செவ்வாய், மே 23, 2017

மெதுவடையில் ஓட்டை ஏன் போடுறாங்க?! - கிச்சன் கார்னர்
உளுந்து அல்லது உழுந்துன்ற  செடில இருந்துதான் உளுத்தம்பருப்பு கிடைக்குது.  உழுந்து என்பது சங்க இலக்கியங்களில் உளுதின் பெயராகும். இது தெற்காசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த உளுத்தம்பருப்பு இந்தியர்களின் குறிப்பாக தென்னிந்தியாவின் தினசரி உணவுகளில் முக்கியம் இடப்பிடித்துள்ளது.  இட்லி, தோசை, வடை, முறுக்கு, வடை, களின்னு தமிழர் உணவுகளில் உளுத்தம்பருப்பு இடம்பெறுது.    தோல் நீக்கிய உளுத்தம்பருப்பைவிட தோல் நீக்காத கருப்பு உளுந்தில் சத்துகள் அதிகம் உள்ளது.

நீண்ட நாள் நோயின் தாக்கத்திலும், மருத்துவமனையிலும் இருந்துவந்தவர்கள் உடல்பலம் பெற இப்பருப்பு பெருதும் உதவுது.  கஞ்சியாகவும், களியாகவும், இட்லியாகவும் எந்த வயதினரும், எந்த நோயின் பிடியிலிருந்தாலும் உட்கொள்ளலாம்.  எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு உளுந்து பெரிதும் பயன்படுது.

பொதுவாய் உளுந்து நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் குளிர்ச்சியை தரக்கூடியது. கருப்பு உளுந்துடன், தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டா தூக்கமின்மை, ஓயாத உழைப்பு, மன உளைச்சலால் வரும் உடல்சூட்டை சரிச்செய்யும். 

 

தோல் நீக்காத கருப்பு  உளுந்தை காய வைத்து  அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும். உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும். உளுந்தை ஊறவைத்து வடை செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு பசியையும் போக்கும்.  

எலும்பு, தசை முறிவு மற்றும் ரத்தக்கட்டிகள் குணமாக உளுந்து சிறந்தது. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து அதோடு தேவையான அளவு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து கலக்கி அடிப்பட்ட இடத்தில்  தடவி கட்டு போட்டால் ரத்தக்கட்டு குணமாகும். 

இடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்து களி  தினமும் சாப்பிட்டு வந்தால் பலம் பெறும். வளரும் பிள்ளைகளுக்கு இட்லி பெரும்பங்கு வகிக்கிறது. எந்த சூழ்நிலையிலும் சாப்பிடலாம்.  நாற்பது வயது நெருங்கும் பெண்களுக்கும், பருவம் அடைந்த வளரிளம் பெண்களுக்கும் உளுந்து கஞ்சி உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. பூப்பெய்திய பெண்களுக்கு உளுந்து கஞ்சியும், களியும், லட்டும்  கொடுப்பது வழக்கம். 


இனி  மெதுவடை செய்யும் முறையை பார்க்கலாம்....:

தேவையான பொருட்கள்...
உளுத்தம்பருப்பு,
ப.மிளகாய்,
இஞ்சி,
உப்பு,
சமையல் எண்ணெய்,
கறிவேப்பிலை கொத்தமல்லி..

உளுத்தம்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்...


ப.மிளகாய், இஞ்சியை சுத்தம் செய்து உளுத்தம்பருப்போடு  உப்பு சேர்த்து லேசா தண்ணி தெளிச்சு அரைச்சுக்கோங்க.

அத்தோடு பொடியா நறுக்கிய வெங்காயம் சேர்த்துக்கோங்க...

சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நல்லா பிசைஞ்சுக்கோங்க..

வட்ட வடிவமா தட்டி...வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் போட்டு ரெண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுத்தா ....... 

சுவையான மெதுவடை தயார்,....  உளுந்தை ஒன்றிடண்டா அரைச்சு மிளகு சேர்த்து வடை சுட்டெடுத்தால் மொறுமொறுப்பா ருசியா இருக்கும்..  மீந்துடுச்சுன்னா கவலைப்படத்தேவை இல்ல. லேசா சுடவெச்சு  தயிர்வடை, சாம்பார்வடையா  மாத்திடலாம். மோர்க்குழம்பிலும் போட்டு சாப்பிடலாம். உளுந்தை வெச்சு செய்யும் வடை ரொம்ப ஸ்பெஷல். இந்த வடையை ரசம், சாம்பார், தயிர்ன்னு எதுல போட்டாலும் அதோட ருசியை தனக்குள்  இழுத்துக்கிட்டாலும் வடையோட ருசில இருந்து மாறாது.   நம்மை சுற்றி இருக்கும்   விஷயங்களை கிரகிச்சு  சேர்த்து பல்கலை வித்தகராய் விளங்கினாலும் நம்மோட தனித்தன்மையை மாத்திக்கக்கூடாதுன்னு சொல்லாம சொல்லுது இந்த வடை.

இனி டிப்சுக்கான நேரம்.....

உளுந்தை ரொம்ப நேரம்  ஊற வெச்சா வடை எண்ணெய் இழுக்கும்... உளுந்தோடு கொஞ்சம் பச்சரிசி சேர்த்துக்கிட்டா வடை மொறுமொறுப்பா இருக்கும். வடை மாவுல தண்ணி அதிகமாகிட்டா அரிசி மாவு சேர்த்துக்கலாம். இல்லன்னா அப்பளத்தை ஊறவெச்சு அரைச்சு சேர்த்துக்கலாம்...   வடை தின்னா ஏப்பம் வரும். செரிக்காது. நெஞ்சு எரிச்சல், எண்ணெய்ன்னு  சொல்வாங்க. ஆனா அது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதனால ஒன்னிரண்டு எடுத்துக்குறதுல ஒன்னும் ஆகிடாது. 

பருப்பு வடையில் ஏன் ஓட்டை போடலை, உளுந்து வடையில் ஏன் ஓட்டை போடுறாங்கன்னு விஜய் மதுர  குடிச்சுட்டு கலாய்ப்பார். மெதுவடையில் ஓட்டை  போட காரணம்.... உளுந்து மாவு பிசுபிசுப்பா இருக்குறதாலயும்  கொஞ்சம் தடிமனா வடை பொறித்தால் சீக்கிரத்துல வேகாது. அதனால, சீக்கிரம் வேக வடை தட்டும்போது ஓட்டை போடுவாங்க. அந்த ஓட்டை வழியாவும் எண்ணெய் உள்ள போய் சீரா வேகும்.... இதான் மெதுவடைல ஓட்டை போட காரணம்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்காக....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460911
நன்றியுடன்,
ராஜி.
ஞாயிறு, மே 21, 2017

ஒருவருக்கு 24 ஆசிரியர்களா!? - தத்தாரேயர் ஜெயந்தி


Bala Swaroopa of Shri Adiguru Dattatreya  (via Shree Kshetra Ganagapur):
சிவன், பிரம்மா, விஷ்ணுவின் அம்சத்தோடு ஒரு பிள்ளை வேண்டுமென அத்ரி, அனுசுயா தம்பதிகள் விரும்பி மும்மூர்த்திகளையும் வேண்டி நின்றனர். இச்சா, கிரியா, ஞான சக்தியாகிய மூன்று சக்திகளுக்கும் அப்பாற்பட்ட நிர்க்குணப்பரம்பொருளை குறிக்கும் பெயரே அத்ரி.. அனுசுயா என்பதற்கு பொறாமை, அசூயை, வெறுப்பு போன்ற தீய குணங்கள் இல்லாதவள்ன்னு பொருள்.. தத்த என்றால் வழங்கப்பட்டது என்று பொருள். சுய லாபமில்லாத தியாகத்தை உணர்த்துது. அத்ரி முனிவரின் மகன் என்பதால் ஆத்ரேயர் என்றும் சேர்ந்து தத்தாத்ரேயர் என்று பேர் வந்துச்சு.
Sadguru Dattatreya, the first guru to take a body.  Usually depicted as the Male Trinity:
இவர் மிக இளம் வயதிலேயே பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வீட்டை விட்டு வெளியேறி, பிரம்ம ஞானத்தை அடைய பல இடங்களை சுற்றி கர்நாடகா மாநிலத்தில் உள்ள கங்காபுரத்தில் பிரம்ம ஞானத்தை அடைந்தார். இவரது பத்தினியின் பெயர் அனகா தேவி. ஆந்திராவில் அனகா தேவி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுது.இந்த விரதம்  கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட அனுஷ்டிக்கப்படுது. வட இந்தியாவில் தத்தாத்ரேயர் விரதம் பரவலாக அனுஷ்டிக்கப்படுது.

Lord Dattatreya Trinity Wallpaper-guru datt-guru-giranar-girnari-parikrama:
இனி தத்தாத்ரேயர் அவதாரம் பற்றி பார்ப்போம்...
Birth of Dattatreya:
மும்மூர்த்திகளே பிள்ளையாய் வரவேண்டி பதிவிரதையான அனுசுயா தவமிருந்ததால் அவளின் வேண்டுதலுக்கு செவிசாய்க்க வேண்டிய கட்டாயத்தில் மும்மூர்த்திகளும் இருந்தனர். இதுக்குறித்து தங்கள் பத்தினிகளான பார்வதிதேவி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோரிடம் ஆலோசித்தனர். பெண்களுக்கே உண்டான பொறாமை குணத்தோடு, அனுசுயா சிறந்த பதிவிரதைதான் என்று நிரூபித்தப்பின் அவள் கேட்கும் வரத்தை கொடுங்கள் என்று கூறினர். அனுசுயாவின் பதிவிரதத்தை நிரூபிக்கும் பொருட்டு அனுசுயா இல்லம் நோக்கி சென்றனர். அப்போது அத்ரி முனிவர் வெளியில் சென்றிருந்தார்.
தங்கள் இல்லம் தேடி வந்தவர்கள் மும்மூர்த்திகள்ன்னு அறியாவிட்டாலும், விருந்தோம்புதல் இல்லாளின் முக்கிய கடமையாதாலால் அவர்களை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தி அறுசுவை சமைக்க சென்றாள். உணவு சமைத்து, உணவு பரிமாற ஆயத்தம் செய்து  மும்மூர்த்திகளையும் அழைத்து மனையில் அமர்த்தி உணவு பரிமாற சென்றாள். அப்போது, மும்மூர்த்திகளும் அம்மா! நாங்கள் உணவு உட்கொள்ள வேண்டுமெனில் ‘நிர்வாண நிலையில்தான் நீ உணவை பரிமாற வேண்டுமென ‘ கூறினர். அனுசுயா ஒருகணமும் யோசியாமல் தன் கணவனின் கமண்டலத்திலிருந்து நீர் எடுத்து மும்மூர்த்திகளின் மேல் தெளித்து அவர்களை குழந்தையாக்கி உணவூட்டினாள். 
Lord Dattatreya Mantra or Datta Mala Mantra  is a very oowerful beej mantra. You can chant it 108 times for prosperity, goodluck and Blessing of Dutt Guru.:
அனுசுயாவின் கற்பை பரிசோதிக்க சென்ற தங்கள் கணவன்மார்கள் வராததை அறிந்து கலக்கமுற்ற முப்பெரும்தேவியர்கள் அனுசுயா இல்லம் நோக்கி வந்தனர். அங்கு உலக உயிர்களை தங்கள் குழந்தையாய் பாவித்து காக்கும் மும்மூர்த்திகளும் குழந்தையாய் இருப்பதை கண்டு திகைத்து அங்கு நடந்ததை உணர்ந்து, தங்கள் கணவன்மார்களை திருப்பி தருமாறு அனுசுயாவை வேண்டி நின்றனர்.   அனுசுயாவும் மும்மூர்த்திகளையும் முன்போலவே மாற்றி தந்தாள். அனுசுயாவின் கற்பு நெறியை மெச்சி மும்மூர்த்திகளும் அனுசுயாவின் மகனாக தத்தாத்ரேயர் அவதரித்தார்.
Lord Dattatreya Trinity Wallpaper-guru datt-guru-giranar-girnari-parikrama:
மூன்று திருமுகங்கள், ஆறு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார் தத்தாத்ரேயர்.  சிவன் அம்சமாக சூலம், சங்கும், பிரம்மா அம்சமாக கமண்டலமும், துளசி மாலையும், விஷ்ணு அம்சமாக சங்கு சக்கரம் தாங்கி காட்சி தருகிறார். நான்கு வேதங்களும் நாய்களாகவும்,  தர்ம நெறிகளும் பசு உருக்கொண்டு இவர் அருகில் இருக்கின்றது.   தத்தாத்ரேயரை வாங்கினால் ஞானம்,மோட்சம்,நற்குணங்களை பெறலாம்.இவர் மந்திரம் ஞாபக  சக்தியை தரும்.குழந்தை இல்லாதவர்கள் இவரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு நினைவாற்றல் கூடும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வீட்டில் இன்பம் பெருகும்.

இவரை வழிப்பட கடுமையான விரத முறைகள் ஏதுமில்லை. ஒரு மிட்டாய்க்கு தாவி வரும் பிள்ளைப்போல இவரை உள்ளன்போடு நினைத்து காயத்ரி மந்திரத்தை ஜபித்தாலே போதும். நினைத்தது நடக்கும்.
Vedic Astrology - Acharya Priti Bhargava | This blog is in praise of Bhagwan Shiv Shankar : http://www.vedic-astrology.co.in:
ஒருநாள் யது என்ற மன்னன் காட்டிற்கு வேட்டையாட சென்றான். அங்கு , தத்தாத்ரேயர் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார். அதைக்கண்டு ஆச்சர்யமுற்ற மன்னன், ஐயா! ஒரு குடையின் கீழ் உலகை ஆண்டு பொன், பொருள், அந்தஸ்து, அதிகாரம் இருந்தும் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கின்றேன்.ஆனால், தாங்களோ ஏதுமற்ற நிலையிலும் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களே எப்படி?! ஏதுமில்லாமலும் மகிழ்ச்சியாய் இருக்க உங்களை பண்படுத்திய குரு யார்?! என வினவினான். அதற்கு, தத்தாத்ரேயர் மன்னா! எனக்கு மொத்தம் இருபத்தி நான்கு குருக்கள். அவர்களிடமிருந்து கற்ற பாடமே என்னை இப்படி மகிழ்ச்சியுள்ளவனாக ஆக்கியுள்ளது என்றார். 
Lord Dattatreya (Vishnu) is worshipped in a very graceful householder's avatar in addition to the famously known ascetic forms. This very form is called as Anagha Swami, where His consort is called Anagha Devi - She who can make all of us cross this ocean of bondages and Karma. http://www.dycuk.org/newsletters/anaghastami2011.html:
ஐயா! எனக்கு விளங்கவில்லை. ஒருவருக்கு ஒரு குருதானே இருக்க முடியும்?! விதிவிலக்காக சிலருக்கு இரண்டு அல்லது மூன்று குருக்கள் இருக்கலாம். ஆனால், தாங்கள் இருபத்தி நாலு குருக்கள் என்று உரைப்பது ஆச்சர்யத்தையும், சந்தேகத்தையும் அளிக்கின்றது என பணிந்து நின்றான்.
மன்னா! பூமிதான் என் முதல் குரு. அதனிடமிருந்து பொறுமையை கற்றேன். 

தண்ணீரிடமிருந்து தூய்மையை கற்றேன்..

பலரோடு பழகினாலும் பட்டும் படாமலும் இருக்க காற்றிடம் கற்றேன்...

எதிலும் பிரகாசிக்க வேண்டுமென தீயிடம் கற்றேன்..

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டுமென்பதை ஆகாயத்திடம் கற்றேன்....

மாறுபாடுகள் உடலுக்கே அன்றி ஆன்மாவுக்கல்ல என்பதை சந்திரனிடம் கற்றேன்...

மனம் ஒன்றாக இருந்தாலும் சிந்தனைகள் பலவற்றால் நிறைந்தது என்பதை சூரியனிடம் கற்றேன்...

வேடன் ஒருவனின் வலையில் சிக்கிய தன் குஞ்சு புறாக்களை காக்க தாய் புறாவும் வலிய சென்று வலையில் மாட்டியது. இதன்மூலம் பாசமே துன்பத்திற்கு காரணம் என உணர்ந்தேன்..

எங்கும் அலையாமல் தன்னைத்தேடி வரும் உணவை உட்கொள்ளும் மலைப்பாம்பை போல கிடைத்ததை உண்டு உயிர்வாழ கற்றுகொண்டேன். 

கணக்கில்லா நதிகள் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் கடலிடமிருந்து துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை கற்றேன்..

பார்வையை சிதறவிடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்த  விட்டில் பூச்சியிடம் கற்றேன்..

தேனீக்கள் பூக்களிடமிருந்து தேனை எடுப்பது போல துறவி யாசகம் பெற்று ஜீவிக்க வேண்டுமெனவும், அதேநேரத்தில் தேனை சேகரிப்பது போல் உணவை சேகரித்து பின் பறிகொடுக்கவும் கூடாதென  தேனீக்களிடம் கற்றேன்...

 குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையின் மேல் மோகம் கொண்டு போன ஆண் யானையும் குழுக்குள் மாட்டிக்கொண்டதை கண்டு பெண்ணாசை கூடாதென கற்றேன்...

 மானின் வேகம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்ல. ஆனால், இசையை கேட்ட மாத்திரத்தில் ஓடுவதை நிறுத்தி இசையை கேட்க ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கொடிய விலங்குகள் வந்தால் அதன் கதி!? பிரம்மச்சர்ய விரதம் மேற்கொள்வோர்  இசை, நடனங்களில் நாட்டம் கொள்ளாமல் இருக்கவேண்டுமென மானிடம் கற்றேன்..

 நாவை அடக்க முடியாத சபலத்தால் தூண்டிலில் சிக்கி உயிரிழக்கும் மீனிடம் நாவடக்கத்தை கற்றேன்.... 

 பிங்களா என்ற தாசிப்பெண் ஓரிரவில் பலருடன் சேர்ந்து வருமானம் பார்த்தப்பின்னும் இனியும் யாராவது வரமாட்டார்களா என்று காத்திருந்து ஏமாந்து கிடைத்ததே போதுமென உறங்கிவிட்டாள்.  இதிலிருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்திப்படுமென கற்றேன்...

 குரரம் என்ற பறவை தன் இரையை பெரிய பறவைகளிடமிருந்து தப்புவிக்க கீழே போட்டு தன் உயிரை காப்பாற்ற்க்கொள்ளும். அதன்மூலம் வேண்டும் என்ற ஆவலை தவிர்த்தால் துன்பம் நேராது என்று கற்றேன்...

பாராட்டினாலோ, ஏசினாலோ எந்தவித உணர்ச்சிக்கும் சிறு குழந்தைகள் ஆட்படாது. அதுமாதிரியான உணர்ச்சிவசப்படாத மனம் முனிவனுக்கு வேண்டுமென சிறுவனிடம் கற்றேன். 

 ஒரு சிறுமியின் கைவளையல்கள் ஒன்றோடொன்று உரசி சப்தமெழுப்பின.  அவள் ஒரு வளையலை கழட்டியப்பின் சப்தம் நின்றது. இதிலிருந்து இருவர் மட்டுமே இருந்தாலும் தேவையற்ற விவாதம் எழும் எனவும், தனிமையே சிறந்தது எனவும் கற்றேன்..

போர்   ஆயுதங்கள் செய்பவன் பக்கத்திலே போர் நடந்தாலும் தான் செய்த ஆய்தங்களை எடுத்து செல்லாமல்,  ஆய்தங்கள் செய்வதிலேயே அவன் கவனம் இருக்கும். அவனிடமிருந்து எண்ணத்தை சிதற விடாத தன்மையை கற்றேன்.. 
Anaghashtami Dattatreya is one of the incarnation of Mahavishnu and Mahalakshmi will be worshipped with him in the form Anagha devi. According to Bhavishyottara Purana, Anagha devi and Dattatreya should be worshipped on Margashira Krishna paksha Ashtami.:
பாம்பு தனித்து இருந்தாலும் கவனமாய் இருக்கும். தனக்கென வீடோ, கூடோ கட்டிக்கொள்வதில்லை அதுப்போல முனிவருக்கும் வீடு கூடாதென பாம்பிடம் கற்றேன்..

 தன்னிலிருந்து நூலை வெளியேற்றி வலை பின்னி அதனுடன் விளையாடி, உண்டு, உறங்கி பின் அதையே உணவாக உட்கொள்ளும். அதுப்போல பரபிரம்மமும் உலகை உருவாக்கி, காத்து பின் அதை தன்னுள் ஐக்கியமாக்கி கொள்வார் என உணர்ந்தேன்.

ஒரு வகை வண்டு, தன் முட்டையிலிருந்து புழுவை கொண்டு வந்து தன்னருகில் வைத்து ஒருவித ஆசையை எழுப்பிக்கொண்டே இருக்கும். அந்த சத்தத்துக்கு பயந்து அந்த புழுவும் வெளி செல்ல பயந்து அங்கேயே இருந்து  வண்டாய் மாறும். அதுப்போல மனிதன் பயம், பக்தி, காமம், குரோதமென தன் மனதை எதில் செலுத்துகின்றாறோ அதன் உருவை அடைவர் என உணர்ந்தேன்.... எனக்கூறி முடித்தார்..

யது மன்னனும் தத்தாத்ரேயரின் உபதேசத்தின்படி பதவி, நாடு, மனையாள், பிள்ளைகளை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டான்...
தத்தாத்ரேயருக்கு வட நாட்டிலும், ஆந்திராவிலும் ஏராளமான கோவில்கள் உண்டு. ஆந்திராவில் எல்லார் வீட்டுலயும் தத்தாத்ரேயரின் படங்கள் வைத்து வழிப்படுவர். தமிழகத்தில் தத்தாத்ரேயர் பற்றி அறிந்தோர் சொற்பமே. இவருக்கு சேந்தமங்கலம், சுசீந்தரம் தானுமலையான் கோவில் மற்றும் ஆற்காடு அருகில் உள்ள வாலாஜாபாத் தன்வந்திரி பீடத்திலும் இவருக்கு தனிச்சன்னிதி உண்டு.
நன்றியுடன்,
ராஜி

சனி, மே 20, 2017

நெளிய வைக்கும் விளம்பரம் தேவையா?! - கேபிள் கலாட்டா

கலைஞர் டிவில மதியம் 11.30க்கு சிநேகிதியேன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது.  இதுல மேக்கப், உடல் நலம், மனநலம், பேஷன் உலகம் முதற்கொண்டு கிராப்ட், எம்ப்ராயடரி, பெயிண்டிங்க், மார்க்கெட்டிங்க்ன்னு எல்லாத்தை பத்தியும்  பகிர்ந்துக்குறாங்க.

வசந்த் டிவில கி.முத்துக்குமார் இயக்கத்தில்  மண் பேசும் சரித்திரம்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. ஆங்கில சேனல்களை போல உயரமான மலைகள்ல இருக்கும் குகைகள், ஆபத்தான அடர்ந்த காடுகளில் வாழ்ந்த மனிதர்களின் தடங்கள், கோட்டை கொத்தளங்கள், அரண்மனைகளின் பிண்ணனிகளை பத்தி ரொம்ப சிரமப்பட்டு நேர்த்தியோடு இந்த நிகழ்ச்சில ஒளிப்பரப்பு செய்யுறாங்க. இது செவிவழி கதைகளோடு, சரித்திர ஆய்வாளர்களின் விளக்கங்களோடு பகிர்வதும், அதற்கேற்ற வர்ண்னையாளரின் குரல் வளமும் இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்குது.


அழகான ஆண் மாடல்...  வீட்டின் எல்லா இடத்திலயும் எல்லா பொருள்மேலயும் ஏறி குதிக்குறாரு.. அப்புறம்  செல்லோ டேப்பை கிழிச்சு அந்த பொருளை ஒட்டுறாரு, காலிங்க் பெல் அடிக்குது  கதவை திறந்தா ஒரு பொண்ணு.... இப்படி போகும் அந்த விளம்பரத்தை செல்லோ டேப் விளம்பரம்ன்னு நினைச்சிருந்தேன். ஓரிரு முறை  பார்த்தபின் தான் புரிஞ்சுது. அது ஒரு ஆணுறை விளம்பரம்ன்னு... ஆணுறை விளம்பரம் தப்பில்ல. அது புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமான்ற மாதிரி நாசூக்கா இருந்தா சரி. மோசமான அங்க அசைவுகளோடு தேவையா?! பிள்ளைகளோடு அமர்ந்திருக்கையில் நெளிய வேண்டியதா இருக்கே!எல்லா நியூஸ் சேனல்லயும் நேர்ப்பட பேசு,  கேள்வி நேரம், ஆய்த எழுத்துன்னு விதம் விதமான தலைப்புல நாலு பேரும், ஒரு நெறியாளரும் சேர்ந்து ஒரு டாபிக்கை எடுத்துக்கிட்டு பேசுவாங்க. அதுல சமூக ஆர்வலர், பொருளாதார நிபுணர், மருத்துவர், சட்ட மன்ற உறுப்பினர்ன்னு அந்தந்த டாபிக்குக்கு தகுந்த மாதிரி கூப்பிட்டு வச்சு பேசுவாங்க.  சில சமயம் விவாதம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்போது எல்லாரும் சேர்ந்து காட்டு கத்தலா கத்துவாங்க. யார் என்ன பேசுறாங்கன்னே புரியாது. எல்லார்க்கிட்டயும் மைக் கொடுக்குறதுக்கு பதிலா தேவைப்படும்போது தேவைப்படுறவங்க மைக் மட்டும் ஆன் பண்ணா நம்ம காதுல ரத்தம் வராம தடுக்கலாமில்ல...


நேஷனல் ஜியாகரபி சேனலில் தினமும் மாலை 7.30க்கு  DEADLY SUMMERன்னு ஒரு நிகழ்ச்சி உணவு சங்கிலியையும், வாழ்வியல் போராட்டத்தையும் சொல்லுது.  ஒரு அழிவில்தான் இன்னொன்னு உருவாகும் என்பது இயல்புன்னு சொல்லாமல் உணர்த்துது இந்த நிகழ்ச்சி. 

நேஷனல் ஜியாகரபி வைல்ட் சேனல்ல சயின்ஸ் ஸ்டுப்பிட்ன்ற நிகழ்ச்சில நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் இருக்கும் அறிவியல் விதிகளை விளக்கி அந்த விதிகளை முறையா பின்பற்றலைன்னா நாம வாங்குற மொக்கைகளை வீடியோவா போடுறாங்க. அந்த வீடியோவுக்கு கொடுக்கும் கமெண்ட்ரியும் நம்மை சிரிக்க வைக்குது. பாருங்க கண்டிப்பா கவலை மறந்து சிரிப்பீங்க. இந்த நிகழ்ச்சி தினமும் இரவு  8 மணிக்கு ஒளிப்பரப்புறாங்க. 

நாளைக்கு  சிவன், பிரம்மா, விஷ்ணுவின் அம்சமான தத்தாத்ரேய சுவாமிகள் பத்தி தெரிஞ்சுக்கலாம்...

நன்றியுடன்,
ராஜி.


வெள்ளி, மே 19, 2017

திருடியவருக்கு நாயன்மார் பதவியா?! - நாயன்மார்கள் கதைகள்


முன்னொரு காலத்தில்   கனகசபையின் திருச்சடை மகுடத்தை பசும்பொன்னால் வேய்ந்து அழகுப்படுத்திய ஆதித்ய சோழருடைய மரபில் வந்த  இடங்கழி நாயனார் சோழநாட்டின்   தெற்கெல்லையாகிய கோநாட்டில்   பிறந்தார். வேளிர் குலத்தில்  பிறந்த   இவர் இயல்பிலேயே சிறந்த சிவபக்தராக திகழ்ந்தார்.  இவர்காலத்தில் மக்கள் ஆகமத்திலுள்ள  சைவ நெறியையும், வேதத்திலுள்ள தர்மநெறியையும் போற்றி பாதுகாத்து வந்தனர். 

இடங்கழி நாயனார் சிவபெருமானுக்கு தொண்டுகள் புரிந்தும், சிவனடியார்களுக்கு தொண்டு  செய்து வந்த அடியார்களில் இவரும் ஒருவர்.  இவர்  சிவனடியவர்களுக்கு திருவமுது செய்து மகிழும் பெரும்பணியை செய்து வந்தார்.    சிவபெருமானின் அருளால்  இடங்கழி நாயனார்  புகழ் உலகறியும் நேரம் வந்தபோது கடும் பஞ்சம் நாட்டில் உண்டானது.  அடியவர்க்கு திருவமுது படைக்க நெல் கிடைக்காமல் போக  அவரின் திருப்பணி தடைப்பெறும் நிலை வந்தது.  

நெல் தட்டுப்பாட்டால் விருந்தோம்பல் அறம் தடைப்பட்டதால்  என்ன செய்வதென திகைத்து நின்றார்.  எங்கெங்கோ தேடி அலைந்தும் நெல் கிட்டாமல் மனம் வெறுத்து போனார். முடிவில் அரண்மனை களஞ்சியத்தில் நெல் இருப்பதை தெரிந்துக்கொண்டார்.  

ஒருநாள் நள்ளிரவில்  கட்டுக்காவலை மீறி அரண்மனைக்குள் நுழைந்து களஞ்சியத்தினுள் இருக்கும் நிறையிலிருந்து நெல்லை களவாடினார். திருட்டு தொழிலில் அனுபவமின்மையால்  அரண்மனை காவலரிடம் மாட்டிக்கொண்டார்.

Om Namah Shivaya:
மறுநாள் அரசவையில் அரசன் முன்கொண்டு  வந்து நிறுத்தப்பட்டார். காவலரின் புகாரை கேட்ட அரசன், இடங்கழி  நாயனாரின் முகப்பொலிவை கண்டு, இவர் இந்த இழிச்செயலை செய்திருப்பாரா என எண்ணி, ஐயனே! தங்களை பார்த்ததால் சிறந்த சிவனடியார் போல் உள்ளீர் . தாங்களா இவ்விழி செயலை செய்தீர்?! ஒருவேளை அவ்வாறு செய்ய நேர்ந்திருந்தால் காரணம் என்னவென அரசன்   வினவினான்.   

மன்னா! அடியேன் சிவனடியார்களுக்கு திருவமுது செய்து படைக்கும் திருப்பணியை இத்தனை காலம் தவறாமல் செய்து வந்தேன். ஆனால், நம் நாட்டில் நிலவும் கடும் பஞ்சத்தால் நெல் கிடைக்காமல்  எமது திருப்பணிக்கு தடை வந்துள்ளது.  அதனால் அரண்மனை களஞ்சியத்திலிருந்து நெல்லை கவர்ந்து செல்வது என்று முடிவு செய்து இங்கு வந்து நெல்லை களவாடி மாட்டிக்கொண்டேன் என உண்மையை உரைத்து, என் செயலுக்கு என்ன தண்டனை கொடுத்தலும் ஏற்றுக்கொள்கிறேன் என பணிந்து நின்றார்.

Om Namah Shivaya.:
இடங்கழி  நாயனாரின் முகப்பொலிவும், அவரின் உயர்ந்த நோக்கமும், அவரின் உண்மையை உரைத்த பங்கும், பணிவும் அரசனின் மனதை நெகிழச்   செய்தது. அடியவரை விடுவித்ததோடு  அவரை பணிந்து தொழுதார்.  அடியாருக்கு களஞ்சியம் போன்ற இவருக்கு அரண்மனை களஞ்சியம் சொந்தம் எனக்  கூறியதோடு ஏராளமான பொன்னையும் பொருளையும் கொடுத்தும் மனம் நிறையாத மன்னன், திருவமுது படைக்க தேவையான நெல்லையும் தானியங்களையும் களஞ்சியத்திலிருந்து தாராளமாய்  கொடுத்து அனுப்பினான். அதுமட்டுமின்றி தானியங்களும், பொன்னும், பொருளும் தேவைப்படும் சிவனடியார்கள் அரண்மனை களஞ்சியத்திலிருந்து பெற்று செல்லலாம் என முரசறிவித்தார். 

இடங்கழி  நாயனாரும்  தமது சேவையை தங்கு தடையின்றி செய்து கைலாய பதவி அடைந்தார்.  இவரது குருபூஜை ஐப்பசி மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரமாகும்.

தமிழ்மனம் ஓட்டுப்படடை தெரியாதவங்களுக்காக..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460471

Paramchaintanya Men:
நாளை கேபிள் கலாட்டாவில் சந்திக்கலாம்...
நன்றியுடன்,
ராஜி ,


வியாழன், மே 18, 2017

வீணாய் போகும் பொழுதை உருப்படியாக்கிய உருப்படிகள் - கைவண்ணம்

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்காக மகள்களுக்கு பாவாடை தாவணி எடுக்கனும்ன்னு முடிவானது. கடையில் போய் பார்த்தால்  பிடிச்ச கலர், பிடிச்ச டிசைன், பிடிச்ச துணின்னு சேர்ந்து அமையல.  ஆகாய வண்ணத்துல சின்னவளுக்கும், மாந்தளிர் வண்ணத்துல ஹாஃப் சில்க் துணில வெறும் சங்கிலி தையலை மட்டுமே கொண்டு ஹெவி வொர்க் பாவாடை தாவணியை ரெடி செஞ்சாச்சு. நம்ம  அம்மா நமக்காக செஞ்சதுன்னு பசங்களுக்கும் பசங்களுக்கு செஞ்சோம்ன்னு எனக்கும் ரொம்ப திருப்தி. 


வெறும் சங்கிலி தையல் மட்டுமே. நூலில் ஆங்காங்கு சமிக்கி நுழைச்சுக்கிட்டா வெயில்லயும், லைட்டிங்க்லயும் மின்னும். 

சின்னவளுக்கு பிடிச்ச ஆகாய நீல வண்ணம்...

ஆங்காங்கு குந்தன் கற்கள் கொண்டும் அழகு செஞ்சாச்சு. 

சின்னவ ட்ரெஸ்சுக்கு மேட்சா சில்க் த்ரெட் கம்மல்...

ட்ரெஸ்சுக்கு மேட்சா க்வில்லிங்க் பேப்பர்ல செஞ்ச மணிமாலை...

இது பெரிய மகளுக்கு வெறும் சங்கிலி தையல்ல செஞ்ச பெரிய மாங்காய்... அதேமாதிரிய சமிக்கிய அங்கங்க நுழைச்சு குந்தன் கல்லால அலங்கரிச்சது...

க்ராஸ் பார்டர்ன்னு கொஞ்சம் வித்தியாசமாய்...

மாந்தளிர் கலர்ல ஆரஞ்ச் மாங்காய் மின்ன பெரியவள் பாவாடை தாவணி ரெடி..
இது பெரியவளுக்கு செஞ்ச சில்க் த்ரெட் கம்மல்...

இது எனக்கு....


இதும் எனக்கு.. 

நாளைக்கு நாயன்மார்கள் கதையில்  இடங்கழி நாயனார் பத்தி தெரிஞ்சுக்கலாம்.  

தமிழ்மணம் ஓட்டு  பட்டை   தெரியாதவங்களுக்காக....

நன்றியுடன்,
ராஜி. 

புதன், மே 17, 2017

மாயக்கண்ணனின் குலமான யதுகுலத்தின் முடிவு - தெரிந்த கதை தெரியாத உண்மை .

பொதுவாக மகாபாரத கதைகள் எல்லாமே இடியாப்ப சிக்கல்களாகத்தான் இருக்கும்.  நமக்குலாம் பொதுவான சில முக்கியமான பாத்திரங்கள் மட்டுமே தெரியும். ஆனால் கிளைக்கதைகள் மற்றும் அவர்களின் பெயர்கள் எல்லாம் பற்றி  அறிந்துகொள்ளவேண்டும் என்றால் நமக்கு இந்த ஆயுள் போதாது. போன பதிவில் யதுகுலத்தை முடிவுக்கு கொண்டுவர காரணமான க்ருஷ்ணனரின் மகன் சாம்பாவின் விளையாட்டுத்தனத்தையும் அதனால் முனிவர்கள் விட்ட சாபத்தையும் பார்த்தோம். பாக்காதவங்க இங்கே போய் பார்த்துட்டு வாங்க.

துவாரகையில் நடந்த துயர சம்பவத்தை அறிந்த கிருஷ்ணருக்கு வேண்டப்பட்டவர்களெல்லாம் வந்து என்ன நடந்தது என விசாரிக்க தொடங்கினர். அப்பொழுது உக்கிரசேனர் அங்கே வந்தார். யார் இந்த உக்கிரசேனர்?! மதுரா நாட்டின் யதுகுல மன்னரும், கம்சனின் தந்தையும், கிருஷ்ணரின் தாய்வழி பாட்டனும் ஆவார். உக்கிரசேனர் யதுகுலத்தின் குக்குர கிளையினர் ஆவார். புராணங்களின்படி, உக்கிரசேனர் ஆஹூகனின் மகன் ஆவார். மன்னர் உக்கிரசேனர் இவரது மகனான கம்சனால் சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர் கம்சனை கொன்று கிருஷ்ணர் உக்கிரசேனரை சிறை மீட்டு மீண்டும் அரியணையில் அமர்த்தினார். அதன் பிறகு சூரசேனரின் மகனும், கிருஷ்ணரின் தந்தையும், மன்னர் உக்கிரசேனரின் மருமகனுமான வாசுதேவருக்கு பட்டத்து இளவரசு பட்டம் வழங்கப்பட்டது. அந்தக்கதை எழுத ஆரம்பித்தால்  அதுவே ஒரு தனிப்பதிவாக வரும். நாம நம்ம கதைக்கு வருவோம்...
இங்கே என்ன நடந்தது என கிருஷ்ணரை பார்த்து உக்கிரசேனன் கேட்க , அதை நான் சொல்லுகிறேன் என்றது ஒரு குரல்.  குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தார் உக்கிரசேனர். அங்கு ருக்மணி நின்று கொண்டிருந்தாள். முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணர், அழிவின் கடவுள் ருத்திரனை போல் ஒருமகன் வேண்டுமென தவம் இருந்தார். .சாம்பசிவன் அருளால் பிறந்த அவனுக்கு சாம்பா என பெயரிட்டார் (தமிழில் சாம்பன் எனவும் அழைக்கப்படுவான்). அவன் பிறந்தது எதற்காக என கிருஷ்ணருக்கு தெரியும். காந்தாரியின் சாபத்தை நிறைவேற்றவே அவன் பிறந்தான் என மெல்லிய குரலில் கூறினாள். ( கிருஷ்ணா நீ கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்டு ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டு இருந்த போது சலனமின்றி இருந்தாய். ஓ கோவிந்தா! அதனால் நீயே உன் பங்காளிகள் அனைவரின் அழிவிற்கும் காரணமாவாய். இன்றிலிருந்து முப்பத்தாறாவது வருடம், உன்னுடைய குலத்தைச் சார்ந்தவர்கள், உன் நண்பர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரின்  அழிவிற்குக் காரணமாகி, பிறகு வனாந்திரந்தில் தனிமையில் மரணமடைவாய். உன் குலப் பெண்கள், தங்கள் குழந்தைகள், பங்காளிகள் மற்றும் நண்பர்களை இழந்து இந்த பாரத போரில் மாண்டவர்களின் பெண்களைப் போலவே அழுது அரற்றுவார்கள் என சாபமிட்டாள் காந்தாரி)  போன பதிவில் தெளிவாக பார்த்தோம்.

 இந்த சாம்பா , கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் என்றும் அவன் அர்ஜுனனிடமிருந்து போர்க்கலையைப் பயின்றவன்.  துரியோதனனின் ஒரே மகளான இலெட்சுமணாவை, சுயம்வரத்தின்போது சாம்பன் கடத்திச் சென்று திருமணம் செய்ய இருக்கையில், பலராமனின் முயற்சியால் இருவீட்டாரும் இணங்க சாம்பன் – இலெட்சுமணாவின் திருமணம் நடந்தேறியது எனவும் சொல்லப்படுகிறது. சாம்பா முனிவர்களை கிண்டல் செய்தது முனிவர்களின் சாபம் நடக்கும் என்பதும், முக்காலமும் தெரிந்த கிருஷ்ணருக்கு தெரியும் என சொல்லவும் உக்கிரசேனர் என்ன சொல்வது என தெரியாமல் மெதுவாக அவ்விடத்தைவிட்டு சென்றார் .

இந்த ருக்மணி யாருன்னு பார்த்தோம்னா, விதர்ப்பநாட்டு இளவரசி. கிருஷ்ணரின்மேல் தீராத காதல் கொண்டவள். அது அவளது சகோதரன் ருக்மிக்கு பிடிக்காததால் சேதி நாட்டு அரசன் சிசுபாலனுக்கு தன் சகோதரியை மணம் முடிக்க முடிவுசெயதான். உடனே ருக்மணி இந்த கணமே தன்னை வந்து காப்பாற்றாவிடில் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதாக  கிருஷ்ணருக்கு அவசரமான தூது அனுப்பினாள். உடனே கிருஷ்ணர் விதர்ப்ப நாட்டிற்கு சென்று அங்கே அம்பிகை பார்வதிதேவியின் திருக்கோவிலில் கிருஷ்ணரை கணவனாக அடைய பிரார்த்தனை செய்துக்கொண்டிருந்த ருக்மணியைத் தேரில் ஏற்றிக்கொண்டு,   எதிர்த்த மன்னர்களையும் ருக்மியையும் வெற்றிக்கொண்டு மகாலட்சுமியின் அம்சமான ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். ருக்மணியே கிருஷ்ணரின் மனைவியரில் முதன்மையானவர் .
ருக்மிணிக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் ருக்மி, கருக்மன், ருக்மபாஹூ, ருக்மகேசன், ருக்மமாலி ஆகும். ருக்மணிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்த குழந்தை பிரத்யும்னன். இவருக்கும் ருக்மியின் பெண்ணான ருக்மவதிக்கும் திருமணமானது. பிரத்யும்னன் - ருக்மவதிக்கு பிறந்தவர் அனிருத்தன் ஆவார். இவர் கிருஷ்ணனின் பேரனாவார். எல்லா கதைகளும் ஒரு கிளைக்கிதைகளை கொண்டு இருக்கிறது. அவற்றை தனியாக வேறு ஒரு பதிவினில் பார்க்கலாம் .
Sage Narada visits the homes of Lord Krishna.:
இறுதியாக அக்ரூரரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, அவர்கள் அந்த இரும்பு துண்டை தூளாக அரைத்தனர். அப்பொழுதுகூட  மிகவும் கடினமான முக்கோண வடிவில் கூர்மையான ஒரு துண்டு மட்டும் தூளாகவில்லை. அதோடு சேர்த்து அந்த துகள்களை கடலில் எறிந்துவிட்டு நிம்மதியாக திரும்பினார்.  அவர்களால் கடலில் எறியப்பட்ட அந்த முக்கோண வடிவினால ஒரு மீனினால் விழுங்கப்பட்டது. மிச்ச மீதி துகள்க சில காலம் கழித்து கடல் அலைகளால் பிரபாசபட்டினக் கடற்கரையில் ஒதுங்கி மிக உறுதியான நீண்ட கோரைப் புற்களாக வளர்ந்தன. இரும்புதுண்டை விழுங்கிய மீனானது ஒரு மீனவனால் பிடிக்கப்பட்டு, மீன் பல கை மாறி வெட்டுப்படும்போது வெளிவந்த அந்த இரும்பு துண்டு ஒரு கூறிய அம்பாக வடிவமைக்கப்பட்டது. கடற்கரையில் ஏரக்கா கோரை புற்கள் இரும்பினைப்போல  உறுதியாக  வளர்ந்து நின்றன. எல்லாம் ஒரு இறுதியான அழிவிற்கு என்னவெல்லாம் வேண்டுமோ அனைத்தும் தயார் நிலையில் அமைக்கப்பட்டது போல எல்லாம் தத்ரூபமாக அமைந்தன.
Vaivasvata Manu Worships Lord Matsya (the "Noah's Ark" description of the Vedas):

நாளடைவில் எல்லாம் சகஜநிலைமைக்கு திரும்பிவிட்டது. யதுகுலத்தவர் தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தை மறந்துவிட்டனர். ஒட்டுமொத்த துவாரகை அரசாட்சியில் மதுதடை செய்யப்பட்டது. பாரதப்போர் நடக்கும்போது கிருஷ்ணரின் வயது 90. எனினும் மகாபாரத போர் நடந்த 36 வருடங்களுக்குள் துவாரகையில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. கிருஷ்ணரின் சங்கு, சக்கரம், அவரின் அழகிய ரதம் எல்லாம் மறைந்தன. பலராமனின் மழு என்னும் கலப்பையும்  மறைந்துவிட்டது. யாதவர் குலம் அழியும்நேரம் சமீபித்தபோது, கடற்கரையோரத்திலிருக்கும் பிரபாஸா என்ற இடத்திற்குச் செல்லும்படி கிருஷ்ணர் கூறினார். யாதவர்கள் கடற்கரையில் கூடினார்கள். அவள்களில் சில யாதவ இளைஞர்கள் மதியை மயக்கும் போதையைத் தரும் மைரேயம் என்ற மதுவை அளவுக்கு மீறி குடித்து விட்டு சண்டைபோட்டனர். அவர்கள் குடித்துக்கொண்டிருக்கும் மதுபானம் அவர்களது உணர்வுகளை முற்றிலும் இழக்கச் செய்தது.
BHAGAVAD GITA {2, 55 } According to mother Sarda, desires for knowledge, devotion, and salvation cannot be classed as desires because they are higher desires. One should first replace the lower desires with higher desires and then renounce the highest desire also and be­come absolutely free. It is said that the highest freedom is the freedom from becoming free:
பாரதப்போரில் எதிர் எதிரணிகளில் இருந்த கிரிதவர்மா மற்றும் சத்யாகி ஆகிய இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அவர்கள்தான் இந்த அழிவை தொடங்கிவைத்தனர். சத்யாகி குருக்ஷேத்திர யுத்த களத்தில் பாண்டவர்கள் பக்கமும், கிரிதவர்மா கௌரவர்கள் பக்கமும் நின்று சண்டையிட்டனர். போரின் கொடூர நினைவுகள் மீண்டும் வர ஒருவருக்கொருவர் வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த சத்யாகி துள்ளிக்குதித்து கிரிதவர்மாவின் தலையை கொய்துவிட்டான். உடனே கிரிதவர்மாவின் நண்பர்கள், சத்யாகி மேல்பாய்ந்து அவனை கொன்றனர். பின்னர் இருவரின் நண்பர்களும் கடுமையாக சண்டை இட்டனர். வெகுவிரைவில் இந்த சண்டையில் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்கள் கடற்கரைக்கு வந்ததினால் ஆயுதம் எதுவும் எடுத்துவரவில்லை அதனால் கடற்கரைகளில் வளர்ந்து இருந்த ஏரக்கா  புல்லை பிடுங்கி ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். சாம்பா  வயிற்றில் இருந்துவந்த இரும்பு உலக்கையின் துகள்களே அந்த புற்கள்.  அந்த புல் இரும்பு கம்பிகளைப் போலிருந்ததால் அனைவரும் இறந்தனர்.
கிருஷ்ணர் தன்னுடைய ரதசாரதி தருகாவிடம் துவாரகையை விட்டு எல்லோரும் இடம்பெயர வேண்டும். ஏனென்றால் கடல் நீர்மட்டம் அதிகரிப்பதினால் துவாரகை மூழ்கிவிடும் என அவசரப்படுத்தி, எல்லோரையும் அப்புறப்படுத்தியப்பின், கிருஷ்ணர்,  பாலராமன் மற்றும் தருகா இவர்கள் மட்டுமே மீதமிருந்தனர். நடந்தவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பலராமன் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தன்னுடைய குண்டலினி சக்தியை எழுப்பி தன்நிலை மறந்த நிலையில் அந்த பரம்பொருளிடம் தியானம் செய்து பூலகத்தில் தன் வாழ்வை முடித்து தன்னுள் எடுத்துக்கொள்ளவேண்டும் என பிரார்த்தனை செய்து மிகப்பெரிய வெள்ளை நாகமாகமாறி கடலுக்குள் வீழ்ந்து இவ்வுலகம் நீத்தார்.
இந்த கூட்டத்தில் ருக்மிணிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்த மற்றொரு மகனான பிரத்யும்னா (இவன்  சிவனால் எரித்து சாம்பலாக்கப்பட்ட மன்மதனே ருக்மிணியின் கருவில் உருவானான் என்றும் சொல்லப்படுகிறது) ஒருமுறை சாம்பரா என்னும் அசுரன், பிரத்யும்னாவினால்தான் கொல்லப்படுவான் என்று தெரிந்துகொண்டு பிரத்யும்னா குழந்தையாக இருக்கும் போது பெண் உருவமெடுத்து அவனை கடத்தி சென்று கடலில் எறிந்துவிட்டான். அப்பொழுது ஒரு பெரிய மீன் அவனை விழுங்கி விட்டது. அதை ஒரு மீனவன் பிடித்து சாம்பராவின் அரண்மனைக்கே விற்றுவிடுகிறான். அந்த அசுரனின் சமையற்காரியாக இருந்தவள் மாயாவதி.  இவள் ரதியினுடைய அம்சம் எனவும் சொல்லப்படுகிறது. அவள் அந்த மீனை வெட்டும்போது வயிற்றுப்பகுதியில் இருந்து ஒரு அழகான குழந்தை இருப்பதை கண்டவுடன் ஆச்சர்யமடைந்து குழப்பத்தில் இருந்தாள்.
மீன் வயிற்றில் இருந்த குழந்தையை கண்ட  குழப்பத்தில் இருந்த மாயாவதியின் முன்பு தோன்றினார் நாரதமுனிவர். அவர் பிரத்யும்னாவின் பிறப்பு பற்றியும் அவன் யார் எனவும் விரிவாக எடுத்து கூறினார்.  இவனே மன்மதன் என்றும், அவன் வந்த வேலை முடிவடைந்ததும் நீங்கள் இருவரும் தேவலோகம் செல்வீர்கள் எனவும் இவனுக்ககத்தான் நீயும் காத்து இருக்கிறாய் என விளக்கினார். அதிசயமாக மிகவும் குறுகிய காலத்திற்குள் அந்த குழந்தை வளர்ந்தது. எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட  குழந்தை பிரத்யும்னா, சாம்பாராவை போருக்கு அழைத்தான். ஒரு சிறுவன் தீடிரென போருக்கு அழைத்து அவமானப்படுத்துகிறானே என கலக்கமடைந்து பிரத்யும்னாவுடன் போருக்கு  சென்றான் சாம்பரா.  அப்படி போர் புரியும்போது சாம்பரா தன்னுடைய மழை பெய்யும் ஆயுதத்தினால் பிரத்யும்னாவை தடுமாற செய்தான். பல மாயவித்தைகளை செய்து போரிட்டான் சாம்பரா.  அதையெல்லாம் மஹாமாயாவின் துணைக்கொண்டு சாம்பாராவின் தலையை வெட்டி அவனை கொன்றான் பிரத்யும்னா. வானில் இருந்து தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். முடிவில் பிரத்யும்னா,ரதியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் தன்னுடைய இருப்பிடமான துவாரகைக்கு கிளம்பினான் .
சத்யாகி ஆரம்பத்தில் கிரிதவர்மாவிடம் பாண்டவர்களின் படையை நடு இரவில் தாக்கியது பற்றி சண்டை எழ அவர்களுக்குள் சண்டை நடந்து சத்யாகி கொல்லப்பட்ட்டதும் அவனுக்கு ஆதரவாக கிரிதவர்மாவிடம் சண்டையிட்டான் பிரத்யும்னா. அந்த யுத்தத்தில் அவன் கிருஷ்ணரின் முன்பு நடந்த அந்த சண்டையில் படுகொலை செய்யப்பட்டான். பிரத்யும்னாவின் மகன் அனிருதா இவனது மனைவி உஷா (இவள் பானதைத்யவின்  மகளும், மகாபலியினுடைய பேத்தியும் ஆவாள்அனிருதா தன்னுடைய பாட்டனார் கிருஷ்ணன்மீது மிகுந்தமரியாதை கொண்டவன். இவனது மகனும் கிருஷ்ணரின் கொள்ளுபேரனுமாகிய வஜ்ஜிர, ஜெய்சால்மர் குடும்பம் வழியாக அறியப்படுகிறார். யாதவ வம்ங்களில் தப்பி பிழைத்த சிலரில் வஜ்ராவும் ஒருவன்(வஜ்ஜிர மற்றும் கிருஷ்ணருடன் சேர்த்து 16 பேரின் சிலைகள் மதுராவில் உள்ள கோவில்களில் காணப்படுகின்றன).
Mahabharatham - The Great Indian Epic...:
எல்லோருடைய முடிவும் விதித்தபடி நடந்தேறியதால் மனம் உடைந்த கிருஷ்ணர் ஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தார். அவருக்கு பழைய நினைவுகள் நிழலாடியது. பாரத போர்  முடிந்த சமயம், போரில் 100 மகன்களையும் இழந்த பெரியன்னையைச் சந்திக்க பாண்டவர்கள் தயங்கினர். காந்தாரி தங்களைச் சபித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவர்களுக்கு.  பிறகு, ஸ்ரீகிருஷ்ணர் எல்லோரையும் சமாதானப்படுத்தி அவளைச் சந்திக்க சென்றனர்.  திருதராஷ்டிரரின் அனுமதியுடன் காந்தாரியைச் சந்தித்தனர். அவர்கள் பயந்தது போலவே, அவளும் ஆத்திரத்துடன் சபிக்க முற்பட்டாள். உடனே வியாசர் குறுக்கிட்டு  அவளைச் சமாதானப்படுத்தி, அறம் இருக்கும் இடத்தில் வெற்றி உண்டு என வாழ்த்தினாய். அதன்படி, அறம் வென்றது எனவே சினம் வேண்டாம்  சமாதானப்படுத்தினார். உடனே அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்தாள் காந்தாரி. யுத்தத்தில்,  அறத்துக்குப் புறம்பாக பீமன் தொப்புளுக்குக் கீழே கதையைப் பயன்படுத்தினானே அது அறம்தவறிய செயல் இல்லையா?அதை எப்படிப் பொறுப்பது? என்று காந்தாரி கேட்க  பீமன் மன்னிப்புக் கேட்டான்.  அத்துடன், சூது விளையாட்டு மற்றும் திரௌபதியின் வஸ்திராஹரணம் ஆகியவை அறத்துக்குப் புறம்பானவைதானே அதையும் நீங்கள் பார்த்துக்கொண்டுதானே இருந்தீர்கள் என வாதிட்டான் .
Bhima kills Dusshasana in the battle of Kurukshetra, tears open his chest and drinks his blood and collects it to wash Draupadi's hair to keep his promise:

இதில் கோபமுற்ற காந்தாரி, துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்தாய். உன்னை எப்படி மன்னிப்பது என ஆவேசப்பட்டாள். உடனே அவன், தாயே!அவனது ரத்தம் என் பற்களைக் கடந்து உள்ளே செல்லவில்லை. கைகள் ரத்தத்தில் தோய்ந்திருந்தன. அந்தக் கைகளால், அவிழ்ந்த திரௌபதியின் கூந்தலை அள்ளிமுடிப்பேன் என்ற வாக்குறுதிப்படி, திரௌபதியின் தலையில் ரத்தத்தைப் படியச்செய்தேன் என்றான். இதன் பின்னர் தருமா! என காந்தாரி அழைக்க தர்மர் அவளது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மன்னிப்பு கோரினார். தருமர் காந்தாரியின் கால்விரல்களை தொட்டதும், தருமரின் நகங்கள் எல்லாம் கருத்து போயின. காந்தாரியும் சிறிது சாந்தமானாள் .வேதவியாசர், காந்தாரிக்கு  திவ்ய திருஷ்டியை அளித்தார். போரில் தோற்றவர்களையும், இறந்தவர்களையும் கண்டு கவலையானாள். சிதையில் எரியும் கணவன்மார்களின் உடல்களை வலம்வந்த பெண்களை பார்த்ததும் காந்தாரி ஆவேசம் கொண்டு க்ருஷ்ணரை பார்த்தாள்.  இத்தனை துன்பத்துக்கும் நீயே காரணம். நீ நினைத்திருந்தால் இந்த யுத்தத்தை தடுத்திருக்க முடியும். நான் பதிவிரதை என்பது உண்மையானால் எனது வம்சத்து சகோதரர்கள் ஒவ்வொருவரும் சண்டையிட்டு மாண்டதுப்போல, நீ தோன்றிய யதுகுல வம்சத்தின் சகோதரர்கள் சண்டையிட்டு மடிய வேண்டும். நீயும் காட்டில் தனிமையில் மரணத்தை சந்திக்க வேண்டுமென சபித்தாள். குரு வம்சம் அழிவதை நீ பார்த்துக்கொண்டிருந்தாயே என க்ருஷ்ணரை நிந்தித்தாள். ஆனால், ஸ்ரீக்ருஷ்ணர் பொறுமையுடன் தாங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் இவையனைத்தும் முன்பே நிச்சயக்கட்ட விசயங்கள். அதனால் நடந்தே தீரும் என்றார்.  பதிவிரதையின் சாபம் யாதவர்களையும் கண்ணனையும் பாதித்தது. அதை சற்றே நினைவுகூர்ந்தபடி மரத்தின் அருகில் சாய்ந்து இருந்தார். தன் முன்னே தன குலத்தவர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மாய்ந்ததை எண்ணி வேதனைப்பட்டு கிருஷ்ணர் ஒரு அசுவமரத்தின்  கீழ் அமர்ந்து இருந்தார். தன்னுடைய இறுதிக்காலம் நெருங்குவதை உணர ஆரம்பித்தார்.
Aum Sai Ram.   What Happened After The Mahabharata War Is Something You Weren't Taught In School.   Mahabharata is a nearly perfect example ...:

அவர் ஹிரண்ய நதிக்கரையில்  அடர்ந்த புதர்கள் அடங்கிய குரா  மரத்தடியில்  கால்களை நீட்டி ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது "ஜரா' என்ற வேடன் ஒரு காட்டு முயலைத் துரத்திக் கொண்டு வந்தான்.  அது புதர்ப்பகுதியில் ஓடி மறைந்தது. அந்த வேளையில் கிருஷ்ணரின் கால்களில் ஒன்று வேடன் கண்களுக்கு முயல்போல் தெரிய, மறைந்திருந்து அம்பு எய்தான். அந்த அம்பு பகவானின் வலது குதிக்காலில் பலமாகத் தைத்ததும், அந்த அம்பு கிருஷ்ணரின் ஆன்மாவில் நுழைந்து அவரது   உயிரை எடுத்துக்கொண்டிருந்தது.  அப்பொழுது "ஆ' என்ற அலறல் சத்தம் கேட்டு பதறினான் வேடன்; ஓடோடி வந்தான். அங்கே பகவான் கிருஷ்ணர்  காலில் அம்பு தைக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட வேடன், ""பகவானே! உங்கள் பாதம் எனக்கு முயல்போல் தெரிந்ததால் மறைந்திருந்து அம்பு எய்தேன். என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கதறினான். அப்பொழுது கிருஷ்ணர் அவனை தேற்றினார். ""வேடனே, வருந்தாதே. நாம் செய்த பாவங்கள் நம்மைப் பின்தொடர்ந்து வரும். தெரியாமல் செய்த பாவங்களை இப்பிறவியிலேயே பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்திடலாம். ஆனால் தெரிந்து செய்த பாவங்களை எந்த வழிபாடுகளாலும் நிவர்த்தி செய்ய முடியாது. அதற்கு நானே உதாரணம் எனக்கூறினார் .

திரேதாயுகத்தில் நான் ராமனாக அவதரித்தபோது, வாலியை மறைந்திருந்து அம்பு எய்தி கொன்றேன். அப்போது வாலி, "ராமா, எனக்கும் உனக்கும் என்ன பகை? எங்கள் விலங்கினத்தில் ஒரு பெண்ணை கடத்திச் செல்வது சகஜம். ஆனால், நீ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டாய். என்னிடம் நேருக்கு நேர் போர்புரிய முடியாது என்பதை அறிந்து, மறைந்திருந்து என்னை வீழ்த்தினாய். இதே நிலைமை உனக்கு என்னால் ஏற்படும். தர்மம் என்று ஒன்றிருந்தால், எத்தனை காலமானாலும் உன்னை மறைந்திருந்து வீழ்த்துவேன்' என்று வேதனையுடன் சாபமிட்டான். அந்த சாபம்தான் இன்று பலித்தது.
தெய்வமாக இருந்தாலும் சிறிதளவு நெறி தவறினால் துன்பத்தை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பொது விதியாகும். இதற்கு எந்தவிதமான பரிகாரங்களும், யாகங் களும், தான- தர்மங்களும், வழிபாடுகளும் கைகொடுக் காது. அதைத்தான் நான் இப்போது அனுபவிக்கிறேன். வேடனேநீதான் அந்த வாலி. உன் சாபத்தினை நிறைவேற்றிவிட்டாய். முன்ஜென்ம நிகழ்வுகள் எதுவும் பூலோகத்தில் பிறந்தவர்களுக்கு நினைவுக்கு வராது. அதனால் உனக்கு இது தெரியவில்லை. என் அவதாரம் இன்றுடன் முடிந்தது. நீ நீடூழி வாழ்வாயாக'' என்று வாழ்த்தினார் கிருஷ்ணரின் வார்த்தைகளால் ஆறுதல் அடைந்த ஜரை அவரை மூன்று முறை வலம் வந்து, பிறகு அவரை நமஸ்கரித்து விட்டு வீடு திரும்பினார்.
gallery_1_42_1244183.jpg (1991×2487):
ஸ்ரீகிருஷ்ணர் இறக்கும் தருவாயிலிருக்கிறார் என்பதை அறிந்த உத்தவர் நிலைகுலைந்து போகிறான். ஸ்ரீகிருஷ்ணரிடம் தன்னை வழி நடத்துமாறு கேட்கிறான். அப்போது அவன் உத்தவ கீதையை கேட்கிறான். ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உடலின் அழியும் தன்மையைப் பற்றி மறுபடியுமாக எடுத்துரைத்து இவ்வுடல் விலையேறப்பெற்றது. ஐம்புலன் கொண்ட இந்த சரீரத்திலிருந்துதான் ஒரு மனிதன் ஜீவன் முக்தியை அடைய முயற்சி செய்யலாம். பத்ரி வனத்திற்குச் சென்று நான் கூறிய சத்தியத்தை தியானம் செய். நான் பாகவதம் மூலமாக என்னை வழிபடுபவர்களுக்கு வழிகாட்டுவேன் என்றார். இவ்வாறு கூறிவிட்டு பரம்பொருளை தியானம் செய்து விண்ணுலகம் சென்றார் .
கிருஷ்ணரின் சாரதியான தாருகன் கிருஷ்ணரைத் தேடிக் கொண்டிருந்தான். கிருஷ்ணர் அணிந்திருந்த துளசி மாலையின் மணம் அவனை அவர் இருக்கும் இடத்துக்கு இழுத்தது. தன் எஜமானர் தரையில் கிடப்பதைப் பார்த்து, அவர் பக்கம் ஓடினார். அவனைப் பார்த்த கிருஷ்ணர், "தாருகா! எதையும் பேசுவதற்கு இப்பொழுது நேரம் இல்லை. யாதவர்கள் தங்களிடையே சண்டை போட்டுக் கொண்டு அழிந்து விட்டார்கள் என்றும், பலராமரும் மறைந்து விட்டார் என்றும், உறவினர்களிடம் சொல். நானும் சீக்கிரமே இந்த உடலை விட்டு போகப் போகிறேன். இனி நீங்களோ அல்லது என் உறவினர்களோ துவாரகையில் தங்கக்கூடாது. ஏனெனில், யாதவர்கள் இருந்த இந்த நகரம் கடலால் கொள்ளப்படும். நீங்கள் எல்லோரும் இந்திரப்பிரஸ்தம் சென்று அர்ஜுனன் ஆதரவில் இருங்கள்" என்று கூறினார். என்ன செய்வது என்று தெரியாமல் தாருகன் விம்மி விம்மி அழுதான். கிருஷ்ணரை மூன்று தடவை வலம் வந்து அவரை வணங்கினான். பிறகு அவன் வருத்தத்தோடு நகர் திரும்பினான்.
After killing Vali, Lord Rama promised that Vali would have his revenge in his next birth. Vali was reborn as Jara, a hunter who was the cause of death of Krishna.:
அச்சமயம் பிரம்மா அங்கு தோன்றி, அவருடன் ருத்திரனும் , இந்திரன் முதலான தேவர்களும் தோன்றினார்கள். அவர்கள் பகவானின் பூவுலக அவதார முடிவை காண ஆவலுடன் அங்கு கூடினார்கள். அனைவரும் கிருஷ்ணர் மீது பூமழை தூவி, அவரைப் போற்றி பாடல்கள் பல பாடினர். கிருஷ்ணர் கண்களை மூடி, யோகத்தில் அமர்ந்து தம் ஆன்மாவில் ஒன்றினார். உலகையே மயக்கிய தம்முடைய கிருஷ்ண ரூபத்துடன் பகவான் வைகுண்டத்திற்கு திரும்பினார். இன்றும் பக்தர்கள் தியானத்தில் ஆழ்ந்து அவருடைய என்றும் அழியாத ரூபத்தைக் காணும் பேறுபெறுகிறார்கள்.
அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாண்டவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது கிருஷ்ணரின் ஆசை என்பதால், துவாரகைக்கு வந்தான் அர்ஜுனன். கிருஷ்ணரின் தந்தையான வாசுதேவனின் உயிரும் தன் உடலை விட்டு பிரிந்தார்.
குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு சென்ற அர்ஜுனன் அனைத்து பெண்களையும் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு புறப்பட்டான் அர்ஜுனன். அவர்கள் சென்றவுடன் துவாரகை கடல் விழுங்கியது. போகும் வழியில் ஒரே ஒரு ஆண் துணையுடன் பல பெண்கள் வருவதை கவனித்த கொள்ளையர்கள் அவர்களை தாக்கி, பெண்களையும் செல்வங்களையும் எடுத்துச் சென்றனர். அர்ஜுனனின் அனைத்து வில் வித்தைகளும் அஸ்திர அறிவுகளும் தோற்று போயின. வெறுத்துப் போன அர்ஜுனன் யுதிஷ்டரிடம் சென்று நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினான். வருத்தத்தில் மூழ்கிய பாண்டவர்கள்  வருத்தத்தில் மூழ்கினர். திருதிராஷ்டிரன், காந்தாரி, குந்தி மற்றிம் விதுரர் ஆகியோர் காட்டிற்குள் சென்று வாழ்ந்து தவம் புரிய புறப்பட்டனர். தன்னிலை மறந்த நிலையில் புரிந்த தவத்தால் விதுரர் தன் உடலை துறந்தான். மற்ற அனைவரும் வனத்தில் மூண்ட காட்டுத்தீயில் உயிரை விட்டனர்.

இவ்வாறாக யதுகுலம் முடிவுக்கு வந்தது.

நாளைக்கு நான் செஞ்ச கம்மல், செயின், எம்ப்ராய்டரி வேலைலாம் கைவண்ணத்துல பார்க்கலாம்..

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்காய்...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460248

நன்றியுடன் ..
ராஜி.