என்ன புள்ள! சோகமா உக்காந்திருக்கே!?
மாமா, நம்ம ஊருக்கு பக்கத்து புலவன்பாடி கிராமத்துல ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சு, டிவி பொட்டிலலாம் காட்டினாங்க. பார்த்தீங்களா!?
ம்ம்ம்ம்ம்ம். அங்கதான் போய் வரேன் புள்ள, குஜராத், ஒரிசான்னு எங்கெங்கோ தோண்டி வச்ச போர்வெல்ல குழந்தை விழுந்து மீட்கப்பட்டபோது ஒரு செய்தியாகவே இது வரை பார்த்திருக்கிறேன். ஆனா, இங்கயே நம்ம பக்கத்துல இதுப்போல ஒரு நிகழ்ச்சி நடந்ததா கேள்விப்பட்டப்போ நம்ம வீட்டு புள்ளைக்கு இதுப்போல நடந்த மாதிரி மனசுக்குள் ஒரு சோகம்.
ஏனுங்க மாமா! காப்பாத்த யாருமே வரலியா?!
8 மணிக்கு பாப்பா குழாய்க்குள்ள விழுந்துட்டுது. 8.30மணிக்கு தீயணைப்பு வண்டி ஆரணில இருந்து வந்துட்டுது. 9 மணிக்குலாம் போலீஸ், ஆம்புலன்ஸ் வந்துட்டுது. மதுரைல இருந்து கூட மீட்பு குழு ஹெலிகாப்டர் மூலம் வந்துட்டுது. சுமார் பத்து மணி நேரம் போராடி ராத்திரி 8 மணிக்கு புள்ளையை மீட்டிருக்காங்க. உடனே, ரெடியா இருந்த ஆம்புலன்ஸ்ல போட்டு முதலுதவி செஞ்சுக்கிட்டே ஆரணி கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போய்ட்டாங்க. அங்க கொஞ்சம் முதலுதவி செஞ்சுட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு போனாங்க. அங்க கொஞ்ச நேரம் போராடி பார்த்தும் டாக்டர்களால பாப்பாவை காப்பாத்த முடியலை.
ஏன்? என்னாச்சு!? ஒரு நாள் ஃபுல்லா குழாய்ல இருந்த குழந்தைகள் கூட உயிரோட மீட்டிருக்காங்க. இந்த பாப்பா ஏன் இப்படி ஆச்சு!?
அதிக்கப்படியான பயம், அதுமில்லாம பாப்பாவோட உடம்பு சூடு ரொம்ப குறைவா போய் இதயத்தை செயலிழக்க வச்சிருக்கு. பாப்பாவுக்கு பொறப்புலயே மூச்சு பிரச்சனை இருந்திருக்கு. அதும் முக்கிய காரணம்ன்னு குழந்தையோட மாமா சொன்னார்.
போர்வெல்லுக்கு சொந்தக்காரரான அந்த ஆளை பிடிச்சுட்டாங்களா?!
ம்ம் அவரே பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல போய் சரண்டர் ஆகிட்டார். இதுக்குலாம் அதிகப்படியான தண்டனை கிடைக்கது புள்ள. மிஞ்சி போனா 3 மாசம், இல்ல எதாவது அபராதம் இதுப்போலதான் தண்டனை கிடைக்கும். நம்ம மக்கள் தங்களோட பொறுப்பை உணர்ந்து நடந்துக்கிட்டா இதுப்போன்ற மரணங்களை தவிர்க்கலாம். ரெண்டு நாளுக்கு உச்ச் கொட்டிட்டு நம்ம வீட்டுல போர் போதும்போது ஒரு கோணிப்பை மட்டும் போட்டு மூடி வச்சுடுவோம். அந்த பை நாள்ப்பட நாள்பட இத்து போய் இதுப்போன்ற அசம்பாவிதம் நடக்க காரணமாகுது!!
நீங்க சொல்றது யோசிக்க வேண்டிய நிஜம்தான் மாமா!! மனுசனுக்கு பயன்படாத ஏழு விசயங்கள் சொல்ல்ட்டா!?
ம்ம் சொல்லு, கேட்டுக்குறேன்...,
ஆபத்து காலங்களில் உதவாத ”பிள்ளை”. ஒருவன் பசித்த்திருக்கும்போது பசி ஆற்ற உதவாத ”உணவு”, அடுத்தவன் தாகத்தை தணிக்க உதவாத ”தண்ணீர்”, வீட்டு கஷ்டத்தை உணராமல் தாந்தோன்றித்தனமா செலவு செய்யும் ”பெண்கள்”, தனக்குள் ஏற்படும் கோவத்தை மறைத்து அரசாள தெரியாத ”அரசன்”, குரு சொல் பேச்சு கேளாத ”மாணவன்”, தன் தவறை உணர்ந்து பாவம் போக்கி கொள்ள வருபவனின் பாவத்தை தீர்க்காத ”புண்ணியநதி”
நிஜமாவே பயனில்லாத ஏழுதான். ஆனா, இதுப்போல பயனில்லதவை நிறைய இருக்கு. போன வாரம் ராஜி வீட்டுக்கு போய் இருந்த போது தன் புருசனை லெஃப்ட், ரைட் வாங்கிட்டு இருந்தா. உன் ஃப்ரெண்ட் ராஜி உன்கிட்ட சொன்னாளா!?
இல்லியே! என்னவாம்?
அவ வீட்டுக்காரரும், அவர் கூட வேலை பார்க்குறவங்களும் போன வாரம் சென்னைக்கு ஆஃபீஸ் ஜீப்புல போய் இருக்காங்க. பெங்களூர் டூ சென்னை ரோட்டுல காஞ்சிபுரம் தாண்டி காலை எட்டு மணிக்கு ஒருத்தன் அடிப்பட்டு கொட்டும் மழையில வெறும் உள்ளாடையோடு கைல ரத்தம் சொட்ட, சொட்ட விழுந்து கெடந்திருக்கான், ஜீப்பை விட்டு இறங்கி பார்த்தும் எந்த ஹெல்பும் செய்யாம வந்திட்டு இருக்காங்க.
ஐயையோ! அப்புறம் அந்தாளுக்கு என்னாச்சு மாமா!?
அது ஆக்சிடெண்டா?! இல்ல அடிச்சு போட்டதான்னு தெரியலயாம். பக்கத்துல அவன் வந்த வண்டியோ இல்ல அவன் ட்ரெஸ்சோ எதுமில்லியாம். அதனால பயந்து ராஜி வீட்டுக்காரர் கிட்ட கூட போகாம இருந்திருக்கார், அவர் மட்டுமில்லாம ஹைவேஸ்ல போற எந்த வண்டியும், நிக்காம போய்க்கிட்டே இருந்துச்சாம்.
ஐயையோ! அட்லீஸ்ட் 108க்காவது போன் பண்ணி சொல்லி இருக்கலாமே மாமா!?
அதான் ராஜி கூட கேட்டா. அதுக்கு, அவர் வீட்டுக்காரர் சொல்றார், நாங்க 108க்கு ஃபோன் போட்டோம் அது திருச்சிக்கு போச்சு, எங்களுக்கு மீட்டிங்க்கு டைம் ஆகிட்டதால அடிப்பட்டவனை அப்படியே விட்டுட்டு வந்துட்டோம்ன்னு சொல்றார். திருச்சிக்கு போனா என்ன!? அவங்ககிட்டயாவது இதுப்போல இந்த இடத்துல ஒருத்தர் அடிப்பட்டிருக்கார்ன்னு சொல்லி இருக்க வேணாமா?! படிச்சு கவர்ன்மெண்ட் வேலையில் இருக்கும் நீங்களே இப்படி பயந்து வந்தா எப்படி?!ன்னு வீட்டுக்காரரை டோஸ் விட்டா.
நல்லாதான் கேட்டிருக்கா, அவ சண்டை போட்டதுல தப்பே இல்ல மாமா. படிச்சவங்களே, போலீஸ் விசாரணை, வேலைன்னு சுயநலமா சிந்திச்சா எப்படி?!
ம்ம் படிச்சவங்கலாம் இப்படிதான் சிந்திப்பாங்க. இதுவே அந்த இடத்துல படிக்க்காதவன் இருந்திருந்தா எதை பத்தியும் கவலைப்படாம தூக்கி தோள்மேல போட்டு ஹாஸ்பிட்டல் போய் இருப்பான். ரொம்ப சீரியசான விசயமாவே பேசிட்டோம். ஒரு ஜோக் சொல்லவா?! என் செல்போனுக்கு வந்தது.
ம்ம்ம் என்ன பொண்டாட்டியை மட்டம் தட்டி மெசேஜ் வந்திருக்கும் உங்களுக்கு. அதைத்தானே சொல்ல் வர்றீங்க.
அட, கரெக்டா கண்டுப்பிடிச்சுட்டியே!! ஒரு விடுகதை கேக்குறேன் பதில் சொல்லு புள்ள!!
கணவன்: உன் மாமனாருக்கு அனுமார் மேல ரொம்ப பக்தியாமே?அனுமாருக்கு தன் சொத்தை எல்லாம் எழுதி வச்சுட்டாராமே?"
மனைவி:"இது என்ன பெரிய விஷயம்? உன் மாமனார் கூடத்தான் அனுமாருக்கு தன் பொண்ணையே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கார்,அவர்தான் பெரிய பக்திமான்"
நான் சொன்னது கரெக்டா போச்சு பார்த்தீங்களா மாமா?! பொண்டாட்டிங்களை மட்டம் தட்டி வர்ற ஜோக்குங்களைதான் நீங்க சொல்லுவீங்கன்னு நினைச்சேன் கரெக்டா போச்சு.
ம்ம்ம்ம் இப்படியாவது சந்தோசப்பட்டுக்குறோமே!! நேர்ல சொன்னா அடி வாங்க தெம்பு ஏதும்மா! ஜோக் சரியா சொன்ன மாதிரி இந்த விடுகதைக்கு விடை கரெக்டா சொல்லு பார்க்கலாம்!?
கடலைக் கலக்குது ஒரு குருவி..,
கடலோரம் போகுது ஒரு குருவி..,
செடியைத் தின்பது ஒரு குருவி..,
செடி ஓரம் போகுது அடுத்த குருவி..,
குருவிகளின் பேர் சொல்லு புள்ள பார்க்கலாம்!!
இருங்க கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்.
ம்ம்ம் எம்புட்டு நேரம் யோசிப்பே!! நீ யோசிச்சு வை. நான் அதுக்குள்ள நான் வயக்காட்டுக்கு போய் வரேன்.