Friday, February 24, 2017

குரங்கு சக்ரவர்த்தியான கதை- மகா சிவராத்திரி

விநாயகர் சதுர்த்தி, அனுமன் ஜெயந்தி, ராமநவமி, க்ருஷ்ண ஜெயந்திலாம் அந்தந்த இறைவனின் அவதாரங்களின் தினங்களை குறிப்பிட்டு நடத்தப்படும் விழாக்களாகும். ஆனால், பிறப்பும், இறப்புமில்லாத சிவனுக்கு ஜெயந்தி விழா என்பது கிடையாது. ஜெயந்தி விழா இல்லாத குறையை தீர்க்க ‘மகா சிவராத்திரி’ கொண்டாடப்படுது.

மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரி ‘மகா சிவராத்திரி’ என்றழைக்கப்படுது. உலகிற்கு ஆதாரமான சிவபெருமான் உலக உயிர்களை படைத்தலும், படைத்த உயிர்களை காத்தலும்,  காத்த உயிர்கலை தன்னுல் ஐக்கியப்படுத்திக்கொள்ளுதலும் இந்த நாளில்தான் என்கிறது நம் புராணங்கள். இதனை லயக்ரம ஸ்ருஷ்டி தினம்’ எனப்படுது. ‘லயம்” என்றால் ஒடுக்குதல்.  ஸ்ருஷ்டி என்றழைக்கப்படும் ‘படைத்தல்’.  அதாவது படைத்தலுக்கும், அழித்தலுக்குமான விழாவே ” மகா சிவராத்திரி’ ஆகும்.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து ஆலகால விஷம் வந்தது. அந்த விஷத்தினை பெருமான் உண்டு உலகை காத்தருளினார். சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிப்பட்டனர். அந்த நாளே சிவராத்திரி ஆகும்.
ஒரு காலத்தில் உலகம் அழிந்து சிவப்பெருமானுள் ஐக்கியமானது. இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் பார்வதிதேவி ஆகமவிதிப்படி சிவப்பெருமானை நான்கு கால பூஜை செய்து வழிப்பட்டாள். பார்வதி தேவி வழிப்பட்டதன் நினைவாகவும் சிவராத்திரி கொண்டாடப்படுது. அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நீக்கி நான் எவ்வாறு வழிப்பட்டேனோ அவ்வாறு வழிப்படுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாள். அப்படியே ஆகட்டும் என அப்பனும் அருளினார். அதன்படியே  ’மகா சிவராத்திரி’  கொண்டாடப்படுது.

சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் உள்ள சிவன் படங்களின் முன் பூஜை செய்து, அருகில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும். அன்று சிவன் கோவில்களில் நடைப்பெறும் விசேஷ அபிஷேக ஆராதனைகளில் கலந்துக்கொள்ள வேண்டும். பால், தயிர், தேன், இளநீர்.. போன்ற பொருட்களை வழங்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது.
விரதம் இருக்கும் முறை;
குளித்து முடித்து பூஜை செய்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபடுவது நல்லது. பூஜை அறையிலோ அல்லது கோவில்களிலோ சிவலிங்கத்தை அலங்கரித்து இரவு முழுவதும் விழித்திருந்து நாலு கால பூஜைகளில் கலந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள்

  குறைந்த பட்சம் லிங்கோற்த்பவ காலத்திலாவது கண்விழித்திருக்கவேண்டும். அதிகாலை மூன்று மணிக்கு வில்வ இலை மற்றும் மலர்களால் தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் சிவாய நம ஓம்... ஓம் நமச்சிவாய.. என சிவ நாமத்தை தியானம் செய்ய வேண்டும். சிவன் தொடர்பான கதைகள், திருவாசகம், திருமூலர், திருமந்திரம்.. போன்றவற்றை படித்தல் நல்லது.. அதைவிடுத்து, தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றில் கவனம் செலுத்துவதை தவிர்த்தல் நலம்...

இனி நாலு கால பூஜை விவரங்களை பார்ப்போம்...

முதல் கால பூஜை;
இதை பிரம்மதேவன் சிவனை நோக்கி செய்வது.  இந்த காலத்தில் பூஜிப்பது பிறவித்துன்பத்திலிருந்து விடுபட செய்யும். பஞ்சகவ்யம் அபிஷேகம், சந்தனப்பூச்சு, வில்வம் அர்ச்சனை, தாமரை அலங்காரம் , பாயாசம் நிவேதனம் செய்து ரிக்வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
இரண்டாம் கால பூஜை;
இதை மகாவிஷ்ணு சிவனுக்கு செய்வதாய் ஐதீகம்.. இந்த காலத்தில் பூஜிப்பது தன, தான்ய சம்பத்துகள் கிடைக்கும். சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்த பூச்சு, துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்து யஜூர் வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
மூன்றாம் கால பூஜை:
 இந்த பூஜையை சக்தியின் வடிவமான அம்பாள் செய்வதாக ஐதீகம். இதைதான் லிங்கோர்பவ காலம் என்பது. சிவனின்  அடிமுடியை காண விரும்பிய பிரம்மா அன்னமாகவும், விஷ்ணு வராகமாகவும் தோன்றி விண்ணுக்கும், மண்ணுக்கும் புறப்பட்ட நேரமாகும். இந்த காலத்தில் பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் சக்தி காப்பாள். தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சாத்துதல் மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம் செய்து சாம வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
நான்காம் கால பூஜை;
இந்த பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளும் செய்வதாக ஐதீகம். பதவி உயர்வும், இல்லறம் இன்பமாகவும், நினைத்தது நடக்கும். கரும்புச்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர் சார்த்தி, அல்லி, நீலோர்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம்,  வில்வ அர்ச்சனை செய்து சுத்தான்னம் நிவேதணம் செய்து  அதர்வண வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.

சிவராத்திரி விரதத்தின் பலன்கள்;
தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும், பூமிதானம், தங்கதானம், பசுக்கள் தானம், நூறு அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.   வேடன் ஒருவன் புலி துரத்தலுக்கு பயந்து மரத்தின் மீதேறி உறங்காமலிருக்க  மரத்திலிருந்து இலைகளை பறித்து கீழ போட்டும், சுரைக்குடுவையிலிருந்த நீரை சொட்டு சொட்டாய் ஊற்றியும் உறங்காமலிருந்தான். அவன் அமர்ந்திருந்தது வில்வம் மரம், அவன் பறித்து போட்டது அதன் இலைகளை... நீர் ஊற்றியது மரத்தினடியிலிருந்த சிவலிங்கத்தின்மீது,. இன்னதென தெரியாமல் செய்ததன் பலன்?! பிறவா நிலை..

பிரம்மா தவமிருந்து சரஸ்வதி தேவியையும், விஷ்ணு தவமிருந்து மகாலட்சுமியை மனைவியாய் பெற்றது இதே நாளில்தான். எனவே நல்ல துணை வாய்க்க, திருமணமாகாதோர் இந்நாளில் விரதமிருப்பது நலம்.
பாண்டவர்களில் ஒருவனான பீமன் தன் வீரம் பற்றி அகந்தை கொண்டிருந்தான். அவனது அகந்தையை அழிக்க விரும்பிய கிருஷ்ணர் ஒரு புருஷா மிருகத்தை அனுப்பினார். சிங்க முகம், யானையின் தும்பிக்கை, நீண்ட உடல் என்று வித்தியாசமான விலங்காக அது இருந்தது. அதனுடன் பீமன் முழுபலத்துடன் போரிட்டான். ஆனால், புருஷா மிருகத்தின் தாக்குதலை அவனால் சமாளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோவிந்தா, கோபாலா என்று கதறிக் கொண்டே ஒரு இரவு முழுவதும் ஓடினான். அந்த இரவு சிவராத்திரி இரவாக அமைந்தது. இப்படி சிவராத்திரி இரவில் உறங்காமல் இறை நாமத்தை உச்சரித்ததால் பீமனை சிவன் காப்பாற்றினார்.
சிவராத்திரி அன்று வில்வ மரத்தடியில் அம்மையும் அப்பனும் ஒரு மரத்தின்கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவதை மரத்தின் மீது இருந்த குரங்கு ஒன்று கேட்டது. தான் உறங்காமலிருக்க மரத்தின் இலைகளை பறித்து அம்மையப்பன் காலடியில் போட்டது. நாலு காலமும் விழித்திருந்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததை ஏற்றுக்கொண்ட அம்மையப்பன் அக்குரங்கிற்கு  மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்த பலனும், அடுத்த பிறவியில் முகுந்த சக்ரவர்த்தியாக பிறக்க அருளினார். சிவராத்திரி மகிமையை உலகம் அறிய குரங்கு முகத்தோடவே தான் பிறக்க வரம் கேட்டது குரங்கு. அப்படியே முகுந்த சக்ரவர்த்தியை பிறக்க வைத்தார்.
ஆதிசேஷன் அதிக உடல்பலம் வேண்டி சிவப்பெருமானை கும்பக்கோணம் அருகில் உள்ள நாகேஸ்வரத்தில் முதல் காலமும், நாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை இரண்டாம் காலத்திலும், திருப்பாம்புரத்திலுள்ள பாம்புரேஸ்வரரை மூன்றாம் காலத்திலும், நாகூரிலுள்ள நாகேஸ்வரை நாங்காம் காலத்திலயும் வழிப்பட்டு ஆதிஷேசன் பேறுகள் பெற்றான். படிப்பறிவில்லாத வேடுவன் கண்ணப்ப நாயனாராய் மாறிய நாளும் இந்நாளே!
சிவராத்திரிக்கு மறுநாள் சிவப்புராணம் படித்தோ அல்லது கேட்டோ பகல் பொழுதை கழித்து மாலை வேலையில் பூஜை செய்து அன்றிரவு எதும் உண்ணாமல் உறங்கி விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு விரதத்தை அனுஷ்டித்தால் வாழ்வில் எல்லா நலத்தையும் அருள்வதுடன் முக்தியையும் இறைவன் அளிப்பதோடு அவர்களின் மூவேழு தலைமுறைகளின் பாவங்கள் கலையப்பட்டு முக்தி கிட்டும்.


சிவராத்திரி விரதமிருப்போம்
வாழ்வில் எல்லா நலனும் பெறுவோம்
 சகலமும்  சிவார்ப்பணம்.
ராஜி 

7 comments:

 1. ஒவ்வொரு விளக்கமும் அருமை சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 2. சிவராத்திரி பற்றி பல அரிய செய்திகள் அறிந்தேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

   Delete
 3. படங்களும் பகிர்வும் அருமை அக்கா....
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. பதிவிற்கான உழைப்பு
  பிரமிப்பூட்டுகிறது
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete