Saturday, October 20, 2018

எங்கப்பன் குதிருக்குள் இல்லை - கிராமத்து வாழ்க்கை 6


குன்றின்மணி. பிள்ளையார் பண்டிகையின்போது பிள்ளையாருக்கு கண் வைக்க இதைத்தான்  வைப்பாங்க. பண்டிகை முடிஞ்சதும் பிள்ளையாரை கரைக்கும் முன் வீட்டுக்கு தெரியாம இதை எடுத்து வச்சுப்போம். ஏன்னா இது விசம்ன்னு சொல்வாங்க.  எதாவது தப்பு செஞ்சு மாட்டிக்கும்போது இதை சாப்பிட்டு செத்துடலாமான்னு தோணும். ஆனா மனசு தைரியப்படாது. அதை சாப்பிட்டா ஒன்னும் ஆகாது, செரிக்காம, மறுநாள் காலைல முழுசா வெளில வந்திடும்ன்னு வளர்ந்த பின்னாடிதான் தெரிஞ்சுது. முன்னலாம் பொன்னை எடைபோட இது பயன்பட்டதுன்னும் பிற்காலத்தில்தான் தெரிஞ்சுது.
கேசியோ வாட்ச். 60, 70களில் பொறந்தவங்கலாம் முதன்முதலா வாட்ச் கட்டியது அஞ்சாப்பு படிக்கும்போது ஸ்கூல் க்ரூப் போட்டோவுக்காகத்தான் இருக்கும்.  கைக்கு பொருந்தாத அக்கம் பக்கம் வாங்கின ஓசி வாட்சை கட்டிக்கிட்டு, அது தெரியாம எப்படியோ சமாளிச்சு போட்டோவுக்கு போஸ் கொடுப்போம். அப்புறமாதான் வாட்ச் ஆசை வர, அப்பா வாங்கிக்கொடுத்த வாட்ச். வெறும் நம்பர்ல மட்டும் நேரத்தை காட்டும் சில்வரிலான எலக்ட்ரானிக் வாட்ச் அது.  கீறல் விழுந்து நேரமே தெரிலைன்னாலும் விடாம கட்டிக்கிட்டு ஸ்கூல் போனதுலாம் பொன்னான காலம்.
இதுக்கு பேரு கமலை இல்லன்னா கவலை.   ரெண்டு மாடுகளின் துணையோடு செயல்படும்.  பறின்னு சொல்லப்படும் ஒரு வாயகன்ற பாத்திரத்துல கயிற்றை கட்டி, கிணற்று மேல இருக்கும் ராட்டிணத்தில் நுழைச்சு, மாடுகளோடு இணைச்சு, ஒருத்தர் அந்த மாடுகளை ஓட்ட, மாடு முன்னுக்கு செல்ல, தண்ணி மேல வரும். மாடு பின்னுக்கு போக அந்த பறி மீண்டும் கிணத்துக்குள் நீரை எடுக்க போகும். 
இதுக்கு பேரு பறி, கூனை. இது அலுமினியம், இரும்பும் கலந்த மாதிரியான ஒரு உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும். இந்த பறி தோலாலும் செய்யப்பட்டிருக்கும். பறியின் அடிப்பகுதியானது வாய்ப்பகுதியைவிட சின்னதாகவும், திறந்துமிருக்கும். அந்த திறப்பிண் நுனியில்   தோலிலான பை  மாதிரியான அமைப்பு இருக்கும். அதிலிருந்து நீர் வழியாம இருக்க கயிறு கட்டி மேல மாடுகளோடு இணைச்சிருப்பாங்க. 
  
மாடுகளோட அசைவுக்கேற்ப இந்த கமலை மேலேறி, இறங்கி நீர் வயல்வெளிகளுக்கு பாய்ச்சப்படும்.  பம்ப்செட், போர்வெல் வராத காலத்தில் இப்படிதான் நீர் இறைச்சு விவசாயம் செய்தாங்க.
அந்த காலத்து வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் மாதிரியான தகவல் தொழில்நுட்ப சாதனமிது. இதுல எப்படின்னு யோசிக்காதீங்க. இதுக்கு பேரு திருகை. ஆனா எங்க ஊர் பக்கம் எந்திரக்கல்ன்னு சொல்வாங்க.  பயறு, உளுந்து மாதிரியான தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்க இது பயன்படும். இது கருங்கல்லால் ஆனது.  அசையாம நிலையா இருக்கும் கீழ்பாகமும்,   அசையும் மேல்பாகமென இரண்டு பாகம் கொண்டது. கீழ்பாகத்தில் இரும்பிலான  தண்டு நிரந்தரமா பொருத்தப்பட்டிருக்கும். மேல்பாகத்தில் துளை இருக்கும். அந்த துளை, இரும்பு தண்டை அளவில் பெருசா இருக்கும்.  இந்த துளை வழியா கீழ்ப்பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்னு மேல ஒன்னாய் வைக்கனும். மேல்பாகத்தை சுற்ற வசதியாய் மரத்தால் ஆன தண்டு ஒன்றை பொருத்தி இருப்பாங்க. அதை பிடிச்சு திருகிக்கிட்டா துளை வழியா தானியத்தை போட்டா, கொஞ்சம் கொஞ்சமா கீழிறங்கி இரண்டு பாகத்துக்கும் நடுவால மாட்டிக்கிட்டு தோல், பருப்புன்னு பிரிஞ்சு வரும். இரண்டு பாகங்களுக்கிடையே வெளிவரும்.  அதை முறத்தால் புடைச்சா பருப்பு கிடைக்கும். இதுல கம்பு, கேழ்வரகும் அரைச்சு தோல் நீக்கினதா நினைவு. 
கூஜா. இன்னிக்கு கலர்கலரா, பல டிசைன்ல தண்ணி கொண்டு போக பாட்டில் கிடைக்குது. இல்லன்னாலும் கூல்ட்ரிங்க் வரும் பாட்டிலை திரும்பவும் தண்ணி கொண்டு போக பயன்படுத்துறோம். அந்த காலத்தில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போக இந்த  கூஜாதான் பயன்பட்டுது. எனக்கு தெரிஞ்சு எங்க வீட்டில் சில்வர்ல இருந்துச்சு. என் அத்தை வீட்டில் செம்பாலான கூஜாவை பார்த்திருக்கேன். பால், தயிர், தண்ணின்னு சிந்தாம சிதறாம கொண்டு போக பயன்பட்டது.
வெத்தலை பெட்டி.. பித்தளையால் ஆன வெத்தலை பெட்டியை எங்க சார் வீட்டில் பார்த்திருக்கேன். அந்த வீட்டு தாத்தா அதை திறந்து அதிலிருக்கும் வெத்தலையை எடுத்து, அப்படி இப்படின்னு வேட்டில துடைச்சு, காம்பு கிள்ளி,நுனி விரலால் சுண்ணாம்பு தடவி, அதில் பாக்கு, புகையிலை வச்சு போட்டுப்பார்.  சிலர் ஏலக்காய், கிராம்பு, கல்கண்டுலாம் வச்சிருப்பாங்கன்னு சொல்வார். 
இதுக்கு பேரு பாதாள கொலுசு.  கிணத்துல தண்ணி சேந்தும்போது,  கயிறு அறுந்து வாளி இல்லன்னா குடம் கிணத்துக்குள் விழுந்துட்டா இந்த பாதாள கொலுசை ஒரு கயிற்றில் கட்டி, கிணத்துக்குள் விட்டு அப்படி இப்படின்னு கிணத்துக்குள் துழாவினா கிணத்துக்குள் இருக்கும் வாளி, குடம்லாம் இந்த கொக்கில மாட்டி வந்துரும்.

இன்றைய குழந்தைகள் நடைப்பயில வாக்கர் இருக்கு.  ஆனா, அன்றைய குழந்தைகள் நடைப்பயில இந்த நடைவண்டிதான் இருந்துச்சு. குழந்தை இதை பிடிச்சுக்கிட்டு தள்ளிக்கிட்டே போய் நடைப்பழகும். கீழ விழுந்து கத்தும். கொஞ்சம் வளர்ந்தபின் நான்லாம் இதுல டபுள்ஸ் போய் இருக்கேன். முன்னாடி நீளமா இருக்கும் தண்டில் உக்காந்துக்கிட்டு யாராவது தள்ளிவிட சொல்லி இருக்கேன். இல்லன்னா, யாரையாவது உக்கார வச்சு தள்ளி விட்டிருக்கேன்.
இன்னிக்கு போன்லயே டார்ச் லைட் வந்திட்டுது. ஆனா, அன்னிக்கு இதான் ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் எல்லாமே! பெரும்பாலும், பிராந்தி பாட்டில், போனிசன் கிரேப் பாட்டில்தான் இதுக்கு பயன்படும். மூடில ஓட்டை போட்டு, திரியை நுழைச்சு பாட்டிலில் மண்ணெண்ணை நிரப்பி, எரிய விடுவோம். மாலைநேரத்தில் கரண்ட் கட் ஆச்சுன்னா இந்த விளக்கு வெளிச்சத்தில்தான் படிப்போம். அந்த மண்ணெண்ணை வாசனையும், புகை வாசனையும் அத்தனை விருப்பம்.
உரி... போன வாரம் பார்த்த வைக்கோலால் ஆன பிரிமணையில் ஒரே அளவிலான கயிறை கட்டி உயரமா தூக்கி கட்டி பானை இல்லன்னா, சட்டியை ஒன்னு மேல ஒன்னு அடுக்கி வச்சா உரி ரெடி. பூனை, நாய், எலிலாம் உருட்டாம இருக்க வெண்ணெய், நெய், பண்டம்லாம் இதுலதான் வைப்பாங்க. அந்த காலத்து அம்மாக்களின் பீரோவும் இதான்.
இந்த காலத்து பசங்க மத்தை பார்த்திருக்க வாய்ப்புண்டு.  ஆனா தயிர்கடையும் மத்தை பார்த்திருக்க வாய்ப்பிருக்காது. மரத்துல இல்ல அலுமினியத்துல கிடைக்குது. மத்தைப்போல மழுங்க இல்லாம நுனியில் அரும்பு மாதிரி பிளவுப்பட்டிருக்கும். தயிரை ஒரு மாத்திரத்தில் போட்டு கடைஞ்சா, வெண்ணெய் வரும். இப்ப இதுக்கும் மெஷின் வந்திட்டுது.
துத்தநாகத்தால் ஆனது இந்த சால். இது சிமெண்டிலும் வந்திருக்கு. நான் பார்த்திருக்கேன். அந்த காலத்தில் தண்ணி நிரப்பி வைக்க பயன்பட்டது.
வீட்டின் மூலையில் மண்ணால் ஆன சின்னதா ஒரு அறை , அதன் அடியில் ஒரு துளையுமா இருக்கும் அமைப்பே குதிர். இதுலதான் நெல், கம்பு, சோளம் மாதிரியான பொருட்களை சேமிச்சு வைப்பாங்க. மேல திறப்பு இருக்கும். அதன்வழியா இதுக்குள் தானியங்களை கொட்டி சேமிப்பாங்க. கீழிருக்கும் திறப்பு வழியா தானியங்களை கொஞ்சம் கொஞ்சமா எடுத்துப்பாங்க. எங்க பூர்வீக கிராமத்து வீட்டில் இருந்துச்சு. தானியாங்கள் இல்லாதபோது அமாவாசை அன்னிக்கு இதுக்குள் என்னை இறக்கி பெருக்கி வாரி, சாணம் போட்டு மொழுகிவிடச்சொல்லும் என் பாட்டி. அதுக்கு எனக்கு கூலியா 25காசு தருவாங்க.... இருட்டு பயத்தை கொடுத்தாலும் 25பைசா தைரியத்தை கொடுக்கும்... இதுக்குள் ஆள் இருந்தால் தெரியாது. அதனால்தான் எங்கப்பன் குதிருக்குள் இல்லைன்ற சொலவடை உண்டாச்சோ என்னமோ?!

கிராமத்து வாழ்க்கை தொடரும்....
நன்றியுடன்,
ராஜி

9 comments:

  1. பழமையான விடயங்கள் ரசிக்க வைத்தது.
    குதிர் இதை குளுமை என்றும் சொல்வார்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. குதிர்ன்னு சொல்லிதான் எனக்கு தெரியும்ண்ணே. பழமை என்னிக்குமே ரசிக்கவைக்கும்.

      Delete
  2. அன்று பொற்காலம்... இன்று போர்க்களம்...

    ReplyDelete
    Replies
    1. எதிரி யார்ன்னு தெரியாமயே போராடும் போர்க்களம்

      Delete
  3. Replies
    1. வருமான்னு ஏங்கும் மனம்.. வரவே வராதுன்னு உணர்ந்து எச்சரிக்கும் மனசு..இந்த இரண்டுக்கும் நடுவிலான போராட்டமே நம் வாழ்க்கை

      Delete
  4. அனைத்துமே நான் பார்த்தவை. ரசித்தவை. நினைவுகூர்ந்த விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. பழமையும், புதுமையையும் ஒருசேர அனுபவிச்ச பாக்கியசாலிகள்ப்பா நாம. இந்த வாய்ப்பு நம் முன்னோர்களுக்கும் கிடையாது, நம் வாரிசுகளுக்கும் கிடையாது

      Delete
  5. பாதாள கொலுசு. - இல்லை. இதன் பெயர் பாதாள கரண்டி. கிணற்றுக்குள் விழுந்தவைகளை எடுக்கப் பயபடுவது. நான் உபயோகித்திருக்கிறேன்.

    ReplyDelete