வெள்ளி, நவம்பர் 04, 2011

திருப்பரங்குன்றம்-ஒன்றாம் படைவீடு


எங்க வீட்டுல எல்லாருக்குமே முருகர்தான் இஷ்ட தெய்வம். நான் சின்ன பிள்ளையா இருந்தப்ப  என் அப்பா அடிக்கடி முருகர் கதை, அவரோட கோயில்கள் பற்றிலாம் கதை கதையா சொல்வார். அது இப்போ என் பிள்ளைகளுக்கும் தொடருது. ஆனால், இன்னிய வரைக்கும் என் பிள்ளைகளுக்கு  அறுபடை வீடுகளை வரிசைப்படுத்தி சொல்ல தெரியாது(ம்க்கும் உனக்கு மட்டும் தெரியுமாக்கும்ன்னு யாராவது கமெண்ட் போட்டால் ரொம்ப கோவமா தெரியாதுனு சொல்லிப்புடுவேன் ஆமாம்.) அதனால், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் மற்றும் என்னை போல உள்ளவங்களுக்கும் உபயோகப்படட்டும்னுதான் அறுபடைவீடுகள் பற்றி எனக்கு தெரிந்ததையும், நெட்டுல கொஞ்சம் சுட்டும் (கொஞ்சமான்னும் யாரும் கேட்க கூடாது) இந்த பதிவை போடலாமின்னு தோணுச்சு. 
வெள்ளிக்கிழமை இனி ஆன்மீகப் பதிவு போடலாம்ன்னு ஒரு ஐடியா. யாரும் என்னை பார்த்து காப்பி , பேஸ்ட் பதிவான்னு கேட்ககூடாது இப்பவே சொல்லிப்புட்டேன் ஆமாம்..

இந்த வாரம் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தை பற்றி பார்க்கலாம். இங்குதான் முருகர், தெய்வானையை மணந்ததாக கூறப்படுகிறது. 
                
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி  
உற்சவர்: சண்முகர் , தெய்வானை
 ல விருட்சம்: கல்லத்தி 
தீர்த்தம்: லட்சுமி தீர்த்தம், சரவணபொய்கை உட்பட 11 தீர்த்தங்கள் 
புராணகால பெயர்: தென்பரங்குன்றம், சத்தியகிரி, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரிபரம்சினம், கந்தமாதனம், கந்த மலை  
தற்போதைய பெயர் : திருப்பரங்குன்றம் .
அமைவிடம்: சங்கம் வளர்த்த மதுரையிலிருந்து தென் மேற்கில் 9கிலோமீட்டரில் இருக்கின்றது.
 மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
பாடியவர்கள்:நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
                 
தல சிறப்பு:
அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர். இந்த குன்றானது சிவலிங்க வடிவில் காணப்படுவதால் சிவப்பெருமானே குன்று வடிவில் அருள் புரிவதாக எண்ணி வழிப்படுகின்றனர். மலையின் உயரம் சுமா180 மீட்டராகும்.
சுவாமி தரிசனம் தரும் நேரம்:
 காலை 5.30 மணி முதல் 1 மணி வரை,  மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
தல பெருமை:
திருமண கோலத்தில் முருகன்: அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு, தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். முருகன் குடவரை மூர்த்தியாக இருப்பதால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.
புரட்டாசியில் வேலுக்கு அபிஷேகம் : திருப்பரங்குன்றம் முருகன் குடைவறைக் கோயிலில் உள்ளதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கும். புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.
அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன், இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது
வெள்ளை மயில் : மயில்களை அதற்குரிய இயல்பான நிறத்தில்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், திருப்பரங்குன்றம் கோயிலில், வெள்ளை நிற மயில்களைக் காணலாம். சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெண்ணிற மயில் வடிவில் வசிப்பதாக ஐதீகம்.
பிரகாரம் இல்லாத சிவதலம்:
பொதுவாக கோயில்களில் சுவாமியைச் சுற்றி பிரகாரங்களும், பரிவார தேவதைகளும் இருக்கும். ஆனால், திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும். பிள்ளையார்பட்டி குடவறைக்கோயில் என்றாலும், அங்குள்ள சிவன் சன்னதியை சுற்றிவரலாம்.
தவறுக்கு பரிகாரம்:
கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார். பிரணவ மந்திரத்தை குரு மூலமாக கற்பதுதான் முறை. தற்செயலாக முருகன் மந்திர உபதேசம் கேட்டுவிட்டாலும் அதை தவறாகவே கருதி பரிகாரத்திற்காகவும், சிவனே தனக்கு குருவாக இருந்து மந்திரம் உபதேசிக்க வேண்டுமென்றும் வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். சிவன், அவருக்கு ஒரு தைப்பூசத்தன்று காட்சி தந்து மன்னித்தார்.
இவர், சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். திருப்பரங்குன்றத்திற்கு செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
                  
கொடிமரம், ராஜகோபுரத்துடன்  துர்க்கை சன்னதி:
கோயில்களில் துர்க்கை, பரிவார தெய்வமாகவே இருப்பாள். ஆனால், திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். ஆம்! இவளது சன்னதி எதிரிலேயே கொடிரம், கோபுரம் இருக்கிறது. மகிஷாசுரனை வதம் செய்த பின்பு, துர்க்கை இங்கு சிவனை வழிபட்டதோடு, ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து மனம் அமைதியடைந்தாள். சிவனும் இங்கேயே அவளை தங்கும்படி அருள் செய்தார். எனவே, இத்தலத்தில் அவளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
கோயில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை. பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்கின்றனர்.
                     
தல வரலாறு
தேவர்கள் தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் தோன்றினார். சூரனுடன் போரிட்டு அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். இந்த நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நிகழ்ந்தது. சூரனை வெற்றி கொண்ட முருகனுக்கு, இந்திரன் தனது மகளான தெய்வானை திருமணம் செய்து தர சம்மதித்தார். அவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அனைத்து தெய்வங்கள், தேவர்கள், மகரிஷிகள் என அனைவரும் வந்தனர். நாரதர் முன்னிலையில் முருகன், தெய்வானை திருமணம் நடந்தது. இதேகோலத்தில் சுவாமி இங்கு எழுந்தருளினார். சுவாமிக்கு சுப்பிரமணியசுவாமி என்ற பெயர் சூட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
முருகப்பெருமான் தெய்வானையை இங்கு மணந்து கொண்ட தலம் இது என்பதால்இத்தலத்தில் திருமணம் செய்துக் கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இக்கோயிலில் மற்ற கோவில்கள் போல் சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாக மேலே.., மேலே என்று ஏறிக் கொண்டே போகவேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவது இங்கு முடியாது.
20 கருத்துகள்:

 1. எங்க ஊர் திருப்பரங்குன்றம் பற்றிய சிறப்புகளை பகிர்ந்த உங்களுக்கு நன்றி...

  நம்ம தளத்தில்:
  இந்த அதிசியத்தை நம்ப முடியுதா? படங்கள் பார்க்க...

  பதிலளிநீக்கு
 2. மதுரையில் படிக்கையில் போயிருக்கிறேன்...

  நல்ல ஸ்தலம்..உங்கள் பகிர்வும் அப்படியே...வாழ்த்துக்கள்...

  நீங்கள் கேட்ட விவரம்


  http://vazhai.org/support.aspx

  பதிலளிநீக்கு
 3. திருப்பரங்குன்றம் பற்றிய பல விஷயங்கள் எனக்கு புதிதாக இருக்கிறது நன்றி ராஜி...!!!

  பதிலளிநீக்கு
 4. தினமும் மாடியில் இருந்து மலையை
  தரிசிக்கிற தூரத்தில்தான் இருக்கிறேன்
  ஆயினும் இத்தனை அருமையான தகவலகள் தெரியாது
  அருமையாக தொகுத்துத் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 4

  பதிலளிநீக்கு
 5. திருப்பரங்குன்றம் பற்றிய தகவல்கள்
  தொகுத்த விதம் அருமை..!

  தொடரட்டும் உங்கள் பொன்னான
  பணி..!

  பதிலளிநீக்கு
 6. திருப்பரங்குன்றம் பற்றிய தகவல்கள் நன்று. தொடருங்கள் மற்ற அறுபடை வீடுகள் பற்றிய தகவல்களை....

  பதிலளிநீக்கு
 7. நல்ல தொகுப்பு.. நிறைய செய்திகள் அதுவும் எங்க ஊர் கோவிலை பற்றி.. நன்றி

  அறுபடை வீடுகள் வரிசைப்படி
  ௧. திருப்பரங்குன்றம்
  ௨. திருச்செந்தூர்
  ௩. பழனி
  ௪. சுவாமிமலை
  ௫. திருத்தணி
  ௬. பழமுதிர்சோலை (அழகர் கோவில் மதுரை)

  பதிலளிநீக்கு
 8. திருப்பரங்குன்றம் பற்றிய தகவல்கள்
  தொகுத்த விதம் அருமை..!

  தொடரட்டும் உங்கள் பொன்னான
  பணி..!

  பதிலளிநீக்கு
 9. திருப்பரங்குன்றத்தைப் பற்றிய அருமையான பதிவு.
  இந்த கோவிலில் தக்ஷிணாமூர்த்தி மிகவும் விசேஷம். இவரை தரிசித்தால் உடல்நலம் பெறலாம். எனக்கு வாழ்க்கையில், உடல்நலனில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த அருமையான, என்னை பெரிதும் ஈர்த்த ஸ்தலம்.
  முயற்சி செய்தால் இந்த ஸ்தலத்தைப் பற்றி நிறைய எழுதலாம். மற்றவர்களும் முயற்சிக்கலாம்.
  மிக்க நன்றி. மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. அற்புதமான தலவரலாறு..

  அத்தனை தகவல்களும் அசத்தலாக கெர்டுத்துள்ளீர்..

  பகிர்வுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 11. திருப்பரங்குன்றம் பற்றிய அரிய அருமையான தகவல்கள் தெரிந்துகொண்டேன்.மீதி கோவில்களை பற்றியும் படிக்க ஆவலாக இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 12. ஒரே இடத்தில் சிவன், முருகன், துர்க்கை,பெருமாள், அனவரது சன்னதியும் அருகருகே இருப்பது விஷேசம், தரிசன இடம் மூலவர் அருகே வரை இருப்பதால், முருகப்பெருமானின் முக அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம், குழந்தை முகம் போல் அவ்வளவு அழகாக இருக்கும்!

  நல்லதொரு ஆன்மீக பதிவு!

  பதிலளிநீக்கு
 13. ஏதாவது பாவம் செஞ்சீங்களா? திடீர்னு ஆன்மீகப்பதிவு?

  பதிலளிநீக்கு
 14. வெங்கட் கூறியது...

  திருப்பரங்குன்றம் பற்றிய தகவல்கள்
  தொகுத்த விதம் அருமை..!

  தொடரட்டும் உங்கள் பொன்னான
  பணி..!

  ஹா ஹா ஹா செம

  பதிலளிநீக்கு
 15. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

  திருப்பரங்குன்றம் பற்றிய தகவல்கள்
  தொகுத்த விதம் அருமை..!

  தொடரட்டும் உங்கள் பொன்னான
  பணி..!

  காப்பி பெஸ்ட் சாரி காபி பேஸ்ட் கமெண்ட்டர் வாழ்க

  பதிலளிநீக்கு
 16. ராஜி தங்களின் இந்தப்பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன்,நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.

  பதிலளிநீக்கு