புண்ணியம்
தேடிப் போற பயணத்துல நாம இன்னிக்குப் பார்க்கப் போறது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தென் அகோபிலம் எனக் கூறப்படுகிற பூவரசன் குப்பம் என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் திருக்கோவில்.
இந்தக்கோவில் விழுப்புரம், புதுச்சேரிச் சாலையில் உள்ள சிறுவந்தாடு என்னும் ஊரில் இருக்கு. இந்த ஊர் பட்டுநூலுக்குப் பிரசத்திப் பெற்ற இடம். இங்கிருந்து பூவரசன் குப்பம் 2 கி.மீ. தொலைவில் இருக்கு. அப்படி இல்லாட்டி விழுப்புரம் பண்ருட்டி சாலையில் உள்ள கள்ளிப்பட்டியில் இறங்கினால் இத்தலம் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கு. விழுப்புரத்தில் இருந்து நேரடி பஸ் வசதியும் இருக்கு. சரி, இனி கோவிலுக்குள் செல்லலாம்ம் வாங்க!
தீமையை அழித்து
அறத்தைக் காக்க திருமால் எடுத்த வடிவங்களே தசாவதாரங்கள் எனச் சொல்கிறோம் மற்ற அவதாரங்கள் ஒரு குறிக்கோளுடன்
திட்டமிடப்பட்டு, பிறந்து, வளர்ந்து தக்கத் தருணத்தில் தீமையை அழிக்க
எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு நொடியில் தோன்றி, அசுரவதம்
செய்துப் பக்தனைக் காத்த அவதாரமாகும். பக்தர்களுக்கு ஒரு துயரென்றால் நான் நேரம் காலம் பாராமல் ஓடி வருவேன் என சொல்லாமல் இறைவன் சொல்கிறார்.
இதுதான் திருக்கோவில் மூலவர் சன்னதி முன்னால்
இருக்கும் கொடிமரமும் அதன் முன் இருக்கும் பலிபீடமும். கொடிமரத்தின் முன்னே
கருடாழ்வார் சன்னதி மூலவரை நோக்கிய வண்ணம் இருக்கிறது. இந்த ஸ்தலத்தின் விஷேசம் என்னனா, மற்ற இடங்களில் பயங்கரமான உருவில் காட்சியளிக்கும்
நரசிம்மர் இங்கே, தம்பதியர் சமேதராய் சாந்தமாய் காட்சியளிக்கிறார். தாயாரின் ஒரு கண் நரசிம்மரைப்
பார்த்துக் கொண்டிருக்க, மற்றோர் கண் நம்மை நோக்கிப்
பார்த்துக்கொண்டிருக்கிறது.
இனி இந்த
திருக்கோவிலின் வரலாற்றை பிரகார வலம் வந்துக்கொண்டே பார்க்கலாம். இங்க நேரேத் தெரிவது அமிர்தவல்லி
தாயார் சன்னதி.
இசை பாடி பாடி
கண்ணீர் மல்கி
எங்கும் நாடி நாடி
நரசிங்காவென்று
வாடி வாடும்
இவ்வானுதலே -
என்னும் பதிகத்தை பாடியபடி வலம் வருவோம். சர்வலோக சரண்யனான
ஸ்ரீமன்நாராயணன் எடுத்த, பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்த
நரசிம்ம அவதாரம். அகோபிலத்தில், பிரகலாதனுக்காக அவன் நினைத்த நேரத்தில், நினைத்த
இடத்தில ஒரு நொடி கூட தாமதிக்காது அவதரித்து இரண்யனை சம்காரம் செய்த மூர்த்தி இந்த நரசிம்மபெருமாள். இரண்யனுக்கு அஞ்சி வேறு
பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக்
காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே
முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சித் தந்தத் தலங்கள் தமிழகத்தில் எட்டு
இடங்களில் உள்ளன.
அப்படி நரசிம்மனாக முனிவர்களுக்குக் காட்சிக் கொடுத்தபோது அவரது ஆக்ரோசஷத்தைத் தாங்க
முடியாத முனிவர்களும், சப்த ரிஷிகளும் அத்ரி, பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், காச்யபர், கௌசிகர் ஆகியவர்களே அந்த ஏழு ரிஷிகள். மகாலக்ஷ்மியை வேண்டினார்கள். ஸ்ரீலக்ஷ்மியானவள்
நரசிம்மரின் மடியில் அமர்ந்து ஒரு கண்ணால் நரசிம்மரையும், ஒரு கண்ணால் சப்த
ரிஷிகளையும் பார்த்தபோது நரசிம்மர் கோபம் தணிந்தது, அப்பொழுது நரசிம்மர் கோபம் தணிந்து
சாந்தரூபியாக காட்சியளித்தார் அவர்களுக்காக.
திருமால் காட்சிக் கொடுத்த இடம்தான் பூவரசன்குப்பம். .இப்பூவுலகில் வேறு எங்கும்
காணாதக் காட்சியாக நரசிம்மர் சாந்த சொருபனாக காட்யளித்ததால் இன்று முதல் நீங்கள்
இருவரும் இவ்வாறே பக்தர்களுக்கு காட்யளிக்க வேண்டும் என சப்தரிஷிகள் வேண்ட அவ்வாறே
இருக்குமாறு வரமளித்தாரம் இந்த லக்ஷ்மிநரசிம்மர்.
இது பிரகாரத்தில் இருக்கும் ஆண்டாள் சன்னதி. இங்க செவி வழியாகவும்
சில வரலாறுகள் சொல்லபடுகின்றன. இங்க உள்ள பெரியவர் ஒருவரிடம் இந்த கோவில்பற்றி
கேட்டபோது அவர் சொன்னது...,நரசிம்மர்
தூணிலிருந்து தோன்றியதால் ஒரு தூணையே நரசிம்மராக 3 ம் நூற்றாண்டில் வழிபாடு செய்து வந்துள்ளார்கள்.அதன் பின் பல்லவர்கள்தான் நரசிம்மருக்கு கோயில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்தார்கள்.
அதை பற்றிய செவிவழிக்கதை....., முன்காலத்தில் தமிழகத்தில் சமண ஆதிக்கம் நிலவி வந்தது. இந்த
இடத்தை ஆண்ட பல்லவ மன்னன் சமண சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். திருநீறும், திருமண்ணும் துவேஷத்தோடு பார்க்கப்பட்டன. கோயில்கள் பரமசிவனுடையதாக இருந்தாலும், சரி பரந்தாமனுடையதாக இருந்தாலும் சரி இடிக்கப்பட்டன. பல்லவனின் கொடுமையை
எதிர்த்துக் குரல் கொடுத்தார் நரஹரி என்ற வைணவ ரிஷி. அவரைக் கொல்ல ஆணையிட்டான் மன்னன். வெகுண்டாராம் நரஹரி. என்னைக் கொல்ல ஆணையிட்ட உனக்கு பிரம்மஹத்தி
தோஷம் பிடிக்கட்டும். உன் உடல் அழுகட்டும் என்று சாபமிட்டுக் காற்றோடு
கரைந்தாராம் நரஹரி. மன்னனை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க, உடல் வேதனையால் துடிக்க, மன்னனின் கெட்ட காலம் ஆரம்பித்தது. மன்னன்
பைத்தியம் பிடித்தவன் போலானான்.
சாபவிமோசனம் பெற
நரஹரியை நாடெங்கும் தேடினான் மன்னன். ஆனால் அவர் கிடைக்கவில்லை. நோய் முற்றி
புழுக்கள் உடலில் நெளியவே மன்னனின் மனைவி மக்கள் கூட அவனை வெறுத்து
ஒதுக்கினார்கள். நாட்டை விட்டே வெளியேறிய மன்னன் ஒரு நாள்... தென்பெண்ணையாற்றின்
வடகரையில் ஒரு பூவரச மரத்தடியில் களைப்புடன் விதியை நொந்தபடி படுத்திருந்தான். அவன் ஆணவம் அழிந்து ஆதிக்க வெறியில் தான் செய்த பாவங்களுக்காகக் கண்ணீர் விட்டு கலங்கி
சோர்ந்து அப்படியே தூங்கி விட்டான். திடீரென்று விழித்தபோது, அவன் மேல் ஒரு பூவரச இலை விழுந்திருந்தது.
இது மூலவர்
சன்னதிக்குள் போகும் வழியில் இருக்கும்
சிற்பம் இவரையும் வணகிவிட்டு ஸ்தல புராணத்தை தொடர்வோம் ..
கீழே விழுந்த அந்த இலையின் அதிர்வைக்கூட அவனால்
தாங்க முடியாமல் அந்த இலையை நகர்த்த எண்ணி அதைக் கையில் எடுத்தான். அதில் லட்சுமி
நரசிம்மர் உருவம் தெரிந்தது. பூவரச இலையில் பூத்த முறுவலுடன் நரசிம்மர் அன்னையுடன்
சேர்ந்து இருப்பதைக் கண்டான். அவனையும் அறியாமல் கைகள் கூப்பின. கண்ணீர் பெருகியது. அப்போது
வானிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது.
மன்னா, கோயில் கட்டுவதாக
நினைத்தாலே கோடி புண்ணியம் உண்டாகும். நீ எத்தனை கோயில்களை இடித்திருக்கிறாய்.
அதற்குப் பிராயச்சித்தம் செய்தே ஆக வேண்டும். இந்தப் பூவரச மரத்தடியிலேயே லட்சுமி
நரசிம்மருக்கு கோவில் எழுப்பு. அதுவே பூவரசமங்கலம் எனப் பெயர் பெறும் என்றும், மேலும் இந்தக் கோயில்
கட்ட வேண்டும் என்ற எண்ணம் உன் மனத்தில் எழுந்த மறுகணமே உனக்கு விடிவு காலம்
பிறக்கும்` எனசொல்லியதாம்.
மன்னன் கோயில் கட்ட
நினைத்த மறுகணமே அவன் உடலில் தெம்பு வந்தது. உடனே கோயில் கட்டும் வேலையில்
ஈடுபட்டான். மனம் மாறவே, மதமும் மறைந்தது. மன்னன் மறுபடியும் மாமன்னன் ஆனான்.பூவரச
மங்கலத்தில் லட்சுமி நரசிம்மப் பெருமாளின் அருளாட்சியும் தொடங்கியது எனவும் செவி வழி கதை சொல்லபடுகிறது.
இதுதான் மூலவர்
திருமேனி. நீண்ட ஒரு வழியோடு சென்றால் கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம
மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும்
தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்கவல்லவள். இதனால் அமுதவல்லி என திருநாமம்
கொண்டு அழைக்கபடுகிறாள்.
கருவறையில் லட்சுமி
நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும்
காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை)
அனைத்துக்கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது. இடது காலை மடக்கி வைத்து
அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். நரசிம்மருடைய மடியில் பெருமிதத்துடன் தாயார்
அமர்ந்திருக்கிறார். வலக்கரம் அன்புக்கரமாக அண்ணலைத் தழுவிக் கொண்டிருக்கிறது. ஒரு
கண் அண்ணலை நோக்குகின்றது. மற்றொரு கண் பக்தர்களை நோக்கியுள்ளது. இது போன்ற
அமைப்பு இந்த பூவுலகில் வேறு எங்கும் இல்லை.
உள்பிரகாரம் வலம் வந்த
பின் இந்த வழியாகதாகவும் வெளியே வரலாம்.
இதற்கும் ஒரு வரலாறு
உண்டு. முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன்
இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல்
நரசிம்மரையே பார்த்தார். உடனே நரசிம்மர்,
""நீ முனிவர்களை பார்த்து
அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்' என்றார். அதற்கு லட்சுமி,"" கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை,
தரிசிக்க வரும் பக்தர்களிடம்
காட்டக்கூடாது. எனவே தான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்' என்றார். அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க
லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள்.
பூவரசன்குப்பத்தில்
சப்தரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் காட்சித் தந்த நரசிம்மபெருமாள் இவற்றில் பூவரசன்குப்பம் நடுவில் இருக்க,
இதைச்சுற்றி சோளிங்கர்நரசிம்மர்,
நாமக்கல்நரசிம்மர்,
அந்திலிநரசிம்மர்,
சிங்கப்பெருமாள்கோவில் (தென்அகோபிலம்),
பரிக்கல்நரசிம்மர்,
சிங்கிரி கோவில்லட்சுமிநரசிம்மர்,
சித்தனைவாடிநரசிம்மர் ஆகியதலங்கள் அமைந்துள்ளன. இதில் பூவரசன்குப்பம்,
பரிக்கல்,
சிங்கிரிகோவில் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில்அமைந்துள்ளன.
இதுமட்டும் இல்லாம இன்னும் நிறைய தலங்களில் நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார். நாம் முந்தைய
பதிவில் பார்த்த ஆப்பூர் நித்யகல்யாண நரசிம்மர் திருக்கோவில் இதுபோல் பல
கோவில்கள் இருக்கு.
திருமால் ஸ்ரீதேவியை மடியில் அமர்த்திக்கொண்டு காட்சியளிக்கும் திருக்கோலம்
லக்ஷ்மி நாராயணசுவாமி என அழைக்கபடுகிறார். அதேப்போல் லக்ஷ்மிதேவியை மடியில்
அமர்த்திக்கொண்டு காட்சிதரும் நரசிம்மமூர்த்தி, ”லக்ஷ்மி நரசிம்மமூர்த்தி” என
அழைக்கபடுகிறார். பிரகாரத்தினுள் ஆண்டாள் சன்னதியின் அடுத்து வேணுகோபால் சன்னதி
இருக்கு. அடுத்து ஆஞ்சநேயர் சன்னதியும் இருக்கு. மேலும், இதேபோல் அமைப்பு ஆந்திர மாநிலத்தில்
கிருஷ்ணாநதிக்கரையில்- நாகார்ஜுனா அணைக்கும் விஜயவாடா நீர்த்தேக்கத்திற்கும்
இடைப்பட்ட பகுதியில் மங்களகிரி லட்சுமிநரசிம்மர், வாடப்பள்ளி நரசிம்மர், வேதாத்திடை யோகநரசிம்மர், மட்டப்பள்ளி லட்சுமிநரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர்
எனபுகழ் பெற்ற ஐந்துநரசிம்மர் ஆலயங்கள் இருக்கிறது.
திருக்கோவில்
பிரகாரத்தினுள் இராமானுஜரும் நாகசன்னதியும் இருக்கிறது. மேலும் இந்த லக்ஷ்மி
நரசிம்மபெருமாளை 48 நாட்கள்
விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும்
மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் எனபது ஐதீகம். இந்த
திருக்கோவிலில் பஞ்சராதிர ஆகமப்படி இரண்டு காலபூஜைகள் நடக்கின்றன. இதில் மற்றுமொரு
சிறப்பு சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ரகலச திருமஞ்சனம் இந்த
விழா இங்கு சிறப்பாக கொண்டாடபடும்.
ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாளை வேண்டினால் கடன் தொல்லை தீரும்,
பொருள்கள் குவியும், இங்கே உற்சவர் வரதராஜ பெருமாள் இவர் ஸ்ரீதேவி பூதேவி
சமேத காட்சி தருகிறார். இதுதான் சுவாதி மண்டபம் தினமும் இங்கே அன்னதானம்
நடைபெறுகிறது. சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் மற்றும் பூஜைகள் உண்டு
அதுபற்றிய
சிறப்புதகவல்களை இந்த திருக்கோவில் பட்டர்களான பார்த்தசாரதி ( 95851 78444)
மற்றும் நரசிம்மன் (97518 77555) ஆகியோர்களை தொடர்புக் கொண்டு தகவல்களை
பெறலாம். மீண்டும் அடுத்தவாரம் புண்ணியம்
தேடி பயணத்தில் வேறொரு திருக்கோவிலில் இருந்து சந்திக்கலாம்.
நன்றி! வணக்கம்!
இறைவியிடம் ராஜி வாங்கிய வரத்தினை இங்கு போய் படிச்சுப் பாருங்க.