Thursday, September 15, 2011

வைரச்சுரங்கமே மகளாய்....,

ஒரு முறை தான் நிகழ்ந்தது என்றாலும்,ஓராயிரம் முறை
மனதிற்குள் ஒளிபரப்பி அதே சிலிர்ப்பை..
அதே சுகத்தை,அனுபவித்திருக்கிறேன் பலமுறை....
இதோ ... மீண்டும் மறு ஒளிபரப்பு
பஞ்சுப்பொதியில் சுற்றி, கீழ்க்காணும் மலரின் நிறத்திலிருந்த வைரச்சுரங்கமாம் என் இளைய மகள் "இனியா"வை கைகளில் அள்ளிய திருநாள் இன்று.
                                                  

தூங்கும் முன் கதை கேட்கும் பழக்கம் அவளுக்கு.
அம்மா நான் பொறந்த கதையை சொல்லும்மா.
பன்னீர் ரோஜா கலர், கருப்பு கோலிக்குண்டு கண்ணு,தந்தத்தால செஞ்ச மாதிரி கைக்கால், கிண்கிணி நாதம் போல உன் அழுகை.
அம்மா நான் அழுதேனாம்மா? எப்போ அழுகை நிப்பாட்டினேன்?
அம்மா மூஞ்சியப் பார்த்தே. என் அம்மா நீ இருக்க நான் ஏன் அழுகனும்னு நீ அழுகையை நிப்பாட்டிட்டே.
போம்மா, அப்போ நான் குட்டி பாப்பாதானே எனக்குதான் அப்போ ஒண்ணும் தெரியாதே. நீ குளோசப்ல உன் மூஞ்சியக் காட்டி இருப்பே. நான் பயந்துப் போய் அழுகையை நிப்பாட்டிட்டேன்.
கிர்ர்ர்ர் டமால்

 
    


எல்.கே.ஜி ல சேர்த்த இரண்டாம் நாள்:
ஸ்கூல் விட்டு ஓடிவந்து, ஒரு நோட்டைக் காட்டி இது என்னன்னு கேட்டா?
அவள் நீட்டிய பக்கம் பார்த்த போது..,
நெடுக்குவாக்குல சின்ன சின்ன கோடுகளை நெருக்கமா வரைந்திருந்தா.

என்னம்மா! மழை படம் வரைஞ்சிருக்கியா?
ஐயோ! அம்மா! உனக்கு ஒண்ணுமே தெரியலை, இது மழை இல்லம்மா, ONE.
எங்கே சொல்லு பார்க்கலாம்   O,   N,  E  " ONE"
அவ்வ்வ்வ்வ்வ்வ்

 

குட்டி தேவதைக்கு ஒரு கவிதை:

    உயிர் வலி கண்ட அந்த
    பத்து மணி நேரப் போராட்டம்

    நெஞ்சுக் கூட்டுக்குள் யாரோ
    கை வைத்து அழுத்தியது போன்ற ஒரு வேதனை

    செத்துவிடலாம் என்று தோன்றிய
    அவ நம்பிக்கையின் நிழலுக்கு
    உன் முகம் பார்க்கப் போகும் துடிப்பு ஒன்றே
    ஒளிக் கீற்று..

    உன் அழுகை சத்தம் கேட்ட முதல் நொடி
    பட்ட துன்பமெல்லாம் பட்டென பறந்துப் போக...

    மகளென்னும் தேவதையாய் என் எதிரில் நீ....

    என் பெண்மையை நான் உணர்ந்த இரண்டாவது சந்தர்ப்பம்..

    மன்னித்தலையும்,விட்டுக் கொடுத்தலையும்
    எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசான் நீ..

    எனக்குள் புதைந்துப் போன என் குழந்தைத்தனத்தை
    மீட்டெடுத்த புதையல் நீ...

    என் வாழ்வின் சூர்யோதயம் நீ..

    மனித நேயமும்,உண்மையும்,நெஞ்சுறுதியும் கொண்டு
    வாழ்வின் எல்லா உயரங்களுக்கும் நீ செல்ல
    நீ ஏறும் படிக்கட்டாய்
    நானிருப்பேன்...,

    வாழ்க நீ பல்லாண்டு...

 

Let the God decorate each
golden ray of the sun reaching you
with wishes of success, happiness and prosperity 4 you
wish you a super duper
Happy birthday My Baby..,







   

Wednesday, September 14, 2011

அன்பிற்கினியவர்களுக்கு வாழ்த்து...,


 அம்மாவின் முகத்தை பார்த்தே,  அம்மா மனதில் இருப்பதை அப்பா புரிந்து கொள்வார்.அப்பா வாய்விட்டு சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதமாகவே செய்து பழக்கப்பட்ட‌ அம்மா! ஆனாலும், இதுவரை தவறியும்  அப்பாவுக்கு பிடிக்காததை,  அம்மா செய்ததாக சரித்திரமில்லை. அற்ப விஷயத்துக்காக பனிப்போர் நடந்து ரெண்டுப் பேரும் பேசாமலிருப்பாங்க. அப்போ எனக்கு கிடைக்கும் அன்பு, பாராட்டு, எல்லாம் அடடா! அந்த சில நிமிடங்கள் சொர்க்கம். வேணுமின்னே அடுத்தவங்களை வெறுப்பேத்த, ராஜி போல தோசை ஊத்தவும், காஃபி போடவும் யாரால முடியும்ன்னு அப்பாவும், ஷாப்பிங்க் போனால், ராஜியோடதான் போகனும் பொறுமையா எல்லாத்தையும் ஒண்ணு விடாமல் வாங்குவான்னு அம்மாவும் பெருமை பேசுவாங்க.

ஆகா! இன்ன்னிக்கு நமக்கு கிடைச்சதுடா லக்கி பிரைஸ்ன்னு அந்த சண்டையில குளிர் காயலாம்ன்னு நினைச்சுக்கிட்டு உள்ள போனால்,எனக்கே தெரியாம ரெண்டு பேரும் சமாதான உடன் படிக்கைக்கு வந்து என்னை, திட்டி திக்கு முக்காட வைப்பாங்க.

தோசை ஊத்துறாளாம் தோசை, பேப்பராட்டம் மெல்லிசா,  கருக வச்சி, காஃபில‌ சர்க்கரையை கொட்டி..., உன்னை யாரு சமையலுக்குலாம் போக சொன்னதுன்னு அப்பாவும்(அந்த கருகிப்போன தோசையே ஏழெட்டு உள்ள போயி, இன்னும் ஜீரணம் கூட ஆகாம இருக்கு அதுக்குள்ள இந்த பேச்சு).

காய்கறி வாங்கி வர சொல்லி அனுப்பினேங்க. இங்க பாருங்க, காய்ஞ்சுப்போன கத்தரிக்காய், முத்திப்போன முள்ளங்கி, வாடிப்போன வெண்டைக்காயெல்லாம் வாங்கி வந்திருக்கான்னு  சொல்லுவாங்க( அப்போ அந்த காய்கறிலாம் நாங்க பாட்டுக்கு எங்க உறவினர்களுடன் மார்க்கெட்டுல இருந்திருப்போம். இங்க கூட்டிட்டு வந்தியே உனக்கிது தேவைதான்னு கேலி செய்ற மாதிரியே இருக்கும்.)

எனக்கு பாராட்டு கிடைக்கனும்ங்குறதுக்காகவே அவங்க சண்டைப் போட்டுக்கிடனும்னு சாமியை வேண்டிக்கிட்ட நாட்கள்   உண்டு. அது விவரம் தெரியாத நாட்கள். ஆனால், இப்போதோ நிலைமை வேறு. முப்பத்தேழு ஆண்டுகள் கடந்தப் பின்னும் மாறாத காதலோடு இருக்கும் அவங்களை பார்த்து சற்று பொறாமை கூட படுவதுண்டு. அப்பேற்பட்ட இளஞ்சோடிகளுக்கு இன்று திருமண நாள். அவர்களை வாழ்த்த வயதில்லை. எனவே, வணங்கி அவர்கள் பாதங்களில் என் வாழ்த்துக்களை ஒரு கவிதையில் சமர்ப்பிக்கிறேன்.
                                                               

இணைந்தே இல்லறத்தின் இலக்கணம் வென்ற
இரு மனங்களின் இன்ப உலா இன்று
இங்கண்
இதயம் மலர வாழ்த்துப் பூக்கள் வெற்றித் தம்பதியர்களுக்கு
இக்கவிதை மலர்கள் சமர்ப்பணம்...,

 


மூத்தவர் நீங்கள் அரண்களாய் இருந்து
முந்திய அறங்கள் எல்லாம் சிறக்க
ஒன்றுக்குள் ஒன்றாகி உறவுக்கு விளக்கமாகி
உணர்வுகளை மதித்து ,உரிமைக்கு இடம் அளித்து
அன்பென்னும் பந்தத்தில் அரும்பெரும் சுடராகி
பண்பென்னும் பகுப்பிலே பலமான விருட்சமாகி
வாழ்வின் இன்ப வளைவுகளை வசந்தத்தின் வாசலாக்கி
வந்து விழுந்த துன்பங்களை வளைத்தெடுத்து வாளிப்பாக்கி
வாழ்க்கைத்துணையுடன் கை கோர்த்து,
வாழ்வின் நோக்கத்தை தேர்ந்தெடுத்து,
மனம்போல் மகிழ்வோடும்,அழகான மகவோடும்
வாழ்க்கையை உங்கள் வசமாக்கி
வந்திட்ட பொழுதுகளை வாசமாக்கி
இல்லறத்தில் மகத்தான வாகை சூடி....

இந்த நிமிடத்தில் வாழ்வின் வெற்றியாளர்களாய் நிற்கின்ற
அம்மாவையும் அப்பாவையும்
வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றேன்!!!!!

இதுபோலே திருவிழா தினமும் கண்டு
ஒரு மனத்தோடு, இன்முகத்தோடு வாழ
உலகமுள்ளவரை வாழ்ந்திருக்க வேண்டுமென
அகம் மகிழ்ந்து அன்பாலே
உண்மையான உள்ளத்தாலே வாழ்த்துகின்றேன்!!!!!
வாழ்க நீவிர் பல்லாண்டு!!!!!!!!!!!!!!!!!!!!!!

டிஸ்கி: கடல்கள் பல கடந்து நியூசிலாந்த் பறவையாய் மாறிப்போன‌  தோழி மாலதிக்கும் இன்றுதான் "பிறந்த நாள்". என்ன தவறு நான் செய்தாலும், கண்டித்து, தண்டிக்காமல் மன்னிக்கும் தாயுள்ளம் கொண்டவள்.


தோழி, உன்னை கண்டு தழுவி பிறந்த நாள் வாழ்த்து சொல்ல என்னால் இயலவில்லை. துக்கம் தொண்டையை முட்டுகிறது. இருக்காதா பின்னெ ஒரு "டிரீட் போச்சே" அவ்வ்வ்வ்வ்வ்.


இப்படி எகனை மொகனையா சிந்திக்குறதே நமக்கு வாடிக்கைதானே,

"சாரி" என்பதற்கு பதில்  "எல்லாம் உன்னாலேதான் லூசே"ன்னும்,
வெற்றிக்கு வாழ்த்துவதற்கு பதில்  "டிரீட் எப்போ" என்றும்,
வீட்டு விசேஷத்துக்கு வான்னு சொல்லாம, "ரொம்ப அலட்டிக்காம வந்து சேரு. இல்லாட்டி கொன்னேப்புடுவேன்"ன்னும்
" Get well soon" ன்னு  சொல்லாம, "ஓவர் சீன் போட்டா, இப்படித்தன் கடவுள் ஆப்பு வைப்பார்ன்னும் சொல்லும் பிரஸ்கபதிகளாச்சே நாம.

இந்த பிரிவிற்காக கலங்குவோம். ம்ஹும், டிரீட்டுக்குதான் கலங்குவோம். பார்சலயாவது அனுப்பு உன் டிரீட்டை.
Wish You Many More Happy Returns Of The Day My Dear Friend

ரெண்டாவது டிஸ்கி: என் வாழ்வில் முக்கியமான‌ தினம் நாளைக்கு(என்னன்னு இப்ப சொல்ல மாட்டேன். அது சஸ்பென்ஸ்). அதுக்கும் பதிவு உண்டு நாளைக்கும் அவசியம் வந்துடுங்க.