Thursday, January 17, 2019

உழைப்பாளிகளை கௌரவிக்கும் காணும் பொங்கல்

பொங்கல் பண்டிகை மொத்தம் நாலு நாள் கொண்டாடப்படுது. முதல் நாள் போகின்னு சொல்லப்படும் இந்திரனுக்கான விழா, அடுத்த நாள் பொங்கல்ன்னு சொல்லப்படும் சூரியபகவானுக்கு நன்றி சொல்லும் நாள். அடுத்து மாட்டுப்பொங்கல்ன்னு சொல்லப்படும் உழவுக்கு பயன்படும் கால்நடைகளை சிறப்பிக்கவும், அதுக்கு நன்றி சொல்லவும்ன்னு பண்டிகை கொண்டாடி மகிழ்கின்றோம். அப்புறம் எதுக்கு காணும் பொங்கல்ன்னு கேட்டா, மூணு நாள் வேலை செஞ்சு டயர்டாகி இருப்போமே! அதுக்கு ரெஸ்ட் எடுக்கன்னு, குடும்ப இஸ்திரிகளும், ஊர் சுத்தி பார்க்கன்னு சிறுசுகளும், பொங்கல் செலவு என்னாச்சுன்னு கணக்கு பண்ணன்னு குடும்ப இஸ்திரன்களும் சொல்வாங்க. ஆனா, விவசாயத்துக்கு மூலாதாரணமான மழை, சூரியன், கால்நடைகள் மட்டுமல்ல, விவசாய நிலத்தில் இறங்கி வேலை செய்யும் வேலையாட்களும்தான்.

விவசாயம் செய்ய நிலமும், விதை, கடப்பாரை, மண்வெட்டி,உரம் மாதிரியான பொருட்கள் வாங்க பணமும் இருந்தாலும் சரியான, நம்பிக்கையான, உழைப்பாளி இல்லன்னா சரிவர விளையாது, அப்படியே விலைஞ்சாலும் விளைஞ்ச பொருட்கள் வீடுவந்து சேராது. அந்த உழைப்பாளிகளை சிறப்பிக்கும் விதமே இந்த காணும் பொங்கல். காணும் பொங்கல்ன்றது இன்றைய நாளில் நடப்பதுமாதிரி சினிமா, பீச்ன்னு சுத்துற பண்டிகையா முன்பு இருந்ததில்லை.
பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வதே “கனு’ பொங்கல். அன்றைய தினம் காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்டவெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்புலாம் வச்சு, சூரியனுக்கு அர்ப்பணிப்பார்கள். இதுவே, இன்னிக்கு காணும் பொங்கலாகிட்டு. இன்னிக்கு புத்தாடை அணிந்து, சொந்தங்களை சந்திச்சு மகிழ்ந்திருப்பாங்க, முன்னலாம் பண்டிகையின் முக்கியத்துவமே சொந்த பந்தங்களோடு கூடியிருப்பதே! இன்றைய சீரியல் உலகில் இதுலாம் மாறிட்டுது,

இந்த காணும் பொங்கல் பெண்களுக்கானதும்கூட, பொங்கலன்று பொங்கல் பானை உள்ளிட்ட 5 பானைகளில் கட்டப்பட்ட மஞ்சள் கிழங்கை வயசுல பெரிய 5 சுமங்கலிடம் கொடுத்து, அவங்க அதை கல்லில் இழைத்து தர நெற்றியில் பூசிக்கொள்வாங்க.   ஒருவேளை அப்படி 5 சுமங்கலிகள் கிடைக்கலைன்னா புருசன்கிட்டயே கொடுத்து இழைத்து வச்சுக்கலாம்.

இரண்டு மஞ்சள் இலைகள் (அல்லது) வாழை இலைகளை, நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து, நதிக்கரையிலோ, திறந்த வெளியிலோ (மொட்டை மாடியிலோ) கணுப்பிடி வைப்பாங்க. கணுப்பிடி வைக்குமிடத்தைக் கோலமிட்டு, செம்மண் பூசி வைப்பாங்க. முதல்நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம்ன்னு தனித்தனியே ரெடி செய்வாங்க.  சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக கணக்கில் எடுத்துப்பாங்க. ஒவ்வொரு வகை சாதத்திலயும் ஏழு இல்லன்னா ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைப்பாங்க.. வெற்றிலை-பாக்கு,பழம்,தேங் காய், கரும்புதுண்டு, மஞ்சள் அட்சதை  பூக்கள்லாம் ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் எடுத்து வச்சிக்கிட்டு 

காக்காப் பிடி வச்சேன்
கணுப்பிடி வச்சேன்
காக்கைக்குக் கல்யாணம்
கண்டவர்களுக்குச் சந்தோசம்
கூடப் பிறந்த சகோதரர்கள்
எந்நாளும் குறைவில்லாமல் சந்தோசமாய் வாழனும்..

ன்னு பாட்டு படிச்சு படையல் இடனும்..இவ்வாறு வைத்து முடித்ததும் தீபம் ஏற்றப்படும். கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம்லாம் இல்லாம பார்த்துக்கனும். அட்சதையையும் பூக்களையும் தூவி தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுப்பாங்க. கணுப்பிடி வைத்த சாதத்தை, நாய், பூனைலாம் எச்சில் பண்ணாம பார்த்துக்கனும். காக்கா, குருவி மாதிரியான பறவைகளுக்கு இதை உணவா கொடுப்பாங்க.
மார்கழி மாசம் முழுக்க, அதிகாலையில் நீராடி வாசலில் கோலமிட்டு, அதன் நடுவே வைக்கும் கைப்பிடி சாணத்தை பிள்ளையார் ஆக்கி அதில் மஞ்சள் பூசணிப்பூ வைத்து வழிபட்டு வந்த பிள்ளையாரை, மதியம் 12க்குள் எடுத்து,  காயவச்சு பத்திரப்படுத்தி வருவாங்க. இதை காப்புக்கட்டு அன்னிக்கு ஒருகூடையில் எடுத்து வச்சிடுவான்க.காணும் பொங்கலன்னிக்கு வீட்டில் செய்த கலவை சாதம் முறுக்கு, பொரி, கரும்பு, பலகாரவகைகளுடன் குடும்பத்தோடு  ஆற்றங்கரை ஏரிக்கரை, கோவில், குளம், மலைன்னு போய் வருவாங்க. கோலாட்டம் ,கும்மி, டான்ஸ், பாட்டு..ன்னு அமர்களப்படும்.
Image may contain: one or more people, tree and outdoor
இப்படி கணுப்பிடி வைத்த பெண்கள் அன்னிக்கு நைட் சாப்பிட மாட்டாங்க.  இந்த கணுப்பிடி நோன்பு உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப்படுது.கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ ன்னு ஒரு சொலவடையே இருக்கு. கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்னிக்கு சமைத்த சாதத்தை,  மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இந்த சொலவடையின் அர்த்தம். பிறந்த வீட்டுச் சீராகப் பெண்களுக்குப் பணமோ, துணியோ பிறந்த வீட்டில் தருவாங்க. வாய்ப்பு கிடைச்சா தாய்வீட்டுல மதிய உணவு சாப்பிடுவது வழக்கம்.
No photo description available.
காணும் பொங்கலை கன்னி பொங்கல், கன்று பொங்கல் ன்னும் சொல்வாங்க. திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும், ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகனும்ன்னு வேண்டிப்பாங்க. காணும் பொங்கல் பத்தி இத்தனை பார்த்தாச்சு. உழைப்பாளிகளை பத்தி ஆரம்பத்துல ஏதோ சொன்னியேம்மான்னு முணுமுணுக்காதீங்க.

நில உரிமையாளர்கள் காணும் பொங்கலன்னிக்கு தங்கள் வயலில் வேலை செய்த விவசாய கூலிகளுக்கு துணி, அரிசி, பருப்பு, பணம்ன்னு கொடுத்து, விருந்து வச்சு கௌரவிப்பது வழக்கம்.  இதுமாதிரியே, நெசவு, பானை செய்றவங்க, வண்டி ஓட்டுறவங்க, பாய்பின்னுறவங்கன்னு  எல்லா தொழில் முதலாளிகளும் தங்கள்கிட்ட வேலை செய்யும் தொழிலாளிகளை கௌரவிச்சாங்க. இதுவே இப்ப பொங்கல் இனாமா வந்தி நிக்குது. 
Image may contain: one or more people and people standing
என் தாத்தா காணும்பொங்கல் அன்னிக்கு காலைல புதுத்துணி உடுத்திக்கிட்டு வாசல் திண்ணைல உக்காந்துக்குவார்.  அவர் காலில் விழும் பெரியவங்களுக்கு நாலணா தருவார். அதைகூட உனக்கு மட்டும்தான் அதிகமா தரேன். மத்தவங்களுக்குலாம் கம்மிதான். அவங்கக்கிட்ட சொல்லிடாதன்னு சொல்வார். சின்னவங்களுக்கு  ஆரஞ்ச் புளிப்பு மிட்டாய் தருவார். இதுக்காகவே ரெண்டு மூணு பாக்கெட் மிட்டாய் வாங்கி வச்சுப்பார். வெள்ளை வேட்டி, காமராஜர் மாதிரி தொளதொளன்னு சட்டையும், அந்த மிட்டாயை வச்சிக்கிட்டு அவர் உக்காந்திருக்கும் தோரணையும் அடடா! 

 சகோதரர்களின் நல்வாழ்வுக்கும், உழைப்பாளிகளை கௌரவிக்கவும் கொண்டாடப்படும் இந்த விழா இப்ப வெறும் பொழுதுபோக்கா மட்டுமே இருக்குறது வேதனை. காணும் பொங்கல்ன்னா ஊர் சுத்தி பார்க்குறதுன்னு ஆகிப்போச்சு. இந்த நாளில்,  இறைவனை, சொந்தங்களை, உழைப்பாளிகளை, சகோதரனை காணும் நாள்ன்னு இனிவரும் தலைமுறைக்கு எப்படி புரிய வைக்க போறோம்ன்னுதான் தெரில!!


என் வலையுக சகோதரர்கள் அனைவரும் நல்லா இருக்கனும்ன்னு நானும் வேண்டிக்குறேன். 
நன்றியுடன்,
ராஜி

4 comments:

  1. என் மூத்த மற்றும் இளைய சகோதரிகளை வருடா வருடம் இந்நாளில் வீட்டுக்கு அழைத்து சிறப்பு செய்வது வழக்கம். இந்த வருடமும்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் சகோ. கூடியிருப்பதுதானே விழாக்களின் முக்கியத்துவம்

      Delete
  2. காணும் பொங்கல் கண்டேன், மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்வுற்றதுக்கும் நன்றிப்பா

      Delete