Friday, November 27, 2015

பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோவில் - புண்ணியம் தேடி பயணம்

நேத்து ராத்திரி கே.ஆர்.விஜயா சாரி  அம்மன் என் கனவுல வந்து உள்ளூர் ஆட்டக்காரனுக்கு மரியாதை குறைவு”ன்னு சொல்வாங்க!. அதுப்போல எங்கயோ இருக்குற கோவில் பத்திலாம் எழுதுற! . ஆனா, வீட்டுல இருந்து 12 கிமீ தூரத்துல இருக்குற என்னை  பத்தி எழுதலையேன்னு சூலத்தால கண்ணை குத்த வந்துச்சு.

ஆத்தா! பச்சையம்மா! நான் ஒரு பிரபல பதிவர். அதனால, பதிவு எழுத, போட்டோ அட்டாச் பண்ண, மத்த பிளாக்குல போய் கமெண்ட் போடன்னு ஆயிரம் வேலை இருக்கு. அதுக்கு கண்ணு ரொம்ப அவசியம் வேணும். நாளைக்கு எழுந்ததும் முதல் வேலையா உன்னை பத்தியே பதிவா போட்டுடுறேன்ன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் சூலத்தை கீழ போட்டாங்க கே.ஆர்.விஜயா சாரி அம்மன் சாமி.

இனி, பதிவுக்குள் போகலாம்...,

                                                    
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணில இருந்து சரியா 12 கிமீ தூரத்துல இருக்கு வாழைப்பந்தல்”. ஆரணில இருந்து அரை மணிக்கு ஒருதரம் பஸ் இருக்கு. ஆட்டோவுலயும் போகலாம். ஆனா, உங்க ஒரு நாள் சம்பளத்தை முழுசா கொடுக்க வேண்டி வரும். ஏன்னா, ரோடு அத்தனை மோசம்.

வேலூர், காஞ்சிபுரம், செய்யாறு ல இருந்து வாழைப்பந்தலுக்கு பஸ் இருக்கு. அது இல்லாம, செய்யாறு டூ ஆரணி ரோடுல மாம்பாக்கத்துல இறங்கி, அங்கிருந்து வாழைப்பந்தல் பஸ் ஏறி வரனும். வாழைப்பந்தல் ஊருல இருந்து 2 கிமீ தூரத்துல இருக்கு. “பச்சையம்மன்” கோவில். வாழைப்பந்தல்ன்னு புராணத்துல இருந்தாலும் முனுகப்பட்டு ஊராட்சிக்குள் இக்கோவில் இருக்குறதால முனுகப்பட்டு பச்சையம்மன் கோவில்ன்னும் சொல்வாங்க.


அம்மான்னா அன்பு, அறிவு, ஆனந்தம், அமுதம், ஆற்றல். அச்சமின்மைன்னு பல அர்த்தம் வருது. அம்மாக்கு அம்மா யார்? பாட்டி. பாட்டியோட அம்மா? அந்த அம்மாக்கு அம்மா?! அந்த ஆதி யார்? அது தான் இயற்கை. இயற்கை வனப்பின் நிறம் பச்சை. பசுமை நிறம் கண்ணுக்கு குளிர்ச்சி, மனதிற்கு வலிமைன்னு இன்றைய ஆராய்ச்சியாளர்களே ஒத்துக்கிட்டு இருக்காங்க. அப்படி பெருமை வாய்ந்த பச்சை நிறத்தில் அருள் பாலிக்கும் அன்னையின் பெயர்தான் “பச்சையம்மன்”.


இனி, ஏதோ எனக்கு தெரிஞ்ச தல வரலாறு பார்க்கலாம்....

பிருங்கி என்னும் மாமுனிவர் தீவிர சிவன் பக்தர்.  தேவர்கள், முனிவர்கள், பார்வதி சகிதமாய் கைலாயத்தில் இருக்கும்போது பிருங்கி முனிவர், சிவனை மட்டும் வலம் வந்து வழிப்பட்டு சென்றார். இதைக்கண்ட சிவசக்தியான பார்வதி தேவி, ஐயனே! இதென்ன நியாயம்?! எல்லாம் அறிந்த மாமுனிவரே நம்மை பிரித்து வணங்கலாமா?! அவர் மீண்டும் இத்தவறை செய்யாமல் இருக்க தங்கள் உடலில் சரிபாதி எனக்கு வேண்டும் என சிவப்பெருமானிடம் அன்னை வேண்டினார். 



இதற்கு சிவன் மறுக்க, எப்படியும் சிவனின் உடலில் சரி பாதி பிடிக்க வேண்டும் என வைராக்கியம் கொண்டு, அன்னை சிவனைப் பிரிந்து தவம் செய்ய பூலோகத்துக்கு வந்து தவம் செய்ய சரியான இடத்தை தேடி அலைந்த போது.....,

பசுமையான வாழை, அதன் கன்றுகளோடு வனப்பாகவும், வளமாகவும் தன் இனத்தோடு சேர்ந்து கூட்டுக்குடும்பமாய் இருக்கும் தோட்டத்தில் மண்ணால் ஆன சிவலிங்கத்தை கண்டதும் இதுவே சரியான இடம் என அன்னை உணர்ந்து, வாழை இலைகளால் பந்தலிட்டு, பூஜையை தொடங்க நீரைத் தேடினார்...,


ஆனால், சிவப்பெருமானோ தன் திருவிளையாடலை இந்த இடத்தில் தொடங்கினார். பசுமையான வாழைத்தோட்டத்தில் உள்ள  நீர் நிலைகள், நீர் ஊற்றுகளையும் மறைத்து வைத்து விளையாடினார். மன உளைச்சலில் இருந்த அன்னை, சிவப்பெருமானின் விளையாட்டை உணராமல், தன் புதல்வர்களான விவேகமே உருவான விநாயகரையும், வீரத்தின் பிறப்பிடமான முருகனையும் அழைத்து பூஜைக்கு நீர் கொண்டு வரச் சொன்னார்.

                 
தந்தையின் விளையாட்டை உணராத புதல்வர்களும் அன்னையின் கட்டளைப்ப்படி நீரை தேடி, மூத்தவர் கிழக்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு பாகத்துக்கு வந்தார், அங்கே ஒரு முனிவர் தன் கமண்டல் நீர் சிவனின் பூஜைக்கு மட்டுமே என்று நீண்ட நாட்களாக தவம் செய்வதை உணர்ந்து தன் வாகனமான மூஞ்சூரை அனுப்பி கமண்டலத்தில் உள்ள நீரை கவிழ்க்க செய்தார், அந்த நீர் கமண்டல  நதியாக பெருக்கெடுத்து அன்னையை நோக்கி ஓடியது. 

 இளையவரோ! எங்கு தேடியும் நீர் கிடைக்காததால் தன் வீர வேலை வீசி மலையை குடைந்து ஒரு ஆற்றை உருவாக்கினார். குழந்தை வடிவில் இருந்து முருகன் உருவாக்கிய நதி “சேய் ஆறாக மாறி அன்னையை நோக்கி ஓடியது.


நீண்ட நேரமாகியும் நீர் கொண்டு வர சென்ற புதல்வர்களை காணாமல் அன்னையுடன் இருந்த நாகம்மா கிழக்கு தொடர்ச்சி மலையிலிருந்து நீரூற்றைக் கொண்டு வர, ”நாக நதி”யாக மாறி அன்னையை தேடி அதுவும் ஓடியது.

நீர் கொண்டு வரச் சென்றவர்களை காணவில்லையே என கவலைக்கொண்டு குறித்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டுமே என்று பூமாதேவியை வேண்டி சிறு குச்சியால் பூமியை தோண்ட ஊற்று பீறிட்டு வரவும், கணபதியின் கமண்டல நதியும், முருகனின் “சேய் ஆறும், நாகம்மாவின் “நாக நதியும், அன்னையின் பாதத்தை தழுவியது. எங்கே குறித்த நேரத்தில் பூஜை செய்ய முடியாமல் போகுமோ என்ற எண்ணத்தில் இருந்த அன்னையின் திருமேனி திரிவேணி சங்கமத்தால் உடலும், உள்ளமும் குளிர்ந்து சிவந்த நிற மேனி மாறி பச்சை நிறமானது. அன்னையும் குறித்த நேரத்தில் பூஜையை முடித்தார். தேவர்களும், முனிவர்களும் அன்னையின் நிலைக்கண்டு பூமாரி பொழிந்து  வாழ்த்தினர்.

    

வானவர் மனம் மகிழ்ந்ததால் பெரு மழை பெய்தது. மழை நீரால் எங்கே மண்ணால் செய்த லிங்கத்துக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சிய அன்னை, சிவலிங்கத்தை கட்டி அணைத்து மழைநீரை தன்மீது தாங்கினாள். அன்னையின் பிடியை தாளாத சிவப்பெருமான் “மண்ணாதீஸ்வரா”க காட்சி அளித்ததாக சொல்லப்படுகிறது.


இதனை அறிந்த அசுரர்கள் அன்னையின் தவத்தை குலைக்க பல வழிகளில் முயற்சி செய்தனர். அதனால், தேவர்களும், முனிவர்களும் சிவன், விஷ்னுவிடம் சென்று முறையிட்டனர். சிவன் “வாமுனியாகவும்.., விஷ்னு “செம்முனியாகவும் அவதாரம் எடுத்து காத்ததாக சொல்லப்படுகிறது.

இக்கோவிலில் அமைந்துள்ள அம்மனின் திருவுருவம் வைரம் பாய்ந்த மரத்தால் ஆனது.  அன்னையின் தியான ஜோதியாய் விளங்கும் விக்ரகம் மனித பிறவியில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும். 

அன்னைக்கு தவத்தின் போது உதவிய சப்தரிஷிகள் 7 பேர் சிலைகளும்....,
 

காவல் புரிந்த அஷ்ட திக்கு பாலகர்களின் சிலைகளும் வண்ண மயத்துடன் கண்கொள்ளாக் காட்சியாய் விளங்குகிறது. 

 
ஐராவதம் என அழைக்கப்படும் யானையின் சிலையும், 

 தேவேந்திரனின் தவக்கோல சிலையும் இங்கே அமைந்திருக்கு. 


கோவிலின் வெளியில் காவல் தெய்வமாக விளங்கும் வாமுனி(சிவன்) செமுனி(விஷ்னு) சிலைகள் கோபுர கவசத்தில் இருப்பது இதன் சிறப்பு. 

புது வாகனத்துக்கு பூஜை, திருஷ்டி கழிப்பு, உயிர் பலி  இதெல்லாம் இங்கதான் நடக்கும். திருஷ்டி கழிப்புக்காக உடைக்கும் தேங்காயை தரையில் உடைக்காம கோபுர சுவற்றில்தான் உடைக்கனும்.

ஆலயம் இப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது, கோவில சுற்றி சிமெண்ட் தரை, மேலே கூரை என புத்தம் புது பொலிவுடன் அழகுற மிளிர போகின்றது.


சுத்து வட்டார ஊர் மக்களுக்கு பெரும்பாலும் இதுதான் குல தெய்வம். குழந்தைக்கும் முதல் முடி காணிக்கை, காது குத்துலாம் இங்கதான் நடத்துவாங்க. நாங்க போய் இருக்கும்போது ஒரு குடும்பத்து குழந்தைகளுக்கு காது குத்து விழா. 
 

பொங்கல் வைக்க கோவில் நிர்வாகம் தனியா இடம் ஒதுக்கி மேடை கட்டி வெச்சிருந்தாலும் எப்பவும் போல நம்ம ஆளுங்க அங்கங்கே பொங்கல் வைக்குறாங்க. 

 

பெரும்பாலும் திங்கள், வெள்ளிக்கிழமைல கூட்டம் அலைமோதும். சில ஞாயிறு அன்னிக்கும் எதாவது காது குத்து போன்ற நிகழ்ச்சிகள் இருக்கும். அவங்கவங்க வசதிக்கு ஏத்த மாதிரி மண்டபம்லாம் இருக்கு. ஆனாலும், மரத்தடிகளில் அடுப்பை மூட்டி பிரியாணி, சுக்கா வறுவல், கொழம்புன்னு செஞ்சு பரிமாறுவாங்க. சுத்திலும் சுமாரான ஹோட்டல் இருக்கு. எதுவுமே சாப்பிட  கொண்டு போகலைன்னாலும், இதுப்போல சமைக்குற கோஷ்டி சாப்பிடுறீங்களா?!ன்னு கேட்டு கேட்டு பரிமாறுவாங்க. 

நான் போனது புதன் கிழமை என்பதால, கடைத்தெருலாம் ”ராஜி மண்டைக்குள்ள காலியா இருக்குற மாதிரி” ஜில்லோன்னு இருக்கு. திங்கள், வெள்ளின்னு வந்தால் கூட்டம் அலைமோதும். அசைவம் அகப்படும் இடம் என்பதால் முக்கியமான ஆண்கள் கடை இருக்கு. ஆனா, என்னாலதான் படம் எடுக்க முடியலை.



வேண்டுதலுக்காக உடலில் வேப்பிலை சேலை உடுத்துறது, தீச்சட்டி எடுப்பது, எலுமிச்சை பழம் உடம்பில் குத்தி நேர்த்திக்கடனை செலுத்துவாங்க.  நான் போகும்போது அப்படி இரு சிறுவர்கள் எலுமிச்சை குத்தி பூந்தேர் இழுத்தாங்க. 


விரதமிருக்க திங்கள் கிழமை சிவனுக்கும்,  அம்மனுக்கு வெள்ளிக்கிழமை உகந்த நாள்ன்னு சொல்வாங்க. ஆனா, சிவன் வேறில்லை, சக்தி வேறில்லைன்னு சொல்லுற மாதிரி இந்த கோவில் மட்டும் திங்கள் கிழமை அம்மனுக்கு உகந்த நாள். அன்னிக்கு கோவிலில் கூட்டம் அலைமோதும். அதுலயும் ஆடி மாத 5திங்களும், ஆவணி மாத 4 திங்களும் சேர்ந்து 9 திங்கள் பூஜைக்கு வெளிநாட்டில் இருந்துலாம் கூட வருவாங்க. 

மேலும் அதிக தகவலுக்கு: T.குமார் குருக்கள், 
தொடர்புக்கு: 04182- 244373
9444896937

அடுத்த வாரம் மீண்டும் வேற கோவிலுக்கு போகலாம். இப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ட்டா?! 

11 comments:

  1. ஸ்தலபுரானமும் கோவில் படங்களும் அருமை, தொடரட்டும் உங்கள் புண்ணியம் தேடி பயணம்.

    ReplyDelete
  2. தல வரலாறு, படங்கள் அனைத்தும் அருமை சகோதரி...

    ReplyDelete
  3. படங்களுடன் கோவில் வரலாற்றைச் சொன்ன விதம் அருமை அக்கா...

    ReplyDelete
  4. ///நேத்து ராத்திரி கே.ஆர்.விஜயா சாரி அம்மன் என் கனவுல வந்து ”உள்ளூர் ஆட்டக்காரனுக்கு மரியாதை குறைவு”ன்னு சொல்வாங்க!. அதுப்போல எங்கயோ இருக்குற கோவில் பத்திலாம் எழுதுற! . ஆனா, வீட்டுல இருந்து 12 கிமீ தூரத்துல இருக்குற என்னை பத்தி எழுதலையேன்னு சூலத்தால கண்ணை குத்த வந்துச்சு.///
    ஆகா

    ReplyDelete
  5. வரலாறும் அதை சொன்ன விதமும் அருமை

    ReplyDelete
  6. அருமை.

    இதே பிருங்கி முனிவர் சம்பந்தப் பட்ட கோவில் ஒன்று எங்கள் ஊரிலும் இருக்கிறது!

    தம +1

    ReplyDelete
  7. // அசைவம் அகப்படும் இடம் என்பதால் முக்கியமான ஆண்கள் கடை இருக்கு. ஆனா, என்னாலதான் படம் எடுக்க முடியலை// படிச்சவுடனே சிரிப்பை அடக்க முடியலை... கோவில் ரொம்ப அழகா இருக்கு..
    கண்ணை குத்தாமயா விட்டுச்சு சாமி??

    ReplyDelete
  8. புதியதகவல்...அறிந்துகொண்டோம்...

    ReplyDelete
  9. அருமை ஐயா

    ReplyDelete
  10. கோயிலின் உள்பகுதியில் உற்சவ மூர்த்திக்கு(இடதுபுறத்தில்) சிறப்பு அபிஷேகம் செய்ய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.விசேஷ நாட்களில் குடும்பமாக அமர்ந்து கண்டு களிக்கலாம்

    ReplyDelete