ஜலகண்டேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை கிரிவலம், திருமியச்சூர் லலிதாம்பிகை கோவில் இதுமாதிரியான கோவிலுக்கு போனால் இனம்புரியாத அமைதி மகிழ்ச்சி உண்டாகும். தஞ்சை பெரியகோவில், ஸ்ரீபுரம் நாராயணக்கோடி, காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மாதிரியான கோவில் பிரமிப்பை தரும். இப்படி ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு அனுபவத்தை நமக்கு தரும். ஆனா, ஒரு கோவில் மனவலியை கொடுத்துச்சு. எனக்கு மனவலியை கொடுத்த அந்த கோவிலை, ஏன் மனவலியை கொடுத்துச்சுன்னு காரண காரியத்தோடு இன்றைய பதிவில் பார்க்கபோறோம்.
சமீபத்துல வேலூர் பக்கமிருக்கும் மகாதேவன் மலைக்கு போக நேர்ந்தது. ஊர்பயணம்ன்னா ஜாலிதானே?! சிறுகுழந்தையின் குதூகலத்தோடு கிளம்பியாச்சுது. வேலூர் டூ பெங்களூர் பைபாசில் பள்ளிக்கொண்டா டோல்கேட்டிலிருந்து வலப்பக்கம் திரும்பினால் பள்ளிக்கொண்டா வரும். அங்க இருக்கும் சயனக்கோலத்திலிருக்கும் அரங்கனுக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு மகாதேவ மலைக்கு பயணமானோம். மலைகள், வயல்வெளிகள், சிற்றோடைகள்ன்னு வழியெங்கும் இயற்கை எழில் மனசை கொள்ளைக்கொண்டது. தூரத்திலேயே மலை உச்சியிலிருக்கும் கோவில் தென்பட்டது. மலையை நெருங்க நெருங்க ஒரு குழந்தையின் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
மலை அடிவாரம்வரை பேருந்துகள் செல்லுது. அங்கிருந்து மலைக்கு நடந்தும் போகலாம், அல்லது வாகனங்கள் மூலமாவும் போகலாம். மலைக்கு மேல போக ஷேர் ஆட்டோக்களும் உண்டு. படிகள் தொடங்குமிடத்திலிருந்து வலப்பக்கம் திரும்பினால் மிகப்பெரிய திருக்குளம் கட்டுமானத்தில் இருக்கு. அதனால் உள்ள போகமுடில. மலைக்கு போகும்போது மேலிருந்து கீழ பார்த்ததுதான். மலையடிவாரத்திலிருந்து மலைக்கு ஏற ஆரம்பிக்கும்போதே மனசு வலிக்க ஆரம்பித்தது. மெல்ல மெல்ல இரண்டு அல்லது மூன்று மலைகள் இக்கோவிலுக்காக தன்னை இழந்துக்கொண்டிருக்கிறது. மண் அள்ளும் எந்திரம், கல் உடைக்கும் எந்திரம், பாறைகளை பிளக்க வெடிகள்ன்னு அந்த இடமே மனசை பிசைய ஆரம்பிச்சது.
மகாதேவன்மலைங்குறது சதுரகிரி, கொல்லிமலை, வெள்ளியங்கிரி, பர்வதமலை மாதிரியான ஒரு சிவத்தலம். பௌர்ணமிகளில் சிவபக்தர்கள் இங்க தங்கி இருந்து சுயம்புவாய் உருவான சிவனுக்கு அபிசேகம், ஆராதனை செய்வாங்கன்னும், சித்தர்கள் அரூபமாய் இந்த இடத்துக்கு வந்து போவாங்கன்னும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன். அதனால்தான் இந்த கோவிலுக்கு போகலாம்ன்னும் ஆசைப்பட்டேன். திருக்குளமா இல்ல சினிமா செட்டிங்கான்னு சந்தேகப்படுமளவுக்கு வேலைப்பாடுகள் நடந்துக்கிட்டிருக்கு.
கோவிலுக்கு அருகே வரையில் செல்ல வசதி இருக்கு. இக்கோவில் கிட்டத்தட்ட 1000வருசம் பழமையானது. இறைமூர்த்தங்கள் சுயம்புவாய் உண்டாகி இருப்பதை பல கோவில்களில் பார்த்திருக்கோம். ஆனா, இக்கோவிலில் சிவன் மட்டுமில்லாம நந்தீஸ்வரரும் சுயம்புவாய் உருவானவர். மலைகள், காடுகள், வயல்வெளிகள்ன்னு இந்த இடமே அமைதியாய் இருந்ததால் சிவபக்தர்களுக்கு பிடித்துப்போனதால் பௌர்ணமிகளில் இங்கு வந்து சிவனை பூஜிப்பது வழக்கமாம்.
நாம போற வாகனங்களை நிறுத்தவே ஓரிரு ஏக்கரா கணக்கில் இந்த இடம் பறந்து விரிந்திருக்கு. ஆதிகாலம் தொட்டு இருந்து வந்த கோவில் வாசல் தெற்குபக்கமென இருந்ததை மாற்றி, வடக்கு பக்கமா மாத்தி வைத்து கட்டுமாணப்பணிகள் நடந்துக்கிட்டிருக்கு. சுமார் பத்து இருபது படிகளை கடந்தால் நுழைவு வாசல் வரும். ஆனா, இப்போதைக்கு இந்த வாசல் வி.ஐ.பிகளுக்கு மட்டுமே. நமக்குலாம் இல்ல. அதனால், பழைய வழியிலேயே செல்ல ஆரம்பித்தோம்.
கிட்டத்தட்ட ஆறடி உயரத்தில் பிள்ளையார் நம்மை வரவேற்று, வழித்துணையாய் வருவேன்னு உக்காந்திருக்கார். நாம எப்படி சொகுசா இயற்கைஅயை வாழ்ந்துக்கிட்டிருக்கிறோமென்பதை ஓங்கி நச்சென்று குட்டி அறிவுறுத்தும்படி இருந்தது இந்த பயணம்.
மலைக்க வைக்கும் படிகள், நுரையீரல் தெரிச்சு வாய் வழியா வந்திடுமோன்னு இருந்தது. எங்கு திரும்பினாலும் வினாயகரே வீற்றிருக்கிறார்.
அவருக்கு போட்டியா ஆஞ்சினேயரும் சரிவிகத்தில் சின்னதும் பெருசுமா இங்க இருக்கார்.
என்னம்மா முடியலியான்னு பிள்ளைகள் கிண்டல் பேச, இப்படிதான் திருத்தணி படிகட்டில் துள்ளி குதிச்சு ஏறும்போது என் மம்மியை நான் கிண்டல் பண்ணதுலாம் கண்முன் வந்து போனது.
மனசுக்கு இதமளிக்க சின்ன சின்னதான நீருற்றும், நீர்வீழ்ச்சியும்...
இதற்குமேல் முடியாதென கால்கள் கெஞ்ச ஆரம்பிச்சபோது கருவறை வந்திடுச்சும்மான்னு சொல்லிட்டு போனார் ஒரு பக்தர். மாலை 5 மணிக்கு போனதால் படிக்கட்டுகள்லாம் இருட்டுல மூழ்கி கிடந்தது.
நுழைவு வாயிலுக்கும், கருவறைக்கும் நேராய் பலிபீடம் இருக்கும். ஆனா, இந்த கோவிலில் சம்பந்தமே இல்லாம தனியாய் ஒதுங்கி இருக்கு. மேல படத்தில் பார்க்குறது பிரதோஷ மண்டபம். இங்கதான் பிரதோஷ வேளையில் நந்திபகவானுக்கு அபிஷேகம் நடக்கும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு சுயம்புவாய் உருவான சிவபெருமானையும், நந்தியையும் இப்பகுதி மக்கள் பார்வைக்கு கிடைச்சிருக்கு. ஆள் அரவமற்ற இடத்திலிருந்தாலும் சிவனுக்கும் நந்திக்கும் யாரோ அபிஷேக ஆராதனை செய்திருப்பதை கண்ட இப்பகுதி மக்கள் கூடி விவாதிக்க, அங்கிருந்த சாமியாடி ஒருத்தர்மேல் வந்த சிவன், இது சித்தர்கள் வணங்கும் லிங்கம், இங்கேயே இருக்க சிவன் முடிவெடுத்திருப்பதால் தனக்கு ஒரு கோவில் எழுப்பி, மகாதேவன் என அழைக்கனும்ன்னு சொல்லி இருக்கார். அதன்படியே சின்னதா ஒரு கோவிலை எழுப்பி வணங்கி வந்தனர்.
சித்தர்களை சந்திக்க விரும்பிய சிவபக்தர்கள் பௌர்ணமிதோறும் இங்க வந்து தங்கிச்செல்வதை வழக்கமாக்கி கொண்டிருந்தனர். பர்வதமலை போலவே ஓரடிக்கும் குறைவான உயரத்திலேயே சுயம்பு லிங்கம் இருக்கும். கொஞ்ச நாள் முன்வரை பக்தர்கள் தன் கையாலேயே அபிஷேக ஆராதனை செய்து வந்தனர். இப்ப அப்படியில்லை.
எல்லாம் நல்லபடியாவே போய்க்கிட்டு இருந்துச்சு. கொஞ்ச 1970 காலக்கட்டத்தில் தேவானந்தம் என்பவர் இங்கிருந்த குகைக்குள் தங்கி , ரிஷிகேஷிலிருந்து தான் கொண்டுவந்த லிங்கம் ஒன்றை காளஹஸ்தி வழியாக மகாதேவமலைக்கு கொண்டு வந்து, அக்குகைக்குள் வைத்து பூஜை செய்து வழிபட துவங்கினார். கொஞ்ச நாளில் அங்கேயே ஜீவசமாதிய்மானார். அவருக்கு பின் அந்த குகைக்குள் சிவனுக்கு பூஜை செய்ய ஆரம்பித்தவர்தான் ஸ்ரீசலஸ்ரீ மகானந்த சாமியார். தன்னை ஒரு சித்தர்ன்னு சொல்லிக்கிட்டார். நாள்கணக்கில் குளியல், பல்துலக்குதல்ன்னு எதுமில்லாமல் இருப்பாராம். ஆனா, நிமிசத்துக்கு ஒருமுறை விபூதியை அள்ளி தன் உடலில் பூசிக்குவாராம். அந்த குகைக்குள் தலைக்கீழாய் தொங்கி தியானம் செய்வார்ன்னும் சொல்றாங்க. அவர் தூங்கும்போது ஐந்து தலை நாகமொன்று வந்து படமெடுத்து நிக்குமாம்!! ஆனா, நான் பார்க்கல. அதுசரி, நான் என்ன விஐபியா என்னை அந்த இடத்துக்கு கூட்டிப்போக!!
அன்னம், தண்ணின்னு ஏதுமில்லாம நாள்கணக்கில் இருப்பார்ன்னு சொல்லப்பட்ட இந்த சித்தர், இப்ப ஏசி, செல்போன், லாப்டாப்ன்னு ஏகமா வாழ்ந்துக்கிட்டிருக்கார். கொஞ்சம் அப்பிடி இப்படி இருந்தால் பைத்தியம்ன்னு சொல்வாங்க. இல்லன்னா, சித்தர், சாமியார்ன்னு தலையில் வச்சு கொண்டாடுவாங்க. அதுதான் இங்க நடந்தது, மெல்ல மெல்ல அவர் புகழ் உள்ளூரிலிருந்து வெளியூருக்கும் பரவ ஆரம்பிச்சது. மத்திய, மாநில அமைச்சர்கள், சசிகலா புகழ் தினகரன்ன்னு விஐபிகள் இங்க குவிய ஆரம்பிச்சாங்க.
முறையான அனுமதி இன்றி கோவில் எழும்ப ஆரம்பிச்சது. அன்னம், தண்ணி இல்லாம தான் இருந்தாலும் பக்தர்கள் பசியாற அன்னதானம் செய்ய ஆரம்பிச்சார் சாமியார். இலவசமாய் கொடுத்தா நம்மாளுங்க சும்மா விடுவாங்களா?! சாமியார் பத்தி ஏகத்துக்கும் அடிச்சு விட ஆரம்பிச்சாங்க. இதுவரை 75 ஊமைகளை பேச வச்சிருக்கிறார். முடவர்களை நடக்க வச்சிருக்கிறார். இவரை தரிசிச்சா தீராத பிரச்சனைலாம் தீருமென.. ஊர் முழுக்க ஆகா ஓகோன்னு அடிச்சு விட்டாங்க.
எதை தின்னா பித்தம் தெளியும்ன்னு பிரச்சனையில் சிக்கி தவிக்கும் மக்கள் சாமியாரை பார்க்க ஆரம்பிச்சாங்க. அவராய் எதும் கேட்கலைன்னாலும், அரிசி, பருப்பு, தேங்காய்ன்னு குடோவுனில் குவிய ஆரம்பிச்சது. பழைய கோவில் இந்து அறநிலையத்துறையில் இருக்குன்னு அறிவிப்பு பலகை இருப்பது ஒப்புக்குதான்.
இங்கிருக்கும் ஒரு மலையை அப்படியே தரைமட்டமாக்கி அருகிலிருக்கும் கிராமத்து மக்களுக்கு 2000 வீடுகள் கட்டி கொடுக்க போறதா சொல்லி இருக்காராம். ஒவ்வொரு வீடும் 9லட்சம் பெறுமானமுள்ளதுன்னும் சொல்லி இருக்கார். ஒருத்தன்கிட்ட இருந்து எதாவது அடிக்கனும்ன்னா முதல்ல அவன் ஆசையை தூண்டனும்ன்னு சதுரங்க படத்தில் ஒரு வசனம் வரும். அதுக்கு இதுதான் சரியான உதாரணம்போல! இதுக்குலாம் பைசா எதுன்னு சாமியார்கிடட நிருபர்கள் கேட்டதுக்கு பிச்சை எடுத்து கட்டுவேன்னு சொல்லி இருக்கார். இத்தனைக்கும் இந்த கோவிலுக்குன்னு எந்த அறக்கட்டளையும் கிடையாது. மேல படத்தில் இருப்பதுஅருகிலிருந்த மலையில் இருந்த மரங்கள்லாம் வெட்டிப்போட்ட மரத்துண்டுகள். இது சாம்பிள்தான். இதுமாதிரி ஐந்திலிருந்து பத்து இடத்துல குமிச்சு வச்சிருக்காங்க.அந்த பத்தும் என் பார்வைக்கு சிக்கியது மட்டுமே!
மகானந்த சாமியார் தங்கி இருக்கும் குகைக்கு பக்கத்தில் ஆறடி நீளத்தில் ஒரு பள்ளம் வெட்டி, சிமெண்ட் பூசி நெருப்பு எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. என்னன்னு கேட்டதுக்கு இங்கதான் ஸ்ரீசலஸ்ரீ சாமி இந்த நெருப்பு படுக்கையில் படுத்து உலக நன்மைக்காக தவம் செய்வாராம். கெட்டது செய்யும் மனிதர்கள் அதிகரிச்சதால, உலகம் அழியும் காலம் நெருங்கிட்டுதாம், விரைவில் நீர் மூலமா பேரழிவு பூமியை நெருங்கிட்டு இருக்கு. அதனால் அதிலிருந்து மக்களை காப்பாற்றவே தான் சித்தரானதா இவர் சொல்லிக்குறராம்.
இந்த சாமியாரின் பூர்வீகம், பேர் என்னன்னு இங்க யாருக்குமே தெரில. தருமபுரில இருந்து 1980 வாக்கில் இங்க வந்ததா சிலர் சொல்றாங்க.
டி.ராஜேந்திரர்க்கு போட்டியாய் சினிமா செட்டிங்க் மாதிரி எங்க பார்த்தாலும் பிரம்மாண்டம்.
புல்லாங்குழல் ஊதும் க்ருஷ்ணன்
யோக நிலையில் இருக்கும் சிவன்..
விஸ்வரூப வடிவத்தில் விஷ்ணு...
கண்ணாடி அறைக்குள் இருக்கும் ஆறுமுகன்..
நவதிசை வினாயகர்
லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, நிஷ்டையிலிருக்கும் சிவபாலன், காலபைரவர், சண்டிகேஸ்வரர், சித்ரகுப்தன், எமதர்மன், நவக்கிரங்கள், இந்திரன், இந்திராணி, என சகல தெய்வங்களும் பிரம்மாண்ட சிலாரூபாத்தில் தயாராகிட்டிருக்காங்க. முக்கியமான விஐபி ஒருவர் அடிக்கடி வந்து போறதால கட்டுமாண பணிகள் தொய்வின்றி, யாருடைய தலையீடுமில்லாமல் நடந்துக்கிட்டிருக்கு. கூடிய விரைவில் மிகப்பெரிய வியாபார தலமா இக்கோவிலும், மலைகளும் தரைமட்டமாகிடும்.
மக்களை காக்க மலைமேல உக்காந்த இறைவனால், தன் இருப்பிடமான அந்த மலையையே காப்பாத்திக்க முடியலியே!!ன்ற ஆதங்கத்தோடு அங்கிருந்து கிளம்பினோம்... இந்த கோவில் வேலூர் மாவட்டத்தில் காங்குப்பம்ன்ற ஊராட்சியில் இருக்கு. வேலூரிலிருந்து நேரடி பேருந்து இருக்கு. குடியாத்தத்திலிருந்தும் இங்க வரலாம். இல்லன்னா கே.வி.குப்பம் குடியாத்தம் வழியில் சாலையிலேயே இறங்கி ஷேர் ஆட்டோக்களிலும் போகலாம். போனால் பிரம்மாண்டமான கோவிலை தரிசிக்கலாம். ஆனா, தன்னை இழந்த மலைகளை பார்த்து மனசு வலிக்கவும் செய்யும். இப்போதைக்கு மாலை ஆறுமணிக்கே கோவிலை அடைச்சுடுறாங்க.
ஆயிரங்காலத்து பழமையான கோவில். அக்கோவிலின் தல வரலாறே மறைச்சு சாமியார் புகழ் பாடிக்கிட்டிருக்கு இக்கோவில்.
ஆயிரங்காலத்து பழமையான கோவில். அக்கோவிலின் தல வரலாறே மறைச்சு சாமியார் புகழ் பாடிக்கிட்டிருக்கு இக்கோவில்.
நன்றியுடன்,
ராஜி
மனம் வேதனை அடைகிறது சகோதரி...
ReplyDeleteஎனக்கும்தான்ண்ணே. குறைந்தது மூன்று மலைகள், ஆயிரக்கணக்கில் மரங்கள், லட்சக்கணக்கில் பாறைகள், எத்தனை உயிர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும்?! இப்படி ஒரு கோவில் அவசியமா?!
Deleteஇவ்வாறாக பல இடங்களில் நடப்பதை நான் கண்டுள்ளேன். வேதனையே.
ReplyDeleteஆட்சியாளர்களும், அதிகாரிகளும், பொதுமக்களின் அலட்சியபோக்கே இதுக்கு காரணம்..
Deleteஇயற்கையை அழித்து பெரிய அளவில் கோவில்கள் அமைப்பது வழக்கமாகி விட்டது.
ReplyDelete