Friday, December 20, 2013

சொர்ணாகர்ஷன கிரிவலம் 3- புண்ணியம் தேடி ஒரு பயணம்


சொர்ணாகர்ஷன கிரிவலம் பற்றியும், அப்படி வரும்போது இடையில் வரும் கோவில்கள் பற்றியும் கடந்த இரு வாரங்களா பார்த்து வருகிறோம். பார்க்காதவங்க ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுங்க. சொர்ணாகர்ஷன கிரிவலம் 1,, சொர்ணாகர்ஷன கிரிவலம் 2 .  பார்க்காதவங்கலாம் போய் பார்த்துட்டு வந்தாச்சா! இனி கிரிவலம் போலாமா!?

ரொம்ப நேரமா ரெஸ்ட் எடுத்துட்டோம். வாங்க! எல்லோரும் வேகமா நடக்கிறாங்க. நாம உட்கார்ந்து இருந்ததால அவங்க ரொம்ப தொலைவுல போய்ட்டாங்க. சீக்கிரம் நடந்து அவங்களோடு சேர்ந்துக்கலாம்.  சரி, போற வழியில இங்க ஒரு அர்த்தநாரீஸ்வரர் கோவில் இருக்கு. வாங்க அதையும் கும்பிட்டு விட்டு போலாம். பார்க்க ரொம்ப அழகா வடிவமைச்சு இருக்காங்க. நான் ரொம்ப நாளைக்கு முன்ன கிரிவலம் வந்த போது இவ்வளவு கோவில்கள் இல்ல, இப்ப நிறைய கோவில்கள் இருக்கு.

இங்க ஒரு முனீஸ்வரன் கோவில் இருக்கு. அதன் வெளியே குதிரை சிலைகள் இருக்கு. கோவில் திறக்கும் நேரம் தெரியலை. வாங்க! வெளில நின்னு கும்பிட்டுட்டு போலாம்.

அடுத்து நாம பார்க்கப்போறது வாயு லிங்கம். கிரிவலப் பாதையில் ஆறாவதா இருக்கும் லிங்கம் வாயுலிங்கம். இது வாயு பகவானால் நிறுவப்பட்டதா சொல்லப்படுது. இதன் அருகே வாயுத்தீர்த்தம் இருக்கு. இதன் திசை வட மேற்கு திசை. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேது. வாயு பகவான் சுழிமுனையில் சுவாசத்தை நிலைக்கொள்ளச் செய்தவாறு கிரிவலம் வந்தார். அப்பஅடி அண்ணாமலையை தாண்டியதும் ஓரிடத்தில் நறுமணம் வீசியது. அங்கபஞ்சக் கிருத்தியச் செடியின் பூக்கள் பூத்த நேரத்துல சுயம்புவாக வாயுலிங்கம் உருவானது.

இந்த வாயு லிங்கத்தை வழிப்பட்டா சுவாசம் சம்பந்தமான நோய்களும்இதயம் சம்பந்தமான நோய்களும் நீங்கும். பெண்களுக்கு நலமும்மன நிம்மதியும் தரும். கண் திருஷ்டி போகும். வயிறு சம்மந்தமான நோய்கள் உள்ளிட்ட நோய்கள் வராமல் வாழலாம்ன்னு நம்பப்படுது.

கிரிவலப் பாதையில் அடுத்து பார்க்கப்போவது சந்திரலிங்கம். இந்த ஆலயம் பாழடைந்து காணப்பட்டதால இந்த லிங்கம் ஆலயத்தினுள் சுமார் 50 வருடங்களாக இருந்ததாம். இப்ப இடிபாடுகளைலாம் அகற்றி மீண்டும் புனரமைத்து வருகின்றனர். அதையும் தரிசனம் செய்துட்டு அடுத்த லிங்கமான குபேர லிங்கத்தை தரிசனம் செய்யலாம் வாங்க.

இந்த கிரிவலமே குபேர கிரிவலம் என்பதால் குபேரனுக்கு சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.  கிரிவலப் பாதையில் 7வது லிங்கமா இருக்கு இந்த  குபேர லிங்கம். வடதிசையை நோக்கி இருக்கு இந்த குபேர லிங்கம் குருவை ஆட்சி கிரகாமாக கொண்டிருக்கு. இதன் அருகே குபேர தீர்த்தம் இருக்கு.

குபேரன் கண் மூடி தியானித்துதலைமீது கரம் குவித்துகுதிகாலால் கிரிவலம் வந்தார். அப்படி வரும்போது மகாலட்சுமியும்திருமாலும் அண்ணாமலையை சக்கரபாணி கோலத்தில் தரிசனம் செய்வதைக் கண்டார். அந்த இடத்தில் உருவான லிங்கமே குபேர லிங்கம். முறையற்ற வழியில் பணம் சேர்த்தவருக்கு பிராயசித்த ஸ்தலம் இந்த குபேர லிங்கம். குபேர சம்பத்து தரும் இடம் இது. இங்கு வழிப்பட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
அங்க சிலர் கூட்டமாய் இருந்து உபதேசம் பெற்ற்க் கொண்டிருந்தனர்.  அங்க போய் நல்லவற்றை காதார கேப்போம்ன்னு நானும் போய் உக்காந்தேன்.  அதில் எப்படி கிரிவலம் வரவேண்டும் அப்படி வரும்போது ருத்ரத்ஷம் கையில் என்ன முத்திரையில் வைத்து கிரிவலம் வரவேண்டும். மஞ்சள் நிறம் நாம் சொல்லும் மந்திர சக்தியை கிரகித்து கொள்ளும் தன்மை உடையதால் நாம் உச்சரிக்கும் மந்திரங்கள் பலமடங்கு பெருகி நம் உடலிலே திரும்பி வரும் என்றும் கோவில்கள் பத்தியும் விளக்கி கொண்டு இருந்தார். நாமும் அதை கொஞ்ச நேரம் அங்கேயே பயபக்தியுடன் கேட்டுக்கொண்டு எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும். அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவுன்னு வள்ளுவர் சொன்னதற்கேற்ப அப்பெரியவர் சொன்னதை காதில் வாங்கிக்கிட்டு அங்கிருந்து அடுத்த லிங்க தரிசனத்திற்காக சென்றோம்.  
கிரிவலப் பாதையில் குபேர லிங்கத்தை அடுத்து இடுக்கு பிள்ளையார் கோவில் அமைஞ்சிருக்கு.  இக்கோயிலுக்கு ஒரே வரிசையில் சின்னதா 3 வாசல்கள் இருக்கு.  பின்வாசல் வழியா நுழைந்து 2வது வாசலை கடந்து முதல் வாசல் வழியே வெளியே வரனும். குனிந்தபடியே நுழைந்து ஒருக்களித்தபடியேதான்  வெளியே வரமுடியும் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இந்த கோயிலுக்குள் இவ்வாறு நுழைந்து வெளியே வருபவர்களின் தலைவலிஉடல்வலிபில்லி சூனியம் போன்றவை நீங்கும்.மேலும் இந்தனுள் நுழைந்து வெளியேறிய சிலர் உடம்புக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்ததாகவும் உணர்கின்றனர்.

மேலும்குழந்தை வரம் வேண்டி கோயிலுக்குள் நுழைந்து வரும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இக்கோயில் மிகவும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருக்கு. திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் இடுக்குப்பிள்ளையாரை தரிசிக்காமல் செல்வதில்லை. ஒவ்வொரு  பௌர்ணமியன்றும் நீண்டநேரம் காத்திருந்துஇடுக்குபிள்ளையாரை தரிசித்து செல்கிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதை காணமுடியும். 
அடுத்துவருவது பஞ்சமுக தரிசனம். இந்த மலை ஈசானம்தத்புருஷம்அகோரம்வாமதேவம்சத்யோஜதம் என்னும் ஈசனின் ஐந்து முகங்களை நினைவூட்டும் பஞ்சகிரி ன்னும் சொல்வாங்க. கிரிவலம் வரும்போது ஒரு இடத்தில் இந்த ஐந்து முக தரிசனத்தைக் பார்க்கலாம். 
 கிழக்குத் திசையில் கிளம்புகையில் பார்க்கும்போது ஒன்றாய்த் தெரியும் மலையானது சுற்றும்போது இரண்டுமூன்று என்று ஆரம்பித்து முடிக்கையில் ஐந்தாய்த் தெரியும் இதுவே பஞ்சமுக தரிசனம்.இந்த தரிசனம் பார்க்கும் மேடை ஒன்றும் அங்கே குறிப்பிட்டு இருகிறாங்க   
கிரிவலத்தின் கடைசி லிங்கமான ஈசானிய லிங்கம் வடகிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. இந்த லிங்கம் ஈசானிய தேவரால் நிறுவப்பட்டதாக புராணம் சொல்லுது. மேலும் புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இதை வணங்குபவர்கள் அமைதியான வாழ்வை மேற்கொள்வதுடன்எடுத்த காரியத்தை வெற்றியுடன் நிறைவு செய்யும் ஜெயவீரர்களாகவும் இருப்பார்கள் என்று நம்பப்படுது.
இந்த லிங்கமானது மலைப்பாதையில் இருந்து சுடுகாட்டிற்கு பிரியும் தனிப்பாதையில் இருக்கு. வடகிழக்கிற்கு அதிபதியான ஈசானன் வழிப்பட்ட இந்த லிங்கத்தை வணங்குவது மட்டும் இல்லாமல் வழியில் உள்ள ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியான ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும்.
மேலும் அதிகார நந்தி எனப்படும் நந்தி பகவான் கிரிவலம் வந்தப்போ அண்ணாமலையாரின் தரிசனம் இங்க கிடைத்தது. இங்கு வழிப்பட்டால் சனித்தொல்லையிலிருந்து விடுபடலாம். சிவன் அருளை பெறவும்அனைத்துக் காரியங்களிலும் வெற்றிக் கிட்டவும் இந்த லிங்கத்தை வழிப்படலாம்.
ஈசான்ய லிங்கத்தை அடுத்து ஒரு விருபாட்ச சன்னதி இருக்கு. இங்கதான் சிவன் அம்மைக்கு காட்சி கொடுத்தாராம். அதன் அருகில் ஒரு பெரியக் குளம் காணப்படுது. அங்கே குளக்கரையில் அரசமரத்தடியில் பெரிய சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. அதன் விவரங்கள் தெரியலை. இருந்தாலும் அதையும் வணங்கி கிரிவலம் தொடர்ந்தோம்.
எதிரே நந்தியின் பெரிய திருவுருவச் சிலை இருக்கு. அது தனியாக குளத்தின் கரையில் இருக்கு. இந்தக் குளம் தீர்த்த குளமாகத்தான் இருக்கணும். ஆனா, பெயர், மற்றும் வரலாறு எதும் தெரியலை.
எல்லா லிங்கமும்  தரிசித்து முடித்தப் பின் மெயின்ரோடிற்கு வரும்போது மலைமேல்  ஒரு கோவில் இருக்கு. அதுவும் கிரிவல லிஸ்ட்ல வர்றாதால அதன்மேல் ஏறி பார்க்கலாம் ன்னு அங்க போனோம்.  அங்க பவழக் குன்று மடாலயம் ன்னு ஒரு ஆர்ச் இருக்கு. அதையும் தாண்டி தெருவழியா உள்ள போகனும்.    
அந்த பாதை படிகள் நிறைந்த ஒரு வழியில் சென்று முடிவடையுது . அதன்வழியே மேல ஏறி இந்த பவழ குன்றிற்கு போகனும்  அங்க ஒரு சிவன் கோவில் இருக்கு. அர்த்தநாரீஸ்வரர் கோவில் என அழைக்கபட்டாலும் இங்கிருக்கும் சிவனின் பெயர் பவழகிரீஸ்வரர் தாயார்  முத்தாம்பிகை. அந்த லிங்கத்தின் பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் பெரிய சிலை வடிவில் காட்சி தருகிறார்.
தாயார் சன்னதி தனியாக சிவனின் இடப்புறம் உள்ளது. வெளியே வலப்பக்கம்  விநாயகரும் இடப்பக்கம் வள்ளி தெய்வயானை சமேத முருகனும் வீற்றிருக்காங்க. அங்க ஒரு சிவத்தொண்டர் மலைமேல் மந்திரம் சொன்னால் அது 1000 மடங்காக பெருகி இறைவனை சென்று அடையும் என்று சொல்லி சிவமந்திரம் உச்சரித்து தியானத்தில் அமர்ந்து இருந்தார். நாங்க அவரை தொந்தரவு செய்யாம கோவிலை வலம் வந்தோம். அங்க நிறைய குரங்குகள் இருக்கு 
மலைமேலிருந்து பார்க்கும் போது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் கோபுரங்கள் அழகாக காட்சியளித்தது. கோவிலை சுற்றி உள்ள இடங்களும் திருவண்ணாமலை நகரத்து பிண்ணனியில் மலையே லிங்கமான திருவண்ணாமலையும் அழகாக தெரியுது. 
ரமணர் இங்கே நெடுங்காலமாக இருந்து தவ நிலையில் இருந்தாராம் அவர் இருந்த இடத்தில நாம் இப்ப இருக்கிறோம் என்று நினைக்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. புண்ணியம் தேடின்னு நாம தொடக்கி இருக்கிற இந்தபயணத்தின் அர்த்தமும் நமக்கு புரியுது  

திருக்கோவிலின் சுவரில் ரமணர் முதன்முதலில் தன் தாய்க்கு உபதேசம் செய்த  வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது. வாழ்கையின் உண்மையான தத்துவ வரிகள் இவை நம்மில் நிறையபேருக்கு இது அனுபவ பாடமாகவும் நடந்து இருக்கும் வரிகள்
கோவிலின் உள்ளே இருந்து பார்க்கும் போது நந்தி திருவண்ணாமலை ஊரின் பின்னணியில் தூரத்தில் மலைகளும் எரிகளுமாய்  அழகாக தெரிந்தது.வாங்க கீழே இரங்கி போகலாம் இன்று சனிபிரதோசம் என்பதால் நாம் சீக்கிரம் சென்று முதலாவதாக இடம்பிடித்து அதுலயும் கலந்து கொள்ளலாம்
மலையில் இருந்து இறங்கி வரும் வழியில் ஒரு கல்லில் நந்தி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது .கல்லிலே கலைவண்ணம் கண்டான் எனபது போல்  பாறையில்  அது  இணைந்து இருப்பது அழகாக இருக்கு
இதோடு கிரிவலம் முடிந்தது. கிரிவலம் ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும் அண்ணாமலையாரை தரிசிக்கனும்ன்னு ஐதீகம். கோவிலில் அண்ணாமலையாரை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் நிக்குறாங்க. 

வாங்க, நாமும் போய் அண்ணாமலையாரையும், கோவிலின் அழகையும் கண்ணாற காண்போம். திருவண்ணாமலை கோவில் பற்றிய சிறப்புகளை அடுத்த வாரம் புண்ணியம் தேடி போற பயணத்துல பார்த்து கிரிவலத்தை முடிச்சுக்கலாம்!


5 comments:

  1. அருமையான படங்களுடன் விளக்கம் மிகவும் சிறப்பு சகோதரி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஒரு கிரிவலத்தின் மகிமையை அழகாக ஒவ்வரு பதிவிலும் விளக்கமாக சொல்லிருகிறீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

  3. வணக்கம்!

    புண்ணியம் தேடிப் புறப்பட்ட காட்சியைக்
    கண்ணிலே கண்டான் கவி

    தமிழ்மணம் 6

    ReplyDelete
  4. கிரிவலம் போகாமலே, கிரிவலம் போய் வந்த ஒரு உணர்வை தங்களின் பதிவு அளித்து விட்டது. நன்றி சகோதரி. ஒவ்வொரு படங்களும் அதற்கான விளக்கங்களும் மிக அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமையான படங்கள். மற்றும் கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete