கார்த்திகைத் தீபம் போய் மாசமாச்சு!! இன்னிக்கு, பௌர்ணமியும் இல்ல. அப்புறம் என்ன திடீர்னு திருவண்ணாமலை கிரிவலம் பத்தி பதிவு எழுதுறேன்னு நினைகிறீங்களா!? இது சாதா கிரிவலம் இல்ல. என்னை மல்டி மில்லினியர் ஆக்கப்போற கிரிவலம். ஆமா கடந்த வாரம் சனிகிழமை 30 ம் தேதி திருவண்ணாமலைல நடந்த சொர்ணாகர்ஷண
கிரிவலம் பத்திதான் ஒரு லைவ் விசிட் புண்ணியம் தேடி போற பயணத்துல இன்னிக்குப் பார்க்கபோறோம்.
சரி கிரிவலம் கேள்விபட்டு இருக்கோம். அது என்ன சொர்ணாகர்ஷண கிரிவலம்!?
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் தேய்பிறை
சிவராத்திரியில் குபேரன் அருவ வடிவத்தில் அருணாச்சலேஸ்வரர் பெரிய கோவிலில் பிரதோஷ
பூஜையில் (பெரிய நந்திக்கு அபிஷேகம் )வழிபட்டுவிட்டு கிரிவல பாதையில் உள்ள (தான்
பிரதிக்ஷை செய்த சிவலிங்கத்தில் ) குபேர சன்னதியில் வழிபட்டு, கிரிவலம் வந்து
அதன் பின்பு திருப்பதி செல்வதாக நம்பிக்கை.
இந்த நாளில்
பெரியகோவிலில் பிரதோஷ பூஜையில் கலந்துக்கிட்டு, அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு குபேர சன்னதிக்கு வந்து குபேர லிங்கத்தை வணங்கி கிரிவலம் வருவது பொருளாதார ரீதியாக பெரிய அபிவிருத்தியை தரும் என்பது ஒரு நம்பிக்கை. அதற்காக எல்லோரும் சுத்தினா எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடும்னு இல்லை தொண்டு உள்ளத்துடன் இறைவழிபாட்டை மேற்கொண்டால் மட்டுமே சுபிக்ஷம் கிட்டும்...!!!
இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்துக்கு திரளான
பக்தர்கள் அண்ணாமலையை வந்திருந்தாங்க. நமக்கும் அழைப்பு வந்திருந்தது. பணக்க்காரியா மாற ஆசை ஒரு பக்கம் இருந்தாலும், பதிவு தேத்த ஆசைப்பட்டு போனதுதான் அதிகம்.
வாங்க! சொர்ணாகர்ஷண கிரிவலத்துல கலந்துக்கிட்டு நீங்களும் செல்வம் பெறலாம். இப்ப, திருவண்ணாமலை ன்னு அழைக்கப்படும் இந்த மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக
வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில்
மாணிக்கக் கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது
இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது. மேலும், "மலையே
லிங்க வடிவமாக இருப்பதுனாலதான் மலையை சுற்றுவது இறைவனையே சுற்றுவதற்கு சமம்" ன்னு நம்பபடுது.
இரட்டை
பிள்ளையார் கோவிலிலிருந்து, காலையில் வரும் குரு சூட்சும ஓரையில், குரு அமிர்தாதி கணத்தில் கிரிவலம் கிளம்புறாங்க. ஏன்னா கிரிவலம் செல்வதற்கு ஒரு விதி
முறை இருக்கு. எங்க வேணும்னாலும் தொடங்கி எங்க வேணும்னாலும் முடிக்கக் கூடாது. கோவிலின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம், மலையை சுற்றுவதற்கு அனுமதி
வேண்டிகொள்ளவேண்டுமாம் அதன்பிறகு கிரிவல பயணம் வெற்றிகரமா அமைய இரட்டை பிள்ளையாரை
வணங்கி, கோவில் சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து, அதன் பின்
வெளியில் வந்து ராஜ கோபுரத்தை தரிசனம் செய்து கிரிவலத்தை ஆரம்பிக்கனும்.வாங்க எல்லோரும் இரட்டை
பிள்ளையாரை வணங்கி கிரிவலம் ஆரம்பிக்க தயாராகிடாங்க நாமும் அவங்க கூட செல்வோம்
சொர்ணகர்ஷண
கிரிவலத்தின் பலன் என்னன்னு கூட வந்த பக்தரிடம் கேட்டகுக்கு,துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும்
சேர்ந்து வரும் சனிப்பிரதோஷம் அன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால்,ஐந்து வருடங்களுக்கு கிரிவலம் சென்றதற்கான
பலன்கள் கிடைக்கும். மேலும், சனிப்பிரதோஷ
நேரத்தில், பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டு,பிரதோஷ நேரம் நிறைவடைந்த பின்னர் அண்ணாமலையாரை தரிசனம்
செய்தால் ஐந்து வருடங்களுக்கு தினமும் அண்ணாமலையாரை தரிசனம் செய்த புண்ணியம்
கிடைக்கும் என்பதை கும்பமுனி என்னும்
சித்தர் தனது பாடல்களில் எழுதி இருக்கிறாராம்.
சுவாதி நட்சத்திரமும்,
சனிப்பிரதோஷமும் சேர்ந்து வருவது பல
ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்கும் அற்புத நிகழ்வு. அத்துடன் துவாதசி திதியும் சேர்ந்து வருவது சில
நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வருமாம். அதையே சொர்ணகர்ஷண கிரிவலநாள்ன்னு அண்ணாமலை ஏடு சொல்கிறது. இப்படியே, நாம பேசிக்கிட்டு இருந்தா நம்மோடு வந்தவங்க நம்மை விட்டு கூட்டத்துல காணாம போய்டுவாங்க. அவர்களுடன் அண்ணாமலையானே போற்றி ன்னு உச்சரித்துக்கிட்டே கிரிவலம் நடப்போம். வாங்க!!
இக்கோவிலின் சிறப்பம்சம் என்னன்னா, 66 அடி
உயரம் கொண்ட கோவிலின் கோபுரம். இது பதிமூன்று அடுக்குகளை கொண்டு பிரம்மாண்டமாக
உருவாக்கப்பட்டிருக்கு. இத்துடன் ஏழு பிரகாரங்கள் மற்றும் ஒன்பது அழகான கோபுரங்கள்
இருக்கு. பதினைந்தாம் நூற்றாண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட இக்கோபுரம்
உயரத்தில் இரண்டாவது கோபுரமாகும். கிழக்குப்புறம் உள்ள கோபுரம்
ராஜகோபுரம் என அழைக்கப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோயில் 25 ஏக்கர்
நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஏழு
பிரகாரத்தில் முதல் இரண்டு பிரகாரங்கள் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. மற்ற
ஐந்து பிரகாரங்கள் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.இக்கோயிலில் இரண்டு தெப்பகுளங்கள் இருக்கு. இவை பிரம்ம தீர்த்தம் என்று சிவகங்கா தீர்த்தம் என்றும் அழைக்கப்படுது.
மேலும், இங்கு ஓர் பிரம்மாண்டமான ஆயிரம் தூண்கள் கொண்ட அழகான மண்டபம் இருக்கு. இவை
அக்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டப்பட்டது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில்
ஆட்சி புரிந்த ஹோசலா மன்னர்களால் இங்கு இருக்கும் சில சன்னதிகள் மற்றும்
பிரகாரங்கள் கட்டப்பட்டது.
மேல பார்த்த படம் பழைய ஆல்பங்களில்
இருந்து எடுக்கப்பட்டது இந்த கோபுரங்கள் எல்லாம் இப்ப இல்லை. சரி, நம் பயணத்திற்கு வருவோம். விஜய நகரை ஆண்ட மன்னர் கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலை
கோயில் வளர்ச்சிக்காக கோபுரங்கள்,
மண்டபங்கள் என பல கட்டிடங்களை
கட்டிக்கொடுத்து உதவியுள்ளார்.இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம் மன்னர்
கிருஷ்ணதேவராயர் உதவியால் உருவாக்கப்பட்டது மேலும் சிவனடியார் இங்கு அக்னி
வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு உண்டு
இன்றைய அண்ணாமலைப் பகுதியில்
அக்காலத்தில் போரூர் என்ற கிராமம் இருந்ததாம் ;இந்த கிராமத்தில் நெசவு சமுதாயத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்
தனகாந்தன்+பொன்னம்மாள் தம்பதியருக்கு சுபக்கிரகங்கள் சுபமான இடத்தில் வலுப்பெற்று
நின்றபோது, சிவாம்சத்துடன் ஒரு ஆண்
குழந்தை கி.பி.1403 ஆம் ஆண்டில்
பிறந்ததாம். பெயர் தனகாந்தன் வயது அதிகரிக்க,அதிகரிக்க யாருடைய உபதேசமும் இல்லாமல் வேத மந்திரங்களைப்
பாடத் தொடங்கினான் தனகாந்தன். தினமும் மந்தார இலையில் யாசகம் பெற்று, ஒவ்வொருவருக்குமே அண்ணாமலையின் பெருமைகளை விவரித்து, ஐந்து வயதில் அண்ணாமலையாரை எப்படி வழிபட்டால்,அவர்களின் அனைத்து பிரச்னைகளும்,கர்மவினைகளும் தீரும்
என்று உரைக்கத் துவங்கினார்.
இந்த உலகத்தில் இருக்கும்
அனைத்து செல்வ வளங்களையும் படைத்து, அதை காக்கும் சக்தி ஈஸ்வரனுக்கு மட்டுமே உண்டு என்று தனது தந்தைக்கு உபதேசித்திருக்கிறான். தனகாந்தன் ஐந்து வயது முதல் 16வயது வரையிலும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆறு வேளைகளிலும் ஆறுமுறை
கிரிவலம் வந்திருக்கிறான். கூடவே,ஏராளமானவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த
குறிப்பிட்ட நாளில் கிரிவலத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறான்.
ஒரே ஒரு முறை கிரிவலம் வந்தவர்கள் கூட தமது
துயரங்கள் நீங்கி, வளமான வாழ்வை அடைந்தனர். அவ்வாறு கிரிவலம் வரும்போது சிவசக்தி ஜீவ ஐக்கிய தரிசனம் செய்யும் இடத்தில்
நின்று நீண்டநேர பிரார்த்தனை செய்து கி.பி.1419 ஆம் ஆண்டில் அதே
இடத்தில் இருந்து அண்ணாமலையை நோக்கி ஒளி வடிவில் பயணித்து இரண்டற
கலந்திருக்கிறான் தனகாந்தன். அந்த நாளே
கார்த்திகை மாதம் வரும் சனிப்பிரதோஷமும்,அபிஜித் நேரமும் கூடிய
சுபயோக சுபவேளை ஆகும். தனகாந்தன் என்ற சதாசிவ பரமேஸ்வர சித்தருக்கு ஜீவசமாதி கிடையாது . பேசிகிட்டே நாம இப்ப தெற்கு கோபுர வாசல் வந்துட்டோம்.
இந்த கிரிவலம் பத்தி மேலும் சில
தகவல்கள் உண்டு. பார்வதி தேவியார் சிவனின் இடபாகம் பெற வேண்டி, தன் பரிவாரங்களுடன் கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தில் மலை வலம் வந்தாராம். அப்பொழுது சிவன் காட்சி கொடுத்து உமையாளுக்கு தன் இடப்பாகம் கொடுத்தார் எனபது வரலாறு. கூடுதல் தகவலாக நம்முடைய மன செயல்களுக்கு அதிபதி சந்திரனாம். இந்த பௌணமி நாளில்
சந்திரன் சூரியனிடமிருந்து அதிகபடியான சக்தியை
கொடுப்பதால் பௌர்ணமியில் மலை வலம் வருவது நல்லது என்றும் அறிவியலாளர்கள் சொல்றாங்க.
மலை சுற்றும் பாதையில் உள்ள
நந்திகேஸ்வரர் சன்னதியை வணங்கி விட்டுதான் மலை சுற்ற வேண்டும். மலையின் எட்டு திசைகளிலும் அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்ட லிங்கங்களில், மலையை சுற்றும் போது முதலில் வருவது இந்திரலிங்கம். கிரிவலம் செல்லும் வழியில்
முதன்முதலில் நாம் தரிசிக்க போவது இந்திரலிங்கம்.
இந்த லிங்கம் கிழக்கு திசையை
பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இது தேவர்களின் தலைவன் இந்திரதேவனால்
நிறுவப்பட்டதா சொல்றாங்க. சூர்யன் மற்றும் சந்திரன்
ஆட்சியில் இந்த லிங்கம் இருக்கு.
தேவர்களின் தலைவனான இந்திரன் தன் பதவியை நிலை நிறுத்திக் கொள்ள திருவண்ணாமலையில்
அங்கப் பிரதட்சனம் செய்துள்ளார். அப்படி வரும்போது கிழக்கு திசையில் ஒரு இடத்தில்
வரும்போது ஒரு இடத்தில் மின்னல் வெட்டியுள்ளது அப்போது அண்ணாமலையாரின் திருஅருள்
என்பதை அறிந்த இந்திரன் தனது பதவி நிலைக்க சிவனிடம் வேண்டினார்.
அப்போ, இந்திரனுக்கு சுயம்பு லிங்கமா சிவன் காட்சி அளிச்சிருக்கார். அதுதான் இப்போ
நாம கும்பிடுற இந்திர லிங்கத்தின் வரலாறு. இந்திர லிங்கத்தை வழிப்பட்டா திருமகளின்
அருள் கிடைக்கும். செல்வம் பெருகும், பதவி உயர்வு, பணி மாற்றம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும்
கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது இதன் எதிரே கிழக்கே இந்திர தீர்த்தமும் உள்ளது .
அடுத்து வருவது அக்னிலிங்கம்.
கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் இரண்டாவது லிங்கம். இதைக் கடந்ததும், நகர்ப்பகுதி முடிவடைந்து மலையும், காடும் சூழ்ந்த பகுதி துவங்கும். கிரிவலம்
வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். கிரிவலப் பாதையில் ரெண்டாவதாகவும்,
இடதுப் புறத்திலயும் இருப்பதுதான் அக்னி
லிங்கம். தென் கிழக்கு திசையை நோக்கி
இருக்கு இந்த லிங்கம். பஞ்சப் பூதங்களில் அக்னி ஸ்தலமே திருவண்ணாமலைன்றதால இந்த
லிங்கத்துக்கு தனி இடம்.
கிரிவலப் பாதையில் 3 ருத்ர மூர்த்திகள் அங்கப் பிரதட்சணம்
செய்தனர். அவர்க்ளின் திருமேனிகள் ஜோதியாய் மாறியது. ஒரு செவ்வாய்க்கிழமை மூவரும் கிரிவலம் வந்தப்போ ஒரு இடத்தில் பனிமலைப் போன்ற குளிர்ச்சியை உணர்ந்தனர்.
ஆச்சர்யத்துடன் சாஷ்டங்கமாய் ருத்ரமூர்த்திகள் பணிந்த இடமே இப்போதைய அக்னி
லிங்கம். இதுவும் சுயம்பு லிங்கமே. இந்த லிங்கத்தை வழிப்பட்டால் நோய்கள் நீங்கும், பயம், எதிரிகள் தொல்லை நீங்கும். கற்பு, சத்தியம், தர்மம் அனைத்தையும் காக்கும் வல்லமை கொண்டது
இந்த அக்னி லிங்கம். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு
ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன்.
மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும்
சக்தியுள்ளது என நம்புகிறார்கள்.
இங்கிருந்து எட்டாவது லிங்கமான(தற்போது
ஒன்பதாவது! சில ஆண்டுகளுக்கு முன்பு குபேர லிங்கத்திற்கு சற்று முன்பாக ஒரு
வயல்வெளியில் சந்திர லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது) ஈசான லிங்கம்
வரையிலும் சாலையோரம் அமைந்திருக்கும் முட்புதர்களில் நவதானியங்களையும்
கற்கண்டுகளையும் தூவி சென்றனர் பக்தர்கள். அதற்கான விளக்கம் கேட்டதற்கு, நவக்கிரகங்களின்
கதிர்வீச்சுக்களை ஈர்க்கும் ஆற்றல் நவதானியங்களுக்கு இருக்கின்றது. நமது கைகள்
பட்டு நவதானியங்களை அண்ணாமலை கிரிவலப் பாதையில் தூவுவதால் அவைகள் நமது ஜாதகப்படி இருக்கும் கிரக
தோஷங்களுடன் கிரிவலப்பாதையின் ஓரங்களில் மழை பொழிந்ததும் முளைக்கத் துவங்கும். அவ்வாறு
முளைக்கத் துவங்கியதுமே, நம்மைப் பிடித்திருந்த கிரகதோஷங்களை நாம் தூவியிருந்த நவதானியங்கள் வாங்கிக் கொள்ளும்; நம் தினசரி வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள்
தீரும் என்றார். டயமண்ட் கற்கண்டு தூவுவதால் அதை எறும்புகள் எடுத்து சென்று பத்திரபடுத்தி
சாப்பிடும்போது அது பல நாட்கள் அவற்றிக்கு உணவாக வருவதினால் தினசரி அன்னதானம்
பண்ணுகிற பலனை பெறலாம்ன்னும் சொன்னார். அதை ஒரு சிறுவன் அக்னி லிங்க சன்னதிக்கு பின்னே இருக்கிற
மரங்களில் தூவுகின்றான். இந்த லிங்கத்துக்கு தென் கிழக்கில் அக்னி தீர்த்தம் அருகே உள்ளது.
அடுத்து மூன்றாவதாக அமைந்துள்ள எமலிங்கம் செல்லும் வழியில் அமைந்து இருக்கிறது சத்குரு சேஷாத்ரி ஆஸ்ரமம். மகத்தான
சக்தியுடன் கேட்டவர்க்கு கேட்டவரம் தரவல்லது. இங்கே 22க்கு மேற்பட்ட சித்தர்கள் ஜீவசமாதியடைந்துள்ளனர். .இவரது துணைவியார்
அன்னை உமாதேவி இங்கே ஜீவசமாதியடைந்துள்ளார். இவர் 30 ஆண்டுகள் கடும் தவம் இயற்றியவராம். அதன் காரணமாக
அண்ணாமலையார் தாயார் உண்ணாமலை அம்மன் அருள் பெற்றவர். இதனால் எல்லா
கடவுள்களிடமும் மாகான்களிடமும் சூட்சுமமாக பேசும் ஆற்றல் கொண்டவராக இருந்தாராம். . இதனால் ஆயிரகணக்கான பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி திருமணம்
ஆகதவர்களுக்கும், தோஷ நிவாரணம் செய்பவர்களுக்கும் பரிகாரம் சொல்லி நிவர்த்தி
செய்து அருளாட்சி செய்திருக்கிறார். இங்கு இன்னும் அருபமாக இருந்து அருள் பாலிக்கிறார். ஆகவே பக்தர்கள் தங்கள்
கோரிக்கைகளை ஒரு பேப்பரில் எழுதி இங்கே இருக்கும் மரத்தில் கட்டிவிட்டு
செல்கின்றனர்.
அடுத்து கிரிவலபாதையில் வருவது
எல்லை காளியம்மன். இங்க பலரும் சூடம் ஏற்றியும், எலுமிச்சை பழம் சாத்தியும்
வழிபாடு செயதனர் அருகே ஒரு நவகிரக பீடமும்
இருக்கு.
அதே வரிசையில் அடுத்து வருவது
ரமணாஷ்ரமம். இங்க ரமணர் ஜீவசமாதியடைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அருகே
அவரது புகைப்படங்கள் சொற்பொழிவுகள், அவரது தத்துவங்கள், அவர் உபயோகித பொருட்கள்லாம் காட்சிக்கு
வச்சு இருக்காங்க. அங்க ஒரு கோவில் இருக்கு. அதன் உள் பிரகாரத்தில் ரமணருடைய பெரிய
சிலை உட்கார்ந்த நிலையில் வச்சு இருக்காங்க. அதையும் தாண்டி போனா அவருடைய ஜீவ சமாதி இருக்கு. ரஜினியும், இளையராஜாவும் ரமணர் அவர்களின் சீடர்கள். நேரம் கிடைக்கும்போது மாறுவேடத்தில் கிரிவலம் வர்றாங்க.
நாங்க போன நேரம் பூஜைகளும், பிரார்தனைகளும்
நடைபெற்றன கிரிவலம் சென்றவங்களும் ஏற்கனவே அங்கே தங்கி இருந்த பக்தர்களும் அந்த
மண்டபத்தில் உட்கார்ந்து அமைதியா பிரார்த்தனை செய்துட்டு இருந்தாங்க. வாங்க நாமளும்
கொஞ்ச நேரம் மன அமைதிக்காக அங்க பிரார்த்தனை செய்வோம்.
அடுத்து வருவது திரௌபதி அம்மன்
கோவில். தூரத்திலிருந்து பார்பதற்கு அழகாக இருக்கு. ஆனா அங்கே செல்லும்
பாதைலாம் நம்ம மக்கள் கெடுத்து வச்சு இருக்காங்க. அதனால அங்கேயும் நல்லது
நடக்கட்டும் என்று கிவலம் சென்றவர்கள் நவதானியங்களையும் கற்கண்டுகளையும்
தூவிவிட்டு சென்றனர்..நாமும் அவர்கள் பின்னே போலாம் வாங்க.
அடுத்து போகிற வழியில ஒரு சிம்ம
தீர்த்தம் இருக்கு நிறைய சாதுக்கள் அதில
குளிச்சுகிட்டு இருந்தாங்க. அங்க கரையில் இருக்குற சிம்மத்தின் உருவம் கம்பீரமா
இருந்துச்சு மலையில் இருந்து தண்ணீர் இந்த தீர்த்திற்கு வரது மாதிரி அமைப்பு செஞ்சு இருக்காங்க.
தீர்த்தத்திற்கு அருகில்
தட்சிணாமூர்த்தி உருவ சிலை பிரம்மாண்டம்மா இருக்கு. எல்லோரும் அதில் சூடம் ஏற்றி
வழிபட்டு, கிரிவலத்தை தொடர்ந்தனர். அடுத்து நாம பார்க்க போறது எமலிங்கம்.
கேக்கவே பயமா இருக்கும் எமலிங்கத்தைப் பத்தி அடுத்த வாரம் புண்ணியம் தேடிப் போற பயணத்துல பார்ப்போம்.
நாங்க எல்லாம் பெரும்பாலும் ராத்திரி நேரம் கிவலம் செல்வதால் சில இடங்கள் பார்க்க முடிவதில்லை ஆனா உங்க போடோக்கள் பிரமாதம் வர்ணனைகளும் அருமை ..
ReplyDeleteமால மூணு மணிக்கு கிரிவலம் தொடங்குனா முக்கியமான இடங்களை நல்ல வெளிச்சத்துல பார்த்துடலாம்ங்க அமிர்தா. இப்ப பனிக்காலம்ங்குறதால பகல் நேரத்துலயும் அதிகமா வெயில் உறைக்காது. அடுத்த பௌர்ணமிக்கு பகல் நேரத்துல கிரிவலம் வர முயற்சி செய்து பாருங்க!
DeleteFantastic Post. Beautifully described along with the photos. Enjoyed a lot. Sitting here, I felt I have done a mini girivalam. Please keep it up.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
DeleteUmadeviyar Sheshatriswamil's shishyai.Swamikal Pramasari Sridhar
DeletePhotos and ghirivalam description is excellent.
I need to take a print out of this so that it will be useful in case I do a girivalam in days to come.
ReplyDelete2011,2012 இரண்டு வருடமும் இந்த கிரிவலம் போய்ட்டு வந்தாச்சு. பணக்காரி ஆகியாச்சான்னு கேக்க கூடாது.அது ரகசியம்..
ReplyDeleteஇவ்வளவு விரிவான விளக்கமான தகவலுக்கு நன்றி... படங்களும் அருமை...
ReplyDelete// தொண்டு உள்ளத்துடன் இறைவழிபாட்டை மேற்கொண்டால் மட்டுமே சுபிக்ஷம் கிட்டும்... //
நல்லது சகோதரி... வாழ்த்துக்கள்...
நல்ல பகிர்வு. கிரிவலம் வருகின்றோம். அழகிய படங்கள் .
ReplyDeleteஅண்ணாமலையார்,ரமண ஆச்சிரமம் தர்சித்திருக்கிறேன். கிரிவலம் செல்லவில்லை.
திருவண்ணாமலை சென்றிருக்கிறேன். ஆனால் கிரிவலம் செய்ததில்லை.
ReplyDeleteஅதுவும் இந்த சொர்ணாஷன கிரிவலம் பற்றிய செய்தி உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி .
அருமையான விளக்கப்பகிர்வு நன்றி பகிர்வுக்கு கிரிவலம் பார்க்கஆசை அண்ணாமையார் அருளட்டும்.
ReplyDeleteநான் இதுவரை போனதில்லை
ReplyDeleteபோகவேண்டும் என ஆர்வமிருக்கிறது
தங்கள் பதிவு நல்ல வழிகாட்டுப் பதிவாக உள்ளது
தொடர்ந்து வருகிறோம்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
அருமையான விளக்கப் பதிவு...
ReplyDeleteஅருமையான விளக்கங்கள்......
ReplyDeleteஇரு முறை கிரிவலம் வந்திருக்கிறேன்! - ஒரு முறை சைக்கிளில், இன்னுமொரு முறை அலுவலக வாகனத்தில்! :)
த.ம. 9
அருமையான, பயனுள்ள பகிர்வு!
ReplyDeleteசித்தர்களின் நேரடி தரிசனம் கிடைக்கும.
ReplyDeleteபடங்களும் வர்ணனையும் அருமை
ReplyDeleteஐயா குபேர கிரி வலம் பற்றிய வரலாற்று சுவடுகல் வேன்டும்
ReplyDelete