ஆணுக்கு பெண் சளைத்தவலல்ல! என்பதை ஆன்மீகத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கு. பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் இன்றைக்கு நாம பார்க்கப்போறது ஒரு பெண் சித்தரை பற்றி... ஸ்ரீகுருசாமி அம்மையார் ஜீவசமாதி. இவரின் ஜீவசமாதி பாண்டிச்சேரி - விழுப்புரம் தேசிய
நெடுஞ்சாலையில் உள்ள கண்டமங்கலம் என்னும் ஊரில் இருக்கு..
கடந்தவாரம் 25 ஆண்டுகள் மண்ணுக்குள் இருந்தும் உடல் கெடாமல் இருந்த ஸ்ரீராமபரதேசி சித்தரின் ஜீவசமாதியை பத்தி பார்த்தோம். இந்த வாரம் நாம
பார்க்கப்போறது ஒரு பெண்சித்தரின் ஜீவ சமாதியினை... குருசாமி அம்மையாரின் ஜீவசமாதி பாண்டிச்சேரி - விழுப்புரம் தேசிய
நெடுஞ்சாலையில் உள்ள கண்டமங்கலம் என்னும் ஊரில்
அமைந்திருக்கிறது. கண்டமங்கலத்தில் பிரதான சாலையிலேயே உள்ள சமரச சுத்த சன்மார்க்க நிலைய வளாகத்தில் இவரது ஜீவசமாதி
இருக்கு. பிரதான சாலை ஒட்டி ஜீவசமாதி அமைந்திருந்தாலும், ஜீவசமாதி அமைந்திருக்கும் இடம் பச்சைபசேலென இயற்கை எழிலோடு
காணப்படுகிறது. பாண்டிச்சேரியில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாது வெளியூரில்
இருப்பவர்களுக்கும் அருள்பாலித்து வாழ்ந்து வந்த பெண் சித்தரின் பெயர் ஊர் எதுவும்
யாருக்கும் சரிவர தெரியவில்லை. 1890-ல் இருந்து 1895 வரை இந்தப் பகுதியில் குருசாமி
அம்மையார் இந்த இடத்தில் வசித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டைன்ற ஊரில் 24-ம்தேதி ஜூன் மாசம் 1901-ம் ஆண்டு பிறந்த நடராஜன் என்பவர் இளம் வயதிலேயே துறவறம் மேற்கொண்டு, திருவண்ணாமலைக்கு செல்கின்றார். அங்கே அவருக்கு ஆன்ம ஞானம்
தெளிவடைகிறது. அவர் பல்வேறு தலங்களுக்கு
பாதயாத்திரையாக சென்றார். அவ்வாறு செல்லும்போது புதுவையை வந்தடைகின்றார். சித்தானந்த சுவாமி ஜீவசமாதியை அடைந்து அங்கு தரிசனம் செய்கின்றார். அப்பொழுது அங்கு குருசாமி அம்மையார் ஜீவசமாதிக்கு வா ஒரு அசரீரி கேட்கிறது. அங்கிருக்கும்
எல்லோரிடமும் குருசாமி அம்மையாருடைய சமாதியை பற்றி கேட்கின்றார். யாருக்கும் சரியான
விவரம் தெரியவில்லை. அவரது
உள்ளுணர்வுக்குக் கிடைத்த குறிப்புகளைக் கொண்டு விழுப்புரம் சாலையில் அரியூர்
பகுதி வந்ததும், ஏதோ ஒரு குறிப்பு கிடைக்க, அப்படி நின்ற இடத்தில ஒரு புதர் மட்டுமே இருக்கிறது. உடனே, இங்குதான் கனவில் வந்த குருசாமி அம்மையார் சமாதி இருக்கவேண்டும் என அந்த புதர்மண்டிய இடத்தில்
அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தார் நடராஜர். அப்படி அவர் யோகத்தில் ஆழ்ந்த இடத்திலிருந்த புதருக்குள்தான் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி புதையுண்டு கிடந்தது. தியானத்தின்போது நடராஜருக்கு குருசாமி அம்மையார் காட்சி
கொடுத்து, நான் இங்கேதான் குடி கொண்டிருக்கிறேன் என்று சொல்ல...
சட்டென்று தியானம் கலைந்து எழுந்தார் நடராஜர். பரபரவென்று அந்த முள் புதரை
அகற்றினார். அங்கு அம்மையாரின் ஜீவசமாதி இருப்பதாய் கண்டு ஆனந்தமடைந்தார். பின்னர் சமாதிக்கு விளக்கு ஏற்றி சமரச சுத்த சன்மார்க்கத்தை
நிறுவி அன்னதானத்தினை மேற்கொண்டார்.
(மகான் ஸ்ரீ நடராஜ சுவாமிகள்)
இந்தியா சுகந்திரம்
பெறுவதற்கு போராடிக் கொண்டிருந்த காலக்கட்டமது. தமிழக மற்றும் பிரஞ்சு எல்லைகளுக்கிடையே
இவ்விடம் அமைந்தமையால், தமிழகத்திலிருந்தோ, பாண்டிச்சேரியிலிருந்து வருகின்ற பக்தர்களை பிரெஞ்சு
படையினர் அனுமதிக்க மறுத்தனர் ஆகையால் சமாதி கவனிப்பாரற்று போனது. குருசாமி
அம்மையாரின் ஜீவ சமாதி, சுதந்திர காலத்துக்குமுன் - அதாவது 1947-க்கு முன் முறையான
பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்ததாம். மேலே சொன்னபடி இரண்டு மாநிலத்துக்கும் இது
எல்லையாக அமைந்தமையால், இந்த ஜீவசமாதி அமைந்துள்ள இடத்துக்கு அருகே புதுவை
எல்லையில் பிரெஞ்சுப் படையும், தமிழக எல்லையில் பிரிட்டிஷ் படையும் தனது வீரர்களை
நிறுத்திக் காவல் காத்து வந்ததாம். எனவே, இரண்டு படைகளும் நிரந்தர முகாமிட்டிருக்கும் இடத்துக்கு
அருகே உள்ள குருசாமி அம்மையார் ஜீவசமாதி எவருக்கும் புலப்படவில்லை. இந்தப் பகுதி
வழியாகப் பயணிப்போர் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று இங்கே அமர்ந்தாலும், அவர்களை விரட்டி
விடுவார்கள் இரண்டு படையினரும். காரணம் - போராட்டக்காரர்களாக இருக்குமோ என்கிற
சந்தேகத்தில் எவரையும் இதன் அருகே நெருங்க விட மாட்டார்களாம்.
தமிழகப் பகுதிக்கு ஒரு வழியாக சுதந்திரம் கிடைத்த பின்னும், பிரெஞ்சுக் குடியரசின் ஒரு பகுதியாகவே புதுவைப் பிரதேசம்
தொடர்ந்து வந்தது. எனவே, குருசாமி
அம்மையாரின் ஜீவசமாதியை தரிசிக்க வரும் பக்தர்களை, பிரெஞ்சுப் படைகள் சந்தேகக் கண்கொண்டே பார்க்க ஆரம்பித்தது.
எங்கே, தமிழகம் மாதிரி தங்களது கட்டுப்பாட்டில் உள்ள புதுவைப்
பிரதேசத்திலும் ஏதேனும் கலகம் விளைவித்து விடுவார்களோ என பிரெஞ்சுப் படை
பயந்தது. அப்போது பிரெஞ்சு-பிரிட்டிஷ் படையினரின் எதிர்ப்பையும் மீறி கோவிலில்
வழிபாடு மற்றும் அன்னதானத்தினை செயல்படுத்தினார்
நடராஜர். பல்வேறு செல்வந்தர்கள் முன்பு
அம்மையாருக்கு அளித்த நிலங்களையும், சொத்துகளையும்
மீட்டார்.
அன்னைக்கு திருவுருவ சிலையை செய்ய ஆவல் கொண்ட நடராஜர், கண்டமங்கலம் காவல் ஆய்வாளரை அணுகினார்.அந்த காவல் ஆய்வாளர்
சொன்ன தகவலின்படி விருத்தாச்சலம் மங்கலம்பேட்டை என்னுமிடத்தில் அன்னையாரின் சீடர்
ஒருவர் இருக்க, அந்த சீடரை கண்டுபிடித்து தான் செய்துவரும்
தொண்டினை அவரிடம் சொல்லி அன்னையாரின் திருவுருவ புகைப்படத்தினையும் கேட்டு, அன்னையாரின் வரலாற்றையும்
கேட்டார். படத்தையும் வாங்கி வந்தார். இந்த அம்மையாரின் வரலாறு என்ன?! எந்த ஊர்?!தாய்தந்தையர்கள் யார் என்ற விவரம் யாருக்கும் தெரியாதாம்.
வடநாட்டில் இருந்து இங்கே வந்தவர் குருசாமி அம்மையார் என்பது மட்டுமே செவிவழியா வந்த செய்தி. ஆனால்
அந்த காலகட்டத்தில் இருந்த சிலர், அம்மையார்
தென் தமிழகத்தில் இருந்துதான் இந்த இடத்திற்கு வந்தார் என்றும் சொல்வதுண்டு என
இந்த அம்மையாரின் பக்தர் சொன்னதாக சொல்லப்படுகின்றது.
இந்த அம்மையார் ஓரிடத்தில் தங்காமல் கால்நடையாகப் பல பகுதிகளுக்கும் சென்றுகொண்டே
இருப்பாராம். கடைசியாக இவர் வந்து அமர்ந்தது இந்த கண்டமங்கலத்தின்தான்.
இந்த இடத்தின் சூழலும், அமைதியும்
அம்மையாருக்குப் பிடித்துப்போக.. இங்கே ஒரு மரத்தடியில் தங்கி தன் இருப்பிடமாக
ஆக்கிக்கொண்டார். சாப்பாடு என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், எந்நேரமும் தியானத்திலேயே இருப்பாராம். யாரோ ஒரு வட நாட்டுப்
பெண் சாது தங்கள் ஊருக்கு வந்து தியானத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை
அறிந்த அக்கம்பக்கத்து ஊர்க்காரர்கள், அம்மையாரிடம்
வந்து அருள் கேட்பார்களாம். தங்களுக்குள்ள மனக்குறை, வியாதி, வீட்டில்
நல்ல காரியம் நடைபெறுவதற்கு இருக்கும் தடைகள் போன்றவற்றை அம்மையாரிடம்
சொல்வார்களாம். அவர்களின் குறைகளை எல்லாம் புன்னகையுடன் கேட்டுக்கொண்டு, ஆசி புரிந்து அனுப்பி வைப்பாராம். அதன்பின் நிம்மதியுடன்
வீடு திரும்புவார்கள் பக்தர்கள். இவரை பார்ப்பவர்கள் எல்லோரும் கையெடுத்து
கும்பிட்டு செல்வார்களாம்.
.இவரிடம் வந்து ஆசி பெற்றுச்
சென்றவர்கள் அடுத்து வந்த சில நாட்களிலே தங்களது குறைகள் நீங்குவதை கண்கூடாக
கண்டனர். அதன்பிறகு அம்மையாருக்கு நன்றி தெரிவிப்பதற்க்காக இவரை
தேடிவருவார்கள். அதில் வசதி படைத்த சிலர் அம்மையாரின் தியானமும் அருட்பணியும்
தடைபடாமல் இருப்பதற்காக, ஒரு இட
வசதியை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். பெரும் நோய்களில் இருந்து
காப்பாற்றப்பட்டு நன்மையடைந்த சிலர் நிலபுலன்களையும், சில சொத்துக்களையும் அம்மையார் பெயருக்கு எழுதிக் கொடுத்து
சந்தோஷப்பட்டனர். அம்மையாரும் தன்னிடம் இருக்கும் காசைவைத்து அந்த ஊரில் இருக்கும்
ஏழைமக்களுக்கு அன்னதானம் செய்துவந்தார். அதனால் அங்கு பசியோடு இருந்த மக்களின் வயிறு
குளிர்ந்தது. அதுபோல், குருசாமி
அம்மையாரிடம் ஒரு நடைமுறை இருந்து வந்தது. அதாவது ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் க் காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்தெடுத்த விழுதை உடல் மேல் பூசிக்
கொண்டு, சற்று நேரம் ஊறிய பிறகு அருகில் உள்ள கிணற்றில் இறங்கிக்
குளிப்பது வழக்கமாம். அம்மையாரின் சமாதிக்கு அருகில் அந்தப் புனிதக்கிணறு இன்று
பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.
அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண் பக்தர்கள் சிலரே மிளகாயை
அரைத்து, அம்மையாரின் மேல் பூசிவிடுவார்களாம். இப்படி மிளகாயை அரைப்பது
இந்த மடத்திலேயே செய்ய வேண்டுமாம். வீட்டில் இருந்து மிளகாயை அரைத்து எடுத்து
வரக்கூடாது. இப்படி அரைத்துக் கொடுத்த பெண்களின் கைகளே ஜிவுஜிவுவென்று எரியும்.
அப்படி இருக்கும்போது இதை உடலில் பூசிக்கொண்டு சிரித்த முகத்துடன் அந்தப்
பெண்களுக்கு ஆசி வழங்குவாராம் அம்மையார். மிளகாய் அரைக்கும்போது பெண்கள் என்ன
பிரார்த்தித்தாலும், கூடிய
விரைவிலேயே அது நடந்துவிடும் என்பது நம்பிக்கை. உடல் முழுக்க மிளகாய் அரைத்த
விழுதுகள் அப்பி இருக்க... அதோடு அருகில் இருக்கும் கிணற்றில் இறங்கிவிடுவாராம். கிணற்றின் மேல் அவர் கால் வைப்பது தான் தெரியுமாம். அடுத்த கணம் கிணற்றுக்குள் இருப்பாராம். எப்படி இறங்குவார் என்பது எவருக்குமே தெரியாதாம்.
அங்கே நீருக்கடியில் சடை போட்ட முடி மட்டுமே தெரியுமாம் உடல் முழுக்க தண்ணீரில் மூழ்கிய நிலையில் தண்ணீருக்கடியில் தியானத்தில் மூழ்கிவிடுவாராம். கிணற்றுக்குள் இருக்கும் அம்மையாரை எவரும் எட்டிப்பார்க்கக்கூடாதாம். அப்படி ஒருமுறை எட்டிப் பார்த்த பெண்மணி, அம்மையாரைப் பார்க்கவே முடியவில்லை. அவரது தலைமுடி கிணற்றின்
நீர்ப் பரப்பு மேல் படர்ந்து இருந்தது. அவரைக் காணவில்லை என்று பய உணர்ச்சியுடன்
சொல்லி இருக்கிறார். அதுபோல் குளித்து முடித்து எப்படி மேலே ஏறி வருகிறார்
என்பதும் எவருக்கும் தெரியாது. தரைக்கு வந்தவுடன் அம்மையார் அப்படியும் இப்படியும்
திரும்பும்போது அவரது ஈரமான தலைமுடியில் இருந்து சிதறும் நீர்த்துளிகள் பலர்
மீதும் பட்டுத் தெரிக்கும். அந்த நீர்த்துளிகள் தங்கள் மேல் படாதா என்கிற
ஆர்வத்துடன் பலரும் அம்மையாரை நெருங்குவார்களாம். நீர்த்துளிகள் பட்டால் தங்கள்
குடும்பம் சிறக்கும் என்பதற்காகப் பலரும் அருகே செல்வதற்குப் போட்டி போடுவார்களாம்.
குருசாமி அம்மையார் ஒரு சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று அவர்
இருந்த மரத்தடியிலேயே ஜீவசமாதி அடைந்ததாக செவிவழியாக இன்றும் சொல்லப்படுகிறது
அதன்பிறகு அவரைப் பற்றிய சரியான தகவல் இல்லை. அச்சமாதியையும் கவனிப்பார் இல்லை. அந்த
இடம் தமிழக-புதுவை எல்லையாக இருந்தபடியால், இரு ராணுவத்தினரும் யாரையும் அப்பகுதியில்
தங்கவும் அனுமதிக்கவில்லை. அதனால், அம்மையாரின் ஜீவசமாதியையும் யாரும்
பராமரிக்க இயலாமல் போயிற்று. இன்றும் ஒவ்வொரு பௌர்ணமி தோறும் குருசாமி
அம்மையாருக்கு மிளகாய் அரைக்கும் பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறதாம்.
(ஸ்ரீ சீத்தாராம சுவாமிகள்)
குருசாமி அம்மையாரின் ஜீவசமாதியின் பூஜை செலவுகளுக்காக, நடராஜ சுவாமிகள், அம்மையாருக்கு
செல்வந்தர்கள் தானமாக கொடுத்த இடத்தில ஒரு பள்ளிக்கூடம் கட்டினார். அங்கு ஒரு
குழந்தைக்கு 20 ரூபாய்ன்ற கணக்கில் பணம் வசூலித்து, அதை பள்ளிக்கூடத்திற்கும், அம்மையாரின் ஜீவசமாதிக்கும் சேர்த்து நிர்வாகம் செய்தார். 1947-ம் ஆண்டு
முதலே அன்னைக்கான இறைபணியினை செய்துவந்த நடராஜர் தமது 70-ம்
வயதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு 22-05-1970-ம் ஆண்டு
இறைவனடி சேர்ந்தார். அவர் செய்த தொண்டுகளுக்காகவே ஆசிரம வளாகத்திலேயே சமாதி எழுப்பப்பட்டுள்ளது.
குருசாமி அன்னையாரின் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும்
சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறுகிறது. நடராஜர் சுவாமிகள் அவருக்கு ஒவ்வொரு ஆண்டும்
வைகாசி பௌர்ணமி அன்று நடைபெறுகிறது. 1970-ம் ஆண்டு நடராஜ சுவாமிகள் காலமாவதற்கு
முன்னமே அவருக்குப்பின் அத்திருக்கோவிலை தமது சீடரான சீதாராமை கொண்டு நடத்தி வர
பணித்தார். அவரும் இந்தப் பணிகளைத் தொடர்ந்து நடத்தினார். இந்த இரு அருளாளர்களின்
பெருமுயற்சியால்தான், குருசாமி அம்மையாரின்
ஜீவசமாதி பலராலும் அறியப்படும் நிலைக்கு வந்தது என்றே சொல்லலாம். இந்த இரு
அடியார்களின் சமாதிகளும் குருசாமி அம்மையாரின் ஜீவசமாதிக்கு அருகிலேயே வைக்கப்பட்டது.இன்றும் ஸ்ரீ சீத்தாராம
சுவாமிகள் வழிவந்தவர்கள் இந்த ஜீவசமாதிகோவிலை பராமரித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் குருசாமி அம்மையாரின் மூலவர்
விக்கிரகத்துக்கு மிளகாய் அரைத்து அபிஷேகம் செய்யும் வழிபாடு நடக்கிறது. இதற்காகப்
பல பெண்பக்தர்களும் இங்கு வந்து ஆலய வளாகத்திலேயே மிளகாய் அரைத்துத்
தருகிறார்கள். ஏதாவது ஒரு பிரார்த்தனையை மனதில் வைத்துக்கொண்டு, அம்மையாரின் அபிஷேகத்துக்கு மிளகாய்
அரைத்துக் கொடுத்தால், அது நிச்சயம் பலித்துவிடும்
என்கிறார்கள் வியாழக்கிழமைகளில் பால், எலுமிச்சம்பழச்சாறு கொண்டு குருசாமி அம்மையாருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அன்றைய தினத்தில்,
இந்த மடம் இன்று செயல்படுவதற்கு உறுதுணையாக இருந்து வரும் வள்ளலார்
ஆன்மிகப் பேரவை அன்னதானக் குழுவினர் இங்குவரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.
விழுப்புரத்துக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் இருக்கிறது
அரியூர்.. விழுப்புரம்-பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரியூர்
மெயின் கேட். பஸ் ஸ்டாப்பில் இறங்கிக்கொண்டால், இரண்டே நிமிட நடைதூரம். அதாவது
விழுப்புரத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவு: பாண்டியில்
இருந்து 17 கி.மீ. தொலைவு. விழுப்புரத்தில் இருந்து
பாண்டிச்சேரி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அரியூர் மெயின் கேட் நிறுத்தம்
அல்லது கண்டமங்கலம் காவல் நிலையத்தில் நின்று செல்லும். இதில் ஏதாவது ஒரு
நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம். பிரதான சாலை என்பதால்,ஏராளமான
பேருந்து வசதி உண்டு. இல்லையெனில் அடிக்கடி செல்ல ஆட்டோக்கள் வசதியும் இங்கு உண்டு.மீண்டும் வேறு ஒரு சித்தரின் ஜீவ சமாதியை பற்றி அடுத்தவாரம் பார்க்கலாம்!!.
நன்றியுடன்
ராஜி
தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.
ReplyDeleteதற்போது, தங்களது மிளகாய் விழுதை உடலில் பூசி அருள்வாக்கு சொன்ன ஸ்ரீகுருசாமி அம்மையார் ஜீவசமாதி-பாண்டிச்சேரி சித்தர்கள் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு
இந்த நிலையில், அடுத்த கட்டமாக தமிழுக்காக ஒரு அகராதியையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த அகராதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். அகராதி---->>> சொல்
எனது பதிவினை இணைத்தமைக்கு நன்றி.உங்கள் சேவைகளுக்கு பாராட்டுக்கள்.நிச்சயம் நம் எல்லா வலைப்பதிவர்களின் பங்களிப்பும் இருக்கும்.
Deleteஅறியாத புதிய தகவல் ஒன்றைத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநம் கண்களுக்கு தெரிந்தும்,அதைப்பற்றிய சரியான குறிப்புகளோ,இல்லை அதை விவரித்து சொல்ல யாருமே இல்லாமல்,பல இடங்கள் நம் அருகில் இருந்தும்,நாம் அதன் அருமை தெரியாமல் இருக்கின்றோம்.அதை போக்கவே இந்த சித்தர்கள் பற்றிய பதிவுகள்.நன்றி சகோ..
Deleteதகவல்கள் அனைத்தும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.
ReplyDeleteதொடரை தொடர்ந்து படித்துவருவதற்கு நன்றிங்க..அண்ணே,இன்னும் பல சித்தர்கள் ஜீவசமாதிகள் இந்தியா மட்டுமல்லாது,உலகம் முழுவதும்,பல்வேறு பெயர்களில்,பல்வேறு கலாச்சாரங்களில் மாறுபட்டு, சிவபரம்பொருளை இன்னமும் தியானித்துக்கொண்டு இருக்கும் பல சித்தர்களின் ஜீவசமாதிகள் உள்ளன இறையருளும் ,குருவருளும் இருந்தால் அவற்றை எல்லாம் பற்றி எழுதவேண்டும் என்று ஆசை.நன்றி.
Deleteகைவசம் நிறைய வரலாறு இருக்கு போல சகோதரி...
ReplyDeleteஎன்கைவசம் பள்ளியில் படித்த வரலாறு புக் கூட இல்லைங்க அண்ணா,அதை எடைக்கு எடை போட்டு பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிட்டாச்சு.நான் சென்ற இடத்தில கேட்டது ,பார்த்தது ,அனுபவ அறிவு இதையெல்லாம் வைத்து ஏதோ எழுதுகின்றேன்.உங்களை போல் எழுத்தமுடியுமாஅண்ணா...
Deleteபிரமாதமாக தொகுத்து எழுதுகிறீர்கள். படிக்க படிக்க ஆவலை தூண்டுகிறது! எப்பேர்பட்டவர்கள் எல்லாம் வாழ்ந்த பூமி!
ReplyDeleteநன்றி சகோ,புதுச்சேரி என்றால் இப்பொழுது எல்லோருக்கும் தெரிவது ,வரியில்லா மதுபானங்களைத்தான், ஆனால்,தவசீலர்களுக்கு ஞானத்தை வாரி வழங்கிய பூமி இந்த
Deleteபுதுச்சேரி தான்.பரம்பொருளின் அருள் பெற்ற ஒரு புண்ணிய பூமி.ஆகையால் இந்த சிறிய நிலப்பரப்பில் ஐந்நூறு
ஆண்டுகளுக்குள் சுமார் 32 க்கு மேலான சித்தர்கள் ஜீவசமாதி
அடைந்துள்ளார்கள்.அவர்கள் எல்லோரும் இங்கே பிறந்த பண்ணின் மைந்தர்கள் அல்லர்.இவ்வுலகின் எல்லா
பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கடுந்தவம் மேற்கொண்டு
இறை தரிசனம் பெற்று இறைவனோடு ஐக்கியமானவர்கள்.
புதுவையை பற்றி ஒரு தனிபாடல் இவ்வாறு
பாடப்பட்டுள்ளது;-
எத்தலம் சென்றிட்டாலும்
எத்தீர்த்தம் ஆடிட்டாலும்
இந்த சித்தர்வாழ் புதுவைபோல்
சிறந்தது ஒன்றில்லை கண்டீர்
முத்தியும் உதவும் ஞானம்
முப்பொருள் தனையும் ஈந்து
சித்தனே வந்து இங்கு
சிவகதி அடைந்தார் அன்றோ
இந்த ஒரு பாடலே அதற்கு சான்று...
புதிய தகவல்கள் ராஜி. பாண்டிச்சேரில 5 வருடம் இருந்தாலும் கேள்விப்படலை.
ReplyDeleteகீதா
பாண்டிச்சேரில 5 வருடம் இருந்திருக்கிறீங்களா,மிஸ் பண்ணிடீங்களே கீதா,எவ்வுளவு சித்தர்கள் இருக்கிறார்கள்.எங்களால் எல்லா இடங்களையும் சுற்றி பார்க்கமுடியவில்லை.நேரமின்மைதான்,உண்மையில் அந்த ஊரில் இருப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.உங்கள் ஊரில் உள்ள ஜடாயுபுரத்தில் கூட ,ஜடாயுபுரம் இராமலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையில் இருக்கும்,கிருஷ்ண சைதன்ய மடத்தில் ஒரு பெரியவர் ,இருந்து அந்தக்கோவிலுக்கு அநேக திருப்பணிகள் செய்துள்ளார்.அவருடைய சமாதியும் அங்கே இருக்கிறது.அதையும் சென்று தரிசித்தோம் .வரலாறுதான் திரட்டமுடியவில்லை.அங்கே சென்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்துவிட்டு வந்தோம்.அதைவிட புது தகவல் ,உங்கள் ஊரான புரவசேரிக்கு நீங்கள் அப்டா மார்க்கெட்டில் இருந்து,புதியதாக கட்டப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்,அதேபோல்,நீங்கள் ஒட்டாபீஸ் வழியாக செல்லவும் வேண்டாம்.திரவியம் ஹாஸ்பிடல் வழியாக செல்லும் பாதை நேரடியாகவே திருப்பதிசாரம் செல்கிறது.அங்கிருந்து ஜடாயுபுரம் செல்வது ஈசியாக இருக்கிறது.ஊருக்கு போகிறதுக்கு முன் என்கிட்ட வழி கேட்டுக்கோங்க கீதா,இல்ல இடம் தெரியாம ஒழுகினசேரி பாலம் தாண்டினபிறகு, டிரைவரிடம் 'ஆளறக்கம்' ஆளறக்கம் என பெகளம் வைக்க கூடாது கேட்டோ ..
Deleteஅடுத்த முறை பாண்டி செல்லும் போது செல்ல வேண்டும்
ReplyDeleteநிச்சயம் சென்று தரிசனம் செய்யுங்கள் சகோ,அதற்கு முன் உங்கள் பயண திட்டங்களை வகுத்துவிட்டு செல்லுங்கள்.இல்லையெனில் நிறைய சித்தர்களை நாம் தரிசிக்க நேரமில்லாமல் போகும்..
Deleteஅம்மை ஸ்வாமிகள் பற்றிய தகவலுக்கு நன்றி. அடுத்தவர்களுக்காக வாழ்ந்த எப்பேர்ப்பட்ட மகான்கள் வாழ்ந்த பூமி இது என்றுதான் எனக்கும் சொல்லத் தோன்றுகிறது.
ReplyDeleteநன்றி சகோ,புதுச்சேரியின் பழைய பெயர் ‘வேதபுரி’, ‘வேதபுரம்’இப்படித்தான் சொல்லப்பட்டிருக்கு.சென்னையும், புதுச்சேரியும் சித்தர்கள் உலாவும் புண்ணிய பூமி,எல்லா இடங்களுக்கும் சென்று தரிசிக்கவேண்டும் என்பதுதான் என் ஆவல்,இறைவன் திருவருளும்,குருவருளும் துணை நிற்கட்டும்.
Deleteஅருமையான விளக்கமான கட்டுரை ஆன்மீகப் தேடல் தொடரட்டும்
ReplyDeleteஉங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி சகோ...
Delete