Saturday, May 25, 2019

மனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்

பூமியில் வாழும் கொடிய மிருகம் எதுவென கேட்டால் மலைப்பாம்பு, ராஜநாகம், காண்டாமிருகம், சிங்கம், புலி என அவரவர் மனசுப்படி சொல்வாங்க. ஆனா,   மனிதனே அந்த கொடிய மிருகம்ன்னு சொன்னா சண்டைக்கு வருவாங்க.  பூமியில் வாழும் மொத்த  உயிரினங்களில் 1 சதவிகிதம்கூட இல்லாத மனிதன் மொத்த பூமியையும் அடக்கி ஆண்டு சக உயிரினத்தை வாழ விடாமல் செய்துக்கொண்டிருக்கிறான். 

Image may contain: outdoorஇந்த பூமி தனக்கானது மட்டுமேன்னு மலை, காடு, மரம், மண், கடல், காற்று என அனைத்தையும் தன் சுயநல லாபத்துக்காக பாழ்படுத்தி மற்ற உயிர்கள் வாழ தகுதியில்லாததாய் பூமியை மாற்றிவிட்டு, மிச்சம் மீதி உயிர்த்திருக்கும் உயிர்களையும் எப்படி வதைக்குறான் பாருங்க. இதனால்தான் சொல்றேன் மனிதன் ஒரு கொடிய மிருகம்ன்னு....
நன்றியுடன்,
ராஜி

Friday, May 24, 2019

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்- புண்ணியம் தேடி


முருகன் அழகுக்கும், தமிழுக்கும் மட்டும் சொந்தக்காரனில்லை. ஞானத்துக்கும் அவன்தான்  சொந்தக்காரன். ஞானத்தை அள்ளி, அள்ளி தன் பக்தர்களுக்கு அளிப்பதால்தான்  அவனுக்கு சுப்ரமணியர் என பெயருண்டானது.  முருகனை நினைத்து பக்தியோடு வணங்குபவர்களுக்கு ஞானம் கிட்டும் என்பது அடியார்களது நம்பிக்கை. சுப்ரமணியருக்கு தமிழகத்தில் பல கோவில் இருக்கு. திருத்தணியில் அருளும் முருகனும்  சுப்ரமணியர்தான்.  

முருகன் சுப்ரமணியராக அருள்புரியும் தலங்களில் திருத்தணிகைக்கு அடுத்தபடியா புகழ் பெற்றது குன்றத்தூர் ஆகும்.  இக்கோவில் சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கு.  

போரூரில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் அழகிய குன்றின்மீதிருந்து அருள்புரிகிறான். படிகட்டின் வழியாகவும், முடியாதவர்கள் வாகனங்களில்  செல்ல தனி பாதையென இரு பாதை உள்ளது. பல படங்களில் பாடல்,சண்டைக்காட்சிகள் இங்க படமாக்கி இருக்காங்க. மெட்டி ஒலி நாடகம் இந்த ஊரில்தான் எடுத்தாங்க. 

கீழிருந்து மலைமீதிருக்கும் முருகனை அடைய 80 படிகளில் ஏறி செல்லனும்.  எப்படிடா மலை ஏறப்போறோம்?! பேசாம வண்டிலயே மேல போய் இருக்கலாமோன்னு மலைத்து நிக்குறவங்களுக்கு வழியில் இருக்கும் வலஞ்சுழி வினாயகர்தான் சீக்ரெட் ஆஃப் தி எனர்ஜி. அவர் கொடுக்கும் எனர்ஜியோடு படியேறி போனால், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கொடிமரம் நம்மை வரவேற்கும். கொடிமரத்து முன்பு சாஷ்டாங்கமா வணங்கி முருகனை தரிசிக்க செல்லலாம். கொடிமரத்துமுன் விழுந்து வணங்குவதுக்கு காரணம், கொடிமரத்துக்குமுன் பலிபீடம் இருக்கும். அங்கு நமது கோவம், பொய், களவு, காமம் மாதிரியான தீய எண்ணங்களை இறைவன்முன் பலிகொடுத்து தூயவனாகிறேன்ன்னு சொல்லாம சொல்லத்தான்....
கருவறைக்குள் நுழையும்முன்  நம்மை வரவேற்கும் துவாரபாலகர்கள் கையில் வஜ்ரம், சூலாயுதமென முருகனுக்குரிய ஆயுதங்களே உள்ளது. கருவறையில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் காட்சியளிக்கின்றான். இக்கோவிலின் சிறப்பம்சம் என்னவெனில், ஒரே நேரத்தில் தம்பதி சமேதராய் மூவரையும் வணங்குவது மிகக்கடினம். காரணம், அவ்வாறு சிலாரூபாங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  கருவறைக்கு நேராய் நின்று வணங்கினால் முருகன் மட்டுமே தெரிவார். ஒருபுறம் நின்று வணங்கும்போது வள்ளியுடன் மட்டும் முருகன் தெரிவார். அதற்கு எதிர்புறம் நின்று வணங்கினால் தெய்வானையுடன் மட்டும் முருகன் தெரியும்படி மூலவர் ரூபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

திருமணத்தடைகளை நீக்குவதில் வல்லவர் இவர். ஒரு கல்யாணத்துக்கு இரு கல்யாணம் முடிச்சவராச்சே! தொழில் நுணுக்கம் தெரியுமில்லையா?! அதனால், நேர்த்திகடனாக, இவருக்கு திருமணம் செய்து வைப்பது, வஸ்திரம் சாத்துவதுன்னு இங்க நடக்குது.  இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, காசி விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், நாகர், நவக்கிரக சன்னிதிகள்ன்னு இருக்கு. மூலவர் சன்னிதி மீதுள்ள விமானம் ‘ஷட்கோண’ அமைப்பில் அதாவது முருகனின் சடாட்சர மந்திர அலைகளுக்கு உகந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. கோவில் அமைந்துள்ள மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் அருள் தருகிறார்.

திருமணத்தை நடத்தி வைப்பவன் குழந்தை பேற்றை தரமாட்டானா?! அதுக்கும் இங்க வேண்டுதல் வைக்குறாங்க. இங்கிருக்கும் அரச மரத்தில் தொட்டில்கட்டி வேண்டிக்கிட்டா குழந்தை பேறு கிடைக்கும். அவ்வாறு வரம் கிடைக்கப்பட்டங்க குழந்தையின் எடைக்கு எடை சர்க்கரை, வெல்லம், பழம்ன்னு காணிக்கை செலுத்துறாங்க.  குழந்தைக்கு உடல்நலமில்லாம இருந்தா, இங்க வந்து குழந்தையை கோவிலுக்கு தத்து கொடுத்துவிட்டு பின் குழந்தைக்கு ஈடாக தவிடு, வெல்லம் கொடுத்து வாங்கிட்டு போறாங்க. இங்கிருக்கும் வில்வ மரத்தினடியில் வில்வ வினாயகர் இருக்கார்.  அவரை வணங்கினால் படிப்பு வருமாம்! (என்னையும் என் அப்பா, அம்மா கூட்டி போயிருக்கலாம்... ம்ம்ம் இட்ஸ் ட்ட்ட்ட்ட்டூ லேட்ட்ட்ட்ட்). 
பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் பிறந்த ஊர் இதுங்குறதால, அவருக்கு மலை அடிவாரத்தில் ஒரு தனிச்சன்னிதி இருக்கு. அதுமட்டுமில்லாம, ஆண்டு தோறும் நடக்கும் சேக்கிழார் குரு பூஜையின் போது மலையில் இருந்து முருகன் இறங்கி வந்து சேக்கிழாருக்கு காட்சி தருவது ஐதீகமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இக்கோவில் ராஜகோபுரம் மூன்று நிலைகள் கொண்டது.  திருக்கல்யாண மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம்ன்னும் இருக்கு. 


எல்லாம் பார்த்தாச்சு.. கோவில் தலவரலாற்றை என்னன்னு இன்னும் தெரிஞ்சுக்கவே இல்லியே!  தேவர்களை கொடுமைப்படுத்திய தாரகாசுரனை அழிக்க முருகப்பெருமான் படையுடன் வந்தார். திருப்போரூர் திருத்தலத்தில் நடந்த போரில் தாரகாசுரனை முருகன் வதம் செய்தார். அந்த சம்ஹாரம் முடிந்ததும் ரெஸ்ட் எடுக்கவும், வள்ளியை மணம் முடிக்கவும் திருத்தணி நோக்கி புறப்பட்டார். வழியில் குன்றத்தூர் மலையின்மீது சிரம பரிகாரம் செஞ்சிக்கிட்டார். 


இங்கு  தங்கி இருந்த முருகன், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். அந்த சிவன், மலை அடிவாரத்தில் ‘கந்தழீஸ்வரர்’ என்ற பெயரில் தனி கோவில் கொண்டு அருள்புரிந்து வருகிறார். கந்தனால் உருவாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டதால் அவருக்கு இந்த பெயர் வந்தது. அதன்பிறகு இத்தலத்தில் இருந்து புறப்பட்டு திருத்தணியை அடைந்ததாக தலவரலாறு சொல்லுது... இங்கு, கிருத்திகை, திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, மற்றும் சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் சிறப்புற நிகழ்த்தப்படுது..

நன்றியுடன்,
ராஜி.

Thursday, May 23, 2019

கருப்பு லோலாக்கு குலுங்குது... - கைவண்ணம்


சில்க் த்ரெட் நூல்ல செய்யுற  ஜுவல்சுக்குதான் இப்ப மவுசு அதிகம். பார்க்க செம அழகு. நல்ல ஜொலிஜொலிப்பா இருக்கும். எல்லாவித கலர்லயும் செய்யலாம். வளையல், கம்மல், மணிமாலை, ஹேர்க்ளிப்ன்னு எல்லாமே செய்யலாம். பழகிட்டா செம ஈசி.. இதுக்கு மூலப்பொருட்கள் எல்லா பேன்சி ஸ்டோர்லயும் கிடைக்குது. அதிகபட்சம் 25 ரூபாய்ல ஒரு கம்மல் செய்யலாம். ஆனா, ஆரம்பவிலை 120ரூபா. வேலைப்பாடு அதிகரிக்க, அதிகரிக்க விலை கூடும். ஒரு கம்மல் செட்டை ஒரு மணி நேரத்துல செஞ்சுடலாம்...

 கம்மல் செய்ய பிளாஸ்டிக்ல ஜிமிக்கை  பேஸ் கிடைக்குது.

ஸ்கேல் இல்லன்னா நோட்ல நூலை சுத்தி மொத்தம் 15 இழை இருக்குற மாதிரி எடுத்துக்கனும்....

இடைவெளி விட்டு மேல படத்துல இருக்குற மாதிரி நூலை கோர்த்துக்கிட்டு வரனும்.

நூலை எல்லா இடத்துலயும் சுத்திட்ட பிறகு கம்மலுக்குள் க்ளூ வச்சு நூலை ஒட்டி மிச்ச மீதி நூலை வெட்டிடனும்.

 கம்மல் பேஸ் ரெடி.....


 எல்லாவித ஜுவல்சும் இந்த மாதிரி நூல் சுத்துறதுதாலதான் வரும்.


 ரெண்டு ஐபின்னை ஒன்னுக்குள் ஒன்னை ஜாயின் பண்ணிக்கனும்.


 ஒரு கம்பில முத்தை கோர்த்துக்கிட்டு செஞ்சு வச்சிருக்கும் கம்மலை கோர்த்துக்கனும். 

 மேல பீட் கேப்பை கோர்த்து மிச்ச மீதி கம்பியை வெட்டி வளைச்சுக்கனும்.

 அதேமாதிரி இன்னொரு பக்கத்து கம்பில இன்னொரு முத்தை கோர்த்து இன்னொரு கம்மலை கோர்த்து க்ளூ போட்டு ஒட்டிக்கனும். 

எப்ப பாரு ஜிமிக்கை கம்மல்ன்னு செஞ்சு போட்டுக்குறதுக்கு பதிலா புது டிசைன்ல தொங்கட்டான் ரெடி.  


ரெண்டு கம்மலும் ஜாயின் பண்ண இடம் தெரியாம இருக்க ரன்னிங்க் ஸ்டோன் ஒட்டிக்கனும்.  அதை சுத்தி சின்ன சைஸ் கோல்ட் முத்து செயினை சுத்தனா தொங்கட்டான் ரெடி.


 கம்மல் பேஸ்ல க்ளூ தடவிக்கனும்... சின்ன பிளாஸ்டிக் ரவுண்ட்ல நூலை சுத்தி கம்மல் பேஸ்ல ஒட்டிக்கிட்டு நமக்கு விருப்பப்பட்ட மாதிரி கல், முத்துன்னு வச்சு அலங்கரிச்சுக்கலாம். 


 தொங்கட்டான் ரெடி...

வட்ட வடிவ கம்மல் பேஸ்ல சில்க் த்ரெட்டில் இருவது இழை எடுத்திக்கிட்டு நெருக்கமா சுத்திக்கிட்டு ஃபேஃப்ரிக் க்ளூவை வைச்சுக்கனும்.
இன்னொரு ஃபேஃப்ரிக் க்ளாத்லவட்டவடிவமா வெட்டிக்கிட்டு கம்மல் பேசை வச்சு ரெண்டுத்தையும் ஒட்டிக்கனும். 

என் பசங்களுக்கு கருப்பு கலர்ன்னா இஷ்டம். அதனால பெரியவளுக்கு ஒன்னு. சின்னவளுக்கு ஒன்னு.. 
என் பசங்களுக்கு கருப்பு கலர்ன்னா ரொம்ப இஷ்டம்... அதுல ஜிமிக்கி செஞ்சு தரச்சொன்னாங்க. கைவண்ணம் பகுதில பதிவிட ஒன்னும் செய்யலியேன்னு இருக்கும் நேரத்துல கேட்டதால சுடச்சுட செஞ்சு பதிவு போட்டாச்சு. 

நன்றியுடன்
ராஜி 

Wednesday, May 22, 2019

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புறக்கணிக்கப்படுகிறதா பூம்புகார்?! - மௌனச்சாட்சிகள்
புராண கதைகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு போகும்போதெல்லாம் அந்த கதை மாந்தர்கள்லாம் கூடவே நடந்து வர்ற மாதிரி எனக்கொரு நினைப்பு. அதனால அதுப்போன்ற இடங்களுக்குப் போகனும்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். பூம்புகாருக்கு பத்து வருடங்களுக்குமுன் போயிருக்கேன். ஆனா, கடற்கரையில் கால் நனைத்ததோடு சரி. வேற எங்கும் சுத்திப் பார்க்கல. ஆனா, இந்த முறை அப்பாவோடு போகும்போது என்னை பூம்புகார்ல கொஞ்ச நேரம் சுத்தி பார்க்க  விடனும்ன்னு கேட்டுக்கிட்டேன். இந்த முறை பொறுமையாய் எல்லா இடத்துலயும் சுத்திப் பார்த்துட்டுதான் வந்தேன். 

சிலப்பதிகார கதையை உங்களுக்கு நான் சொல்லனும்ன்னு அவசியமில்ல. இருந்தாலும் எனக்கு தெரியும்ன்னு நீங்க தெரிஞ்சுக்கனுமேன்னு சிலப்பதிகார கதை சுருக்கமாய்....,

வணிகக் குலத்தில் பிறந்த கோவலனுக்கும், கண்ணகிக்கும் பெரியவர்கள் திருமணம் செய்து வைத்து தனிக்குடித்தனம் வைக்குறாங்க. கடல் கடந்து வாணிபம் செய்து கண்ணகியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான். மாதவியின் ஆடல் நிகழ்ச்சிக்கு செல்லும் கோவலனின் கழுத்தில் மாதவி வீசிய மாலை விழுது. தாசிக்குலத்தில் பிறந்தாலும் நல்லவளான மாதவியின் அன்பிலும், கூடவே அவள் தாயின் சூதிலும் விழுந்து மலையென இருந்த செல்வத்தை இழக்கிறான் கோவலன்.

இந்திரவிழாவில் பாடிய பாடலை தவறாய் புரிந்துக்கொண்டு கண்ணகி இல்லம் நோக்கி மீண்டும் வருகிறான். வீடு வந்தபின்னரே தெரியுது தான் பாடுப்பட்டு சேர்த்த அத்தனை செல்வமும் இழந்துட்டோம்ன்னு.... நல்லா வாழ்ந்த ஊரில் இனி வறுமைக்கோலத்தில் இருக்கக்கூடாதுன்னு  முடிவு செய்து பாண்டிய நாட்டிற்கு கண்ணகியுடன் செல்கிறான். அங்கு கண்ணகியின் கால் சிலம்பை எடுத்துக்கொண்டு சென்று அரண்மனை பொற்கொல்லரிடம் தந்து அதை விற்றுத் தரச் சொல்கிறான்.

அதற்கு முன்பே, பாண்டிய மன்னனின் பட்டத்து ராணியின் சிலம்பு பழுதுக்கு வர, அதை களவாடிக் கொண்ட பொற்கொல்லன், கோவலந்தான் அதை திருடிக்கொண்டான் என மன்னனிடம் சொல்ல, ஆராயமல் கோவலனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்படுகிறான். இதைக்கேட்டு வெகுண்ட கண்ணகி பாண்டிய மன்னனின் அரசவைக்கு வந்து முறையிட, தன் சிலம்பின் பரல்கள் மாணிக்கம் என உரைத்து, பாண்டிய ராணியின் கால்களில் இருந்த தன் சிலம்பை உடைத்து கோவலன் நிரபராதி என நிரூபித்து மதுரையை எரித்து பழித்தீர்த்துக் கொள்கிறாள்.

இளங்கோவடிகளின் திருவுருவ சிலை.

கால்நடையாகவே 14 நாட்கள் நடந்து,  சேர நாட்டை அடைந்து செங்குன்றம் மலைமீது நிற்க, கோவலன் புஷ்பக விமானத்தில் வந்து அழைத்துச்செல்கிறான். தெய்வமானவளின் கதையை வேட்டைக்கு வந்த செங்குட்டுவன் கேள்வியுற்று, அவளுக்கு கோவில் எழுப்ப இமயமலையிலிருந்து கல் கொண்டுவந்தான் என புராணங்கள் சொல்லுது. 

கண்ணகி கோவலன் வாழ்ந்த காவிரிப்பூம்பட்டினம் நகரத்தின் 7 தெருக்களை நினைவுப்படுத்தும் விதமாக 7 அடுக்குகளை கொண்ட கோபுர அமைப்புடனும், கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கு இந்த சிலப்பதிகாரக் கலைக்கூடம்சிலப்பதிகாரத்தையும், கண்ணகியையும், தமிழையும் கௌரவப்படுத்தும் விதமாக பூம்புகாரில் அப்போதைய அரசால்  1973ல் சிலப்பதிகார கலைக்கூடம் என்ற பெயரால் ஒரு நினைவுக்கூடம் எழுப்பப்பட்டுள்ளது.  மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி மாணவர்களால் இந்த கூடம்  உருவாக்கப்பட்டது.
கலைக்கூடத்தின் நுழைவு வாயிலில் கோவலன் மற்றும் கண்ணகி  சிலைகள்   நம்மை வரவேற்கும் விதமாக வச்சிருக்காங்க. இக்கலைக்கூட மாளிகையின் கோபுர வடிவமைப்பு 50 அடி உயரம் கொண்டது. இக்கோபுரத்தின் கலசங்கள் 8 அடி கொண்டதாகும்.

இக்கலைக்கூடத்தின் சுவற்றில் சிலப்பதிகார கதையின் முக்கிய நிகழ்வுகளை 49 சிற்பங்களாக வடிக்கப்பட்டு கண்ணாடிக்குள்  பார்வைக்கு வச்சிருக்காங்க. 


(கண்ணகி பத்தினி தெய்வமாக போற்றப்பட முக்கிய காரணமான அவளின் காற்சிலம்பு)

நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில்  பூம்புகார் அமைந்திருக்கு.  சென்னையிலிருந்து 220 கிமீ தூரத்தில் பூம்புகார் இருக்கு.  சென்னைல இருந்து சீர்காழி, அல்லது சிதம்பரம் வந்து அங்கிருந்து பூம்புகார் வரலாம்.

(கண்ணகியும், கோவலனும் சந்தோசமாய் இருந்த காலத்தை விளக்கும் சிற்பம்)

(மாதவியை தவறாய் புரிந்துக்கொண்டு அவளைப் பிரிந்துச் செல்லும் காட்சி)

(கண்ணகி கையால் கடைசியாய் உணவருந்தும் காட்சி)


(பொற்கொல்லரிடம் கண்ணகியின் சிலம்பை கோவலன் கொடுக்கும் காட்சி)

(கோவலனின் படுகொலைக் காட்சி)


(பாண்டிய மன்னன் அரசவையில் கண்ணகி சிலம்பொடித்து கோவலன் நிரபராதி என நிரூபிக்கும் காட்சி)

(சேர மன்னன் செங்குட்டுவனும், அவன் சகோதரன் இளங்கோவடிகளும் கண்ணகிக்கு  கோவில் எழுப்ப இமயமலையிலிருந்து கல் கொணரும் காட்சி)

(சிலப்பதிகார கலைக்கூடத்தின் மேற்கூரையில் வடிவமைக்கப்பட்ட வண்ணச் சிற்பம்)


(சிலப்பதிகார காலத்தில் இசைக்கப்பட்ட இசைக்கருவிகளின் மாதிரிகள்)


காவிரி ஆறு இப்பூம்புகார் கடலில்தான் கலக்கின்றது. இப்பூம்புகார் நகரம் சோழ நாட்டின் தலைநகராய் அக்காலத்தில் விளங்கியது.

வரலாற்று புகழ்பெற்ற எல்லா இடங்களிலும் சுற்றிக்காட்ட கைடுகள் இருப்பாங்க. ஆனா, எவ்வளவு தேடியும் பூம்புகார் பற்றி விளக்க ஒருத்தரையும் காணோம். 

காவிரிப்பூம்பட்டிணம் மிகப்பெரும் துறைமுகமாக விளங்கியது. உலக நாடுகள் பலவற்றிலிருந்து வந்தப் பொருட்கள் இங்கு கடைவிரிக்கப்பட்டதற்கு பட்டிணப்பாலை நூலே சாட்சி. முத்தும், பவளமும், பட்டும், ரத்தினமும் கடைவிரிக்கப்பட்ட இடத்தில் கருவாடும், மீனும். காலத்தின் கோலம் இதுதான் போலும்!!

பூம்புகார் நகரின் கடற்கரை. துறைமுகம் வரப்போகுது. அதனாலதான், கற்களால் கரைக் கட்டுறாங்கன்னு அங்கிருந்தவங்க சிலர் சொன்னாங்க. இன்னும் சிலர் சுனாமி தாக்குதலிலிருந்து அதிக பாதிப்பு வராம இருக்க தடுப்பணை கட்டுறாங்கன்னு சிலர் சொல்றாங்க. எது உண்மை!?

அரசியல் காழ்ப்புணர்ச்சியா!? இல்ல எதாவது செண்டிமெண்டான்னு தெரியல. இக்கலைக்கூடம் போதிய வெளிச்சமில்லாம, சரிவர துப்புறவு கூட செய்யாம இருக்கு. நுழைவுக்கட்டணம் கூட பலகையில் போட்டிருப்பது போல் வாங்காம 7 பேரா!? 29 ரூபா கொடுத்துட்டுப் போங்கன்னு சொன்னார். இதென்ன கணக்குன்னு எனக்கு புரியல.
என்னதான் அரசியல் காழ்ப்புணர்ச்சியாய் இருந்தாலும் ஐப்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகார கதையின் நினைவாய் இருஜ்கும் கலைப்பொக்கிஷம் இப்படி வீணாய் போகக்கூடாது :-(

நன்றியுடன்,
ராஜி