த கன்னியர் கோவில் அது. அனேகமாக ஒரு வம்சாவளியினரின் குலதெய்வ கோவிலா இருக்கும்ன்னு சொன்னார்.


சரி, கிளம்பலாமா?! கடந்த வாரங்களில் சென்னையை சுற்றி உள்ள கோவில்லாம் பார்த்தோம். சும்மா இங்கயே சுத்திக்கிட்டு இருந்தா எப்படி?! அடுத்த வாரம் த்த்த்தூரமா இருக்குற இராமாயண கதை சம்பந்தப்பட்ட ஒரு இடத்துக்கு போலாம். ரைட்டா?!

Thursday, August 29, 2013

பதிவர் சந்திப்பை மேலும் கலகலப்பாக்க என்ன விளையாடலாம்?! ஆலோசனை கூட்டம்


மதுமதி: வரவேற்புரை, சுய அறிமுகம், பதிவர்கள் தனித்திறமைன்னு நிகழ்ச்சிகள் இருந்தாலும் எல்லாரும் சின்ன பிள்ளைகளா மாறி இந்த ஒரு நாள் பொழுதை சந்தோசமா போக்கனும். என்ன செய்யலாம்?!

ஆரூர் மூனா செந்தில்: நாம வேணும்ன்னா யார் அதிகமா தண்ணி அடிக்குறாங்கன்னு ஒரு போட்டி வைக்கலாமா?!

வீடு திரும்பல்” மோகன்குமார்: ம்க்கும், உனக்கும், ஜீவாவுக்கும்தான் பலத்த போட்டி நடக்கும்ன்னு எங்க எல்லாருக்குமே தெரியுமே!! அதுமட்டுமில்லாம தண்ணிக்கான செலவை எப்படி ஈடுகட்டுறது?!

”மின்னல் வரிகள்”கணேஷ்: என்ன மிஸ்டர் மோகன், இது லேடீசுலாம் கூட கலந்துக்குற நிகழ்ச்சின்றதை மறந்துட்டு, அவங்களோடு சேர்ந்து நீங்களும்  இப்படி கூத்தடிக்குறீங்களே!

”வீடு திரும்பல்” மோகன்குமார்: ஸ்ஸ்ஸ் ஆமா, சாரி மறந்துட்டேன் கணேஷ் அண்ணா. தண்ணி அடிக்குற போட்டிலாம் வேணாம்.

ஆரூர் மூனா செந்தில்: ஹலோ தண்ணி அடிக்குற போட்டின்னுதான் சொன்னேன். சரக்கடிக்குற போட்டின்னு சொன்னேனா?! இப்படி ஓட்டுறீங்க ரெண்டு பேரும்?! (ஸ்ஸ்ஸ் அபா! எப்படிலாம் தப்பிக்க வேண்டி இருக்கு?! ஓசில லேசா தொண்டையை நனைச்சுக்கலாம்ன்னு பார்த்தா விட மாட்டாங்க போல?!)

மதுமதி: சரி, திடீர்ன்னு தலைப்பு கொடுத்து ஒரு கவிதை, குறிப்பிட்ட நேரத்துக்குள்ள எழுத சொல்லலாமா?! 

”மின்னல் வரிகள்”கணேஷ்: ஐயையோ! வேணாம், ஏற்கனவே கைக்கு, மரபுக்கவிதை, புதுக்கவிதை, சுட்டது, சுடாததுன்னு டெய்லி 150 கவிதை வருது. அந்த இம்சையை இங்கயும் படனுமா?!

”வீடு திரும்பல்” மோகன்குமார்: பிளாக் எழுதுற எல்லாருக்கும் முக்கியமான சில HTML மேட்டர் தெரியுதா?!ன்னு டெஸ்ட் வச்சு பார்க்கலாமா?!

”தமிழ்வாசி” பிரகாஷ்: ம்ம்ம் சரி, சரி, நான் ரெடி.

”கோவை நேரம்”ஜீவா: இரு இரு எதுக்கு இப்போ இப்படி ஆளா பறக்குற?! உனக்கு தெரிஞ்ச மேட்டர்ங்குறதால, ஈசியா ஜெயிச்சுடலாம்ன்னு கணக்கு போடுறீயா?! அதுதான் நடக்காதுடி மாப்ள! வேணும்ன்னா ஸ்கூல் போல மாறுவேட போட்டி வைக்கலாமா?!

”கவிதை வீதி”சௌந்தர்:  ம்ம்ம்ம் ஓக்கே! ஓக்கே! நான் போலீஸ் ட்ரெஸ்ல வரேன்.

”மின்னல் வரிகள்” கணேஷ்: எதுக்கு?! நிகழ்ச்சிக்கு வர்றவங்க கண்ணை நொள்ளையாக்கவா?! ஏற்கனவே, ஃபேஸ்புக்குல நீ போட்ட போட்டோக்களை பார்த்து ரெண்டு குழந்தைகளுக்கு ஜுரம் வந்துட்டுதாம். வேணும்ன்னா புகைப்பட போட்டி வைக்கலாம்.

”வீடு திரும்பல்” மோகன்குமார்: ஐயோ! வேணாம், வேணாம், உங்க தங்கச்சி ராஜி புதுசா கேமரா வாங்குனாலும் வாங்குச்சு, ஆடு, மாடு முதற்கொண்டு அரிசி, பருப்புன்னு ஒண்ணு விடாம ஃபோட்டோவா எடுக்குது. அதனால இதும் கேன்சல். வேணும்னா சமையல் போட்டி வைக்கலாம். ஈசியா ருசியா யார் சமைக்குறாங்கன்னு பார்க்கலாம்!!

”தமிழ்வாசி” பிரகாஷ்” ஐயையோ! இங்க வந்தும் அதை செய்யனுமா?! ஒரு நாள் நிம்மதியா இருக்கலாம்ன்னுதானே வந்தோம்! இங்க வந்தும் சமைங்கன்னு சொன்னா என்ன நியாயம்?!

மதுமதி: அதும் சரிதான், வேணும்னா விழாவுக்கு வர்ற லேடீசுக்கு இந்த போட்டியை வைக்கலாமா?!

”தென்றல்” சசிகலா: போங்க மது, சமைக்குறதா?! பிளாக், போட்டோ இணைக்குறது, ஃபேஸ்புக்குல அரட்டை, கவிதை எழுதுறது, மத்தவங்களுக்கு கமெண்ட் போடுறதுன்னு 24 மணிநேரமும் பிளாக்குக்கே அதெல்லாம் டச் விட்டு போச்சே!!

”மின்னல் வரிகள்” கணேஷ்: என்னமமா சசி! எனனமோ டைப் ரைட்டுறல டப் பண்ணுற மாதிரி சொல்லுறே!! சரி, கயிறு இழுக்கும் போட்டி வைக்கலாமா?!

”தீதும் நன்றும் பிறர் தர வாரா” ரமணி:  வைக்கலாம் கணேஷ். ஆனா, ஆரூர் மூனா மட்டும் இந்த போட்டில கலந்துக்க வேணாம்.

ஆருர் மூனா செந்தில்: என்னது?! நான் போட்டில கலந்துக்க கூடாதா?! ஒரு மாசமா இந்த நிகழ்ச்சி நல்லப்படியா நடக்க நாயா பேயா அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். என்னை கலந்துக்க கூடாதுன்னு சொல்லுறீங்களே! இந்த அநியாயத்தை தட்டி கேக்க யாருமே இல்லியா?! ராஜியக்கா சும்மாதானே உக்காந்திருக்கீங்க நீங்களவாது இது தப்புன்னு சொல்லுங்களேன்.

ராஜி: யாராவது எந்த போட்டியாவது நடத்திக்கோங்க, பரிசு வாங்கிக்கோங்க. ஆனா, நான் போட்டோ எடுக்குறதுல்யும், பதிவு தேத்துறதுலயும்தான் பிசியா இருப்பேன். அதுமில்லாம, புது புடவைல ஒரு வாரமா ஸ்டோன் வொர்க் பண்ணி அதைதான் சந்திப்புக்கு கட்டி வரப்போறேன். அந்த சேலை கசங்கிட கூடாது பாருங்க. அதனால, நான் எந்த போட்டிலயும் கலந்துக்கலை!!

ஆரூர் மூனா செந்தில்:  இந்த அக்காக்களே இப்படிதான்!! புடவை, நகைக்குன்னு குடுக்குற மதிப்பை உறவுகளுக்கு குடுக்க மாட்டாங்க. என் டிடி அண்ணன் இருக்கார். எனக்காக, அவர் உங்களைலாம் கேள்வி கேப்பார்,

திண்டுக்கல் தனபாலன்: ஏம்பா! பாவம் செந்தில், அவரையும் சேர்த்துக்கலாம்.

”மின்னல் வரிகள்” கணேஷ் : ஏம்பா டிடி!! நீ எல்லாம் புரிஞ்சுதான் செந்திலை சேர்த்துக்க சொல்லுறியா?! செந்திலோட ஒரு இழுப்புக்கு நீ தாங்குவியா?!

திண்டுக்கல் தனபாலன்:  எல்லாம் யோசிச்சுதான் சொல்லுறேன். ந்ந்த போட்டி வச்சாலும், யார் கலந்துக்கிட்டாலும் முதல்ல வரப்போறாதென்னமோ நாந்தானே?! அதான் செந்திலையும் கலந்துக்க சொல்லுறேன்.

மதுமதி அண்ட் கோ : ????????!!!!!!!!!!!!

Wednesday, August 28, 2013

பதிவர் சந்திப்புக்கு வர கட்டுச்சோறு ரெடி - கிச்சன் கார்னர்

டைம் மெஷின்ல ஏறி கொஞ்சம் நம்ம சின்ன வயசு காலத்துக்கு போவோம்..,

ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ஸ்டாப், ஸ்டாப் ரொமப் தூரம் போவாதீங்க. இங்கயே நில்லுங்க. ஒரு 20 வருசக்காலம் முன்ன வரை இப்போ மாதிரி எங்க பார்த்தாலும் ஹோட்டல்கள் இருக்காது, டவுன்லலாம்தான் ஹோட்டல் இருக்கும். அதும் காலைல, மதியம் மட்டும்தான். மத்த நேரத்துல சாப்பிட எதும் கிடைக்காது. பட்டினியாதான் வரனும். அதனால, அப்போலாம் டூர், பிக்னிக், குலதெய்வ கோவில், ஹாஸ்பிட்டல்ன்னு எங்க போனாலும் கட்டுச்சோறு கட்டிக்கிட்டுதான் போவாங்க.  கட்டுச்சோறுன்னா புளிசாதம், மாங்காய் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தாளிச்ச இட்லி, வெல்ல இட்லி இப்படி எதாவது ஒண்ணுதான் இருக்கும். அதிகாலைலயே எழுந்துக்கிட்டு பொம்பளைங்க ரெடி பண்ணுவாங்க.

மாங்காய் சாதம் அதிகபட்சம் ரெண்டு வேளை தாங்கும், எலுமிச்சை சாதமும், தயிர்சாதமும் ஒரு நாள் தாங்கும். ஆனா, புளிச்சாதம் மட்டும் ரெண்டு நாளைக்கு தாங்கும்.

நான், பதிவர் சந்திப்புக்கு வர்றதால, ஹோட்டல்லாம் சாப்பிட்டா கட்டுப்படியாகாதுன்னு கட்டுச்சோறு மூட்டை கட்டிக்கிட்டுதான் வரப் போறேன்.  காலைல ஒரு வேளை மட்டும்தான் நம்ம சாப்பாடு. மதியம், மாலைலாம் ஓசி சாப்பாடு . அதனால, சிம்பிளா எலுமிச்சை சாதம் கட்டிக்கிட்டு வந்துட போறேன்.

எலுமிச்சை சாதத்துக்கு தேவையான பொருட்கள்:

அரிசி - 1 டம்பளர்
எலுமிச்சை பழம் - 2 
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
மஞ்சப்பொடி- கொஞ்சம்,
பெருங்காயப் பொடி - கொஞ்சம்,
பூண்டு - 10 பல்,
காய்ந்த மிளகாய் - 2
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
வேர்கடலை - விருப்பப்பட்டா 1 டேபிள்ஸ்பூன் 
முந்திரிபருப்பு- 15 தேதிக்குள்ளன்னா 10 15 தேதிக்கு மேலன்னா வேணாம்.
கடுகு - கொஞ்சம்
எண்ணெய் தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு- தேவையான அளவு,

அரிசியை ஊற வச்சு உப்பு போட்டு வடிச்சு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வைங்க.

எலுமிச்சை பழத்தை ரெண்டா வெட்டி தண்ணில ஒரு அஞ்சு நிமிசம் போட்டு வச்சு சாறு பிழிஞ்சி வடிக்கட்டி எடுத்துக்கோங்க. இஞ்சியை தோல் சீவி நசுக்கி வச்சுக்கோங்க. ப,மிளகாயை நீளவாக்குல கீறி வச்சுக்கோங்க. பூண்டை தோல் உறிச்சு ஒண்ணு ரெண்டா தட்டி வச்சுக்கோங்க. பருப்புகளை தனித்தனியா எண்ணெயில பொன்னிறமா வறுத்து எடுத்து வச்சுக்கோங்க.

வாணலில எண்ணெய் ஊத்தி கடுகை போட்டு பொறிய விடுங்க. கிளறுற சாதத்துக்குலாம் கொஞ்சம் அதிகமா எண்ணெய் ஊத்தினாதான் நல்லா இருக்கும். அதுக்காக ஓவரா எண்ணெயை ஊத்தி எனக்கு கெட்ட பேரு வாங்கி குடுத்துடாதீங்க.


கடுகு பொறிஞ்சதும் கீறி வச்ச பச்சை மிளகாயை போடுங்க.

அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு சிவக்க விடுங்க....,


நசுக்கி வெச்ச பூண்டை போட்டுக்கோங்க..,

அடுத்து நசுக்கிய இஞ்சியை போட்டு சிவக்க விடுங்க..

கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியா நறுக்கி சேர்த்துக்கோங்க. 

மஞ்சப்பொடியை சேர்த்துக்கோங்க...,


பெருங்காயப் பொடியை சேர்த்து லேசா எண்ணெயில வதக்கிக்கோங்க.

மஞ்சப்பொடி வாசனை போனதும் வடிகட்டுன எலுமிச்சை சாறை சேர்த்துக்கோங்க.

தேவையான அளவு உப்பு சேர்த்துக்கோங்க. ஏற்கனவே சாதத்துல நாம உப்பு சேர்த்து வேக வச்சிருக்குறதை ஞாபகத்துல வச்சுக்கிட்டு உப்பு சேர்த்துக்கோங்க. ரெண்டு கொதி கொதிக்க விட்டு அடுப்பை ஆஃப் பண்ணிட்டு இறக்கிகோங்க.

ஆற வச்சிருக்கும் சாதத்துல, வறுத்து வச்சிருக்கும் பருப்புகளை கொட்டி கிளறுங்க.

கொதிக்க வச்ச எலுமிச்சை சாறை பருப்பு கலந்த சாதத்துல கொட்டி ஒரு இடம் பாக்கி விடாம எல்லா இடத்துலயும் எலுமிச்சை சாறு படுற மாதிரி கிளறுங்க. இஷ்டப்பட்டா கடைசியா வெந்தயப் பொடி லேசா சேர்த்துக்கலாம். என் பையனுக்கு பிடிக்காதுங்குறதால நான் சேர்ப்பதில்லை.

பதிவர் சந்திப்புக்கு வரும்போது கட்டுச்சோறு கட்டி வர எலுமிச்சை சாதம் ரெடி. 

இப்படி கிளறுன சாதம் செய்யும்போது பருப்பு வகைகளை வறுத்து வச்சுக்கிட்டு சாதம் கிளறும்போது போட்டு கிளறுனா பருப்பு சீக்கிரம் நமத்து போகாம மதியம் வரை மொறுமொறுன்னு இருக்கும். எலுமிச்சை சாறுலயோ இல்ல புளிக்கொழம்புலயோ சேர்த்து கொதிக்க வச்சா பருப்பு சீக்கிரமே நமத்து போய் புளிப்பு ஏறி ஒரு மாதிரியா இருக்கும்.

என் பசங்களுக்கு மதியம் பாக்சுல இதுப்போல சாதம் கிளறி கொடுத்து அனுப்பும்போது முந்திரிப்பருப்பு வறுத்து சேர்க்குற மாதிரி இருந்தா , முந்திரி பருப்பை மட்டும் தனியே எடுத்து வச்சு ஒவ்வொருத்தர் டப்பாவுலயும் சமமா பிரிச்சு போட்டு அனுப்புவேன். இல்லாட்டி பொண்ணுதான் உசத்தி, பையந்தான் உசத்தின்னு அதிகமா கொடுத்திட்டியான்னு மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டி வரும் :-(

தொட்டுக்க மசால் வடை, வத்தல், மிக்சர் பக்கோடா, பூண்டு, ஊறுகாய்லாம் இதுக்கு தொட்டுக்க செமயா இருக்கும்.

Tuesday, August 27, 2013

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் பதிவர்களை வாழ்த்தும் பிரபலங்கள்!!


உலக தமிழ் பதிவர் சந்திப்பு நாள் கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிட்டுது....,  எப்பவுமே ஒரு பண்டிகை வந்தா பிரபலங்கள் வாழ்த்து சொல்லுவது வழக்கம். அதுப்போலதான் பதிவர் சந்திப்புக்காக பிரபலங்கள் தங்களுக்கு பிடிச்ச பதிவர்களை பத்தி ரெண்டு வார்த்தை சொல்லி அவங்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்காங்க....

 முதல்ல வயசுல பெரியவரான கலைஞர் ஐயா:
எனதருமை உடன்பிறப்புகளே! நான் எப்படி தமிழை வளர்க்க பாடு படுகிறேனோ அப்படிதான் தம்பி மகேந்திரன், அம்பாளடியாள், எனதருமை சகோதரர்களான ராமனுஜமும், ரமணியும் தங்கள் அழகான பாடல்கள் மூலம் தமிழை வளர்த்து வருகிறார்கள். அவர்களின் சேவை அளப்பரியது. நான் அவர்களின் வலைப்பூவை தவறாமல் வாசித்து வருகிறேன். தொடரட்டும் அவர்தம் சேவை!

அடுத்து அம்மா: 
எனதருமை பதிவர்களே! எனது தலைமையினாலான ஆட்சியிலே பதிவர்கள் அனைவரும் தினந்தோறும் பதிவு போட என்னால ஆன முயற்சிகள் அனைத்தும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அவர்களுக்காகவே, கண்ணுறக்கம் பாராமல் யோசித்து நான் பல திட்டங்கள் தீட்டி வைக்கிறேன். பதிவர்கள் பற்றி ஒரு கதை சொல்லலாம்ன்னு இருக்கேன். ஒரு ஊருல 4 பசு மாடு இருந்துச்சாம். அதுலாம் ஒத்துமையா புல் மேஞ்சுக்கிட்டு இருக்கும்போது ஒரு சிங்கம் அதுகளை அடிச்சு திங்க வந்துச்சாம். ஆனா, ஒத்துமையான மாடுகள் ஒண்ணா சேர்ந்து அந்த சிங்கத்தை அடிச்சு விரட்டிடுச்சாம். என்ன செய்யுறதுன்னு நரிக்கிட்ட யோசனை கேட்டுச்சாம். நரி ஒரு தந்திரம் பண்ணி அந்த மாடுகளை பிரிச்சு விட்டுச்சாம். மாடுகள் ஒவ்வொரு மூலைல போய் புல் மேஞ்சுக்கிட்டு இருந்துச்சாம். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மாடுன்னு அடிச்சு சாப்பிட்டுடுச்சாம் சிங்கம். அதுப்போல பதிவர்கள்லாம் ஒத்துமையா இருந்தாதான் நல்லது. இல்லாட்டி, மாடுகள் போலதான் அழிஞ்சு போகனும்ங்குறதை மனசுல வச்சுக்கிட்டு செயல்படுங்க.

ரஜினி:
ஹா! ஹா! கண்ணா நான் இமய மலைக்கு போறதே உடம்பும் மனசும் ஃப்ரெஷ் ஆக்கிக்கத்தான். ஆனா, இமயமலைக்கு போகாமயே இங்கயே உக்காந்து “திண்டுக்கல்” தனபாலன்ன்னு ஒரு நண்பர் எழுதுற பதிவை படிச்சாலே ஃப்ரெஷ் ஆகிடுறேன். என்னை போல புது புது ஸ்டைல்ல தன் பிளாக்கை அழகா வச்சிருக்கார். அவருக்கு என் வாழ்த்துகள். எனக்கும் அவருக்கும் ஒரே வித்தியாசம்தான், நான் எப்போ வருவேன்?! எப்படி வருவேன்?!ன்னு யாருக்கும் தெரியாது!! ஆனா, நீங்கலாம் பதிவு போட்டதும் தனபாலன் முதல் ஆளாய் வந்து நிப்பார்ன்னு உலகத்துக்கே தெரியும்!! 

கமல்:
யூ சீ,  நான் என் தொழில்ல புது புது உத்திகளை புகுத்த வெளிநாட்டுக்குலாம் போயி அங்கிருக்கும் விசயங்களை தெரிஞ்சுக்கிட்டு வருவேன். அதுமில்லாம, நம்ம ஊரு பொண்ணுங்க கிட்ட இல்லாத ஏதோ ஒரு ஈர்ப்பு வெளிநாட்டு அம்மணிங்க கிட்ட இருக்கு. வெல், எப்படி சொல்லுறதுன்னா, கலை உலகில என் வாரிசுங்க நிறைய பேரு இருக்காங்க. பட், பதிவுலகில என் வாரிசுன்னா அது “கோவை நேரம்” ஜீவாதான்.

டைரக்டர் ஷங்கர்:
என் படத்தை எடுக்கும்போது வெளிநாட்டு லொக்கேஷன்லாம் நெட்ல போய் தேடிப்பேன். இருந்தாலும், உளாநாட்டு, வெளிநாட்டு லொக்கேஷன் பத்தி எனக்கெதாவது டவுட்ன்னா நம்ம “கடல் பயணங்கள்” சுரேஷ்குமார் பிளாக்கை படிச்சுட்டுதான் போவேன். அங்கிருக்கும் ஹோட்டல், எங்க சாப்பாடு நல்லா இருக்கும், எங்க தங்கலாம், என்ன செலவு ஆகும்ன்னு பக்காவா போட்டிருப்பார்.

நமீதா:
மச்சான்ஸ், ஷூட்டிங், கடை திறப்பு, பார்ட்டின்னு தமிழ்நாடு ஃபுல்லா நான் சுத்தும். அப்படி போகும்போது அங்க சரியான சாப்பாடு என்க்கு கிட்க்காது. அந்த மாதிரியான டைம்ல டக்குன்னு லேப்டாப் தட்டி மச்சான் “வீடு திரும்பல்” மோகன் குமார்  மச்சான் பிளாக்கை பார்த்துட்டு அங்க போய் சாப்பிட்டு வந்துடுவேன்.

சந்தானம்:
என் படத்துல எதாவது காமெடி சீன் வைக்கனும்ன்னா எதும் தோணலைன்னா நேரா கவிதை வீதி சவுந்தர் பிளாக் போவேன். அங்க போனா, எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக்குல வந்த ஜோக்லாம் அப்டேட் பண்ணி வெச்சிருப்பார். அங்க பார்த்து எதாவது ஜோக் நானும் தேத்திப்பேன்.

ப.சிதம்பரம்:
அரசியல்லயும் சரி, பொருளாதாரத்துலயும் சரி எனக்கு எதும் டவுட் வராது.அப்படி டவுட் வந்தா நான் அவர்கள் உண்மைகள் பிளாக் ஓனருக்கு ஒரு ஃபோன் போட்டு டவுட் கிளியர் பண்ணிப்பேன். எப்பேற்பட்ட ஜீனியஸ் தெரியுங்குளா அவரு?!

கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி:
வயசாகிட்டதால இப்போல்லாம் என்னை யாரும் நடிக்க கூப்பிடுறதில்லை. எப்பவாச்சும் ஒரு சில நாள்தான் ஷூட்டிங் இருக்கும். மத்த நாள்ல வீட்டுல சமைக்குறது, கூட்டுறதுன்னு பொழுதை போக்குவேன். வேலை எதும் இல்லாட்டி சிவாஜி, எம்ஜிஆர் கூட நடிச்ச நாட்களை நினைச்சு பார்த்துப்பேன். எனக்கு கூட தெரியாத விசயங்கள் கூட சில சமயத்துல மின்னல் வரிகள் கணேஷ் அடிக்கடி அந்த காலத்துல பத்திரிகைகளில் வந்த ஜோக், சினிமா துணுக்குகளை பகிர்ந்துப்பார். அவர் இல்லாட்டி எனக்கு போரடிச்சு போகும்!!

ஏ.ஆர். ரகுமான்:
நான் பாட்டுக்கு இசை அமைச்சு தருவேன். எப்பவாவது பாடுவேன். ஆனா, கோவை ஆவி தானே பாட்டெழுதி, இசை அமைச்சு பாடவும் போறாராம்!! என் எதிர்காலத்தை நினைச்சா எனக்கு கொஞ்சம் கிலியாதான் இருக்கு. ம்ம் எல்லாம் இறைவன் அருள்.

தனுஷ்:
என்னை மாதிரியான பசங்களை பார்த்தா புடிக்காது. பார்க்க பார்க்கதான் புடிக்கும். அதேப்போலதான் ராஜியக்கா பதிவுகளும், படிச்ச உடனே புரியாது! படிக்க, படிக்கதான் புரியும்!!

ராமராஜன்:
நம்முடைய கலாச்சாரம், பழக்க வழக்கங்களை பத்தி தெரிஞ்சுக்கனும்ன்னா   கிராமத்துக்குதான் போகனும். சிட்டில இருந்தாலும் நான் இன்னும் கிராமத்தான். என்னை போலவே ஒருத்தர் இருக்கார் அவர் பேரு சங்கவி, நான் மாட்டை பத்தி பாட்டு படிப்பேன். அவர் லட்சுமிமேனனை பத்தி பாட்டு படிப்பார். 

ராஜ்கிரன்:
அம்மாவை, பொண்டாட்டியை பத்தி யாராவது தப்பா பேசினா கொக்க மக்கா கொன்னேப்புடுவேன். நான் இங்கிருந்து அருவாவை வீசுவேன். ஆனா, குவைத்துல இருந்துக்கிட்டே “நாஞ்சில் மனோ”  குறி பார்த்து அருவா வீசுவேன். என்ன, ஹோட்டல்ல சேச்சிகள்கிட்ட போடுற கும்மாளங்கள்தான் அவர்கிட்ட பிடிக்காதது. என்கிட்ட இருக்குற லுங்கிகள்ல ஒண்ணை அவருக்கு பார்சல் பண்றேன். ஏன்னா, பேண்ட், கோட்டு, சூட்டுலாம் போட்டுக்கிட்டா அருவா வீச முடியாது. ஆனா, லுங்கியை கட்டிக்கிட்டு அப்படி முழங்காலுக்கு மேல தூக்கி கட்டி அருவாவை வீசுனா சும்மா நச்சுன்னு போய் விழும்.

கேப்டன்:
இன்னிக்கு நம்ம கட்சில சேர வந்திருக்கும் உலக தமிழ் வலைப்பதிவாளர்கள் அவர்களுக்கு நான் சொல்லிக்குறது என்னன்னா!!
மதுமதி: ஐயா! இவங்கலாம் கட்சில சேர்றதுக்காக வரலீங்கயா!
கேப்டன்: அப்புறம் எதுக்கு வந்திருக்காங்க.
மதுமதி: வருசத்துக்கு ஒரு தரம் இப்படி மீட் பண்ணுறது வழக்கம். அதான், அவங்களை வாழ்த்தி பேசுங்கன்னு உங்களை கூப்பிட்டு இருக்கோம்!
கேப்டன்: என்னது இவனுங்களை வாழ்த்தி நான் பேசனுமா!? எனக்கு ஆர்டர் போட நீ யாருடா?!
மது மதி: ஐயா! நான் இவங்கள்லாம் கலந்துக்குற இந்த நிகழ்ச்சி நல்லபடியா நடக்க என்னால முயற்சிகளை செஞ்சவன்.
தமிழ்வாசி: யோவ் கேப்டன், நானும் மதுரைக்காரந்தான். ஒழுங்கு மரியாதையா எங்களை, எங்க பதிவுகளை வாழ்த்தி பேசு இல்லாட்டி உன்னை பத்தி தாறுமாறா எழுதிடுவோம்.
கேப்டன்: டேய்! நீ மதுரைக்காரன்னா, நான் உனக்கு பயப்படனுமா?! போன எலக்‌ஷன்ல ஓட்டு போட்டியாடா?! ப்ப்ப்பளார்
தமிழ்வாசி: என்னையே அடிச்சுட்ட இல்ல, இன்னில இருந்து உனக்கு ஆப்புதாண்டி மாப்ள!

Monday, August 26, 2013

”சம்சாரம் அது மின்சாரம்” படத்துல பதிவர் சந்திப்புக்காக ஒரு காட்சி




வீட்டுல யாரு?!  ஹலோ, எக்ஸ்க்யூஸ் மீ!!

ஆரு?! ஆரு அது?!

நாந்தான் சரோவோட மாமனார். வீட்டுல யார் இருக்காங்க?!

ஏன்? என்னை பார்த்தா மனுஷியா தெரியலியா உனக்கு?!

வீட்டுல ஆம்பிளைங்க யாருமில்லையா?!ன்னு கேட்டேன்.

உன் டப்பா மூஞ்சிக்கு நானே பதில் சொல்றேன். இன்னாத்துக்கு இப்போ நீ இங்க வந்தே?!

உங்க பொண்ணு சரோ, பிளாக்கரா இருக்கு. தெரியுமா உனக்கு?!

யோவ் பெர்னாண்டஸ்! யாரை பார்த்து பிளாக்கா இருக்குன்னு சொல்றே! கீச்சுடுவேன் கீச்சி. எங்க வூட்டு பொண்ணு மேல ஒரு பூ வுழுந்தாலும் எங்க பொண்ணோட உடம்பு செவந்துடும். அம்புட்டு செவப்பு எங்கப் பொண்ணு. தெரிஞ்சுக்கோ!!

ம்க்கும், இதுக்கு தமிழே தகராறு. இதுங்கிட்ட போய் இங்லீசுல பேசினேன் பாரு என்னை சொல்லனும்!! கம்ப்யூட்டர் பொட்டில உக்காந்து பார்த்த சினிமா, சமைச்ச பலகாரம், புடவை, ஆஃபீஸ் மேட்டர், குழந்தை வளர்ப்புன்னு டைரி போல எழுதுது”  சரி, இதுல என்ன தப்புன்னு கம்முன்னு இருந்தா, பொழுதன்னிக்கும் அடுத்தவங்க எழுதினதை படிச்சு கமெண்டும் போடுது. அதையும் பொறுத்துக்கிட்டேன். இப்போ என்னடான்னா, வர்ற செப்டம்பர் 1ந்தேதி சென்னைல மீட்டிங்க் போடுறாங்களாம். அதுக்கு போகனும், டிக்கட் போட்டுத்தாங்கன்னு என்கிட்டயே சொல்லுறா! 

 அப்படி எழுதுனா இன்னா தப்பு?! ஒரு படிச்ச பொண்ணு செய்யுற வேலையைதான் எங்க வூட்டு பொண்ணு செஞ்சிருக்கு. தனக்கு தெரிஞ்சதை எழுதி இருக்கு.  அதை போயி தப்புன்னு சொன்னியாமே!!

கண்ணம்ம்ம்ம்ம்ம்மா!

கம்முன்னு கெட, இப்படி உரைக்குற மாதிரி சொன்னாதான் இந்த மரமண்டைக்கு உரைக்கும்!!

மரமண்டையா?!

அப்படி எழுதுறதையும்,  எங்க வூட்டு பொண்ணு மனசு கோணக்கூடாதேன்னு நல்லா இருக்குன்னு சொல்றவங்களுக்கு பதில் மரியாதை செய்யுற மாதிரி எங்க பொண்ணு போய் கருத்து சொல்லுது. அதை தப்புன்னு சொன்னியாமே!!

கண்ணம்ம்ம்ம்ம்ம்மா!!

கம்முன்னு கெட, இப்படி நாக்கை புடுங்கிக்குற மாதிரி கேள்வி கேட்டாதான் இந்த மீசைக்காரனுக்கு புரியும்.

மீசைக்காரனா?!

எங்க வூட்டு பொண்ணு காலைல அஞ்சு மணிக்கு போஸ்ட் போடும்..., மதியம் ரெண்டு மணிக்கு கமெண்ட் போடும், சாயங்காலம் 6 மணிக்கு போஸ்ட் தேத்தும், ராத்திரி பத்து மணிக்கு கூட போஸ்ட் போடும். ஏன் சில நாளு வூட்டு வேலை கூட செய்யாம அங்கயே இருக்கும். அதை போயி தப்புன்னு சொன்னியாமே!!

கண்ணம்ம்ம்ம்ம்ம்மா!!

கம்முன்னு கெட. இப்படி பளிச் பளிச்சுன்னு கேட்டாதான் இந்த சோளகொல்லை பொம்மைக்கு பேண்ட் சட்டை போட்ட மாதிரி இருக்குற ஆளுக்கு புரியும். 

சோளக்கொல்லை பொம்மையா?!

எங்க வூட்டு பொண்ணு செப்டம்பர் 1 ம் தேதி, வடபழனி கமலா தியேட்டர் பக்கத்துல இருக்குற மியூசிக் ஹால்ல நடக்க போற மீட்டிங்க்ல கலந்துக்கும்.  உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்க போ!!  தாயா, புள்ளையா பழகுறவங்க பார்த்துக்கிட்டா என்னா தப்பு?!


கண்ணம்ம்ம்ம்ம்ம்ம்மா!!

கம்முன்னு கெட. வெளிநாட்டுல இருக்குற பதிவர்கள்லாம் அவங்க கலந்துக்கலைன்னாலும் துட்டு குடுத்து நடத்த சொல்லி இருக்காங்க. தமிழ்நாட்டுல உக்காந்துக்கிட்டு எங்க வூட்டு பொண்ணை போவக்கூடாதுன்னு சொல்ல உனக்கென்ன ரைட்ஸ் இருக்கு?!  மீட்டிங்குக்கு போறது பதிவர்களோட ரைட்ஸ். அதை தடுக்க நீ யாரு?!

கண்ணம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!!

யாரோதானே கலந்துக்க போறாங்கன்னு இல்லாம, தங்கள் மாமியார் வூட்டு ஆளுங்க வர்ற மாதிரி மண்டபம் பார்க்குறது, சாப்பாடு அரேஞ்ச் பண்ணுறது, முதல் நாள் வர்றவங்க தங்குறதுக்கு பாதுகாப்பான இடம், பெண்களுக்கு தனி இடம்ன்னு பார்த்து பார்த்து செய்யுறாங்களே! அங்க போனா இன்னா குறைஞ்சுட போகுது?!

கண்ணம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!!

கம்முன்னு கெட, இப்படி நறுக்குன்னு சொன்னாதான் இந்த உலகம் தெரியாத தற்குறிக்கு புரியும் 

யாரு?! யாரு தற்குறி!? மீ!? என்னையா சொன்ன?!

ஆமாயா,  9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குது. புலவர் ஐயா தலைமையில, சென்னை பித்தன் ஐயா முன்னிலையில நிகழ்ச்சி தொடங்குது.எழுத்தாளர் திரு பாமரன் அவர்கள் சிறப்புரை. அப்புறம் இதுவரை நேரில் பார்க்காதவங்கலாம் கூட, ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்க சுய அறிமுகம், மதியம் 1 மணிக்கு நீ உன் புள்ள கல்யாணத்துக்கு போட்ட பிசாத்து சாப்பாட்டை விட செமையான வெஜ், நான் வெஜ் சாப்பாடு. 2 மணிக்கு பதிவர்கள் தங்களோட திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு. ஸ்கூல் பையன் பாடுறார், கோவை ஆவி ஒரு பாட்டு எழுதி பாடுறார், திண்டுக்கல் மீசைக்காரர் நாடகம் போடுறார். அப்புறம், டான்ஸ், நாடகம், மிமிக்ரின்னு மேடையே கிடுகிடுக்க போகுது.

அப்பாலிக்கா, பதிவர்கள் 4 பெரு புத்தகம் வெளி வருது. சீனு நன்றி சொல்ல நிகழ்ச்சி முடிவுக்கு வருது. 

கண்ணம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!

கம்முன்னு கெட, இப்படி சொன்னாதான் இந்த பன்னாடைக்கு புரியும்.

என்னது பன்னாடையா?!

.இந்தா இன்விடிடேஷன்.  நெஞ்சுல மஞ்சா சோறு இருக்குற ஆம்பிளையா இருந்தா!! நீயும் ஒரு டைரியை ஓப்பன் பண்ணி, உனக்கு தெரிஞ்சதை எழுதி, நாலு பேர்கிட்ட பழகி நல்ல மனுஷன்னு பேரு எடுத்து.., நானும் கலந்துக்குறேன்னு பேரு குடுத்துட்டு, உன்னால முடிஞ்சா நன்கொடை குடு, இல்லாட்டியும் பரவாயில்லை கலந்துக்கலாம். யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அப்படி நிதி எதாவது உதவி பண்ணனும்ன்னா இங்க போய் பார்த்து தெரிஞ்சுக்க. .

ஓக்கே. ஓக்கே, ஒரு வேலைக்கார பொம்பளையை வச்சு அவமான படுத்திட்டீங்கல்ல!!  நானும் இப்பவே போய் பிளாக் ஆரம்பிச்சு பதிவெழுதி, அந்த மீட்டிங்குக்கு வரேன். அப்படி வரலைன்னா என் பேரு ஆல்பர்ட் பெர்னாண்டஸ் இல்ல.

சரி, நீ இப்போ கிளம்பு. நாங்க போய் எங்க பொண்ணு சரோ சேலைக்கு ஸ்டோன் வொர்க் பண்ணனும்.