சித்தர்களின் ஜீவ சமாதிகளை சில வாரங்களாக பார்த்துக்கிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இன்று ஸ்ரீராம பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி
போன வாரம் தேங்காய் சுவாமிகள் சித்தர் திருக்கோயிலை தரிசனம் செய்தோம். இந்தவாரம் நாம தரிசனம் செய்ய போற ஸ்ரீராம பரதேசி சுவாமிகளின் ஜீவசமாதி இருப்பது பாண்டிச்சேரியில் இருக்கும் வில்லியனுரில்..கடந்த வாரம் நாங்க தேங்காய் சுவாமிகள் சித்தர் ஜீவ சமாதிக்கு போகும் போதே மாலை சாய்ந்து இரவு தொடங்கிவிட்டது.அதன் பிறகு இந்த ஸ்ரீராம பரதேசி சுவாமிகளின் ஜீவசமாதிக்கு நாங்க சென்ற போது இரவுநேரம் என்பதால் அருகருகே இருக்கிற பல ஜீவசமாதிகளுக்கு பார்க்க முடியாம போனது. புதுவையில் இருக்கும் சித்தர் சமாதிகள் நமக்கு தெரிந்தது சுமார் 50 க்கும் மேல் இருக்குன்னு முன்னயே சொல்லி இருக்கேன். அதிலும் குறிப்பாக வில்லியனுர் சுற்று வட்டாரத்தில் மட்டுமே 10க்கும் மேற்பட்ட சித்தர் சமாதிகள் உள்ளன. ஆரம்பத்திலயே இது தெரிந்திருந்தால் அதுக்கு ஏத்தமாதிரி பயணத்தை திட்டமிட்டிருக்கலாம். பயணம் செல்லும்போது திட்டமிடுதல் சரியாக இருந்தால்தான் நம்மால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பார்க்க வேண்டிய இடங்களை சரிவர பார்க்கலாம். இல்லையென்றால் பலவற்றை பார்க்கமுடியாமல் பயணத்தின் நோக்கமே முழுமைப்பெறாது. வில்லியனூர் செல்லும் வழியில் சுல்தான்பேட்டை திருப்பத்தில் வலப்புறத்தில் இருக்கு இந்த ஓம் சத்குரு ஸ்ரீராமபரதேசி சுவாமிகளின் ஜீவசமாதி.
பொதுவாக சித்தர்கள் அனைவரையும் சிவபக்தர்களாகவே நமக்கு தெரியும். அதிலும் சில சித்தர் பரம்பரைகளை சில குறிப்புக்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஆனா, இந்த ராமபரதேசி சித்தரை பற்றிய ஒரு குறிப்பு உண்டு. பாற்கடலில் அமுதம் கடைந்து கொண்டிருக்கும்போது, எழுந்த ஆலகால விஷத்தை அருந்திய சிவபரம்பொருள் நீலகண்டனானார். அந்த சமயத்தில் சிவபரம்பொருள் ரூபத்தில் இருந்து பல சித்தர்கள் பூமியில் அவதரித்தனர். அப்படி அவதரித்தவர்களில் ஒருவர்தான் இந்த ராமபரதேசி சுவாமிகள் என்ற வாய்மொழி சொல்லும் உண்டு. பொதுவாகவே நம்மை வாழ்விக்க வந்த இவர்கள் பார்ப்பதற்கு பித்தர்கள் போல இருப்பாங்க. சிவத்தை ஜீவனில் உணரும்போது பித்தம் தெளிந்து சித்தம் வெளிப்படும். சிலர் குருவாக, சிலர் சத்குருவாக என வாழையடி வாழையாய் ஞானம் போதிக்க வருபவர்கள். பாண்டிச்சேரியில் இன்னும் உயிர்ப்பாக நிறைய சித்தர்களின் அருளை நம்மால் உணர முடிகின்றது. ஆகையால்தான் எங்கோ பிறந்த ராமபரதேசி சுவாமிகள் புண்ணிய பூமியாம் இந்த புதுவையை தேடி வந்துள்ளார்.
இவரது பெற்றோர்கள் யார் என தெரியாது. ஆனா இவரது தாயார் இவரின் சிறுவயதிலேயே மறைந்துவிட்டார் என்பது மாத்திரம் அறியப்பட்ட சேதி. தனது தாயாரின் மறைவுக்குப்பிறகு, இவர் சிறுவயதில் தனியாக தன் இஷ்டப்படி திரிந்து வந்தார், பாசம் என்பதே தெரியாமல், தானே வளர்ந்து வந்தார். ஒருநாள் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இவர் தன் இருப்பிடம் விட்டுக் கொஞ்சம் தூரம் காலாற நடந்து வரும்போது, அங்கு ஒரு முதியவரைச் சந்தித்தார். அந்த முதியவர் ஆசையுடன் இவரை அழைத்தார். “என்ன செய்வது எனத் தெரியாமல் இப்படிச் சுற்றிக்கொண்டு இருக்கிறாயே! என் அருகே வா! உனக்கு ஞான ஒளி கிடைக்கும் நேரம் வந்து விட்டது. உனக்குப் பரப்பிரம்ம உபதேசம் செய்கிறேன்” எனக்கூறி அவர் காதில் ஒரு மந்திரத்தை உச்சரித்தார். பின் அவர் உடல் முழுவதும் தடவினார். உச்சந்தலையில் முத்தம் கொடுத்தார், பின், “நீ பெரும் துறவியாய் வருவாய், போய் வா” என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார். எந்த ஊரிலும் தங்காமல் சித்தன் போக்கே சிவன்போக்கு என திரிந்து வந்த சுவாமிகள் வில்லியனுர் வந்து சேர்ந்தார். ரமண மகரிஷியைப்போல் அப்போது அவருக்கு பதினாலு வயதுதான். அன்றைய தினத்திலிருந்து அவர் மாறினார். வெறும் கோவணம் கட்டிக்கொண்டு பசி, தாகம் மறந்து தூக்கமில்லாமல் தியானத்தில் வெகுநேரம் அமர்ந்திருப்பாராம். அவர் ஆந்திராவிலிருந்து பாண்டிச்சேரி வரும் வழியில் ஒரு இடத்தில் கதாகாலட்சேபம் நடந்து கொண்டிருந்ததாம். அதில் ராம சரிதம் பாடிக்கொண்டிருந்ததை கேட்டு அன்றிலிருந்து ராம் ராம் என்று சொல்வாராம்.
அவரை கோகிலாம்பாள் சமேத திருக்காமேஸ்வரர் ஆட்கொண்டார். ஒரு காலத்தில் இந்த வில்லியனுர் முழுவதும் வில்வமரக் காடாக இருந்ததாம். அங்கே சுயம்புவாக ஒரு லிங்கம் தோன்றியதாம். அங்க, ஒரு பசு தினமும் வந்து அதன்மேல் பால் சுரந்து வழிபட்டதாம். பின்னர் சோழ மகாராஜா இந்தக் கோயிலைச் சிறப்பாகக் கட்டி வழிபட்டாராம். சுவாமிகளும் தமது தியான நிலைக்கு உகந்ததாக இந்த இடம் இருந்ததால் இங்கேயே தங்கினார். பக்தர்கள் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிடுவார். திருக்காமேஸ்வரர் ஆலயத்திற்கு அவர் அடிக்கடி வந்து அங்கப்பிரதட்சிணம் செய்வார். சிலசமயம் அவர் உடலே இதில் தேய்ந்துவிடுமோன்ற அளவு அங்கபிரட்சிணம் செய்துகொண்டிருப்பாராம். சுவாமிகள். எதிலும் பற்றுக்கொள்ளாது, இங்கும் அங்குமாக அலைந்து திரிந்து கொண்டிருப்பாராம். இவருக்கு பக்தர்கள் கொடுத்த ஆடைகளை அணியாமல் தூக்கியெறிந்துவிட்டு சாதாரண கோவணத்துடன் மட்டுமே திரிவாராம். கோவிலில் திண்ணையில் படுக்க செல்வாராம் ஆனால் காலையில் நடுரோட்டில் படுத்திருப்பாராம். இவருக்கு ஒன்றுமே தெரியலையேன்னு மக்கள் நினைத்து பரிதாபப்பட்டார்கள். மக்களுக்கு ஒன்றும் தெரியவில்லையேன்னு இவர் பரிதாபப்படுவாராம். இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன. மனிதனையும் அவனது தீயபேய்க் கூத்தையும் வெறுத்து ஒதுக்கினார். எப்பொழுதும் அங்குமிங்குமாகவே நடந்துக் கொண்டிருப்பாராம். இவருள் ஆத்மசக்தி வளர்ந்தது. ஆத்மஞானி. என்பவனுக்கு நண்பர், உற்றார், உறவினர்,பகைவர் என யாருமில்லை. ஆத்மஞானி என்றால் விதியை வென்றவன் என பொருள்.
சுவாமிகள் நல்ல உடல்வாகு கொண்டவர்.சுமாரான உயரம். சிவந்த மேனி தெய்வீக முக அமைப்பு, குண்டுகுண்டான கண்கள், நீண்ட தாடியும்,சடா முடியும் கொண்டவர். சிறு வயிறு, இடையில் ஒரு கோவணம், அவருடைய புருவ மத்தியில் உருண்டையாக ஒரு பொருள் சுழன்று கொண்டேயிருக்குமாம். இதுதான் அந்த நூற்றாண்டில் சுவாமிகளை கண்டவர்கள் சொன்னது. சுவாமிகளின் இயற்பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவர் ராம நாமத்தில் மிகவும் பிரியம் கொண்டவர். அதனாலாயே சதாசர்வகாலமும் “ராம் ராம் ராம்” என சொல்லிக்கொண்டேயிருப்பாராம். அதனால் இவரை “ராம் பரதேசி “ என்று மக்கள் கூப்பிட ஆரம்பித்தார்கள். இவர் சுத்த பிரம்மச்சாரி. சிவனை அடைவதற்கும், சிவ நிலை பெறுவதற்கும் பரதேசி ஆவதுதான் உயர்ந்த நிலை என்று அப்படியே பரதேசி ஆனார்.
சுவாமிகள் சித்துக்களில் வல்லவர். மக்களுக்கு தன் ஆத்மசக்தியால் அவர்களின் பெருங்குறைகளை தீர்த்து வைத்தார். அருளை வாரி வழங்கினார். சுவாமிகள் பசி எடுக்கும்போது தன் நாக்கை வெளியே நீட்டுவார். உடனே பாம்புகள் எங்கிருந்தோ வந்து தன் விஷத்தை கையில் கக்கும். அதை அப்படியே விழுங்கி விடுவார். சில சமயங்களில் நாகத்தை தூக்கி தன் நாக்கினருகில் கொண்டு செல்வார். நாவினில் நாகம் கொத்தும். அதை அப்படியே உண்பார். பாம்பின் விஷத்தை உணவாக கொள்வது இவரது வழக்கம். இதை சுற்றி இருக்கும் குழந்தைகள் ரசித்து பார்ப்பார்கள் , அவர்கள் இவருக்கு ' விஷம் தின்னி சுவாமி ' ன்ற பட்ட பெயர் வைத்தார்கள்.
சுவாமிகள் குண்டலினி யோகத்தில் வெற்றி கண்டவர். இதேப்போன்று ஓம்ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் மௌன தியானத்தை ஆத்மீக சாதனையாகக் கடைபிடித்தார். எதிர்பட்டோரின் அல்லல்களை நீக்கினார். ஜீவன்களுக்கு ஏற்படும் நோய்களை குணமாக்கினார். நெருப்பு நெருப்பை அழிக்காது. விஷம் விஷத்தை தள்ளாது. இத்தனையும் படைத்த பரம்பொருளுக்குள் யாவும் அடைக்கலம். அப்பரம்பொருளினின்று திருவருளைப் பெற்ற ஆத்மஞானியரிடம் அனைத்துலகப் பொருட்களும் சரணடைவது வழக்கம். ஆகவே அவருக்கு முதுமை பருவம் வரவில்லை. சமாதிவரை பாலகனாகவே காட்சியளித்தார். பிரணவத்தின் பேராற்றலை உணர்ந்தார். சர்வத்துக்கும் ஆதி காரணகர்த்தா ஓங்காரமே என்பதை சுவாமிகள் உணர்ந்தார்.
சுவாமிகள் தம்மை பெரும் கயிற்றால் குழந்தைகளை விட்டு கட்டச்சொல்வார். அவர்களை விட்டே வீதி வீதியாக இழுத்துச் செல்லும்படி சொல்வார். குழந்தைகள் அவ்வாறே வில்லியனூர் முழுதும் அவரை இழுத்துச் செல்லுவார்கள். பிறகு குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பார். சுவாமிகள், இவ்விடத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு அதிசயம் நடக்கப்போகிறது என சொன்னாராம். அதன்படியே, சுவாமிகள் கூறிய இடத்தில் வில்லியனூர் புகைவண்டி நிலையம் அமையப்பெற்றதாம்.சுமார் 1853-ம் ஆண்டுகளில் யாம் வந்த வேலை முடியப்போகிறது என்று சொல்லி தியான நிலையில் அமர்ந்தார்
இதனைக் கண்ட பாமரமக்கள், சுவாமிகள் இறந்து விட்டார் என தவறான முடிவிற்கு வந்து, சுவாமிகளை சமாதி நிலையிலேயே புதைத்து விட்டார்கள். அவரை புதைத்த இடம், இப்போது வில்லியனூர் புகை வண்டி நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு கொடுக்கும் இடத்திற்கு கீழேயுள்ளது. 1879-1881 ஆம் ஆண்டுகளில் வில்லியனுர் ரயில் நிலையம் அமைப்பதற்காக பூமியை தோண்டும்பொழுது ஓர் இடத்தில ரத்தம் கசிந்ததாம். அனைவரும் பயந்தோடினர். அங்கே, சுவாமிகளின் உடம்பு அழியாமல் உயிருள்ளவர்களின் உடலைப்போல் பசுமையாக இருந்ததைக் கண்டார்கள். ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து போனார்கள். அப்படியே மெதுவாக சுற்றுப்புறத்திலுள்ள மண்ணை அப்புறப்படுத்தி சுவாமியின் உடலினை மெதுவாக வெளியே தூக்கி வைத்தார்கள். இச்செய்தி ஊர்மக்களுக்கு பரவியது. பிரஞ்சு அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது. உடனே அனைவரும் அங்கு கூடினர்.ஊர் பெரியவர்கள், வயதானவர்கள் சுவாமிகளின் பெருமைகளைப் பற்றி பிரஞ்சு அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தனர். சுவாமிகளுக்கு சமாதி அமைவிக்க ஒரு இடம் ஒதுக்கி தருமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். அவ்வாறே பிரெஞ்சு அதிகாரிகளும் சுவாமிகளின் பெருமையை உணர்ந்து- தற்போதுள்ள இந்த இடத்தை ஒதுக்கி கொடுத்தனர்.என்றும் சில செவிவழிக்கதைகள் மூலம் வேறு ஒருகதையும் சொல்லப்படுகிறது.
வில்லியனுரில் ஒரு நாளைக்கு ஒரு வீடு என, ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டில் பிச்சை உணவு என முறை வைத்து சுவாமிகளுக்கு உணவு கொடுப்பார்கள். சில நாட்கள் இப்படியே சென்றபோது, ஒருநாள் உணவு உண்ணுவதை தவிர்த்துவிட்டார். இப்படியே மூன்று நாட்கள் உணவு உண்ணாமல் மெளனமாக இருந்துவிட்டாராம். இதனார்பார்த்து வருத்தப்பட்ட மக்கள், ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டபோது. அடுத்தமாதம் வரும் மே மாதத்தில் பெரும் சூறாவளிக்காற்று வீசும். அதனால், எல்லோரும் வெளியூர் சென்றுவிடுங்கள் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார், அவர் சொன்னதை அங்குள்ள மக்கள் எவரும் அப்போது நம்பலையாம். அதேசமயம் அவரது சீடர்களையும் அங்கிருந்து போக சொல்லிவிட்டார். அவர்கள் சுவாமிகளையும் தங்களுடன் வந்துவிடுமாறு அழைக்க, சுவாமிகளிடமிருந்து எந்த பதிலும் வராததால் இனியும் இங்கே இருப்பதில் எந்தவித பிரயோஜனமும் இல்லையென சீடர்கள் வெளியூர் சென்றுவிட்டனர். ராமபரதேசி சுவாமிகள் சொன்னபடி 1840-ம் ஆண்டு மிகப்பெரிய அடைமழை பெய்ய ஆரம்பித்தது. பெரிய மழையானாலும், காற்று வீசாமல், இடிமின்னல் இல்லாமல் வில்லியனுர் பகுதியில் ஒருவாரமாக மழை மட்டும் விடாமல் பெய்துகொண்டிருந்தது. ஊரே வெள்ளக்காடாக ஆகியது குடியிருப்புகள் அடித்துச்செல்லப்பட்டன. எங்கும் மரண ஓலம். அதில் யார் இறந்தார்கள் யார் பிழைத்தார்கள் என்று தெரியவில்லை. பின்னர் ஒரு வாரம் கழித்து எல்லோரையும் தேடும்போது மக்கள் இந்த மகானையும் தேடினர். அப்பொழுது இந்த மகானையும் காணவில்லை. நன்றாக தேடியும் கிடைக்காததால், அவரவர் தங்கள் வேலைகளை பார்க்கத் தொடங்கினர். அதன்பிறகு அவர் வில்லியனூர் வரவே இல்லை.மக்களும் காலப்போக்கில் அவரை மறந்தேவிட்டனர்.
வில்லியனூர் பகுதியில் வீசிய அந்த சூறாவளிக்காற்றை பற்றிய குறிப்பு அந்தக்கால பிரெஞ்சு அரசு கேஜெட்டில் இன்றும் இருக்கிறதென சொல்லப்படுகிறது. இந்நிலையில் 26 ஆண்டுகள் கழித்து வில்லியனுர் பகுதியில் அந்தக்கால பிரெஞ்ச் அரசாங்கம், இந்த சித்தர் தங்கி இருந்த இடத்தை தேர்ந்தெடுத்து கட்டடம் கட்ட மண்ணை தோண்டியபோது ஓரிடத்தில் கம்பி பட்டு இரத்தம் பீறிட்டு அடித்தது. பயந்துபோன வேலை செய்பவர்கள், பிரெஞ்ச் அரசாங்கத்திற்கு தகவல் சொல்ல, பிரெஞ்சு அரசாங்கத்தின் அதிகாரிகளும், மருத்துவர்களும் குழிதோண்டிய இடத்திற்கு வந்து மண்ணை மெதுவாக அகற்றியபோது அங்கு இந்த மகானின் உடல் இருப்பதை பார்த்தார்கள். அந்த உடல் 26 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன ராமபரதேசி சுவாமிகளின் உடல் என அங்குள்ள சில முதியவர்கள் உறுதி செய்தனர். மருத்துவர்கள் அந்த மகானின் உடலை பரிசோதனை செய்தபோது அவர் உடலில் உயிர் இருப்பது தெரியவந்தது. அவர் உதடுகள் ராம் ராம் என சொல்லிக்கொண்டே இருந்ததாம். மூன்று நாட்கள் காத்திருந்த பிரெஞ்ச் அதிகாரிகள் அந்த மகானின் உடலில் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்ததால் திருமஞ்சனம் மாட்டி பெரியஷால் ஒன்றின் மூலம் இறக்கி இப்பொழுது இருக்கிற இடத்தில சமாதி செய்விக்கப்பட்டு ஒரு சிறிய கோவிலையும் கட்டினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இருவேறு விதமான கதைகள் இருந்தாலும் சுவாமிகள் மண்ணுக்கு அடியில் 26 ஆண்டுகளுக்கு மேல் இருந்தார் என்பது மட்டும் வித்தியாசம் இல்லாமல் ஒரே வைரலாக இருக்கிறது .
இந்த ஜீவ சமாதிக்கு வந்து அவர் அருகே அமர்ந்து பிரார்த்தனை செய்தால் மன அமைதி கிடைக்கும். வியாதிகள் குணமாகும்., நினைத்த காரியம் கைகூடும்.. அவர் அங்கு வெறும் சமாதியாக மட்டும் அல்லாமல், அவர் மூச்சு விட்டு கொண்டும், நம்மை பார்த்துக்கொண்டும் இருக்கிறார். அவர் ஜீவசமாதிக்கு முன்னால் இரண்டு தூண்கள் உள்ள ஒரு கருங்கல் மண்டபம் உள்ளது. உள்ளே சென்றால் சுமார் 4 அடி உயரமுள்ள எண்கோண அமைப்பில் ஒரு மண்டபமும், அதன்கீழ் அவரின் சமாதியும் உள்ளது. மண்டபத்தினுள் சுவாமிகளின் திருவுருவம் கருங்கல்லில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைப்பவர்கள் ஒருமுறை சென்று குரு ஸ்ரீராம பரதேசி சுவாமிகள் சமாதியை வழிபடலாம்.
ஸ்ரீராம பரதேசி சுவாமிகள் சித்தர் சமாதிக்கு பாண்டிச்சேரியிலிருந்து வில்லியனுர் செல்லும் வழியில் மூலக்கடை - வில்லியனுர் ரயில் நிலையம் சென்றால் அதற்கு அருகாமையில்தான் ஸ்ரீராம பரதேசி சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது,
அடுத்தவாரம் மீண்டும் வேறு சித்தர் சமாதியிலிருந்து சந்திக்கிறேன்....
// பித்தம் தெளிந்து சித்தம் //
ReplyDeleteசிறப்பு...
அர்த்தமாய் உருமாறி உமையாள்தன் இடமேறி
Deleteதக்கநிலை கொடுத்தனவோ சொக்கன் சொக்கியே
சுயமிழந்தான் உற்றதொழில் தனை மறந்தே
நித்தமெழில் செழித்தெழவே தடை தகர்த்ததரி
பித்தனாகி சித்தனாகி சுத்தமெனும் சுடர்கொணர
அந்தமாகி அணுபந்த மாகிசந்த மியற்றுமால்
திருவென்ற உருவொன்றாய் அருகிட அருளும்
அவணியே அவனுரு கொள்வானுள் குடியாம்
என்பது தான் சிவபரம்பொருளை பாடி துதிக்கும் வரிகள்...
ஆனால் இந்நாளில் பெரும்பாலோர்...
Deleteபித்தனாகி
சித்தானாகி
புத்தனாகி
விடுவேனோ
என்இறைவா
இல்லவே இல்லை
எத்தனாகி
அரசியல்வாதியாகி
எழுதலைமுறைக்கும்
சொத்து சேர்ப்பேனே
கர்மாவை சுமப்பேனே
என்பதுதான் நவீன வரிகள்..
வியப்பாக இருக்கிறது சகோதரி
ReplyDeleteஉண்மைதான் சகோ ,ஒவ்வொரு சித்தரையும் பற்றி பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது.அவர்கள் நவீன கார்பொரேட் சாமியார்கள் போல் அல்லாமல்,தனக்கென எதுவும் இல்லாமல் ,கண்டஇடத்தில தூங்கி ,யாசகம் எடுத்து கொடுப்பதை உண்டு,சிவபரம்பொருளை மனதில் நினைத்து ,சித்தம் போக்கு சிவம் போக்கு என்று தான் வாழ்ந்து இருக்கிறாரக்ள்.அவர்களை பற்றி தெரிந்து கொள்ள நாம் என்ன புண்ணியம் செய்தோமோ ...
Deleteசுவாரஸ்யமான ஆச்சர்யமூட்டும் தகவல்கள்.
ReplyDeleteஉண்மைதான் சகோ..வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை சென்று தரிசனம் செய்யுங்கள்..
Deleteசிறப்பு.
ReplyDeleteதமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 20 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது, தங்களது 26 ஆண்டுகள் உயிருடன் மண்ணுக்குள் இருந்த ஸ்ரீராம பரதேசி சுவாமிகள்-பாண்டிச்சேரி சித்தர்கள் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
இணைத்தமைக்கு நன்றி.உங்களை போன்றவர்கள் ஊக்குவித்தால் என்னை போன்று வலைத்தளம் எழுதுபவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் நன்றி.
Deleteசிறப்பான தகவல்கள்.
ReplyDeleteவாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை அண்ணியோடு சென்று தரிசனம் செய்துவாங்க அண்ணே..
Deleteஅற்புதம்.
ReplyDeleteஆச்சர்யம் ...
Delete