ஜோதிடரீதியாக முற்பிறவியில் நாகங்களை துன்புறுத்துவதாலும், ஆண் பெண் பாம்புகள் இணைந்திருக்கும்போது அவற்றை பிரிப்பது, நாகங்களை கொன்றதாலும் ராகு-கேது தோசம் வருமாம். எங்க வீட்டுக்கு மட்டுமில்லாம தெருவில் யார் வீட்டுக்கு பாம்பு வந்தாலும் என்னைய கூப்பிட்டுதான் அடிக்க சொல்றாங்களே! நான் கொன்ன பாம்புகளின் கணக்குப்படி பார்த்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் ராகு-கேது தோசம் என்னை விடாது போல!
ராகு-கேது தோச பரிகாரத்திற்கு முன்பெல்லாம் காளஹஸ்திக்குதான் போக சொல்வாங்க. ஆனா, இப்பலாம் ஜோதிடர்கள் பரிகாரம் செய்ய
திருப்பனந்தாள், திருப்பாம்புரம், தெருநாகேஸ்வரத்திற்கு போய் வரச்சொல்றாங்க. என் பெரிய மகளின் பரிகாரத்திற்காக போன வருசம் நாங்களும் போய் வந்தோம். நிஜமாவே தோசம் கழிந்ததா?! இல்ல காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததான்னு தெரில. மகளுக்கு கல்யாணம் ஆகிட்டுது.
மனிதன் தெரிஞ்சோ தெரியாமயோ தவறு செய்தால் தோசம் வருது. தோசத்திற்கும் பரிகாரமும் இருக்கு. பாம்க்கு தீமை செய்தால் ராகு-கேது உண்டாகும். ஓகே, அந்த பாம்பே தப்பு செய்தால்?! நாரதர் கலகம் நன்மையில் முடியும்ன்ற மாதிரி பாம்பின் தவறு மனித குலத்தின் தன்னால் ஏற்படும் தோஷத்திற்கு பரிகார தலமாகியது..
ஒருமுறை வாயுதேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் யார் பெரியவர் என கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. வாயுபகவான் மேரு மலையை தூக்கி வீச, ஆதிசேஷன் வாயில் கவ்விக்கொண்டது. வாயு பகவான் பிராணவாயுவை நிறுத்த, அனைத்து உயிரினங்களும் சுவாசிக்க முடியாமல் திணறியது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். கோபங்கொண்ட சிவபெருமான் இருவரையும் தெய்வ சக்தியை இழக்கவும், பாம்பு இனமே இல்லாமல் போகவும் சாபம் விட்டார். வாயு பகவானும், ஆதிசேஷனும் சாபவிமோசனம் வேண்டி நிற்க வாயுபகவானை மதுரைக்கு அருகில் தன்னை வழிபட சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். ஆதிசேஷனுடன், ராகு-கேது, வாசுகி, தட்சன், கார்க்கோடன், சங்க பாலன், குளிகன் பத்மன், மகா பத்மன் என்னும் அஷ்டமாநாகங்கள் தங்கள் சிவராத்திரி அன்று முதலாம் சாமத்தில், கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயத்திலும், இரண்டாம் சாமத்தில் திருப்பாம்புரத்திலும், மூன்றாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் என்னும் இத்தலத்திலும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வணங்கி சாபவிமோசனம் பெற அறிவுரை கூறினார். அவ்வாறே அந்த அஷ்டமாநாகங்களும் இறைவனை வணங்கி மீண்டும் தெய்வாம்சம் கொண்டது. அஷ்டமா நாகங்கள் சிவராத்திரியில் வணங்கிய அந்த நான்கு தலங்களும் ராகு-கேது உள்ளிட்ட நாகங்களால் ஏற்படும் தோஷத்திற்கு பரிகார தலமாகியது.
ராகு கேது பரிகாரத்தலன்னு சொல்லப்பட்டாலும் இது நவக்கிரகங்களில் ஒன்றான ராகுவின் தலமாகும். ராகு பகவான் ராஜ குலத்து மன்னனுக்கும் அசுரக்குல பெண்ணுக்கும் பிறந்தவன். அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும்போது அசுரர் பக்கமிருந்தவன். பாற்கடலிலிருந்து அமிர்தம் வந்ததும், தேவர் உருக்கொண்டு மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தை வாங்கு உண்டான். இதையறிந்த தன்னிடமிருந்த கரண்டியால் அடிக்க, தலை வேறு, உடல்வேறாக விழுந்தான். அமிர்தம் உண்டதால் தலையும், உடலும் உயிர்ப்போடு இருந்தது. தவறுக்கு வருந்து மகாவிஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்க, உயிரற்ற பாம்பின தலை வேறு, உடல் வேறாக வெட்டி மனித தலையும் பாம்பு உடல் கொண்டவன் ராகு எனவும், பாம்பு தலையும், மனித உடலும் கொண்டவன் கேது எனவும், ராகுவின் நிழல் கிரகமாக கேது இருப்பான் எனவும் மகாவிஷ்ணு வாக்களித்தார்.
ஒருமுறை முனிவர் ஒருவரை தீண்டி, அவரிட்ட சாபத்தின் விளைவாக தன் சக்தியை இழந்த ராகு பகவான் இத்தலத்தில் வந்து சிவனை வணங்கி சாப விமோசனம் பெற்று தன் சக்தியை திரும்ப பெற்றதால் இது ராகுபகவானுக்குரிய தலமாக திகழ்கிறது. ராகு பகவான் சிவபக்தர். சிவனை தினமும் தரிசிக்க வேண்டி இத்தலத்திலேயே ராகு பகவான் தன் மனைவியருடன் தங்கிவிட்டார். இக்கோவிலின் இரண்டாவது பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சிம்ஹி, சித்ரலேகா ஆகிய இரு தேவியருடன் மங்கள ராகு என்ற பெயர்கொண்டு தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார். மனித தலையும், பாம்பு உடலுமாகத்தான் ராகுபகவான் காட்சியளிப்பார். இங்கு மட்டும் முழுக்க மனித உருவில் காட்சியளிப்பார். ராகுவுக்கு பிடித்தது நீல நிறம் என்பதால் இங்கு நீலநிற ஆடையும், சங்கு பூவினையும் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. மகா சிவராத்திரியின் இரண்டு ஜாமத்திலும் ராகு பகவானே தானே பூஜை செய்வதாய் ஐதீகம்.
மங்கள ராகுவிற்கு தினமும் காலை 9.30, 11.10, மாலை 5.30 மணிக்கும் தினசரி ராகுகாலத்தில் செய்யப்படும் பால் அபிஷேகத்தின்போது ராகு பகவான்மீது வழியும் பால் நீல நிறமாக காட்சியளிக்கின்றது. மந்தாரை மலர் இவருக்கு உகந்தது. 12/2/1986 நாள் ராகு பகவான்மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமொன்று, தனது சட்டையை உதிர்த்து மாலையாக ராகு பகவான்மீது போட்டு வைத்திருந்தது. அந்த பாம்பு சட்டையை பத்திரபடுத்தி கோவில் வளாகத்தினுள் கண்ணாடி பேழையில் வைத்திருப்பதை பக்தர்கள் காணலாம்.. கிரகங்களில் ராகு பகவான் யோகக்காரர் ஆவார். இவரை வணங்கிட தொழில் விருத்தி, திருமண யோகம். கல்வியில் சிறந்து விளங்குதல், பதவி உயர்வு, ஆகியவை கிட்டும். வறுமை நீங்கும்.
சுசீலர் என்ற முனிவரின் மகனான சுகர்மனை நாகர்குலத்தை சேர்ந்த தக்கன் என்ற பாம்பு தீண்டி அவன் மரணிக்க, தக்கனை மானிடனாய் பிறக்கவேண்டி சாபம் அளித்தாராம். தக்கன் காசிப முனிவரின் ஆலோசனைப்படி இந்த செண்பக காட்டிற்கு வந்தான். இங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதன் அருகில் கடுந்தவம் செய்தான் . ஆதிசேஷனின் தவத்தில் மெச்சிய சிவன் அவனுக்கு காட்சியளித்தார். நாகராஜனுக்கு காட்சியளித்ததால் இத்தலத்து மூலவருக்கு நாகநாதசுவாமி எனப்பெயர் உண்டானது. ஆதிசேஷன் உருவாக்கிய தீர்த்தம் நாக தீர்த்தம் எனப்பெயர் பெற்றது. நாகதோஷத்திற்கு பரிகாரமாக இத்தீர்த்தத்தில் நீராடி, நாகநாத சுவாமிக்கு பூஜை செய்வது வழக்கம். நாகநாதர் சுயம்பு மூர்த்தியாய் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். சித்திரை மாதம் 11,12,13 ஆகிய நாட்க ளில் மூலவர்மீது சூரிய ஒளி படும்படி சோழர்களால் கட்டப்பட்டது இக்கோவில். தேவாரப்பாடல்களில் 274 சிவத்தலங்களில் 90வது தலமாகும்..
செண்பக மரங்கள் நிறைந்திருந்த காட்டில், செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் எழுந்தருளியதால் சண்பகாரண்யேஸ்வரர் எனவும் பெயர் உண்டு. இக்கோவில் திருப்பணியில் சேக்கிழார் ஈடுபட்டுள்ளார். சென்னை குன்றத்தூரிலும் நாகநாதசுவாமிக்கு ஒரு கோவிலை எழுப்பி திருநாகேஸ்வரம் என்றே பெயர் சூட்டினார். அவரது பக்திக்கு மரியாதை செய்யும் விதமாக கோவிலில் அவர் அமர்ந்திருக்கும் வடிவில் ருத்ராட்சமும், மற்ற அணிகலன் ஏதுமின்றி காட்சியளிக்கிறார். அவரின் அருகில் அவரது தாயார் அழகாம்பிகையும், பாலராவாயரும் தனித்தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்கள்.
பிறையணிவாள் நுதல் அம்மை என்ற பெயரில் அம்பாள் வீற்றிருக்கிறாள். பிறை என்றால் சந்திரன், சந்திரனை தலையில் சூடியவாறு காட்சியளிப்பதால் இப்பெயர் பெற்றாள். இப்பெயர் வர இன்னொரு காரணமும் சொல்லப்படுது, கார்த்திகை மாத பௌர்ணமியன்று மாலையில் சந்திரனின் ஒளிரேகை அம்பாள் விழுகின்றது. இதைக்காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுமாம்.
பிறையணிவாள் நுதல் அம்மை தவிர்த்து கிரிகுஜாம்பாள் என்ற பெயரில் தனிச்சன்னிதி கொண்டு தவக்கோலத்தில் அன்னை காட்சியளிக்கின்றாள். மரக்குச்சிகளும், சுண்ணாம்பும்கொண்டு செய்யப்பட்ட சுதைசிற்பம் என்பதால் இவளுக்கு தினசரி அபிஷேகம் செய்யாமல் மார்கழி மாதத்தில் 48 நாட்கள் புனுகு சட்டம் மட்டுமே சாற்றுவது வழக்கம். அந்நாட்களில் அம்பிகையை தரிசிக்க முடியாது.
இத்திருக்கோவில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கும். மற்ற 3திசைகளிலும், கோபுரங்களையும், மூன்று பிரகாரங்களையும் கொண்டது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்ததும் நிருத்த கணபதி நம்மை வரவேற்பார். அவரை தொடர்ந்து நந்திதேவரும் நம்மை வரவேற்று ஈசனிடம் அழைத்து செல்வார்.
அதற்கடுத்து கொடிமரமும், அதனடியில் இருக்கும் கொடிமரத்து வினாயகரை வணங்கி கோவிலுக்குள் சென்றால் இடது பக்கம் சூரிய புஷ்கரணி தீர்த்தமும், புஷ்கரணி தீர்த்தக்கரையில் மழுவாயுதம் தாங்கிய வினாயகரை வணங்கி கோவிலினுள் செல்லவேண்டும். கருவறையில் கிழக்கு நாகநாதர் காட்சியளிக்கின்றார். கருவறையை சுற்றியுள்ள பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சன்னிதி, நடராஜர் சன்னிதி, நால்வர் சன்னிதிகள் வரிசையாக அமைந்திருக்கின்றது.
பரிகார பூஜைகள் தினசரி நடந்தாலும் ஞாயிறு மாலை 4.30 மணிமுதல் 6 மணி வரையிலான ராகு காலத்தில் பரிகார பூஜை செய்தால் ராகு-கேது தோஷம் நீங்கி தடைப்பட்ட திருமணம், புத்திர பாக்கியம், துர்மரணங்கள் நேராது. பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். சிவராத்திரி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கார்த்திகை பிரம்மோற்சவம்ன்னு விழாக்களுக்கு பஞ்சமில்லை. இக்கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 8.45 வரை திறந்திருக்கும். கும்பகோணம் வரை ரயிலில் வரலாம், திருச்சி வரையில் விமானத்தில் வரலாம். கும்பகோணத்திலிருந்து 6கிமீ தூரத்தில் இருப்பதால் பேருந்து, ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள் என போக்குவரத்துக்கு குறைவில்லாத கோவில்..
புண்ணியம் தேடி மீண்டும் பயணிப்போம்...
நன்றியுடன்,
ராஜி
இந்தக் கோவிலுக்கு அருகில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில்தான் எங்கள் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து அங்கிருந்து இங்கு நடந்தே வந்து வணங்கிச் சென்றோம். அப்போதெல்லாம் இந்தக் கோவில் எளிமையாகத்தான் இருந்தது.
ReplyDeleteகல்யாணம் முடிச்சதும் 6கிமீ நடக்க வச்சு என்ற மதனியை கொடுமைப்படுத்தி இருக்கீங்க! இதுக்கே அண்ணி உங்களை சண்டை இழுக்கலாம்..
Deleteமுதல் படத்தில் உள்ள குளம்தான் என் டெஸ்க்டாப்பில் உள்ள படம்! இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்றபோது நான் எடுத்த படம்!
ReplyDeleteஹலோ இது நான் எடுத்தது... போன வருசம்ன்னு தெளிவா தேதி இருக்கு பாருங்க.
Deleteஜோக்? இருந்தாலும் விளக்கம் கொடுத்துடறேன்! நானும் இந்தக் குளத்தை க்ளோஸப்பில் படம் எடுத்திருந்தேன் என்று சொல்ல வந்தேன்.
Deleteசும்மா கலாய்ச்சேன் சகோ..
Deleteவிளக்கங்கள் அருமை... அப்புறம்
ReplyDeleteபலரை காப்பாற்றி உள்ளீர்கள்... உங்களுக்கு ஏதும் பிரச்சனை வராது சகோதரி...
எனக்கு இதில்லாம் நம்பிக்கை இல்லண்ணே. அதனால் மனம் குழம்பலை..
Deleteஏம்மா தெருநாகேஸ்வரம் எங்கே இருக்கு! பதிவில் ஒரு இடத்தில் இப்படி வருதே! :)
ReplyDeleteதகவல்கள் நன்று.
ஊர் பேர் திரிந்து வேற மாதிரி ஆகுற மாதிரி திருநாகேஸ்வரம் ஒருகாலத்தில் தெருநாகேஸ்வரமாகிடும். அந்த நம்பிக்கையில்தான் டைப்ப்ப்ப்ப்.
Deleteதிருத்திடுறேன்.
பிரார்த்தனைகளுக்கு என்றுமே பலன் உண்டு.
ReplyDeleteகூடுதல் செய்திகள் (1) நாகராஜனான வாசுகியும், மற்றும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுவதைப் படித்துள்ளேன்.
(2) தமிழகத்தில் உள்ள நாகர்கோயில்களில் (பிற கோயில்கள் : கன்னியாகுமரி அருகே உள்ள நாகர்கோயில், கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் உள்ள நாகேஸ்வரன் கோயில், பேரையூர் நாகநாதசுவாமி கோயில்) இதுவும் ஒன்று.
(3) அம்மன் சன்னதி திருச்சுற்றில் இரு சமண தீர்த்தங்கரர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் உள்ளன. இவற்றுள் ஒன்று புத்தரோ என்ற ஐயம் எனக்கு உண்டு.