Wednesday, June 13, 2018

ஒரே நேரத்தில் 12 சிவ தம்பதிகளை தரிசிக்கனுமா?! - திருநாங்கூர் ரிஷப சேவை


சிவனையும், சக்தியையும் தனித்தனியாய் தரிசிப்பது சுலபம். அம்மையப்பனை அதுவும் நந்திதேவர்மேல் வலம் வருவதை தரிசிப்பது அபூர்வம். அப்படி ரிஷப வாகனத்தில் வரும் அம்மையப்பனை தரிசித்தால் ஈரேழு ஜென்மத்து பாவம் நீங்கும். ஒரு ரிஷப வாகன சேவையை தரிசித்தாலே இத்தனை பலனென்றால், ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பனிரெண்டு  சிவ தம்பதியரின் ரிஷப சேவையினை கண்டு களித்தால்?! மறுபிறப்பில்லா முக்தி கிடைக்கும். சரி, ஒரே நேரத்தில் 12 ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் எழுந்தருளும் இடம் எதுன்னு தெரிஞ்சுக்க பதிவுக்குள் போகலாம். வாங்க! 


முன்னொரு  பிரளய காலத்தில் பிரம்மதேவர், சிவபெருமானை நோக்கி மதங்கம் எனும் யானை வடிவில் இருந்து தியானித்தார். அப்போது பிரம்மனின் மனதில் இருந்து அவரது புத்திரனாய் மதங்க முனிவர் தோன்றினார். மதங்க முனிவர் தவம் செய்ய வேண்டி தகுந்த இடம் தேடினார். அது பிரளய காலமென்பதால் பாரெங்கும் வெள்ளக்காடு. தவமியற்ற இடம் கிடைக்கவில்லை. அப்போது நாரத முனிவர், மதங்க முனிவரின் முன்தோன்றி, ‘மதங்கா! பூவுலகில் அனைத்து உயிர்களும் ஒடுக்கம் அடையும் திருவெண்காடு, பிரளயத்திலும் அழியாமல் இருக்கு. அங்கு சென்று தவமியற்று' எனக்கூறி மறைந்தார். 
ஊழிக்காலத்திலும் அழியாத அத்தலத்தைக் கண்ட மதங்க முனிவர் அங்கேயே தவமியற்றினார். அப்போது மகாவிஷ்ணு மோகினி வடிவில் தோன்றி, மதங்க முனிவருக்கு ஆசி வழங்க, விநாயகப்பெருமான் மதங்க முனிவருக்கு அஷ்டமா சித்திகளையும் அருளினார். இந்த மோகினி வடிவ பெருமாள் ‘நாராயணி’ எனும் திருநாமத்திலும், விநாயகர் ‘மதங்க விநாயகர்’ எனும் பெயரிலும் திருநாங்கூர் மதங்கீஸ்வரர் திருத்தலத்தில் எழுந்தருளி அருள்கின்றனர். உடனே பார்வதி தேவி ‘மதங்க முனிவரே! எம் வடிவம் கொண்ட மந்திரிணியான சியாமளா தேவி உமக்கு மகளாக வந்து பிறப்பாள்' என அருளி மறைந்தாள். அதன்படி, ஆடிமாதம் வெள்ளிக்கிழமை அதிகாலை மதங்க தீர்த்தம் எனும் பொய்கையில் நீலோத்பல மலர் மேல் சியாமளாதேவி குழந்தையாக வந்துதித்தாள். அப்போது பொய்கைக்கு நீராடவந்த மதங்கர் - சித்திமதி தம்பதியினர், அக்குழந்தையை எடுத்து தங்கள் மகளாக வளர்த்து வந்தனர்.  பின்னாளில் சிவபெருமானுக்கு மணம் முடித்து வைத்தனர். 
 மண்களிக்கும் பச்சைவண்ணமும் ஆகி, மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே... என அபிராமி பட்டரால் பாடப்பட்ட மாதங்கிதேவி சித்திமதி- மதங்க முனிவரின் கோடிக்கணக்கான மகள்களில் மூத்தவளும் பேரழகியுமானவள்.   இந்த மாதங்கிதேவியே சியாமளை, மந்திரிணி, ராஜசியாமளா, ராஜமாதங்கி எனவும் அழைக்கப்படுகிறாள். லலிதை ஆதிபராசக்தியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றி, தம் அடியவர்களுக்கு கல்வி, நுண்ணறிவு, சொல்லாற்றல், இசையறிவு, வசீகரிக்கும் சக்தி, திரண்ட செல்வம் என அள்ளித்தருபவள் இந்த ராஜமாதங்கி. இந்த ராஜமாதங்கி அருளும் இடம் சீர்காழி மற்றும் திருவெண்காடு அருகிலுள்ள திருநாங்கூர் திருத்தலம் ஆகும்.

மாதங்கிதேவி வளர்ந்து தக்க பருவம் வந்ததும் சிவப்பெருமானுக்கு மணமுடித்து வைத்தார் மதங்க முனிவர். பின்னர் ரிஷபத்தில் சக்தி மாதங்கியுடன் சிவபெருமான் எழுந்தருளி, திருக்கல்யாண சேவை நல்கி அருளினார். அந்த ரிஷப சேவை திருக்காட்சியின் தொடர்ச்சியாய் இன்றுவரை திருநாங்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் திருக்கோவிலில் ‘ரிஷப சேவை திருக்காட்சி' நடைபெற்று வருகிறது.

மதங்க முனிவர்  அம்பிகை ராஜசியாமளாவை வளர்த்து வந்ததால், அம்பிகை ‘ராஜமாதங்கி’ என்றும், மாதங்கியை சிவபெருமான் மணந்ததால், இறைவன் ‘மதங்கீஸ்வரர்’ என்றும், ஆட்கொண்ட மதங்கரின் ஆசிரமம் அமைந்திருந்த இடம் ‘மதங்காஸ்ரமம்’ என்று அழைக்கப்பட்டது.  மதங்காஸ்ரமம்  அமைந்த இடமே திருநாங்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் திருக்கோவில் என்றும் வழங்கப்பட்டு வருகிறது. இத்தல மாதங்கியை தேன் நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தால், படிப்பில் குழந்தைகளின் மந்தநிலை நீங்கும். மேலும் கல்வி, ஞானம், இசையறிவு கூடிவர இத்தல ராஜமாதங்கி வழிபாடு பெரிதும் துணை செய்யும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல சிவபெருமான் பதினோரு திருஅவதாரங்களுடனும், மகாவிஷ்ணு பதினோரு திருஅவதாரங்களுடனும் ஒரே திருத்தலத்தில் தோன்றி அருளும் திருத்தலம் திருநாங்கூர்.
தமது சொல்லையும் மீறி  தட்சனின் யாகத்திற்குச் சென்றுவந்த தாட்சாயணியின் மீது கொண்ட சினத்தினால், சிவபெருமான் இங்கு உள்ள உபய காவிரி என்னும் இடத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது அவரது விரிந்த சடாமுடி பதினொரு இடங்களில் பூமியில் உதிர்ந்தது. அந்தப் பதினொரு இடங்களிலும் இன்னொரு சிவபெருமான் உருவம் தோன்றி ருத்திரதாண்டவம் நிகழ்த்தத் தொடங்கியது. இதனால் இவ்வுலகிற்குப் பேரழிவு ஏற்படும் என்று அஞ்சிய தேவர்கள், மகா விஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர் ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த 11 சிவபெருமான்களையும், 11 மகாவிஷ்ணுவாய் தோன்றி கட்டித் தழுவினார். இதனால் சினம் தணிந்து சாந்தநிலைக்குத் திரும்பிய சிவபெருமான், தமது சடாமுடி உதிர்ந்த பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டருளினார். அதுபோலவே மகாவிஷ்ணுவும் பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டார்.
காவிஷ்ணுவின் பதினொரு திருக்கோலங்கள் கோவில் கொண்ட பதினொரு திருத்தலங்கள் திருநாங்கூரில் திவ்யதேசங்களாக அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் இரவில் திருநாங்கூரில் திருமணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னிதியில் ‘11கருடசேவை' திருவிழா சிறப்பாக நடக்கும். அதுப்போல இந்த சிவாலயங்களின் சார்பாக ‘பன்னிரு ரிஷபாரூட சேவை' திருவிழா சித்ரா பவுர்ணமி நாளில் அக்காலத்தில் இங்கு நடந்தது.
அந்த காலத்தில்  சித்ரா பவுர்ணமியில் நடைபெற்றுவந்த ரிஷபாரூட சேவை  தவிர்க்க முடியாத காரணத்தால் தடைபட்டு போனது. பல வருட தடைகளுக்குப்பின், தற்போது வைகாசி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈசனின் ஒரு ரிஷபாரூட திருக்காட்சி கண்டாலே பெரும் பாக்கியம். ஆனால் இங்கு ஒரே தலத்தில் பன்னிரு திருக்கோவில்களில் உள்ள ஈசன்களும் அம்மை உமையவளுடன் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி அருள்கிறார். இதனைக் காண்பது வெகு புண்ணியம். ஈரேழு ஜென்மத்து பாவங்கள் விலகுமென்பது ஐதீகம்.
இந்த பனிரெண்டு ரிஷபாரூட சேவை  திருநாஞ்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் ஆலயத்தில் இன்று (13/6/2018) நடைபெற உள்ளது. இன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் பன்னிரு திருக்கோவில் சிவபெருமானின் உற்சவ திருமேனிகளுக்கும், ஒரேநேரத்தில் திருக்கல்யாணம் செய்யப்படும். பின்னர் சிவசக்தி தம்பதிகள் ரிஷபாரூடத்தில்  மக்களுக்கு திருக்காட்சி தரும் வைபவம் நடைபெறும். பின்பு அன்று இரவு 9.30 மணிக்கு மேல் பன்னிரு ரிஷபாரூட மூர்த்திகளும், திருமுறை பாராயணங்கள் ஒலிக்க, மங்கல வாத்தியங்கள் முழங்க, திருவீதியுலா வருவார்கள். இந்த பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி காண்பதன் மூலம் நம் பாவ வினைகள் அகன்று ஒளிமயமான நல் வாழ்க்கை அமையும். இந்த திருநாங்கூர் ஆலயம் சீர்காழியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

நன்றியுடன்,
ராஜி

Monday, June 11, 2018

மனுசனுக்கு மட்டுமல்ல யானைக்கும் மதம் பிடிச்சா ஆபத்துதான் - ஐஞ்சுவை அவியல்

மாமா! சமயபுரம் மாரியம்மன் கோவில் யானைக்கு மதம் பிடிச்சுட்டுதே உங்களுக்கு தெரியுமா?!

தெரியும் புள்ள. வாட்ஸ் அப்ல பார்த்தேன். 

ம்ம்ம் நாள் முழுக்க பாகனோடவே சுத்திக்கிட்டிருந்துட்டு, அவன் கையாலயே சாப்பிட்டு அவனையே தூக்கி போட்டு மிதிக்குதே! கொஞ்சம்கூட பாசமே இல்ல அந்த யானைக்கு...

யானைக்கு பாசம்லாம் இல்லாம இல்ல. பாகன்மேல் அதிகமான  பாசமும் நம்பிக்கையும் இருக்குறதாலதான் இப்படி ஆகுது.

பாசத்தாலதான் இப்படி ஆகுதா?! உளறாத மாமா.

உளரல புள்ள, உனக்கொரு மகிழ்ச்சியான விசயம்ன்னா யார்க்கிட்ட முதல்ல சொல்லுவே?!

உன்கிட்டதான் முதல்ல சொல்வேன்.

சரி, கஷ்டமான விசயம்ன்னா?!

இதென்ன கேள்வி?! உன்கிட்டதான் மாமா ஷேர் பண்ணிக்குவேன்.

அதேதான். உனக்கு என்மேல பாசம் அதிகம். அதனால என்கிட்ட ஓடிவந்து முதல்ல சொல்றேன். நாள் முச்சூடும் பாகனோடவே இருக்கும் யானை, தனக்கு எதாவது ஒன்னுன்னா பாகனுக்குதான் முதல்ல உணர்த்தும். தனக்கு மதம் பிடிச்சிருக்குறதை  பாகன்கிட்டதான் முதல்ல உணர்த்தும். பாகன் அனுபவசாலின்னா அதை புரிஞ்சு தக்க நடவடிக்கை எடுப்பாங்க. போதிய அனுபவம் பாகனுக்கு இல்லன்னா இந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடக்கும். 
யானை பாகனுக்கு யானையால்தான் சாவுன்னு நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு.  யானை பாகன்மேல் கொண்ட பாசம் இந்த மாதிரி அசம்பாவிதம் நடக்க ஒரு காரணம். இன்னொரு காரணம் யானையின் பழி உணர்ச்சி. ஏன்னா யானையை பழக்க பாகன்கள் செய்யும் வேலைகள் அப்படி. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல ஞாபகம் வெச்சுகிட்டே இருக்கும்.  வாய்ப்பு கிடைச்சதுன்னா அந்த கோபம் வெளிப்பட்டு, யானை ருத்ர தாண்டவம் ஆடிரும்.

யானைய பழக்கும்போது  அந்த யானையை சுத்தி, நாலு அல்லது ஐந்து கும்கிய யானைய நிறுத்தி,  ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு, ஆளுக்கு ஒரு குச்சிய கீழே போடுவாங்க.  அது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்பத் திரும்ப கும்கி யானை  செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சிய எடுத்துடாது. ஆனா அது எடுக்கற வரைக்கும் கும்கி யானைகள் விடாது. புது யானைய தந்தங்களால் முட்டும். பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம் விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலா தயார் செஞ்ச, காட்டு மூங்கில் பிரம்புகளை  அங்குசமா தயார்படுத்துவாங்க. அது வளைச்சா ரப்பர் மாதிரி வளைஞ்சு ரெண்டு முனையும் சேரும். ஒரே ஒரு அடி அதுல வாங்குனா மனுசன் செத்துருவான். அந்த அங்குசத்தால அந்த யானைய வெளுப்பாங்க.  அடிவாங்கிக்கிட்டு யானை பிளிறும், ரெண்டு கால்ல எழுந்து நிற்கும். ஆனா குச்சிய எடுக்காது. குச்சிய எடுக்கும்வரை இந்த இம்ச தொடரும். குச்சியை எடுத்து ஏழெட்டு பாகன்களில் யாருகிட்ட அந்த குச்சியை கொடுக்குதோ அவந்தான் அன்னில இருந்து அந்த யானைக்கு தலைமை பாகன். அவனைதான் அந்த யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். அவனுக்குதான் அது பணியும். 
யானைப்பாகனை தேர்ந்தெடுத்தாச்சு. இனி யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும். யானைய  பழக்கறதுக்காக,  தும்பிக்கைய தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைச்சு... மூணு நாளைக்கு சாப்பாடு குடுக்க மாட்டாங்க. நாலாவது நாள் தன் பாகன் அந்த கரோல்ல போகும்போது சாப்பாட்டுக்கு யானை   கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் குடுத்து ருசிகாட்டி, பசியைத் தூண்டி சொல் பேச்சு கேட்டா.. கரும்பு வெல்லம் கிடைக்கும்னு அதுக்கு உணர வெச்சு, வழிக்கு கொண்டு வருவான். அப்படி வழிக்கு வர்றதுக்குள்ள எத்தனை அடிகள், சித்ரவதைகள் அப்பப்பா............ அந்தப் பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி பண்ணிருவான். என்ன பயமும், பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுடாது.அத்தனை எளிதா யாரையும் தன் முதுகில் ஏற விடாது. யானைய சாம, பேத தாண்டன்னு அத்தனை வழிமுறைகளையும் கையாண்டு, கடைசியா... என்னைக்கு அந்த யானை, பாகனை முழுசும் எந்த எதிர்ப்பும் இல்லாம, தன் முன்னங்கால்களை மடக்கிக் குடுத்து, அதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்குதோ... அன்னைக்கு பூஜை போட்டு, கும்கிகளின் துணையோட கரோல திறப்பாங்க. பாகன் யானை மேல உட்கார்ந்துதான் கரோலை விட்டு வெளிய வரணும். அப்பதான் அது முழுசும் பழக்கப்பட்டதுக்கான அடையாளம்.  தெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும். கோவை மாவட்டத்துல 13 பேரைக் கொன்று, கேரள அரசால் shooting ஆர்டர் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய ரௌடி 'மக்னா' யானை, இன்னைக்கு முதுமலை கேம்ப்ல மூர்த்திங்குற பேர்ல அவ்ளோ சாதுவா இருக்கு. அந்தளவுக்கு சித்ரவதை ட்ரெய்னிங்.

 நவம்பர் டூ ஜனவரி மாதங்கள் யானைகளின் இணைச் சேர்க்கை காலம்.  அந்த நேரத்தில்  நெத்தியில் இருந்து ஒரு  நீர் வடியும். அதுக்கு மஸ்துன்னு பேரு. அதைதான் நாம மதம்ன்னு சொல்றோம். பாகன்மேல் பாசம் இருக்கும் யானைகள், மஸ்து ஆரம்ப நிலையிலேயே பாகனை எச்சரிக்கை செய்யும். சாதாரணமா ஒற்றை கால் சங்கிலிதான் போடுவாங்க. ஆனா மஸ்து அறிகுறி ஆரம்பமாகும் போது ரெட்டை காலுக்கும் சேர்த்து சங்கிலி போட்ருவாங்க. சாதாரணமா அங்குசத்த பார்த்தா கட்டுப்படும் யானை, மஸ்து நேரத்துல கட்டுப்படாது. அதன் பிறகு யாரும், கிட்ட நெருங்க முடியாது. மூணு மாசமும் அதற்கு ஒரே இடத்தில்தான் வாசம். அந்த மஸ்து நீரோட வாசம், ரொம்ப தூரம் வீசும்.  அந்த வாசம் வந்தா எந்த காட்டு யானையும் அந்த ஏரியாலயே நிக்காது. மஸ்து நிலையில் இருக்கும் யானை வினோதமா நடந்துக்கும். தும்பிக்கையை தூக்கி தந்தத்து மேல போட்டுக்கும். பயங்கர ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கும். உர்ர்ர்றுறுன்னு உருமிகிட்டே இருக்கும். எப்பவும் யானை உருமல்ல இருக்கும் போது பக்கத்துல போகக் கூடாது. கோபத்தின் அறிகுறி. பார்வை வெறிச்சு இருக்கும். மண், செடி, கொடிகளை தலைமீது போட்டுக் கொள்ளும். ரொம்ப பசி எடுக்குற வரை சாப்பிடாது. மஸ்து நீரை தும்பிக்கையால தொட்டு, தொட்டு ருசி பார்க்கும். அந்த சுவை யானையை மேலும் மேலும் வெறி ஏற்றும்.அதனால மஸ்து நேரத்துல நூறு பேர் எதிர்ல நின்னாலும், அபார ஞாபக சக்தி கொண்ட யானை, தன்னோட பாகன் மேலான பகைய தீர்த்துக்கவும், அவன்மேலான பாசத்திலயும் தன்னிலை மறந்து, வெறி கொண்டு முதல்ல அவனைத்தான் தேடும். பாகன் யானை கையில் சிக்கினால் அவ்வளவ்தான்.  அக்கு வேறா.,  ஆணி வேறா பிரிச்சு போட்ரும்.


யானைகளில் ஆறு வகை இருக்கு. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானை களை வளர்க்கவே முடியாது. நம்பகத்தன்மை இல்லாதது. எப்பவும் ரெஸ்ட்லெஸ்ஸா கொல வெறியோடவே இருக்கும். எந்த நேரம் ஆளை தூக்கும்னு கணிக்கவே முடியாது. கும்கி படத்துல வர்ற கொம்பன் யானை வகைதான் அது. அதே போல உடம்பில் முதுகெலும்பு தூக்கிக் கொண்டு, ஆள் உட்கார முடியாத உடலமைப்பு கொண்ட யானைகளையும், இடுங்கிய கண்களைக் கொண்ட யானைகளையும், நெற்றி துருத்திய யானைகளையும் வளர்க்கவே முடியாது. பயங்கர சிடு மூஞ்சி. இது அவ்வளவு ஆபத்தில்லைன்னாலும் கூட, கையாள்வது சிரமம். வேண்டா வெறுப்பா கட்டளைக்கு அடி பணியும். இதன் மீது துர்நாற்றம் வீசும்.

ஒழுங்கில்லாத தந்தங்கள் இல்லன்ன்னா ஒரு தந்தம் இருக்கும் யானையை வளர்க்கவே கூடாது. வனத்துறை, வீட்டில் வளர்க்க அனுமதி கொடுக்காத ஒரே வகை இதுதான். காட்டு யானைகளில், இந்த ஜாதி யானைகள்தான் ஆட்கொல்லிகள். மத்ததுலாம்  வெறும் மிரட்டலோடு விலகிடும். இது மறைந்திருந்து தாக்கும் அறிவும், குணமும் இதுக்குண்டு. மனுசங்களை பார்த்துட்டா, பாயிலாகிடும். பயங்கர ராட்ஷசன். இதோட உடம்பிலிருந்து  அழுகிய மாமிச வாசம் வீசும். மலைவாழ் மக்கள், இந்த யானையின் மீது வீசும் குமட்டல் வாடையை வைத்தே இதோட நடமாட்டத்தை கண்டுபிடுச்சுடுவாங்க.  

நிமிர்ந்த தலை சம அளவுகளில் அகலமாக முன் நோக்கி V வடிவில் பால் போன்ற நிறமுடைய தந்தங்கள், தேன் நிறத்தில் மின்னும் கண்கள், எப்பவும் முகத்தில் ஒரு சாந்தம், அருமையான கீழ்படிதல், வசீகரிக்கும் அழகு கொண்ட உடலமைப்பு, அடர்ந்த முடி கொண்ட வால், அழகான நகங்கள், மடங்காத காதுகள், ஆள் அமரும்படி படுக்கை போன்ற முதுகமைப்பு, நடக்கும் போது அடி மாற்றி வைக்காமல் சரியான அளவுகளில் காலை முழுவதும் தரையில் ஊன்றி நடத்தல், தன் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரித்தல், அன்புக்காக ஏங்கும், மனிதர்களுடன் முக்கியமாக குழந்தைகளுடன் நன்கு பழகி, சொல் பேச்சு கேக்குறதுலாம் பட்டத்து யானையோட சாமுத்திரிகா லட்சணம். இது போன்ற குணங்கள், பத்தாயிரத்துல ஒரு யானைக்குத்தான் அமையும். இதன் உடம்பில் தாமரைப் பூவின் நறுமணம் வீசும். முழுவதும் இந்த மொத்த குணங்களும் அமையக் கிடைக்கலைன்னாலும், இதில் மூன்றில ஒரு பங்கு குணங்கள் அமையப்பெற்ற யானைகளை தாராளமாக வளர்க்கலாம். மனிதர்களை தாக்காது.

போதும், போதும், ரெண்டு மார்க் கேள்விக்கு பத்து மார்க் அளவுக்கு எழுதுற மாதிரி பதில் சொல்லாதீங்கன்னு எத்தனை தரம்தான் சொல்லுறது. வாய் இல்லன்னா உன்னைலாம் நாய்கூட சீண்டாது மாமா.  எத்தனை அழகா இந்த நாய் சாமி கும்பிடுதுன்னு பாருங்க. செம க்யூட்ல்ல.  அந்த குட்டி நாய்க்கு என்ன வேண்டுதலா இருக்கும் மாமா?!

குழந்தை பொறந்தா அப்பா பேரை எதுக்கு இன்சியலா வைக்குறாங்க சொல்லு பார்க்கலாம்.

தெரியாதே மாமா.


புள்ளை எதாவது சாதிச்சாலும், இல்ல கெட்டது பண்ணி ஊர்வம்பை இழுத்துக்கிட்டு வந்தாலும் இன்னார் மகன்னு சொல்லி அப்பா பேரை சொல்லிதான் அந்த புள்ளைய அடையாளப்படுத்துவாங்க. அதனாலதான், அப்பா பேரை இன்சியலா வச்சாங்க.  அப்ப அம்மாக்கு புள்ளை இல்லையான்னு பெண்ணியவாதிகள் கேட்கலாம். அந்த காலத்தில் பெண்கள் வெளில வருவது அபூர்வம். அதனால, அவங்களை வெளி உலகத்துக்கு தெரியாது. அதனால அவங்களை அடையாளப்படுத்தல.

பழைய வளையல், நூல், கல், சமிக்கு, பாட்டில்கொண்டு  நீ கிராஃப்ட் செய்யுறே. இங்க ஒருத்தன் தட்டு, டம்ப்ளர், ஸ்பூன் வச்சி என்ன பண்ணி இருக்கான் பாரு.

எனக்காக சாப்பிடல, உனக்கு வயிறு வலிக்குமேன்னுதான் சாப்பிடுறேன்னு சிவாஜி வசனம் மாதிரி இருக்கு பாரு இந்த காதலிசம்..

நீயே பாரு மாமா இதெல்லாம்.. எனக்கு வேலை கெடக்கு. நான் போறேன்.

நன்றியுடன்,
ராஜி

Saturday, June 02, 2018

ஓடி விளையாடு பாப்பா - கிராமத்து வாழ்க்கை 2

சாதி, மத, ஆண், பெண் பேதமின்றி  நேரங்காலம் இல்லாம இடம் பொருள் ஏவல் பார்க்காம பாதுகாப்பா விளையாடினோம். ஆனா இன்னிக்கு நம்ம குழந்தைகள்?!  நாம் அனுபவித்த கிராமத்து வாழ்க்கையை ரிவைண்ட் பண்ணி பார்க்கலாம் வாங்க. 
இப்பலாம் பிளாஸ்டிக்ல வந்திட்டுது. முன்னலாம் ஈச்சம், பனை ஓலையை வெட்டி, முட்களால் குச்சியில் குத்தி இந்த காத்தாடி செய்வோம். இப்ப இருக்குற மாதிரி அம்புட்டு ஈசியா இது சுத்திடாது. இதை சுத்த வைக்க தெருத்தெருவா தூக்கிட்டு ஓடி இருக்கேன். 
இது ரெண்டு பேர் விளையாடும் விளையாட்டு, ஒருவர் நீளமா ஒரு அடிக்கு மணலை குமிச்சு,  அதில் சின்னதா ஒரு குச்சியை மறைச்சு வைக்க, எதிரில் இருப்பவர் ரெண்டு கைகளால் சரியா அந்த குச்சி இருக்கும் இடத்தை லாக் பண்ணனும். அப்படி கண்டுபிடிச்சுட்டா அடுத்து அவர் ஆட்டத்தை தொடங்குவாங்க. இல்லன்னா  தோத்தவர் கைநிறைய மணலை அள்ளிக்கிட்டு அதில் குச்சியை சொருகி, ஜெயிச்சவர் அவர் கண்ணை மூடிக்கிட்டு எதாவது ஒரு இடத்தில் அந்த மணலை கொட்டிட்டு, ஆட்டம் ஆரம்பிச்ச இடத்துக்கு வருவாங்க. அங்கிருந்து  கண்ணை மூடிக்கிட்டவர் மணலை கொட்டிய இடத்தை கண்டுபிடிக்கனும். மணலை கொட்டியதும் கூடி இருக்கவுங்க அந்த மணலை மூடும் வேலைய பார்த்துப்பாங்க. இதுக்கு கிச்சு கிச்சு தாம்பாளம். 
இது குழுவாய் விளையாடும் விளையாட்டு. ரெண்டு குழுவிலும் சரிசமமா ஆட்கள் இருக்கனும். ஒரு குழுவில் ஒருவரை தவிர மத்தவங்கலாம் எதிரெதிர் திசையில் அமர்ந்திருக்க,  இன்னொரு குழுவினர் உக்காந்திருக்கவுங்களை சுத்தி ஓடுவாங்க. அமராம இருக்கும் ஒருவர் இவங்களை பிடிக்க ஓடுவார். அவருக்கு முடியாதபோது உக்காந்திருக்கவுங்க முதுகில் தட்டுவார். அவர் எழுந்து ஓடனும். இப்படியே ஆட்டம் தொடரும். இதுக்கு கோ கோ ன்னு பேரு.
ஒவ்வொரு வீட்டிலிருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள் கொண்டு வர ஓரிடத்தில் எல்லாரும் சேர்ந்து சமைப்போம், சிலர் குச்சி பொறுக்கிட்டு வருவாங்க. சிலர் ஆலமர இலைகளை கொண்டு இலை தைப்பாங்க. அதுல பரிமாறி சாப்பிடுவோம். வெந்தும் வேகாம உப்பு உரைப்பு கூட குறைச்சலா இருந்தாலும் அத்தனை ருசி அந்த உணவில்.  இதுக்கு கூட்டாஞ்சோறு ன்னு பேரு.
வீட்டு உத்திரத்தில் அம்மா சேலை கட்டி ஆடிய ஊஞ்சல். அது கிழிஞ்சு போய், அதனால நம்ம முதுகு கிழிஞ்ச கதையெல்லாம் நடந்திருக்கும். தண்ணி இறைக்கும் தாம்பு கயிறைக்கொண்டு மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆளுக்கு இத்தனை தரம் ஆடனும்ன்னு கணக்கு வச்சி ஆடி இருக்கேன். புது தாம்பு கயிறா இருந்தால் கைய கிழிச்சுடும்.
தீம் பார்க், பார்க், அப்பார்ட்மெண்ட்களில்  பார்க்கும் சீ சா பலகையில்  நம்ம பசங்க இன்னிக்கு சர்வ சாதாரணமாய் விளையாடி அலுத்து போச்சுதுங்க. ஆனா, அன்னிக்கு நமக்கு இது கிடைக்கல. நாங்கலாம் மாட்டு வண்டில மாடுகளை இன்னைக்கும் நுகத்தடியிலதான் இந்த விளையாட்டை விளையாடுவோம். மாட்டுவண்டிக்காரங்க பத்தி விட்டாலும், அவரு தலை மறைஞ்சதும் ஆட்டம் தொடரும். அப்படியே, மாட்டு வண்டி சக்கரத்தில் ஏறி இறங்கி அச்சாணியில் காயம்பட்டு கரிப்பூசி... அப்பப்பா, இன்னிக்கு மாட்டு வண்டி பார்க்குறதே அதிசயமா இருக்கு. அப்படியே மாட்டு வண்டி இருந்தாலும் அதுல டயர்தான் இருக்கு. சக்கரம் இல்ல.
இது குழுவாய் விளையாடும் விளையாட்டு.. வட்டமா உக்காந்திருக்க, ஒருவர் மட்டும் கையில் ஒரு துணியினை வச்சிக்கிட்டு ஓடுவார். அப்படி ஓடிக்கிட்டே யார் மடியிலாவது கையிலிருக்கும் துணியை போடுவார். மடியில் துணி விழுந்தவங்க அந்த துணியை எடுத்துக்கிட்டு ஓடனும்.  ஒரு ரவுண்ட் முடியுறதுக்குள் துணியை போட்டவங்களை பிடிச்சுட்டா அவங்க உக்காந்துக்கலாம். இல்லன்னா, துணிய போட்டவங்க. காலியா இருக்கும் இடத்துல உக்காந்துப்பாங்க.இப்படி இந்த ஆட்டம் தொடரும்.

அம்மா துணி துவைக்க  ஏரி, ஆத்துக்கு போகும்போது அவங்களோடு போவோம். அம்மாக்கு ஹெல்ப் பண்ண இல்ல.   சின்ன சின்னதாய் கற்களை பொறுக்கி வர. அப்படி பொறுக்கி வரும் கல்லை கொண்டு குழுவாய் இல்லன்னா தனித்தனியாய் விளையாடுவோம். மொத்தமா கல்லை கொட்டி ஒத்தை கல்லை மேல சுண்டி கீழ இருக்கும் கற்குவியலில் இன்னொரு கல்லை அசைக்காம கல்லை ஒன்னொன்னா, ரெண்டா, கும்பலான்னு எப்படி வேணும்ன்னாலும் எடுக்கலாம். ஆனா, கையிலிருக்கும் கல்லோ சுண்டி விட்ட கல்லோ கீழ விழக்கூடாது. அதேமாதிரி  கல்லை எடுக்கும்போது பக்கத்திலிருக்கும் கல்லை அசைக்கக்கூடாது. அப்படி அசைஞ்சா அவுட். இப்படி பந்தயம் கட்டி விளையாடுவோம். கல்லுக்காய் இல்லன்னா கல்லாங்காய்ன்னு சொல்வாங்க. வெறும் அஞ்சுக்கல்லை கொண்டும் விளையாடலாம். ஒரு கல்லை சுண்டி விட்டு ஒவ்வொரு கல்லா எடுக்கனும். அடுத்து 2, அடுத்து 3, அடுத்து 4ன்னு இந்த விளையாட்டு போகும்.
தாயம், பரமபதம்ன்னு சொல்லி விளையாடும் விளையாட்டு இது. இதை வீட்டில் விளையாடினா திட்டுவாங்க. மகாபாரத கதையால் இந்த ஆட்டத்தின்மேல் ஒரு பயம்.  
தீப்பெட்டியில் கயிறை நுழைச்சு விளையாடின டெலிபோன் விளையாட்டு, இன்னிக்கு ஸ்மார்ட் போனை அசால்டா கையாண்டாலும் டெலிபோன் விளையாட்டை மறக்க முடியாதே!

பேப்பர்ல கேமரா, கப்பல் செய்வாங்க. கூடவே நாலு கிண்ணம் இருக்குற மாதிரி செய்து நாலு விரலை நுழைச்சுக்கிட்டு விளையாடுவாங்க. இன்னியவரைக்கும் பேப்பர்ல கப்பலும், கேமராவும் செய்ய துப்பில்ல எனக்கு. 

கழுத்திலிருக்கும் சாமி கயிறை கொண்டு விளையாடிய விளையாட்டு இது. ஒரு மிட்டாயில் இரு துளைகளில் கயிறு நுழைச்சு இருக்கும் அந்த மிடாய் அப்ப பத்து பைசா. அதை வாங்கி  மிட்டாயை தின்னுப்பிட்டு அந்த கயிறில் இதை விளையாடி இருக்கோம். 
பாவாடை சுழல அக்காக்கள் சுத்துவாங்க. அப்ப சிலசமயம், நம்ம கையை பிடிச்சுக்கிட்டும் நம்மையும் அவங்களோடு சுத்த வைப்பாங்க. அதுக்கு பேரு தட்டாமலை... 
ஆண்பிள்ளைகள் விளையாடிய விளையாட்டு. பார்க்கலைன்னுலாம் பொய் சொல்ல மாட்டேன். பார்த்தும் பார்க்காத மாதிரி கடந்து போயிருப்போம்.  சுவத்துல படம்லாம் வரைவானுங்க. பேட் பாய்ஸ். இன்னிக்கு எல்.கே.ஜி பையன்கூட, பாத்ரூம் கதவை மூடிக்கிட்டு போகுது. தவறி திறந்துட்டா கத்துதுங்க. பெரிம்மாதானே, அத்தைதானேன்னு சொன்னா முறைக்குதுங்க...

ஆயிரம் சொன்னாலும் ஆயிரம் அடைந்திருந்தாலும் பொன்னான பொன்னான ஒரு காலக்கட்டத்தில்தான் பிறந்திருக்கோம்ன்ற கர்வம் எனக்குண்டு. 
கிராமத்து வாழ்க்கை தொடரும்..
நன்றியுடன்,
ராஜி

Friday, June 01, 2018

வித்தியாசமான நேர்த்திகடனை கொண்ட அங்காளபரமேஸ்வரி ஆலயம் - அறிவோம் ஆலயம்

தீ மிதிக்குறது, காவடி எடுக்குறது, அலகு குத்துறது, பாடை எடுத்தல், மாங்கல்யம் செலுத்துதல்ன்னு விதம் விதமான வேண்டுதல்களை பார்த்திருக்கோம். ஆனா, போட்டோக்களை காணிக்கையா செலுத்தும் கோவிலை எங்காவது கேள்விப்பட்டிருக்கீங்களா?! வேலூர் மாவட்டத்திலிருக்கும் கலவை அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில்தான்  இந்த வித்தியாசமான வேண்டுதல் நடக்குது. அந்த ஆலயத்தை பத்திதான் இன்னிக்கு பார்க்க போறோம். 
வீட்டுக்கு அடங்காம திரியுறது, சொல்பேச்சு கேட்காம இருக்குறது, இப்படி ஏடாகூடாம இருக்கும் ஆட்களை கலவை கோவிலுக்கு கூட்டிப்போங்கன்னு சொல்வாங்க. இந்த கோவிலில் பேய் ஓட்டுதல் என்பது ரொம்ப பிரசித்தம். கிராமத்து கடைசியில் இருக்கும் கிராம தேவதை கோவிலின்  அளவுதான் இந்த ஆலயம் இருக்கும். 
2000 சமீ அளவிலான பழைகாலத்து வீடு மாதிரியானதோரு கோவில். பலிபீடம் இல்லை. ராஜ கோபுரம் என ஆலயத்துக்குண்டான எந்த அம்சமும் இந்த கோவிலில் கிடையாது.இது கோவில்ன்னு உணர்த்த  கோவிலுக்கு முன் ஆர்ச் ஒன்னு சமீபத்தில் கட்டி இருக்காங்க. 

 கோட் போட்ட அங்கிள், லிப்ஸ்டிக் போட்ட ஆண்டி, கல்யாண கோலத்தில். நடைவண்டி ஓட்டும் குழந்தை, சார்ட்சோடு விமானத்தில் எடுத்த செல்பி, பிளாக் அண்ட் வொயிட், லேமினேசன், பாஸ்போர்ட் சைஸ்ன்னு  கோவில் வாசலில், சுவத்தில் கூரையில், ஸ்விட்ச் போர்ட் மேலன்னு இந்த கோவில் முழுக்க போட்டோக்களை  பார்க்கலாம்.  உண்மையாவே பேய், பில்லி சூனியம் மாதிரியான பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவங்க, இந்த ஊர் எல்லையிலிருந்தே காந்தத்தால் ஈர்க்கப்பட்டது போல தானாகவே இந்த கோவிலுக்கு வந்து சேர்வது இக்கோவிலின் மற்றொரு அதிசயம். 

கலவையைப் பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்தவர் அப்பு முதலியார். காஞ்சி மகா பெரியவருக்கு முன்பிருந்த சங்கராச்சாரியாரிடம் அங்காளபரமேஸ்வரிக்கு கோயில் கட்ட அனுமதி கேட்டார். சங்கராச்சாரியார் ஒரு சிறிய நெற்குவியலிலிருந்து ஒரு யந்திரத்தை எடுத்துக் கொடுத்து,  அதையே ஆதாரபீடமா வைத்து கோயில் எழுப்பச் சொன்னார். அப்படி உருவானதுதான் கலவை அங்காள பரமேஸ்வரி ஆலயம். மேல்மலையனூர் உற்சவத்திற்கு அடுத்தபடியாக, கலவை மயானக் கொள்ளை உற்சவம் இங்க விமரிசையாக கொண்டாடப்படுது. அந்நாளில், இக்கோவிலில் தங்கி இருந்து மனநலம், உடல் நலம் குணமானவர்கள் மொத்தமாய் சேர்ந்து தீச்சட்டி எடுக்குறது, பறவை காவடி எடுக்குறதுன்னு பத்து நாள் திருவிழாக்கோலமாய் இருக்கும் இந்த ஊர். 

அப்பு முதலியாருக்கு பின் திரு.கண்ணப்ப சுவாமிகள் மற்றும் அவருக்கு அடுத்தபடியாக திரு.பன்னீர்சுவாமிகள்ன்னு  கோவில் பணிகளை கவனிச்சுக்கிட்டாங்க. இப்ப  திரு.சந்தானம் சுவாமிகள் மற்றும் திரு.செளந்தராஜன்தான் கோவிலை பராமரிச்சுக்கிட்டு வர்றாங்க.  எட்டுக்கு எட்டு அளவிலான சிறிய அறையில் அங்காளபரமேஸ்வரி குடிக்கொண்டிருக்கும் கருவறை இருக்கு. அவளுக்கு முன் சயன கோலத்தில் அம்மன் உருவம் ஒன்று இருக்கு. இக்கோவிலில் பூசாரிகள் கிடையாது. 


அர்ச்சனை, அபிஷேகம்ன்னு எதும் கிடையாது. இக்கோவிலில் சேவை செய்ய வேண்டிக்கிட்ட ஆட்களே பிரசாதம் தருவாங்க. பிரசாதமா பெருமாள் கோவில்களில் கொடுப்பது மாதிரி துளசி தீர்த்தம் கொடுத்து  சடாரி வைப்பாங்க. அதேப்போல், மாதவிடாய் காலங்களிலும் கோவிலுக்கு வரலாம். 

 கல்யாணம், குழந்தை வரம், வேலை, வழக்குன்னு தங்கள் வேண்டுதல்களை சொல்லி   இக்கோவிலில் வேண்டிப்பாங்க. வேண்டுதல் நிறைவேறியதும் ஒரு தட்டில் அவங்கவங்க வசதிப்படி புடவை, பழம், தேங்காய், பணத்தோடு  யாருக்காக வேண்டிக்கிட்டாங்களோ அவங்க படத்தை கொண்டு வந்து இங்க மாட்டுவாங்க.  உதாரணத்துக்கு, குழந்தை வரம் வேண்டி இருந்தா குழந்தை பிறந்தபின் அந்த குழந்தை படத்தை மாட்டுவாங்க. கல்யாணம் நடக்கனும்ன்னு வேண்டிக்கிட்டா கல்யாணம் முடிஞ்சு தம்பதியா படமெடுத்து இங்க கொண்டு வந்து மாட்டுவாங்க.  அப்படி வேண்டிக்கிட்டு மாட்டும் படங்கள் பழசானதும் ஒரு அறையில் கொண்டு போய் வச்சுடுவாங்க. இந்த கோவில் முழுக்க பல லட்சம் அளவில் இங்க இருக்கு. துலாபாரம் செலுத்துவதும் இங்குண்டு. இங்க சுத்துவட்டாரத்தில் தங்கள் நிலத்தில் விளையும் முதல் விளைச்சலில் ஒரு பங்கை இந்த கோவிலுக்கு கொடுத்துடுறாங்க. இந்த வருமானத்தில்தான் கோவில் நிர்வாகம் நடக்குது.

காதல், குடி மாதிரி மனநலம் பாதிக்கப்பட்டவங்களை  இந்த கோவிலுக்கு கூட்டி வந்து மந்திரிச்சுக்கிட்டு போவாங்க.  ரொம்பவே மனநிலை பாதிக்கப்பட்டவங்களை கூட்டி வந்து  ஒன்பதிலிருந்து 48 நாட்கள் தங்குவாங்க. அதுக்குன்னு இந்த கோவிலில் தனியா அறைகள் இருக்கு. வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் கொடுக்கும் பழங்களை கொண்டு பஞ்சாமிர்தம் செய்து, அதோடு பொங்கலும்  செய்து இங்க தங்கி இருக்கவுங்களுக்கு  கொடுப்பாங்க. அதான் காலை உணவு. காலை உணவோடு தீர்த்தமும் கொடுப்பாங்க. அப்படி தங்கி இருக்கவுங்க இந்த கோவிலை சுத்தம் செய்வது, பூஜை செய்வதுன்னு பொழுதை கழிப்பாங்க. மதிய உணவை வெளில வாங்கிக்கனும். இரவு உணவா எதாவது பழமும், தீர்த்தமும் கொடுப்பாங்க. அவங்க இப்படி தங்கி இருக்க எந்த கட்டணமும் வாங்குறதில்லை. 

பழைய அங்காளம்மன் கோவிலுக்கு பக்கத்திலேயே  ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன்  ஆலயம் இருக்கு.  பெருமாளின் தங்கையான இவள்  இந்த ஊர் ஆலயங்களில் அண்ணனைப்போலவே  சைவமாய் இருக்கிறாள்.  அதனால்தான் எந்த அம்மன் தலங்களிலும் இல்லாத முறையில் துளசி தீர்த்தம் தந்து  சடாரியும் வைக்கப்படுது.   
முழுக்க முழுக்க மார்பிள் கற்களால் கட்டப்பட்டது இந்த கமலக்கண்ணி கோவில்.  அகில உலகங்களுக்கும் தாயாகி நின்று காத்து அருளுகின்ற பராசக்தியானவள் பல்வேறு திருநாமங்களோடு பல கோவில்களில்  அருள் பாலித்து வருகின்றாள். அப்படி அம்பாள் அருள்பாலிக்கும் திருக்கோவில்களில் கமலக்கண்ணி ஆலயமும் ஒன்று. தாமரைக்கு நிகரான தன் கண்களால் பக்தர்களை கண்டு, அவர்களின் மனக்குறையை தீர்ப்பதால் அவளுக்கு இந்த பேர்.  கோவிலுக்குள் நுழைந்ததும் சயனக்கோலத்திலிருக்கும் அன்னையை வணங்கி கருவறை செல்லனும். 
நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்  இந்த கம்லக்கண்ணி அம்மன் தேவிதான் செஞ்சிக் கோட்டையை ஆண்ட மன்னர் பரம்பரையின் குலதெய்வமாகவும் செஞ்சிக் கோட்டையைக் காத்து வருகின்ற காவல் தெய்வமாகவும் விளங்குபவள். பற்றற்ற யோகியாக துறவு வாழ்க்கையை மேற்கொண்டு இமயமலைச்சாரலிலும்,  வடஇந்தியாவில் பல இடங்களிலும் பாத யாத்திரையாகச் சென்று பல தத்துவ ஞானிகளின் ஞான உபதேசங்களினால் தியானம், யோகம், இவற்றில் மேன்மையை அடைந்த சிறந்த தவயோகியாக விளங்குபரான  தவத்திரு. சச்சிதானந்த சுவாமிகள்தான் இக்கோவிலை நிர்மாணித்தார்.


 சும்மாயிரு சொல்லறேன்ன்றது அருணகிரியாரின் வாக்கு. அந்த வாக்குக்கேற்ப  மௌன விரதத்தை கடைபிடித்து வருகின்றார் இந்த சச்சிதானந்த   சுவாமிகள்.  மௌன விரதத்தில் இருந்தாலும்  இங்கு வரும் பக்தர்களின் துன்பங்களை, ஒரு வெள்ளைத்த்தாளில்  எழுதி தர, அதற்குண்டான தீர்வுகள், ஆறுதலை பதிலுக்கு எழுதி தந்து பக்தர்களது மனக்குறையை அம்பாளின் ஆசியோடு போக்குகிறார்.  

1979ம் ஆன்டு கலவை முன்னாள் மணியம் R.D கிருஷ்ணஸ்வாமி முதலியாரும், அவர் துணைவியார் திருமதி. சரோஜாம்மாள் அம்மையாரும் இப்பகுதியில் அம்மனுக்கு  கோவில் எழுப்ப தீர்மாணித்து கோவில் கட்டி வந்தனர். கோவில் கட்டி முடியும் நேரத்தில், இந்த பகுதிக்கி வருகை தந்த சச்சிதானந்த சுவாமிகள் தம்பதியரிடம்  கமலக்கண்ணி அம்மனின்  பூர்வீக கோவில் செஞ்சி மலையில் உள்ள கோட்டையில் இருப்பதாக  சொல்லி தம்பதிகளையும், ஊரார் சிலரையும் அழைத்துக்கொண்டு செஞ்சிக்கு போனார். 

.செஞ்சி மலையில் கமலக்கண்ணி அம்மன் கோவில் மிகவும் சிறிய கோவில். அங்கிருக்கும் அம்மனின் சிலாரூபம்  மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. பூஜைகளும், பராமரிப்பும் இல்லாமல் அம்மன் இருப்பதை அறிந்து தம்பதியர்களும், சுவாமிகளும்  மனம் நொந்து  போனார்கள். கமலக்கண்ணி அம்மனை சுவாமிகள் தன் கரங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டபோது,  உன்னோடவே  வந்து விடுகிறேன் மகனே! என செஞ்சி கமலக்கண்ணி அம்மன் சொல்வதைப்போல உணர்ந்தார்.  தெய்வீக அருள்வாக்கினால் ஈர்க்கபட்டு அவளது அருளானையின்படி செஞ்சியில் இருக்கிற அம்மனைப் போலவே சிலாரூபம் செய்து தான் வாழும் கலவையில் வளர்ந்து வரும் ஆலயத்தில் கமலக்கண்ணி அம்மனை நினைத்து அவளது சிலாரூபத்தை பிரதிஷ்டை செய்தார். 
கிருஷ்ணசுவாமி சரோஜாம்மாள் துணையோடு கமலக்கண்ணியம்மனுக்கு ஆலயம் எழுப்பி  வழிபாடு செய்து வந்தார்கள் .கலவையில் கோவிலை சுவாமிகள் விரிவு செய்து கொண்டு போனபோதும் கோவில் அமைப்பு சுவாமிகளுக்கு மன நிறைவு தரவில்லை இரத்தினகிரி தவத்திரு . பாலமுருகனடிமை சுவாமிகள் தனது 39 ஆண்டு மலைவாசத்தை முடித்து கலவைக்கு வருகை தந்தபோது கோவிலை புதுபித்து கட்ட வேண்டும் என்ற தனது வேட்கையை சச்சிதானந்த சுவாமி தெரிவித்தார்.  பழைய கோவிலை அகற்றிவிட்டு புதுக்கோவிலை எழுப்புமாறு பாலமுருகனடிமை சுவாமிகள் சொல்ல, அதன்படியே புதுக்கோவில் எழுப்பப்பட்டு வருகிறது. ஸ்ரீகமலக்கண்ணி அம்மனின் திருவருள் துணையோடு பக்தர்களின் பாத காணிக்கைகளை கொண்டும் சச்சிதானந்த சுவாமிகள் மனதில் எண்ணியவண்ணம் கோவில் திருப்பணி நிறைவேறி வருகிறது. மார்பிள் கற்களால் அழகும் பொலிவுமாய் வளர்ந்து வரும் இக்கோவில்  பெற்றுள்ள ஸ்ரீகமலக்கண்ணி அம்மன் திருகோவிலில் கருவறை வாசல் கதவு வெள்ளியிலும் முன் வாசல் கதவுகள் தஞ்சாவூர் பாணியிலும் வடிவமைக்கபட்டுள்ளது.

ஆரணில இருந்து 18 கிமீ தூரத்திலும், செய்யாறிலிருந்து 15கிமீ தூரத்திலும், ஆற்காட்டிலிருந்து 12கிமீ தூரத்திலும் இருக்கு. ஆரணி, செய்யாறு, ஆற்காடு, வேலூர், காஞ்சிபுரத்திலிருந்தும்  கலவைக்கு பஸ் உண்டு. கலவைக்கு வந்து அங்காளபரமேஸ்வரி அம்மனையும், கமலக்கண்ணி தாயாரையும் வணங்கி, அப்படியே ஆரணிக்கு வந்து ராஜிக்கு செய்ய வேண்டிய சீரையும் செஞ்சுட்டு போங்க சகோஸ்

நன்றியுடன்,
ராஜி