Friday, January 11, 2019

மும்மூர்த்திகளும் வழிபட்ட திரிம்பகேஸ்வரர் - ஷீரடி பயணம்

கடந்த வாரம் பார்த்த திரிம்பகேஸ்வரர் கோவில் பதிவின்  தொடர்ச்சியா  சன்னதிக்குள் நடக்கும் விஷேச வழிபாடுகள் பற்றி இந்தவாரம் பார்க்கலாம் .இதுதான் 200 ரூபாய் சிறப்பு தரிசன நுழைவாயிலில், 20பேர் அடங்கிய குழுவாக அனுப்புறாங்க..  கட்டண தரிசனம் அதுவும் 200 ரூபாய்ங்குறதால கம்பி தடுப்புவைத்த  வரிசை கொஞ்சம் குறைவுதான். ஆனாலும் குறிப்பிட்ட இடம்வந்ததும் சன்னதிக்குள் பொதுதரிசன வரிசையும், கட்டண வரிசையும் ஒரே வரிசையாக செல்வதால் கொஞ்சம் தள்ளுமுள்ளு இருக்கத்தான் செய்யும். ஆமாம்! இரு நதிகள் சங்கமிக்கும்போது சிறிது ஆர்ப்பாட்டங்கள் இருக்கத்தானே செய்யும்?! நாமதான் கொஞ்சம் கவனமா போகனும் . இந்தமாதிரி இடங்களில் நமது உடமைகள், நகைகள், நம்மோடு வந்திருக்கும் குழந்தைகள், வயசானவங்க மேலயும்  ஒருகண் வச்சிக்கனும். அதேப்போல மத்தவங்களையும் அனுசரிச்சு போகனும். கொஞ்சம் இடைவெளிவிட்டு போகணும். அஞ்சு, பத்து நிமிசம் அதிகமா செலவழிச்சா குறைஞ்சு போயிடாது.
இதுவரை போன கோவில்கள் மாதிரிதான், இக்கோவில்  தூண்கள்லாம் கருப்பு மார்பிளால் ஆனது.   சுவர்கள் முழுக்க சிற்பங்களால் அலங்கரிச்சிருக்காங்க. படிக்கட்டுகள்லாம் மரங்களில் செதுக்கப்பட்டது போல் சிறிய சிறிய சிற்பங்களால் செதுக்கப்பட்டுள்ளன. படைக்கும் தெய்வம் பிரம்மன், காக்கும் தெய்வம் விஷ்ணு, அழிக்கும் தெய்வம் ருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து சிவபரம்பொருளைப் பிரதிஷ்டை செய்து பரம்பொருளுக்கு பூஜை செய்தனர். மூவருக்கும் அருள்புரிந்த பரமேஸ்வரனுக்குத் திரிம்பகேஸ்வரர் என பேர் வந்தது.  திரிம்பகேஸ்வரர் எழுந்தருளியுள்ள இந்த கர்ப்பக்கிரகம் முக்கிய மண்டபத்தைவிட தாழ்வாக இருக்கு. மேல்மண்டபத்திலிருந்துதான் கீழிருக்கும் திரிம்பகேஸ்வரரை தரிசனம் செய்யனும்.
மும்மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கப்பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. ஆவுடையார் உரல் போன்று பள்ளமா இருக்கு. இந்தப்பள்ளத்தில் மும்மூர்த்திகள்  பரம்பொருளை வணங்கியதால் அவர்களை மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளத்தில் காணப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் குசாவர்த்த தீர்த்தம்ன்னு சொல்கிறாங்க இங்குள்ள அம்பாள் பெயர் ஸ்ரீஜடேசுவரி
நம்ம ஊர்ல சொல்றமாதிரி சுக்குக்கு மிஞ்சின மருந்துமில்ல சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமுமில்லைன்னு சொல்றமாதிரி கோதாவரி நதிக்கு இணையான நதியுமில்ல. பிரம்மகிரி மலைக்கு நிகரான மலையுமில்ல, திரிம்பகேஸ்வரருக்கிணையான கோவிலும் இல்லைன்னு வடநாட்டில் ஒரு பழஞ்சொல் இருக்கு. அந்தளவு புனிதமானது இந்த கோவில்ன்னு சொல்றாங்க. இந்த இடம் திரிசந்தியா காயத்ரி என அழைக்கப்படுது. காரணம் விநாயகனின் பிறப்பு இங்கதான் நடந்ததா சொல்லப்படுது. மேலும், நாத் கெல்லாம் நாத் ஆனா கோரக்நாத்க்கு பட்டம் வழங்கிய இடம்னு   ஒரு இந்திகார அம்மா சொன்னாங்க. அதாவது, நம்மூர் பாசையிலே சித்தனுக்கெல்லாம் சித்தன்னு சொன்னாங்கன்னு நினைச்சுக்கிட்டேன். மேலும் கோரக்கர் சித்தரை பற்றி  குறிப்பிடும்போது அவரை வடநாட்டிலிருந்து வந்தவரென்றும், அவர் தவம் செய்த இடமே கோரக்நாத் என்றும் சொல்லுவாங்க. இப்ப இவங்க சொல்றதை பார்த்தா நாத் என்பதற்கு வேறு அர்த்தம் இருக்குதுபோல் தெரியுது . மொழி ஆராய்ச்சியை  தமிழ் ஆர்வலர்களிடமும், தலவரலாற்று ஆராய்ச்சியை ஆன்மீகவாதிகளிடமே விட்டுடுறேன். 
இந்த ஸ்தலம் நிவிருதிநாத் என்பவர் தன்னுடைய குருவான கஹினைநாத்திடமிருந்து மானசீகமாக உபதேசம் பெற்ற இடம் என்று சொல்லப்படுது. அதை தன்னுடன் பிறந்த சகோதர சகோதரியருக்கு உபதேசம் வழங்கி தன்னை யாரென்று உணரச்செய்து அவர்களுக்கும் முக்தி கொடுத்த ஸ்தலம் இதுவென சொல்லப்படுது. அதனால்தான் இந்த இடத்துல முன்னோர்களுக்கு செய்யப்படும் பலிகர்மம் எனப்படும் சிரார்த்தம், திவசம் போன்றவைகள் சிறப்பாக செய்விக்கப்படுது. நிர்ணயசிந்து என்னும் கிரந்தத்தில் சத்யத்திரின்ற இந்த மலைத்தொடரிலிருந்து வரும் கோதாவரி நதியானது இங்கிருந்து பாய்ந்து பூமியை சுத்தமாக்குவதுடன் இல்லாமல் சிரார்த்தம் மற்றும் திவசகர்மாக்களை செய்யும் ஆன்மாக்களை சுத்தப்படுத்துகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது .
மேலும், இங்குதான் இராமபிரான் தன்னுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ததாகவும், அவர்களுடைய முன்னோர்கள் மனமகிழ்வுடன் ஏற்றுக்கொண்டதாகவும் ஒரு நம்பிக்கை இருப்பதால் இங்கு சிரார்த்த பலிகர்ம பூஜைகள் இன்றும் சிறப்பாக செய்விக்கப்படுகின்றது. இந்த கோவிலானது பிரம்மகிரி,  நீலகிரி  மற்றும் காலகிரின்ற மூன்று மலைகளின் சங்கமத்தின் அடிவாரத்தில் இருக்குது.  ஆகையால் அறுகோணவடிவ தீர்த்த யாத்திரைன்ற ஒரு சிறப்பு வழிபாடும் இங்க செய்யப்படுது. இது கோதாவரி நதியின் தெற்கு கரையில் ஆரம்பித்து நில்சங்கமேஸ்வர்கோவிலிருந்து,  விவாஹ விநாயக், சத்யநாராயண், தனேஸ்வர்மஹாதேவ்,  தரங்கேஸ்வர், சேதுபலேஸ்வர் கோவிலில் முடிப்பர். இது ஒருவகையான சிவாலய யாத்திரை  முறை. இந்த கோவிலில் ருத்ர பாராயணம் செய்து பழங்களை படைத்து சிறப்பு வழிபாடும்  நடைபெறுகிறது. 
இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பு  குஷ்வர்த குண்ட் தீர்த்தகுளத்தின் நான்கு மூலைகளிலும்  நான்கு கோவில்கள் இருக்கு. தென்கிழக்கு மூலையில் கேதாரேஸ்வர்  மஹாதேவ் கோவிலும், தென்மேற்கில் சாட்சி விநாயகரும், வடமேற்கில் குஸேஸ்வர் மஹாதேவ்  கோவிலும், வடகிழக்கில் கோதாவரி ஆலயமும் அமைந்திருக்கு. மேலும், கோவிலின் பின்பக்கம் கங்கா மந்திரும் இருக்கு. மேலும் இராமர் மற்றும் கார்புரேஸ்வர்  மஹாதேவ் சன்னதிகளை ஸ்ரீமத் பக்ஷேவார் என்ற வணிகர் கட்டியுள்ளதா சொல்லப்படுது. அஸ்வினி குமாரர்களுக்கு தனிச்சந்நிதி கங்காமாந்திருக்கு எதிரில் அமைந்துள்ளது. மேலும் ஜவரேஸ்வர்  மஹாதேவ், கஞ்சனேஸ்வர் சிலைகளும் முப்பத்துமுக்கோடி தேவர்களின் சாட்சியாக முப்பத்திமூன்று தெய்வங்களின் சிலைகளும் காணப்படுகின்றது .
இப்பொழுது இருக்குற இக்கோவிலின் கட்டிடத்தை 1755ம் ஆண்டு டிசம்பர் மாசம் அப்பொழுதைய பேஷ்வாவான ஸ்ரீமந்த் பாலாஜி பாஜிராவ்ன்ற நானாசாஹிப் பேஷ்வாவால் விரிவாக்கம் செய்யப்பட்டு 1786ல் முடிக்கப்பட்டது.  இக்கோவிலை கட்டிமுடிக்க கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் ஆயின.  அன்றைய மதிப்புப்படி 16 லட்சம் செலவு ஆனதாம் .
இதுதான் மூலவர் லிங்கதிருமேனி.  பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்த அமைப்பில் மூன்று பக்கத்தில் மூன்று தெய்வ உருவங்கள்ன்னு வித்தியாசமா இருக்குது.
பிரதோஷகாலங்களில் இங்கிருக்கும் மூலவருக்கு நாமே நமது கைகளால் அர்ச்சனை செய்யலாம். அதற்கு தனிக்கட்டணமாக 10,000 வசூலிக்கப்படுது. கூட்டம் இல்லைன்னா ஆற அமர்ந்து மூலவருக்கு முன்னே தரிசனம் செய்யலாம். சன்னதிக்குமுன் ஆமை உருவம் பதிக்கப்பட்டுள்ளது அங்கே உட்காருவதற்கென பெரிய  மண்டபம் ஒன்னு  இருக்குது . ஒருவழியாக நாங்களும் தரிசனம் செய்து முடித்தபின் சிறிதுநேரம் உட்கார்ந்துவிட்டு வெளிப்பக்கமாக செல்லும் வாயில்வழியாக வெளியே வந்துவிட்டோம்
இங்கிருக்கும் மகாதேவர் ஆலயத்தில் நந்தியம்பெருமான், விநாயகர் மற்றும் நம் அனுமார்தான் அங்கே பஞ்ரங்பலின்னு பேர் மாத்திக்கிட்டு அருள்புரிகிறார். அவரில்லாத கோவில்கள் இங்க இல்லன்னு சொல்லலாம். வெளிப்பக்கம் காயத்ரிதேவி கோவில் இருக்கிறது அங்கேயும் தரிசனத்தை முடித்துவிட்டு வெளிப்பக்கமாக கோவிலை சுற்றி கோவிலின் முன்பக்கத்திற்கு வந்துவிட்டோம் .
கோவிலின் முன்பக்கம் வானிலிருந்து சூரியனின் அருள்மழை நம்மீது பொழிந்தாலும்  மாலைப்பொழுதில் திரிம்பகேஸ்வரரை வணங்குவதில் சூரியனின் கடமையையும் நம்மால் உணரமுடிந்தது.  சிம்ம ராசியில் நடைபெறும் கும்பமேளா இங்கே மிக சிறப்பாக கொண்டாடப்படுது. அதேப்போல் பிப்ரவரி மாசத்தின் முதல் 12 நாட்களுடன் கூடிய பௌர்ணமி நாளை கோதாவரி உதயதினமாக கொண்டாடபடுது. கோதாவரியில் ஜீவசமாதியான நிவ்ருத்திநாத் விழா ஜனவரி மாசம் 3 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும். மார்ச் மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் மகா சிவராத்திரி 13 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும்.  திரிபுர பூர்ணிமா நவம்பர் மாசம்  ரதயாத்திரையுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். 
ஒரு வழியாக நல்லபடியா தரிசனத்தை முடித்து அங்கிருந்து விடைபெற்றோம். வழிநெடுக சிறுவியாபாரிகள் முதல் பெரியகடைகள்வரை, கம்மல், வளையல், மணிமாலை, கைப்பைன்னு வியாபாரம் சூடு பிடித்துக்கொண்டிருந்தது. ஹோட்டல் மற்றும் தெருவோர வட இந்திய உணவுக்கடைகளும் நம்மை கவருகின்றது. எல்லாவற்றையும் தாண்டி பிரதான சாலை வந்ததும், ஒருசிலர் பிரம்மகிரி மலைமேல் கோதாவரி உற்பத்தியாகிற இடத்திற்கு செல்லலாம்ன்னும், அனுமன் பிறந்த இடமான அஞ்சனா புத்ரு ஹனுமான் கோவிலுக்கு போகலாம்ன்னு சிலபேரும்,   அடுத்த ஜோதிர்லிங்க ஸ்தலமான கிரிஸ்னேஸ்வர் கோவிலுக்கு போகலாம்ன்னு இன்னும் சிலரும் சொல்ல,  எந்த இடத்திற்கு மெஜாரிட்டி கிடைத்தது?!  அடுத்து எந்த இடத்திற்கு நாங்க போனோம்ன்னு  தெரிஞ்சுக்க அடுத்தவாரம்வரை ப்ளீஸ் வெயிட் செய்யண்டி.  








நட்புடன் 

10 comments:

  1. வழிபட்ட என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன் ப் வராது (தலைப்பு)

    ReplyDelete
    Replies
    1. மாத்திட்டேனுங்க சகோ

      Delete
  2. இப்போதெல்லாம் உங்கள் பதிவுகளை கூகிள் ப்ளஸ்ஸில் இணைப்பதில்லையா?

    ReplyDelete
    Replies
    1. இணைச்சுக்கிட்டுதான் இருக்கேன் சகோ. இன்னிக்கு மொபைல்ல பதிவு போட்டதால் இணைக்கலை. இதோ இணைச்சுடுறேன்.

      Delete
  3. திரிம்பகேஸ்வரர் தரிசனம் கிடைத்தது ராஜிக்கா சிறப்பான படங்கள் , தகவல்களுடன் ..

    கோகர்ன்னா என்னும் இடத்தில் கூட சிவன் தரிசனம் இப்படி தான் ..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அனு,அந்த இடம் ,கர்நாடகாவில் உள்ள உத்தர கன்னட மாவட்டத்தில் இருக்கிறது. திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் பாடல் பெற்ற துளுவ நாட்டுத் தலங்களில் ஒன்று இது. திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற ஸ்தலம். இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் கைலையிலிருந்து இராவணன் கொண்டுவந்தது என்று சொல்லப்படுகிறது.இறையருளும் நேரமும் கிடைத்தால் நிச்சயம் பதிவு வரும் ..நன்றி.

      Delete
  4. நான் பார்க்க ஆசைப்பட்ட கோயிலை இப்பதிவு மூலமாகக் கண்டேன். பல புதிய செய்திகளை அறிந்தேன். மன நிறைவு அடைந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்,நன்றிப்பா...

      Delete
  5. நேற்றே வாசித்துவிட்டேன்....பார்த்த கோயில். அழகான கோயில். நாமும் அருகில் வரை செல்லலாம்...அது எனக்குப் பிடித்தது. அது போல அங்கிருந்த கடைகள்....ட்ரெக்கிங்க் உண்டு. ப்ரஹ்மஹிரி மலையில் அங்கு கோதாவரி பிறக்கும் இடம் உண்டு..இன்னும் சிவலிங்க கோயில்கள் எல்லாம் உண்டு... எனக்கும் மகனுக்கும் கோயில்கள் சென்றாலும் இப்படியான இயற்கை இடங்களுக்குச் செல்வது மிகவும் பிடிக்கும் என்பதால் புனாவில் இருக்கும் மைத்துனர் மனைவி அப்ப கூட்டிட்டுபோனாங்க...வருஷங்கள் ஆச்சு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க கீதா..எனக்கும் ரொம்பபிடிக்கும்,இருந்தாலும் எனக்கு முன்னாடியே போய்ட்டுவந்துடீங்களே,இனியும் நிறைய இடங்களுக்கு செல்லணும்ன்னு ஆசை,எல்லாம் பதிவாக எழுதணும்ன்னும் ஆசை...

      Delete