Saturday, December 31, 2011

புதிதாய் பிறப்போம்....,


                                           

யாவரும் சமமென்று ஒன்றாய் .....,
ஆண் பெண் என்று அன்பில் இரண்டாய் ....,
வாழ்வின் சுவை சேர்க்கும் கனிகள் மூன்றாய் ....,
உன்னைப் பதம் செய்யும் வேதங்கள் நான்காய்....,
அகிலம் நிரப்பும் பொறிகள் ஐந்தாய்....,
மனிதத்தின் மகத்துவ அறிவு ஆறாய்....,
மனதிற்கு வண்ணம்கூடும் வர்ணங்கள் ஏழாய்...,
வெற்றியின் முரசு கொட்டும் திசைகள் எட்டாய் ...,
பூமியின் உன் படிக்கட்டுக்கள் மேலும் நீளும் கோள்கள் ஒன்பதாய்...,
விண்ணைத் தொட உன் மூலதன நம்பிக்கை பத்தாய்...,
பல பாடங்களை கற்று தந்த ஆசான் பதினொன்றாய்..,
அமைந்தது கடந்த வருடம்.....
மீண்டும் புதிதாய் பிறப்போம் பதினொன்றோடு பனிரெண்டாய்(2012).....

டிஸ்கி:இனி நான் பதிவெழுத  போறதில்லை. இதுதான் என் கடைசி பதிவு. யாருப்பா அது விசிலடிச்சு, கைத்தட்டுறது. ரொம்ப சந்தோசப்படாதே.., நான் 2011 ல போடப்போகும் கடைசி பதிவு இதுன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி? 2012 லயும் என் இம்சை தொடரும்...,
அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (சில மணித்துளிகள் முன்னதாகவே சொல்லிக்குறேன்.)
          

Friday, December 30, 2011

பழமுதிர்சோலை-ஆறாம்படைவீடு

                                            
அழகிய சோலை நடுவே அமைந்த ஆலயம். வள்ளி தெய்வானையுடன் அண்ணல் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் ஆலயம். இங்கு மாமன் பெருமாள்  கீழேயும், மருமகன் மேலேயும் அமர்ந்து அருள் புரியும் அழகு திருத்தலம் இது..., அழகு மிளிர்ந்ததால் அழகர்மலை எனவும், பழங்கள் காய்க்கும் மரங்கள் நிறைந்ததால் பழமுதிர்சோலை எனவும் பெயர் கொண்டு விளங்குகிறதா என தெரியவில்லை.அறுபடைவீடுகளில் ஆறாவது படைவீடான ”பழமுதிர்சோலை” தளத்தை பற்றி இன்று பார்க்கலாம்.
 
தல விவரம்:


மூலவர்:தம்பதியருடன்முருகன்
தல விருட்சம்: நாவல்
தீர்த்தம்:நூபுர கங்கை
ஊர்:சோலைமலை (அழகர்கோயில்
 மாவட்டம்மதுரை.



 பாடியவர்கள்:
                   அருணகிர்நாதர்
                                            
                                    
தல வரலாறு:                    



          தமிழ்பாட்டி அவ்வையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து, இந்த உலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்.ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, ""என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?'' என்றான். சந்ததோஷப்பட்ட பாட்டி ""வேண்டும்''என்றார்.உடனே முருகன்,""பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?''என்றான்.
 
   இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல்,""சுட்ட பழத்தையே கொடேன்''என்றார்.சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. அவ்வை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,""பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள்''என்று கூறி சிரித்தான்.

          சிறுவனின் மதிநுட்பத்தை அறிந்த பாட்டி, மரத்தில் இருப்பவன் சாதாரண மானிடச் சிறுவனல்ல என்பதைப் புரிந்து கொண்டார். பின்னர் முருகன் தன் சுயவடிவில் அவருக்கு அருள்பாலித்து முக்தி தந்தார். முருகன் இந்த திருவிளையாடலால் உலகிற்கு ஒரு தத்துவத்தை உணர்த்தினார். அதாவது, "உயிர்களின் மீது "உலகப்பற்று' என்னும் மணல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது. இறைவனை அறியும் மெய்யறிவும் தேவை. பற்றை அகற்றினால் இறைவனை உணரலாம்' என்பதே அது.

தல பெருமை: 
                            ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது.முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
                                
   இங்குள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடி காவல் தெய்வமான ராக்காயி அம்மனை தரிசிக்கலாம். இத்தீர்த்தம் சுவையானது.எந்த மலையில் எங்கே உற்பத்தியாகி எவ்வழியே ஓடி வந்து இங்கு வழிகிறது என்பதை இன்றளவும் கண்டுபிடிக்க முடியா பேரசதியம்.
            சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம். மலையடிவாரத்தில் கள்ளழகர் திருக்கோயிலும், மலைமீது சோலைமலை முருகன் கோயிலும் அமைந்துள்ளன.
தல சிறப்பு:    
                    சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.

 தரிசிக்க வேண்டிய அருகில் உள்ள கோவில்கள்:
அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் - மதுரை

 அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்-மதுரை தெப்பக்குளம்
அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில்- இரும்பாடி, சோழவந்தான்
அருள்மிகு காளமேகப்பெருமாள் கோவில்- திருமோகூர்
அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்- மதுரை
நன்றி: படங்களுக்கு கூகுளுக்கும்,  தகவலுக்கு தினமலர் ஆன்மீக மலருக்கும் .
முதலாம் படைவீட்டை பற்றி  அறிய...,
இரண்டாம் படைவீட்டை பற்றி  அறிய...,
மூன்றாம் படைவீட்டை பற்றி அறிய...,
நான்காம் படை வீடை பற்றி அறிய... 
ஐந்தாம் படைவீட்டை பற்றி அறிய...,








 

     
 



Wednesday, December 28, 2011

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

                                
          உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? 

           அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.  

        தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன்னு அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும், கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம். 

             இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து  உண்ணவே அவை இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சியாக சொன்னாராம்.

      வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.
பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். 

              அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். 

           “நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு” என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார்.  நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு


என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா! 

டிஸ்கி: ஒரு மணவிழாவில தந்த புத்தகத்தில் இருந்தது. அதை உங்கள் பார்வைக்கு....           


Tuesday, December 27, 2011

இந்த வருடத்தில் நான்- ஒரு தொடர் பதிவு.

      
. டொக்.., டொக்..
ஹாய் ராஜி நல்லா இருக்கியா?
மாலதி! வா, வா பார்த்து ரொம்ப நாளாச்சு.  நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கேப்பா? ஜனவரி 4 ஃப்ரெண்ட் வீட்டு கிரகப்பிரவேசத்துல பார்த்தது.  அப்புறம் நீ பாரீன் போய்ட்டே. பார்க்கத்தான் முடியலை. ஏண்டி நாயே போனும் பண்ணலை.
ஃபைன்ப்பா. அங்க போன ரெண்டாவது நாளே போனை மிஸ் பண்ணிட்டேன். அதுலயே  உன் போன் நம்பர், மெயில் ஐடிலாம் இருந்துச்சு. அதுவும் மிஸ் ஆயிடுச்சு. அதான் உன்னை காண்டாக்ட் பண்ண முடியலை சாரிப்பா.
ஓக்கே, ஓக்கே. உன்னை பத்தி சொல்லு . 2011 எப்படி போச்சு மாலு?
என்னை பத்தி அப்புறம் சொல்றேன்.
முதல்ல உன்னை பத்தி சொல்லு. அப்புறம் என்னை பத்தி சொல்றேன். 
 ம்ம்ம் சரி ஆத்தா. 

உனக்கு இந்த வருடத்தின் மிகப்பெரிய ”சந்தோஷம்” எது?
 என் ஃப்ரெண்டுக்கு பிப்14 ஆண் மகன் பிறந்தான். வெற்றிமாறன்னு பேர். பயபுள்ளைக்கு என்னை பார்த்தால் என்னதான் மனசுல தோணுமோ சேலையை நனைச்சுத்தான் அனுப்புவான்.

 ம் ம் தாங்க முடியாத துக்கத்தை தந்த நாள்  எது?
 என் அப்பா ரொம்ப கம்பீரமானவர். அவர் கண்ணுல கண்ணீரை என் திருமணத்தின் போதுதான் பார்த்தேன். அதற்கு முன்னும் பின்னும் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட என் அப்பா 1 மாதம் தண்டுவட பிரச்சனையால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடந்தார். வலிதாங்காமல்அவர் கண்ணில் வழிந்த கண்ணீரை கண்டு, இறைவனிடம் எனக்கு அப்பாவே இல்லைன்னாலும் பரவாயில்லை. அல்லல்படாமல்  சீக்கிரம் அழைச்சுக்கோன்னு கெஞ்சி கேட்ட  மே 2. 

சரி அழாதே. இப்பதான் அப்பா சரியாகிட்டாரே. விடு. ஆச்சர்யமான நாள் எதுப்பா?
 கணவர் உடல்நிலைக்காக முன்பின் அறிமுகமில்லாத சென்னையில், எழுத்துக்கூட்டி கூட படிக்கத்தெரியாத அம்மா, யார் துணையும் இன்றி தன்னந்தனியாய் நின்று அப்பாவை சரி படுத்திக்கிட்டுதான் வீட்டுக்கு கூட்டி வருவேன்ன்னு அதேப்போல சாதிச்சு அப்பாவை நடக்க வைத்து வீட்டுக்கு கூட்டி வந்த நாள் மே 17.


நீதான் நிறைய புத்தகம் வாசிப்பியே, இந்த வருசம்  படித்ததில் பிடித்த புத்தகம்  எது?
நா.முத்துக்குமார் எழுதிய ”அணிலாடும் முன்றில்!” 

வீட்டுக்கு ஏதும் வாங்கலியா?
ம் ம் கணினி பிரிண்டர் வாங்குனேன். 

லீவுல பிள்ளைகளை எங்கும் வெளியில கூட்டி போறதானே. அவங்களுக்கும் ரிலாக்‌ஷேஷன் வேணும்பா.
இந்த வருசம் அப்பாக்கு முடியாமல் போகவே வேறெங்கும் போகலை. வேண்டுதலுக்காக திருப்பதியும், சென்னை கிஷ்கிந்தாவுக்கு ஒரு நாளும் கூட்டி போய் வந்தேன்.

போன வருசம் நிறைய படங்கள் வந்திருக்கே. எது நல்ல படம் நீ எதை ரசிச்சே?
எனக்கு சினிமாவுக்கு போகும் பழக்கமில்லைன்னு உனக்கு தெரியாதா?

அட, ஆமாம் மறந்துட்டேன். ஆனால், பாட்டுக்களை ரசிப்பியே. 2011 ல பிடிச்ச பாட்டு...
ஆடுகளத்துல வெள்ளாவி வச்சுதான், எங்கேயும் காதல் படத்துல எங்கேயும் காதல், திமு திமுவும் ஏழாம் அறிவுல யம்மா யம்மா, முன் அந்தி சாலையில் பாட்டும் ஒய் திஸ் கொலைவெறி பாட்டும் தான் என் ஃபேவரிட். 

மொக்கை போடத்தான் நான் இல்லையே. ஃபாரீன் போய்ட்டேனே. யார் கூட மொக்கை போடுவே? யார் அந்த புது நண்பர்?
ஹா ஹா நான் ”காணாமல் போன கனவுகள்”ன்னு பிளாக் ஆரம்பிச்சிருக்கேன். அதுல முகம்தெரியாத பல நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. தனியாய் பிறந்த எனக்கு ”சிரிப்பு போலீஸ்” ரமேஷ், ”ராஜபாட்டை” ராஜா, ”பிரியமுடன்” வசந்த், ”வேடந்தாங்கல்” கருன், ”மயிலிறகு”மயிலன் போன்ற தம்பிகளும், ”நாஞ்சில் மனோ”மனோ அண்ணா, ”மின்னல்வரிகள்” கணேஷ் அண்ணாவும், ”கோகுலத்தில் சூரியன்” வெங்கட் சாரும், ”அட்ராசக்க”சிபி சாரும், கவிதைவீதி சௌந்தர் சாரும் தோழர்களாகவும், ” வானம் வெளித்த பின்னும்” ஹேமா, ”மதுரகவி” ராம்வி, ”கோலங்கள்” சுமதி, ”இல்லத்தரசி”சுகுணாவும் தோழிகளாகவும்,  கிடைச்சிருக்காங்க.


  ஓ ஓ.அப்படியா சங்கதி. சரி இந்த வருசம் என்ன பெருசா சாதனை புரிஞ்சுட்டே.
ஹா ஹா தொடர் பதிவுக்கு என்னை அழைச்சிருக்கும்போதே தெரியலையா? நான் பிரபல பதிவராயிட்டேன்னு.  அதுவே பெரிய சாதனைதானே. சரி சரி முறைக்காதே, என்னால இந்த சமூகத்துக்கு கெடுதல் ஏதுமில்லை அதான் சாதனை.அதுமில்லாம தமிழ்மணத்துல 52 இடம்(இதுக்கே பெருமை தாங்கலை) நான் கிறுக்குறதையும் பொறுமையா படிக்க என் பிளாக்கை ஃபாலோ பண்ணும் 95 பேர்,
பெரிய சாதனைதான். இவ்வளவ் நடந்திருக்கா உன் லைஃப்ல.  


டிஸ்கி: தம்பி “ராஜபாட்டை ராஜா” என்னை தொடர் பதிவுக்கு அழைச்சிருந்தார். பிள்ளைகளுக்கு அரையாண்டு பரிட்சை இருந்ததால் என்னால் உடனே பதிவிட முடியலை. கொஞ்ஞ்ஞ்ச லேட்டா போட்டுட்டேன்.


தொடர் பதிவுன்னாலே யாரையாவது நாலு பேரை கோர்த்துவிடனுமாமே. யாரை கோர்த்துவிடலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது
மனோ அண்ணா, தம்பி ரமேஷ்,  ”வானம் வெளித்த பின்னும்”  ஹேமா, தம்பி கருண் 

Monday, December 26, 2011

சிறைப்படு.., விடுதலையடைகிறேன்...,



நான் நேசிப்பவைகள்
உனக்கு விரோதமானவை..,
நானும், நீயும் இணையும்
சாத்தியங்கள் அகராதியில் இல்லை!?

அப்படி என்றால் …
நமக்கான சம்பந்தம் பற்றிய
பிரயத்தனங்கள் வீணானவை தானே
இதில் நாமிருவருமே
நிதானித்து முடிவேடுக்க வேண்டும்....

என்னை சிறையிலும்...,
உன்னை வெளியிலும் அடிப்பதை விடுத்து…..
உன்னுடன் ஒப்புதலுக்காக
உடன்பட்டேன்.

எதிர்ப்புகளிலும்,சரி என்று
எத்தனை தடவைகள் சமாளிப்பது.., இது,
 இறுதியான நாம் பற்றிய பார்வையாகட்டும்….
இதில் நீயும், நானும் உறுதியாய் இருப்போம்.

பயனற்ற பயணத்தில் நடத்து கொண்டதால்
உனக்கு கால்கள் வலிக்கிறது..
உள்ளே இருத்து துயரங்களை தின்றதால்
எனக்கு உள்ளம் வலிக்கிறது....,

அக வதைபுக்கள் நமக்குத் தானே
என்னுடைய காத்திருப்புக்களும்
உன்னுடைய துரோகமும்
இனி நிச்சயம் எதிர்த்துக் கொள்ள வேண்டும்...,
அதனால்,
நீ சிறை படு
நான் விடுதலை அடைகி்றேன் …….

Friday, December 23, 2011

திருத்தணிகை மலை- ஐந்தாம் படைவீடு


                                 
      முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே "திருத்தணி" என்று போற்றப்படுகிறது.
மூலவர்:சுப்பிரமணியசுவாமி 
உற்சவர்:சண்முகர் அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: மகுடமரம் 
 தீர்த்தம்:இந்திர தீர்த்தம் தவிர சரவணப்பொய்கை, சரஸ்வதி தீர்த்தம் பெயர்:சிறுதணி
ஊர்:திருத்தணி  
மாவட்டம்: திருவள்ளூர்.
 பாடியவர்கள்:அருணகிரி நாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் நிறைய பாடியுள்ளார்.இது தவிர ராமலிங்க அடிகளாரும் இத்தலத்து முருகனை குறித்து பாடியுள்ளார்.

       

திருவிழாக்கள்:

மாசிப் பெருந்திருவிழா - வள்ளி கல்யாணம் - 10 நாட்கள் திருவிழா.
  இத்திருவிழா இத்தலத்தில் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருள் பெறுவர்.  
சித்திரைப் பெருந்திருவிழா - தெய்வானை உற்சவம்  10 நாட்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர். ஆடிக் கிருத்திகை: 10 லட்சம் காவடிகள் எடுத்து வருவது மிகப் பிரம்மாண்டமாக தெரியும்.அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தன்று கர்நாடகா ஆந்திரா, மற்றும் ஆற்காடு பக்தர்கள் வரும்போது திருத்தணியே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கும். இத்தலத்தில் இது ரொம்பவும் விசேசமான திருவிழா ஆகும். இவை, தவிர கிருத்திகை அன்றும் தமிழ் ,ஆங்கில புத்தாண்டு தீபாவளி பொங்கல் உள்ளிட்ட விசேச தினங்களிலும் வாரத்தின் செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.
                    
தல சிறப்பு:

வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது 1 லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவர் சந்நிதியாக உள்ளது. முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 5வது வீடு அமர்ந்த நிலையில் அருணகிரியார் திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம். சுவாமி சாந்த சொரூபம். தெய்வேந்திரன் யானையை(ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம். இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது. முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடிபோன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞானசக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. முருகன் இங்கு யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். அதிலும் இத்தலத்தில் உள்ள யானை வாகனம், சன்னதியின் வெளியே பார்த்தபடி இருப்பது விசேஷமான தரிசனம். 
                 

கூடுதல் தகவல்:
 முருகனை வழிபட்ட இந்திரனால் உருவாக்கப்பட்ட "கல்ஹார தீர்த்தம்' மலையில் இருக்கிறது.
வள்ளி மலையிலிருந்து வள்ளியை சிறையெடுத்து வந்து திருமணம் செய்து கொண்ட தலம். 365 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள அழகிய முருக தலம். எத்தலத்திலும் காணமுடியாத வழக்கமாக இத்தலத்து ஆபத்சகாய விநாயகரை கடைசியாகத்தான் வணங்குதல் வேண்டுமாம். இத்தலத்தில் வேறெங்கும் காணமுடியாத விஷ்ணு துர்க்கை ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான முருகன் திருத்தலம் இது.
இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஆறு தளங்களைக் கொண்டது. இத்தலத்திற்கு குன்றுதோறாடல் என்ற சிறப்பு பெயரும் உண்டு
                                
இத்தலத்து முருகப்பெருமான் மிகவும் அருள் வாய்ந்தவர் என்பதால் தினந்தோறும் பக்தர்கள் திருமண வரம் குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் ஆகியன வேண்டி வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
எத்தனை கோபம் , மனக்குழப்பம் ஆகியவைகளோடு இருந்தாலும் இத்தலத்து முருகனை வணங்கினால் அத்தனை கோபமும் குழப்பங்களும் விலகிவிடுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்ககை.




நேர்த்திக்கடன்:
மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்கல்,பொங்கல் படைத்தல் ,சுவாமிக்கு சந்தனகாப்பு ,பஞ்சாமிர்த அபிசேகம் பால் அபிசேகம் ,அன்னதானம் வழங்குவது , நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடிஎடுத்தல் ,அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்து கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் செய்கின்றனர். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.
தல பெருமை:
வேல் இல்லாத வேலவன்: முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடிபோன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞானசக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. அலங்காரத்தின்போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. முருகனுக்குரிய "குமார தந்திர' முறைப்படி இங்கு பூஜை நடக்கிறது. மூலஸ்தானத்தில் முருகனுக்கு பின்புறம் வள்ளி, தெய்வானை இருவரும் இருக்கின்றனர். இவர்களுக்கு தனிச்சன்னதிகளும் இருக்கிறது.
சூரசம்ஹாரம் இல்லை: முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. தற்போது, ஆயிரம் கிலோ பூக்களை இதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.  
                             
வாசலைப் பார்க்கும் யானை: முருகன் இங்கு யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். அதிலும் இத்தலத்தில் உள்ள யானை வாகனம், சன்னதியின் வெளியே பார்த்தபடி இருப்பது விசேஷமான தரிசனம். இதற்கு காரணம் உண்டு.
இந்திரன், தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து தந்தபோது, ஐராவதத்தை (தேவலோகத்து வெள்ளை யானை) சீதனமாக கொடுத்தார். இதனால், தேவலோகத்தின் ஐஸ்வர்யம் குறைந்தது. ஆகவே, ஐராவதத்தின் பார்வையை தேவலோகம் நோக்கி திருப்ப அனுமதிக்கும்படி முருகனிடம் வேண்டினார். முருகனும் சம்மதித்தார். எனவே ஐராவதம், தேவலோகத்து திசையான கிழக்கு நோக்கி இருக்கிறது.

கர்ண பரம்பரை கதை ஒன்றும் உண்டு. முருகன், வள்ளியை மணக்கச் சென்றபோது விநாயகராகிய யானையைக் கண்டு பயந்து ஓடினாள். தன்னைக்கண்டு மீண்டும் வள்ளி பயந்து விடக்கூடாது என்பதற்காக யானை வடிவில் விநாயகரே வெளியே பார்த்திருப்பதாக சொல்கிறார்கள்.
கஜவள்ளி: திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இருவரும் முருகனை மணக்க வேண்டி தவமிருந்தனர். இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர். சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும் அம்சத்துடன் ஒரே அம்பிகையாக "கஜவள்ளி' என்னும் பெயரில் அருள்கிறாள். இவள் வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள். தங்கத்தேர் புறப்பாடு இல்லாத வெள்ளிக்கிழமைகளில், இவள் கிளி வாகனத்தில் எழுந்தருளுகிறாள்.
                      

நோய் தீர்க்கும் சந்தனம்: திருத்தணியில் முருகனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனம் சாத்துவதில்லை. முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.
ஆடி கிருத்திகை விசேஷம்: முருகப்பெருமானை இந்திரன், ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் இவ்விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின்போது சுவாமி, அடிவாரத்திலுள்ள சரவணப்பொய்கைக்கு எழுந்தருளுகிறார். இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிகளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர். மலர்க்காவடி வாடகைக்கு கிடைக்கிறது.
வெந்நீர் அபிஷேகம்: மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீதுகொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
புத்தாண்டில் படிபூஜை: வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். புத்தாண்டிற்கு முதல்நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. தமிழ்ப்புத்தாண்டில் 1008 பால் குட அபிஷேகம் நடக்கும்.
நான்கு நாய் பைரவர்: கோயில்களில் பைரவர், வேதத்தின் வடிவமான நாய் வாகனத்துடன் காட்சி தருவார். சில தலங்களில் இரண்டு நாய்களுடன் பைரவரைக் காணலாம். இங்கு நான்கு நாய் வாகனங்களுடன் அவரைத் தரிசிக்கலாம். ஒரு நாய் வழக்கம்போல, பைரவருக்கு பின்புறம் உள்ளது. மற்ற மூன்று நாய்களும் பீடத்தை சுற்றி இருக்கிறது. அவை நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. கல்வியில் புலமை பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
சித்திரை பிரம்மோற்ஸவத்தில் தெய்வானை திருமணமும், மாசியில் வள்ளி திருமணமும் நடக்கிறது.
பள்ளியறை பூஜையின் போது ஒருநாள் தெய்வானையும், ஒருநாள் வள்ளியுமாக முருகனுடன் அருள்செய்கின்றனர்.
வேடன் வடிவில் சென்று முருகன் வள்ளியை மணந்ததால் பிரம்மோற்ஸவத்தின் ஆறாம் நாளில் புலி வாகனத்திலும், பின்பு யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.
இத்தல முருகனின் அருளை முஸ்லிம் பக்தர் ஒருவர் பெற்றார். தற்போதும் விழாக்களில், முருகன் புறப்பாடாகும் வேளையில், முஸ்லிம் ஒருவர் முரசு வாத்தியம் இசைக்கிறார்.
திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம். சுவாமி சாந்த சொரூபம். தெய்வேந்திரன் யானையை(ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம். இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.
 
தல வரலாறு:
 இறைவனைத் தேடி நாமாகவே சென்று விட வேண்டும். நாம் அவனிடம் செல்ல மறுத்து, அவனால் தரப்பட்ட இந்த வாடகை வீடாகிய உலகத்தில் தொடர்ந்து வசிக்க விரும்பினால், அவன் விடமாட்டான். யோகிகளும், ஞானிகளும் அவனை அடைவதற்குரிய வழியைச் செய்து எப்படியோ அவன் திருப்பாதத்தை அடைந்து விடுகின்றனர். பாமரர்கள், இந்த உலகத்தில் நிரந்தரமாக வாழப்போவதாக நினைத்து பொன்னையும்,பொருளையும்குவித்துக் கொண்டிருக்கின்றனர்.  
திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன் திருமாலின் புத்திரியை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு வள்ளி என பெயர் சூட்டி வளர்த்து வந்தான். வள்ளி தினைப்புனத்தைக் காவல் காக்கும் பணியைச் செய்து வந்தாள்.தினைப்புனம் என்பது உலகத்தையும், அதில் விளையும் தினைப்பயிர் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் "உலகப்பற்று' எனப்படும் ஆசையையும் குறிக்கும். 
"இது உனக்குச் சொந்தமானதல்ல, எனக்குச் சொந்தம்' என்று பறந்து வரும் பறவைகள் பரமாத்மாவாகிய இறைவனைக் குறிக்கும். உலக ஜீவன்களோ இதைப் புரிந்து கொள்ளாமல், கவண்கல்லால் அவற்றை விரட்டியடிப்பது, தெய்வத்தைப் புரிந்து கொள்ளாத தன்மையைக் குறிக்கும்.இந்த உலகமே நிரந்தரமெனக் கருதியிருக்கும் இதுபோன்ற பாமர உயிர்களுக்கு தவம், யோகம், தியானம் இது பற்றியெல்லாம் தெரியாது. இப்படிப்பட்ட உயிர்களையும் ஆட்கொள்ளவே விரும்புவான். அப்படி வள்ளியை ஆட்கொள்ளவே முருகப்பெருமான் முதியவர் வேடத்தில் வந்தார். வள்ளியோ அவரை யாரென அறியாமல் பயந்தோடினாள். இறைவனோ, அவளை ஆட்கொள்ள யானை மூலம் பயமுறுத்தினார். அவர் அவளைத் தழுவினார். இறைவனின் ஸ்பரிசம் பட்டதுமே ஞானோதயம் பிறந்தது. அவருடன் ஐக்கியமாகி விட்டாள். பாமரர்கள், அவள் இறைவனுடன் ஐக்கியமானதை திருமணமாகக் கருதி, வள்ளி திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். வள்ளியின் திருமணத்தலம் இது. முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து இத்தலத்தில் தங்கியதால் "தணிகை மலை' என்று பெயர் பெற்ற இத்தலம் "திருத்தணி' என்று மாறியது.

தரிசிக்க வேண்டிய மற்ற அருகில் உள்ள கோவில்கள்:

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்  - திருவேற்காடு
அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில்- திருவொற்றியூர்
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்- சிறுவாபுரி, சின்னம்பேடு
அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில்- மேட்டுக்குப்பம், வானகரம்
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்- திருவாலங்காடு
நன்றி: படங்களுக்கு கூகுளுக்கும், அதிக தகவலுக்கு தினமலர் ஆன்மீக மலருக்கும் .
முதலாம் படைவீட்டை பற்றி  அறிய...,
இரண்டாம் படைவீட்டை பற்றி  அறிய...,
மூன்றாம் படைவீட்டை பற்றி அறிய...,
நான்காம் படை வீடை பற்றி அறிய...

 


Wednesday, December 21, 2011

ஊமைப்பெண்


                                                       

உணர்வுகளை உண்மைகளை
உரைக்க முடியவில்லை.
உள்ளதை உள்ளபடி
ஊர்கேட்க சொல்லமுடியவில்லை...

சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றை
சொல்லவே முடியவில்லை....,
வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
வார்த்தைகளை என்னால்
பிரசவிக்கவே முடியவில்லை!?

ஏக்கம், கவலை, இயலாமை,
வெறுப்பு, விரக்தி, வேதனை என
நிறைந்து வழிகின்றன...,
ஆனால்,
நான் ஊமையில்லை.

என்னால் நன்றாக பேசமுடியும்...,
இருந்தும் என்னால் பேச முடியவில்லை!?.
ஏன்?
நான் பூரணமடையாதவளா?
இல்லை குறைபாடு உடையவளா?

என்னுள் மட்டுமே
என்னால்
இன்னும் கேட்க முடிகிறது.
அப்போதும்
வார்த்தைகள் வெளியே வரவேயில்லை.
ஆனாலும்,
பேசுகின்றேன்....
நிறையவே பேசுகின்றேன்...,
வாய் இருந்தும் ஊமையாய்!!!???


Tuesday, December 20, 2011

ஆபீசுல தூங்குபவரா நீங்க..., உங்களுக்கான டிப்ஸ்

ஆபீசுல தூங்குபவரா நீங்க.     அப்பிடி தூங்கி மேலதிகாரிக்கிட்ட மாட்டி  அடிக்கடி டோஸ் வாங்குபவரா? உங்களுக்கான டிப்ஸ் இதோ...,
இதுப்போல செய்தால் மேலதிகாரிங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க வேணாம் பாருங்க. ரொம்ப யோசிச்சு யாரோ ஒரு புத்திசாலி இப்படிலாம் ஐடியா கண்டுபிடிச்சிருக்காரு பாருங்க.     





டிஸ்கி: நம்ம பிளாக்கர்ஸ் யாரும் ஆபீசுல தூங்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அம்புட்டு நல்ல பசங்க நாங்கன்னு காலரை தூக்கிவிட வேணாம்... பதிவை ரெடி பண்ணாவௌம், போஸ்ட் போடவும், திரட்டிகளில் இணைக்கவும், கமெண்டுக்கு ரிப்ளை பண்ணவும், மொய் கமெண்ட் வைக்கவுமே சரியா இருக்கும்போது எங்கிருந்து தூங்குவது?! என்ன நான் சொல்றது சரிதானே?!





Monday, December 19, 2011

வெற்றிக்கு 20 படிகள்....,

                                       
                      
1.தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாய் உழையுங்கள்..,

2.வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான்...

3.வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்...,

4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற்வேண்டும்...,

5.ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது...,

6.வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது...,

7.பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் மாற்றி கொள்ள வேண்டும்.

8. முடியாது, நடக்காது போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது..,,

9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது...,

10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு...,

                       

11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்...,

12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.., 

13. மற்றவர்களை உங்களுக்கு உழைக்க வைப்பதில்தான் உங்கள்  புத்திசாலித்தனம் இருக்கிறது...,

14. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்....,

15. எதையும் நாளை என்று தள்ளி போடக்கூடாது..,

16. கைக்கடிகாரத்தை கொடுத்துவிட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்...,

17. மற்றவர்களை வழிநடத்த வேண்டுமென்று நினைக்கக் கூடாது...,

18. கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும் கிடைக்காது...,

19. சந்தோஷத்தை கொடுப்பது பணம் மட்டுமல்ல....,

20. கடவுளை நம்புங்கள்.

டிஸ்கி: இதை நான் சொல்லலீங்கோ. Holiday in Founder கெமன்ஸ் வில்லியம்ஸ் சொல்லியிருக்கார்.