புதன், அக்டோபர் 27, 2010

தண்டனை

தவறு செய்தால்
தண்டித்துவிடு..,
அது மரணத் தண்டனையானாலும்
பரவாயில்லை.

ஆனால்,
விடுதலை மட்டும்
செய்துவிடாதே.

என் மகள்தூயாவின் கவிதை .

ஆறுபடை வீட்டானின்
ஆசியோடு ,
ந்துநிலத்திலும் ,
நான்கு திசையிலும்,
தேடி..,
மூன்று தமிழ் துணையோடு,
ஆண் பெண் இரண்டு பாலினரும்
முயன்று
அடைய வேண்டியது ஒன்று
அது "கல்வி"

செவ்வாய், அக்டோபர் 26, 2010

தவறவிட்ட மரணம் ,

கொஞ்ச காலம் முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமயம். சிகிச்சைக்காக செவிலியர் ஒருவர் வந்து மயக்க ஊசி போட்டார். சிறிது நேரத்தில் உடலெல்லாம் கனத்து என் எடை என்னாலே தாங்க முடியாததை போல ஒரு உணர்வு. வேண்டியவர்கள் யாரவது அருகில் இருக்கின்றனரா என கண்களை சுழற்றி பார்க்குறேன். பின்புதான் உரைத்தது..., சிகிச்சை அறையில் நான் மட்டுமே இருப்பது...,


கண்ணீர் சுரக்கின்றது. கண்ணீரால் தலையணை நனைகிறது. கண்ணீர் வழிந்து காதில் நுழைய அந்த நிலையிலும் கூச்சம் ஆட்கொள்கிறது. அதை துடைக்க கைகளை தூக்குகிறேன் . கரங்கள் மேலெழவில்லை.

இறைவா எத்தனை சொந்தம் எனக்குள்ளது இப்படி என்னை கண்ணீர் துடைக்க கூட ஆளில்லாமல் அனாதைப் போல் கிடத்திவிட்டாயே என்று மனதில் ஒரு கூப்பாடு. நா வரளுது, தண்ணீர் இல்லை. உயிர் பயம் ஆட்டி படைக்கிறது. கைப்பிடித்து ஆறுதல் சொல்ல ஆள் இல்லை. நான் கொண்ட நட்பு, காதல், நேசம், சண்டை அழுகை, வெற்றிக் களிப்பு, பெருமிதம், அவமானம், விருப்பு, வெறுப்பு, ஆசை எல்லலாமே வந்து கண்முன் என்னை எள்ளி நகையாடுகிறது. இப்போ என்ன உன்னால் செய்ய முடியும் என கொக்கரிக்கிறது..,

என்ன நரக வேதனை இது? நீ யார்? என்று மனது அருகிலிருந்தவனிடம் கேட்க, நான் இறைதூதன் என்கிறான். மரணம் நேரப் போகிறதா எனக்கா? ஐயோ, ..., மண்ணும், மாறுகின்ற விண்ணும், பூவும், புல்லும், மனித பசிக்களும், இன்னும் க்கு அலுக்கவில்லையே. என் வீடு, பிள்ளைகள், பெற்றோர், இணையை , உற்றாரை விட்டு என்னால் வர இயலாது என்று கூற, அதெல்லாம் முடியாது நீ வந்தேதான் தீர வேண்டும். இல்லை...., வாதங்கள் தொடர்கிறது கையை உதற பார்க்கிறேன் முடியவில்லை... அவனின் பிடி இறுகுகிறது மூச்சு விட கூட சிரமமாக உள்ளது. தலை கோத விரல் இல்லை..,

போச்சு அவ்வளவுதான். இனி பெற்றோரிடம் சண்டையிட முடியாது. பிள்ளைகளிடம் கொஞ்சி, மிஞ்ச முடியாது, எந்திரன், காவல்காரன் லாம் பார்க்கமுடியாது. பாட்டு கேட்க முடியாது. வண்டியில் வேகமாய் போய் வீட்டுல சொல்லிட்டு வந்துடியானு அக்கறையாய் கேட்கும் நபர்களை சந்திக்க முடியாது. என் டி.வி. கம்ப் யூட்டர் , வண்டி, வாட்ச், உடை, அலைபேசி, ..., இதெல்லாம் இனி எனதில்லையா?

அப்பொழுது...,

வானில் ஒரு ஒளிக்கீற்றும் .., திக்கவர்றவர்க்கு தெய்வமே துணை நானிருக்க நீ கலங்கலாமா என்ற கடவுளின் குரல் காதில் ஒலிப்பதுப் போலவும் ஒரு மாயை. அவ்வளவுதான், நாவில் இணிப்பு சுவை தெரிய , காதில் இனிய இசை கேட்க , உடல் எடை குறைய ஆரம்பிக்கிறது..., வென்பஞ்சாய் மாறி மனம் எங்கெங்கோ பறக்கிறது..., மெல்ல மெல்ல ஆசாபாசங்கள், வெற்றி தோல்வி, விருப்பு, வெறுப்பு, காதல், கடமை, நன்றி போன்றவற்றை உதறி...., இவை ஏதுமில்லாத பரமானந்த நிலையை அடைய பறக்கிறது மனது .

கடவுளே என்ன இது என்று கேட்க.., உன்னை மரணத்தை இதுதான் மரணம் என்கிறார். மரணம் இவ்வளவு ஆனந்தமானதா? இத்தனை நாள் எனக்கு தெரியாமல் போய்விட்டதே. உன்னோடு வருகின்றேன், நீ ஏன் இதை முன்பே எனக்கு அறிமுகப் படுத்தவில்லை என கடவுளிடம் கோபித்துக் கொண்டேன்.


எத்தனை மணித்துளிகள் இப்படி இருந்தேனோ எனக்கு தெரியாது..., மரணத்தின் ருசியை எவ்வளவு நேரம் ருசித்தேனோ அதுவும் தெரியாது....,
கண்விழிக்கையில் வலிகளே என்னை பூமி பந்தின் பிரதிநிதியாக வரவேற்றது.


உறவினர்கள்
எல்லாரும் சொன்னார்கள் " நீ செத்து பிழைச்சு" இருக்கேன்னு. இல்லை, "பிழைத்து செத்துக் கொண்டிருக்கிறேன்" என்று மரணத்தின் ருசியை அனுபவிக்காதவ்ர்களிடம் உரைக்காமலே மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.

மரணம் இவ்வளவு சுகமானதா? மரணமே அதுதான் உன் சுய உருவம் என்றால் காத்திருக்கிறேன். உனக்காக.

கையிடுக்கில் அற்புத மரணத்தை தவறவிட்ட,கதறும் காதல்

வாழ்க்கை சூரியன்
அஸ்தமிக்கையில்.....,
உன்னைவிட்டு
நீங்கி செல்கிறது
உன் நிழல்..??!!!
கதறுகிறது
என் காதல் .திங்கள், அக்டோபர் 25, 2010

பார்த்ததில் பாதித்தது

என் நண்பரிடமிருந்து குறுந்தகடு சிலவற்றை எடுத்து வந்திருந்தேன். எனது நண்பர் ஒரு மனநல பயிற்சி மருத்துவர். எங்களுக்கே தெரியாமல் அவரது பயிற்சி சம்பந்தமான குறுந்தகடு ஒன்று அதில் கலந்து வந்துவிட்டு இருந்தது. அதை நான் பார்வையிடும்போதுதான் தெரிந்துக் கொண்டேன்.

அதில் எனது நண்பரும், அவரது மருத்துவ குழுவும், ஒரு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

முதல் காட்சி : ஒரு கட்டிலில் சிறுமி ஒருத்தி நினைவின்றி படுத்திருக்கிறாள். அவள் உடையெங்கும் குறிப்பாக இடுப்பு பகுதிகளில் சொதசொதவென்று ரத்தம்.

இரண்டாம் காட்சி: மருத்துவக்குழு அவளுக்கு சிகிச்சை அளித்து சில நாட்களில் நினைவை திரும்ப கொண்டு வருகின்றனர்.

மூன்றாம் காட்சி: எதிரில் இருப்பவர்களை கண்டு கத்தி, பிராண்டி, சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறாள்.

நான்காம் காட்சி: பேசி, பேசி அவளை சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ள வைக்கிறார்கள். அதுமட்டுமின்றி சிநேகப் பாவத்துடன் மருத்துவருடன் பழக ஆரம்பிக்கிறாள்.

ஐந்தாம் காட்சி: அவள் ஏதோ சொல்ல.. எனது நண்பர் அவளை பாராட்டும் விதமாக அவள் தோள் மீதுதட்டி அணைப்பது போல் நடிக்க மீண்டும் கத்தி ஆர்பாட்டம் செய்கிறாள்.

ஆறாம் காட்சி : எனது நண்பர் அவளிடம் மன்னிப்பு கேட்கிறார். பின்பு அவள் நெடுநேரம் கழித்து சமாதானம் ஆகி.., சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறாள்.

ஏழாம் காட்சி: அவள் தனது கதையை சொல்ல ஆரம்பிக்கிறாள்.., தனது பெயர் புஸ்பா என்றும் தனக்கு பதினைந்து??!!! வயது என்றும், தான் தென்மாவட்டத்தை சார்ந்தவள் , பெற்றோர் கூலி வேலைக்கு மில்லிற்கு செல்பவர்கள் , இரண்டு தங்கை , ஒரு அக்கா, ஒரு அண்ணன் உண்டு என்றும் சொல்கிறாள்.

தான் ஆறாம் வகுப்பு படித்த போது வகுப்பில் முதல் மாணவி எனவும், அவளே வகுப்பு தலைவியும் அவளே என கூறுகிறாள். அதனால் , ஆசிரியருக்கு உதவியாக சாக் பீஸ், அட்டெண்டன்ஸ், பரீட்சை பேப்பர்கள் எடுத்து கொண்டு போய் தருதல் போன்ற வேலைகளை செய்வாள்.

ஒரு நாள் தான் வெளியூர் செல்வதாகவும், காலாண்டு பரீட்சை பேப்பர்களை வீட்டில் சென்று சேர்த்துவிடும்படி தன்னிடம் ஆசிரியர் கூறியதாகவும், தான் சென்ற போதில் வீட்டில் யாருமில்லை எனவும், ஆசிரியர் மகன் மட்டுமே இருந்ததாகவும், அவரிடம் பேப்பர்களை தந்துவிட்டு, அண்ணா குடிக்க தண்ணி தாங்க என்று கேட்டப் பொழுது உள்ளே வா தருகிறேன் என்று அழைத்து சென்றார். தண்ணீர் தந்து மிட்டாய் வேண்டுமா எனக் கேட்க, நானும் வேணும்னு சொல்ல..., அப்படின்னா உன் டிரெஸ்ஸை...., என்று தான் சூறையாடப்பட்டதாக சொன்னாள்.

அதுமட்டுமின்றி, இதை வெளியே சொன்னால் உன் குடும்பத்தாரை கொன்றுவிடுவேன், என்றும் நான் கூப்பிடும்போதெல்லாம் வரணும், வந்தால் உனக்கு மிட்டாய் வாங்க காசு தருவேன் என்றும் கூறியுள்ளான். பயம் மற்றும் மிட்டாயின் மீதான ஆசை தினமும் செல்ல தூண்டியது. சில நாட்களில் தான் மட்டுமின்றி தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளான்.

இதனால், படிப்பில் கவனம் சிதறி அரையாண்டில் பெயிலும் ஆகி விட, ஆசிரியர், தனியாக அழைத்து, ஏன் பெயிலாகிட்ட எனக் கண்டித்ததுடன் .., உனக்கு என்ன பிரச்சனை? எதுவாக இருந்தாலும் என்கிட்டே சொல்லு நான் தீர்த்து வைக்குறேன் னு சொல்லி இருக்கார், இவளும் ஏதோ ஒரு தைரியத்தில் ஆசிரியரிடம் சொல்லிவிட, சரி மாலை வா, அவனை கண்டிக்குறேன் னு சொன்னார். மாலை இருவரும் வீட்டிற்கு சென்று மகனிடம் விசாரித்துள்ளார். அவனும் ஆமாமென ஒத்துக் கொண்டுள்ளான்.

சிறிது நேரம் யோசித்தவர், வா புஸ்பா ரூமுக்கு...., என கூறி அவரும் அவளை சூறையாடியுள்ளார். தன் மகனுக்கு தானும் சளைத்தரில்லை என நிரூபிக்க தன் பங்குக்கு தன் நண்பருக்கு விருந்தாக்கியுள்ளார். கூடவே பெயிலாக்கி, குடும்பத்தையே கொளுத்திடுவோம் னு மிரட்டி மிரட்டி காரியத்தை சாதித்துள்ளனர்.

இப்படியே நாட்கள் செல்ல, இவளும் பெரிய மனுசியாகி உள்ளாள் . அப்பவும் அவளை விடாமல் அனுபவித்துள்ளனர் அந்த மிருகங்கள். மாதவிடாய் மறுசுழற்சிக்கு வருமுன்னரே கர்ப்பம் தரித்துள்ளாள் . மாதவிடாய் வராததை அறிந்த அவளது தாயார் அக்கம் பக்கத்தில் விசாரிக்க, ஆரம்ப காலகட்டத்தில் இப்படி ஒழுங்கற்று வருவது இயல்பு என யாரோ கூற அவள் தாயாரும் அமைதியாக இருந்துவிட்டார். இவள் தாயானது தெரியாமலே கரு சுமக்க ஆரம்பித்தாள்...,

வயிறு மேடிட ஆரம்பித்த பின், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால். மாதம் ஐந்து கழிந்த நிலையில் தாங்கள் ஏதும் செய்ய இயலாது என கைவிரித்துவிட, உச்சக்கட்ட ரிஸ்க் எடுத்து உள்ளூர் மருத்துவச்சியிடம் கருவைக் கலைத்துள்ளனர். இது அரசால் புரசலாக ஊருக்குள் கசிந்துவிட பஞ்சாயத்து கூட்டப்பட்டது

புஸ்பா ஊருக்குள் இருந்தால் தீட்டு எனவும் , அவளை ஊரை விட்டு விலக்கி வைப்பதாகவும் அவள் குடும்பத்தார் உட்பட யாரவது அவளிடம் பேசினால்கூட அவர்களும் ஊரைவிட்டு விலக்கப்படுவார் என தீர்ப்புக் கூறி, ஆசிரியரையும், அவரது மகனையும் கண்டிப்பதாகவும் (அவர்கள் உயர்ந்த ஜாதி மற்றும் எம்.எல்..க்கு உறவு என்பதால் ) கடுமையான தீர்ப்பு பஞ்சாயத்து கூறியது.

புஸ்பாவின் குடும்பத்தாரோ மகளில்லாத ஊரில் தாங்களும் இருக்க வேண்டாம் எங்காவது சென்று விடலாம் எனவும் முடிவெடுக்கின்றனர். தனது அக்காளுக்கு திருமணம் நிச்சயமான நிலையில் தனது குடும்பம் கஷ்டப்படக் கூடாது என முடிவெடுத்து இரவோடு இரவாக ஊரை விட்டு வெளியேறுகிறாள் புஸ்பா.

நடுநிசியில் தனியாக நடந்து வருபவளைக் கண்டு கார் ஒன்று அருகில் வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்கிய ஆண் மற்றும் பெண் இருவரும் என்னவென்று கேட்க இவள் தான் அனாதைஎன்று கூறுகிறாள். அவர்கள் சரி எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வா எனக் கூறி தங்களுடன் அழைத்து செல்கின்றனர். மறுநாள். இரவெல்லாம் கண்விழித்து நடந்த அசதியில் நெடுநேரம் உறங்கி மெதுவாக கனவிழித்த சமயம், அந்த ஆண் யாரோ ஒருவரிடம் போனில் பொண்ணு ஒண்ணு இருக்கு வரிங்களா? என பேசுவதைக் கேட்டு, ஏதோ புரிந்து அங்கிருந்தும் தப்பிக்கிறாள்.

எப்படியோ, திண்டிவனத்தை அடைந்துள்ளாள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமலும், பசி மயக்கத்திலும் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த நேரத்தில், சுமார் எழுவது வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருத்தி அருகோல் வந்து ஆறுதலாக என்னவென்று விசாரித்தும் பசிக்குதா எனக் கேட்டும் தன்னிடமிருந்து இட்டிலி இரண்டை தந்துள்ளாள். அவள் வயதை நம்பி அதை சாப்பிட்ட உடன் மயங்கி விட்டாளாம். அன்றைய தேதி சென்ற வருடம் அக்டோபர் 23 ந் தேதி. அன்றிலிருந்து தான் அனுபவித்ததெல்லாம் நரக வேதனை மட்டுமே என விவரிக்கிறாள்.

மாலை ஆறு மணியளவில் சாராயம் தரப்படும் அதை குடிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், பெயர் தெரியாத போதை வஸ்துக்கள் தர அதையும் சாப்பிட வேண்டும். பின் ஆட்டோ அல்லது காரில் ஏற்றி திண்டிவனத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில், தாபா (அது நேசனல் ஹிவேஸ் என்பதால் சரக்கு லாரிகள் அதிகம் நிற்கும், பாண்டிசேரி??!! சென்றுவரும் கார்கள் அதுமிட்டுமில்லாமல் அங்கு கல்லூரி மற்றும் தொழிற்சாலை அருகிலும்..., வீடுகில் அருகில் இல்லாமலும் இருக்கவே அந்த இடத்தை தேர்ந்து எடுத்தனர் .) அருகே புதர் ஒன்றில் இருக்க வேண்டும். அந்த பாட்டி, அவளுடன் இருக்கும் சேகர் என்பவன், மற்றும் தாபாவின் உரிமையாளர் ஆகிய மூவரும் கடைக்கு வருபவர்களில் ஆட்களை தேர்ந்து எடுத்து பேசி அனுப்பும் வேலை செய்வர்

அந்த புதரில் ஒரு நாளைக்கு சுமா முப்பதிலிருந்து நாற்பது ஆட்கள் வரை எதிர்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி பகலிலும் வீட்டில் சேவையை தொடர வேண்டுமாம். அந்த மூன்று நாட்களுக்கு கூட விடுமுறை இல்லை. சதா சர்வ நேரமும் போதை, உடல்ரீதியான இம்சை, சரியான சாப்பாடும், தூக்கமும் இல்லை. அதனால் தனது உடல் ஆரோக்கியத்தை இழந்து, சுய நினைவை இழந்து விட்டதாவும் கண் விழித்து பார்க்கும்போது தான் மருத்துவமனையில் இருந்ததாகவும் தெரிவித்ததாள்.

இதை கண்டப் பிறகு கண்ணில் கண்ணீர் மல்கியதை என்னால் கட்டுப் படுத்த இயலவில்லை. அந்த சிறுமிக்கு என்ன ஆயிற்று என்பதை அறியாமல் ஒரு கவளம் உணவும், உறக்கமும் அண்ட மறுத்தது. அதற்கு பின் நடந்தவற்றை நான் என் நண்பரிடம் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு கேட்டு தெரிந்துக் கொண்டேன் .

பக்கத்து வீட்டில் ஏதோ மர்மமான நிழ்வு ஒன்று நடக்கிறது என்று உணர்ந்த ஜீவா என்பவர் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இந்த கொடுமைலாம் சகித்துக் கொண்டு அவர்கள் வாடிக்கையை நோட்டமிட்டு போலிஸ் மற்றும் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவளை மீட்டெடுத்தாராம். இவளை மீட்டெடுத்தப் பின் அந்த புதரை பகலில் பார்வையிட்டவர்கள் இதயமே ஒரு நிமிடம் துடிக்க மறந்ததாம்.

அந்த புதரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆணுறைகள் உபயோகப்படுத்தி வீசி எரிந்தவைகள் இருந்ததாம் . . சிலவற்றில் ரத்தக் கரைகள் காய்ந்திருந்ததாம்.இவள் காப்பார்றப்பட்டபோது நினைவின்றி இருந்தாளாம். மேலும் பிறப்புறுப்பில் துர்நாற்றத்துடன் நிற்காத ரத்தப் போக்கும், யாராவது தாங்கிப் பிடித்தாலும் எழுந்து நிற்கவே இயலாத நிலையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

இப்போது தீவிர மூன்று மாதம் தீவிர சிகிச்சிக்கு பின் எழுந்து கொம்பூன்றி தானே நடப்பதாகவும், திட உணவு ஏற்றுக் கொள்ளாமல், திரவ உணவை மட்டுமே உண்பதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவளது குடும்பத்தார் வந்து அழைத்தும் மீண்டும் தன் கிராமத்திற்கு வர விருப்பமில்லை எனக் கூறிவிடவே, மருத்துவமனை நிர்வாகமே போலீஸ் துணையுடன் சென்னையில் ஒரு கருணை இல்லத்தில் சேர்த்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவளுடன் பேச வேண்டும் என நண்பரிடம் கேட்டேன். அவள் சிகிச்சைக்கு வரும்போது தொலைப்பேசியில் பேச வைத்தார். நீண்ட நேர யோசனைக்குப் பின் என்னிடம் பேச சம்மதித்தாள். அவளுக்கு நேர்ந்த அனுபவத்தால் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் பேசினாள். நீண்ட நேரம் பேசிய பின் அவள் ஒரு கேள்வியும், ஒரு கோரிக்கையும் வைத்தாள். கேள்விக்கு விடை தெரியவில்லை. கோரிக்கை நிறைவேற ஆனடவனை பிரார்த்திக்கிறேன் என்றும் கூறினேன்.

கேள்வி: மனித இச்சையை தீர்த்துக் கொள்ள ஆயிரம் வழிகள் இருக்க,சிறுமியும் மயங்கிய நிலையில் இருந்த என்னிடம் என்ன சுகம் கண்டனர்?

கோரிக்கை: இனி ஒரு முறை என்னை போல் ஒரு சிறுமியை புதரில் நினைவின்றி சந்திக்கும் போது, கல்லூரியில் படிப்பவரே உங்கள் வீட்டிலும் என்னை போல் ஒரு தமக்கை இருக்கலாம், ஒட்டுனர்களோ இல்லை வேறெங்கும் வேலை செய்பவர்களோ உங்கள் வீட்டில் என்னை போல் ஒரு மகளோ இல்லை உங்கள் உறவினரது பெண்ணோ இருக்கலாம். அவர்களின் முகத்தை நினைவு படுத்திவிட்டு , உங்கள் மனசாட்சி அனுமதித்தால் நீங்கள் அவளை அணுகலாம் என்றும் கூறினாள்.

கடைசியாக உன் எதிர்கால லட்சியம் என்னனு கேட்டேன். படிச்சு கலக்டர் வேலைக்கு போகனும்க்கா . பெற்றோரை உக்கார வச்சு சோறு போடணும். குழந்தை தொழிலாளர் இருப்பதையே தவறுன்னு சொல்ற கால கட்டத்துல இருக்கோம். என்னைப் போல சிறு வயது பாலியல் தொழிலாளர்கள் இருந்தால் அவர்களை காப்பாற்றவும், புதிதாக உருவாகாமல் பார்த்துப்பேன் னு சொன்னாள். திருமணம் செஞ்சுக்குவியா ன்னு கேட்டேன் இல்லக்கா செஞ்சுக்க மாட்டேன். ஆம்பிளைன்கலாம் கெட்டவங்கன்னும் சொன்னாள். நான் இல்லம்மா ஆம்பிளைங்கள கூட நல்லவங்க இருக்காங்க னு சொல்ல, அவள் நம்ப மறுத்தாள் . சரி என்று கூறினேன். காலம் அவள் எண்ணத்தை மாற்ரமலா போய்விடும்? என் கூற்றை மெய்ப்பிக்கும் வைகையில் யாராவது ஒருவன் அவளை காணாமலா போய்விடுவான் .என்று விட்டு விட்டேன்.

இப்பொழுதெல்லாம் இறைவைனை வேண்டும்போது, எனக்கானவர்களுக்கு மட்டுமின்றி அச்சிறுமிக்கும் சில நிமிடங்கள் கூடுதலாக இறைவனை வேண்டுகிறேன். இறைவா இனி அச்சிறுமி தன் வாழ்வில் நல்லோரை மட்டுமே காண வேண்டும். கல்வி செல்வத்தை நிறைய கொடு. பொருள் செல்வத்தை அவளே தேடிக் கொல்லும் மனதிடத்தை கொடு. உடல் ஆரோக்கியத்தை திரும்ப கொடு. அதுமட்டுமில்லாமல் வருங்காலத்தில் அவளுடைய கடந்த காலத்தை பெரிதாக எண்ணாமல், புரிந்துக் கொண்டு சுகங்களை மட்டுமே கொடுக்கும் கணவனையும் கண்டிப்பாக கொடு என்று தினமும் வேண்டிக் கொள்கிறேன்.

குறிப்பு: பதிவின் நீளத்திற்கும், ஒருவேளை ஆபாசமாகவும், கொச்சையான
வார்த்தைகள் என்னையறியாமல் வந்திருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். அவளுக்காக ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

நன்றியுடன்...,