மிருக இனத்திலிருந்து, மனித இனம் தனியாய் பிரிந்து வந்தபோது ஆணும், பெண்ணும் சரிசமமாய் இருந்தனர். கிடைத்த உணவை உண்டு, மரக்கிளையில் தங்கி ஒருவரை ஒருவர் சார்ந்திராமல் வாழ்ந்து வந்தனர். ஆணையும், பெண்ணையும் இணைக்கும் ஒரே புள்ளி செக்ஸ் மட்டுமே! பல்கி பெருகி வந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களுடன் போராடி மனித இனம் வெற்றியடைய, இன்னும் மனித உயிர்கள் தேவைப்பட்டது. மனித உயிர்கள் உண்டாக மனித உடலில் செக்ஸ் சுகத்தை இயற்கை மனித உடலில் உண்டாக்கியது. சுகத்தினை அனுபவித்த மனிதன் மீண்டும் மீண்டும் செக்ஸ்சில் ஈடுபட்டான். மனித சந்ததி அதிகரித்தது. நாகரீகம் வளர வளர ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என குடும்ப அமைப்பு உருவானது.
குடும்ப அமைப்பு உருவானது முதல் ஆணை சார்ந்தே பெண்ணின் வாழ்க்கை அமைந்தது. பெண் வெறும் போகப்பொருளாகவும், குல விருத்திக்கும் என சமூகம் பார்க்கப்பட்டது. ஒருசில இடங்கள் விதிவிலக்கு. இன்று அந்த நிலையில் மாற்றம் வர ஆரம்பித்துள்ளது. பெண் ரத்தமும் சதையுமான மனுஷி, அவளுக்கும் மனசு, வலி, வேதனை, ஆசை, மரியாதை உண்டு என சமூகம் உணர ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. ஆனால், இன்றும் சுய கௌரவத்துக்காகவும், சமூகத்துக்கு பயந்தும் தன்னுடைய ஈகோவிற்காகவும் பல பெண்கள் பாதிக்கின்றனர். அறிவியல், நாகரீக வளர்ச்சியும் அடைந்த இந்த காலக்கட்டத்துலயே இப்படி என்றால்!? அந்த காலத்தில்?!... அப்படி சுய கௌரவம், வாரிசு போட்டி, பழி உணர்ச்சி.. இவற்றால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பற்றிதான் இன்றைய வெளிச்சத்தின் பின்னே பார்க்கப்போகின்றோம்...
கொண்டவன் சரி இருந்தால் கூரை மேலேறி சண்டைப்போடலாம்..ன்னு எங்க ஊரில் சொல்வாங்க. அது எத்தனை சரி என்பதற்கு மகாபாரதத்தில் வரும் காந்தாரி சிறந்த உதாரணம். குணநலம் சரியில்லாத கணவன்,சொல்பேச்சு கேட்காத பிள்ளைகள் , அவர்கள் இரு தரப்புக்கும், பதவி சண்டையை ஊதி பெரிதாக்கி தனது பழி உணர்ச்சியை தீர்க்க காத்திருக்கும் சகோதரன் என முத்தரப்பு ஆட்களிடம் சிக்கிய ஒரு பெண், எத்தனை பேரழகியாய், குணநலனில் சிறந்தவளாய் இருந்தாலும், அவளின் அத்தனை நல்ல விசயமும் அதல பாதாளத்தில் தள்ளப்பட்டுவிடும். ஒரு பெண்ணின் நடத்தை போற்றப்படுவதும், தூற்றப்படுவதும் கட்டிய கணவனால் மட்டுமே! இதற்கு சிறந்த உதாரணம் காந்தாரி.
.
காந்தாரி காந்தார நாட்டின் இளவரசியாகும். காந்தார நாட்டு மன்னனான சுலபனின் மகள்தான் இந்த காந்தாரி. காந்தாரி தாய் தந்தையரால் மட்டுமல்ல தனது சகோதரர்களாலும் பாராட்டி சீராட்டி வளர்க்கப்பட்டாள். காந்தார நாட்டில் பிறந்ததால் காந்தாரின்னு பேர் வந்ததா இல்ல காந்தம் மாதிரியான கண்களைக் கொண்டதால் அந்தப்பேர் உண்டாச்சான்னு தெரில. காந்தாரிக்கு அத்தனை அழகான கண்கள். அழகும் இளமையும் நற்பண்புகளோடு காந்தாரி வளர்ந்து வரும் வேளையில், அரசப்பரம்பரையில் பிறந்ததால் ஆயுதக் கலையிலும் பயிற்சி பெற்றாள் காந்தாரி. எல்லாவிதமான ஆயுதங்களையும் சுலபமாகக் கையாளும் திறனை பெற்றாள்.
காந்தாரிக்கு திருமணப்பருவம் வந்தது. தனது திருமணத்தை பற்றியும், தனக்கு வரப்போகும் கணவனை பற்றியும் பல்வேறு கனவுகளை காண ஆரம்பித்தாள். தனக்கு திருமணத்திற்குப்பின் நூறு குழந்தைகள் பிறக்கவேண்டுமென சிவப்பெருமானிடம் வரம் வாங்கினாள். ஆனால், அவள் ஜாதகரீதியாக அவளது முதல் கணவன் இறந்துவிடுவான் என்று இருந்ததை அறிந்த சுலபன், தனது மகளுக்கு திருமணம் நடக்குமா என பரிதவித்து வந்தான்.
அதேசமயத்தில் பீஷ்மர் தன் குலம் தழைக்க, குரு குலத்தின் வாரிசுகளான திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் பெண் தேடிக்கொண்டிருந்தார். இதில் காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை திருதராஷ்டிரனுக்கும், யாதவ குல மன்னனான சூரசேனனின் மகளும், குந்தி போஜனின் வளர்ப்பு மகளுமான குந்தி மற்றும் மத்ர இளவரசி மாத்ரியை பாண்டுவுக்கும் மணம் முடிக்க விரும்பினார். பீஷ்மரின் பெண் கேட்டு வந்த தூதினை சுலபன் உடனே ஏற்கவில்லை. அறிவும் அழகும் ஆற்றலும் நிரம்பிய தன் மகளை ஒரு குருடனுக்கு மனைவியாக்குவதா என்ற எண்ணம் அவனை வாட்டியது. அதன்பின் குரு குலத்தின் அருமை பெருமைகளை மனதில் கொண்டு பார்வையற்ற திருதராஷ்டிரனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்துவைக்க சம்மதிக்கிறான். ஆனாலும், மகளுக்கு இருந்த தோஷம் அவனை கவலை அடையச் செய்தது. அதனால் தோஷம் நீக்குவதற்கு பரிகாரமாக, ஒருவரும் அறியாமல் ரகசியமாக ஒரு ஆட்டுக்கடாயை அவளுக்கு மணம் செய்து வைத்தபின் அதை வெட்டி பலி கொடுத்து விடுகின்றனர். அதன்படி காந்தாரி ஆட்டுக்கடாவான தன் முதல் கணவனை இழந்த விதவையாகிறாள். அதன்பின்னர் திருதராஷ்டிரன் இரண்டாம் கணவனாகிவிடுவதால் அவன் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்ற ஜோதிடக்கணக்கு சரியாகிவிடுகிறது. (ஆனால் இதுவே காந்தார நாட்டு வாரிசுகளுக்கும், அதன்பின் குருகுல வம்சம் நாசமாவதற்கும் காரணமாகிவிடுவது தனிக்கதை).
பீஷ்மர் பெண் கேட்டு வந்து, காந்தாரியின் திருமணத்திற்காக சுலபன் யோசிக்கும்போது , திருதிராஷ்டிரனை மணக்க காந்தாரி தனது சம்மதத்தை தெரிவித்தாள். குருடனானாலும் தன் கணவன் மூத்தவன், அரசக்குமாரன், குலத்தில் சிறந்தவன், என பல்வேறு காரணங்களால் மனம் தேற்றிக்கொண்டாள். சகல சீர் வரிசைகளுடனும், பரிசுகளுடனும் தன் தமக்கையை காந்தார நாட்டிலிருந்து பாரதத்திற்கு அழைத்துச் செல்கிறான் சகுனி. அங்கு காந்தாரியையும் சகுனியையும் சகல மரியாதைகளோடு வரவேற்க பீஷ்மர் ஏற்பாடு செய்கின்றார். திருமண ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெறுகிறது. தன் கணவன் பார்வையற்றவனாக இந்த உலகை காண முடியாதவனாக இருந்த காரணத்தால், தானும் இனி இவ்வுலகை காண மாட்டேன் என்று தன் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொள்கிறாள் காந்தாரி.
எல்லா பெண்களுக்கும் மாமியார் வீடென்பது சகல வசதிகளும் இருக்கும்போதே, கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரிதான், இதில் முன்பின் தெரியாத இடத்தில், மனிதர்கள் குணநலன் புரிபடாதபோதும் தன் கண்ணையே கட்டிக்கொள்ள காந்தாரிக்கு எத்தனை மனோதைரியம் வேண்டும்?! இத்தனை காலம், இயற்கை அழகையும், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், சிற்பம், சித்திரம், அழகுக்கலை.. என அத்தனையையும் ராஜக்குமாரியாய் பட்டாம்பூச்சியாய் சுற்றித்திரிந்து பறந்து ரசித்து வந்தவள் தன் கணவனுக்காய அதும் பிறவியிலேயே பார்வை இல்லாதவனுக்காக உலகை இனி காண மாட்டேன் என் முடிவெடுக்க எத்தனை பெண்கள் துணிவாங்க?!
காந்தாரி இப்படி ஒரு முடிவெடுக்க அவளை எது தூண்டி இருக்கும்?! கணவன் மீதிருந்த அன்பா?! அல்லது பதிவிரதாத்தனமா?! மனதிடமா?! அல்லது பட்டத்து ராணியாகும் அவளது ஆசை பொய்த்து போனதா?! இருந்தும் மணிமுடி மறுக்கப்பட்டவனாய் இருக்கும் கணவனுக்கு வாக்கப்பட்டவள்தானே தனக்கு எதற்கு பார்வை என்ற விரக்தியா?! எது அவளை தூண்டியது என்பதை காந்தாரியின் மனது மட்டுமே அறியும். எது எப்படியானாலும் அத்தனை அறிஞர்களும், மதியூக மந்திரிகளும் பெரியோர்களும் நிறைந்த சபையில் அவள் கண்ணைக் கட்டிக் கொண்டபோது 'ஏன் இப்படிச் செய்கிறாய் காந்தாரி? உனது அன்பை அபிமானத்தை காதலை கற்பைக் காட்ட இது சரியான வழி இல்லை. இயற்கையிலேயே பார்வை இழந்தவனும் நீயும் ஒன்றல்ல. உன் துணையால் அவனை வழி நடத்தவும், உன் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்திடவும் உன் பார்வையும் கவனிப்பும் அவசியம் என்று அவளுக்கு எடுத்து சொல்ல ஒரு நாதியும் அந்நாட்டில் இல்லாதது கொடுமையே!
மற்றவர்கள் எப்படியோ போகட்டும். கட்டிய புண்ணியவானும்கூட, காந்தாரி, இது தியாகமல்ல! உன்னை நீயே வருத்திக்கொள்ளும் செயல். இனி வாழ்நாள் முழுமைக்கான கொடுமை இது., பார்வை இல்லாமல் நான் படும் துயர் போதும், கண் இருந்தும் நீ ஏன் குருடாய் அலைய வேண்டும் என திருதிராஷ்டரனும் அவளை தடுக்காதது அவள் செய்த பாவமே! இது பதிவிரதாத்தனம், கற்பு என எல்லாரும் சிலாகித்தனரே தவிர எக்காரணமும் இன்றி அவள் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட தண்டனை என அவளை மறுத்துக்கூற எவரும் முன்வரவைல்லை.
கணவன்தான் தகுதி இருந்தும் பார்வையற்றவன் காரணத்தால் அரசப்பதவி மறுக்கப்பட்டதால், தனக்குப் பிறக்கும் குழந்தைகளாவது நாடாளும் ஆசியைப் பெறட்டும் என்று ஏங்கி இருந்தவளுக்கு விதியும் சேர்ந்தே சதி செய்தது. பத்து மாத கருக்காலம் தாண்டியும் அவளுக்கு பிள்ளை ஈன்றெடுக்கும் நேரம் வரவில்லை. குந்திக்கு முதலில் குழந்தை பிறந்து குரு வம்சத்தின் வாரிசை பெற்றுவிட்டாள் என்ற செய்தி அவளுக்கு அளவில்லாத துக்கத்தையும் ஏமாற்றத்தையும் தந்தது. விதி இந்த விஷயத்திலுமா தன்னை வஞ்சிக்க வேண்டும் என மனம் நொந்தாள். நூறு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வரம் வாங்கியும், கடவுளும் தன்னை வஞ்சிக்கப்பட்டவளாக உணர்ந்தாள்.
அக்கோபத்தில் ஏமாற்றத்தில் தன் வயிற்றை தடியால் அடித்துக்கொள்ள, மாமிசப்பிண்டம் தசையும் ரத்தமுமாக வெளியேறியது. அப்போது அங்கு வந்த வியாசர் அப்பிண்டங்களை சுத்தப்படுத்தி சம பாகங்களாகப் பிரித்தார். 100 பாகங்களும் மிச்சமாக ஒரு சிறிய பாகமும் தேறியது. அவற்றை நூற்றி ஒரு கிண்ணங்களில், பசு நெய்யை நிரப்பி அதில் போட்டு வைத்தார். உரிய காலம் ஆனதும் முதல் கிண்ணத்திலிருந்த பாகம் துரியோதனானகவும், அடுத்த கிண்ணத்தில் இருந்தது துச்சாதனாகவும் மற்றும் ஏனைய எல்லாம் அவனது சகோதரர்களாகவும் பிறப்பெடுத்தனர். கடைசி கிண்ணத்தில் இருந்த பிண்டம் துச்சலை என்ற பெண் குழந்தையாக உருவெடுத்தது.
துரியோதனன் பிறந்த நேரம் சரியில்லை என அரண்மனை ஜோசியர்கள் கூறினர். குல அழிவு துரியோதனனால் ஏற்படும் என்றும், அவனை மட்டும் குழந்தையாய் இருக்கும்போதே அழித்து விடும்படியும் கூறினர். இதுவரை குழந்தை பிறக்கவில்லையே என்ற வேதனை. இப்போதோ, பிறந்த குழந்தையை அழிக்க வேண்டும் என்ற சோதனை. பாவம் ஒரு பெண் எத்தனை இன்னல்களை மன உளைச்சல்களைத்தான் தாங்குவாள்?!
கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே வளர்ந்து வந்த பகையை போக்க எத்தனையோ அறிவுரைகள் சொல்லியும் அதை கௌரவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம், திருதிராஷ்டிரனும், சகுனியும்... இருவரின் பங்காளி சண்டை பாரதப்போரில் கொண்டு வந்து நிறுத்தியது. பாரதப்போர் நெருங்கியது... பாரதப் போருக்குமுன் துரியோதனும் அவனது சகோதரர்களும் ஆசிப்பெற காந்தாரியின் கால்களின் விழுந்தபோது, 'அறம் இருக்கும் இடத்தில் வெற்றி் உண்டு’ என்றுக்கூறி மறைமுகமாய் புத்தி சொன்னாள். வியாசர் அளித்த வரத்தினால், போரை அவள் கண்மூடி இருந்த போதும் நேரில் பார்ப்பது போலவே பார்த்தாள். தனது ஒவ்வொரு மகன்களும் பாண்டவர்களால் அழிக்கப்படும்போது அவளது உள்ளம் பட்ட பாட்டை விளக்க வார்த்தைகள் இல்லை. அறநெறிக்கு புறம்பாக இருந்தாலும் தாய்க்கு தன் பிள்ளைகள் பிள்ளைகள்தானே?!
வளர்ந்த பிள்ளையை உடையில்லாமல் காண்பதா?! என யோசித்தாலும், துரியோதனின் நலன் கருதி அப்படியே செயல்படுத்த காந்தாரி முடிவெடுத்து துரியோதனனை பிறந்த மேனியாய் வரச்சொல்லி ஆள் அனுப்பினாள். துரியோதனும் பிறந்த மேனியாய் அன்னையின் அரண்மனை நோக்கி வந்தான். இந்த விசயம் கேள்விப்பட்ட கிருஷ்ணர், துரியோதனன் வரும் வழியில் ஒரு தோட்டக்காரன் வேடம் கொண்டு, மன்னா! என்ன இது கோலம் என துரியோதனனை இடைமறித்து நின்றான். சகாதேவனின் ஆலோசனையையும், அன்னையின் ஆணையையும் துரியோதனன் சொன்னான். மன்னா! வளர்ந்த பிள்ளையை உடை இல்லாமல் தாய் காண்பது அறமாகாது. அப்படி கண்டால் தாயின் கோவத்துக்கு ஆளாகி, தாங்கள் எரிக்கப்படுவீர்கள். அதனால், நீங்கள் பிறப்பு உறுப்பு மறைக்கும்படும்படி இடையில் மட்டுமாவது எதாவது ஒரு சிறு துணியை கட்டிக்கொண்டு செல்லுங்கள் எனக்கூறினார். துரியோதனனும் மனம் குழம்பியவனாய் சிறு துண்டு கட்டிக்கொண்டு அன்னையின்முன் சென்றான்.
இதையறியாத காந்தாரி, கண்களை திறந்து துரியோதனனை பார்க்க, துணி மூடி இருந்த இடை மட்டும் பலவீனமாகவும், துணியினால் மூடப்படாத மற்ற பாகங்கள் வஜ்ரம் மாதிரி உறுதியாகவும் ஆனது. திரௌபதியை எந்த தொடையில் வந்து அமரச்சொன்னாயோ! அந்த தொடையை பிளந்து ரத்தமெடுத்து திரௌபதி கூந்தலில் தடவி உன்னைக்கொல்வேன் என எடுத்த சபதம் அவளது நினைவுக்கு வந்தது. ஏன் இப்படி வந்தாய் என துரியோதனனிடம் விசாரிக்க, தோட்டக்காரனுடன் நடந்த உரையாடலை சொன்னான். இது கிருஷ்ணனின் சதி என்பதை காந்தாரி உணர்ந்து விதியின் விளையாட்டை எண்ணி மனம் வருந்தினாள்.
குருஷேத்திரப்போரில் துரியோதனன் வீழ்ந்தான். அவனை மடியில் கிடத்தி அழுததோடு, குருஷேத்திர போருக்கு காரணமான கிருஷ்ணருக்கு, அவரது யதுகுல வம்சம், 36 ஆண்டுகளுக்குப்பின்னர் அழிவினை சந்திக்க வேண்டுமெனவும், என்னைப்போலவே தனது வாரிசுகளின் மடிவதை கண்டபின்னர் கிருஷ்ணரும் இறக்க வேண்டுமென சாபமிட்டாள்.
திருமணத்திற்குமுன் தனக்கிருந்த தோஷத்தால், ஆட்டுக்கடாயை திருமணம் செய்து கொண்டு, அதை பலி கொடுத்த சடங்கின்மூலம், தனது முதல் கணவன் நிலைக்க மாட்டான் என்ற தோஷம் நிவர்த்தி செய்யப்பட்ட விவரம், பீஷ்மருக்கு தாமதமாக தெரிய வந்தது. தன் குலத்திற்கு ஒரு விதவை மருமகளாக வருவதா? இந்த விஷயம் மற்றவர் அறிந்தால் இகழ்ச்சிக்கு ஆளாக நேரிடுமே என்று எண்ணி, அந்த ரகசியம் தெரிந்த சுலபன் குடும்பத்தினர் ஒருவரையும் விடாது அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அதன் காரணமாக அவர்களை குடும்பத்துடன் சிறை வைத்து ஒரு பிடி உணவு மட்டுமே கொடுத்து அழிக்க முயன்று, எல்லாரும் ஒரு பிடி உணவு உண்டு உயிர் வாழமுடியாது என்பதை உணர்ந்த சுலபனும், அவரது மகன்களும் தங்களுடைய உணவினை சகுனிக்கு தந்து அவனை உயிர்பிழைக்க வைத்து தாங்கள் உயிர் விட்டதாகவும், தந்தை, சகோதரர்களின் மரணத்திற்கு பழி வாங்கவே குருகுலத்தை பழிவாங்கி சகுனி அழித்தான். ஆக, சகோதரனாலும் காந்தாரி வஞ்சிக்கப்பட்டாள்.
கடவுள், தந்தை, குலகுரு, கணவன், சகோதரன் என அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட காந்தாரியின் வாழ்க்கை மன அமைதியின்றி, தவிப்பு, சோகம் பதட்டம் நிறைந்ததாகவே அவள் வாழ்க்கை இருந்தது. தன் கணவன் பார்க்காத உலகை நானும் பார்க்கமாட்டேன் எனக்கூறி தன் கண்ணை கட்டிக் கொண்டதிலாகட்டும், தனது வாரிசுகள் அரியணையில் ஏறவேண்டுமென்ற ஆசைக்கு குந்தி புத்திரர்கள் தடையாய் இருந்தாலும், குந்தியையும், பாண்டவர்களையும், மருமகள் திரௌபதியை அரவணைத்து சென்றதிலாகட்டும், திரௌபதியை துகிலுரித்ததை கண்டித்தலாகட்டும், பாண்டவர்கள் போருக்கு போகும்முன் ஆசிப்பெற வந்தபோதிலும், அறம் உள்ள பக்கம் ஜெயிக்கட்டும் என கூறியதில் ஆகட்டும்,போரில் தனது நூறு மகன்களையும் இழந்து சோகத்தில் இருக்கும்போதும், போரில் வெற்றிப்பெற்று தன்னைச் சந்திக்க வந்த பாண்டவர்களை எதிரிகளே ஆனாலும் தன் வருத்தத்தையும் கோபத்தையும் அளவோடு வெளிப்படுத்தி அவர்களை அரவணைத்துச் சென்றதிலாகட்டும் காந்தாரி கற்புக்கரசி மாத்திரம் அல்லாமல் திட சித்தமும், மன உறுதியும் கொண்ட வெற்றிகரமான பெண்மணி ஆகிறாள்.
எத்தனை திறமைகள், நல்ல குணநலன்கள் இருந்தாலும் துரியோதனின் தாய் என்ற ஒரே காரணத்திற்காக, அவளும் வில்லியாகவே இந்த உலகம் பார்க்க வைக்கப்பட்டிருக்கு. தியாகம், அன்பு, அழகு, குணநலன், அறிவு என அத்தனை திறமைகள் இருந்தபோதும், அனைத்து தரப்பினாலும் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை வெளிச்சத்தின் பின்னே இருளில் கிடக்கின்றது....
வெளிச்சத்தின் பின்னே தொடரும்...
நன்றியுடன்,
ராஜி
சிறப்பு. மகாபாரதக் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யம். ஏகப்பட்ட கிளைக்கதைகள், துணைக்கதைகள் இருக்கும். சகுனியின் பகைமுடித்தலுக்கான காரணத்தை இப்போதுதான் அறிந்தேன்.
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ReplyDeleteஅறியாத செய்திகள்
அருமை... உண்மை...
ReplyDelete