திங்கள், செப்டம்பர் 25, 2017

குயில் பாடும். தவம் செய்யுமா?!

நவராத்திரியின் ஐந்தாவது நாள் வணங்க வேண்டிய பெண் தெய்வம் மகேஸ்வரி. இவள் சப்த கன்னியரில் இரண்டாவது கன்னி. இவள் சிவனின் அம்சம்.  இந்த சக்தியினால்தான் சிவன் தன் சம்ஹாரத்தை நிகழ்த்துகிறான். இவள் வெண்ணிற மேனியனாள். மூன்று கண்களோடு, பிறை சூடிய ஜடா மகுடத்துடன், பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு, மான், மழு ஏந்தி அபயவரத கரத்தோடு கூடிய பத்து கரங்களோடு ரிஷப வாகனத்தில் வடகிழக்கு திசையான ஈசானிய திசையை நிர்வகிப்பவள். இவள் கோபத்தை குறைக்கும் ஆற்றலை கொண்டவள். கடின உழைப்புக்கு சொந்தக்காரி. தர்மத்தின் திருவுருவம். தன்னை வழிபடுபவருக்கு போகத்தை வழங்கக்கூடியவள்.


சப்த கன்னியர்கள் வழிப்பட்டு சிவன் அருள் பெற்ற தலங்கள் வரிசையில் மகேஸ்வரி சிவனை வழிப்பட்ட தலம் நாகப்பட்டனம் கருங்குயில்நாதன்பேட்டையில் அருள்பாலிக்கும் ஆனந்தவல்லி சமேத சக்திபுரீஸ்வரர் ஆலயம் ஆகும்.  இந்திரன் குயில் உருவங்கொண்டு ஈசனை வழிப்பட்ட தலம் இது.  இங்குள்ள புண்ணிய தீர்த்தத்துக்கு கருணா தீர்த்தம் என்று பெயர். வில்வமரம் இங்கு ஸ்தல விருட்சம்.  தட்சன் சிவனை மதியாது யாகம் செய்தபோது அங்கு வந்த அன்னையால் யாகம் அழியப்பெற்றது. அந்த அழிவிலிருந்து தப்பிக்க எல்லாரும் ஓடியபோது இந்திரன் குயில் உருவங்கொண்டு உயிருக்கு அஞ்சி ஓடினான்.தன்னையுமறியாமல் சிவநிந்தனைக்கு ஆளானதை எண்ணி வருந்தி, இந்திரன் குருபகவானிடம் யோசனை கேட்க, சப்த கன்னிகையரில் ஒருவளான மகேஸ்வரி  வழிப்பட்டு அருள்பெற்ற  கருணாபுரம் என்ற திருத்தலமொன்று உண்டு. அங்கு சென்று இறைவனை வழிப்பட்டால் உன் பாவம் தீரும் என கூறினார். அதன்படி இந்திரன் வழிப்பட்ட தலம் இது.  இதனாலயே, இந்த ஊருக்கு கருங்குயில்நாதன்பேட்டை என்றும், சிவனின் கருணையினை குறிக்கும் விதமாக கருணாப்பேட்டை என்றும் அழைக்கப்படுது.


மகேஸ்வரி மூல மந்திரம்.... 

ஓம் வ்ருஷத்வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472746 நன்றியுடன்,
ராஜி.

ஞாயிறு, செப்டம்பர் 24, 2017

தங்கம் கிடைக்க வணங்க வேண்டிய பெண் தெய்வம்.

நவராத்திரியின் நாலாவது நாளில் நாம் வணங்கப்போற பெண் தெய்வம் வைஷ்ணவி. இவள் சப்தகன்னிகளில் நாலாவது கன்னி. சங்கு, சக்கரம், கதை, வில்,வாள், சூலம், கத்தி, கேடயம் தாங்கி எட்டு கரங்களுடன், சிவப்பு நிற ஆடையணிந்து கருட வாகனத்தில் காட்சியளிப்பவள்.  இவள் பராசக்தியின் கைகளிலிருந்து பிறந்தவள். விஷ்ணுவின் சக்தி.  பாரிஜாத மலருக்கு மனம் மயங்குபவள், சுக்கு, ஏலக்காய் பொடி தூவிய பானகம், எலுமிச்சை சாதம் இவளது நைவேத்தியம்.  தீயவற்றை சம்ஹரிக்க பிறந்தவள்.  கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம்  கிடைத்திட வைஷ்ணவியின் அருள் மிக முக்கியம்.  நீல நிற மேனி கொண்டவள். 


தஞ்சை ஐய்யம்பேட்டைக்கு அருகில் நல்லிச்சேரி நந்திமங்கை என்ற ஊரில் வைஷ்ணவிதேவி சிவனை வணங்கி அவன் அருள் பெற்றாள் என்று புராணங்கள் கூறுகின்றது. இங்குள்ள சிவனுக்கு ஜம்புநாதஸ்வாமி என்றும், அம்பாளுக்கு அலங்காரவல்லி என்றும் பெயர்.  இந்த தலத்தில் பஞ்சாட்சரத்தை நந்திபகவான் ஓதி சிவனை பூஜித்ததால் இந்த ஊருக்கு நந்திகேஸ்வரம் என்ற பேரும் உண்டு. இந்த ஊருக்கருகில் வயல் வெளிகள் அதிகம் கொண்டதால் அங்கு விளைந்த நெல்களை இங்கு குமித்து வைத்ததால் நெல்லுச்சேரி என அழக்கப்பட்டு நல்லிச்சேரி என திரிந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. 


இந்த கோவில் இருந்த இடம்,முன்பு அடர்ந்த காடாய் இருந்ததாம்.  இந்த கோவிலை மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கட்டியதாக கோவிலில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த கோவிலில்தான் சப்த கன்னிகளில் ஒருவரான வைஷ்ணவி தேவி தனது பதினெட்டு வயதில் சிவ பெருமானையும் அம்பாளையும் ஒரு சேர வழிபட்டார்.  இவளுக்கு நாராயணி என்றும் பெயருண்டு. 

108 சக்தி பீடங்களில் 51வது சக்தி பீடமான ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் உள்ள கட்ராவிலிருந்து அருள்புரியும் வைஷ்ணவிதேவியும், சப்தகன்னியருள் ஒருவரான இந்த வைஷ்ணவிதேவியும் வேறுவேறானவர்கள்., 

வைஷ்ணவிதேவியின் மூலமந்திரம்...

ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன்,
ராஜி. 

சனி, செப்டம்பர் 23, 2017

இந்திரன் மனைவி இந்திராணியும், சப்த கன்னிகளில் ஒருவரான இந்திராணியும் ஒருவரா?!


நவராத்திரியின் மூன்றாவது நாளில் வணங்க வேண்டிய தெய்வம் இந்திராணி.  இவள் இந்திரனின் சக்தியாகும். இந்திரனின் மனைவியான இந்திராணியும், இவளும் வேறு. இவள் நித்யகன்னி. இந்திரன் மனைவி தெய்வானை, சித்திரகுப்தன், ஜெயந்தனின் தாய்.   இவளுக்கு மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் பெயருண்டு. சீதைக்கு நிகரான அழகும் குணமும் கொண்டவள். இவள்தான் தேவலோகத்தை ஆட்சி செய்பவள்.  நவரத்தின கற்கள் பதித்த க்ரீடம் அணிந்தவள். வஜ்ராயுதத்தை தாங்கியவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திகாசுரனை அழித்தவள். ஆயிரம் கண்ணுடையவள். சப்த கன்னிகளில் ஆறாவது சக்தியாகும். 


வேலை கிடைக்க, பதவி உயர்வு, சம்பள உயர்வு, இழந்த பதவி திரும்ப பெற வேண்டுபவர்கள் இவளை வழிப்பட  கைமேல் பலன் கிடைக்கும். மரிக்கொழுந்து, சம்பங்கி மலர்களின் பிரியை. யம பயம் போக்குபவள், திருமண வரம் தருபவளும்கூட. 


சப்த கன்னியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று வணங்கி சிவனின் அருளாசி பெற்றனர். அவ்வாறு, இந்திராணி சிவனை வழிப்பட்ட தலம் நாகப்பட்டினம் அருகில் தருமபுரம், அபயாம்பிகை சமேத தருமபுரீஸ்வரர் ஆலயம்.  ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது. மார்க்கண்டேயன் உயிரை பறிக்க முயன்ற குற்றத்திற்காக சாபத்திற்கு ஆளான எமன், இத்தலத்தில் சிவனை வணங்கி சாப விமோசனம் பெற்றதாய் கூறப்படுது. தருமராஜாவும் இக்கோவிலில் சிவனை வணங்கி சிவனின் அருள் பெற்றுள்ளார். இங்கு துர்க்கை 18 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். சந்திரன் சாபம் நீங்க வழிப்பட்ட தலத்தில் இதுவும் ஒன்று. அனைத்து விதமான கலைகளும் கைவர சந்திரனின் அருள் மிக முக்கியம். அந்த சந்திரனுக்கு அருள்பாலித்த எம்பெருமான் இங்கு சந்திரமௌலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு சுயம்பு மூர்த்தியாகும். 


இந்திராணிக்கு தாழமங்கை என்றொரு பெயருண்டு. அவள் இங்கு தங்கி சிவனை பூஜித்ததாலேயே இந்த கோவிலுக்கு தாழமங்கை சந்திரமவுலீஸ்வரர் என்று பேச்சு வழக்கில் சொல்லப்படுது. 

இந்திராணியின் மூல மந்திரம்...
ஓம் - கஜத்வஜாயை வித்மஹே;வஜ்ரஹஸ்தாயை தீமஹி;தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472564

நன்றியுடன்,
ராஜி.

வெள்ளி, செப்டம்பர் 22, 2017

ராஜராஜனின் வெற்றிக்கு காரணம் ஒரு பெண் தெய்வமா?!


நவராத்திரியின் இரண்டாவது நாளில் நாம் வணங்க வேண்டியது வராகி அம்மனை.  பன்றி முகமும், பெண் உடலுடனும்,  தெத்துபற்களுடன் காட்சியளிப்பவள். தனது தெத்துபற்களால் பூமிப்பந்தை தாங்கி நிற்பவள். மூன்று கண்கள்,  சங்கு, சக்கரம், கத்தி, உலக்க்கை, கலைப்பை, உடுக்கை போன்ற ஆயுதங்களோடு அபய வரத முத்திரையோடு கூடிய எட்டு திருக்கரங்களுடன் காட்சியளிப்பவள்.  நீல நிற உடலோடு  சிவப்பு நிற ஆடையுடுத்தி சந்திரகலை தரித்த நவரத்தின க்ரீடம் அணிந்து சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள்பாளிப்பவள். பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா,   மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகின்னு வேற பேர்களும் உண்டு. இவள் பராசக்தியின் படைத்தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள். ராஜராஜேஸ்வரியின் குதிரைப்படைத்தலைவியாகும்.  ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம். சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னி இவள். பகைவருக்கு 

மிகுந்த உக்கிரமானவள். ஆனா அன்பு காட்டி ஆதரவளிப்பதில் அன்னைக்கு நிகரானவள்.   எட்டு காட்டு பன்றிகள் இழுக்கும் தேர் இவளது வாகனமாகும்.  இவள் விஷ்ணுவின் வாயிலிருந்து வெளிப்பட்ட தீஜ்ஜுவாலையில் தோன்றியவள். மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்பன இவளது அவதார தோற்றமாகும்.  இவளுக்கென்று தனிக்கோவில் இந்தியாவிம் மொத்தமே இரண்டு இடங்களில்தான் உள்ளது. ஒன்று காசியில். மற்றொன்று தஞ்சையில். ராஜராஜ சோழனின் இஷ்டதெய்வம் இந்த வராகி அம்மன். இவை இரண்டும் மிகப்பழமை வாய்ந்தது. இப்போது அரக்கோணத்துக்கருகில் பள்ளூர் என்ற ஊரிலும் இவளுக்கு ஆலயம் எழுப்பி உள்ளனர். 
பள்ளூரில் இன்றைக்கு வராகி அம்மன் குடியிருக்கும் ஆலயத்தில் அவளுக்கு முன்பாக மந்திரகாளியம்மன் தான் வீற்றிருந்தாள். அரிய வரங்களை பெற்ற மமதையில் மந்திரகாளியம்மனையே தன் மந்திரத்தால் கட்டி வைத்தான். தக்க சமயம் வர அன்னையும் காத்திருந்தாள். தக்க நேரம் வந்ததும் கடும் மழை, புயல், இடியால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வராகி அம்மன் மிதந்து மந்திரகாளியம்மன் கோவிலுக்கருகில் வந்து சேர்ந்தாள்.  தட்டு தடுமாறி எழுந்து ஒதுங்க கோவில் கதவை திறக்க சொல்லி மந்திரகாளியம்மனை வேண்டினாள்.  மந்திரவாதியினால தான் கட்டுண்டதை சொல்லி கதவை திறந்தால் பெரும் அழிவை சந்திக்க வேண்டுமெனவும் எச்சரித்தாள். அண்ட சராசரங்களும் கிடுகிடுக்க வைத்தபடி சிரித்த வராகி உன்னை காப்பேன் என உறுதியளித்து கோவிலுக்குள் சென்று மந்திரவாதிக்கு காத்திருந்தாள். 

நடுநிசியில் கோவிலுக்கு வந்த மந்திரவாதி கோவில் கதவை திறந்திருப்பதை கண்டு ஆத்திரமுற்று ஓங்கி கதவை எட்டி உதைத்தான்.  இதற்காகவே காத்திருந்த வராகி அவனை இரண்டாக கிழித்து  தூக்கி எறிந்தாள். மந்திரகாளியம்மனும் விடுவிக்கப்பட்டாள். வராகி அம்மனிடம், தாங்களே இக்கருவறையில் தங்கி அருள்பாலிக்க வேண்டுமென மந்திரக்காளியம்மன் வேண்ட வராகி அம்மனும் புள்ளலூரிலேயே தங்கி அருள்பாளிக்கிறாள்.
வராகிக்கு பிடித்தது செவ்வரளி மாலை, வராகிக்கு பிடித்தது தாமரைக்கிழங்கு, அல்லிக்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, மாகாளிகிழங்கு, பனங்கிழங்கு.  மரிக்கொழுந்து, கருந்துளசி, செந்தாழை வாசனைக்கு மயங்குபவள்.இவளுக்கு ஏற்ற நைவேத்தியம் கருப்பு உளுந்து வடை, பாதாம் கேசரி, தயிர்சாதம், பானகமாகும். நம் உடலில் இருக்கும் ஆதார சக்கரமான ஆறு சக்கரங்களில் நெற்றியில் இருக்கும் ஆக்ஞா சக்திக்கு சொந்தக்காரி. நம் எண்ணங்களை ஈடேற்றி தருவதில் அவளுக்கு நிகர் வேறு யாருமில்லை

உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் உருவாக காரணமான ராஜராஜ சோழனின் கண்கண்ட தெய்வம் இந்த வராகி அம்மன்.  பொதுவாக வினாயகரை வணங்கிய பின்னரே எந்த செயலையும் தொடங்குவது தமிழர் பண்பாடு. ஆனா, ராஜராஜன் வராகி அம்மனை வழிப்பட்ட பின்னரே எந்த செயலையும் தொடங்குவார். அந்த வழக்கம் இன்றுவரை தொடருது.

ராஜராஜன் தன்னை தடுத்தாட்கொள்ளும் இறைவனுக்கு பெரிய அளவில் கோவில் எழுப்ப முடிவு செய்தபின் இடம்தேடி எங்கெங்கோ அலைந்தார். இறுதியாக தஞ்சைக்கு வந்து தங்கி இடம்தேடினார்.  ஒருநாள் பொழுதுபோக்காக வேட்டைக்கு  புறப்பட்டு சென்றபோது  ஒரு இடத்தில் அவருக்கு எதிராக பன்றி ஒன்று எதிர்த்து நின்றது. அதனை அவர் துரத்தி சென்றார். ஆனால் அது போக்கு காட்டி பல இடங்களுக்கு சென்று ஒரு பெரிய திடலில் வந்து படுத்துக் கொண்டது. இதனால் வியப்படைந்த ராஜராஜசோழன் அதனை கொல்லாமல் துரத்தினார்.  ஆனால் அது எழுந்து நின்று காலால் பூமியை தோண்டியது. இது குறித்து ராஜராஜசோழன் அரண்மனை ஜோதிடரை அழைத்து விவரம் கேட்டார். அப்போது கோவில் கட்ட இடத்தினை, வராஹி தேவி தேர்ந்தெடுத்து இருப்பதை தெரிவித்தார் ஜோதிடர். அந்த இடத்தில் பெரிய கோவில் கட்டும் முன்பு வெற்றி தேவதை வராஹிக்கு சிறிய கோவில் அமைத்து வழிபட்டு பின்னர் பணியை தொடங்கினார் ராஜராஜன். அன்னையின் அருளால் உலகம் போற்றும் பெரிய கோவிலை கட்டினார் என்பது வரலாறு. 

அன்றிலிருந்து ராஜராஜனி வெற்றி தெய்வமாய் மாறிப்போனாள் இந்த வராகி. அன்றிலிருந்து போருக்கு செல்லும் முன் இங்கு வந்து ஆயுத பூஜை போட்ட பிறகே செல்வார். அதனால்தான், அவருக்கு வெற்றிமேல் வெற்றி கிட்டி, பாரத கண்டம் முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாய் நம்ப்படுது. இப்பவும், தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் வராகி அம்மன் வழிபாடு பிரசித்தி பெற்றது. 


குழந்தைவரம், கல்வியில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற வியாழக்கிழமையிலும் வழிபடலாம். வெள்ளிக்கிழமைஅன்று வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல், தோஷம் நீங்கும். சனிக்கிழமையன்று வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடி வெற்றிபெறும். மாதத்தில் வருகிற வளர்பிறை, தேய்பிறை, பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வழிபட்டால் நல்லது.
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

வராகி தேவியை வழிப்படுவோம். வாழ்வில் எல்லா வளமும் பெறுவோம்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472461
நன்றியுடன்,
ராஜி. 

வியாழன், செப்டம்பர் 21, 2017

சகல நன்மைகளையும் அளிக்கும் சாமுண்டி வழிபாடு


நவராத்திரியின் முதல்நாள் வணங்க வேண்டிய பெண் தெய்வம் சாமுண்டி என்கிற சாமுண்டீஸ்வரி. தெத்துப்பல் கொண்ட திருவாயும், முண்டங்களால் ஆன மாலையும் அணிந்து கோரமாய் காட்சி தருபவள். பார்க்க கோவக்காரியாய் இருந்தாலும் இவளது கோவம் தீயவைகளை அழித்து நல்வழிப்படுத்தவே அன்றி அவள் குழந்தைகளை ஒன்றும் செய்யமாட்டாள். 

சப்த கன்னியர்களில் ஒருவள் இந்த சாமுண்டி.  கடுந்தவத்திற்குப் பின் பிரம்மனிடம் இருந்து பெற்ற வரங்களால் திமிரடைந்திருந்த அந்தகாசுரன், தேவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான். அவர்கள் சிவனிடம் முறையிட, சிவன் எய்த அம்பினால் காயமுற்ற அசுரன் சிந்திய ஒவ்வொரு துளி உதிரமும் ஒரு அரக்கனாக மாறியது. அவர்களை அடக்க சிவன் தனது வாயைத் திறந்து தீ ஜுவாலையினால் ஒரு பெண்ணுருவைப் படைத்தார். மற்ற கடவுளரும் இவ்வாறே செய்து ஏழு மாதர் உருவாயினர்.  அந்த எழுவரும் அந்தகாசுரனை அடக்கினர். . சாமுண்டி, பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராஹி, கெளமாரி, இந்திராணி இவர்கள்தாம் அந்த சப்த மாதர்கள். சப்த என்றால் ஏழு என்று பொருள்.   இவர்கள் ஆண் கடவுளரின் பெண் உருவங்கள். சிற்ப வடிவில் ஒரு குழுவாக இவர்கள் உருவாக்கப்படும்போது இவர்களுடன் கணேசரும், வீரபத்திரரும் இடம்பெறுவர். ஆக, முழுமையான சப்தகன்னியர் சிற்பத்தில் ஒன்பது உருவங்கள் இடம் பெற்றிருக்கும்.
மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன்

ஆதிசிவன் என அழைக்கப்படும் ருத்திரனின் அம்சம் இவள். முத்தலை சூலம், முண்டம், கத்தி, கபாலம் மாதிரியான ஆயுதங்களை தாங்கிய பதினெட்டு கரங்கள், மூன்று கண்கள், கோரைப்பற்களுடன், கருத்த மேனியுடன் புலித்தோல் உடுத்தி முண்டமாலையை அணிந்து பிணத்தின்மீது அமர்ந்து காட்சியளிக்கிறாள்.  சண்டர், முண்டர் என அரக்கர்களை அழிக்க அவதாரம் எடுத்தவள்.
நேபாள நாட்டின் சாமுண்டி சிலை

இந்த சாமுண்டிக்கு பல இடங்களில் கோவில் இருந்தாலும் கர்நாடகாவின் மைசூர் சாமூண்டீஸ்வரி கோவிதான் மிகப்புகழ்பெற்றது.  சாமுண்டி இங்கு சாமூண்டீஸ்வரியாக அருள்பாலிக்கிறாள்.  இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமை பெற்றதாகும். கி.பி12ம் நூற்றாண்டை சேர்ந்தது இந்த கோவில். ஹோய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தன்  இந்த கோவில் திருப்பணி செய்தவர்களில் மிக முக்கியமானவர்.  

1573ம் ஆண்டு  மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்துக்கொண்டிருந்த நேரம். சாமுண்டீஸ்வரியை தினமும் தரிசிப்பதை வழக்காமாக்கிக்கொண்டிருந்தார்.  ஒருமுறை அம்மனை வழிப்பட்டு திரும்பும்போது பலத்த மழை. இடி, மின்னலென கதிகலங்க வைத்தது.  ஒரு மரத்தின் அடியில்  பல்லக்கை இறக்கி வைத்துவிட்டு மழைக்கு ஒதுங்கி நின்றனர். இனம்புரியா பயம் மன்னன் மனதை சூழ்ந்துக்கொள்ள,  தன்னை காத்தருளும்படி அம்மனை வேண்டியபடி மலைக்கோவிலை பார்த்தார். கோவில் அவர் கண்ணுக்கு தெரியவில்லை. 
பதறி துடித்த  அவர் சில அடி தூரம் நகர்ந்து சென்று பார்த்தார். மரத்தின் அடியில் இருந்தபோது, தெரியாத கோவில் இப்போது தெரிந்தது. அப்போது மின்னலுடன் இடி விழுந்தது. எந்த மரத்தின் அடியில் நின்றிருந்தாரோ, அந்த மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காக்கவே, அம்பிகை கோயிலை மறைத்து விளையாடல் நிகழ்த்தியதை எண்ணி மகிழ்ந்தார். அதன் பின், சாமுண்டீஸ்வரி கோயிலைப் பெரிதாக கட்டினார். 

மும்மூர்த்திகளாலும் வெல்ல முடியாத அசுரனான மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி பெற்ற சாமுண்டீஸ்வரியைப் போற்றும் விதத்தில் நவராத்திரி பிரம்மோற்ஸவம் மைசூரில் மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. 1610ம் ஆண்டு முதல் தசராவிழா நடக்கிறது. தற்போது கர்நாடக அரசு இதை அரசு விழாவாக நடத்துகிறது. தசராவையொட்டி, மைசூரு அரண்மனை மின்விளக்கால் அலங்கரிக்கப்படும். முக்கிய நிகழ்ச்சியாக யானை ஊர்வலத்தின் போது, யானை மீது தங்க சிம்மாசனம் அமைத்து அதில் சாமுண்டீஸ்வரி பவனி வருவதைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தசரா கண்காட்சி, வேளாண் கண்காட்சி, இளைஞர் திருவிழா, கலைத்திறன் போட்டி, கலை விழா, யானை ஊர்வலம், தீப்பந்த பேரணி போன்ற நிகழ்ச்சிகளும் உண்டு. அம்பா விலாஸ் மாளிகையில், மன்னர் பரம்பரையினர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்துவர். அப்போது வேத பாராயணமும், மன்னருக்கு பாதபூஜையும் நடக்கும். சாமுண்டீஸ்வரியைத் தரிசித்தால், சாதிக்க முடியாததையும் சாதிக்க அருள் செய்வாள். 

சாமுண்டீஸ்வரி தேவியின் மூலமந்திரம்...

ஓம் க்ருஷ்ணவர்ணாய விதமஹே சூல ஹஸ்தாயை திமஹி தந்நோ சாமுண்டா பிரசோதயாத்.

கல்வியாகிய சரஸ்வதி, வீரமான காளி, செல்வமான லட்சுமி இந்த மூன்று தத்துவங்களும் ஒன்று சேர்ந்ததே இந்த சண்டி என்கிற சாமுண்டீஸ்வரியாகும். இவள் ராத்திரி ஸகுக்த்ததால் வணங்கப்படும் ராத்திரி தேவியாகும். இவளுக்கு பிடிச்ச நைவேத்தியம் புளியோதரை. 

சாமுண்டியை வழிப்படுவோம். சகல நன்மைகளையும் பெறுவோம்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472383

நன்றியுடன்,
ராஜி