Monday, March 04, 2019

சிவனும், விஷ்ணுவும் வேறல்ல என்பதை உணர்த்தும் சிவாலய ஓட்டம் - சிவராத்திரி




மாமா! இன்னிக்கு மகா சிவராத்திரி.. சிவராத்திரின்னா என்ன எப்படி விரதமிருக்கனும்ன்னு சொல்லேன்.  சிவராத்திரி கதை எல்லாருக்குமே தெரியும். மகாசிவராத்திரி உருவான புராணக்கதை, பலன் இருந்தால் கிடைக்கும் பலன், சிவராத்திரியன்று செய்யப்படும் நாலுகால பூஜையின் விவரம்லாம் விவரமா இந்த பதிவில் இருக்கு. படிச்சு தெரிஞ்சுக்க. இன்னிக்கு மகாசிவராத்திரி பத்திய புது தகவலை இன்னிக்கு உனக்கு சொல்றேன்.

புதுதகவலா?! அதான் புராணக்கதையெல்லாம் படிச்சு தெரிஞ்சுக்க சொல்லியாச்சே!  அப்புறமென்ன புதுசா தகவல் சொல்லப்போறே?!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள , 118கிமீ தொலைவுக்குட்பட்டு இருக்கும் 12 சிவாலயங்களை ஒரேநாளில் தரிசிக்கனும்.  

ம்க்கும். இது பெரிய விசயமா?! வண்டியில் ஏறி உக்காந்தா அரைநாளில் சுத்தி பார்த்துடலாமே மாமா.  
வசதிவாய்ப்புகள் இருக்குற இந்தக்காலத்தில் இது சுலபம்தான் புள்ள. ஆனா  அந்த காலத்தில்?!

கொஞ்சம் கஷ்டம்தான்,..மாமா..
Image may contain: tree, outdoor, text and nature

கொஞ்சமல்ல! நிறைவே கஷ்டம்தான். 24 மணிநேரத்திற்குள் 118கிமீக்குட்பட்ட 12 கோவில்களையும் தரிசிக்கனும்ன்னு ஓட்டமா ஓடி குறிப்பிட்ட நேரத்திற்குள் 12 சிவாலயங்களையும் தரிசிப்பாங்க.

ஓ! இப்படி ஓடியே சாமி கும்பிடுறதாலதான் சிவாலய ஓட்டம்ன்னு பேர் வந்துச்சா?!

இதுமட்டும் காரணமில்லை. இதுமாதிரி ஒரு நிகழ்வு உண்டாக பல புராணக்கதைகளை சொன்னாலும்,இரண்டு புராணக்கதைகள் மட்டுமே அதிகமாக நம்பப்படுது.   முன்பொரு காலத்தில் சுண்டோதரன்ன்ற அரக்கன் ஒருவன் இருந்தான். அவன் மிக சிறந்த சிவ பக்தன். சிவலிங்கத்தை எங்கு பார்த்தாலும் குளித்து, அந்த லிங்கத்தை மூன்றுமுறை சுற்றி, பூஜை புனஸ்காரங்களை  முடித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பான். அவன் ஒருமுறை சிவபெருமானை நினைத்து கடுமையாக தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவன்முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும்” எனக்கேட்க, அரக்கன் “தான் யாரை நோக்கி தனது சுண்டு விரலை காட்டுகிறேனோ அவன் சாம்பல் ஆகிட வேண்டும் ” என வரம் கேட்க, சிவபெருமானும் கொடுத்து விட்டார்.

வரத்தை பெற்றதும் அரக்கனுக்கு தனக்கு உண்மையிலே வரம் கிடைச்சுட்டுதான்னு சந்தேகம் வர, உடனே சிவபெருமானிடம், “நான் இதனை சோதித்து பார்க்க தேவலோகம் வரை போகனும். இப்போது அதற்கு நேரமில்லை. அதனால் தங்களிடமே இதனை சோதித்து பார்க்கிறேன்” என அரக்கன் சொல்ல சிவபெருமான் அதிர்ந்து, அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார். ஓடும்போதுதான் சிவபெருமானுக்கு அரக்கனின் சிவபக்தி குறித்து நினைவுவர தன் கழுத்திலிருந்து ஒரு ருத்ராட்சையை எடுத்து கீழே போட்டார். அதில் ஒரு லிங்கம் உருவானது. லிங்கத்தை கண்டதும் மூடனான அரக்கன் அருகிலுள்ள குளத்தில் குளித்து, லிங்கத்தை வழிபாடு செய்து, பின்னர் சிவபெருமானை துரத்தினான். சிவபெருமானும் அரக்கன் தன்னை நெருங்கும்போதெல்லாம் ஒரு ருத்திராட்சையை போட்டு வந்தார்.

அப்படி ஓடும்போது, சிவபெருமான் காக்கும் கடவுளான விஷ்ணுவை உதவிக்கு, கோவிந்தா! கோபாலா!! என அழைத்தபடி ஓடினாராம். அதன் அடையாளமாகாத்தான் தற்போதும் பக்தர்கள் ஓடும்போது கோவிந்தா!. கோபாலா! எனக்கூவியபடியேதான் போவாங்க.  சிவராத்திரியன்று சிவ ஆலயத்தில் நடக்கும் விசேஷத்தில் கோவிந்தா! கோபாலா! என பக்தர்கள் சொல்வது வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கும். பன்னிரெண்டாவது ஆலயமான நட்டாலம் வரும்போது விஷ்ணு பெண் அவதாரமான மோகினியாக தோன்றி அரக்கனை மயக்கி அவனுடன் ஆடுகிறார். விஷ்ணு ஆடுவதை போன்றே அரக்கனும் ஆட, விஷ்ணு தனது சுண்டு விரலை தன்னை நோக்கி காட்ட, அரக்கனும் அவ்வாறே செய்ய அரக்கன் சாம்பலாகி விடுகிறான். அதனால்தான் பன்னிரெண்டாவது ஆலயத்தில் மட்டும் சிவ ஆல்யத்தில் விஷ்ணு சன்னதியும் இருக்கும். 
சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் தங்கள் கையில் விசிறி வைத்திருப்பார்கள். எல்லா ஆலயம் செல்லும்போது லிங்கத்திற்கும் விசிறி விடுவார்கள். அதாவது தங்களுடன் சிவபெருமானும் ஆடுவதாக ஐதீகம். அவ்வாறு ஓடும் சிவபெருமானுக்கு வியர்க்காமல் இருக்க விசிறி விடுவது வழக்கம்.

சரி, அடுத்த கதை என்ன மாமா!
பாண்டவர்களின் மூத்தவரான தருமர், ராஜகுரு யாகம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு, புருஷாமிருகத்தின் (வியாக்ரபாதர்) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன்மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் ஒருசேர உண்டு. வியாக்ரபாத மகரிஷிக்கு, சிவனும், விஷ்ணுவும் ஒன்றென உணர்த்த நினைத்தார், மகாவிஷ்ணு. அதன்படி பீமனிடம், புருஷாமிருகத்தின் பால் கொண்டுவர கட்டளையிட்டார். கூடவே 12 ருத்ராட்சங்களை பீமனின் கையில் கொடுத்தார். “உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால், இதில் ஒன்றை கீழே போட்டுவிடு” என்று சொல்லியும் அனுப்பினார்.



பீமன் புருஷாமிருகத்தை தேடி கானகம் வந்தான். அன்று மகாசிவராத்திரி நன்னாள். அங்கே புருஷாமிருகம் முஞ்சிறை திருமலையில் சிவபூஜை செய்து கொண்டிருந்தது. அங்கு பீமன் சென்று, “கோபாலா.. கோவிந்தா...'' எனக்கூறி புருஷாமிருகத்தை சுற்றி வந்தான். திருமாலின் திருநாமத்தைக் கேட்டதும், புருஷாமிருகம் மிகவும் கோபமடைந்து, பீமனை விரட்ட ஆரம்பித்தது. உடனே பீமன் அந்த இடத்தில் ஒரு ருத்ராட்சத்தைப் போட்டான். கீழே விழுந்த ருத்ராட்சம், ஒரு சிவலிங்கமாக மாறியது. இதைப் பார்த்ததும் புருஷாமிருகம் சிவலிங்க பூஜை செய்யத் தொடங்கியது.  பூஜை முடிந்ததும் பீமனை துரத்த ஆரம்பித்தது. சிறிது தூரம் போனதும், பீமன் மீண்டும், ‘கோவிந்தா!, கோபாலா! விட்டலா!’ எனக் குரல் எழுப்பியபடியே ஓடினான். 
Harihara
ஓடிய பீமன் மீண்டும் ஒரு ருத்ராட்சத்தை கீழே போட்டான். அதுவும் சிவலிங்கமாக மாறியது. அதைப் பார்த்து மீண்டும் புருஷா மிருகம் சிவ பூஜை செய்யத் தொடங்கியது. இப்படியே 12 ருத்ராட்சங்களும் 12 சிவ தலங்களாக உருவாகி நின்றன. 12-வது ருத்ராட்சம் விழுந்த இடத்தில் ஈசனுடன் மகாவிஷ்ணு இணைந்து, சங்கர நாராயணனாக காட்சி தந்தனர். அதைக்கண்ட புருஷா மிருகம் அரியும், அரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டது. கடைசி தலமான திருநட்டாலத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோலத்திலும் ஈசன் காட்சி தந்தார். அந்த மகிழ்ச்சியில் தருமரின் யாகத்திற்கு பால் கொடுக்க புருஷாமிருகம் ஒப்புக்கொண்டது. 
Shiva Shakti.The United Form of The Supreme Lord & Supreme Mother Goddess.Proofing the equality of Shiva & Shakti
இதை மெய்ப்பிக்கும் வகையில் திருநட்டாலத்தில் இன்னமும் இரண்டு ஆலயங்கள் உள்ளன. ஒன்றில் ஈசன், அர்த்தநாரீஸ்வரராகவும், மற்றொரு ஆலயத்தில் சங்கரநாராயணராகவும் அருள்பாலிக்கிறார். சிவாலய ஓட்டம் தொடர்பான திருக்கோவில்களின் தூண்கள், புருஷாமிருகம் மற்றும் பீமனின் சிற்பங்களை இன்னிக்கும் அந்த கோவில்களுக்கு போனால் நாம பார்க்க முடியும்.  இந்த புராண நிகழ்ச்சியை கொண்டுதான் சிவாலய ஓட்டம்ன்ற விரதத்தை பக்தர்கள் கடைப்பிடிக்குறாங்க. 
2019க்கான சிவாலய ஓட்டம் மார்ச் 3 ந்தேதி  தொடங்கியது...

மகா சிவராத்திரியன்று சிவாலய ஓட்டத்துக்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருப்பாங்க. அதிகாலை 3 மணியளவில் காவி வேட்டி, காவித்துண்டு, ருத்ராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் இந்த ஓட்டத்தை சிவ பக்தர்கள்  முதல் தலமான முஞ்சிறையில் சிவாலய ஓட்டத்தினை தொடங்குவாங்க. முன்னதாக, கோவில் அருகே இருக்கும் மங்காடு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, , திருமலை மகாதேவர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு பிரசாதம் வாங்கிக்கிட்டுதான் சிவாலய ஓட்டத்தை ஆரம்பிப்பாங்க.

Image may contain: 1 person
சிவாலய ஓட்டத்தினை தொடங்கும்  ‘முஞ்சிறை திருமலை மகாதேவர் சூலபாணி கோவில்’  நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் பொற பாதையில் மார்த்தாண்டத்திலிருந்து தேங்காய்ப்பட்டணம் போற வழியில் 7 கி.மீ தூரத்தில் இருக்குது.  பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை முருகப்பெருமான் இங்கு சிறைப்பிடித்ததாகவும், அதனால் இந்த ஊர் முன்சிறை  பேர் உண்டாச்சாம். திருமலை கோயிலில் சாயரட்சை பூஜை முடிந்ததும், சிவாலய ஓட்டம் தொடங்கும். 

Image may contain: one or more people, people standing and outdoor
அங்கிருந்து  இரண்டாவது திருக்கோவிலான ‘திக்குறிச்சி மகாதேவர் கோவில்’. இங்கு மகாதேவர், விநாயகர், ஸ்ரீதர்மசாஸ்தா, நாகராஜா ஆகியோருக்கு சந்நிதிகள் இருக்கு, தாமிரபரணி ஆற்றில் நீராடி மகாதேவரை தரிசிப்பாங்க.

Image may contain: outdoor
மூணாவது கோவிலான திற்பரப்பு மகாதேவர் வீரபத்திரர்கோவில் திக்குறிச்சிக்கு கிழக்கே அருமனை களியல் வழியா 14 கிமீ தூரத்தில் இருக்கு.  இங்கதான் திற்பரப்பு நீர்வீழ்ச்சி இருக்கு. சிவன் கோயில்களில் சிவலிங்கத்தின் எதிரில் நந்தி பகவானே இருப்பார். ஆனா இங்க   சிவனின் உக்கிரத்தைத் தணிக்க, கருவறை ஓரத்தில் இருக்கு. இதையொட்டிய திற்பரப்பு அருவி இருக்கு.

Image may contain: sky and outdoor
நாலாவது கோவிலான  திருநந்திக்கரை நந்திகேஸ்வரர் கோவில்’ . திற்பரப்பிலிருந்து குலசேகரம் சந்திப்பு வழியா 7 கிமீ தூரத்திலிருக்கு.  பரந்து விரிந்த பாறையின்மீது இருப்பதால் வெப்பம் தாளாத சிவபெருமான், கோயில் தெப்பக்குளத்தில் சுயம்புவாக எழுந்தருளி, தனக்குக் குளத்திலேயே ஆலயம் எழுப்புமாறு கட்டளையிட்டார்  தலவரலாறய் சொல்றாங்க. இக்கோவில் கேரள மாநிலத் தந்திரிகளால் ஆகம விதிப்படியும், கேரள தச்சு சாஸ்திரப்படியும் எழுப்பப்பட்டிருக்கு.  கோயிலையொட்டி குகைக்கோயில் ஒன்றும், கல்வெட்டுகளும்  இருக்கும். 

என்னைய ஒருமுறை அங்க கூட்டிப்போயேன் மாமா! பதிவு தேத்த உதவும்..

உன்னையெல்லாம் கூட்டி போனால் சாமி கும்பிட்டு புண்ணியம்லாம் தேத்தமுடியாது. அதனால் சொல்றதைலாம் அமைதியா கேட்டுக்கிட்டே வா!
Image may contain: one or more people, people standing, sky and outdoor
அஞ்சாவது கோவிலான   பொன்மனையில் இருக்கும் தீம்பிலான்குடி மகாதேவர் கோவில்.  . திருநந்திக்கரையில் இருந்து கிழக்கே 7 கிமீ தூரத்தில் இருக்கு இக்கோவில் இங்கு, கிழக்குப்பார்த்தபடி சிவபெருமான் அருள்புரிகிறார். 
Image may contain: 1 person, outdoor
‘திருபன்னிப்பாகம் கிராத மூர்த்தி மகாதேவர் கோவில்’, ஆறாவது கோவில். பொன்மனையிலிருந்து குமாரபுரம், முட்டைக்காடு வழியா 12 கி. மீ தொலைவில் இருக்கு.
Image may contain: one or more people, outdoor and indoor
ஏழாவது கோவில் ‘கல்குளம் பத்மநாபபுரம் ஆனந்தவல்லி உடனுறை நீலகண்ட சுவாமி கோவில்’  திருபன்னிப்பாகம் ஆலயத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இருக்கு இக்கோவில். இங்கு ஆதிமூலமூர்த்தியாக, 10 அடி உயர சிவலிங்கம் காட்சியளிக்கிறது. மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்த்து வியந்த மார்த்தாண்டவர்மா மகாராஜா, தமிழக ஆலய அமைப்பின் சாயலில், முன்புறம் அழகுமிக்க கோபுரத்துடன் இந்த ஆலயத்தைக் கட்டியதாகச் சொல்றாங்க.  
Image may contain: text and outdoor
‘மேலாங்கோடு காலகாலர் கோவில்’ சிவாலய ஓட்டத்தின் 8-வது கோவில். கல்குளத்திலிருந்து 2 கிமீ  தூரத்தில் இந்தக் கோவில் இருக்குது. இங்க பக்கத்துலதான்மேலாங்கோடு இசக்கியம்மன் ஆலயமும், பத்மனாபபுரம் கோட்டையும் இருக்கு..

மாமா! அந்த இசக்கி அம்மன், பத்மனாபுரம் கோட்டைக்காவது?!

பிச்சுடுவேன். அமைதியா கேட்டுட்டு வந்தால் பதிவு தேத்த விவரமாவது சொல்வேன். இல்ல அடம்பிடிச்சு எதிர்த்து பேசினால் நான் போய்டுவேன்.

எனக்கு பதிவுதான் முக்கியம். நீ சொல்றதை அமைதியா கேட்டுக்குறேன் மாமா; 
Image may contain: one or more people, night and outdoor

ஒன்பதாவது கோவில் ‘திருவிடைக்கோடு (வில்லுக்குறி) சடையப்பர் கோவில். மேலாங்கோடு ஆலயத்திலிருந்து தெற்கில் திருவனந்தபுரம் ஹைவேஸ் வழியா 5 கிமீ தூரத்தில் இருக்குது.  மேற்கு நோக்கி அமைந்த கோவில் இது. கேரள-தமிழக கட்டிட கலையில் கட்டப்பட்டது.
Image may contain: one or more people, night and outdoor
அடுத்து பத்தாவது கோவிலான ‘திருவிதாங்கோடு நீலகண்ட சுவாமி கோவில்’. வில்லுக்குறி தலத்திலிருந்து தக்கலை, கேரளபுரம் வழியா தெற்கே 8 கிமீ தூரத்தில் இந்தக்கோவில் இருக்கு. சிவபெருமானுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இங்க தனிச் சந்நிதிகள் இருக்கு. ஆலய மண்டபத் தூண்களில் கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகள் சிற்பங்களா வடிச்சிருக்காங்க.  சிற்பக்கலைக்கு சான்றாய் இக்கோவில் இருக்கு.

Image may contain: one or more people, people on stage, people standing and outdoor

11-வது கோவில் ‘திருபன்றிகோடு பக்தவத்சலர் மகாதேவர் கோவில்’  இது திருவிதாங்கோடு கோவிலிலிருந்து பள்ளியாடி வழியா 8 கிமீ தூரத்திலிருக்குது. சிவபெருமானும், நந்தியும் முறையே வேடனாகவும் பன்றியாகவும் உருமாறியதும், அந்தப் பன்றியை வேட்டையாடும்பொருட்டு சிவபெருமானுடன் அர்ஜுனன் போர்புரிந்த இடமும் இது என புராணம் சொல்லும் சேதி.

Image may contain: 2 people, night and outdoor

சிவாலய ஓட்டத்தின் நிறைவான 12வது கோவில் ‘திருநட்டாலம் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சங்கரநாராயணர் கோவில்கள். திருபன்றிகோடு ஆலயத்திலிருந்து மேற்கில் 3 கிமீ தூரத்திலிருக்கு இக்கோவில்.  12-வது ருத்திராட்சம் இங்குதான் விழுந்ததாகவும் வியாக்ரபாதர் இந்த ஆலயத்தை அமைத்தார் என்றும்  ஸ்தல புராணம் சொல்லுது. இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, சிவபெருமானையும் பின்னர் சங்கரநாராயணரையும் தரிசித்து, விஷ்ணுவும் சிவனும் ஒன்றே என உணர்ந்து, உள்ளம் பூரித்து, நிம்மதியும் மனநிறைவுமா பக்தர்கள் வீடு திரும்புவாங்க என்பது நம்பிக்கை. 


ஸ்ஸ்ஸ் அபா! கேக்கவே கண்ணை கட்டுதே!

ம்ம் கட்டும்!! கட்டும்!! இப்பலாம் வேன், கார், டூவீலர்ன்னு அவங்கவங்க வசதிப்படி 12 கோவில்களையும் தரிசித்துட்டு வந்துடுறாங்க. முன்னலாம் ஓட்டமாவே  ஓடி 12 ஆலயங்களையும்  தரிசிப்பாங்க. அப்படி ஓடும்போது வியர்க்காமல் இருக்கவும், சுண்டோதரன் கதைப்படி ஓடும் சிவனுக்கு வியர்க்காமலிருக்க விசிறிவிடவும்தான் கையில் விசிறியோடு பக்தர்கள் விசிறி கொண்டு போறாங்க. 
இப்பலாம் 12 கோவில்களையும் இணைக்குறமாதிரி ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படுது.  கேரள-தமிழக மக்கள் இந்த சிவாலய ஓட்டத்துல கலந்துப்பாங்க அதுக்காகவே உள்ளூர் விடுமுறை கன்னியாக்குமரி மாவட்டத்துல விடுறாங்க.  

ஆண்டுதோறும் மகாசிவராத்திரி . சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் பக்தர்களுக்காக  மோர், ஜூஸ், பானகம், கிழங்கு, கஞ்சி, விசிறிலாம் கொடுத்து அந்த புண்ணியத்துல கொஞ்சூண்டு தங்களுக்கும் கிடைக்குமாவென பார்க்குறாங்க.
ம்ம்ம் சரிதான் என்னையும் ஒருமுறை இப்படி கூட்டிப்போயேன். 
ம்க்கும் பக்கத்து தெருவுக்கு போய்வரவே மூச்சு வாங்குது. 110கிமீ நடப்பியா?!

நீ கூட இருந்தால் நான் நடப்பேன் மாமா!

ம்ம் சரி என்ன திடீர்ன்னு புண்ணியம் சேர்க்க ஆசை வந்துட்டுது. சாமி இல்ல பூதமில்லைன்னு சொல்லிட்டு இப்படி கேக்குறியே! சிவபெருமான்கிட்ட கேட்க எதாவது ஆஃபர் இருக்கோ!!

ம்ம் எனக்கு யார்கிட்டயும் கேட்டு பழக்கமில்ல! ஒருவேளை சிவன் கொடுக்குறதா இருந்தால் ஒன்னே ஒன்னுதான் கேட்பேன். அதைக் கொடுக்க சொல்லேன்!

நீ என்ன கேட்பேன்னு எனக்கு தெரியுமே!

நிச்சயமா உனக்கு தெரியாது..

மாசமாசம் வரும் சிவராத்திரியன்னிக்கு  ஒவ்வொரு முறையும் புதுசுபுதுசா பூஜை ரூம்ல இந்த மாதிரி கோலம்போட நகையை கொடுத்தால் போதும்!
No photo description available.
ஐயோடா! சாமி! பாவம் சிவபெருமான்! உன்கிட்ட மாட்டிக்கிட்டு அல்லல்படப்போறார்!!

நன்றியுடன்,
ராஜி

11 comments:

  1. ஜக்கி பக்கி, ஈஷா போஷா - இப்படி எதுவும் பதிவில் இல்லை என்பதால், ஈசன் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு...

    ReplyDelete
    Replies
    1. சாரி, எனக்கு சாமியார்களையே பிடிக்காது. வாழும் சாமியார்ஜளான நித்தி, ஜக்கி, ஈஷா மட்டுமில்ல சாய்பாபா, புட்டர்பத்தி சாய்பாபா.. மாதிரியான ஆட்களையும் பிடிக்காது.

      ஒருவேளை என் இம்சை தாங்காம மாமா சாமியாரானால் அவரையும் பிடிக்காது.

      Delete
  2. விஷ்ணுவும் , பிரம்மாவும் அடி, முடி தேடிய வரலாறு எந்த கோயிலுடன் தொடர்பு உடையது ?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரிந்தவரை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுடன் தொடர்புடையது சகோ.

      Delete
  3. சிவாலய ஓட்டம் பற்றி படித்த நினைவு. விரிவான தகவல்களை இங்கே கண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. பகிர்ந்துக்கொள்வதிலும் எனக்கு மகிழ்ச்சி

      Delete
  4. மிக அருமை ராஜி க்கா..

    இன்று காலையில தான் எங்க வீட்டில் இந்த சிவாலய ஓட்டம் பற்றி சொன்னாங்க ...இப்போ இங்க விரிவா படிச்சு தெரிஞ்சு கிட்டேன் ...

    ReplyDelete
    Replies
    1. விவரத்தினை தெரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி அனு

      Delete
  5. நிரைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  6. நிறைய புதிய விஷயங்கள் இந்த பதிவில்

    ReplyDelete