Friday, May 08, 2015

அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் திருநாவலூர் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

புண்ணியம் தேடி ஒரு பயணத்தில,இந்தவாரம் நாம பார்க்க போறது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நடுநாட்டு சிவாலயம். மேலும், இத்திருக்கோவில் சிவப்பிரியர் என்ற சிவனடியார் சிவனை பூஜித்து சண்டிகேஸ்வரர் பதவி பெற்றதும், ஆதிசேஷன் உமிழ்ந்த நஞ்சினால் கருநிறமடைந்த கருடன், சிவனை பூஜித்து விஷம் நீங்க பெற்றதும், சுந்தரர் அவதார ஸ்தலம் போன்ற பல்வேறு சிறப்புகளை உடையது. மேலும் இந்த திருக்கோவில் கருடாழ்வார் தனக்கு ஏற்பட்ட நாகதோஷத்தை நீக்க இங்குள்ள இறைவனை வழிபட வந்தாராம், இறைவனை கும்பிடும் முன்பு அகமும் புறமும் தூய்மை வேண்டும் என்பதால் குளிக்க எண்ணினார் கருடன்.அந்த இடத்தில குளிப்பதற்கு குளம் இல்லாததால் உடனே மேற்குப் பகுதியில் உள்ள கல்வராயன் மலையில் இருந்து கிழக்கு நோக்கி தமது மூக்கினால் தோண்டி ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதியில் குளித்து இறைவனை பூஜித்து நாக தோஷம் நீங்கப் பெற்றார். அந்த நதிக்குப் பெயர் கருடநதி.அது மருவி இப்போது கெடிலம் நதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நதியின் வடக்கு கரையில்தான் இந்த திருக்கோவில்  அமைந்துள்ளது'
நாம நிக்கிற இந்த இடம் திருகோவிலின் ராஜகோபுரத்திற்க்கு முன்னால் ஐந்து நிலைகளுடன் கூடிய இந்த ராஜகோபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடதிலிருந்து புதுப்பித்து கொடுக்கப்பட்டுள்ளது சரி இந்த இடத்திற்கு எப்படி செல்லலாம்னா சென்னை -திருச்சி NH  சாலையில் விழுப்புரம் தாண்டி மடப்பட்டு என்னும் ஊர் வழியாக சென்றால், மெயின் ரோட்டிலேயே கெடிலம் என்னும் இடம் இருக்கிறது. அங்கிருந்து திருநாவலூர் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து இடப்பக்கமாக பண்ட்ருட்டி மார்க்கமாக சென்றால் திருநாவலூருக்கு வந்து சேரலாம். ஊரின் முகப்பிலேயே இந்த திருக்கோவில் அமைநதுள்ளது. பேருந்து மார்க்கமாக செல்பவர்கள் விழுப்புரத்திலிருந்து அரசூர், மடப்பட்டு வழியாக உளுந்தூர்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறி கெடிலம் நிறுத்தம் என்று கேட்டு அங்கு இறங்கினால் கடலூர் - பண்ருட்டி வழியாக செல்லும் பேருந்துகள் வரும், இல்லை ஷேர் ஆடோக்ககளும் நிறைய செல்கின்றன.
கோபுரதரிசனத்தை முடித்து விட்டு திருகோவிலினுள் செல்லும் இடபக்கத்திலேயே சுந்தரருக்கு தனிசன்னதி இருக்கிறது . பூலோக வாழ்க்கையை நீத்து, சுந்தரர் கயிலாயம் சென்றபோது, யானை மீது சென்றதாக வரலாறு கூறுகிறது. எனவே சுந்தரருக்கு எங்கே சந்நிதி அமைத்தாலும் யானை வாகனமே அமைப்பது வழக்கம். ஆகவே பரவை நாச்சியார்,சங்கிலிநாச்சியார் சூழ எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் (பூ செண்டு ) தாளமேந்தி காட்சி தருகிறார்.சுந்தரமூர்த்தி நாயனார் அவருடைய அவதார ஸ்தலத்தில் அவரை வணங்கிவிட்டு, திருக்கோவிலினுள் செல்லலாம்.
கோவிலின் உள்பக்கம் பெரிய பரப்பளவு கொண்ட இடமாக இருக்கிறது. நமக்கு எதிரே கவசமிடபட்ட கொடிமரமும் அதற்க்கு முன்னே பலிபீடமும் இருக்கிறது கொடிமரத்தில் இருக்கும் விநாயகர் சுந்தரவினயகராக காட்சி தருகிறார். நந்தியும் பெரியதாகவே இருக்கிறது. நந்திக்கு  நேர் எதிரே ஸ்தல பதிகங்களின் கல்வெட்டுகள் இருக்கிறது அதனை அடுத்து ஒரு வாகன மண்டபம் இருக்கிறது .அதில் தூண்களில் இருக்கும் நரசிம்ம உருவங்கள் பல்லவர்களின் பங்களிப்பு தெரிகிறது.
இப்ப நாம நிக்கிற இந்த இடம் வாகனமண்டபத்தின் முகப்பு , கோவிலின் உள்ளே இருக்கும் முதல்நிலை பிரகாரசுற்று. கோவிலினுள் செல்லும் முன்பு, இந்த கோவிலின் ஸ்தல வரலாறை கொஞ்சம் பார்க்கலாம் .ஒரு காலத்தில் முழுவதுமாக நாவல்மர காடுகளை இருந்ததினால் இந்த இடம் திருநாவலூர் என அழைக்கப்பட்டதாம் .பிறகு பேச்சு வழக்கில் திருநாமநல்லூர் என பேசபட்டாலும், இங்கே இருக்கும் வழித்தடங்களில் திருநாவலூர் என்றே குறிப்பிடபடுகிறது தேவர்கள் திருபாற்கடலில் வாசுகி என்ற பாம்பினை கயிறாக கொண்டு அமிர்தத்தை கடையும் போது வலிதாங்காமல் நஞ்சை கக்கிய போது அந்த நஞ்சை இறைவன் உண்டு அதில் கொஞ்ச நஞ்சு வித்தாக மாறி  பூமியில் விழுந்து நாவல் மரங்களாக  முழைக்க பெற்றது என்று ஒரு ஐதீகம் உண்டு நாவல்மரங்களாக நின்ற இந்தவனம், கூட ஜம்புவனம் என்றும் அழைக்கப்பட்டதாம்.
இங்கே இறைவன் தானாக தோன்றி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நன்கு யுகங்களுக்கு முன்பே இங்கு இறைவன் இருந்ததாக சொல்லபடுகிறது ஆரம்பகாலத்தில் கர்ப்பகிரகம் மட்டும் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.இங்கே இருக்கும் உட்கோவில் தொண்டீச்சரம் என்றும் அழைக்கப்படும். இது முதல் பராந்தகனின் முதல்மகன் இராசாதித்தனால் கட்டுவிக்கப் பட்டது எனவும்  கல்வெட்டு செய்திகள்குறிப்பிடுகின்றன. பின்னர் இரண்டு நிலை பிரகாரங்களாக  சேர ,சோழ ,பாண்டிய ,பல்லவ மன்னர்களால் பல்வேறு காலங்களில் விரிவுபடுதபட்டதாக சொல்லபடுகிறது. இது மிகப் பழமையான கோயில் ஜம்புநாதேசுவரர் என்று வழங்கி வந்த காலங்களில் சுந்தரர் ஜம்பு என்ற வடமொழி பெயரை நாவல் என்று அழைத்து திருநாவலீசன் என்று ஈசனையும் திருநாம நல்லூர் என்று ஊர்ப்பெயரையும் பாடலில் அழைத்துள்ளார்.
இப்ப நாம இரண்டாம் நிலை வாயிலை கடந்து உள்பிரகாரத்தினுள் நுழைகின்றோம்  நமக்கு நேரே மூலவர் தரிசனம் பக்கவாட்டு அறைகளில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிறது.சமய குறவர் நால்வரும்,சுந்தரர் இரு மனைவியருடன், நடராசர், சிவகாமி, முருகன், விநாயகர், வள்ளி, தெய்வயானை முதலிய உற்சவத் திருமேனிகளும் இங்கே காணலாம் ஆத்மார்த்த பூஜை எனபது நமக்கு மட்டும் பூஜை செய்து கொள்வது ஆத்மார்த்த பூஜையின் ஆவுடையார் சிறியதாக இருக்கும். பரார்த்த பூஜை எனபது ஆவுடையார் பெரிய திருகோலத்தில இருக்கும் இங்கே காணபடுவதும் அதுபோல ஒரு சிவலிங்கமே இந்த சிவலிங்கம் நடுநாட்டு சிற்றரசர்  நரசிங்க முனையரையர் பூசித்த மிகப்பெரிய சிவலிங்க மூர்த்தி.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டில்  இந்த ஸ்தல இறைவனை பூஜை செய்து வந்தவர் சடையனார். இவரது பிள்ளையாக அவதரித்தவர்தான் சுந்தரர். இளம்பிள்ளையாக ஓடி ஆடி விளையாடும் பருவத்தில், தமது சிறிய தேரை இழுத்துக் கொண்டு தெரு வழியே சென்று கொண்டிருந்தார்.சுந்தரர் அப்போது இவ்வூருக்கு அருகில் உள்ள சேந்தமங்கலத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த நரசிங்க முனையர் என்ற சிற்றரசர் இவ்வீதி வழியே குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வந்தாராம் அப்போது சிறுவன் சுந்தரர் சிறிய தேரை முன்னே இழுத்துப் போவதைக் கண்டார். சிறுவனைப் பார்த்து, "வழிவிடப் பா'' என்று மன்னர் கேட்க, மன்னரைத் திரும்பிப் பார்த்த அந்த சிறுவனின் வசீகரத் தோற்றத்தையும் ஒளி பொருந்திய முகத்தையும் பார்த்த மன்னர் மெய்சிலிர்த்தாராம் அப்போது சிறுவன் தனது துடுக்கான பேச்சால், "எமது தேர் போன பின்புதான் உமது தேர் போக முடியும். அப்படி அவசரமாகப் போக வேண்டும் என்றால் வலது புறம் உள்ள வீதி வழியே போய் கொள்ளுங்கள்'' என்று சொல்ல, மன்னர் எதுவும் பதில் பேசாமல் வேறு வழியே ஒதுங்கி போய்விட்டார். ஆனால் அதன்பிறகு மன்னருக்கு இருப்பு கொள்ளவில்லை. இவ்வுளவு அழகும் தெய்வீக முகமும் துடுக்கான பேச்சும் கொண்ட இந்த சிறுவனை தமது பிள்ளையாக எடுத்து வளர்க்க விரும்பினாராம். மறுநாள் சுந்தரரின் தந்தையான சடையனாரிடம் வந்து தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.மன்னரின் விருப்பத்தை ஏற்று அதற்கு ஒரு நிபந்தனையையும் விதித்தார். தினசரி ஒருமுறை சுந்தரரை சேந்தமங்கலத்தில் இருந்து அழைத்து வந்து இவ்விறைவனை வழிபடச் செய்ய வேண்டும்'' என்று சொன்னாராம். அதற்கு ஒப்புக் கொண்ட மன்னர் நரசிங்க முனையர், அதே நேரத்தில் தானும் சுந்தரரோடு இவ்வாலயம் வந்து வழிபடுவதற்கு இவ்வாலயத்திலேயே தனியாக ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய சொன்னார். அதன்படியே புதுலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.அந்த லிங்கம் தான் இப்போதும் கோவிலின் உள்பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.63 நாயன்மார்களில் 43- நாயன்மாராக நரசிங்க முனையர் உள்ளார்.
பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் தென்முக கடவுளான  தட்சிணாமூர்த்தி வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்த நிலையில்தான் காட்சிகொடுப்பார்.   கலைகளுக்கும் கல்விக்கும் குருவாக குருதட்சிணாமூர்த்தி அழைக்கபடுவார்  கல்விக்கு அழிவு எனபது இல்லை என்றும் அது இளமையானது என்றும் குறிப்பிடும் நோக்கத்துடனே குருதட்சிணாமூர்த்தி இளமையாக  காணப்படுவார் மேலும் படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமாரர்களான சநகர், சநந்தனர், சனத்குமாரர், சநாத்சுஜாதர் ஆகிய  நால்வரும்  ஞானம் பெறுவதற்காக குருவினை தேடி சென்றார்கள் எவராலும் அவர்களுடைய ஞானத்தின் முன் பதில்தர முடியவில்லை  சிவபெருமான் தான் தட்சிணாமூர்த்தியாக பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து . பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு  பதில் தந்தார். எனினும் ஞானத்தின் கேள்விகள் கேட்டுகொண்டே போகவே சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரை தரித்த கோலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார்  பிரம்ம குமாரர்களும் அமைதியும், ஆனந்தமும் கொண்டு ஞானம் பெற்றனர்.அதே உருவத்தில்தான் எல்லா சிவாலயங்களிலும் குரு தட்சிணாமூர்த்தி காட்சி கொடுப்பார் ஆனால் இந்த சன்னதியில் கோஷ்ட மூர்த்தியாகவுள்ள தட்சிணாமூர்த்தி உருவம்  ரிஷபத்தின் முன் நின்ற கோலத்தில் வலக்கையை ரிஷபத்தின்மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் அமைப்பு அதிசயத்தக்கது  காண்பதற்கே அழகாக இருக்கிறது மேலும் சுந்தரர் பூர நட்சத்திரத்தில் இங்கே இருக்கும் தட்சிணாமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்றுகொண்டார் எனவும் சொல்லபடுகிறது.
கிரேதா யுகத்தில் சம்புவனக் காடாக இருந்த திருநாவலூர் பகுதியில் சுயம்புவாக தோன்றி தொடர்ந்து நான்கு யுகங்களாக இருக்கும் இறைவன்  திரேதா யுகத்தில் திருநாவலேஸ்வரர், திருத்தொண்டீஸ்வரர் என்றும்; அம்பாள் சுந்தராம்பிகை, நாவலாம்பிகை என்றும் அழைக்கப்பட்டனர். முதல்யுகமான கிருதயுகத்தில் விஷ்ணு வழிபட்ட இலிங்கமும் திரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரர் வழிபட்ட இலிங்கம் துவாபர யுகத்தில் திருமாநல்லூர் என்று அழைக்கப்பட்ட இப்பகுதி, பிறகு நாவல் மரக்காடுகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் திருநாவலூர் என்று அழைக்கப்பட்டு பிரம்மா வழிபட்ட லிங்கமும்  கலி யுகத்தில் சுந்தரர் வழிபட்ட இலிங்கம் என நான்கு யுகலிங்க மூர்த்திகள் இங்கே இருகின்றன .
உள்பிராகாரசுற்றில் பொல்லாப் பிள்ளையார், சேக்கிழார், நால்வர், அறுபத்துமூவர், தொகைஅடியார்கள் ,வலம்புரிவிநாயகர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர் முதலிய சந்நிதிகளும்,இருக்கிறது அதை தொடர்ந்து கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. கருவறைச் சுவரில் சண்டேசுரர் வரலாறு  சிற்பவடிவில் செதுக்கப்பட்டுள்ளது மேலும் சில சிலலிங்க மூர்த்திகளும் உள்ளன. 
சிவபிரியர் என்னும் சிவபக்தர் பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார் அங்கு ஒரு இடத்தில இருக்கும் சிவலிங்கத்திற்கு தினமும் பாலைகறந்து அபிஷேகம் செய்கிறார் வீடுபோய் சேரும் போது  பசுக்களுக்கு  பால் இல்லாது போகவே அவருடன் வந்தவர்கள் அவருடைய தந்தையிடம்  முறையிடுகின்றார்கள். அதற்கு  சிவபிரியருடைய தகப்பனார், என்னுடைய புதல்வன் சிவபக்தன் அவன் அப்படி செய்யமாட்டான் என்று  மறுத்து சொல்கிறார்.உண்மை என்னவென்னு தெரிந்துகொள்வதற்க்கு அவரும் மரத்தின் மேலே ஏறி ஒளிந்து இருந்து பார்க்கிறார்,அப்பொழுது சிவபிரியர் பாலைகறந்து அபிஷேகம் செய்ய இருந்த போது அவரது தந்தை மரத்திலிருந்து இறங்கி பால் குடுவைகளை காலால் எட்டி உதைக்கிறார், கோபம் கொண்ட  சிவபிரியர் தன் கையிலிருந்த கோடரியால் பூஜைக்கு வைத்திருந்த பாலை தட்டி விட்டாயா என்று  கோபத்தில் வீச அவரது கால் வெட்டுப்பட்டு விடுகிறது அவரது பக்தியை மெச்சி சிவன் அவருடைய தந்தைக்கு மோட்ச பிராப்தியும், சிவபிரியருக்கு சண்டேஸ்வரர் பதவியும் கொடுத்தாக இந்த கல்வெட்டில் இருக்கும் காட்சிகள் குறிபிடுகிறது. மேலும் மேல்பக்கத்தில் இருக்கும் சிற்பத்தில் நால்வருக்கு சிவன் காட்சி கொடுத்தும் செதுக்கப்பட்டுள்ளது  இதை குறிக்கும் வண்ணம் சிவராத்திரி நாலாம் பாகத்தில் பாலபிஷேகம் இங்கே நடைபெறுமாம்.
இங்கே இருக்கும் சுவர்களில் எல்லாம் கல்வெட்டு குறிப்புகள் பொறிக்கபட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்து நிறைய தகவலை கொடுத்து இருகிறாங்க தொல்பொருள் ஆராய்ச்சியார்கள். அதுக்கு ஆதாரம் Annual Reports on South Indian Epigraphy for the year 1902. No. 325-380 and the S.I.I.Vol. VII No. 954 -1010.)
முதற்பராந்தக சோழனது மனைவி இவர் சேரநாட்டை சேர்ந்தவராவா,ர் இவரது முதல் மகன் இராஜாதித்தன், இந்த இராஜாதித்தன் மனைவியின் அண்ணன் இந்த திருகொவிலுக்கு ஒரு நுந்தாவிளக்கு நூறுசாவா மூவாப் பேராடுகளைக் கொடுத்துள்ளான்.(A.R.E. 1902 No. 363) இராசாதித்தன் அவரது தாயார்  இவர்கள் எல்லாம் செய்த திருப்பணிகள் எல்லாம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது (Epigraphica Indica, Volume VII page 133) முதற் பராந்தகசோழனின் இருபத்தெட்டாம் பட்டமேற்ற ஆண்டில் அதாவது கி.பி. 935 இல் தொண்டீச்சரத்தைக் கருங்கல்லால் கட்டிய இராசாதித்தனுடைய தாயார், பரிவாரத்தாள் சித்திரகோமளம் ஒரு நுந்தா விளக்கு ஒன்றுக்கு, தொண்ணூறு ஆடுகளையும் ஒரு ஈழவிளக்கையும் கொடுத்துள்ளாள் என்பது இக்கல்வெட்டின் பொருள்.  மேலும்இம் மண்டபங்களைக் கட்டியவர் வேளூர் கிழவர் பள்ளிபட்டணசுவாமி ஆவார். இவர்தான் கீழைத்திருவாசலும் கட்டினார் ( S.I.I. Vol. VII No. 1002) என்னும் கல்வெட்டின் மூலம் தெரியவந்தாலும் இக்கல்வெட்டின் தொடக்கத்தில் அரசர் பெயர் எதுவும் குறிப்பிடாததினால இந்த மண்டபங்கள் எந்த அரசர்களின் காலங்களில் கட்டப்பட்டன என்று தெளிவாக சொல்லமுடியவில்லை, இதில் நிறைய தகவல்கள் இருக்கின்றன பதிவின் நீளம் கருதி குறைவான தகவல்களையே நாம இங்கே பார்க்கிறோம். இந்த கல்வெட்டுகள் பற்றி விரிவாக வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.
நாம பார்க்கிற இந்த லிங்கம்,ஈசான  மூலையில் நவகிரகங்களுக்கு அருகிலேயே சுக்கிரனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்மார்த்த பூஜை செய்த லிங்கமான பார்க்கவீசுவரர்.ஒரு முறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தாராம்,  இவரது பூஜையை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தாராம், இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்களாம். தேவ, அசுர போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனால், இறந்த அசுரர்களை எல்லாம் சுக்ராச்சாரியார் தன் "சஞ்சீவினி' மந்திரத்தால் உயிர் பிழைக்க செய்தாராம் இதனால் பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்களாம் . சிவன் சுக்கிரனை அழைத்து, அவரை விழுங்கி விட்டாராம்.
சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தாராம் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவக்கிரக பதவியை கொடுத்து பூ உலகில் மக்கள் அனைவரும் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டாராம் அதன்பிறகு சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள், இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர்கள் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்கு வருவோருக்கு சுக்கிர கிரகம் தொடர்பான தோஷம் விலகி, செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.
சுக்ரனுக்கு வக்ர தோசம் தீர்ந்த தலம்.என்பதால் சுக்ர தோசம், திருமண வரம், வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெற விரும்புவோர் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும், ஈசனின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.பொதுவாக நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் கிழக்கு நோக்கி இருப்பார். ஆனால், இங்கு சூரியன் மேற்கு நோக்கி உள்ளார். இவர் இறைவனை தரிசிப்பதாக ஐதீகம் பக்கத்தில் பைரவர் திருமேனிகளும் சூரியனும் உள்ளனர்.இதில் சிறப்பு அம்சம் என்னன்னா சூரிய பகவானும் இந்த ஸ்தலத்து மூர்த்தியை வணங்கியதாக ஐதீகம் உண்டு ஒவ்வரு வருஷமும் பங்குனி மாதம் 23 ம் தியதி முதல் 27 ம் தியதி வரை காலை சுமார் 6-15 மணிக்கு  சூரியனின் ஒளிக்கதிர்கள் நேராக கருவறையில் இருக்கும் சிவலிங்க மேனி மீது படும்காட்சி பார்ப்பதற்க்கே பரவசமூட்டுமாறு இருக்குமாம் இதுகாண திரளான மக்கள் இங்கே வருவார்களாம்.
இந்த  திருகோவிலினுள் ஸ்ரீ வரதராஜ பெருமாள் மனோன்மணி அம்பாள் சன்னதியும் இருகின்றன இந்த ஸ்தலத்து  லிங்கம் கிருதயுகத்தில் மகாவிஷ்ணு  வழிபட்ட தலம்  பிரகலாதனின் தந்தையான  இரண்யன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். மகாவிஷ்ணுவும் இரண்யனை வதம் செய்ய முடிவு செய்தார். ஆனாலும் வரங்கள் பல பெற்ற இரண்யன் தனக்கு மரணம் நிலத்திலும், நிரிலும், வானிலும், ஆயுதங்களாலும், மனிதர்களாலும், தேவர்களாலும், விலங்குகளாலும், பகலிலும், இரவிலும், அரண்மனை உள்ளேயும், வெளியிலும் ஏற்படக்கூடாது என்ற வரமும் பெற்றிருந்தான். இப்படிப்பட்ட இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார். நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர். இத்தலத்தில் மகாவிஷ்ணுவிற்கு தனிக்கோவில் இருக்கிறது  ஆலய பிரகாரத்தின்.வடக்குச் சுற்றில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். உயரமாக அமைந்த இந்தச் சந்நிதிக்குப் படிகளேறிப் செல்ல வேண்டும். முகப்பு மண்டமும், மகா மண்டபமும் கூடிய இந்த சந்நிதியில் கிழக்கு நோக்கி ஆறடி உயரத்தில் வரதராஜப் பெருமாள் ஆஜானுபாகுவாக காட்சி தருகிறார். சந்நிதிக்கு எதிரில் கருடன் சிற்பம் உள்ளது.
தூரத்தில் தெரிவது அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கிய அழகான முன் மண்டபம் உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பு பலிபீடமும் அதன் முன்பு நந்தியும் இருக்கிறது இங்கே அம்பாள் நாவலாம்பிகை, சுந்தரநாயகி என்னும் திருநாமங்களோடு நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தியான சொரூபமாக உள்ளார் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று மனோன்மணியம்மனுக்குச் சிறப்பு வழிபாடும் உற்சவருக்கு ஊஞ்சல் உற்சவமும் நிகழும். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் துர்க்கை , மனோன்மணியம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கைக்கு ராகுகால வழிபாடும் நடத்தபடுகின்றது.
வெள்ளி கிழமைகளில் சுக்கிரனுக்கும் அவர் ஸ்தாபித்த லிங்கத்திற்கும் சிறப்பு பூஜைகள் நிகழும். வெண்ணெய் வெண்மை நிறமுடைய நெய், மொச்சை, வெண் பட்டாடை ஆகியவற்றுடன் வழிபாடு சிறப்பாக நடத்தப்படும். வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற ஆடை மஞ்சள் மலர்கள் மஞ்சள் நிறக் கடலை ஆகிய பொருட்களை  படைத்து சிறப்பாக வழிபாடுகள் நடைபெறுகின்றன.இந்த சன்னதியில் நடக்கும் விசேஷ விழாக்கள் வழிபாடுகள் எல்லாம் காமிக ஆகமத்திலுள்ள விதி முறைகளுக்கேற்ப  நடைபெறுகிறது சுந்தரர் ஜனன விழா - ஆவணி மாதம் - உத்ர நட்சத்திரம் நாளன்று - 1 நாள் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். சுந்தரரின் குருபூஜை விழா - ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா - 15 நாட்கள் நடைபெறும் சித்திரைப் புத்தாண்டு நாளில் பஞ்சமூர்த்திகளுக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் உபயதாரர்களின் உதவியுடன் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.
இங்கு ஸ்தல விருட்சம் நாவல்மரம், அதன் பீடத்திலையே  விநாயகரும் சிவலிங்க திருமேனிகளும் உள்ளன கோவிலுக்குள் இருக்கும் மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் பார்த்து செல்லவேண்டும் சிறுவர்களையும் கவனமாக கூட்டிசெல்லவேண்டும் ஏன்னா நாங்கள் செல்லும் போது இந்த இடத்தில்  சிறியபாம்பு ஒன்று எங்களை வேகமாக கடந்து சென்றது.
இங்கு நாகருக்கு தனி சன்னதி காணபடுகிறது அதுவும் மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் தான்  இருக்கிறது இங்கு நடக்கும் வழிபாடுகள் வெள்ளிக்கிழமைகளில் வெண்தாமரைப்பூவினாலும் வெண்பட்டு வஸ்திரம் அணிவித்து வெண்மொச்சை நிவேதனம் செய்து வெண்நெய்யால் தீபம் போட்டு வழிபாடு செய்யும் பக்தர்கள் தங்கள் எண்ணப்படி எண்ணங்கள் தடங்கலின்றி நிறைவேறப் பெறுவார்கள் எனபது நம்பிக்கை . 3 மஞ்சள் 3 எலுமிச்சம் பழம் வைத்து குங்கும அர்ச்சனை செய்து பழத்தை பெற்றுச் சென்றால் மங்கல காரியம் நிறைவேறும் என்ற ஐதீகமும் உண்டு.
பிரதோஷ காலங்களில் சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிஷேகம் செய்யபடுகிறது தூய வஸ்திரமும் சாத்தபடுகிறது இதை தவிர சுவாமிக்கு வெண் வஸ்திரமும் அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், புடவை சாத்துதல் ஆகியவையும் நடைபெறும் இவ்வுளவு சிறப்புவாய்ந்த கோவிலுக்கு நம்மால் இயன்ற அளவு அன்னதானதிற்க்கோ இல்லை பூஜை வழிபாடுகளுக்கோ பொருளுதவிகளை செய்யலாம் மேலும் இத் திருக்கோவிலை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இங்கு பூஜை செய்யும் சம்பந்த குருக்கள் (9443624585)  என்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்  மீண்டும் அடுத்தவாரம் புண்ணியம் தேடி பயணத்தில் ராமாயண காலத்து நிகழ்வுகளுடன் சம்பந்த பட்ட ஒரு திருகோவிலில் இருந்து  சந்திக்கலாம்.

4 comments:

  1. நிறைய தகவல்களுடனும் அழகிய படங்களுடனும் சிறப்பான ஓர் ஆலயத்தை அறிமுகம் செய்வித்தமைக்குப் பாராட்டுக்கள்! எழுத்துப் பிழைகள் நிறைய உள்ளன. சரிசெய்தால் நன்றாக இருக்கும். நன்றி!

    ReplyDelete
  2. அப்படியா பார்கிறேன் அவசரத்தில் கவனிக்கவில்லை போலும் ..நன்றி சகோ

    ReplyDelete
  3. இதுவரை சென்றிராத கோயில்... தட்சிணாமூர்த்தி சிறப்பு உட்பட அனைத்தும் அருமை... நன்றி சகோதரி...

    ReplyDelete
  4. அழகிய படங்களுடனும் அருமையான விவரங்களுடனும் பதிவு. படித்தேன், ரசித்தேன்.

    ReplyDelete