கடவுளைப் பார்த்த எவரும் அவரை வருணிக்க
முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்தவர் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவர். கண்டவர்
விண்டிலர்.யாராவது ஒருவன் கடவுளின் ரூப லாவண்யங்களை வருணித்து கடவுள் இப்படித்தான்
இருப்பான் என்று சொன்னால் அவன் கடவுளைப் பார்த்ததே இல்லை என்று பொருள். அதவது
விண்டவர் கண்டிலர். இதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்கிறார் என பார்க்கலாம்.
.இதில் ஒற்றுமை என்னவென்றால் ,வடநாட்டில் பிறந்த இராமகிருஷ்ணர் என்ன கருத்துக்களை சொல்கிறாரோ
அதையேதான் சித்தர்களும் தமிழ் அடியார்களும் சொல்லுகின்றனர். சங்கத் தமிழ்
இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் இருக்கின்றன.
ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண
வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும்
என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம்.
வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள்
உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மம் பற்றிய
அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி
ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன்
ஐக்கியமாகிவிடுகிறார்கள்.
புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார்
வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய
மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத
ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி ‘இவன்தான் உன்
புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும்
போதெல்லாம், புன்னகை செய்தவாறே ‘அவன் இல்லை’, ‘அவன் இல்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி
இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் ‘இல்லை’ என்ற பதிலோ ‘ஆமாம்’ என்ற பதிலோ
வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மத்தை கண்டவர் நிலையும் இதேபோல் தான் அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.
ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள்
இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப்
பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள்
என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா
விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார்.
இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். எங்கும் நிறைந்தவன் அவனே ,எதிலிருந்து
ஆரம்பிப்பது .எதில் முடிப்பது .ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியாயிற்றே, இரண்டாவது மகன்
கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப்
புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.
இந்த எடுத்துக் காட்டுகள் மூலம்
ராமகிருஷ்ண பரமஹம்சர் பிரம்மஞானிகளின் இயல்பை விளக்குகிறார். ஆனால் ஒரு சில
ஞானியர் மட்டும், மனித குல நன்மைக்காக மிகவும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு
நம்மிடையே திரும்பி ஓடிவருகிறார்கள்.“கண்டேன், கண்டேன் கண்டேன்!! கண்ணுக்கினியன
கண்டேன், தொண்டீர் எல்லோரும் வாரீர்”-- என்று ஆனந்தக் கூத்தாடி நம்மை எல்லாம்
உய்விக்க முயற்சி செய்கிறார்கள். “சேரவாரும் ஜெகத்தீரே”--
என்று நம்மிடம் கெஞ்சுகின்றனர். அப்படியும்
நாம் போகாவிட்டால் “கடைவிரித்தேன் கொள்வரில்லையே”--- என்று வருத்தப் படுகிறார்கள்.
திருமூலரின் திருமந்திரம் காட்டும்
உண்மை:
உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை
தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (2915)
பொருள்; கடவுளை வருணிக்க முடியாது. கரை காண
முடியாத கடல் போல அவன் எங்கும் நிறந்தவன். அவனைச் சொல்லுக்குள் அடக்க முயன்றவர்கள்
எல்லாம் திணறிப் போய் ஊமையர் போல நிற்கின்றனர். கண்டவர் விண்டிலர். விண்டவர்
கண்டிலர். ஆனால் தெளிந்த மனது உடையோருக்கு அவன் எளிதில் புரிபடுவான்..பகவத்
கீதையில் பெருங் கடலை, சமுத்திரத்தை ‘’ஆபூர்யமாணம், அசலப் ப்ரதிஷ்டம்’’=
எங்கும் நிறைந்தது, நிலைகுலையாதது
என்று கிருஷ்ணன் கூறுவான் (2-70). ஆர்பரித்துத் துள்ளி ஓடும் பெரிய, பெரிய நதிகள்
எல்லாம் கடலுக்குள் இறங்கியவுடன் சப்தம் ஒடுங்கி தன் நாமம் இழந்துவிடும். இது போல
ஆசைகள் எல்லாம் ஒருவனுக்குள் ஒடுங்கவேண்டும். பின்னர் இறைவனைக் காண முடியும்.
என்று கூறுகிறார்
இதையே ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ—என்று மாணிக்கவாசகர் பாடினார்.இதுபோன்ற சின்ன உவமை, பெரிய உண்மைகளைப் புகட்டுகின்றன. மீண்டும் ஒரு பக்தி பதிவினூடே சந்திக்கலாம் .நன்றி ..
இதையே ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ—என்று மாணிக்கவாசகர் பாடினார்.இதுபோன்ற சின்ன உவமை, பெரிய உண்மைகளைப் புகட்டுகின்றன. மீண்டும் ஒரு பக்தி பதிவினூடே சந்திக்கலாம் .நன்றி ..